ஆன்மீகம் ஆர்ப்பரிக்கும் ஆண்டவன் அருளை வேண்டும் மார்கழி மாதம்

 


நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவான், ஒரு ராசியிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய நிகழ்வு தான், தமிழ் மாதமாக குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கக்கூடியதை மார்கழி மாதமாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

டிசம்பர் 16ம் தேதி சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்ககூடிய மார்கழி மாதம் தொடங்குகிறது. 

 

மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம். தனுசு ராசி கால புருஷ தத்துவப்படி பாக்ய ஸ்தானம். இது குருவின் வீடு. குரு வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது சிறப்பு.

இந்த மாதம் முழுவதும் ஆண்டாள் அருளிய திருப்பாவையும், மாணிக்க வாசகர் அருளிய திருவாசமும் வீட்டிலும், வீதியிலும், கோயில்களிலும் பாடப்பட்டு, தமிழக மெங்கும் தெய்வீக மணம் வீசி, மங்களகரமாகத் திகழும்.

மார்கழி மாதத்தில் உஞ்சவிருத்தி பஜனைக் குழுக்கள் தியாகப்பிரம்மத்தின் கீர்த்தனைகளைப் பாடிய படி வீதிவலம் வந்து பக்தியை வீதியெங்கும் பரப்புவார்கள். வீடுகளின் வாசல்களில் பெரிய கோலங்கள் அலங்கரிக்க, உஞ்சவிருத்தி பிராம்மணரை பாத பூஜை செய்து வலம் வந்து பெண்கள் வணங்குவார்கள்.

ஹிந்து மதம் ஒரு வாழ்வியல் என்பதை இந்த சம்பவங்கள் பறை சாற்றும்.

மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மார்கழி 10-ம் தேதி வெள்ளிக் கிழமை (25 – 12 – 2020) அன்றும், ஆருத்ரா தரிசன விழா மார்க்கழி 15-ம் தேதி புதன் கிழமை (30 – 12 – 2020) அன்றும் நடைபெறுவதும் இதன் சிறப்பிற்கு சான்றாகும்.

மார்கழி முப்பது நாட்களும் ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, பாவை விரதம் இருந்து ஆண்டாள் பெருமாளையே மார்க்கழி மாதத்தில் மணாளனாகக் கொண்டாள் என்பது புராணம்.

வைகுண்ட ஏகாதசியில் அனைத்து பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பதும், அதன் வழியாக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அந்த வாசலைக் கடந்து “கோவிந்தா கோவிந்தா” என்று மனமுருகி மறுபிறவி இல்லா சொர்க்கம் கிடைக்க வேண்டுவதும் இந்த மாதத்தின் சிறப்பாகும்.

வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடராஜருக்கு ஆண்டில் 6 தினங்கள் மட்டும் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்படுவது வழக்கம்.  நடராஜர் மிக சிறப்பாக காட்சி தரும் சிதம்பரம் மற்றும் உத்திரகோசமங்கை திருத்தலங்களில் இந்த அபிஷேகம் மற்றும் அலங்காரம் பிரசித்தி பெற்ற திருவிழாவாகக் கொண்டாடப்படுவதும் இந்த மார்க்கழித் திங்களில் தான். 

மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன.

மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

 

திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.

இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.




இந்த பெருமை மிகு மார்கழியில் வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் ஆண்டவன் அருள் அபரிமிதமாக கிடைக்க வேண்டுவோமாக.











Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017