ரத சப்தமி (4-ம் தேதி பிப்ரவரி மாதம் 2025 வருடம் - செவ்வாய்க்கிழமை)
ரத சப்தமி என்றும் மஹா சப்தமி என்றும் சூர்ய ஜயந்தி என்றும் கொண்டாடப்படும் இந்த தினம் சூரிய பகவான் தமது ஏழு குதிரைகள் பூட்டிய தங்க ரதத்தில் அருண் என்ற கால்கள் இல்லாத ஒரு கண் படைத்த சாரதி தென் திசையிலிருந்து வட திசையை நோக்கிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. தக்ஷிணாயணத்திலிருந்து உத்திராயணம் திசையை நோக்கி சூரியனின் ரதம் செல்வதை இது குறிக்கும். மேலும் குளிர் காலம் நீங்கி, கோடை காலம் வருவதையும் இது தெரிவிக்கிறது. அறுவடைக் காலமும் இந்த உத்திரியாயணத்தின் போது தான் நடைபெறும்.
ரதம் என்றால் தேர். சப்தமி என்றால் ஏழு. ஆகையால் ரத சப்தமி என்றால் ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் என்று பொருள் படும். இந்த ரதத்தில் தான் சூர்ய பகவான் ஏழு லோகங்களைச் சுற்றி வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஏழு குதிரைகளும் வான வில்லின் ஏழு வர்ணங்களைக் கொண்டுள்ளது. மற்றும் ஏழு என்பது வாரத்தின் ஏழு நாட்களையும் குறிக்கும்.
புராணத்தின்படி ரிஷி காஷ்யபரின் மனைவி அதிதி கர்ப்பவதியாக இருந்த சமயத்தில் ஒரு நாள் தன்னுடைய கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, திறந்து பார்த்த போது, அங்கு ஒரு பிராமணர் தனது பசிக்கு உணவு கேட்டு நின்றார். அவரை காத்திருக்க சொல்லி விட்டு, வீட்டிற்குள் சென்ற அதிதி, மெதுவாக நடக்க முடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி விட்டு, அவர் சாப்பிட்ட பிறகு பிட்சை ஆகாரத்தை எடுத்துச் சென்று அந்த பிராமணனுக்கு கொடுத்தாள்.
நேரம் கழித்து வந்து உணவு கொடுத்து தன்னை உதாசீனப்படுத்தியதாக நினைத்த அந்த பிராமணர், "என்னை உதாசீனம் செய்த உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என சாபம் அளித்தார். பிராமணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, காஷ்யப முனிவரிடம் விஷயத்தை சொல்ல, "நீ வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்" என்று வாழ்த்தினார். அதன் படியே, ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தார்.
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது திதியான சப்தமியில் சூரியனின் அருளை பெறுவதற்காக விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை எடுத்துக் கொண்டு, அந்த இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டு என வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும்.
இப்படி ரத சப்தமி நாளில் ஏழு எருக்கம் இலைகளை வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்வதால் ஏழு விதமான பாபங்கள் நீங்கும் என்பது புராண வரலாறு. உடல், உள்ளம், நாக்கு ஆகிய உறுப்புக்களால் செய்யும் பாவங்கள், சென்ற ஜென்மாவில் செய்த பாபவங்கள், இந்த ஜென்மாவில் செய்த பாபவங்கள், தெரிந்து செய்யும் பாவங்கள், தெரியாமல் செய்யும் பாவங்கள் ஆகிய ஏழு பாபவங்களும் பறந்தோடி விடும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு இருந்த பீஷ்மப் பிதாமகர் இந்த ரத சப்தமி நாளான உத்திராயண கால ஆரம்பத்தில் தமது உயிரை நீத்து சொர்க்க லோகம் சென்றார். அந்த தருணத்தில் ஸ்ரீ சூர்ய பகவான் பீஷ்மருக்கு பாபம் நீங்க ஏழு எருக்கம் இலைகளைக் கொண்டு இந்த ரத சப்தமியில் புனித நீராட வேண்டும் என்று உபதேசித்தார் என்பது புராணம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ரத சப்தமியாகும். இதனை சின்ன பிரம்மோற்சவம் என்றும் சொல்லுவதுண்டு. ரத சப்தமி அன்று ஒரே நாளில் ஏழு விதமான அலங்காரங்களில் மாட வீதிகளில் வலம் வந்து மலையப்ப சாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் இந்த ரத
சப்தமி நன்னாலில் அவர்களின் பாபவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் சேர்ந்து தூய வாழ்வு கிட்ட சூரிய பகவானை வேண்டுவோமாக. அதற்கு சூரியனை வணங்கும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை ஜபிப்போமாக.
Comments