மம்தா பானர்ஜியின்
அரசியல் என்றால் அதில் அதிரடி திருப்பங்களும், அராஜக அடாவடிகளும், அரசியல் கொலைகளும்,
அனல்பறக்கும் சவால்களும் நிரம்பி வழியும்.
அவைகள் தான் அவரது பலமும், பலவீனமும் ஆகும்.
அவர் காங்கிரசில்
இருந்த போதும் சரி, காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி பல ஆண்டுகளாக கோலோட்சிய
இடது சாரிக் கட்சிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து கடந்த 10 ஆண்டுகள் மேற்கு
வங்காளத்தில் முதன் மந்திரியாக ஆட்சி செய்து, இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைக்
கைப்பற்ற தன் முழுப் பலத்தையும் காட்ட தேர்தல் களத்தில் உள்ள போதும் சரி, மம்தாவின்
அணுகுமுறையில் அதிக மாற்றமில்லை என்பது தான் சரியான கணிப்பு.
மம்தாவை இப்போது
3 இடங்களே சென்ற 2016 ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பெற்ற பிஜேபி எதிர்த்து ஆட்சியை
அவரிடமிருந்து பறிக்க முயலுகிறது. காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகளும் மம்தாவுக்கு
எதிராக களம் காண்கின்றனர் என்றாலும், சென்ற லோக் சபாவில் 2 எம்பிக்கள் என்பது 18 எம்.பி.க்களை
வென்ற பிஜேபி தான் முக்கிய கட்சியாக தேர்தல் களத்தில் உள்ளது. மம்தாவின் திருணமுல்
காங்கிரஸ் தனது 34 எம்.பி. என்ற நிலையிலிருந்து 22 எம்பி என்று சென்ற 2019 தேர்தலில்
சுருங்கியது மம்தாவை நிலைகுலைய வைத்துள்ளது. இதனால் மம்தாவின் ஆக்ரோஷம் அதீதமாகி அதன்
உஷ்ணத்தைத் தாங்காமல் பல மம்தாவின் பெரும் தலைகள் பிஜேபிக்குத் தாவியது இன்னும் மம்தாவை
கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. அபிரிமிதமான தன்னம்பிக்கையினால் மம்தா
பல தவறான முடிவுகளை தன்னிட்சையாக எடுத்து, அவைகளக் கட்சியினர் செயல்படுத்த விழைவதால்,
அதன் தாக்கமும் கட்சியைப் பலவீனப்படுத்துவதை மம்தா அறிவதாக இல்லை. அதை மம்தாவுக்கு
அறிவுறுத்தும் துணிவும் ஒருவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதில் ஒன்று தான்
நந்திகிராமைத் தேர்ந்தெடுத்து, அதில் தேர்தலுக்கு நிற்க முடிவெடுத்ததாகும். நந்திகிராம்
போராட்டம் தான் மம்தாவை முதன் மந்திரியாக ஆக்க உதவியது என்பது கடந்தகால வரலாறு. ஆனால்
தேர்வான பிறகு நிலம் இழந்தவர்களுக்கு நிலமோ, தகுந்த வேலையோ, சரியான இழப்பீடோ இல்லாமல்
அந்த நந்திகிராம மக்கள் மம்தாவிடம் கொதித்துள்ளனர் என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.
அதிலும் நந்திக்கிராமப் போராட்டத்தில் முக்கிய புள்ளியாக இருந்த திருணமூல் காங்கிரசில்
இருந்த சுவேந்து அதிகாரி இப்போது பிஜேபியில் சேர்ந்து மம்தாவை எதிர்த்து தேர்தலில்
நந்திகிராமத்தில் நிற்கிறார். ஆகையால் இந்த பிஜேபியின் செய்கை மேலும் மம்தாவை கோபத்தின்
உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
“நான் நந்திக்கிராமத்தில்
மட்டும் தான் நிற்கப் போகிறேன். ஜெயிக்கப் போகிறேன்’ என்று சூள் கொட்டி அங்கு வேட்பு
மனுவையும் தாக்கல் செய்த மார்ச் 10-ம் தேதி மாலையில் தேர்தல் பிரசாரத்தையும் தொடர்ந்து
விட்டார். நந்திகிராமம் கிழக்கு மிட்நாபூரின் உள்ள பிருலியா பஸார் வழியாக மம்தாவின்
கார் செல்ல, அவர் காரின் முன் சீட்டில் நின்றபடி காரின் கதவையும் திறந்து வைத்துக்
கொண்டு, கூடியிருந்து மக்களைப் பார்த்துக் கைகளை அசைத்துக் கொண்டு இருந்தார். அவருக்குப்
பின்னால் ஒரு செக்குரிடி ஆபிசர் காரின் முன்பக்கத்துக் கதவை மம்தாவிற்கு பாதுகாப்பாகப்
பிடித்து வந்துள்ளார். ஆனால் அந்த மார்கெட்டில் தெருவில் பதித்த குட்டை இரும்பு கம்பு
காரின் கதவில் இடிக்க அதனால் மம்தாவின் இடது காலில் நன்றாக அடிபட்டு விட்டது. அதன்
வலியால் மம்தா அவதிப்பட்டார். இருப்பினும் அந்த நிலையிலும் “என்னை நான்கு/ஐந்து பேர்கள்
கொல்ல முயன்றுள்ளார்கள். சதி நடக்கிறது. நான் கல்கத்தா போகவேண்டும்’ என்று சொன்னவுடன்
அவரை உடனே கல்கத்தாவிற்குக் கூட்டிச் சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்து காலில் கட்டும்
போடப்பட்டுள்ளது.
அடுத்த நாள் தனது
ஹாஸ்பிடல் அறையிலிருந்து படுத்தபடியே ‘நேற்று எனக்குப் பலமாக காலிலும், என் கையிலும்
காயம் பட்டது உண்மை. தலைவலி - நெஞ்சு வலி ஆகிவைகளால் நான் அவதிப்படுகிறேன். பயங்கரமாக
என்னைத் தள்ளியதால் என் கால் கார் கதவினால் நசுக்கப்பட்டது’ என்று இந்த சம்பவத்தைப்
பற்றி விவரித்துள்ளார்.
தேர்தல் கமிஷன்
தனது அறிக்கையில் ‘இது திட்டமிட்ட சதியோ அல்லது தாக்குதலோ இல்லை. மம்தாவின் பாதுகாப்பு
அதிகாரிகளின் கவனக் குறைவினால், கூட்டத்தினரைச்
சரியாக கட்டுப்படுத்தாதது தான் காரணம். மேலும், மம்தா அரசின் தலைமை அதிகாரியின் அறிக்கையும்
‘எப்படி காரின் கதவினால் மம்தாவின் காலில் அடிபட்டது என்பதை விளக்கவில்லை’ என்றும்
தெளிவு படுத்தி உள்ளது.
‘என் கால் வலி
ஒரு பொருட்டே இல்லை. வீல் சேரில் நான் என் தேர்தல் பணிகளைச் செய்வேன். மக்களின் வலியைப்
போக்குவது தான் என் லட்சியம். பிஜேபி என்னைக் கொல்ல நினைக்கிறது. தேர்தல் கமிஷன் சுதந்திரமாகச்
செயல்படவில்லை. அதை அமித் ஷா தான் செயல்படுத்துகிறார்’ என்றெல்லாம் பொதுக்கூட்டங்களில்
மம்தா குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார்.
130 பிஜேபி தொண்டர்கள்
கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தாய்மார்களின் கண்ணீர் மம்தாவுக்கு ஒரு பொருட்டல்ல
– என்று அமித் ஷாவும் பதிலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
3 எம். எல்.ஏ.க்களே
முந்தைய தேர்தலில் பெற்ற பிஜேபி இப்போது மம்தாவை இந்த அளவுக்கு பதபதைக்க வைத்துள்ளதைப்
பார்க்கும் போது, இது ஒரு அசுர வளர்ச்சி என்று தான் கணிக்க வேண்டும். திருணமுல் காங்கிரசிலிருந்து
பலரும் வெளியேறுவதைப் பார்க்கும் பொழுது, அந்தக் கட்சியில் ஒரு பெரும் குறை இருப்பது
நன்கு வெளிப்படுகிறது. பிஜேபிக்கு மூன்று இலக்க வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது
சர்வ நிச்சயம். ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றால் அது சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்ததாகி விடும்.
மம்தா ‘நான் ஒரு
பிராமணப் பெண். சாந்திபாத் ஸ்லோகங்களைச் சொல்லித்தான் நான் என் வீட்டிலிருந்து கிளம்புகிறேன்.
தெருவிலே டீ விற்கும் குஜராத்தியர்களுக்கு ‘நான் சென்ற தேர்தலில் நின்ற பாபானிபூர்
தொகுதிக்கு என்ன செய்தேன்?’ என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. நான் என் பெயரை மறக்கலாம்,
ஆனால் நந்திகிராம் என்ற பெயரை நான் என்றுமே மறக்க முடியாது. அது தான் என் அரசியல் வெற்றிக்
களம்’ என்று கர்ஜிக்கிறார்.
‘நான் இப்போது
அடிபட்ட புலி. அடிபட்ட புலி ஆபத்தானது. என் காலில் அடிபட்டுள்ளது. எதிரிகள் கால்கள்
பத்திரம்’ என்ற அளவிற்கு மம்தா வெறிகொண்டு பிரசாரம் செய்கிறார். அதுவும் ஒரு பெரிய
மாநிலமான மேற்கு வங்க முதன் மந்திரியாக – காபந்து அரசின் தலைவராக இருப்பவர் – இப்படிப்
பேசுவது ஜனநாயக மரபுக்கு உகந்தது அல்ல.
அடிபட்ட ஆபத்தான
புலியாக தன்னைத் தானே பாராட்டும் மன நிலையில் உள்ள மம்தா மீண்டும் மூன்றாவது முறையும்
முதல் மந்திரியாக வந்தால் அது மேற்கு வங்கத்திற்கு நல்லதில்லை என்பது தான் எமது கணிப்பு.
மம்தா எதிர்கட்சித் தலைவராக இருந்தால் கூட அவரைச் சமாளிப்பது கடினம். அது அவரது ஜீன்ஸ்.
பகவான் தான் மம்தாவிற்கு
– பிராமணப் பெண்ணான சாந்திபாத் ஸ்லோகங்களை தினமும் காலையில் வேலையைத் தொடங்கும் போதும்
உச்சரித்துப் பிரார்த்திக்கும் அக்காவிற்கு – சாந்த புத்தியையும், புனிதமான சாதுர்யத்தையும்,
தூய்மையான மனத்தையும் அளிக்க வேண்டுகிறோம்.
ஜெயிப்பதும், தோற்பதும்
வாழ்வில் இயல்பு. அதற்காக ஜெயித்தால் தோற்றவர்களைப் பழி வாங்குதலும், தோற்றால் ஜெயித்தவர்களைச்
செயல்பட விடாமல் 24/7 நேரமும் தொல்லை கொடுப்பதும் அராஜக அரசியலாகும். அறவழி அரசியலை
மம்தா தேர்ந்தெடுக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
ஜெய் பெங்கால்.
Comments