பரசுராமர் தன் தாய்க்கு இழைத்த பெரும் பிழை

பரசுராமர் என்பது பரசு + ராமர் என்ற இரண்டு பதங்களைக் கொண்டதாகும். பரசு என்றால் கோடலி. பரசுராமர் என்றால் கோடலி ஆயுதத்தை ஏந்திய ராமர் என்று பொருள் படும். பரசுராமர் திரேதா யுகத்தில் பாதி பிராமண குணமும், பாதி க்ஷத்திரிய குணமும் கொண்டு பத்து அவதாரங்கள் எடுத்த விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகும். ஆகையால் பரசுராமர் பிராமணக்ஷத்திரியர் என்றும் அழைக்கப்படுகிறார். பரசுராமர் சிரஞ்சீயாவார். பரசுராமர் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களிலும் வருகிறார். அவர் கலியுகத்தின் இறுதியில் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தின் போது கல்கிக்குக் குருவாக வந்து சகல யுத்தக் கலைகளையும் கற்றுக் கொடுப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன. பரசுராமருக்கு குருவாக இருந்து அவருக்குச் சகல யுத்த வித்தைகளையும் கற்றுக் கொடுத்தவர் மஹரிஷி விஸ்வாமித்திரர். விஸ்வாமித்திரர் க்ஷத்திரிய அரசராக இருந்து தவம் செய்து பிராமணராக பிரம்மரிஷிப் பட்டம் பெற்றவர். சத்யவதியின் பேரன் தான் பரசுராமர். சத்யவதியின் தாய்க்குப் பிறந்தவர் தான் விஸ்வாமித்திரர். பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரரிடம் க்ஷத்திரியப்ராமணரான பரசுராமர் ஆயுதப் பயிற்சி பெற்றார். ஆனா...