இலக்கிய கதம்ப மாலை - விமரிசனம்
திரு. பி. ஆறுமுகம் என்ற என் நண்பர் நான் அனுப்பிய 'இலக்கிய கதம்ப மாலை' என்ற என் புத்தகத்தை முழுவதும் படித்து அது குறித்து ஒரு நீண்ட விமரிசனம் (என்னிடம் கொண்ட அன்பினால் அது ஒரு வாழ்த்துரையாக அமையும் வாய்ப்பும் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன்) எழுதி எனக்கு தபால் மூலம் அனுப்பி உள்ளார். அதை இங்கு பிரசுரித்து அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஆறுமுகத்திற்கு என் நன்றிகள் பல. ஆசிகளோ அனந்தம்.
ஆசிரியர்: ஜயந்திநாதன்
இடது புறம்: பி. ஆறுமுகம்.
வலது புறம்: ஆசிரியர் ஜயந்திநாதன்
(இடம்: திருவல்லிக்கேணியில் பாரதி நினைவு மண்டபம்)
பி. ஆறுமுகத்தின் விமரிசனக் கட்டுரை மடல்:
மதிப்பிற்குரியவர் அவர்களே,
தங்களது இலக்கிய கதம்ப மாலை நூல் கிடைக்கப்பெற்றேன். என் இதய பூர்வமான நன்றிகள்.
நூல் தொடர்பாகவும், உங்கள் இளைய பருவத்தில் மலர்ந்த மலர்களை மாலையாக்கி இலக்கிய தாகத்தினால் எழுத்தில் வடித்து இத்தனை நாள் பாதுகாத்து தமிழன்னையின் புகழ் பாடியுள்ளமை பற்றி தட்டச்சு தெரியாத என்னால் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இதன் காரணமாகவே இக் கடிதம்.
'E-Touch' மற்றும் 'வாய்மை' உயிர்த்தெழுந்த பின்பு உங்கள் எண்ணங்களும், அரசியல் கருத்துக்களும் உடனுக்குடன் உலகிற்கு அறிவிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. உங்கள் ஆன்மிக பார்வை அரசியல் நையாண்டி, துக்கடா கார்டூன்கள், நீதிக் கதைகள், விழாக்கால விபரங்கள், பெரியவர்கள் நல்லுரைகள் மாதம் தோறும் மலர்ந்து மணம் வீசுகின்றன.
ஆனால் அடி மனதில் இளம் வயதில் இலக்கிய தாகத்தில் எழுந்த உணர்வுகளின் வடிகாலாய் உருவாக்கிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள், கருத்துக்கள் காற்றோடு போய் விடக்கூடாது என்று நீங்கள் எடுத்த முயற்சியின் முதலீடு இலக்கிய கதம்ப மாலையாக மகிழ்விக்கின்றது.
உங்கள் உதயம் திருச்செந்தூர் என்பதனால் சூரனை வதம் செய்யும் ஜெயந்திநாதன் என்கின்ற புனை பெயரில் தமிழுக்கு வாழ்வளித் துள்ளீர்கள்.
ஆனைமுகன் அடிபணிந்து ஆரம்ப கவிதை; இயற்கையினை வணங்கி இரண்டாம் கவிதை; நினைவுகளை கருவில் இருந்து உருவாக்கிய எழுதுகோலுக்கு மூன்றாம் கவிதை; வாய்மைக்குத் துணை வேண்டாம் என தர்மத்தினை தலை தூக்கிப் பிடிக்கும் அடுத்த கவிதை; பிறக்குமிடம் எதுவாகிலும் பவித்திரம் பார்க்கும் சூழல் பார்வை; உண்மை உயிர்த்தெழ ஏங்கும் உள்ளம்.
கணிப்பொறி உலகில் பூஜ்ஜியம் பற்றிய பெருவிளக்கம்.
'பூஜ்ஜியத்திற்குள்ளே இருந்து ராஜ்யத்தை ஆள வைப்பான் ஒருவன் .. அவன் தான் இறைவன்' என பின்னாளில் கவிஞர் எழுதியதிற்கு முன்னோடியான சிந்தனை.
இலக்கியத்தின் அமரத்துவம்; விழுதுகளின் வலிமை; ஞானப் புயலை அடையாளம் கண்ட அறிவார்த்தம்; இயலாமையை மறைக்க இயன்றமை தோற்ற நிலையில் தேற்ற இயலா சோகம்; மனித மனதின் மயக்கங்கள்; அதீத ஆசையின் அவலம்; அஃறினை பொருள்கள் கூட ஆனந்திக்கும் குதூகலம்; பணத்தின் ஆளுமை; பாரம்பரியமும் பண்பாடும் கற்றுத் தந்த கட்டுப்பாடுகள்; தடைகள் என்றெண்ணும் தப்புக்கள்; இன்று நடப்பதை அன்றே சொன்ன தீர்க்க தரிசனம்; தன் எழுத்துக்களும், படைப்புக்களும் அமரத்துவம் பெற வேண்டும் என்னும் ஆதங்கம்; இயற்கையின் எழுச்சிதனை சீராட்டும் சிந்தனை; முள்ளில் சிக்கிய துண்டு கிழியவில்லை என்றாலும் நசுங்கிய மலர் கண்டு இரக்கம்; பகுத்தறிவு இன்றைக்கு கடவுள் மறுப்பு கொள்கையால் மாறிவிட்ட நிலையில் அன்றைய கலப்படமில்லா நாட்களில் கண்ட தெளிவு; கண்ணாடி ஒரு கருவி - அது தன்னால் பார்க்க முடியாது என்கின்ற யதார்த்தம்;
'நீ நண்பனாக அவர்களிடம் நடித்தால் போதும் அவர்கள் உன்னிடம் வெறுப்பை காட்ட மாட்டார்கள்' என்ற நளினமான சொல்லாடல்
பின்னாளில் எழுதப்பட்ட
'பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று'
- என்று விசனப்படும் வரிகள் பிரசன்னமானதற்கு காரணமோ என பெருமிதம் அடைகின்றேன்.
தன் பிள்ளை என தவிக்கும் தாய்; ஊரார் பிள்ளையை ஊட்டி வளார்த்தால் தன் பிள்ளைதானாக வளர்வான் என்னும் தந்தை.
இடை நிகழ்வுகளில் விழி திறக்கும் அன்னையின் அன்பு; குழந்தையும் தெய்வமும் குணத்தால் நன்று என்றுணர்வும் தாய்மை சிலிர்கின்றது; பூவிற்குள் உள்ள தேன் சேகரிக்கும் வண்டு பூசூலுறும் பொழுது உள் புதைந்து மரணிப்பதான காதல் - காவியமாக்கிய கவின் நடை மெச்சத்தகுந்தது.
உப்பின் உற்பத்தி ஸ்தானம் தொடங்கி கடல் அலையின் ஓசை உள் வாங்கி உடன் வந்தவன் அத்தனையையும் நீர்க்குமுழியாய் மூழ்கடிக்கும் நிலையாமை பற்றிய நெருடல்; தாயை பேனா தனையன் மூலம் பிஞ்சு மனதின் தவறுக்கான பரிகாரம் கூட நிறைவேறாது போன நிராசை; கர்மா, சிறுவயதில் செய்த சேட்டையின் நியாயங்களை தவிர்த்து பாதிப்புக்களை பதியமிட்டு வளர்த்து மரமாக்கி மயங்கி கலங்கும் மனதின் கூக்குரல் கல் மனதினையும் கலங்கடிக்கும்; சென்னையின் மெரினா கடற்கரையில் வேர்க்கடலை விற்பவனின் வெறுமை; பிள்ளையார் பற்றிய இரு கதைகளும் படிக்க நினைந்த உருவங்களை நிறப்படுத்தி காட்டுகின்றன.
அடுத்து கட்டுரையும் கதைகாளாகி தன்னகத்தே அடக்கியுள்ள கருவூலங்கள் தாம்.
திருமணம் கணவன் போடும் முடிச்சு; ஊனம் உடலில் மட்டுமே - உள்ளத்தில் இல்லை. திருமணத்திற்கு பின்பு ஊனம் ஏற்பட்டிருந்தால் எப்படி மறுத்தளிக்க இயலும் என்பது போன்ற கருத்துக்கள் இக்கால இளைஞர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கும். மாங்கல்யம் என்பதன் மகத்துவம் உணர்ந்தவர்கள் மனம் உருகும் சொற்கோர்வை தெய்வ சங்கல்பம்.
பழைய கால பண்ணத்தனத்தின் பவிசை படம் பிடிக்கும்.நெஞ்சு பொறுக்குதில்லையே!
கதம்பமாலையின் இறைச் சிந்தனைகள் மற்றும் சிந்திக்க - சீர்தூக்க- சிறக்க வழிகாட்டும் சிந்தனை சிதறல்கள்.
தங்கள் இளவயது நாட்களில் நிர்மலமான வாழ்வியம் முறையில் நல்லவர்கள் பெரும்பான்மையாக நடமாடிய சூழலில் ஊற்றெடுத்திருக்கும்.
அவற்றின் உயிரோட்டத்தினையும் உள்ளத்தில் உறையும் உணர்கின்ற சக்தியும் பக்குவமும் இன்று சக்கையாகவும், சருகுகளாகவும் மாறிவிட்ட இன்றைய உலகத்திற்கு இருக்கின்றதா?
உங்களின் பெரு முயற்சி, பாதுகாத்து வைத்திருந்த பாங்கு, ஒழுங்கு படுத்தி உருவம் கொடுத்த நேர்த்தி, இன்றைய அறிவுலக சாதனங்கள் மூலம் கதைகளின் கவிதைகளின் இசைவுக்கு ஏற்ற கார்டூன்கள் - உங்களை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது.
இன்றைக்கும் இரு மாத வெளியீடுகளான மின்னஞ்சல்களை பிரசவித்துக் கொண்டிருக்கும் உங்கள் தாய்மை என்னை சில்லிட வைக்கின்றது. உங்களது உழைப்பு வாசகர்களில் பலரை உள்வாங்கச் செய்திருக்கும்.
படைப்புக்களை மட்டுமின்றி தங்களது எழுத்துலக தந்தை உங்கள் தமையனாரையும், ஊக்குவித்த நண்பரையும் நான் உளமாற பிரார்த்திக்கிறேன்.
உங்கள் எல்லா நிலைகளிலும் அன்பாகவும், ஆதரவாகவும், துணையாகவும், தரணி தேவதையாகவும் தோழியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் வத்ஸலா அம்மையாளின் பாதம் பணிகிறேன்.
ஆசிரியரின் குறிப்பு:
இந்த புத்தகம் பற்றிய விளம்பரம் - அமேசன் & ப்ளிக் கார்ட்:
Comments