அரனுக்கு அன்னாபிஷேகம் - ஐப்பசி பெளர்ணமி நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை






சிவனை அபிஷேகப் பிரயன் என்றும், விஷ்ணுவை அலங்காரப்பிரியன் என்றும் சொல்லி வணங்குவர் பக்தர்கள். 

ஒவ்வொரு மாதமும் வரும் அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள் அல்லது ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி திதியை அடிப்படையாகக் கொண்டு சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

அதன் படி திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு நவம்பர் 14-ம் தேதி - ஐப்பசி 28-ம் தேதி வரும் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய பொருளான அன்னம் அபிஷேகம் நடைபெறும். ஆனால் மற்ற சிவன் கோயில்களில் ஐப்பசி மாதம் பெளர்ணமி திதி வரும் அடுத்த நாளான நவம்பர் 15-ம் தேதி - ஐப்பசி 29-ம் தேதி அன்று அன்னாபிஷேகம் நடைபெறும்

அரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மற்ற பொருட்களால் செய்யும் அபிஷேகங்களை விடச் சிறப்பு மிக்கதாகும். 

அன்னம் பிராணமயம் என்பார்கள். 

சாம வேதத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப் பட்டுள்ளது. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் அன்னத்தில் ஐம்பூதங்களும் அடக்கம். ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் தீயால் வெந்து பொங்கி அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவான பொருளாகும். 

சிவன் பரம் பொருள், அவனது பிரதி பிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னத்தால் அரனின் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட் கருணையினால் குளிர்வது இயற்கைதானே. 

தில்லையில் அனுதினமும் காலை பதினோரு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு, அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. எனவேதான் இந்தத் தலத்தை அப்பர் பெருமான்

‘‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம் பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற

இன்னம் பலிக்கும்மோ இப்பிறவியே!’’ 

என்று சிறப்பித்துப் பாடினார். 

தமிழ் நாட்டில் இந்த ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரம் அல்லது  பெளர்ணமி திதி ஆகிய நாட்களில் அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்

அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்,  கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வர் கோயில் இரண்டிலும் இந்த அன்னாபிஷேகம் மிகவும் பிரபலமானதாகும். 

பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி அன்னாபிஷேகத் திருநாளில், குறைந்தது 110 மூட்டை அரிசி சமைக்கப்பட்டு, அந்த அன்னம் பெரிய சிவலிங்கத்தின் மீது சாற்றப்படும். பிறகு இந்த அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 அரனான சிவனின் அருள் அனைவருக்கும் கிட்ட வாய்மை பிரார்த்திக்கிறது.

 

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்

ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே

 

- சித்தர் சிவவாக்கியார் 

 

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017