அணு உலை மின்சார உற்பத்தி அவசியமா ? ஆபத்தா ?
புரபசர் ஹான்ஸ் - பீட்டர் டுயர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவர் ஜெர்மனியின் நோபல் பரிசு பெற்ற அணுமின் பெளதிக விஞ்ஞானி. அவர் அணுமின் ஆய்வுத்துறையில் 40 ஆண்டுகளாக தம்மை அர்பணித்துள்ளார். நமது அணு விஞ்ஞானியான மதிப்பிக்குரிய அப்துல்கலாம் மாதிரி அணுவைப் பயன்படுத்தும் துறையில் - அது சமாதானம் அல்லது ஆயுத பயன்பாட்டிற்குத் துறையில் - ஈடுபட்டுள்ளவர் இல்லை டுயர் என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
அவர் சென்னையில்
சொற்பொழிவின் போது சொன்னவைகளின் சுருக்கம் - “ மின்சார உற்பத்திசெய்யும் எல்லா அணு மின் உலைகளையும் உடனடியாக
குப்பைக் கூடையில் தள்ளவும். “சில ஆபத்துக்கள் இதில் இருக்கத் தான் செய்யும். அதை
சயன்ஸ் எதிர்க்கொண்டு
சமாளித்து விடும் “ என்ற சில விஞ்ஞானிகளின் வாதம்
ஏற்புடையதன்று. ஏனென்றால், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு மின் உலைகளின்
உற்பத்திச் சங்கலி மிகவும் சிக்கலானதும், மிகவும் அதிக செலவை உண்டாக்கும்
வகையிலும் அமைந்த ஒன்றாகும். அத்துடன், இந்த உற்பத்தியில் பாதுகாப்பு தளவாடங்கள்,
உபகரணங்கள் ஆகியவற்றுக்காகும் செலவும் மிக மிக அதிகம். கனடாவில் செயல்படும் பழைய
மாடல் அணு உலையில் ஆபத்து இல்லை. அந்த உலையில் “Non-enriched
Uranium” பயன்படுத்தப் படுகிறது. ஆனால், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள புதிய
மாடல் அணு உலைகளில் பயன்படுத்துவதோ “Enriched Uranium”. இந்த
“Enriched Uranium” பயன்படுத்தப்பட்ட பிறகு, அணு மின் உலையிலிருந்து
வெளியேறும் புளோட்டினம் என்ற கழிவை எப்படிக் கையாளுவது என்ற ஒரு தெளிவான
விதிமுறைகள் இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லை. “
இந்தியாவின் அணு மின் நிலையங்களின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பற்றிச்
சிறிது சிந்திப்போம்.
நமது நாட்டின் தற்போதைய மின்சார உற்பத்தியின் அளவு 172 ஜி.டபுள்யு. அணுமின்
நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 5 ஜி.டபுள்யு - அதாவது இது
நம் நாட்டின் மின்சார மொத்த உற்பத்தியில்
3 சதவிகிதம் தான்.
தற்போது செயல்படும் மின் உலைகள் அமைந்துள்ள இடங்கள் 6 - கைகா, காக்ரபார், கல்பாக்கம், நரோரா,
ராவட்பாட்டா, தாராபூர்.
இவைகள் தவிர, புதிதாக அணுமின் உலைகள் கட்டப்பட்டு வரும்
இடங்கள் 8 - கூடங்குளம், ஜைதாபூர், பாடி சோனாபூர்,
குமாஹாரியா, புலிவெண்டுலா, கோவ்வாடா, ஹரிபூர், பன்ஸ்வாரா.
இந்த அணு மின் நிலையங்களும் உற்பத்தியை ஆரம்பித்தால் - அதாவது 2020 ஆண்டு
என்று நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் - 20 ஜி.டபுள்யு. அளவு மின்சாரம் கிடைக்க வழி
பிறக்கும். அதாவது அணு மின் உலைகளினால் பெறும் மொத்த மின்சார அளவு - 5 +
20 = 25 ஜி.டபுள்யு என்ற அளவில் இருக்கும். அந்த கால கட்டத்தில் நம் நாட்டிற்குத்
தேவையான மின்சார அளவு 315 ஜி.டபுள்யு என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஜான் ரிட்ச் என்பவர் உலக அணு மின் அசோசியேஷனின் டைரக்டர் ஜெனரலாக டெல்லியில் பணிபுரிகிறார். அவர் முன்னாள் யு.எஸ். அம்பாசிடராக யு.என். வியன்னாவின் சபையில் இருந்திருக்கிறார். அந்த சபை உலக அணு மின் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்கும் அதிகார மையமாகும். ஆகையால், அவரது கருத்தும் முக்கியமான ஒன்றாகும்.
ரிட்ச் சொல்வதின்
முக்கிய கருத்து இது தான் - “ அணு உலை மூலம்
மின்சாரம் தயாரிப்பதில் எந்த வித ஆபத்தும் இல்லை. ஜப்பான் புகுஷிமா டெய்சி அணு உலை
சுனாமியால் பாதிக்கப்பட்டதில் பீதி அடைந்த நாடுகளான ஜெர்மனி, இத்தாலி,
சுவிஸ்வர்லாந்து ஆகிய நாடுகள் அணு உலைகளை மூட எடுத்த கொள்கை முடிவு
பைத்தியக்கார்களைப் போல் பயந்து எடுத்த முடிவாகும். சூரிய ஒளி, காற்றுச் சக்திகளை
மட்டும் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்துவோம் என்ற அந்த நாட்டினர், உண்மை
நிலையை உணராது எடுத்த அவசர முடிவு என்பதை அவர்களே உணரும் காலம் வரத்தான் போகிறது.
“ பூகம்பவும், சுனாமியும் புகுஷிமா அணு உலையைத் தாக்கும் தருணத்தில்
அந்த உலைகள் உடனே மூடப்பட்டன. ஆனால், வெளி மின் சக்தி இல்லாத காரணத்தினால், அந்த
உலையின் உஷ்ணம் தணிக்க முடியாது போய் விட்டது. இந்தக் குறையைப் போக்க வெளி மின்
சக்தியை அணு உலை பெறும் அளவிற்கு சரிசெய்யப்படுகிறது. இதனால், இயற்கைச்
சீற்றங்களையும், தீவிர வாதத் தாக்குதல்களையும் சமாளிக்க முடியும் அளவில், பாதுகாப்பு
நடவடிக்கைகள் அந்த அணு மின் உலையில் ஏற்படுத்தப்படுகின்றன.
“ இந்த சமயத்தில் ஒன்றை பத்திரிகைகளும், மீடியாக்களும் சரிவர உண்மை
நிலையினை விளக்க வில்லை என்பது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்றாகும். புகுஷிமாவில்
அணுக் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை விட, வீணான பீதியால் சுமார் 1 லட்சம்
பேர்களை இடம் பெயர வைத்ததால் தான், மக்கள் துன்பப்படுத்தப்பட்டார்கள். இது
அரசாங்கத்தின் தவறான நடவடிக்கையால் விளைந்ததாகும்.
1986-ம் வருடம் செர்னோபிலில் நடந்த அணு மின் ஆலை விபத்திலும் இதே தவறான
அணுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது. அணுக் கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள்
மிகச் சிலரே. ஆனால், அந்த இடத்தை விட்டு கட்டாயமாக இடம் பெற வைத்ததால் மக்கள்
அவதிப்பட்டது மிகவும் அதிகமாகும்.
“புகுஷிமாவில் சுனாமியால் இறந்தோரின் எண்ணிக்கை சுமார் 20,000. ஆனால்,
அணு உலையில் வேலை செய்தோருக்கோ, அருகில் இருந்த மக்களுக்கோ அதிக பாதிப்போ, காயமோ
உண்டாக வில்லை. ஒருவரும் இறக்கவும் இல்லை. ஆனால், இந்த சுனாமியை - அணு மின்
உலையின் விபத்தாகவே மீடியாவில் செய்திகளை பரப்பி விட்டார்கள். அதன் தாக்கம்
இப்போது இந்தியாவின் கூடங்குளத்திலும் எதிரொலிக்கின்றது. “
இப்பொழுது மற்ற
நாட்டினரின் நிலை பற்றிச் சிறிது அறிய முயலுவோம்.
1. கடந்த ஒரு வருடத்தில், ஜெர்மனி, பெல்ஜியம், சுவிஸ்வர்லாந்து ஆகிய
நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள அனைத்து அணு மின் உலைகளையும் மூடிவிட
முடிவெடுத்துள்ளன.
2. இத்தாலி இருக்கும் அணு மின் உலைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினாலும்,
இனி புதிதாக அணு மின் உலைகளை உருவாக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளது.
3. செகோஸ்லோவாக்கியாவில் இரண்டு அணு மின் நிலையங்களை மட்டும் புதிதாக
இயங்க அனுமதித்துள்ளார்கள்.
4. ஜப்பான் நாட்டில் உள்ள 54 அணு மின் நிலையங்களில், 2 அணு மின்
நிலையங்கள் தான் செயல்படுகின்றன. மற்ற 52 நிலையங்களில், “Stress
Tests” நடத்தப்படுகின்றன.
5. 30 நாடுகளில் உள்ள 435 அணு உலைகளின் தர நிலை
குறித்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
6. யு.எஸ்.ஏ., யு.கே., இந்தியா, சீனா, தென்
கொரியா, ரஷ்யா ஆகிய நாடுகள் அணு உலைகளை மின்சார உற்பத்திக்கு சில பாதுகாப்பு
நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி, பயன்படுத்த முடிவெடுத்துள்ளன.
.
11979-ம் ஆண்டில் யு. எஸ்.நாட்டில் இருக்கும்
திரீ மிலி ஐலண்ட் என்ற இடத்தில் உள்ள அணு உலை விபத்திற்குப் பிறகு, உலகத்தில் அணு
உலை ஆபத்து எங்கு நடந்தாலும், அந்த விபத்து எல்லா இடத்திலும் நடந்ததாக்க் கொண்டு,
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதியின் படி, “Defense in
Depth and Breadth (DID)” என்ற கொள்கைப் படி பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல அடுக்கு
முறையை புகுத்தி உள்ளனர். புதிய பாதுகாப்பு உத்திகளால் அணு உலைகள் மின்சார
உற்பத்தி செய்வதில் உண்டாகும் அனைத்து ஆபத்துக்களும் அறியப்பட்டு களையப்படுவதாகச்
சொல்லப்படுகிறது.
மேலே
சொல்லப்பட்டவைகளிலிருந்து அணு உலை மூலமாக உற்பத்தி செய்வதில் ஆபத்து இருப்பினும்,
விஞ்ஞான ரீதியாக விடைகாணப்படுகிறது என்ற நிலை இருக்கிறது.
இந்தியாவின் அணுக்
கொள்கையில் மாற்றம் தேவையா என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ் நாட்டில்
ஏற்கனவே கல்பாக்கத்தில் அணு உலைகள் மின்சார உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. இது
வரை அதில் எந்த விபத்தும் ஏற்படவில்லை. விபத்தைத் தவிர்க்கும் பல நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படும் என்ற உறுதியும் அரசாங்கம் அளிக்கிறது. ஆகையால், அதை மூடும்
எண்ணமே எழ அனுமதிக்க்க் கூடாது.
கூடங்குளம் உற்பத்தி
நிலையை எட்டி விட்டது. ரூபாய் 12,000 கோடி செலவில் நிறுவப்பட்ட அணு உலையாகும் அது.
இது வரை எந்த ஆபத்தும் ஏற்பட வில்லை. ஆபத்து வரும் என்பது ஊகத்தின் அடிபடையில்
எழுந்த பயம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அந்த பயமும் அவசியமற்றது என்பதை
பல விஞ்ஞானிகள் உள்ளூர் மக்களுக்கு எடுத்துக் கூறி உள்ளார்கள். ஆகையால், பணம்
வீணாவதைத் தவிற்கவும், தமிழ் நாட்டிற்கு ஒரளவுக்காவது மின்சார தேவையைப் பூர்த்தி
செய்ய இது உதவும் என்பதாலும், கூடங்குளம் அணு உலைகளை செயல்படுத்த அனுமதிப்பது
அவசியமாகும்.
மற்ற இடங்களில் உள்ள
அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து, அந்தந்த மாநில அரசு மற்றும் மக்களின் கருத்துக்களை
மீண்டும் புதிதாகக் கேட்டறிந்தும், வேறு பல பிரச்சனைகளையும் சீர்தூக்கிப் பார்த்த
பிறகு, இறுதி முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அணு மிகவும் சிறியது
தான். ஆனால், அது நம்மை படுத்தும் பாடு அண்டம் கொள்ளாது இருக்கிறது. விஞ்ஞானிகள்
அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த அணு உலைக்கு ஒரு முடிவான கருத்தை வெளியிட வேண்டிய
தருணம் வந்து விட்டது.
மின்சாரம் உற்பத்தி
செய்ய அணு உலை உகந்தது என்றோ அல்லது உகந்தது இல்லை என்றோ உலகத்திலுள்ள விஞ்ஞானிகள்
ஒரு அறிக்கையை வெளியிட முடியுமென்றால், அது ஒரு பெரிய தீர்வாக இருக்கும். பல
சிக்கல்களும் தீரும்.
அந்த நாளை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்.
Comments