இந்தியாவில் மதமாற்றம் - தீராத தீர்க்க முடியாத பிரச்சனையா?
‘ஆம் அல்லது இல்லை’ என்று இந்தக் கேள்விக்கு இலகுவில்
பதில் சொல்ல முடியாது என்பதை விளக்கத்தான் இந்த தலையங்கம். தற்போது மதமாற்றம் - மறுமதமாற்றம்
இந்தியாவின் அரசியல் கட்சிகளால் காரசாரமாக விவாதிக்கப்படுவதாலும் இந்தப் பிரச்சனையைப்
பற்றி ஆராய்வதும் அவசியமாகிறது.
சத்யமேவ ஜெயதே!
உலகத்திலேயே ஹிந்துக்கள் இந்தியாவில் மட்டும் தான் அதிக அளவில்
இருக்கின்றனர். படிப்பு, வேலை, வியாபாரம், கலை ஆகியவைகள்
காரணமாக உலகில் சில இடங்களில் பரவலாக ஹிந்துக்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். ஹிந்து மதம்
மதமாற்றத்தை கொள்கை ரீதியாக ஏற்பதில்லை. ஹிந்துமதம், சமணமதம், புத்தமதம், சீக்கிய மதம் ஆகியவைகள் இந்தியாவில் பிறந்த நான்கு மதங்களாகும். இந்த மதங்களில்
கட்டாய மதமாற்றங்களோ, மற்ற மதங்களைப் பற்றிய தூஷணைகளோ கிடையாது. உண்மையில் ஹிந்து
மதம் இந்த இந்தியாவில் பிறந்த மற்ற மதங்களை தங்கள் கிளைமதங்களாகவே பார்க்கின்றது. அவ்வப்போது
சில தீவிரவாத ஹிந்துக்களும் மற்ற மதத்தவர்களும் சண்டை போட்டாலும், அவைகள் அந்தந்த
மதத்தலைவர்களால் கலவரங்களாக மூளாமல் அமைதியை இந்தியாவில் பாதுகாத்து வந்துள்ளனர்.
ஹிந்து மதம் அதிக அளவில் வடக்கே வைஷ்ணவக் கொள்கையையும், தெற்கே சிவக்
கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு பல விதமான உப மதக் கிளைகள் ஏற்பட்டாலும், மூலமதமான ஹிந்து
மதம் அதனால் பலஹீனம் அடையவில்லை. ஏன், புத்தமதம், சமணமதம் மற்றும் சீக்கிய மதங்களை ஹிந்து மதம் தனது சகோதர
மதங்களாக மதிக்க ஹிந்து மதத்தலைவர்கள் பாடுபட்டு வெற்றி கண்டார்கள் என்பதற்கு சரித்திரச்
சான்றுகள் உள்ளன.
இந்த ஒற்றுமை நிலை முஸ்லீம் இந்தியாவில் படை எடுத்து வெற்றி
கண்ட பிறகு பாதிக்கப்பட்டு, ஹிந்துகளின் மதமாற்றம் வெகு தீவிரமாக முஸ்லீம் அரசர்களால்
கையாளப்பட்டு வெற்றி கண்டனர். அதன் பிறகு இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து அரசு இந்துக்கள்
பலரை கிருஸ்துவர்களாக மதமாற்றம் செய்து அந்தப் பிரசாரம் இன்னும் தொடர் கதையாக இந்தியாவின்
மதச் சார்பின்மையையே ஆட்டம் காண வைத்துள்ளது என்பதைப் பல சம்பவங்கள் நீரூபித்துள்ளன.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பிரதேசத்தில் முஸ்லீம் மக்கள் அதிகமாகவும், நாகலாந்தில்
கிருஸ்துவர்கள் அதிகமாகவும் இருக்கின்றனர். ஆனால், இந்த இரண்டு மதத்தினர்கள் தான் ஹிந்துக்களை தங்கள் தங்கள்
மதத்திற்கு மாற்ற பலவிதமான வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். இதற்கு வெளிநாட்டு
பணம், பிரசார பலம்
ஆகியவைகள் இந்த இரு மத்த்தவர்களும் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
என்பது வெளிப்படையான உண்மையாகும்.
அசோக மஹாராஜா அனைத்து மதமும் சம்மதம் என்பதை மக்களுக்குப்
பரப்பினார். பிற மதத்தினரைப்
பழிக்காமல், அவரவர்கள் தம்
தம் மதக் கொள்கைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை பிரகடணம் செய்து, தம்மை ஒரு உயர்ந்த
மதச் சார்பற்ற மன்னராக வெளிப்படுத்தி உள்ளார். இது கி.மு. 3-வது நூற்றாண்டு கால அளவில் ஏற்பட்ட உன்னத நிலை என்பதை அறியவேண்டும். இந்த நிலை முஸ்லீம்
ஆட்சியில் மாறிவிட்டது. முஹமத் கஸ்னி, அவுரஹங்க சீப், கஜினி முகமது ஆகியவர்களால் ஹிந்துக்கள் பெரும் அளவில் மதமாற்றம்
செய்யப்பட்டனர். அவுரங்க சீப்
மதம் மாற ஒவ்வொரு ஹிந்துவுக்கும் - அவன் ஆணாக இருந்தால் ரூபாய் 4, பெண்ணாக இருந்தால் ரூபாய் 2 இனாம் கொடுக்க உத்திரவிட்டார். இந்தப் பணம் ஒரு மாதச் சம்பளத்திற்குச் சமம் என்று கூட அந்த
உத்திரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லீம் அரசர்களில் அக்பர் காலத்தில் தான் ஹிந்துக்களுக்கு
ஓரளவு துன்பம் குறைந்தாலும், இந்த மத மாற்ற பூதம் ஆங்கில ஆட்சியிலும் ஹிந்துக்களை வாட்டி
எடுத்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் மதமாற்றம் செய்யும் கிருஸ்துவ பிரசாரகர்களைப்
பற்றிய மஹாத்மா காந்தியின் கருத்து இங்கு கவனிக்கத் தக்கதாகும்.
ஹிந்து மதத்தவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்யும்
செயலுக்கு காந்தி அவர்கள் கண்டனம் தெரிவித்த விதம் மிகவும் கடுமையானதாகும்: ‘இந்தியாவில்
நடக்கும் கிருஸ்துவர்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெரும் தவறாகும். அந்தத் தவறால்
உலகத்தின் வளர்ச்சியும், சமாதானமும் வெகு அளவில் பாதிக்கப்படுகிறது. எதற்காக ஒரு
கிருஸ்து ஒரு ஹிந்துவை மதம் மாற்றம் செய்ய வேண்டும்? கிருஸ்துவர்கள் தங்கள் சேவைப் பணிகளை எந்த விதமான உள்நோக்கமும், மதமாற்றம் செய்யும்
கருத்தும் இல்லாமல் ஆற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? சேவை என்ற போர்வையில் செய்யும் இந்த மதமாற்றம் ஒரு ஆரோக்கியமற்ற
ஒன்றாகும். ஹிந்துக்கள்
இதை எதிர்க்கிறார்கள். மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட ஒன்றாகும். ‘ஹிந்து மதம்
ஒரு தவறான மதம், கிருஸ்துவமதம்
ஒன்று தான் உலகத்திலேயே உண்மையான மதம்’ என்று சொல்லி, ஹிந்து மதத்தை இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்
பார்க்கிறார்கள். என்னிடம் ஆட்சி இருந்து, சட்டம் செய்யும் அதிகாரம் என்னிடம் இருந்தால், நான் இந்த கிருஸ்துவர்களின்
மதமாற்றம் செய்யும் அனைத்து வகையான செயல்களையும் தடை செய்வேன். ஹிந்து வீடுகளில், இந்த மதமாற்றப்
பிரசாரம் என்பது அவர்களின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி, அவர்களின் நடை
உடை பாஷை, உணவு, குடி நீர் ஆகியவைகளில்
வேண்டாத மாற்றங்களை உண்டாக்கும் அவல நிலை ஏற்படும். ஏசுவை நான் ஒரு சிறந்த உபதேசகராக ஏற்கிறேன். ஆனால், அவரை மட்டும்
தான் கடவுளின் தூதராக என்னால் ஏற்க முடியாது. மக்கள் அனைவரும் கடவுளின் மகன்கள் தான். ஏசு மட்டும்
அல்ல. என்னை நான்
சைதன்ய மஹா பிரபுவின் மகனாகவே அடையாளம் காண விழைகிறேன். ஏசு ஒருவர்தான் கடவுள் என்ற கிருஸ்துவர்களின் இந்த குறுகிய
கருத்து, சைத்தானின்
கருத்திற்கு இணையாகும். ஹிந்துக்கள் இந்த பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் மிகவும்
சிறந்த பண்பும், அன்பும் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களை
கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்வது ஹிந்துக்களை அவமானப் படுத்துவதற்குச் சமமாகும்.’
உலகத்தின் மக்கள் தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவு
தான். இருப்பினும்
பலவருடங்களாக முஸ்லீம்கள் - கிருஸ்துவர்கள் ஆகிய மதத்தின் பிரசாரகர்கள் பலவிதமான ஆசைகள், பணம், பதவி, படிப்பு ஆகியவைகளைக்
காட்டியும் அவர்களால் தலித் மக்களைத் தான் பெரும் அளவில் மத மாற்றம் செய்ய முடிந்தது. சென்ற பல வருடங்களாக
ஹிந்து மதத்தை தீண்டாமையை ஆதரிக்கும் - ஊக்குவிக்கும் மதம் என்று பிரசாரம் செய்து தலித் மக்களையும், பல பிற்பட்டவகுப்பினர்களையும், ஆதி திராவிடர்களையும்
ஹிந்து மதத்திலிருந்து அவர்களை முஸ்லீம் - கிருஸ்து ஆகிய மதங்களில் மாற்றி, அவர்களுக்கு அந்தந்த மதத்திற்கு ஒப்ப பெயர் மாற்றங்களும்
செய்யப்பட்டன. இதை பல காலம்
ஹிந்து மதம் சகித்துக் கொண்டு தான் இருந்தது. ஏனென்றால், ‘ஹிந்து மதம் இந்தியாவில் நன்கு வேரூன்றிய மதம். அதன் கொள்கைகளைப்
பறை சாற்றும் புனித நூல்கள் - வேதம், உபநிடதங்கள், சாஸ்திரங்கள், சுலோகங்கள், புராணங்கள் ஆகியவைகளுடன் புனித நதிகள், க்ஷேத்திரங்கள்
ஆகியவைகள் ஹிந்து மதத்தினை எந்தவிதமான மதமாற்றங்களிலிருந்தும் காப்பாற்றும்’ என்ற கருத்துக்களுடன், ‘பிறப்பினால்
தான் ஒருவன் ஹிந்துவாக முடியும்’ என்ற நடப்பு நிலையைப் புரிந்து கொள்ளாமல் கொண்ட கொள்கையாளும்
இந்த மற்ற மதத்தவர்களின் மதமாற்றச் செயல்கள் ஹிந்து மதத்தவர்களால் எதிர்க்கப்படாமல்
இருந்து விட்டது.
ஆனால், பஜ்ரங் தல், விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுடன் அந்தந்த மாவட்ட அளவில் உள்ள பல அமைப்புகள்
கடந்த சில வருடங்களாக மத மாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்களை அவர்களது உண்மையான தாய் மதமான
ஹிந்து மதத்தில் சேர்க்கும் மறு மதமாற்றச் செயல்கள் தலை தூக்க ஆரம்பித்தவுடன் அது ஒரு
பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் ஆக்ராவில் சுமார் 57 குடும்பங்களைச் சேர்ந்த 200 முஸ்லீம்கள் ஹிந்து பரிவார் அமைப்புகளால் ‘கர் வாப்சி’ - ‘சொந்தமான இடத்திற்கே
திரும்பி வருதல்’ என்ற அடிப்படையில் ஹிந்து மதத்திற்கு மாறி வந்துள்ளனர். இது இந்திய
பாராளு மன்றம் - மீடியா - பத்திரிகைகள்
ஆகியவைகளில் காரசாரமாக விவாதிக்கப்படுகின்றன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கு வங்காளம், பிஹார் ஆகிய
மாநிலங்களிலிருந்து ஆக்ராவில் குடிசையில் குடியேறியவர்களாவர். அந்த ஏழை முஸ்லீம்
மக்களை ஆசை காட்டி மதம் மாறச் செய்துள்ளனர் என்ற குற்றச் சாட்டை எதிர்க்கட்சிகள் முன்
வைத்துள்ளனர். ஆனால், கட்டாய மதமாற்றச்
சட்டம் இன்னும் உத்திரப்பிரதேசத்தில் இயற்றப்படவில்லை. தற்போது, இந்த கட்டாய
மதமாற்றச் சட்டம் - ஒரிசா, மத்திய பிரதேசம், குஜராத், சதீஷ்கர், ஹிமாசல் பிரதேசம், தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் மட்டுமே இயற்றப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இதே மாதிரி சட்டம் இயற்ற பி.ஜே.பி. கட்சியைத் தவிர
மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 25-யில் அளிக்கப்பட்ட
மதப் பிரார்த்தனை, மதபோதனை, மதத் தேர்வு ஆகிய குடிமகனின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக
அமைகிறது என்று வாதிடுகிறார்கள். இந்தியா முழுதும் செயல்படும் அளவில் ஒரு பொதுவான மத மாற்றச்
தடைச் சட்டம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் இப்போது தயாராக இல்லை. அதாவது சிறுபான்மை
இன மதத்தவர்களை பெரும் பான்மை மதத்தில் சேர்ப்பதைத் தடுக்க வழி வகுக்க மட்டுமே அந்த ‘சிக்குலர்’ எதிர்கட்சியினர்
தயாராக இருப்பதாகவே படுகிறது. ‘பெருவாரியான ஹிந்து மதத்தவர்களை சிறுபான்மை மதத்தவர்கள் மத
மாற்றம் செய்வது தவறில்லை. தடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்று தான் அவர்கள் வாதிடுகிறார்கள். இந்த ஒரு வழிப்பாதைக்
கொள்கையை சங்க பரிவார்கள் மதமாற்றக் கொள்கையாக ஏற்கத் தயாராக இல்லை.
மதத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்ற கொள்கையினைக்
கொண்ட காம்ரேட் கட்சிகளும் முஸ்லீம்கள் - கிருஸ்துவர்கள் ஆகியவர்களுக்கு ஆதரவாகவும், ஹிந்துக்களுக்கு
எதிராகவும் குரல் கொடுக்கின்றனர். இது எங்களது மதவாதக் கட்சிகளை எதிர்க்கும் கொள்கைக்கு ஏற்புடையதாகும்
என்று காரணம் சொல்கிறார்கள்.
இந்திய அரசியல் சட்டம் பகுதி 370, பொதுவான சிவில் சட்டம் ஆகியவைகள் பல ஆண்டுகள் தீர்க்கப்படாமல்
இருப்பதைப் போல் இந்தியாவிற்குப் பொதுவான மத
மாற்றத் தடுப்புச் சட்டம் இயற்றப்படுவதும் கானல் நீராகவே படுகிறது. பெருவாரி மக்களான
ஹிந்துக்கள் தங்களுக்கு சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட உரிமைகளையும், சலுகைகளையும்
அளிக்க வழி செய்யுங்கள் என்று வேண்டும் நிலையில் தான் ஹிந்துக்கள் இருக்கிறார்கள். இது இந்திய
அரசியல் சட்டத்தையே அவமதிப்பதாகும் என்றால் அந்தக் கருத்தையே ஒரு மதவாதக் கொள்கை என்று
முத்திரை இட்டுவிடும் ‘சிக்குலர்’ மேதாவிகளும், மீடியாப் பேர்வழிகளும் இந்தியாவில் இருக்கும் வரை தர்மம்
தலை குனிந்து இருக்கும் நிலைதான் நீடிக்கும். ‘இந்தியாவின் இயற்கை வளங்களின் முதல் உரிமை சிறுபான்மையினருக்கே!’ என்று வெளிப்படையாக
உரைத்த நமது முந்தைய பிரதம மந்திரி மன்மோஹன் சிங்கின் கூற்று இந்திய மக்கள் அனைவருக்கும்
சம நீதி என்ற இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமையைத் தவிடு பொடி ஆக்குவதுடன், மக்களிடையே
மதத்தின் அடிப்படையில் பேதமையை வளர்க்க வழி வகுக்கும். ஆனால் அவரது கூற்றை எந்த மீடியாவும் விமரிசிக்க வில்லை.
இந்திய மக்கள் அனைவரும் சிந்தித்து சீரிய முடிவை எந்தவிதமான
பயமும் இன்றி, இப்போது ஆட்சி
பீடத்தில் உள்ளவர்கள் எடுக்க உறுதுணையாக இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.
Comments