நெஞ்சு பொறுக்குதில்லையே!
நெஞ்சு பொறுக்குதில்லையே!
வாய்மை என்ற மின் அஞ்சல் பத்திரிகையில் ஆகஸ்ட் மாதம் 2009 அன்று
வெளியான தலையங்கம் தான் கீழே பிரசுரமாகி உள்ளது.
‘பேச்சு சுதந்திரம்’,
‘தேசபக்தி’, ‘சகிப்புத் தன்மை இல்லாமை’, ‘தேசத் துரோகம்’, ‘மத நிந்தனை’ - ஆகிய சொற்களுக்கு
புதிய விளக்கங்களும், விநோதமான விவாதங்கள் - கோஷங்கள், போராட்டங்கள் - கைதுகள் என்று
இந்தியாவில் சில இடங்களில் நித்திய நிகழ்வுகளாகவும், மீடியா - பத்திரிகைகளில் செய்திகளாகவும்
வருகின்ற இந்த நேரத்தில் இதைப் படிப்பது அவசியம்.
இதை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டுகிறேன். பேச்சுச் சுதந்திரம்
என்ற கூச்சலில் இந்தியாவின் சுதந்திரத்தையே இழக்க அவர்கள்
அறியாமலேயே அஞ்ஞானத்தால் தவறான பாதையில் செல்வதை உணர்ந்து,
திருந்தி, ‘இந்தியா தான் என் உயிர் மூச்சு, இந்தியக் கொடிதான் என் உயிர்’
என்ற உயர் நோக்கத்தை உள்ளத்தில் இருத்தி, உறுதியுடன் இருக்க வேண்டும்.
ஹிந்து மதத்தை மதிக்காவிடினும் தவறில்லை. மதம் மாறினாலும்
தவறில்லை.
ஆனால், இந்தியனாக இருப்பதில் எந்தவிதமான குழப்பமும் கூடாது. அது
வெளிப்படையாகவே தெரியவேண்டும். பாடமாகவும், படிப்பாகவும், எதையும்
பள்ளியிலே விவாதிக்கலாம் - ஆனால், வீதியில் வந்து அரசியல் செய்வது
அவர்கள் கற்கும் கல்விக்கு ஹானியாகும். பெற்ற தாய் தந்தையர்க்குச்
செய்யும் துரோகமுமாகும்.
கல்வி என்பது அறிவை வளர்க்கும். ஆனால், அனுபவம் என்பது தான்
ஒருவனுக்குச் சரியான பாதையைக் காட்டும். பகுத்தறியும் தன்மையுடன்
அனுபவம் பெற்ற தகுந்த ஆசான்களை இனம் கண்டு, இந்தியாவைப் மேம்பட
வைக்க முயலவேண்டும்.
கட்டுரை:
இந்தியா 63வது சுதந்திர விழாவைக் கொண்டாடிவிட்டது. நாட்டிலே இப்போது பன்றிக்
காய்ச்சல் பீதியில் மக்கள் அவதிப்படுகிறார்கள். பயங்கர வாதம் இன்னும் தீர்ந்த
பாடில்லை. விலை வாசிகள் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வேளையில் ஒரு முக்கியமான
அதி பயங்கரமான மின்வலைச் செய்தியால் நாம் கவலை கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.
சைனாவில் அதன் தலைநகரத்திலிருந்து
வெளியாகும் ஒரு மின் வலையில் - அது அரசாங்க ஆதரவுபெற்றது என்ற நிலையில் - ஒரு
கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய செய்தி இது தான்: சீன மக்களே!
விழித்தெழுங்கள். இது தான் இந்தியாவை 20-30 துண்டுகளாகக்
கூறுபோட தகுந்த தருணம். சீன அரசாங்கம் கொஞ்சம் முயன்றாலே போதும். இது உடனே சாத்தியப்படும்.
'இந்தியாவின் வடக்கு எல்லையில் இமயமலை
இருக்கிறது. அது நமக்கு அரண்' என்ற நிலை போய்விட்டது. பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான், காஷ்மீர், திபெத், நேபால், பூடான், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பங்களாதேஷ் - இவைகள் எல்லாம் இந்தியாவைச் சுற்றி ஒரு குடைபோல்
கவிந்திருக்கின்றன. அவைகள் அத்தனையையும் சீனா தன் வசத்தில் கொண்டு வர முயன்று
சிறிது வெற்றியும் பெற்றிருக்கிறது என்பது உண்மையாகும். ஆசியாவையே தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வர சீனா எதையும்
செய்யச் தயங்காது. அஸ்ஸாமில் இயங்கி வரும் உல்பா தீவிரவாதிகளுக்கு ஊக்கம் கொடுத்து அஸ்ஸாமைத் தனிநாடாகச்
செய்யவும், பங்களாதேச அகதிகளைக் கொண்டு
வங்காளத்தை தனி நாடாகச் செய்யவும்’ என்று சீன மக்களைத் தூண்டுகிறது அந்த மின் வலைக் கட்டுரை.
அது மட்டுமா?
தெற்கு திபெத் என்று சீனா பெயரிட்டு
அழைக்கும் அருணாசலப் பிரதேசத்தையும் தீவிர வாதிகளுக்கு உதவி மீட்க வேண்டும் என்று கொக்கரிக்கிறது அந்தக் கட்டுரை.
தமிழர்களும், அஸ்சாமியர்களும், காஷ்மீரிகளும், நாகர்களும் தனி ராஜ்யத்தைக் கேட்டுப் பெரும் நாள் நெருங்கி விட்டது
என்றும் விளக்குகிறது அந்தக் கட்டுரை.
'இந்து மதம் என்பது அழியப்போகிற அழுகிய
ஒன்றாகும். ஜாதியை ஊக்குவித்து மக்களை ஏமாற்றும் அந்த மதத்தால் இந்தியாவை
ஒருபோதும் ஒன்றாக இணைத்திருக்க முடியாது. உண்மையில் இந்தியா என்ற தேசம் சரித்திரத்தில் இருந்ததே இல்லை' என்ற வாசகங்களும் அந்தக் கட்டுரையில் இருக்கின்றன.
இந்தியாவைத் துண்டாடினால் தான்
அங்குள்ள மக்களுக்கு உண்மையான சமூதாய சீர்திருத்தங்கள் ஏற்படும் என்ற ஒரு காரணத்தையும்
அந்தக் கட்டுரை குறிப்பிட்டிருக்கிறது. நமது இந்திய அரசாங்கம் இந்தக் கட்டுரைக்கு
ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.
'இது ஒரு தனிப்பட்டவரின் கருத்து. சீன
அரசாங்கத்தின் கருத்து அல்ல' என்று சீன அரசாங்கம் கூறினாலும்,
சீனாவில் அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல்
இதுமாதிரியான கட்டுரைகள் வெளிவர இயலாது என்பது தான் இந்திய வல்லுனர்களின்
கருத்தாகும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். 'முதலில் இந்தியன்; இடையில் இந்தியன்; கடைசிவரை இந்தியன்' என்ற தேசிய உணர்வை ஒவ்வொருவரும் உணரும், உணர்த்த வேண்டிய தருணம் வந்து விட்டது.
இத்தாலிய தேசம் ஒன்றாகி நடைபெற்ற முதல்
பார்லிமெண்ட் சபையில், அந்த நாட்டின் மாசிமொ என்ற தியாகி,
சைத்திரிகன், அரசியல்வாதி சொன்ன சொற்கள் தான் இந்தியர்களாகிய அனைவருக்கும்
மிகவும் அவசியமான பொருத்தமான வாசகங்களாகும்.
’ஒருங்கிணைந்த இத்தாலியை நாம் உருவாக்கி விட்டோம். இனி இத்தாலியர்களை உருவாக்க வேண்டும்' என்பதுதான் அவரது பொன்மொழி.
இனி நாம் இந்தியர்களாகவே இருக்க
வேண்டும். இருப்போம். நாட்டைக் காப்போம்.
இந்தத் தருணத்தில் மஹாகவி பாரதியின்
பாட்டைத்தான் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்: ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒன்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது
தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
Comments