நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உச்சமான அவலக்குரல்


(இடமிருந்து வலம்: குரியன் ஜோசப், சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி. லோகுர் – இடம்: சலமேஸ்வர் வீடு நாள்: 12-01-2018)


சுதந்திரம் அடைந்த இந்தியாவில் நீதிமன்றத்தின் மிகவும் இருண்ட நாள் என்றால் அது 12 – 01 – 2018 என்று சரித்திரம் பதிவு செய்து விட்டது. இது அதை நிகழ்த்திக் காட்டிய உச்ச மன்ற நீதிபதிகளான அந்த நான்கு பேர்களுக்கும் – சலமேஸ்வர், கோகோய், ஜோசப், லோகுர் – எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது என்பதுடன், ‘சட்ட விதிமுறைகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்’ என்ற அடிப்படைத் தத்துவத்தையே உச்ச மன்ற மூத்த நீதிபதிகள் மக்கள் மன்றத்தில் குரல் எழுப்பி தூள்தூளாக்கி விட்டனர். 

அவர்களின் அவலக் குரல் கேட்டு இந்தியாவே அதிர்ந்து விட்டது. அதிலிருந்து இந்தியா மீண்டாலும், அவர்கள் ஏற்படுத்திய ரணம் தீராத வியாதியாகி உச்ச நீதிமன்றத்தின் நம்பகத் தன்மையையே சந்தேகிக்கும் நிலைக்குத் தள்ளி விட்டது.

அந்த மூத்த நான்கு நீதிபதிகள் கடந்த ஒரு வருடமாக நடந்த விதம், அவர்கள் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவுக்கு அக்டோபர் 2017 அன்று எழுதிய கடிதம் (மீடியா பேட்டியில் அந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது), குறிப்பாக அவர்கள் மீடியாவுக்கு 12-ம் தேதி ஜனவரி 2018 அன்று அளித்த பேட்டி, பேட்டி அளித்த சில நிமிடங்களிலேயே இந்திய கம்யூனிஸ்ட்  தலைவர் ராஜாவை இந்த சம்பவத்தின் மூலவர் சலமேஸ்வர் தம் அரசாங்க வீட்டிலேயே சந்தித்துப் பேசியது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் – சி.பி.ஐ. நீதிபதி பி.ஹெச்.லோயா இறப்பு பற்றிய அறிவிப்புடன், அவர்களின் குற்றச் சாட்டான – ‘இந்திய சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது’ – குறிப்பிட்ட விதம் – இவைகள் அனைத்தும் நீதி மன்றத்தில் அரசியல் நுழைந்து விட்டது என்பதையே தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டது.

சுதந்திரத்தைக் காக்கும் நான்கு தூண்கள் என்பது அரசாங்கம், சட்டசபைகள், நீதித் துறை, மீடியா என்ற ஊடகத் துறை ஆகியவைகளாகும். இவைகள் அனைத்தும் சுதந்திரமாக எந்தவிதமான குறிக்கீடுகளும் இன்றி செயல்பட்டால் தான் சுதந்திரத்தைக் காப்பாற்ற முடியும். ஆனால், ஒரு முக்கிய தூணான நீதித் துறையே மீடியா முன் வந்து – ‘நீதியை எங்களால் நிலை நாட்ட முடியவில்லை. தலைமை நீதிபதி தன்னிச்சையாக விதிகளுக்குப் புறம்பாக வழக்குகளை ஒதுக்குகிறார். அவர் தலைமை நீதிபதி என்றாலும், அவரும் எங்களைப்போல் ஒரு நீதிபதி தான். தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. நாங்கள் நால்வரும் இன்று கூட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தொடர்பு கொண்டு நீதிபதி லோயா இறப்பு குறித்து ஒரு குறிப்பிட்ட பெஞ்ச் விசாரிக்க உத்திரவு விட வேண்டியும், அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களுக்குப் பிறகு ஒரு தீர்க்க தரிசி இந்த நான்கு நீதிபதிகளும் ‘தங்களுடைய ஆத்மாவை அடகு வைத்து விட்டார்கள், இந்த உன்னதமான உச்ச நீதிமன்றத்தின் நேர்மையைக் காப்பாற்றத் தவறி விட்டார்கள்’ – என்று குற்றம் சாட்டக் கூடாது என்பதால் தான் நாங்கள் இந்த முடிவிற்கு வந்தோம். ஆகையால் வேறு வழி இல்லாத காரணத்தினால் தான் நாங்கள் – மக்களே! இந்த உச்ச நீதிமன்றத்தை நீங்களே காப்பாற்றுங்கள் – என்று மக்கள் மன்றத்தில் தெரிவிக்கிறோம்.’ என்று அவலக் குரல் எழுப்பி உள்ளனர்.

தலைமை நீதிபதி மிஸ்ரா வருகிற அக்டோபர் 2-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியான கோகோய் தான் தலைமை நீதிபதி பொறுப்பேற்க வேண்டும். அவர் தான் லோயா மரணம வழக்கைப் பற்றி மீடியாவில் நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த வழக்கு மறு விசாரணை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்காமல், 10-வது நீதிமன்ற அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பி.ஜே.பி தலைவர் அமித் ஷா அவர்களுக்கு சாதகமாக அமைய மிஸ்ரா முடிவெடுத்துள்ளார்’ என்பது கோகோயின் மறைமுகக் குற்றச் சாட்டு. இது பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவை தண்டித்தால் தான் – உச்ச நீதிமன்றம் தன் கடமையைச் செய்ததாகும் – என்ற அளவில் அந்த நான்கு நீதிபதிகளின் கூக்குரலாக இருக்கிறது. இதில் அரசியல் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

இந்தத் தருணத்தில் கோகோயின் பின்னணியை அறிவது அவசியம். அஸாம் நாட்டு காங்கிரஸ் அரசின் முன்னாள் முதன் மந்திரி கேஷாப் சந்திரா கோகோய் அவர்களின் மகன் தான் இந்த நீதிபதி கோகோய் ஆகும். அவர்தான் மிஸ்ராவிற்குப் பிறகு தலைமை நீதிபதி ஆகும் மூத்த நீதிபதியாக இருக்கிறார். சலமேஸ்வர் 2011 ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சேர்ந்த அதே நாளில் தான் தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக மோடி அரசால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சலமேஸ்வரரை தலைமை நீதிபதியாக நியமிக்க - National Lawyers’ Conference (NLC) -  ஒரு வழக்குத் தொடர அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து கோகோய் தம்மை விடுவித்துக் கொண்டார். இதே கோகோய் தான் கட்ஜூக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு, கட்ஜூ பலமான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.

மிகவும் நுணுக்கமாக இந்த அவர்களது அவலக் குரலை அணுகினால் ஒன்று மட்டும் நிச்சயம் – மோடி அரசாங்கத்தை அகற்ற வேண்டும். அதற்குக் களங்கம் கற்பிக்க வேண்டும். அதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயார் – என்ற அந்த நான்கு மிகவும் மேன்மை தங்கிய நீதிபதிகளின் திட்டமாகத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
நீதியை நிலைநாட்டுதல் என்றால் விதிகளின் படி தீர்ப்பு வழங்குதல் என்று அர்த்தம். நீதிபதிகளுக்கான – Code of Judicial Ethics - 1999 – பல விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் 8-வது மற்றும் 9-வது விதிகளை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்:

Rule 8: A judge shall not enter into public debate or express his views in public on political matters or on matters that are pending or are like to arise for judicial determination.

Rule 9: A judge is expected to let his judgements speak for themselves. He shall not give interviews to the media.

அந்த நான்கு நீதிபதிகளும் இந்த இரண்டு விதிகளையும் அப்பட்டமாக மீறி உள்ளார்கள். அதற்குத் தண்டனையாக – துரோகக் குற்றச் சாட்டு – IMPEACHMENT – போடும் தகுதி இருக்கிறது. ஆனால் அது அரசியல் காரணங்களுக்காக – தவிர்க்கப் படலாம்.

உச்ச நீதிமன்றத்தில் அவர்களைத் தவிர்த்து 21 நீதிபதிகளுக்கு மேல் உள்ளனர். அத்தனை பேரும் இந்த அவர்களின் கூட்டணியில் சேரவில்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம். ஆகையால், இந்த நான்கு நீதிபதிகள் உண்மையிலேயே நேர்மையானவர்களாக, எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லாதவர்களாக இருப்பின், அவர்கள் மற்ற நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அது வெற்றி பெறாவிடில், உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலின் கதவுகளைத் தட்டி இருக்க வேண்டும். அதுவும் அவர்களுக்குச் சரியாகப் படாவிடில், அந்த நான்கு நீதிபதிகளும் அவர்களை நியமித்த இந்திய அரசியல் சாசனத்தைக் காக்கும் கடமையுள்ள இந்திய ஜனாதிபதியிடம் முறையிட்டு, இதற்கு ஒரு தீர்வு காண முயன்றிருக்க வேண்டும்.

மிகவும் நேர்மையானவர்களாக இருப்பின், அவர்கள் யூனியன் தலைவர்கள் போல் கூட்டுச் சேர்ந்து ஊடகத்தின் மூலம் மக்களிடம் முறையிடுவது ஜனநாயக மரபு அல்ல. அவர்கள் தங்கள் பதவிகளை உதறித் தள்ளி இதைச் செய்திருந்தார்களானால் மக்கள் அவர்கள் சொற்களுக்கு மதிப்பளித்து ஆதரிக்கவும் செய்ய வாய்ப்புண்டு. ஆனால், இந்த மீடியா பேட்டியினால்,  அந்த நான்கு நீதிபதிகளும் உச்ச நீதிமன்றத்தையே கேவலப்படுத்தி அதன் நம்பகத் தன்மையையே குழிதோண்டிப் புதைத்து விட்டனர்.     




இதை விட மிகவும் கேவலமான கூற்று ஒன்றைக் குறிப்பிட வேண்டும். மீடியா நிருபர் ஒருவர் ‘உங்கள் குற்றச் சாட்டின் மூலம் நீங்கள் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவை IMPEACH – பண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பியதற்கு, கனம் சலமேஸ்வரர் சொன்ன பதில்: ‘இதை நாடு முடிவு செய்யட்டும்’

இதன் மூலம் மிஸ்ரா iMPEACH பண்ணும் அளவில் நடந்துள்ளார் என்ற அளவில் குற்றம் சொல்லி இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜாவுடன் இதைப் பற்றிப் பேசி இருக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் அவரே தன்னையே IMPEACH செய்யும் அளவிற்கு குற்றம் செய்துள்ளார் என்பதையும் நாடு பார்த்துள்ளது. அதையும் நாடு முடிவு செய்யும் நாள் வரும். அதற்கு சலமேஸ்வரர் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்கள் மன்றம் என்றால் அது பார்லிமெண்ட் தான். அதில் தற்போது மோடி அரசு தான் ஆட்சியில் இருக்கிறது. அதை நீக்க வேண்டும் என்று நீதித் துறை நினைத்தால் அது தான் ஜனநாயகத்திற்கு மிகுந்த அச்சுறுத்தலாகும். மக்கள் தீர்ப்பை மதிக்கத் தெரிந்த நீதித் துறையைத் தான் நாடு எதிர்பார்கிறது.

பணமதிப்பிழந்த நடவடிக்கையின் போது நீதித் துறை அதன் எல்லையை மீறி ‘பண மதிப்பு இழப்பினால் மக்கள் தெருவிற்கு வந்து போராடுவர்’ என்று மக்களையே உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அரசியல் செய்யத் தூண்டிய பேச்சையும் மக்கள் கேட்டு, ‘நீதிமன்றமே! ஏன் உனக்கு இந்த தீய எண்ணம்?’ என்று கூறி, மக்கள் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த மோடி அரசிற்கே வாக்களித்ததை உச்ச நீதிமன்றத்தின் இந்த நான்கு நீதிபதிகள் மதிப்பதாகத் தெரியவில்லை. 

ஆதார் விஷயத்திலும், நாளுக்கு நாள் மோடி அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர் இந்த சில உச்ச நீதிமன்ற நீதிபதிகள். இதையும் நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்ற ‘முத்தலாக்’ வழக்கிலும், இந்த நான்கு நீதிபதிகளின் பிற்போக்கு மனநிலையுடன் அவர்கள் சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கு குரல் கொடுக்கும் குழுவினராகச் செயல்படும் விதமும் நாட்டு மக்கள் கவனிக்கத் தவறவில்லை. 

அத்துடன் ‘ராமர் ஜென்ம பூமி’ வழக்கிலும் அந்த நான்கு நீதிபதிகள் வழக்கில் உள்ள ஆதாரங்கள் – விவாதங்கள், விதிமுறைகள் ஆகியவைகளின் அடிப்படையில் நியாயம் வழங்கவும் ஒரு பெரிய தடைக் கற்களாகவே தங்களைக் காட்டி வருகிறார்கள். 

இது உச்ச நீதிமன்றத்தின் மிகப் பெரும் சருக்கல். இதிலிருந்து நீதியைக் காப்பாற்றும் மிக முக்கிய பொறுப்பு மற்ற நீதிபதிகளுக்கு உண்டு. இந்த நான்கு நீதிபதிகளின் செயல்பாடுகள் கீழ்க் கோர்ட்டுகளிலும் பரவ வாய்ப்பு உள்ளதால், இனி வரும் நாட்கள் இந்தியாவிற்கு பல சங்கடங்களையும், முற்போற்குக் கொள்கைகளில் சருக்கலும், இந்திய வளர்ச்சிப் பாதைகளில் தடங்கல்களும், ஊழல் ஒழிக்க எடுக்கப்பட்ட வழக்குகளில் தோல்வி அல்லது தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ள நிலையையே தற்போதைய அந்த நான்கு நீதிபதிகளின் கருத்துக்கள் – செய்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

ஒன்று மட்டும் இதில் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. ‘நாங்கள் நான்கு பேர்கள் மட்டும் தான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அந்தத் தகுதி கிடையாது’ என்பதை வலியுறுத்தியதுடன், தாங்கள் அனைவரும் இப்போதைய மோடி அரசுக்கு எதிரிகள் என்பதையும் கோடிட்டுக் காட்டியதுடன், நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. எங்களுக்கும் அரசியல் செய்யத் தெரியும் – என்ற அளவில் தாங்கள் வகிக்கும் பதவிக்கு இழுக்குத் தேடிக் கொண்டுள்ளார்கள்.

வாசகர்களே! வருகிற எட்டு சட்டசபைத் தேர்தல்களிலும் பி.ஜே.பி. அமோக வெற்றி பெற்று, மார்ச் 2019 வருகிற பாராளு மன்றத் தேர்தலில் மோடியின் தலைமையில் பி.ஜே.பி. 360+ எம்.பி.க்களை தேர்வு செய்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி பூண வேண்டும். அப்போது தான் பல வேண்டாத சக்திகள் – 65 வருட கால அராஜக ஆட்சியின் அவலங்கள் – ‘காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும், அதிகாரத்தை இழக்கவில்லை’ என்ற நிலையில் - பல காங்கிரஸ் ‘ஸ்லீப்பர் செல்களை’ வேரோடு அழித்தல் – ஆகியவைகளுடன் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையினை வலுப்படுத்த மோடியின் ஆட்சி மலர வேண்டும்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலில் மோடியைக் குறி வைத்து – உச்சநீதி மன்றமே  மோடி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கியும், 2002 குஜராத் கலவரத்தைத் தூண்டியவர் மோடி, இசாரத் ஜஹான் வழக்கு மூலம் குற்றவாளி மோடி என்ற பிரசாரங்கள் செய்து தோற்றவர்கள், இப்போது அமித் ஷாவைக் குறிவைத்து அவரது பெயருக்குக் களங்கம் கற்பித்து, மோடியை  வீழ்த்தப் பார்க்கும் கூட்டங்கள் ராஹுல் காங்கிரஸின் தலைமையில் செயல் பட்டு நாட்டைத் துண்டாடவும், பலஹீனப்படுத்தவும், வளர்ச்சியைத் தடுக்கவும், ஊழலை அழிக்கும் முயற்சிக்கு முட்டுக் கட்டை போடவும் முயல்கின்றனர்.

  
அத்துடன் பி.ஜே.பி.யின் மூத்த தலைவர்களான முன்னாள் மந்திரி யஸ்வந் சின்ஹா, முன்னாள் பி.ஜே.பி.மந்திரி அருண் ஷோரி, பிஹார் பாபுவான சினிமா நடிகர் சத்துருக்கன் சின்ஹா ஆகியவர்களின் பட்டியலில் தற்போது விஸ்வ பரிஷித் அமைப்பின் சர்வ தேசத் தலைவர் பிரவீன் தொகாடியா – மிகவும் மூர்க்கமாக காங்கிரசால் விமரிசக்கப் பட்ட தலைவர் – காங்கிரஸ் தலைவர் ஆமதாபாத் அர்ஜுன் மோத்வாடியாவைச் சந்தித்து – சேர்ந்துள்ளார். இதை வைத்து, காங்கிரஸ் மோடி அரசை வீழ்த்துவதற்கு எதையும் செய்யத் தயாராகி விட்ட கீழ்த்தர அரசியலைத் தான் படம் பிடித்துக் காட்டுகிறது. 

கொள்கைகளை காங்கிரஸ் என்றோ மறந்து விட்டது. நீதித் துறை, ராணுவத் துறை, நிதித் துறை, வங்கித் துறை, காவல் துறை ஆகியவைகளில் இருக்கும் காங்கிரஸ் பக்திமான்கள் – காங்கிரசின் தயவால் பதவிச் சுகத்தில் இருப்பவர்கள் – ஒன்றாக ஒரணியில் இணைந்து மோடியை விழ்த்த வியூகம் அமைத்துள்ளார்கள்.

ஆனால், மனத்தில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடம் கொடாமல் மோடி அரசை நம்பி மீண்டும் ஒரு ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய அனுமதிப்போம். கடந்த சுமார் 4 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி, முன்னேற்றம், ஊழலற்ற அரசாங்கம், தேசிய உணர்வு, அயல் நாட்டு உறவில் மேம்பட்ட நிலையால் பல இந்திய வம்சாவளிகளின் வாழ்வில் நிம்மதி – பல இந்தியச் சிறைக்கைதிகள் விடுதலை, தூக்குக் கயிற்றிலிருந்தும் காப்பாற்றப்பட்ட அற்புத நிகழ்வு, பல மீனவர்கள் சிறையிலிருந்து விடுதலை – பட்டியல் நீளம்.

இந்த நான்கு நீதிபதிகளின் அவலக் குரல் போல் பல அவலக் குரல்கள் வருகிற 8 சட்ட மன்றத் தேர்தல்கள் – பாராளுமன்றத் தேர்தல் என்று இன்னும் ஒரு வருஷத்திற்கும் மேலாக இருக்கும் காலத்தில் எழுப்பப்படும். இந்திய மக்கள் இதனால் பாதிக்கப்படாமல், மனத்திடத்துடன் மோடியை ஆதரிக்க வேண்டும். 70 ஆண்டுகள் காங்கிரஸை நம்பியவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய மோடிக்கு ஓட்டுப் போடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆண்டவன் அருளால் நல்லதே நம் நாட்டிற்கு நடக்கும். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017