அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கித் தீர்ப்பு
அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கித் தீர்ப்பு
09-11-2019 –
ஹிந்துக்களுக்கு ஒரு புனித நாளாகும்.
பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு, கிழக்கு – மேற்கு ஜெர்மனியர்கள் இருவரும் இணைந்த நாளாகும் இது. அதே போல் இந்து – முஸ்லீம்கள் தங்கள் விருப்பு-வெறுப்புகளை மறந்து ஒன்று பட்டு, இந்தியர்களாகத் தங்களை இனம் கண்டு புதிய இந்தியா உருவாக முனையும் உன்னத நாளாகவும் இது இனி வரும் நாட்களில் நிரந்தரமாக நிதர்சனமாக நிகழ ஈஸ்வரன் – அல்லா ஆண்டவர்களை வேண்டுவோமாக.
கடந்த சுமார் 200 வருடங்களுக்கும் – முஸ்லீம் படையெடுப்பின் போது ராமர் ஜென்ம பூமியில் கட்டப்பட்ட ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டிய 1828 ஆண்டிலிருந்தே ஹிந்துக்கள் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தோ அல்லது வேறு இடத்திற்குப் பெயர்த்தோ ராமருக்கு முன்பு இருந்த கோயிலைப் போல் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்று ஹிந்துக்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர்.
அந்த இடம் ராமர் பிறந்த புண்ணிய பூமி. அது ராமரைத் தெய்வமாக வணங்கும் இந்துக்களுக்கு அந்த புண்ணியமான இடத்தை வழங்கி, கோயிலை இடித்துக் கட்டப்பட்ட மசூதியை அகற்றி, இந்துக்கள் அங்கு முன்பு போல் ராமருக்குக் கோயில் கட்ட நீதி வழங்க வேண்டும் என்று கோடானு கோடி இந்துக்கள் காலம் காலமாக முஸ்லீம் மக்களையும், முஸ்லீம் அரசர்களையும், பிறகு ஆண்ட ஆங்கிலேய அரசையும், கோர்ட்டையும் அணுகியும் அவர்களுக்கு சுமார் 200 ஆண்டுகள் கழித்துத் தான் நியாயம் கிடைத்துள்ளது.
அதற்குப் போராடிய பலரையும் இந்த சமயத்தில் நினைவு கூறுவதற்கு முன் தற்போதையை இந்து மக்களை முதலில் சிரம் தாழ்த்தி அவர்களின் பாதங்களை வணங்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான இந்துக்கள் மோடி தலைமையில் தனிப்பட்ட முழுப்பெரும்பான்மையான வெற்றியினைச் சென்ற லோக் சபா தேர்தலில் அளித்த காரணத்தினால் தான் பூஜ்ய மோடிஜி அவர்கள் யாருடைய தயவையும் – ஆதரவையும் எதிர்பார்க்காமல் பி.ஜே.பி. இரண்டாம் முறை பிரதமராகப் பதவி வகித்தது அந்த தசரத ராமனின் அருளாகும்.
இந்த சமயத்தில் உத்திரபிரதேச மக்கள் – அயோத்தி – காசி – மதுரா ஆகிய இந்துக்களின் முக்கிய தலங்கள் உள்ள அந்த மாநில மக்கள் கடந்த சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் பி.ஜே.பி.க்கு எதிர்பார்ப்புகள் – எதிர்ப்புகள் ஆகியவைகளின் கணிப்புகளை எல்லாம் மீறி அதிக இடங்களை மாநில சட்டசபையில் வெற்றி தேடித் தந்த காரணத்தினால்- பிறகு நாடைபெற்ற லோக் சபா தேர்தல் உட்பட, அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டுவது சிக்கல் இல்லாமல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்திய நாத் தலைமையில் நடைபெற ஏதுவாக அமைந்துள்ளது. இது அந்த ராமனின் அருள் என்பது தான் உண்மை. மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட சக்தியின் துணை இருந்ததால் தான் இந்த 200 வருட கால இந்துக்களின் போராட்டம் சுமுகமாக ஒரு முடிவிற்கு வந்துள்ளது.
காங்கிரஸ் – மற்றும் பல ‘சிக்குலர் – லுட்த்தான்ஸ் மேதைகள் – இடது சாரி அறிவு ஜீவிகள் – முஸ்லீம் அமைப்புகள்’ என்று சுப்ரீம் கோர்ட் இந்த ராம ஜென்ம பூமி வழக்கை தினமும் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதையும் தடுத்தார்கள் – எதிர்த்தார்கள்.
பி.ஜே.பி ராம ஜென்ம பூமி வழக்கை நீடித்து அரசியல் லாபம் அடைய முயலுகிறது என்ற குற்றச் சாட்டு இதனால் தவிடு பொடியானாலும், எதிர் தரப்பினர்களுக்கு அதிலெல்லாம் கவலை இல்லை. இந்து – முஸ்லீம் உறவில் ஒரு புதிய அத்தியாயம் இந்தத் தீர்ப்பினால் உருவாவதையும் அவர்கள் வாக்கு வங்கி அரசியல் மனது இடம் கொடுக்கவில்லை.
இந்தத் தீர்ப்பை ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு மனதாக வழங்கி உள்ளதும் அந்த ராமரின் அனுக்கிரகம் தான். அந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான திருவாளர்கள் ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியவர்களாவர்.
இந்த வழக்கில் பி.பி. லால் என்ற இந்திய தொல்பொருள் ஆய்வாளர் பாபர் மசூதி கட்டிடத்திற்கு அடியில் ஒரு பிரம்மாணடமான கோயில் உள்ளது என்பதற்கான ஆதாரங்களை முதன் முதலில் வெளியிட்ட பிறகு தான் ராமர் ஜென்ம பூமி விவகாரம் உக்கிரமடைந்துள்ளது. அந்த ஆதாரம் மற்றும் அதற்குப் பிறகு - பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அந்த இடத்தை கோர்ட் அனுமதியுடன் தோண்டிய போது கிடைக்கப்பட்ட பல கோயில் கட்டிடத் தூண்கள், அவைகளைத் தாங்க எழுப்பட்ட ஆதாரதளத் தடையங்கள், பல கலைநுணுக்கச் சிலைகள் என்று பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் ஒரு கோயில் இருந்த இடம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாக பெரும் உதவியாக இருந்தது. ஆனால் எந்த ஆதாரங்களையும் கோர்ட் முன் வைத்து வாதாடிச் ஜெயிப்பது சாதாரண காரியம் இல்லை. அந்தக் காரியத்தை சென்னை - திருவல்லிக்கேணியில் வசிக்கும் 92-வயது கே. பராசரன் என்ற பார்த்தசாரதி பக்தர் – வைஷ்ணவ பக்தர் – சுப்பீர்ம் கோர்ட்டில் வாதாடி வெற்றியை இந்துக்களுக்கு வாங்கித் தந்துள்ளார். அன்னாரின் செயலை தன் வயதையும் பொருட்டாக்காமல் ஒரு தெய்வ காரியம் போல் ராமனுக்குச் செய்யும் சேவையாக நினைத்து வெற்றி பெற்றதை எவ்வளவு பாராட்டினாலும் மிகை அன்று.
சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர் நிலம் அடங்கிய அரசாங்கம் கைப்பற்றிய மொத்தமுள்ள 67.73 ஏக்கர் நிலப்பரப்பு முழுவதும் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டு அதனிடம் ராமர் கோயில் மற்றும் மொத்த சொத்துக்களைப் பராமரிக்கும் அதிகாரத்தை வழங்கித் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். மேலும் “முஸ்லீம்களுக்கு மசூதி கட்ட இந்த 67 ஏக்கர் நிலத்திலோ அல்லது வேறு அயோத்தியில் உள்ள இடத்திலோ கட்ட நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது ராமர் கோயில் கட்டும் அதே நேரத்தில் நிகழவேண்டும்” என்று அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு எந்த தரப்பினருக்கும் வெற்றி – தோல்வி என்றில்லை. இந்தத் தீர்ப்பினால் யாரும் எதிர்க்கவோ, கொண்டாடவோ வேண்டாம் என்ற வேண்டுகோள் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்தியா அமைதி காத்ததும் அந்த ராமர் – ரஹீம் சக்திதான் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
பாபர் மசூதி கட்டிடம் இல்லாத வெற்றிடத்தில் கட்டப்பட்டது என்பது தவறு. கோயில் இடுபாடுகள் மசூதி கட்டிடத்திற்கு அடித்தளத்தில் உள்ளது. அவைகள் முஸ்லீம் கட்டடங்களின் இடுபாடுகள் இல்லை என்பதை இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் நீண்ட தங்களது தோண்டுதலுக்குப் பிறகு அறிக்கை கொடுத்துள்ளனர். அதை கோர்ட் ஏற்றுள்ளது. ஆனால், பாபர் மசூதி கட்டப்பட்டதற்காகத் தான் அந்த இடத்தில் உள்ள கோயில் இடிக்கப்பட்டதா? என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை என்றும் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் – 1991-ன் ஷரத்து 5-யை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அந்த சட்டத்தின் படி எந்த ஒரு வழிபாட்டுத் தலங்களையும் மக்களைத் திரட்டி அழிப்பது குற்றம் – சுதந்திரம் வருவதற்கு முன்பு இருந்த நிலையே பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதில் அதற்கு ‘ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி’ என்ற தலத்திற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையும் உச்ச நீதி மன்றம் சுட்டிக் காட்டி, தன் தீர்ப்பில் – இந்த அயோத்தியா தீர்ப்பை வழிபாட்டுத் தலம் இடித்ததை ஒரு முன்னுதாரனமாகக் காட்டக் கூடாது என்றும் சொல்லி உள்ளது. இதனாலேயே மறைமுகமாக இந்தச் சட்டத்தின் மூலம் ராமருக்கு அவர் பிறந்த இடமான அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்ட அனுமதித்ததாகக் கொண்டால், அதில் நியாயம் இருப்பதையும் ஏற்கத் தான் வேண்டும்.
இந்துக்கள் கடந்த 200 ஆண்டுகளாகப் பொறுமையுடன் போராடி இப்போது நியாயம் கிடைத்து, ராமருக்கு அவர் பிறந்த இடத்தில் அயோத்தியில் கோயில் கட்ட இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் பல தியாகங்களைச் செய்துள்ளனர். இந்துக்களின் பொறுமைக்கு நோபல் பரிசு கூட வழங்கிக் கவுரவிக்கலாம் என்றே கணிக்கத் தோன்றுகிறது.
முஸ்லீம்களின் படையெடுப்பிற்கு முன்பு யுத்தங்கள் இந்தியாவில் பல இடங்களிலும் நடந்துள்ளன. அவைகள் அனைத்தும் இந்துக்களுக்குள்ளாகவே நடந்தன. ஆகையால் இந்து தர்மத்தின் படி அந்தப் போரின் போது வெற்றி பெற்றவர்கள் கோயிலை இடிக்க வில்லை. ஆனால் முஸ்லீம்களின் படைபெடுப்பிற்குப் பிறகு தான் கோயில்கள் இந்தியா பூராவும் பல இடங்களில் இடிக்கப்பட்டு, அந்த இடி பாடுகளைக் கொண்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. அதற்கு அயோத்தி ராமர் கோயிலும் தப்ப வில்லை. காசி – மதுரா கோயில்களை இடித்து முஸ்லீம்கள் மசூதி கட்டியது பார்த்தாலே தெரியும். மக்கா – மதீனா போல் இந்துக்களுக்கு ராமர் பிறந்த இடமான அயோத்தி, சிவ பிரானின் காசி கோயில், கிருஷ்ணன் மதுரா கோயில் ஆகியவைகளும் மிகவும் புண்ணிய ஸ்தலங்களாகும். ஆனால் மத நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். இனி கோயிலுக்காக தமது இயக்கம் - காசி – மதுரா கோயில்கள் மீட்பு உட்பட அதில் ஈடுபடாது. அயோத்தியா என்பது தனிப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்து, அதில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட வேண்டியதாகியது என்று தன் நிலைப்பட்டைத் தெளிவு படுத்தி விட்ட நிலை இந்தியாவின் உண்மையான மத நல்லிணக்கத்தையே வெளிப்படுத்துகிறது.
இந்த சமயத்தில் ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும். 30 அக்டோபர் 1990 & 2 நவம்பர் 1990 – இரண்டு தினங்களில் அத்வானியின் அயோத்தி ரத யாத்திரை லல்லுவினால் தடுக்கப்பட்டதற்குப் பிறகு அயோத்தியில் கூடிய கார்சேவகர்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டார்கள். அப்போது உ.பி.யின் முதலமைச்சரான முலாயம் சிங் யாதவ் கார்சேவகர்களைச் சுட உத்திரவிட்டதில் பலர் உயிரிழந்தனர். அவர்களுள் கோத்தாரி சகோதரர்களான கல்கத்தாவைச் சேர்ந்த மார்வாரி இனத்தினர் ராம் கோத்தாரி & சரத் கோத்தாரி இருவரும் போலீஸ் தடுப்புக் காவலையும் தாண்டி பாபர் மசூதியின் உச்சியில் ஏறி காவிக் கொடியை ஏற்றி உள்ளனர். ஆனால், அவர்கள் சஹீத் ஹலி அல்லது தியாகிச் சந்து என்று குறிப்பிடப்படும் அயோத்தியில் போலீஸாரால் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பல சுடப்பட்ட கார்சேவகர்களின் உடல்கள் எரிக்கப்பட்டும், மணல் மூட்டைகளை கொக்கி மூலம் துப்பாக்கிச் சூட்டில் இறந்த கார்சேவகர்களின் துடைகளில் சொருகி சரயு நதியில் தூக்கி எறியப்பட்ட அநியாயமும் முலாயம் சிங் ஆட்சியில் நடந்தேறியது. இதனால் அப்போது முலாயம் சிங் பெருமையாக தன் செயலைத் தானே மெச்சி அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அவரை இதற்காக ‘முல்லா முலாயம்’ என்று முஸ்லீம்களும், சிக்குலர் இடதுசாரி லுத்தான்ஸ் அறிவு ஜீவிகளும் பாராட்டி உள்ளனர். ஆனால் சமீபத்தில் – அது நடந்து பல வருடங்கள் கழித்து – தான் கார்சேவகர்களைச் சுடச்சொல்லி உத்திரவிட்டது தவறு – என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த அநியாயமான கொடூரமான மனித உரிமை மீறல்களுக்காக முல்லா முலாயம் மேல் வழக்கோ, தண்டனையோ வழங்கப்படவில்லை என்பது ஒரு சரித்திர சோக வரலாறு. மீடியாக்களும் மவுனம் சாதித்து இந்துக்களுக்கு அநீதி செய்துள்ளனர். இது அவர்களின் நேர்மைக்குக் களங்கம் என்பதையும் ஏற்க மறுப்பதும் ஒரு பெரிய கருப்புப் பக்கங்கள் என்பதை சரித்திரம் உணரும் என்பது திண்ணம்.
இந்த
நேரத்தில் த்ரிலோகி நாத் பாண்டே என்பவரை ராம் லாலா தெய்வத்தின் சார்பில் கோர்ட்டில் முறையீடு – ராம் லாலாவின் சார்பில் கோர்ட் பத்திரங்களில் கையெழுத்திடல் ஆகியவைகளைச் செய்ய அதிகாரபூர்வ நபராக இருந்துள்ளார். இவர் மூன்றாவது நபர். முந்தையை இருவர் இந்த வழக்கு – 1989 வருடங்களிலிருந்து நடந்து வருகிறது – நடந்து கொண்டிருக்கும் போதே இறந்து விட்டனர். அந்த இருவர்கள் – ஒருவர் உயர்நீதி மன்ற நீதிபதி, மற்றவர் ஒய்வு பெற்ற பலகலைக் கழக பேராசிரியர். தற்போது அயோத்தி கடவுள் குழந்தை ராம் லாலாவின் சார்பாக கோர்ட்டில் ஆஜராகும் அந்த பாண்டேக்கு இப்போது வயது 75 ஆகிறது. அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்தவர். இவர் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 49 கரசேவர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளைச் செய்துள்ளார். ஆகையால் அவருக்கும் இந்த சமயத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்.
பாபர் மசூதி 06-12-1992 அன்று கார்சேவகர்களால் இடிக்கப்பட்ட போது உ.பி.யில் கல்யாண் சிங்கின் அரசும், மத்தியில் பிரதம மந்திரி ரசிம்ம ராவின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும் இருந்தது. ஆகையால் துப்பாக்கிச் சூடு இல்லாமல் கார்சேவகர்கள் பாபர் மசூதியை இடித்து அங்கு ராம் லாலா – குழந்தை ராம் சிலையை வைத்து பூஜையும் செய்து விட்டார்கள். இது ஒரு சில மணி நேரத்திலேயே கன கச்சிதமாக நடந்து முடிந்து விட்டது. இது தெய்வ முயற்சியாகவே கணிக்க வேண்டி உள்ளது. இந்த இடிப்புதான் ராமர் கோயில் கட்டுவதற்கு தகுந்த ஆதாரங்களை வெளிக்கொணர உதவியது. தொல் பொருள் ஆய்வாளர்கள் அதற்குப் பிறகு அயோத்தியாவில் பாபர் மசூதி இருந்த இடத்தைத் தோண்ட அதில் கிடைத்த கோயில் கட்டிட ஆதாரங்கள் அனைத்தும் – அந்த இடத்தில் ஒரு பெரிய கோயில் ராமருக்கு இருந்தது – நிரூபணமாக உதவியது.
இதை எல்லாம் விட பூஜ்ய குருநானக் தேவ்ஜி அவர்கள் 1510-1511 கி.பி. அயோத்தியாவில் ராமர் கோயிலில் தரிசனம் செய்ததான மிகவும் ஆதார பூர்வமான சரித்திரச் சான்று, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்கு வலுசேர்த்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஏனென்றால் பாபர் மசூதி 1528 வருடத்தில் கட்டப்பட்டதாகக் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சீக்கியர்கள் 30-11-1858 அன்று யாகம் ஒன்றை பாபர் மசூதிக்குள் நடத்தியதற்கான சான்றுகளும், ஆதாரங்களும் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்திய தொல்பொருள் ஆய்வாளர் பி.பி.லால் 1975-76-ல் அயோத்தியாவில் நடத்திய ஆய்வில் ‘பாபர் மசூதிக்கு மிக அருகில் கோயில் இருந்ததற்கான தூண்களுக்கான அடிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு பாபர் மசூதியை விட ஒரு பெரிய கட்டிடம் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன’ என்று தெரிவித்த கருத்தால் ராமர் ஜென்ம பூமிப் பிரச்சனை சூடி பிடித்தது. அதன் பிறகு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கே.கே. முஹமத் என்ற இந்திய தொல்பொருள் ஆய்வாளர் ‘பாபர் மசூதி முன்பு இருந்த கோயிலை இடித்துத் தான் கட்டப்பட்டது’ என்று பல வருடங்களாக ஆதாரத்துடன் சொல்லியும், அதைக் குறித்து ஒரு புத்தகமும் எழுதி வெளியுட்டுள்ளார். இதுவும் ராமர் கோயில் தீர்ப்புக்கு வலு சேர்த்துள்ளது. அத்துடன் ஐந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் முஸ்லீம் நீதிபதியான சயத் அப்துல் நசீர் அவர்களும் சேர்ந்து ஒரே குரலில் தீர்ப்பு வழங்கியதும் ராமன் அருளால் தான்.
மேலும் இந்தத் தீர்ப்பில் ஒரு அற்புதமும் நடந்துள்ளது. தீர்ப்புக்கள் தனித்தனியாக அவரவர்களின் பெயர்களில் வழங்கும் வழக்கத்துக்கு மாறாக அனைவரும் ஒன்றாகவே – ஒருமனதாகவே தீர்ப்பு வழங்கியதாக இருக்கும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளனர். சயத் வாசீம் ரிஸ்வி என்ற ஷியா வக் போர்டின் தலைவர் ‘ராமர் கோயிலை சர்ச்சைக்குள்ளான இடத்திலேயே கட்டவேண்டும். மசூதியை லக்னோவில் கட்ட அனுமதிக்கலாம்’ என்று பச்சைக் கொடி காட்டியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தியது. எல்லாம் ராமர் அருள் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நேரத்தில் அரசியல் களத்தில், விஸ்வ ஹிந்து பாரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி, சிவ சேனா, ஜே.ஜெயலலிதா, சுப்பிரமணிய ஸ்வாமி, சங்கர மடத்தின் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று பலரையும் இந்த சமயத்தில் நன்றியுடன் நினவு கொள்ள வேண்டும். அதிலும் அத்வானியின் பங்களிப்பு அதிகம்.
இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல் மோடி-அமித் ஷா இருவரின் சாணக்கிய அரசியல் தந்திரம் – அமைதியாக அதே சமயத்தில் நுணுக்கமான அனுகுமுறையால் – ஸ்ரீராமருக்கு அயோத்தியில் கோயில் கட்ட உச்ச நீதி மன்றமே தீர்ப்பு வழங்க வழி செய்து இந்துக்களின் மனத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டார்கள்.
அவர்களுக்குக் கிடைத்த இந்த வெற்றிச் சாதனை – இது சாதாரண வெற்றி இல்லை – இமாலய வெற்றி – அரசியல் ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
மோடி – அமித்
ஷா இருவருக்கும் வெற்றிக் கிரீடம் அணிவிப்பதன் மூலம் இதற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் பாராட்டுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
வாழ்க பாரதம். புதிய இந்தியாவை அமைப்போம். அகில உலக அரங்கில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்குவோம்.
பாரத மாதாவுக்கு ஜே! வந்தே மாதரம்.
இந்திய தொல்பொருள் துறையினர் பாபர் மசூதி இருந்த இடத்தில் இரண்டு ராமர் கோயில்கள் கட்டப்பட்டதாகவும், அவைகள் இரண்டும் முஸ்லீம் படையெடுப்பின் போது இடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர். முதல் கோயில் 1192 ஆண்டு தாரெனில் நடந்த இரண்டாவது யுத்தத்தில் முகமது கோரி தனது பிரதிவிராஜ் செளகானை வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக இடிக்கப்பட்டதாகவும், அதை மீண்டும் இந்துக்கள் கட்டியதை பாபர் 16-வது நூற்றாண்டில் இடித்ததாகவும் சான்றுகளுடன் இந்திய தொல்பொருள் துறையினர் நிரூபித்துள்ளனர்.
மேலே உள்ள கல்வெட்டுக்களே ஹரி-விஷ்ணு கோயில் இருந்ததற்குச் சான்றாக
உள்ளனது. அவை பாபர் மசூதி இடுபாடுகளில் கிடைத்ததாகும்.
அதில் எழுதப்பட்ட மொழி மிகவும் தூய்மையான கலாச்சார நாகரி லிபியில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டு அயோத்தி கோயிலின் சுவரில் பதிக்கப்பட்டதாகும் என்று சொல்லப்படுகிறது.
அதன் 15-வது
வரியின் வாசகம்: விஷ்ணு-ஹரிக்கு ஒரு அழகான கோயில் பல கற்களால் கட்டப்பட்டது. கோபுர உச்சி தங்கத்தால் அமைந்தது. இது முந்தையை அரசர்கள் கட்டிய கோயிலை எல்லாம் விட ஒப்பிட முடியாத அளவில் கட்டப்பட்டுள்ளது. சகதமண்டலம் அயோத்தி நகரத்தில் இந்த தனித்தன்மை வாய்ந்த கோயில் எழுப்பட்டுள்ளது.
19-ம் வரியின் வாசகம்: பாலி என்ற அரசனையும், பத்துத்தலை ராவணனையும் வதம் செய்த பகவான் விஷ்ணு.
Comments