ஆடி மாதம் அம்மன் மாதம்
ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இந்த மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன. தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
தட்சிணாயண புண்ணிய காலத்தை பகவான் தூங்கும் காலமாகவும், அசுரா்கள் விழித்திருக்கும் காலமாகவும் சொல்வார்கள். இந்த வருடம் ஜுலை 17-ம் தேதி தொடங்கி ஜனவரி 14-ம் தேதி முடிவடைகிறது. ஆகையால் தான் இந்தக் காலத்தில் சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.
ஆடி மாதத்தில் தான்
விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன.
ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி,
ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.
ஆடிப் பூரம்: ஆடி மாதம் 16 ஆம் தேதி, ஆகஸ்ட்1
அன்று, ஆடிப்பூரம் வருகிறது. அம்பாள்
உருவெடுத்த தினமாக புராணங்கள் கூறுகின்றன. ஆண்டாள் ஜெயந்தியாகவும்
கொண்டாடப்படுகிறது. மக்களை அரக்கர்களிடம் இருந்து ரட்சிப்பதற்காக அம்பாள் அவதரித்த
தினம் என்று புராணங்கள் கூறுகின்றன. பல ஊர்களில், அம்மனுக்கு
விசேஷமாக பூஜை செய்யப்பட்டு வளைகாப்பு செய்யப்படும்.
ஆடி பதினெட்டு: ஆடி மாதம் 18-ம் தேதி, ஆகஸ்டு 3
அன்று ஆடி 18 வருகிறது. தமிழகத்தில்
நீர்ப்பாசனப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். ஒவ்வொரு ஆண்டும்
காவிரி ஆற்றில், நீர் பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள்
‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். ஆடி பெருக்கை திருவிழா போல ஊரெங்கும்
கொண்டாடுவார்கள்.
வரலட்சுமி விரதம்: ஆடி மாதம் 20-ம் நாள் ஆகஸ்ட் 5-ம்
தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து,
விரதமிருந்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்து வழிபாடுவர்கள்.
ஆடி அறுதி: மற்ற தமிழ் மாதங்களைப் போல இல்லாமல், ஆடி மாதம் 32 நாட்கள் உள்ளன. ஆடி 32 ஆம் நாள் ஆடி அறுதி என்று கொண்டாடப்படுகிறது. ஆடி அறுதி என்று விவசாயிகள்
நாற்று நடுவார்கள். ஆடி மாதம் பிறக்கும் போது விதை விதைப்பதும் முடியும் போது
நாற்று நடுவதும் வழக்கம்.
தேங்காய் சுடும் பண்டிகை: ஆடி முதல்நாளில் தேங்காய் சுடும்
பண்டிகை கொண்டாடப்படுக்கிறது. இந்தப் பண்டிகை
சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் சில
கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது
வழக்கம். திருவிழாக்கள் நிறைந்த ஆடி மாதத்தைக் கோலாகலமாகத் தொடங்கிவைப்பதில்
தேங்காய்ப் பண்டிகைக்கு முக்கியப் பங்கு உண்டு.
நன்றாக முற்றிய பெரிய தேங்காயை எடுத்து அதன் ஒரு
கண்ணைத் துளைத்து,
அதிலிருக்கும் நீரை பாத்திரத்தில் பிடித்து வைத்துக்கொள்வார்கள்.
பிறகு தேங்காயின்மீது இருக்கும் நார்களை சுத்தமாக அகற்றிவிட்டு, தேங்காய் முழுவதும் மஞ்சள் பூசி அலங்காரம் செய்வார்கள். எள், பாசிப்பயறு, நாட்டுவெல்லம், பச்சரிசி,
அவல், பொட்டுக்கடலை போன்றவற்றை அரைத்து அந்தக்
கலவையை துளையின் வழியாக தேங்காயின் உள்ளே செலுத்துவார்கள். அத்துடன் பாத்திரத்தில்
பிடித்து வைத்துள்ள தேங்காய்த் தண்ணீரை மீண்டும் சிறிதளவு உள்ளே சேர்ப்பார்கள்.
தேங்காயின் உள்ளே முக்கால் பாகம் மேற்சொன்ன கலவையும் கால் பங்கு தேங்காய்த்
தண்ணீரும் இருக்கும். தேங்காய்க்குள் இருக்கும் பொருள்களை வேக வைப்பதற்காக
தேங்காய்த் தண்ணீர் மீண்டும் சேர்க்கப்படுகிறது. பின்னர் துளைக்குள் பொருந்துமாறு
ஒரு நீளமான குச்சியின் முனையைச் சீவி, தேங்காய்க்குள்
பொருத்திவிடுவார்கள். குச்சிகளுக்கும் மஞ்சள் அலங்காரம் உண்டு. கிராமங்களில்
பொதுவாக அழிஞ்சில் குச்சிகள் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில்
வாதநாராயணன் குச்சிகளையும் பயன்படுத்துவதுண்டு. அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி
துளையை மூடுவர். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி
அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவார்கள். தேங்காய்
நன்றாக வெந்த பின்னர் டப் என்று வெடிக்கும். ஓடுகளை அகற்றி விட்டு அந்த தேங்காயை
சரி சமமாக இரண்டாக உடைத்து சாமிக்கு படைத்து வணங்கி பிரசாதமாக சாப்பிடுவார்கள்.
ஆடி மாதத்தின் முதல்நாளில் இன்றைக்கும் பாரம்பரியமாக தேங்காய் சுடும் பண்டிகை
கொண்டாடப்பட்டு வருகிறது. சுட்ட தேங்காய்க்குள் உள்ள எள்ளு, பாசிப்பயறு,
நாட்டுவெல்லம், அவல், பொட்டுக்கடலையுடன்
தேங்காயின் சுவையும் இணைந்து அலாதியான ருசியைத் தரும். இந்த தேங்காய் உணவு
வயிற்றுப் புண்களை ஆற்றும். புரதக்கூறுகள் நிறைந்த இந்த உணவு, உடலுக்கு வலிமை அளிக்கும். தேங்காய் சுடுவதற்குப் பயன்படும் அழிஞ்சில்
குச்சியும் மருத்துவக் குணம் நிறைந்தது.
அம்மன் மாதமான ஆடியில் அம்மனின் அருள் வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் பரிபூர்ணமாகக் கிடைக்க வேண்டுவோமாக.
§
ஆதாரம் சக்தி யென்றே
அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;
யாதுமவள் தொழிலாம்.
§
துன்பமே இயற்கையெனும்
சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;
யாவுமவள் தருவாள்.
§
நம்பினார் கெடுவதில்லை;
நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிக வரம் பெறலாம்.
Comments