கந்த சஷ்டி விரதம் – 15 – 11 – 2020 முதல் 6 நாட்கள்
கந்த சஷ்டி
விரதம் – 15 – 11
– 2020 முதல் 6 நாட்கள்
கொரோனாவினால் இந்த வருடம் நடக்கும் திருவிழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து பல நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஸ்கந்த புராணம் சிவபிரானின் மூன்றாவது கண்ணிலிருந்து முருகன் பிறந்து, பார்வதி தேவியிடம் வேல் பெற்று, தேவர்களை சிறைபிடித்து அசுர சாம்ராஜ்யத்தை நடத்திய மூன்று அசுரர்களான சூரபத்மன், சிங்கமுகா சூரன், தாரகா சூரன் ஆகியவர்களை முருகன் வதம் செய்த நாள் தான் கந்த சஷ்டி விரத்தின் ஆறாவது நாளாகும்.
அசுரர்களுக்கும் அருள் வழங்கும் விதமாக சிங்கமுகாசூரனை பார்வதி தேவிக்கு சிம்ம வாகனமாக இருக்க முருகன் அருள்பாளித்தார். சூரபத்மன் போரிலே தோற்று, திருச்செந்தூர் கடலில் மா மரமாக ஒளிந்து கொள்ள, முருகன் பார்வதியிடமிருந்து பெற்ற வேலால் மா மரத்தை இருகூறாகப் பிளக்க, அதிலிருந்து சேவலும் – மயிலும் ஆக சூரமத்மன் இரண்டு உயிர்களாக உருமாறவும், மயிலை வாகனமாகவும், சேவலை தன் வெற்றிக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டு, பகைவனுக்கும் அருளும் தெய்வமாக திருச்செந்தூரில் காட்சி தருகிறார்.
அந்த அசுரர்களை மூன்று தீமைகளின் முழு அம்சமாகக் கொள்வர். ஆணவம் (சூரன்), கன்மம் (சிங்கமுகா சூரன்), மாயை (தாரகா சூரன்) ஆகியவைகளாக உருவகப் படுத்தப்படுகிறார்கள். சங்கராச்சாரியார் சூரபன்மன் ஆணவத்தாலும், சிங்கமுகன் கன்மத்தாலும், தாரகன் மாயையாலும் அழிந்தான் என விளக்குகிறார்.
எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விரத முறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர்.
ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர்.
திருச்செந்தூர் முருகன் அருள் வாய்மை அன்பர்கள், அவர்களது உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் முழுமையாகவும், வாழ்நாள் முழுவதும் கிடைக்க வேண்டுவோமாக.
முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே. - கந்தர் அனுபூதி
மும் மலங்கள் – ஒரு சிறிய விளக்கம் – ஆக்கம்: பவித்திரன்
ஆணவம், கன்மம், மாயை என்பவைகளைத் தான் மும் மலங்கள் என்று சைவ சிந்தாந்தம் சுட்டிக் காட்டுகிறது.
ஆகையால் இந்த மூன்றும் உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மலங்களாகிய கழிவுக் பொருட்கள் என்பது சைவ சிந்தாந்த கோட்பாடாகும்.
·
பழவினை (சஞ்சிதம்): முந்தைய பிறவியில் செய்த நல்வினை, தீயவினைகள்.
·
நுகர்வினை (பிராரத்தம்): இப்பிறவியில் செய்த நல் – தீய வினைகள்.
·
ஏறுவினை (ஆகாமியம்): வினைப் பயன்களை அனுபவிக்கும் போது ஏற்படும் வினைகள்.
மாயை என்பது மிக நுண்ணியமான ஒன்று. இறைவன் உலகில் காணும் அனைத்து ஜீவராசிகளையும் மாயையைக் கொண்டே படைக்கிறான் என்கிறது சைவசித்தாந்தம். இதுவும் வெளியேற்றப்பட வேண்டிய மலம் போன்றது தான் என்றாலும், ஆணவத்தை அகற்ற இந்த மாயை உதவும் என்று சொல்லப்படுகிறது. சூரியன் இல்லாதபோது ஒரு சிறு விளக்கு உதவுவது போலும், ஒரு சிறு விதையில் ஒரு பெரும் மரமே மறைந்திருப்பது போல் இந்த மாயை பயன்படுகிறது என்றும் சைவசித்தாந்தம் கூறுகிறது.
ஒருபொருள் தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்பன அவை.
உதாரணமாக மண் குடம் என்ற ஒரு பொருள் தோன்ற மண் முதற்காரணம்,
குயவன் நிமித்தகாரணம், அவன் உபயோகிக்கும் கருவிகள் துணைக்காரணம்.
அதுபோலத்தான் உலகம் தோன்ற மாயை முதற்காரணம், இறைவன் நிமித்த
காரணம், அவனுடைய சக்தி துணைக் காரணம், இது சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக்
கொள்கையாகும்.
ஒரு பெரிய ஆலமரத்தின் உற்பத்தி ஒரு சிறிய விதையில்
அடங்கியிருப்பது போல இவ்வுலகத்து அம்சங்கள் யாவும் சூட்சுமப் பொருளாகிய மாயையுள்
அடங்கிக் கிடக்கின்றன. இம் மாயையைக் கொண்டு இறைவன் இயக்க்கும் பொழுது இந்த மாயை 36
தத்துவங்களை உருவாக்குகிறது.
அந்த 36 தத்துவங்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
·
சுத்த மாயை – 5 தத்துவங்கள் – அவைகள்: சிவம், சக்தி,
சாதாக்கியம், ஈசுவரம், இது சிவ தத்துவம்..
·
அசுத்த மாயை – 7 தத்துவங்கள் – அவைகள்: காலம், நியதி, கலை,
வித்தை, அராகம், புருடன், மாயை – இது வித்யா தத்துவம்.
·
பிரகிருதி மாயை – 24 தத்துவங்கள் – அவைகள்: அந்தக் கரணங்கள் –
4, ஞானேந்திர்யங்கள் – 5, கன்மேந்திரயங்கள் – 5, தன்மாத்திரைகள் – 5, பூதங்கள் - 5
இந்த 36 தத்துவங்கள் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள்
தோன்றுகின்றன. இவை தோன்றி உலகத்தை இயங்க வைக்கின்றன.
எனவே மாயை என்ற மலம்தான் சைவசித்தாந்தத்தில் விரிவான
செய்தியைப் பெற்றதாகும்.
சைவ சமயத்தில் ஆணவம் என்பது நெல்லிலுள்ள உமி போன்றது, கன்மம் நெல்லிலுள்ள முளை போன்றது, மாயை நெல்லிலுள்ள தவிடு போன்றது என்று விளக்குகிறது.
சிவஞான சித்தியார் உரையிலோ, ஆணவம் தவிடு போன்றது, கன்மம் முளை போன்றது, மாயை உமி போன்றது என்று உவமைகளை மாற்றிக் காட்டுகிறது.
பதி, பசு, பாசம் என்ற தத்துவம் சைவ சிந்தாந்தத்திற்கு உடன்பாடானதாகும். பதி என்றால் இறை, பசு என்றால் உயிர், பாசம் என்றால் கட்டு என்று பொருள்படும்.
Comments