புத்த பூர்ணிமா - 12 - 05 - 2025 - திங்கட் கிழமை
புத்தர் கி.மு. 623 ஆம் ஆண்டு லும்பினியில் பிறந்ததாக நம்பப்படுகிறது.
புத்தர் தம் உபதேசங்களில் எதையும் எழுதி வைக்கவில்லை. ஆகையால்
புத்தர் பொன் மொழிகள் எல்லாம் அவரது சீடர்களின் மூலமாகவே தெரிய வந்துள்ளது.
அவைகள் எல்லாம் தொகுத்து பெளத்த திருமறை நூலகள் என்று அறியப்படுகின்றன.
அந்த பெளத்த திருமறை நூல்கள் பத்தாகும். அவைகள்: தம்ம பதம், தீர்க்க நிகாயம், ஸம்யுத்த நிகாயம், மத்யம நிகாயம், அங்குத்தா நிகாயம், வினய பிடகம், உதாணவர்கம், ஸூத்ர நிபாதம், இதயுக்தம், குட்டக பதம்.
எவ்வளவு வருடங்கள் சென்றாலும் புத்தரின் வாழ்க்கையும், அவரது போதனைகளும் மதம் கடந்து செயல்பட வேண்டிய உன்னத உரைகளாகும்.
புத்தரின் புனித உரைகள் பலவிதமாக மாற்றம் கொண்டு உலகில் பரவி உள்ளன. ஆகையால் புத்தரின் உண்மையான பொன் மொழிகளை அறிய ஆர்வம் கொள்வது அதிசயமில்லை.
அதற்குத் தீர்வு: புத்தர் பொன் மொழிகள் என்ற அரு. நாமநாதன் தொகுத்து வழங்கிய நூலாகும். அரு. நாமநாதன் ஒரு சிறந்த தமிழ் இலக்கியச் சிற்பி. காதல் என்ற பத்திரிகையை நடத்திய ஆசிரியர்.
இந்த புனித புத்த பூர்ணிமாவில் அவரது நூலிலிருந்து சில பொன் மொழிகளைப் பகிருந்து கொள்ளும் விதமாக கீழே அவரது பொன் மொழிகளை பதிவு செய்துள்ளேன்.
முழு பொன் மொழிகள் படிக்க மேலே உள்ள இணைப்பு உதவும்.
v இரும்பிலிருந்தே துரு தோன்றினாலும், இரும்பை அந்தத் துருவே அரித்துத் தின்று விடுகிறது.
அது போலவே, அறநெறியிலிருந்து தவறியவனை,
அவனுடைய செயல்களே நாளுக்கு நாள் அழிவை நோக்கி நடத்திச் செல்கின்றன. - தம்ம பதம் 240
v
தீய எண்ணத்துடன் ஒருவன் பேசினாலும், செயலில்
இறங்கினாலும், வண்டியை இழுக்கும் மாட்டின் காலை வண்டிச் சக்கரம்
பின்பற்றிச் செல்வது போல, துன்பம் அந்த மனிதனைப் பின்பற்றிச்
செல்கிறது. - தர்ம பதம் 1
v உலகத்தோடு நான் சச்சரவிடவில்லை; உலகந்தான் என்னோடு சச்சரவிடுகிறது - ஸம்யுக்த நிகாயம் - iii - 94
v நான் உங்களை விட்டுப் போன பிறகு, என்னால்
பயிற்றுவிக்கப்பட்ட போதனையும், சங்கமுமே உங்களுக்குக் குரு. - தீர்க்க நிகாயம்
- ii -154
v சூதாட்டத்தில், ஒருவன் வென்றால் ஓர்
எதிரியைப் பெறுகிறான்; தோற்றாலோ இழந்ததை நினைத்துப் புலம்புகிறான். தீர்க்க
நிகாயம் - iii
v திருப்தி தான் பெருஞ் செல்வம். - தம்ம பதம் -204.
v பாதையில் கொட்டிய குப்பைக் குவியலின் மத்தியிலே
இனிமை மயமான வாசனையுடன் தாமரைப்பூ வளர்ந்தோங்கி மகிழ்விக்கிறது. அதைப் போலவே குப்பைக் குவியலாக இருளில் நடமாடும்
ஜனக் கும்பலின் மத்தியிலே மெய்யறிவுச் சுடரான புத்தரின் சீடன் தனது அறிவினால் ஒளி வீசித்
திகழ்கிறான் - தம்ம பதம் - 58, 59.
v ஒருவன் எவ்வளவு அலங்காரமான ஆடை
அணிந்திருந்தாலும், அவன் அமைதியும், தெளிந்த சித்தமுடைய வாழ்க்கை வாழ்வானாகில்,
பண் படுத்தப்பட்டவனாயும் புலனடக்க முடியவனாகவும் வாழ்வானாகில், பெளத்த தர்ம
மார்க்கத்தில் நேர்மையாக நடப்பவனாயும், எல்லா உயிர்களிடத்திலும் ஹிம்சை உணர்ச்சி
நீங்கியவனாயும் இரும்பானேயாகில் அவனே அந்தணன், அவனே சமணன், அவனே பிக்ஷு. - தம்ம
பதம் 142
v மோக வெறி போன்ற நெருப்பு வேறேதுவுமில்லை; துவேஷத்தைப் போன்ற கவ்விப்பற்றும் முதலை வேறெதுவுமில்லை;
சித்த மயக்கத்தைப் போன்ற வலை வேறெதுவுமில்லை; ஆசைகளைப்
போன்ற ஆற்று வெள்ளம் வேறெதுவுமில்லை.
- தம்ம பதம் 251
v
சூரியன் பகலில் பிரகாசமாய் இருக்கிறான். சந்திரன்
இரவில் பிரகாசமாயிருக்கிறான். போர் வீரன் தன் யுத்தக் கவசங்களில்
பிரகாசமாயிருக்கிறான். அந்தணன் தன் தியானத்தில் பிரகாசமாயிருக்கிறான்.
ஆனால் விழிப்புற்ற புத்தரோ இரவு பகல் எந்நேரமும் அற்புதமான பிரகாசத்துடனிருக்கிறார்.
- தம்ம பதம் 387
v
பிக்ஷுக்களுக்கு உரியவை எட்டு: பிக்ஷா பாத்திரம்;
மூன்று வஸ்திரம்; இடையில் கட்டும் கச்சை;
கந்தைகளைத் தைப்பதற்குரிய ஊசி; க்ஷவரக் கத்தி;
நீர் வடிகட்டுகிற துணி -
v
பூக்களின் வாசனையானது காற்றை எதிர்த்துச் செல்வதில்லை. சந்தனக்
கட்டை, தகரப்பூ, மல்லிகை முதலியவற்றின்
வாசனகளும் காற்றின் எதிர்த் திசையில் செல்வதில்லை. ஆனால் நல்லவர்களின்
புகழ் மணமோ சூறைக் காற்றையும் எதிர்த்துச் செல்கிறது. நல்ல மனிதன்
எந்தத் திசையிலும் பரவி நிற்கிறான். - தம்ம பதம் - 54
v
மது போதையில் மூழ்குவதினால் இந்த ஆறுவிதக் கேடுகள் விளைகின்றன: செல்வம்
இழத்தல்; சச்சரவு அதிகரித்தல்; நோய்க்கு
இடமாதல்; நல்ல பெயர் அழிதல்; பண்பற்ற செயல்கள்;
மூளையின் சக்தி குன்றுதல். - தீர்க்க நிகாயம்
v
பிறப்புக்குக் காரணம் எதுவோ அதுவே இறப்பிற்கும் காரணமாகும். - தீர்க்க
நிகாயம் - ii - 154
v இந்த உடல் மண்பாண்டம் போல் உடையக் கூடியது என்பதை உணர்ந்து மனச் சித்தத்தை ஒரு கோட்டை போல் உறுதியாகக் கொண்டு ஒருவன் அறிவு என்னும் ஆயுதத்தால் மாரனை எதிர்த்து வெல்ல வேண்டும். வென்ற பிறகும் கூடக் கவனமாக இருந்து வென்றதைக் காக்க வேண்டும். ஓய்ந்து விடவே கூடாது. - தம்ம பதம் 40.
புத்தம் சரணம் கச்சாமி – நான் புத்தரை சரண் அடைகிறேன்.
தம்மம் சரணம் கச்சாமி – நான் தர்மத்தை சரண் அடைகிறேன்.
சங்கம் சரணம் கச்சாமி – நான் சங்கத்தை (புத்தசங்கத்தை – புத்த சன்யாசிகள் குழுவை) சரண் அடைகிறேன்.
இத்துடன் நான்காவதாக ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அது தான்:
சங்கரம் சரணம் கச்சாமி - சங்கரரை (அதாவது ஆதிசங்கரரை அல்லது சிவபெருமானை) சரண் அடைகிறேன்.
இது புத்தமத உரையில் இல்லாதது. ஆனால் பக்தி மார்க்க வழியில் புத்தரை வணங்குபவர்களால் ஓதப்படும் பிரார்த்தனை இது.
Comments