என் இன்னொரு அம்மா

அம்மாவின் ஸ்தானம் மிகவும் உன்னதமானது. புனிதமானது. தெய்வத்திற்குச் சமமானது. ஆனால், அந்த ஸ்தானத்தைப் பெருவதற்கு, அந்தத் தாய் செய்யும் தியாகம் தான் எத்தனை? அப்படிப்பட்ட உன்னத ஸ்தானத்தை நான் இன்னொரு ஜீவனுக்கு கொடுக்க விழைகிறேன். அந்த ஜீவன் தான் என் மாமியார். ஆம், என் மாமியார் தான் என் இன்னொரு அம்மா. என் இன்னொரு அம்மா துரும்பாக இளைத்து, நடக்கும் பொழுது சிறிது கூனும் விழும். அவர் பேசுவது மிக மெதுவாகத்தான். கண்ணாடி அணிந்து, அவர் ஸ்லோகப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது, எனக்கு மஹா பெரியவாளின் நினப்பு வரும். அது ஏன் என்று என்னால் விளக்க முடியவில்லை. அவரது முகத்தின் தேஜஸ் அப்படி. என் இன்னொரு அம்மா இளவயதிலேயே விதவையாகியவர். அந்த துக்கத்தால், சரியான ஆகாரம் கொள்ளாமல், தன் உடம்பைப் பேணாமல் இருந்து விட்டார். வாழ்க்கையில் அவர் பட்ட துன்பங்கள் அவர் உடல் பூராவும் பரவி உருக்குலைய வைத்து விட்டது. ஆனாலும், தான் பெற்ற இரண்டு ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளைக் கரையேற்ற வேண்டிய கடமைகள் தான் அவருக்குப் பலத்தை கொடுத்திருக்க வேண்டும். எனக்குக் கல்யாணம் ஆன பொழுது, அவரது இரண்டு பையன்களும்...