மம்தாவின் வீழ்ச்சி – பிஜேபியின் ஆட்சி

 



மம்தாவின் வீழ்ச்சி – பிஜேபியின் ஆட்சி

 மம்தா (66 வயது) சரித்திரத்தில் பி.ஏ. பட்டமும், பிறகு முஸ்லீம் சரித்திர வரலாற்றில் கல்கத்தா சர்வகலாசாலையில் தத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். அத்துடன் சட்டப்படிப்பிலும் பட்டம் பெற்றவர். மம்தா 1970-லேயே தமது 15-வயதில் காங்கிரசில் சேர்ந்தார். ஜயப்பிரகாஷ் நாராயணனின் கார் முன்னால் அவரை எதிர்த்து டான்ஸ் ஆடிய பொழுது, அவர் பலரது கவனத்தையும், மீடியாவின் வெளிச்சத்தில் மிகவும் வித்தியாசமான பெண் காங்கிரஸ் தலைவராகப் பார்க்கப்பட்டார்.

அதே போல் 1998-ல் லோக் சபாவிலேயே பெண் ரிசர்வேஷன் மசோதாவை எதிர்த்து சபாநயகர் அருகில் நின்று எதிர்ப்புத் தெர்வித்த ஒரு சமத்வாதி கட்சி எம்.பி.யின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார்.

அவர் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளார். இருப்பினும், கல்கத்தா கிழக்கு தொகுதியை 1996, 1998, 1999, 2004 & 2009 வருடங்களில் வெற்றி பெற்றுள்ளார். 

மத்திய ரயில்வே அமைச்சராக அவர் காங்கிரஸ் மத்திய ஆட்சியிலும், பிறகு பிஜேபியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் மத்திய ஆட்சியிலும் பதவி வகித்து, முதல் பெண் மந்திரி என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.

1997-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி, ஆல் இந்தியா திருணாமூல் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்து, மேற்கு வங்காள சட்டசபையில் கம்யூனிட் கட்சியின் பிரதான எதிர்கட்சியாக இருந்த காங்கிரசை வீழ்த்தி, அவர் கட்சி பிரதான எதிர்க்கட்சியானது. ஆல் இந்தியா என்று மம்தா தம் கட்சிக்குப் பெயர் வைத்தற்குக் காரணமே, அவரது பிரதமர் பதவி ஆசையைக் காட்டும். அதற்குத் தாம் அனைத்துத் தகுதிகளும் பெற்றவர் என்பது டிடியின் அப்போதைய நிலை.

2011-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் 34-வருட ஆட்சியை மேற்கு வங்காள சட்டசபைத் தொகுதிகளான 294-ல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கட்சி ஆரம்பித்து 14 வருடங்களில் அவரது கட்சி மட்டுமே 184 தொகுதிகளிலும், காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மம்தா 8-வது முதன்மந்திரி – மேற்கு வங்காலத்தின் முதல் பெண் முதல்மந்திரி என்ற பெருமையுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இது எல்லோராலும் அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு அரசியல் நிகழ்வாகும். 

அடுத்த தேர்தலான 2016-ல், டிடி தனித்துப் போட்டி இட்டு, 3-ல் 2 பங்கு இடங்களில் – அதாவது 211 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1962 வருடத்திற்குப் பிறகு தனித்துப் போட்டி இட்டு இரண்டாவது முறை முன்பு பெற்ற இடங்களை விட அதிகம் பெற்று வென்ற கட்சி என்ற புகழையும் பெற்றது அவரது கட்சியின் முக்கிய தொடர் வெற்றியாகும். அந்த தேர்தலில் போட்டி இட்ட பிஜேபி வெறும் 3 இடங்களில் தான் வெற்றி பெற்றது. ஆகையால் பிஜேபியை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை டிடி. அந்தக் கட்சிக்கு இனி எதிர்த்துப் போட்டி இட்டு வெற்றிபெரும் தகுதியுடைய கட்சி மேற்கு வங்காளத்தில் இல்லை என்பதால் அவரது ஆணவத்திற்கு இது ஒரு பெரிய வித்தாக அமைந்து விட்டது.

மேலும், இந்த இரண்டாவது அமோக வெற்றி மம்தாவின் போராடும் குணத்திற்குத் தீனியாக அமைந்து, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசுடன் மோதல் போக்கும் சாரதா சிட் ஊழல், ரோஸ் பள்ளத்தாக்கு ஊழல், நாரதா ஊழல், முஸ்லீம் மதத்தினருக்கு தனிச் சலுகைகள் – இஸ்லாம் மத ஆயிரக்கணக்கான இமாம்களுக்கு அரசு சார்பில் மாதாமாதம் பென்சன் அளித்தல் (அது சிறுபான்மை முஸ்லீம் மதத்தினரை ஈர்க்கும் செயல் என்று அந்த உத்திரவை ரத்துசெய்தது என்பது வேறு விஷயம்), வங்காள மக்களின் முக்கிய மத நிகழ்வான துர்கா சிலைகளை முகரம் பண்டிகைக்காக தடை செய்தது ஆகியவைகள் பொதுவாக வங்காள மக்களை – குறிப்பாக ஹிந்து ஜனங்களை மம்தா அரசுக்கு எதிரான வலுவான எண்ணங்களை உருவாக்கி விட்டது. அதை மிகவும் சாணக்கியத் தனமாக பிஜேபி தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க முழு மூச்சுடன் மக்களிடையே கொண்டு சேர்த்து அதில் அமோக வெற்றி பெற்று, அது 2019-ல் நடந்த லோக் சபா தேர்தலில் எதிரொலித்தது. 2 இடங்களில் 2014 லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்ற பிஜேபி 18 இடங்களிலும், 34 இடங்களில் 2014-ல் வெற்றி பெற்ற மம்தா கட்சி 2019-ல் 22 இடங்களாக வலுவிழந்து விட்டது. 2019 லோக் சபாவில் கம்யூனிஸ்ட் 2-லிருந்து பூஜ்யமாகியும், காங்கிரஸ் 4-லிருந்து 2-ஆகக் குறுகி மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சியும், மோடி கட்சியும் தான் தேர்தல் களத்தில் இந்த 2021 சட்ட சபைத் தேர்தலில் மோதும் நிலை உள்ளது.

டிடி (அக்கா) என்று மம்தாவை அவரது ஆதரவாளர்கள் அழைத்தாலும், அவரை எதிர்ப்பவர்கள் பிஷி (அத்தை) என்று கேலியாக அழைக்கிறார்கள்.

மம்தாவிற்கு அரசியல் வியூகங்களை பிராசந்த் கிஷோர் என்ற பீஹார் பிராமணர் தான் அமைக்கிறார். அவர் ‘மம்தாதான் வெற்றி பெறுவார். பிஜேபி இரண்டு இலக்கத்தைத் தாண்டாது. இந்த என் கணிப்புத் தவறானால், நான் இனி இந்தப் பணியிலிருந்து விலகிவிடுகிறேன்’ – என்ற அளவில் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

2011 தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மம்தாவின் தேர்தல் கோஷங்களான – மா, மாட்டி, மானுஷ் (தாய், தாய்நாடு, மக்கள் – என்பது தான் அமோக வெற்றியை அளித்துள்ளது. ஆகையால் கிஷோரின் ஆலோசனைப்படி மம்தா இப்போது, மண்ணின் மகள் என்ற கோஷத்தை முன்னிலைப் படுத்திப் பிரசாரம் செய்துள்ளனர். 



வங்காளம் முழுக்க பெரிய பெரிய விளம்பரத் தட்டிகளில் ‘பெங்கால் நிஜர் மெயெகெய் சாய் – வங்காளம் விரும்புவது வங்காள மகளைத்தான் - என்ற வாசகங்களுடன் அவரது படத்தைப் பெரியதாகப் போட்டு, அந்தப் படங்களுக்குப் பின்னால் வங்காளத்தின் கலாச்சார மையங்களாகக் கருதப்படும்  ஹைவுரா பாலம், தக்ஷிணேஷ்வர் காளி கோயில், ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதன், பெங்கால் புலி, தேயிலைத் தோட்டம், பட்டசித்திரா ஓவியம், பேலூர் மடம், பெங்கால் ரசுகுல்லா ஆகியவைகள் அந்தந்த தொகுதிகளுக்கு ஏற்ப இடம்பெறச் செய்து, வாக்காளர்களை கவர முயன்று வருக்கிறார்கள். இந்த யுத்திக்கு மூல காரணம் வாக்காளர்களில் 49 சதவிகிதம் பெண்கள் என்பதால் தான் என்று தெரிய வருகிறது.

இந்த ‘மண்ணின் மகள்’ கோஷத்தை வலுப்படுத்த, மம்தா பல கூட்டங்களில் “நான் வங்காள மண்ணின் மகள். இங்கு குஜராத் மோடி, அமித் ஷா போன்ற அன்னியர்களின் பேச்சு, பிரசாரங்கள் எடுபடாது. வங்காளம் டெல்லியிலிருந்து ஆளும் நிலையை ஒருபோதும் ஏற்காது” என்று விளக்கம் தருகிறார்.  

“எனது 10 ஆண்டு அரசாட்சியின் நல்ல திட்டங்களைப் பற்றி குஜராத் மாநில மைந்தர்கள் – அன்னியர்களான மோடி – அமிர்த் ஷா ஆகியவர்களிடம் விவாரிக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் கல்வி கற்க – யுனிவர்சிடி வரை படிப்பதற்கு கன்யாஸ்ஸ்ரீ ஸ்காலர்ஷிப், பட்டியல் சமூகத்தினருக்கு ஷிஷ்யாஸ்ஸ்ரீ ஸ்காலர்ஷிப், பொதுப் பகுதியினருக்கு விவேகாநதா ஸ்காலர்ஷிப், அத்துடன் முஸ்லீம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எனது சகோதர – சகோதரிகளுக்கு ஆக்யஸ்ரீ ஸ்காலர்ஷிப் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளேன். அதன் மூலம் 2 கோடியே 35 லட்சம் பேர்கள் பயன் அடைந்துள்ளனர். நான் என் இரு கைகளையும் கூப்பி எனது அன்பான சிறுபான்மை முஸ்லீம் மதத்தினர்களை வேண்டுவது இது தான்: சில முஸ்லீம் கட்சிகள் சைத்தான் பிஜேபியிடமிருந்து பணம் பெற்று பிரசாரம் செய்பவர்களின் பேச்சைக் கேட்டு உங்கள் ஓட்டுக்களைப் பிரிக்காமல் எங்கள் திருணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடும் படி வேண்டுகிறேன். அத்துடன் எனது ஹிந்து சகோதர சகோதரி ஓட்டர்களையும் பிஜேபியின் பேச்சைக் கேட்டு பிரிந்து ஓட்டளிக்காதீர்கள் என்றும் வேண்டுகிறேன்” என்று பரப்புரை ஆற்றுகிறார் மம்தா.

மேற்கு வங்காளத்தில் முஸ்லீம்களின் ஓட்டுக்கள் 27% மம்தாவிற்கு முன்பு போல் அளித்தால் வெற்றி நிச்சயம். ஆனால், அஸாடுதின் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும், இந்திய செக்குலர் பிரண்ட் கட்சியும் போட்டியிடுவதால், அவர்கள் மம்தாவின் முஸ்லீம் ஓட்டுக்களைப் பிரிக்கும் சூழ்நிலையால் மம்தாவின் வெற்றியும் கேள்விக்குறியாக உள்ளது. அது பிஜேபிக்குச் சாதகமாகவே உள்ளது. 

மேற்கு வங்காள தேர்தல் களத்தை நுண்ணியமாக ஆய்வு செய்தால், டிடி பெரும் வீட்சியை பிஜேபியின் பிரசார சக்தியால் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியதைத் தான் காட்டுகிறது.

இந்த நிலைக்கு டீடி தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.

அக்டோபர் 2005-ல் டிடியின் நந்திகிராமம் போராட்டம் அவரது அரசியல் வாழ்வில் முன்னேற ஒரு மைல்கல்லாக அமைந்து, 34 வருட கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை ஒரே அடியாக வீழ்த்தியது மட்டுமல்லாது அந்தக் கட்சியையே விலாசம் இல்லாத கட்சியாக ஆக்கி விட்டார்.

புத்ததேவி பட்டாசார்யாவின் கம்யூனிஸ்ட் ஆட்சி வங்காளத்தை தொழில் வளர்ச்சி மாநிலமாக மாற்ற நினைத்து, நந்திக்கிராமத்திலுள்ள பல ஏக்கர் விவசாய பயிருடும் விளை நிலங்களை அரசாங்க மற்றும் கட்சியின் சக்திகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக ஆர்ஜிதம் செய்தது. தொழிற் பூங்காக்களை அந்த ஆர்ஜிதம் செய்த பூமியில் இந்தோநேஷியாவின் சலிம் குழுக்கள் முதலீடுகளைப் பெற்று அமைப்பது தான் கம்யூனிஸ்ட் ஆட்சியின் திட்டம். மேலும் ஹைவுரா விளைநிலங்களையும் அபகரித்து அங்கும்  தொழிற் பூங்கா அமைக்கவும் திட்டம். சான்டோசோ என்ற அந்த சலிம் கம்பனியின் தலைவர் இதற்கு கல்கத்தா தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்த போது, தர்ணா, அவர் கார்களில் பயணம் செய்த போது கருப்புக் கொடி என்று போராடி இந்த கம்யூனிஸ்ட் ஆட்சியின் திட்டத்தை நிறுத்தி விட்டார் மம்தா. அதே போல் தான் நவம்பர் 2006-ல் டாட்டாவின் கார் தொழிற்சாலை சிங்கூரில் அமைவதையும் எதிர்த்து, எதிர் கட்சியாக இருந்த டிடி கட்சி அசெம்பிளியிலேயே மேஜை – நாற்காலிகள் உடைப்பு, மைக் உடைப்பு என்று அராஜகமான நிகழ்ச்சிகளால் மேற்கு வங்காள மக்களை அதிர வைத்தார்.  டாட்டா இந்த எதிர்ப்பால் தன் கார் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்திற்கு மாற்றி விட்டது. மம்தா தான் ஆட்சிக்கு வந்ததும், டாட்டாவை சிங்கூரில் கார் தொழிற்சாலை அமைக்க விடுத்த அறிக்கையை டாட்டா நிராகரித்தது என்பது டிடியின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி இட்டதாகத் தான் கொள்ள வேண்டும்.

மேலும், நந்திகிராமம் – சிங்கூர் ஆகிய கிராமங்களில் நிலம் இழந்த மக்கள் டிடி ஆட்சி தங்களுக்கு சரியான இழப்பீட்டுத் தொகை சரியாக அளிக்க வில்லை என்பதில் கடும் கோபத்தில் உள்ளது நிதர்சன உண்மை. அத்துடன் பல மத்திய அரசின் திட்டங்களை வரவிடாமல் தடுத்தும், செயல்படுத்திய திட்டங்களில் முழுப்பணமும் நேரடியாக பயனியர்களைச் சென்றடையாமல் திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ‘கட் மணி’ என்று அதில் கழித்துக் கொடுத்தார்கள். இதை மம்தாவே ஒப்புக்கொண்டு, அத்தகையவர்களை மக்களுக்கே பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் படி கட்டளை இட்டும் அது சரியாக செயல்படவில்லை. இதிலிருந்து மம்தா ஆட்சியின் ஊழல் தெரியவரும்.

ஊழல் ஒருபுறம் என்றால் பிஜேபியின் தொண்டர்கள் 100 தொண்டர்களுக்கும் மேலாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதில் படுகொலை செய்யப்பட்ட பலரின் உடல்கள் கிராமத்திலுள்ள மரத்தில் தொங்கவிட்டப்பட்டன. இது மம்தா கட்சியில் உள்ள மாவேஸ்டுகள் – முஸ்லீம்கள் ஆகியவர்களால் மேற்கு வங்காளம் முழுவதும் தொடர்கதையாக நிகழ்ந்துள்ளதால் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்பதை நிரூபிக்கின்றன. மேற்கு வங்க ஆளுனரே மம்தா அட்சி கலைக்கப்பட வேண்டும் என்ற அளவிற்கு அறிக்கை கொடுத்துள்ளதை மம்தா ‘இது மோடி – அமித் ஷா ஆகியவர்களின் சதி. இதை எதிர்ப்பேன். போராடுவேன்’ என்று தனது பாணியில் அறிக்கை விட்டார்.

மம்தா அதீத தன்னம்பிக்கையால் இந்த 2021 தேர்தலில் நந்திக்கிராமத் தொகுதியில் தேர்தலுக்கு நிற்கிறார். அவரை எதிர்த்து நந்திகிராமம் போராட்டம் வெற்றி பெறச் செய்த சுவேந்து அதிகாரி மம்தா கட்சியிலிருந்து பிரிந்து அவரையே எதிர்த்து பிஜேபி வேட்பாளராக நிற்கிறார். இதை அறிந்த மம்தா ‘நான் ஜெயிப்பது நிச்சயம். நான் இன்னொரு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டேன்’ என்று சொல்லி வேட்பு மனுத் தாக்கல் செய்து முதன் முறையாக நந்திகிராமம் தொகுதி வேட்பாளராக பிரசாரம் செய்யும் பொழுது காலில் பலத்த அடிபட்டது. அது ஒரு விபத்தாக இருப்பினும், ‘என்னைக் கொல்ல பிஜேபி ஐந்து/ஆறு நபர்களை ஏவி விட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டி சக்கர நாற்காலியில் அமர்ந்து காலில் அடிபட்ட அடுத்த நாளே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். இந்த சக்கர நாற்காலி தமக்கு அனுதாப அலையை அளித்து, ஓட்டுக்களை அள்ளித் தரும் என்ற மம்தாவின் கனவும் பலிக்கவில்லை என்பது தான் கள நிலையாகத் தெரிகிறது. இதுவே மம்தாவிற்கு அபசகுனம் என்பதுடன், பிரசாரத்திற்கும் தடங்களாக அமைந்து விட்டது 

‘நான் முன்பு வங்காளப் புலி. ஆனால் இப்போதோ அடிபட்ட வங்காளப் புலி. அடிபட்ட புலி எப்படிச் செயல்படும் என்பதை பிஜேபி பார்க்கப்போகிறது’ என்று முதலில் சொன்ன மம்தா, பிறகு அதே மம்தா ‘பிஜேபி வெளியூர்ப்புலி. அது ஹிந்து – முஸ்லீம் என்று பாகுபாடு பார்க்காமல் பாய்ந்து உங்களைப் பலி வாங்கும். திருணாமூல் கட்சிக்கே நீங்கள் ஓட்டுப் போடுங்கள்’ என்ற வேண்டுகோள் எந்த அளவு பலிக்கும் என்பது மே 2 அன்று தான் தெரியும். மம்தா அவர் நிற்கும் நந்திகிராமம் தொகுதியிலேயே தோற்பதற்கான அறிகுறிகள் இருக்கின்றன என்பது தான் பிஜேபியின் கணிப்பு. 

மம்தாவின் இரண்டு தேர்தல் பரப்புரைகள் தேர்தல் கமிஷனால் ‘அவைகள் தேர்தல் விதி முறைகளுக்கு எதிரானவைகள். ஆகையால் மம்தா 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை’ என்று உத்திரவு பிறப்பித்தது.

ஒன்று மேலே குறிப்பிட்ட முஸ்லீம் ஓட்டர்களை ஒட்டு மொத்தமாக தனது கட்சிக்கே ஓட்டுப் போடச் சொன்ன உரை.

இரண்டாவது இன்னும் மிகவும் மோசனமான வன்முறையைத் தூண்டும் முறையில் அமைந்த ஒன்றாகும்: ‘ஓட்டுப் போடவுள்ள பெண்களே! மத்திய பாதுகாப்பு வீரர்கள் (CRPF) அல்லது பெங்கால் காவல் பாதுகாப்பு வீரர்கள் உங்களை ஓட்டளிக்க விடாமல் தடுத்தால், அவர்களிடம் – நாங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டோம். உங்கள் மேல் முதல் அறிக்கை குற்றச் சாட்டை வைப்போம். உங்களை முழுமையாக ‘கேரோவ்’ - முற்றுகையிடுவோம். எங்களின் ஒரு குழுவினர் கேரோவ் செய்து பாதுகாப்பு வீரர்களை தடுக்கும் போது, எங்களது மற்ற குழுவினர் ஓட்டுப் போடுவார்கள். ஆகையால் நீங்கள் அவர்களுக்குப் பயந்து ஓட்டுப் போடாமல் இருந்து விடாதீர்கள்.’



மம்தாவிற்கு தேர்தல் கமிஷன் பிரசாரத்திற்கு 24 மணி நேரம் தடை விதத்தை எதிர்த்து காந்தி மூரத்தி என்ற இடத்திலிருந்து தர்ணா செய்தார். அப்போது பல ஓவியங்களைத் தீட்டினார். அதில் ஒன்று கருத்த இரண்டு இதயங்கள் போல் இருக்கும் ஓவியம். அதை தீய்ந்துபோன இரண்டு ரொட்டித் துண்டுகள் என்று கேலியும் பேசியுள்ளனர் டிடி வெறுப்பாளர்கள்.

அப்போது டிடி, புலி போல கர்ஜித்த உரை இதோ உங்கள் பார்வைக்கு: தேர்தல் கமிஷன் மோடி கமிஷன். தேர்தல் விதிமுறையான ‘மாரல் கோட் ஆப் காண்டக் – MCC’ உண்மையில் ‘மோடி மாரல் கோட் ஆப் காண்டக் -  Modi Moral Code of Conduct’. தேர்தல் கமிஷன் எனக்கு 10 நோட்டீஸ் அனுப்பினாலும், என் பதில் – கேரோவ்  (Gherao) என்பது போராடும் உரிமை பற்றியது. அது அனைவருக்கும் பொருந்தும். மத்திய படைவீரர்களை எதிர்த்து கேரோவ் செய்யக்கூடாது என்பது ஜனநாயக உரிமைக்கு எதிரானதாகும். ஏன், மோடி – அமிர்த் ஷா ஆகியவர்களின் உரைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களுக்கும் தேர்தல் பரப்புரைகளுக்கு தடை விதிக்காதது ஏன்?’

இதை எல்லாம் விட மிகவும் கேவலமான ஒரு மம்தாவின் உரை அவரது மனத்தின் அழுக்கை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. 

பாதுகாப்பு காரணங்களுக்காக சிடால்குச்சி என்ற 126-ம் நம்பர் பூத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர்கள் உயிரந்தது மிகவும் துரதிஷ்டமான ஒன்றாகும். அதைப் பற்றிய முழுவிவரமும் தேர்தல் முடிந்தவுடன் தெரியவரும். ஆனால், இதை மம்தா தனக்குச் சாதகமாக ஓட்டுப் பெற விழைந்த டெலிபோன் உரையாடல் வெளிவந்துள்ளது. 

சிடால்குச்சி வேட்பாளரான பார்த்தா பிரதிம் ராய் என்பவரிடம் ‘இறந்த நான்கு உடல்களையும் உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் தடுத்து, நமது கட்சியின் சார்பில் அந்த உடல்களை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று ஒரு பெண் குரல் சொல்வதாக அந்த உரையாடல் உள்ளது.

அந்தப் பெண் குரல் மம்தாவினுடையது என்று சந்தேகப்படுகிறது. 

உரையாடல் உண்மை தான். ஆனால் ஒரு முதன் மந்திரியின் டெலிபோனே ஒட்டுக்கேட்கப்படுவதிலிருந்து மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வது தெரிவருகிறது – என்று மம்தா குற்றம் சாட்டுகிறார். 

ஆனால் இறந்த உடல்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது எவ்வளவு கீழான செயல் என்பதை வாசகர்கள் உணரவேண்டும்.

அப்படி என்றால் பிஜேபி தவறே செய்ய வில்லையா? அவர்களின் பேச்சுக்களை தேர்தல் கமிஷன் தண்டிக்க வில்லையா? – என்றால் பிஜேபியின் பெரும் தலைவர்களின் உரைகளும் தண்டனைக்குத் தப்பவில்லை. உதாரணமாக, திலிப் கோஷ் என்பவர் மேற்கு வங்களா பிஜேபியின் தலைவர். அவர் பிஜேபி ஜெயித்தால் முதன் மந்திரியாக வரும் வாய்ப்புண்டு என்று கணிக்கப்படும் நபர். அவர் ஷிடல்குட்சி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரியிழந்த சம்பவம் குறித்து, ‘கலவரம் செய்யும் பசங்களுக்கு இந்த துப்பாக்கிச் சூடு ஒரு பாடம். சட்டம் ஒழுங்கை மதிக்காதவர்கள், துப்பாக்கிக் குண்டு எவ்வளவு பலம் பொருந்தியது என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள். ஓட்டுப் போடுவதை தடுத்தால், இன்னும் பல ஷிடல்குட்சி துப்பாக்கிச் சூடுகள் நடக்கும்’ என்று சொன்னதையும் தேர்தல் கமிஷன் கண்டித்து அவருக்கு 24 மணி நேரத் தடை விதித்தது.

இதே சம்பவத்தைப் பற்றி உரை நிகழ்த்திய பிஜேபி தலைவர் ராஹுல் சின்ஹாவை 48 மணி நேரம் தேர்தல் பணிக்குத் தடை விதித்து உத்திரவு பிறப்பித்தது. அந்த உரை: பாதுகாப்புப் படைவீரர்கள் நான்கு பேர்களை மட்டும் தான் சுட்டுள்ளது. அவர்கள் எட்டுப் பேர்களைச் சுட்டு வீழ்ந்தி இருக்க வேண்டும்.

ஏட்டிக்குப் போட்டி என்று இரண்டு கட்சிகளிலும் தகாத உரைகள் நிகழ்ந்தாலும், அதில் முதல் இடத்தை மம்தா கட்சி தான் பெறுகிறது என்பதை நடுநிலையாளர் அறிவார்கள்.

டிடி ஓ டிடி – என்ற மோடியின் கேலிக் கோஷம் மக்களிடையே கரகோஷம் கிடைத்தது. அதுவும் பிரபலமாகியது. அதை மம்தா ‘மோடி பெண்களையே அவமானப்படுத்தி விட்டார்’ என்று குற்றம் சாட்டி உள்ளார். வேறு சிலரும் மோடி இதைத் தவிர்த்து இருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு உள்ளனர். ஆனால் மம்தா – மோடியை சைத்தான் என்ற அளவில் மறைமுகமாகச் சொல்லும் போது, மோடியின் கேலிக் கோஷம் பற்றிய குற்றச் சாட்டின் வீரியம் குறைகிறது என்பது தான் நமது கருத்து. 


கிளப் ஹவுஸ் என்ற ஆடியோ ஆப் மூலம் லிபரல் & சிக்குலர் லுத்யான்ஸ் பத்திரிகையாளர்களுக்கும் மம்தாவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோருக்கும் நடந்த உரையாடலில் ‘மம்தா இந்த தேர்தலில் தோற்கும் நிலையில் தான் இருக்கிறார். அநேகமாக பிஜேபி மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைக்கலாம்’ என்ற அளவில் கருத்துத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு சிக்குலர் பெண் மேதாவி பத்திரிகையாளர் சாக்க்ஷி ஜோஷி, கிஷேரிடம் ‘மம்தா எப்போது தான் சிறுநீர் கழிப்பார்? ஹெலிகாப்டரிலிருந்து நேராக மேடைக்கு வருகிறார். ஒரு மணி நேரம் பேசுகிறார். பிறகு மீண்டும் ஹெலிகாப்டரில் பயணம். உண்மையிலே சிறுநீர் கழிப்பதை பல மணி நேரம் தவிர்ப்பது என்பது ஒரு வலுவான திறமையாகும்’ என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.



கடைசியாக ஒன்று: 




நமது தேசியக் கொடியின் மூன்று நிறங்களைக் கொண்ட மூன்று பூக்கள் கொத்து இரண்டு உள்ள ஒரு செடி தான் மம்தா கட்சியின் தேர்தல் சின்னம். காவி – பச்சை என்று இரண்டு நிறங்கள் கொண்ட தாமரை தான் பிஜேபியின் தேர்தல் சின்னம்.

ஜெயிக்கப்போவது ஆறு பூக்கள் கொண்ட செடியா அல்லது தாமரைப் பூவா என்பது மே 2-ல் தெரியவரும்.

வாய்மையின் விருப்பமும், கணிப்பும் மேற்கு வங்காளத்தில் தாமரை மலரும், செடி பட்டுப் போகும் என்பது தான். அது தான் அனைத்து நிகழ்வுகள் – செயல்கள் – உரைகள் – நம்பகத் தன்மை – நாணய அரசியல் என்ற அளவுகோல்களை தர்மத்தின் சன்னிதியின் முன் நிறுத்தி ஆராய்ந்தால், மோடிக் கட்சியின் ஆட்சி அங்கு அமையும் நிலை நேர்ந்தால் தான் அங்குள்ள மக்களுக்கு நல்லது என்பது நம் துணிபு.

நல்லதே நாளை நடக்கட்டும். மாற்றம் வரட்டும். சோனா பங்கால் மிளிரட்டும்.

 



































































































Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017