05-08-2019 - திங்கட் கிழமை - இந்திய சரித்திரத்தின் பொன்னான நாள்
05-08-2019 – திங்கட் கிழமை
– இந்த நாள் இந்திய
சரித்திரத்தில் ஒரு பொன்னான நாளாகும். அன்று தான் ஆர்ட்டிகிள் 370 இந்திய அரசியல் சட்டத்திலிருந்து
நீர்த்துப் போகச் செய்த அற்புதத் திருநாளாகும். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரின்
தனித் தன்மை – தனி அரசியல் சட்டம் - தனிக் கொடி – என்பது ஒரு தற்காலிக நிலை என்று சொல்லி
இந்திய மக்களை ஏமாற்றிய காங்கிரஸ் – மற்றும் சில எதிர்க்கட்சிகளின் கபட நாடகத்தை அசுர
வேகத்தில் மோடி – அமித்ஷா ஆகியவர்கள் பார்லிமெண்ட் – ராஜ்ய சபா ஆகிய இரண்டு சபைகளிலும்
இரு தினங்களில் – 5 & 6 ஆகஸ்ட் 2019 – நீண்ட நேரம் விவாதித்து, 2/3 அங்கத்தினர்களின்
ஆதரவைப் பெற்று நிறைவேற்றி வெற்றி வாகை சூடி உள்ளார்கள்.
இது சாதாரண சாதனை
இல்லை. 30-07-2019 அன்று முத்தலாக் தடைச் சட்டம் இரு சபைகளிலும் நிறைவேற்றி சாதனை படைத்த
மோடி அரசு அதே வேகத்தில் பி.ஜே.பியின் நெடுநாளைய கனவான 370 நீக்கத்தையும் நிறைவேற்றி
எதிர்கட்சிகளை நிலை குலைய வைத்துள்ளது.
முதலில் ராஜ்ய
சபாவில் ஆகஸ்ட் 5-ம் தேதியில் 370 & 35 A ஷரத்துக்கள் ரத்தான மசோதாவிற்கு 125 பேர்கள்
ஆதரவாகவும், 61 பேர்கள் எதிர்த்தும் ஓட்டளித்துள்ளனர். அடுத்த நாளான ஆகஸ்ட் 6-ம் தேதி
லோக் சபாவில் 351 பேர்கள் ஆதரவாகவும், 72 பேர்கள் எதிர்த்தும் ஓட்டளித்துள்ளனர்.
இதன் மூலம் ஒரே
நாடு – ஒரே சட்டம் – ஒரே கொடி என்பது சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக
ஆகிய பிறகு தான் சாத்தியமாகி உள்ளது என்பது முக்கியமாக இந்தியாவிற்கு முழு சுதந்திரம்
வாங்கிக் கொடுத்த கட்சி என்று மார்தட்டும் காங்கிரசுக்கு ஒரு பெரும் இழுக்காகும். ஏனென்றால்
370 & 35 A விதிகள் இப்பொழுது ரத்தானதால்
தான் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று சொன்னால் அது முற்றிலும்
– முக்காலும் உண்மையாகும். இதற்கு எந்த விதத்திலும் செயல்படாமல் – உண்மையில் அந்த விதிகளை
இனி அகற்றுவது இயலாத காரியம் என்ற அளவிற்கு காங்கிரஸ் கட்சி வந்து விட்டது. அதற்கு
வித்திட்ட ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, இந்திரா காந்தியின் மூத்த மகன்
ராஜிவ், ராஜிவ்வின் மனைவி சோனியா, சோனியாவின் மகன் ராஹுல் – என்ற நேருவின் குடும்பம்
பூராவும் ‘370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு’ என்று சொன்ன போதிலும், அதை நீக்க ‘முஸ்லீம்
ஓட்டு வங்கி’ பயத்தால் அதைத் தொடவும், சிந்திக்கவும், பேசவும் பயந்து கடந்த பல வருடங்களாக
ஆட்சி செய்துள்ளார்கள்.
அத்துடன் நில்லாமல் ‘பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு
முறையும் 370-யை நீக்குவோம் என்று வாக்குறிதி கொடுத்து ஓட்டு வாங்கி இந்திய மக்களை
ஏமாற்றி வந்துள்ளனர்’ என்றும் குற்றம் சாட்டி உள்ளனர். பி.ஜே.பி.க்கு ராஜ்ய சபாவில்
பெரும்பான்மை இல்லாவிடினும், துணிந்து 370 நீக்க மசோதாவை முதலில் ராஜ்ய சபாவில் கொண்டு
வந்து நிறைவேற்றி உள்ளனர்.
காஷ்மீர் முஸ்லீம்
கட்சிகளான பி.டி.பி., என்.சி. போன்ற கட்சிகளுடன் டி.எம்.கே., ஜேடியு போன்ற கட்சிகள்
மட்டும் தான் காங்கிரசுக்கு ஆதரவாக ஆர்டிகிள் 370 ரத்தை எதிர்க்கின்றன. மற்ற அனைத்து
எதிர்க்கட்சிகள் ஆதரித்தோ அல்லது ஓட்டளிக்காமல் வெளிநடப்புச் செய்தோ இந்த ரத்து இரு
சபைகளிலும் நிறைவேற உதவி செய்துள்ளன. இதன் மூலம் காங்கிரசுடன் சேர்ந்து இந்தச் சில
எதிர் கட்சிகள் தனிமைப் படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.
இதை விட ஒரு பேரிடி
காங்கிரஸ் ராஜ்ய சபா குறடாவான புபனேஷ்வர் கலிதா ‘காங்கிரஸ் கட்சி என்னை குறடாவை ராஜ்ய
சபா உறுப்பினர்களுக்கு உத்திரவிடப் பணித்தது. இது கட்சியையே அழிவுப்பாதைக்குத் தள்ளும்
முயற்சி என்பதால், நான் அதற்கு உடந்தையாக இருக்க விரும்பவில்லை’ என்று சொல்லி தனது
ராஜ்ய சபா உறுப்பினர் பதவியையே ராஜினாமா செய்து 370-யை நீக்கும் மசோதாவுக்கு ஆதரவாக
செயல்பட்டுள்ளார்.
காங்கிரசின் இன்னொரு சோனியாவின் ஆதரவாளராகக் கருதப்படும் ஜனார்த்தன்
த்ரிவேதி ‘சரித்திரத் தவறு 370-யை ரத்து செய்வதை நான் ஆதரிக்கிறேன்’ என்று வெளிப்படையாகவே
தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அத்துடன், இவர்கள் வரிசையில் ராஹுலின் அன்பை அபரிமிதமாகப்
பெற்ற ஜோதிர் ஆதித்யயா சிந்தியாவும் மோடி அரசின் 370 ரத்தை ஆதரித்துள்ளார்.
இதை எல்லாம் விட
காங்கிரசுக்கு ஒரு பலத்த அடி காஷ்மீர் இந்தியாவுடன் சேரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட
அப்போதைய அரசர் ஹரி சிங்கின் மகன் காங்கிரசின் மிகப் பழம் பெரும் தலைவர் டாக்டர் கரன்
சிங்க் ‘இந்த 370 ஷரத்து ரத்தும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றம் செய்த
செயல்களும் பாராட்டப்பட வேண்டியவைகளாகும். முக்கியமாக 1965-ம் ஆண்டே நான் காஷ்மீரத்தின்
அப்போதைய கவர்னர் பதவியில் இருக்கும் போதே லடாக்கை யூனியன் பிரதேசமாக ஆக்க வேண்டும்
என்று கருத்துச் சொல்லி உள்ளேன். மேலும் ஏற்றத் தாழ்வுகளுக்கு வழி வகுக்கும் 35 A
–யை நீக்கும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் அப்போதே கருத்துத் தெரிவித்துள்ளேன்’
என்று வெளிப்படையாகச் சொல்லி காங்கிரசுக்கு எதிராகப் பேசி உள்ளார்.
அத்துடன் யு.என்.
செக்குரிடி கவுன்சிலும் ‘காஷ்மீர் பிரச்சனை உள்ளாட்டுப் பிரச்சனையே’ என்று சொல்லி விட்டது.
மேலும், இந்தியாவிற்கு ஆதரவாக, யு.எஸ். யு.கே., ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல்
ஜப்பான் மற்றும் பங்களா தேசம் போன்ற சில முஸ்லீம் தேசங்களும் குரல் கொடுத்துள்ளன. சீனா
மட்டும் தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.
பாகிஸ்தான் மஹாராஜா
ஹரி சிங்க் ஆண்ட காஷ்மீரில் அக்டோபர் 1947-ல் படைஎடுத்த போது, ஹரி சிங்க் காஷ்மீர்
இந்தியாவுடன் இணைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நமது இந்திய ராணுவம் காஷ்மீரின்
2/3 பகுதியை மீண்டும் கைப்பற்றிய போது, நேரு ராணுவத்திற்கு முழு அதிகாரம் கொடுக்காமல்,
01-01-1948 அன்று காஷ்மீர் விவகாரத்தை தீர்ப்பதற்கு யு.என். சபையை நாடி, இந்த உள்நாட்டுப்
பிரச்சனையை சர்வதேசப் பிரச்சனையாக உருவாக்க வழிவகுத்து விட்டார். யு.என். இரு நாடுகளும்
அமைதி காக்கும்படிப்பணித்து காஷ்மீர் பிரச்சனையை தீர்க்காமல் விட்டு விட்டது.
காஷ்மீர் சிங்கம்
என்று வர்ணிக்கப்படும் இந்திய இறையாண்மைக்கு எதிராக ஆயுதப் போராட்டமே நடத்திய முஸ்லீம்
மத காங்கிரசின் செக்குலர் கருத்துக்கு எதிராகச் செயல்படும் ஷேக் அப்துல்லாவை சமாதானப்படுத்தும்
விதமாக காஷ்மீரை தனி விதியின் அடிப்படையில் அமையும் தனி மாநிலமாகவும், தனி அரசியல்
சட்டம் – தனி கொடி என்று 370 & 35 A என்ற ஷரத்துக்களை இந்திய அரசியல் சட்டத்தில்
புகுத்திய நேரு காஷ்மீர் பிரச்சனைக்கு அப்போதே வித்திட்டு விட்டார்,
நேரு ‘இது நிரந்தர
விதிகள் அல்ல. தற்காலிகமான ஏற்பாடுதான்’ என்று பிற இந்திய மக்களை நம்ப வைத்தார். ஆனால்,
ஷேக் அப்துல்லா ‘காஷ்மீர் சுதந்திர நாடு’ என்று பிரிவு எண்ணத்தை வெளிப்படையாக தெரிவித்துச்
செயல்பட்டதால், அவரை கைது செய்து கோடைக்கானலில் சிறை வைக்கப்பட்டும், காஷ்மீர் பிரச்சனை
என்னவோ தீர்ந்தபாடாக இல்லை..
காஷ்மீருக்கு தனி
அந்தஸ்து கொடுக்கும் தீர்மானம் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் 1948-ல் விவாதம் நடந்த
போது அதை அபுல் கலாம் ஆசாத், கோபால ஸ்வாமி அய்யங்கார் ஆகிய இருவர் மட்டும் தான் ஆதரித்தனர்.
நேரு அந்த சமயத்தில் அமெரிக்காவில் இருந்துள்ளார். சர்தார் பட்டேல் ராஜினாமா செய்வதாகக்
கூட முன் வந்தார். ஆனால் காந்திஜியின் வேண்டு கோளின் படி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
என்பது சரித்திர உண்மை.
‘பொது வாக்கெடுப்பு’,
‘காஷ்மீர் சர்வேதேசப் பிரச்சனை – இரு நாட்டுப் பிரச்சனை அல்ல’, ‘தனி அந்தஸ்து 370
& 35 A நீக்குவதில் சட்டச் சிக்கல்’, ‘தற்காலிகமான 370 70-வது வருடமாக நிரந்தர
ஷரத்துப்போல் ஆகிவிட்ட நிலை’ – இவைகள் அனைத்தையும் தீர்க்கமாக ஆலோசித்து மோடி – அமித்ஷா
24- மணி நேரத்தில் அனைத்திற்கும் மேலான அதிகாரம் உள்ள பாராளுமன்றம் – ராஜ்ய சபா – ஜனாதிபதி
ஆகியவர்களின் ஒப்புதலுடன் 370 & 35 A நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள்.
அந்த
மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து யுனியன் பிரதேசங்களாகவும் மாற்றி காஷ்மீர் பிரச்சனைக்கு
ஒரு நிரந்தர தீர்வு கண்டுள்ளனர். இது உலக அளவிலேயே அதிசயமாகவும், சாதுர்யமான செயல்களாவும்
கணிக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகளால் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின்
தீவிரவாதங்கள் முடிவுக்கு வந்து அந்த மாநிலங்கள் முன்னேற்றப் பாதையில் இந்தியாவின்
மற்றப் பகுதிகளைப் போல் முன்னேறும் என்பதுடன், நிரந்தர அமைதியும் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் காலம் இதை ஊர்ஜிதப்படுத்தும் என்று நம்புவோமாக.
காஷ்மீர் இந்துக்களுக்கு
ஒரு புனிதமான இடம். சப்த ரிஷிகளின் ஒருவரான காஷ்யபரின் பூமியாகும் அது. காஷ் + மிரா
என்பது தான் காஷ்மீராகும். சம்ஸ்கிரதத்தில் மிரா என்றால் ஒரு பெரிய ஏரி என்று அர்த்தம்.
ஆகையால் காஷ்மீர் என்றால் காஷ்யபரின் ஏரி என்று தான் பொருள். இதன் மூலம் அந்த இடம்
இந்துக்களின் பூஜிக்கத் தக்க இடம் என்று அறிய வேண்டும்.
காஸ்பியன் கடலும் வராஹா முக்த்
(தற்போதைய பாரா முல்லா) ஏரி நீரால் உருவானது என்றும், காஸ்பியன் என்பது காஷ்யபாக் கடல்
என்பதன் திரிபு என்றும் புராணம் சொல்கிறது.
காஷ்மீரத்தில்
இருக்கும் ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்ட நகரம் தான் ஸ்ரீநகர் – ஸ்ரீநகர் என்ற சொல்லுக்கே
புனித நூல்களான வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவைகளைக் கற்கும் பாடசாலையின் கேந்திரமாக
அமைந்த நகர் என்று தான் அர்த்தம். அதே போல் ஸ்ரீநகர் அருகில் காஷ்யபரின் மகனான நாகா
நிர்மாணித்த நகரம் தான் ஆனந்நாக் – ஆனந்தமான நாகா அமைத்த நகரம் என்று பொருள் கொண்டது.
காஷ்மீரின் இஷ்ட
தெய்வம் தேவி சாரதா. தேவி சாரதா ‘காஷ்மீர புரா வாசினி’ என்றே அழைக்கப்படுகிறார். காஷ்மீரத்தில்
உள்ள பல கல்விச் சாலைகள் ‘சாரதா பீடம்’ என்றே அழைக்கப்படுகிறது. காஷ்மீர் பூராவையும்
‘சாரதா தேசம்’ என்றே ஒரு காலத்தில் அழைத்துள்ளார்கள்.
ஆதி சங்கரர்
9-ம் நூற்றாண்டில் காஷ்மீரத்திற்குச் சென்று, அங்குள்ள கோபாலாத்ரி குன்றில் தான் ‘சவுந்தர
லஹரி’ தோத்திரப்பாடல்களை இயற்றி உள்ளார். ஸ்ரீநகரில் உள்ள அந்த மலைக்கு ‘சங்கராச்சார்யா
குன்று’ என்று பெயர். கிருஷ்ண – கங்கா நதியின் கரையில் உள்ள சாரதா கோயிலுக்கு (இது
இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது) ஆதி சங்கரர் போய், அதன் அழகில்
மயங்கி, அதே போல் சிருங்கேரியில் துங்கபத்திரை நதிக்கரையில் சாரதா தேவிக்கு கோயில்
எழுப்பினார். சிருங்கேரி சாரதா தேவியின் உருவச் சிலை காஷ்மீரத்து சந்தன மரத்த்தால்
செய்யப்பட்டதாகும்.
வைஷ்ணவ குருவான ராமானுஜரும் தமது ஸ்ரீபாஷ்யத்தை காஷ்மீரத்தில் உள்ள
சாரதா பீட கல்விக் கூடத்தில் இருந்து இயற்றினார் என்றும் கூறப்படுகிறது.
ஆகையால் காஷ்மீர்
முன்பு ஹிந்துக்கள் – புத்தர்களால் தான் நிரம்பி இருந்தது. முஸ்லீம் ஆட்சியின் போது
தான் நிலமை மாறியது.
காஷ்மீர் தீவிரவாதிகள் 1989 -1990 ஆண்டுகளில் அங்கு காலம் காலமாக
குடியிருந்த பண்டிட்களை கொலை – பெண்கள் கற்பழிப்பு – வீடுகள் சூறை – என்று கலவரபூமியாக
காஷ்மீரை ஆக்கி வெறியாட்டம் போட்டார்கள். அதற்கு காங்கிரஸோ, கம்யூனிஸ்டோ, முஸ்லீம்
கட்சிகளோ, மனித உரிமை காக்கும் இயக்கங்களோ, லிபரல் கட்சிகளோ, தலித் கட்சிகளோ முஸ்லீம்
ஓட்டு வங்கியின் காரணமாக எதிர்ப்புத் தெரிவிக்காமலும், பண்டிட்களுக்கு ஆதரவாக குரல்
எழுப்பாமலும் எந்தவித மனட்சாட்சியோ, நேர்மையோ, தர்மமோ இல்லாமல் செயல்பட்டது இந்திய
சரித்திரத்தில் ஒரு பெரிய கருப்புப் பக்கங்களாக நிரந்தமாக இருந்து உலக அளவில் இந்தியாவிற்கு
தலை குனிவு ஏற்பட்டதை தர்மத்தையும், நியாயத்தையும் மதிக்கும் யாரும் மறக்கவோ மன்னிக்கவோ
மாட்டார்கள்.
இந்த ரத்தக்கறைக்கு மூல வித்தான 370 & 35 A – ஆகிய விதிகளை நீக்கிய
மோடி அரசையும் இந்திய சரித்திரம் என்றும் நினைவில் கொண்டு, போற்றிப் பாராட்டும் என்பதும்
சரித்திர உண்மையாகும்.
மேலும், இந்தியா
சுதந்திரம் அடைந்த 1947-லும் காஷ்மீரத்தை ஆண்டவர் ஹரி சிங்க் என்பதையும் நாம் நினைவில்
கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அவருக்கு
முதல் ஆட்சியாளர் பதவி கொடுக்காமல் முஸ்லீம் ஆதரவாளரும் – முஸ்லீம் தலைவருமான ஷேக்
அப்துல்லாவையே அப்பதவியை வகிக்கும் படி அப்போதைய காங்கிரஸ் முடிவெடுத்து, ஜம்மு – காஷ்மீருக்கு
சிறப்பு அந்தஸ்தும் வழங்கியது தான் காஷ்மீர் பிரச்சனைக்கு மூலவேராகும்.
ஆர்ட்டிகிள்
370 & 35 A ஆகியவைகளைப் பற்றியும், அவைகள் நீக்கப்பட்டவைகள் உச்ச நீதிமன்றத்தில்
வழக்குத் தொடர்ந்தால் நிலைக்குமா? என்பதையும் சற்று ஆராயலாம்.
முன்பு
உள்ள நிலை:
ஆர்டிகிள் 370
கீழ், இந்தியாவில் இயற்றப்படும் எந்த ஒரு சட்டமும் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது.
அங்கு செயல்பட வேண்டுமானால், காஷ்மீர் அசெம்பிளியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
35 A – ஜம்மு காஷ்மீர்
பிரஜா உரிமை பெற்றவர்கள் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க முடியும். அங்கு பிரஜா
உரிமை பெற்ற காஷ்மீர் பெண் இந்தியாவின் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை மணம் செய்தாலும்,
அந்தப் பெண்ணும் நிலம் வாங்கும் உரிமையை இழப்பாள்.
குஜ்ஜார் என்ற
எஸ்.சி/எஸ்.டி ஜாதியினர் ஜம்மு – காஷ்மீரில் சுமார் 12% வசிக்கின்றனர். ஆனால் அங்கு
அவர்களுக்கு இந்தியாவில் அமலில் உள்ள இட ஒதிக்கீடுகள் அங்கு அவர்களுக்குக் கிடையாது.
சிலகோட் என்ற பகுதியிலிருந்து அகதிகளாக இந்தியா-பாகிஸ்தான் பிரிந்த பொழுது அகதிகளாக
குடிபெயர்ந்த எஸ்.டி பழம்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பும் இல்லை – ஓட்டுரிமையும் கிடையாது.
இது எவ்வளவு பெரிய பாகுபாடு என்பதை அறியாமல் அவர்கள் கடந்த 70 ஆண்டுகள் துயரப்படச்
செய்த அத்தனை அரசியல் கட்சிகளும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் அவைகள் யுனியன் பிரதேசமாக
மாற்றி – 370 ரத்தானதால் இந்த பாகுபாடு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
இப்போது
மாற்றப்பட நிலை:
1. அரசியல் சாதன
(ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களுக்கு பொருந்தும்) சட்டம் 2019 என்பதை ஆர்ட்டிகிள்
370 கீழ் கொண்டு வந்து, அரசியல் சாதன (ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களுக்கு பொருந்தும்)
சட்டம் 1954 முழுவதும் ரத்தாகிறது. 1954 சட்டம் சொல்லும் – இந்திய அரசியல் சட்டத்தில்
உள்ள சில ஷரத்துக்கள் தான் ஜம்மு & காஷ்மீரில் செல்லுபடியாகும் என்பது இதன் மூலம்
நீக்கப்பட்டு, அனைத்து சட்டங்களும் ஜம்மு & காஷ்மீருக்கும் பொருந்தும். ஆகையால்,
இந்த 2019 சட்டத்தின் மூலம் தனியான ஜம்மு & காஷ்மீர் அரசியல் சாசனச் சட்டம் இனி
ரத்தாகிறது. காஷ்மீர் அரசாங்கம் ஒப்புதலுடன் ஜனாதிபதி இந்த சட்டத்தை அமல் படுத்துகிறார்.
2. ஜம்மு
& காஷ்மீர் மாற்று அமைக்கும் மசோதா 2019 – இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் யுனியன் பிரதேசமாக
தனியான அசெம்பளியுடனும், லாடக் யுனியன் பிரதேசமாக அசெம்பளி இல்லாமலும் மாற்றி அமைக்கப்படும்.
இந்த மாற்றம் சர்தார் படேல் பிறந்த நாளான 31-10-2019 அன்று உருவாகும்.
யுனியன் பிரதேசமான
ஜம்மு & காஷ்மீர் அசெம்பிளி 107 மெம்பர்களைக் கொண்டு அவர்கள் நேரடியாகத் தேர்வு
செய்யப்படுவார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்) பகுதிக்கு
24 இடங்கள் ஒதுக்கப்பட்டு, அவைகள் காலியாக வைக்கப்படும்.
லாடக் பகுதி என்பது
கார்கில் (ஷியா முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி) & லெஹ் (புத்தகர்கள் அதிகம் உள்ள
பகுதி) ஆகிய ஜில்லாக்கள் உள்ளடங்கியது.
இந்த
மாற்றங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்ய வாய்ப்பில்லை என்பதற்கான காரணங்கள்
இதோ:
ஜனதிபதியின் உத்திரவின்
படி ஜம்மு & காஷ்மீரின் தனி அந்தஸ்து ரத்திற்கு ஆர்ட்டிகிள் 370 – உட்பிரிவு 3
மூலமே செயல்படுத்தப்பட்டுள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பது என்பது இது தான். ஏனென்றால்
உட்பிரிவு 3-ன் படி, ஜனாதிபதி ஆர்டிகிள் 370-ல் எந்த மாற்றங்களையும் செய்யும் அதிகாரம்
உண்டு. அந்த மாற்றங்களை பொது அறிவிப்பு மூலம் செய்யலாம். அதற்கு அரசியல் சட்டம் இயற்றும்
அசெம்பளியின் ஒப்புதல் அவசியம்.
அரசியல் சட்டம்
இயற்றும் அசெம்பளி கலைக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தை ஜம்மு & காஷ்மீர் சட்டசபை
பெறும். ஆனால் இப்போது ஜம்மு & காஷ்மீர் ஜனாதிபதி ஆட்சியில் இருப்பதால், அந்த அதிகாரம்
ஜனாதிபதிக்குச் சென்று விடும்.
இரண்டாவது முக்கியமானது
இது வரை ஜம்மு காஷ்மீர் அரசியல் சட்டத்தில் 44 – 45 திருத்தங்கள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த திருத்தங்கள் அனைத்தும் ஜனாதிபதி உத்திரவின் பேரில் நடந்துள்ளது.
இதை எல்லாம் விட
ஆர்ட்டிகிள் 363 வாசகத்தின் படி சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்திய அரசாங்கம் அப்போதைய ராஜாக்களிடம்
ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களில் ஏற்படும் சச்சரவுகளில் தலையிட அதிகாரம் கிடையாது
என்பதாகும். ஆகையால் இந்த 370 ரத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றால், கோர்ட்
அதில் தலையிட முடியாது. குறைந்த பட்சம், ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஆர்ட்டிகள்
143 கீழ் கேட்டால் மட்டுமே கோர்ட் தனது அபிப்பிராயத்தைச் சொல்ல முடியும்.
மேலும், 1994-ம்
ஆண்டில் பி.வி.நரசிம்ம ராவ் பிரதம மந்திரியாக இருக்கும் போது பார்லிமெண்டில் அனைவரும்
ஒட்டு மொத்தமாக ஒத்துக்கொண்டது: “பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் நிலுவையில் இருக்கும்
ஒரே பிரச்சனை இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலப்பரப்பு மற்றும் அதன் வருங்கால
நிலை மட்டும் தான்.’
நரசிம்ம ராவின்
இதயத்துடிப்பைத் தான் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்க் சமீபத்தில் 370- ஆர்ட்டிகிள் ரத்தான
போது சொன்னார்: ‘இந்தியா இனி பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர்’ பற்றி மட்டுமே இருக்கும்’.
‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர்’ என்று சொல்லும் போதே, பாகிஸ்தான் ராணுவ பலத்துடன் ஆக்கிரமிப்புச் செய்துள்ளது
என்பது தெளிவாகிறது. ஆகையால், பாகிஸ்தான் இந்தியாவிற்கு இப் பகுதியை விட்டுக் கொடுத்து,
தீவிரவாதத்தையும் ஒழித்து, இந்தியாவுடன் சமாதானமாகப் போகும் அந்த நல்ல நாள் கூடிய சீக்கிரம்
வர ஆண்டவனை வேண்டுகிறோம்.
பாரதமாதாவுக்கு
ஜே! வந்தே மாதரம்!
Comments