காவிக்காவியமா திருக்குறள்?


காவிக்காவியமா திருக்குறள்?
ஆக்கம்: பவித்திரன்



திருவள்ளுவர் காவியை மதிக்கும் ஹிந்துவா? என்பதை அவரது திருக்குறள்கள் மூலம் நிரூபிப்பது என்பது கடினமான காரியம் ஒன்றும் இல்லை. அதைவிட திருக்குறள் ஒரு காவிக்காவியம்ஹிந்துமதத்தின் கொள்கைகளை ஏற்கும் சிந்தனைகளையும், சிந்தாந்தங்களையும் தன்னடத்தே கொண்ட பல குறட்பாக்களைக் கொண்ட காவியம் என்பதை நிரூபிப்பதும் மிகவும் சுலபமான ஒன்று தான். ஆகையால், திருவள்ளுவரை சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு ஹிந்துவாககடவுளை முழுமனதுடன் நம்பும் ஹிந்துவாக அதில் விதிக்கப்பட்டிருக்கும்தவம், ஊழ், மறுபிறவி, சொர்க்கம், நரகம், அழிவற்ற ஆத்மா, ஏழு பிறவி, யாகம், துறவு, நிலையாமை, பிறவாமைஆகிய தத்துவங்களை குறிக்கும் குறட்பாக்கள் இருப்பதாலும், ஹிந்துக் கடவுள்களான விஷ்ணு, லட்சுமி, யமன், உலகளந்த வாமனன், இந்திரன், திருவடி தொழுதல், வானோர், அந்தணர், தாமரைக் கண்ணான் (திருமால்) ஆகியவர்களை திருக்குறளில் விளக்கப்பட்டிருப்பதாலும் - ஏற்பது தான் திருவள்ளுவருக்கு நாம் செய்யும் தர்மம். ஆகையால், திருவள்ளுவர் காவி வஸ்திரத்தை ஏற்பார் என்று கொள்வதிலும் உண்மை உண்டு.

அரசாங்கம் அங்கீகரித்த வள்ளுவர் படத்தை இது அவமதிப்பு செய்ததாகாதா? என்ற கேள்வி எழுவது நியாயம் தான். அதற்குப் பதில் சொல்லவும் வேண்டும்.

அரசாங்கம் வெளியிட்ட வள்ளுவர் படத்திற்கு முன்பு திருவள்ளுவர் படம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினால், பல படங்கள்பல சிலைகள்பல கோயில்கள் திருவள்ளுவருக்கு உண்டு என்பது தான் உண்மை.
மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயில் சிலைஅவருக்குப் பக்கத்தில் அவரது தர்ம பத்தினி வாசுகியின் சிலையும் உள்ளது. அவரைத் தெய்வமாகவே தமிழ் மக்கள் வணங்கி வருகிறார்கள் இது 16-ம் நூற்றாண்டில்  வள்ளுவருக்கு எழுப்பப்பட்ட நினைவாலய கோயில். திருவள்ளுவர் தெய்வப் புலவர் என்றும் அழைக்கப்படுகிறார். சைவ மரபுப் படி நாயன்மார்கள் 63 மட்டுமே. ஆனால் திருவள்ளுவரை 64-வது நாயன்மாராக ஏற்றுக் கொண்டு, அவரது திருவுருவம் மைலாப்பூர் 63 விழாவில் சப்பரத்தில் திருவீதி உலா வருகிறார். இதை விட திருவள்ளுவர் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்பதற்குச் சான்று வேண்டுமா?

இக் கோயிலின் திருப்பணி கடந்த 27.4.1973-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் தொடங்கி, திருப்பணிகள் நிறைவேற்றப்பட்ட பின், கடந்த 23.01.2001-ல் திருவள்ளுவர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல்வர் உள்ளிட்ட பலர் பங்கேற்றதாக கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், சைவ முறைப்படி அனைத்து பூசைகளும் அரசின் தலைமையில் ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டும் வருகிறது. ஆகையால் வள்ளுவர் ஹிந்துவா? என்று கேள்வி எழுப்புவது எந்த விதத்திலும் நேர்மையாகாது.



முதன் முதலில் காலம் சென்ற மத்திய அமைச்சர் கே. சுப்பராயன் அவர்களால் திருவள்ளுவருக்கு தபால் தலை வெளியிடப்பட்ட போது வள்ளுவருக்கு பூணூல் இல்லை. அதைப் பற்றி அமைச்சரிடம் கேள்வி கேட்ட போது, ‘ஆமாம், பூணுல் திருவள்ளுவர் மார்பில் இருக்காதுஎன்று சர்வாதிகாரத் தோரணையில் பதில் சொல்லி விட்டார்.


எந்தவிதமான மதச் சின்னங்களோ இல்லாமல் திருவள்ளுவர் உருவத்தை வரையும் படி தமிழ் அறிஞர்கள் அதிலும் குறிப்பாக பாரதிதாசன் குறியாக இருந்தார். அதன் காரணமாக கருணாநிதி எதிர்கட்சித் தலைவராகவும், பக்தவத்சலம் முதல்வராகவும் இருக்கும் போது, வேணுகோபால் சர்மா என்ற ஒவியரால், கருணாநிதி மதச் சின்னங்கள் இல்லா வள்ளுவர் ஓவியம் வரையப்பட்டு அதுவே அரசாங்க அதிகார பூர்வ ஓவியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இது திராவிட இயக்கத்தின் ஆணவப்போக்கையும், இந்துமத எதிர்ப்புக் கொள்கையையும், முக்கியமாக நாத்திகக் கொள்கையைத் திணிக்கும் வழியாகவும்ஏதேட்சாதிகார மனநிலையையும் தான் காட்டுகிறது.
வள்ளுவரின் முப்புரி நூலைக் கழற்றி, நெற்றியின் விபூதிப் பூச்சையும், சந்தனைத்தையும், குங்குமப்பொட்டையும் அழித்ததுடன், கழுத்தில் அணிந்திருந்த ருத்திராட்ச மாலையையும் கைகளில் ஜெபம் செய்யும் ருத்திராட்ச மாலையையும் பிடிங்கி வள்ளுவரை தெய்வ வள்ளுவராக காலம் காலமாக வணங்கப்பட்டவரைசெக்குலர் வள்ளுவராக ஒரு வெள்ளைத் துண்டைப் போர்த்தி திராவிட இயக்கத்தினர் ஹிந்துக்களை அதையே ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். வெள்ளை நிறத் துண்டை எடுத்து காவித் துண்டை வள்ளுவருக்குப் போர்த்தினால் திராவிட இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்துகின்றனர். ‘வள்ளுவரின் நெற்றியின் ஹிந்து மதச் சின்னத்தை ஏன் அழித்தீர்கள்? கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சத்தை ஏன் கழட்டினீர்கள்?’ என்றால் அதற்கு நேரிடையானநேர்மையான பதில் இல்லை.



இதற்கு பாரதியும் திராவிட இயக்கத்தின் ஹிந்து எதிர்ப்புச் சக்தியின் தாக்கத்திலிருந்து தப்ப முடியவில்லை.

பாரதியின் நெற்றியில் இருக்கும் திருசூர்ணம் அவரது சக்தி தெய்வத்தை வழிபடும் சின்னமாகும். அதை அழித்து அவரது நெற்றியை வெற்றிடமாக ஆக்கி விட்டார்கள். இது பாரதிக்குச் செய்யும் துரோகம். அவர் பரிபூர்ணமான ஹிந்து தேசிய வாதி. இது திராவிடக் கொள்கையைத் திணிக்கும் செயலாகும்.



இதே பாணியைத் தான் கருணாநிதி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலிலும் தன்னிச்சையாகச் செயப்பட்டுள்ளார்.

தமிழ்த் தாய் வாழ்த்தில் கடவுள் பெயரோஹிந்து மதத்தின் சாயமோஆரிய வாசனையோ இல்லாமல், அதே சமயத்தில் திராவிட வாசனை வீசும் வண்ணம் இருக்கும் வகையில் மனோன்மணியம் பெ. சுந்திரம்பிள்ளையின் பாட்டை தனக்குச் சாதனமாக பல வரிகளை புறக்கணித்து, அரசாங்க ஆணை வெளியிட்டு, கருணாநிதி தன் கருப்புத் திராவிடக் கொள்கைக்கு அடிகோலி உள்ளார்.

தமிழ்த் தாயைப் பற்றி பாரதி பாடல்கள் பல உள்ளன. அதற்கு முன்பு தமிழ்த் தாயைப் பற்றிப் பாடிய புலவர்கள் பலரின் அற்புதப் பாடல்கள் பல உள்ளன. ஆனால் அவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் சர்வாதிகாரப் போக்கில் தன்னிச்சையாக கருணாநிதி தமது பதவியின் காரணத்தால் தமிழ் மக்களின் மீது திணித்துள்ளார். ஏன் முழுப்பாட்டும் பாடக் கூடாது? – என்ற குரல் ஒலிக்கும் காலமும் வராது என்று இப்போதே கணிக்க முடியாது. தர்மம் தலைதூக்கும் காலம் வந்தால் அதர்மம் வேரோடு சாய்ந்துவிடும். இதற்குச் சரித்திரச் சான்றுகள் பல உண்டு.

பல வருடங்களாக தமிழ் நாட்டில் வெளியிடப்பட்ட அனைத்து வள்ளுவர் உருவப் படங்களில்நீரில்லா நெற்றி பாழ்என்பதற்கு ஏற்ப வள்ளுவர் படத்தின் நெற்றியில் திருநீர் பூச்சு உண்டு. முப்புரி நூல் உண்டு. ருத்திராட்சம் உண்டு. கைகளிலும் திருநீர் பூச்சு உண்டு. உண்மையில் திருவள்ளுவரின் அப்போதையை படங்களில் மேல் துண்டு கிடையாது. துண்டை இடிப்பில் கட்டுவதுதான் ஆண்டவனுக்குக் காட்டும் பக்தி என்பது தான் ஹிந்துக்களின் காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆனால் ஹிந்து மதச் சின்னங்களை மறைக்க கருணாநிதியின் திருவள்ளுவர் படத்தில் வெள்ளைத் துண்டு போர்த்தி, அவரை ஹிந்து அல்லாதவராகதிராவிடராகஉலகத்திற்குக் காட்ட முயன்றுள்ளார்.
திருவள்ளுவர் உருவம் உள்ள படங்கள் எல்லாம் பிராமணர்களால் வெளியிடப்பட்டவைகள் இல்லை என்பதையும் வாசகர்கள் உணரவேண்டும். அதில் சில படங்கள்/சிலைகள் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளன.






திருவள்ளுவருக்கு நெற்றி-கைகளில் விபூதி பூசி, கழுத்துகைகள் ஆகியவைகளில் ருத்திராட்சம் அணிவித்து பாரதிய ஜனதா கட்சியின் ஆதார பூர்வமான மின் வலையில் அந்த திருவள்ளுவர் படம் பிரசுரமானதை அடுத்து, ஸ்டாலின் இப்படி ட்வீட் செய்துள்ளார்: எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!


அதற்குப் பதிலடியாக கீழே உள்ளது போல் பி.ஜே.பி. ட்வீட் செய்துள்ளது.



திருவள்ளுவர் ஹிந்து தான் என்பதற்கு திருக்குறளின் பல பாக்களை மேற்கோள் காட்டி நிரூபிக்க முடியும். அவர் சமணரோ அல்லது புத்தரோ இல்லை என்பது வெளிப்படுத்த அவரது பல குறட்பாக்கள் இருக்கின்றன. அதைப் பற்றிய விவரங்களைத் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காவிக் காவியமா திருக்குறள்?’ என்ற கேள்விக்கு, ஆம் என்று திருகுறளின் பல பாக்களே கட்டியம் கூறும். மேலும் திருவள்ளுவர் ஒரு ஹிந்து என்பதையும், அவர் ஜைனரோ, புத்தரோ இல்லை என்பதையும் அவரது திருக்குறள் பாக்கள் பலவும் பறைசாற்றும் விதமாகஎந்தவிதமான அணுஅளவு கூட சந்தேகம் கொள்ளாத அளவில்இருப்பதையும் காணலாம். திருவள்ளுவரையே ஒரு ஹிந்து தெய்வமாக கோயில் கட்டி தமிழ் நாட்டிலும், அண்டை நாடான கேரளாவிலும் கொண்டாடும் போது இதில் சந்தேகம் காண முற்படுவது ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே படுகிறது.

திருக்குறளின் கடவுள் வாழத்தை எடுத்துக் கொள்வோம்.
ஹிந்துக்களுக்கு சூரிய வணக்கம் முக்கியமான ஒன்றாகும். காயத்திரி மந்திரமே சூரியனை வணங்கி வாழ்வின் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் மந்திரமாகும். அதே நோக்கில் தான் வள்ளுவரும் தமது திருக்குறளின் முதல் பாட்டில்ஆதி பகவன் முதற்றே உலகு’ – ‘உலகம் சூரியபகவானை முதன்மையாகக் கொண்டு இயங்குகின்றது’ -  என்றே தொடங்குகிறார்.

கடவுளின் பாதம் தொழுதல் என்பது ஹிந்து மதத்தின் முக்கியமுத்திக்கு வழிகோளும் வழிபாடாகும். அந்தப் பாதங்களை மலர்ப்பாதம் என்று துதிப்பர் ஹிந்துக்கள்.

வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்என்று சொல்லும் குறளில் படிப்பின் முழுப்பயனும் கடவுளின் பாதத்தைத் தொழும் போது தான் உண்டாகும் என்று வலியுறுத்தப்படுகிறது.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வர்என்ற குறளில் மலர் போன்ற மனத்தில் குடிகொண்டிருக்கும் கடவுளின் மலர்ப்பாதங்களைச் சரணடந்தவர்கள் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ்வர் என்கிறார்.  ஹிந்து மதத்தில் கடவுளை விருப்பு, வெறுப்பற்றவன் என்பர். அப்படிப்பட்ட கடவுளின் அடியை அடைந்தவர்களுக்கு எப்போதும் துன்பம் இல்லை என்றும் ஒரு குறளில் கூறியிருக்கிறார்.

நல்வினை தீவினை என்பது ஹிந்து மதக்கோட்பாடு. இறைவனைத் துதித்து அந்த இருவினைகளையும் சேராமல் வாழலாம் என்பதும் ஒரு குறள். அறவாழி அந்தணன் என்று கடவுளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். அதிலும் கடவுளின் தாள்திருவடி சொல்லப்படுகிறது. ‘தாளை வணங்காத் தலைஎன்று திருவள்ளுவர் கடவுள் தாளை வணங்குவதன் முக்கியத்தைத் தெரிவிக்கிறார். பிறவிப் பெருங்கடலை இறைவன் அடிமூலம் தான் நீந்தகடக்க முடியும் என்று முத்தாய்ப்பாக கடவுள் வாழ்த்தின் 10-வது குறள் முடிகிறது.

மழை பொய்க்காமல் பெய்ய தேவர்களுக்கு பூசை செய்ய வேண்டும். தானம்தவம் இரண்டும் மழை பெய்யச் செய்யும் காரணிகள்என்று வான் சிறப்பிலும் ஹிந்து கோட்பாடுகளையே குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

ஐம்புலன்களையும் அடக்கியவன் இந்திரப் பதவியை அடைவான் என்றால் அது ஹிந்து மதத்தைத் தானே குறிக்கும்? அந்தணர் என்போர் அறவோர் என்றால் அது எந்த மததினரைக் குறிக்கிறது? நல் இல்லறத்தான் வானுறையும் தேவர்களில் ஒருவனாக மதிக்கப்படுவான் என்றால் அது ஹிந்து மத தர்மம் என்பதை அனைவரும் அறிவர். விருந்தோம்பல் செய்யும் இல்லத்தில் திருமகள் உறைவாள் என்றால் அது நிச்சயமாக ஹிந்துமதக் கடவுள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆமை போல் ஐம்புலன்களை அடக்கினவனுக்கு ஏழு பிறப்பிலும் அரணாக அமையும் என்பதில் உள்ள ஏழு பிறவி ஹிந்து மத நம்பிக்கையாகும். பொறாமை கொண்டோரிடம் செய்யவள்சிவந்த பாதமுடிய திருமகள் தனது தவ்வையைமூத்தவளான மூதேவிக்கு வழிவிட்டு விலகி விடுவாள் என்ற குறள் முழுக்க முழுக்க ஹிந்து தெய்வங்களான திருமகள்அவளது மூத்தாள் மூதேவியை குறிப்பிடுகின்றன.

திருக்குறள் 617-ல் சோம்பல் உள்ளவனிடம் வறுமை என்னும் மூதேவியும், முயற்சி உடைவனிடம் தாமரையில் வாழும் சீதேவியான திருமகள் என்னும் தேவியும் உறைவாள் என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி வள்ளுவரின் காவி மனம்-மணம் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது.

முற்பிறப்பின் தவப்பயனின்றி இப்பிறப்பின் தவம் செய்து வீடுபேறு அடையும் முயற்சி ஈடேறாது என்ற குறளில் முற்பிறவியின் பலன், வீடு பேறு, தவம் ஆகிய அனைத்தும் ஹிந்து மதத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

தவத்தினால் எமனை வெல்லலாம் என்றும், இவ்வுலகில் வீடு பேறு அடையாதவர் அதிகம் இருக்கக் காரணம்தவம் செய்யும் துறவிகள் குறைவாகவும், தவம் செய்யாதவர்கள் அதிகமாகவும் இருப்பதால் தான் என்பது முழுக்க முழுக்க ஹிந்து மதக் கொள்கையே ஆகும்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின் என்ற குறள் ஒன்று தான் சமண மதத்தையும், பவுத்த மதத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் இங்கும் நீட்டலும்அதாவது ஜடா முடி வளர்ப்பதையும் குறிப்பிட்டுள்ளதால், இந்தக் குறளிலும் ஹிந்து மதத் துறவிகள் வருகிறாகள். அதிலும் வள்ளுவர் காவியை விடவில்லை.

நிலையாமை அதிகாராத்தின் 10 பாடல்களிலும் ஹிந்துமத்தின் கொள்கைகள் தான் பேசப்படுகின்றன. இந்த உலகத்தில் நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமையை உலகம் கொண்டுள்ளது என்பதிலிருந்து, உடம்பில் உயிர் உறைவது முட்டையின் ஓடு உடம்பு என்றால், அதன் உள்ளே உள்ள குஞ்சு தான் உயிர் என்றும், வீடு பேறு கிடைக்காத உயிர் மீண்டும் மீண்டும் உடலில் தஞ்சம் புகுகிறது என்றும் விளக்குவது ஹிந்து மத தத்துவமே.
இந்த உடம்புஇந்தச் செல்வம் என்னுடையது என்ற மயக்கம் தெளிந்தவன் தேவருக்கும் கிட்டாத வீடுபேறு கிட்டும் என்பதும் காவிக் கருத்தேயாகும்.
ஊழ் அதிகாராத்தின் 10 பாடல்களிலும் ஹிந்துமத தத்துவம் தான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஊழ்அதாவது விதி வலியதுஅதை அனுபவிக்கத்தான் வேண்டும்அதன் பிறகு தான் வீடு பேறு பெற முடியும் என்பதெல்லாம் காவித் தத்துவமே!

அடியளந்தான் என்ற சொல்லாடல் கொண்ட குறள் திருமாலைக் குறிப்பதாகும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்குஎன்ற குறள் முழுக்க முழுக்க காவிக் குறளாகும்.
உலகத்தை தன் காலால் அளந்த இறைவனைப் போல் சோம்பல் இல்லா அரசனும் உலகத்தை அடைவான் என்பது தான் அந்தக் குறளின் பொருள்.
1103-ம் குறள்: தாம்வீழ்வார் பெனதோள் துயிலின் இனிதுசொல் தாமரைக் கண்ணான் உலகு? என்பதில் உள்ள தாமரைக் கண்ணான் என்பது திருமாலைக் குறிக்கும் சொல்லாகும்.

காதலியின் தோல்களில் துயில்வதில் உள்ள இன்பம் தாமரைக் கண்ணானான திருமாலின் மேலுகம் கிட்டினும் இணையாகாது என்பது தான் குறளின் பொருள்.

 மேற் கூறிய பல குறட்பாக்களில் காவித் தத்துவமான ஹிந்துமதக் கோட்பாடுகள் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் இன்றி எழுபதப்பட்டுள்ளதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.
வள்ளுவருக்கு காவி வஸ்திரம் தான் ஏற்புடையது என்பதை அவர் குறட்பாக்கள் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் திராவிடக் குஞ்சுகள்தங்களது ஹிந்துமத எதிர்ப்புகடவுள் மறுப்புக் கொள்கை ஆகியவைகளுக்கு திருக்குறளையும், திருவள்ளுவரையும் வலுக்கட்டாயமாக அவரது நெற்றியின் ஹிந்துமதச் சின்னத்தை அழித்து, ருத்திராட்சைத்தைக் கழற்றி, அணிந்திருந்த பூணூலைக் கழற்றி, இடுப்பில் கட்டியிருந்த துண்டையும் கழற்றி அதைத் தோளிலே சாற்றி, அதற்கு வெள்ளை நிறம் பூசி அவரை திராவிட நாஸ்திகரகாக காட்டிவிட்டார்கள்.
வள்ளுவரின் மனம் ஹிந்துக் கொள்கையைத் தான் நாடும். அவர் நிச்சயமாக நாஸ்திகர் இல்லை. அவர் வெறும் ஆன்மிக வாதியாக ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பதும் சரி இல்லை. ஹிந்துமதச் சடங்குகளில் வள்ளுவருக்கு நம்பிக்கை இல்லை என்று நம்பும் குறட்பா ஒன்று கூட இல்லை என்பதுடன், அவர் திருமால், மஹா லட்சுமி, எமன், தேவர் போன்ற ஹிந்துமதத்தின் தேவதைகளை நம்பும் நபராகத் தான் கணிக்க வேண்டும்.

ஹிந்து மதக் கொள்கையான சொர்க்கம், மறுபிறவி, தவம், விதி, துறவு, தெய்வம், நிலையாமை ஆகியவைகள் பல குறட்பாக்களில் விளக்கப்பட்டுள்ளன.

ஆகையால் திருகுறள் ஒரு காவிக் காவியம் தான். திருவள்ளுவரும் காவியை விரும்பும் கவிஞர் தான் என்று கொள்வது நேர்மையான தீர்வாகும்.




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017