ரவுத்ரம் பழகு


நான்கு வேதங்கள், பல உபநிஷத்துக்கள், இதிகாச புராணங்கள், அற்புதமான தர்மத்தை உபதேசிக்கும் இலக்கியங்கள், ராமாயணம் – மஹாபாரதம் போன்ற காவியங்கள், மனுஸ்ருதி போன்ற வழிகாட்டு விதிகள் என்று ஹிந்து மதம் என்ற ஸனாதன தர்மம் மிகவும் வலுவான அஸ்திவாரம் கொண்டது. அர்த்த சாஸ்திரம் போன்ற ராஜ நீதிக்கு வழிகாட்டும் உன்னதமான விதிகளைக் கூறும் நூல்கள் பல, ஹிந்து மதத்தின் – பாரத கண்டத்தின் மேன்மையை உலகத்திற்குப் பறை சாற்றிய வண்ணம் மிளிர்கின்றன. அத்துடன் இந்தியாவின் பல மொழிகளில் பாசுரங்களும், பாடல்களும் ஹிந்துமதத்தையும் பக்தி மார்க்கத்தையும் தர்மத்தையும் ஆத்ம சிந்தனைகளையும் இன்னும் வலுவடையச் செய்துள்ளன.

தமிழ் மொழியின் வளர்ச்சியும், சக்தியும் அதன் பக்தி இலக்கியத்தில் தான் வேரூன்றி இருப்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதில் வைஷ்ணவ ஆழ்வார்களின் பாசுரங்கள் சிறப்பானவை. அதில் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை தமிழுக்கு ஒரு சிறந்த அணிகலனாகும். மேலும் ஆண்டாளின் பெருமாள் பக்தி – சூடிக் கொடுத்த சுடர்கொடி – கோதை நாச்சியார் – என்று கோயிலில் வணங்கும் தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார்.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும், அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் மிகவும் கேவலமாக திராவிட சிந்தனை – நாஸ்திகவாத கொள்கை என்று வாய்கூசாமல் பெருவாரியாக உள்ள இந்துக்களின் ஹிருதயத்தையே வாள் கொண்டு அறுக்கும் விதமாக கட்டுரைகள் – மேடைப் பேச்சுக்கள் ஆகியவைகள் மூலம் பல வருடங்களாக எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
அந்தப் பாணியில் தினமணி ஏற்பாடு செய்த ஒரு பக்தி விழாவிலேயே ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் சினிமா கவிஞர் வைரமுத்து தெய்வ மாதாவாக வணங்கப்படும் கோதை ஆண்டாளை மிகவும் கீழ்த்தரமாக பேசியும் – எழுதியும் உள்ளார். அந்தக் கட்டுரையைப் படிப்பவர் யாராக இருப்பினும், ஆண்டாளை அவதூறாக வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவது தான்   வைரமுத்துவின் எண்ணம் என்பது மிகத் தெள்ளத் தெளிவாக விளங்கும். தெய்வம் – கடவுள் ஆகியவைகளின் விளக்கம், கல்லான கடவுள், கல்லான பெருமாளுடன் ஆண்டாள் கலந்ததை பக்தர்கள் ஏற்றாலும், பகுத்தறிவாளர்கள் ஏற்க மாட்டார்கள் என்ற நாத்திக வாதம் – ஆகியவைகளுடன், வைரமுத்துவின் வக்கிரமான, காமமான சிந்தனையும் அந்தக் கட்டுரையில் இடம் பெற்று, அது தமிழுக்கு அழுக்கு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. வைரமுத்துவின் சாக்கடை மனம் – போக்கு, அந்தக் கட்டுரையின் மூலம் வாசகர்களை மூச்சுத் திணற வைக்கிறது.

இதற்கெல்லாம் ஹிந்துக்களாகிய நாம் தான் காரணம். திண்ணை வேதாந்தம் பேசுபவர்களை யார் மதிக்கப்போகிறார்கள்?

பிள்ளையார் விக்கிரஹங்களை  வீதியிலே போட்டு திராவிடக் கழகப் பெரியார் உடைத்த போது மவுனமாக இருந்தோம். ராமாயண ராமனை – சீதாப்பிராட்டியை கேவலமாக பகிரங்கமாக மேடை போட்டுப் பேசிய – பேசும் பெரியார் – பெரியார் சீடர்கள் ஆகியவர்களை எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி அனுமதித்தோம் - அனுமதிக்கிறோம். ராமாயணத்தை பொது மேடையில் எரித்ததற்கும் நாம் எந்த எதிர்ப்பும் காட்ட வில்லை.
மவுனம் காத்தோம். ரவுத்ரம் இழந்தோம்.

நமது மடாதிபதிகளைக் கேவலமாக வீதிதோறும் தூற்றும் போதும் சும்மா இருந்தோம். ‘பாம்பையும் பார்ப்பனையும் கண்டால், பார்ப்பனைக் கொல்’ என்று தமிழ் நாட்டுச் சுவர்களில் தாரால் எழுதியதையும் நாம் வேடிக்கை பார்த்தோம். பிற குலத்தவர்களும் நமக்கு ஆதரவாக கூக்குரல் எழுப்ப அவர்களையும் அழைக்கத் துணிவில்லாமல் அசடர்களாக வாளாதிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இப்போது கள்ளுண்ட கண்களைப் கொண்ட திருவாளர் சினிமா பாடல்கள் எழுதும் வைரமுத்து தைரியமாக ஹிந்துக்களை வாள்கொண்டு அறுக்கும் அளவிற்கு சூடிக்கொடுத்த ஆண்டாளை வசைபாடி விட்டார்.

இதற்கு அவரது வருத்தம் தெரிவித்தாலும், ஆண்டாள் சன்னிதியில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டாலும், ஹிந்துக்கள் அவரது வார்த்தைகளால் அடைந்த ரணம் ஆறாது.

ஆகையால், அதற்குரிய தண்டனையை – தெய்வத் தாயான கோதை – அம்மா என்ற மன்னிக்கும் குணத்தைத் துறந்து, காளியாகி – பத்திரகாளியாகி – கல்கத்தா காளியாகி – அந்த வைரமுத்து மூர்க்கனை மிகவும் கொடூரமாகத் தண்டிக்க வேண்டும். அது ஹிந்துக்கள் அனைவருக்கும் தெரியும் விதமாகவும் விளங்க வேண்டும்.

நம் நாடு சுதந்திரம் அடைய மக்கள் அனைவரும் – அன்னியர் ஆட்சியை மிகவும் மூர்க்கமாக எதிர்க்க வேண்டும் என்பதற்கு, ‘ரவுத்திரம் பழகு’ என்று அறிவுரை வழங்கினான் மஹா கவி பாரதி. தமிழ் நாடு பாரதி பிறந்த புண்ணிய பூமி. ஆமாம். ஹிந்துமதம் காப்பாற்றப் படவேண்டு மென்றால், ஹிந்துக்கள் அனைவரும் ‘ரவுத்திரம் பழக’ வேண்டும். தியாகத்திற்குத் தயாராக  வேண்டும். இந்த தி.க. கோஷ்டிகள் அன்றும் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாகத்தான் இருந்தார்கள். சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்கள் தமிழ் நாட்டை ஆளாமல், இந்த நாஸ்திக வாதிகள் ஆண்டதால் உண்டான ரணம் குணமடைய ‘ரவுத்ரம் பழகுவோம்’.
அன்னை ஆண்டாளின் அடி பணிந்து, மூடன் வைரமுத்துவைத் தண்டிக்க அன்னை அவள் காளியாக உருவெடுத்து தண்டிக்க மீண்டும்  பிரார்த்திக்கிறோம். மீண்டும் மீண்டும் மீண்டும் பிரார்த்திக்கிறோம். நம் பிரார்த்தனையை அன்னை ஆண்டாள் நிச்சயம் நிறைவேற்றுவாள். அதுவும் கூடிய விரைவில்.

பின் குறிப்பு:

வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரையை அதன் மின் வலையிலிருந்து தினமணி நீக்கி விட்டது. வைரமுத்து ‘என் எழுத்து புண்படுத்தி இருந்தால், நான் மன்னிப்புக் கேட்கிறேன்’ என்று  தெரிவித்துள்ளார். தான் எழுதியது தவறு என்று ஒப்புக் கொள்ள வில்லை. யாரோ ஒருவர் எழுதியதை ஆய்வுக் கட்டுரை என்று குறிப்பிட்டு, மேற்கோள் காட்டி உள்ளார். ஆகையால், அவரது கருத்தை ஒப்புக் கொண்டதினால் தான், வைரமுத்து அதை தமது கட்டுரையில் சுட்டிக் காட்டி உள்ளார். திறமையை விட ஒருவரது நியாயம், நேர்மை – அதிலும் குறிப்பாக பிறரது நம்பிக்கையை – அதுவும் தெய்வ நம்பிக்கையை – மதிக்கும் குணம் ஆகியவைகள் தான் ஒரு மனிதனை உயர்த்தும். அதை நாஸ்திக மனம் கொண்ட வைரமுத்துவிடம் எதிர் பார்ப்பது வியர்த்தம்.


‘மறப்போம் – மன்னிப்போம்’ என்ற வேதாந்தம் நம்மை நாமே ஏமாற்றும் ஒரு போலியான பலஹீனமான நிலைக்குத் தள்ளி, நமது ஹிந்துமதத்திற்கு நிரந்தரமான ஹானியையே ஏற்படுத்தும். ஹிந்து மக்களே! தூங்கியது போதும். கோதையின் கீதத்தைச் செவியுற்ற நாம் துள்ளி எழுந்து, துணிந்து, நியாயத்தை நிலை நிறுத்துவோமாக. 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017