ஏழுமலையான் கோயில் லட்டு நெய்யில் கலப்படம்
கலப்படம் என்றால் சாதாரண கலப்படம் இல்லை. ஏழுமலையான் கோயில் லட்டுக்கு உபயோகிக்கும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருப்பதாக ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
குஜராத்தில் உள்ள NDDB CALF என்ற லபராட்டரியில் ஜூலை 12-ம் தேதியில் நெய் சாம்பில்கள்
பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கை ஜூலை
23-ம் தேதி தேவஸ்தானத்திற்கு அளிக்கப்பட்டது.
அந்த ஆய்வு அறிக்கையில் தான் திருப்பதி லட்டு தயாரிக்க உபயோகிக்கப்படும் நெய் கலப்படம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அனைத்து பாலாஜி பக்தர்களையும் உள்ளம் குமுற வைத்துள்ளது.
அந்த அறிக்கைகளின் இரு நகல் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் பதில் ஆகியவைகள் உங்கள் பார்வைக்கு மேலே பிரசுரமாகி உள்ளது.
லட்டு மற்றும் இதர தேவைகளுக்கு 5000 டன் நெய்யை திருப்பதி தேவஸ்தானம் வாங்க வேண்டும். ஒவ்வொரு ஆறு மாதமும் டெண்டர் மூலம் 1400 டன் நெய்யிலிருந்து 2000 டன் நெய் வரை வாங்குகிறார்கள். இதைக் கண்காணிக்க தேவஸ்தானத்தில் தனியாக ஒரு கமிட்டி இருக்கிறது. குறைந்த விலையில் விற்கும் வியாபாரிகள் தேர்வு செய்யப் படுகிறார்கள். இருப்பினும் தேவை ஏற்பட்டால் அதிக விலையில் விற்க டெண்டர் கொடுத்தவர்களிடம் நெய் வாங்குவது உண்டு.
இப்படி வாங்கும் நெய்யை திருப்பதி தேவஸ்தானமே தர நிர்ணய ஆய்வு மேற்கொள்ள வசதி இருக்கிறது என்று ஜெகன் மோஹனும், அந்த வசதி தேவஸ்தானத்தில் இல்லை என்று சந்திரபாபு நாயுடு அரசும் தெரிவிக்கிறது.
இந்த மிகவும் பயங்கரமான குற்றச் சாட்டை தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அவர் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டத்தில் 18-ம் தேதி செப்டம்ப்ர் புதன் கிழமை இந்த அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார். அதைச் செவியுற்ற ஹிந்துக்கள் கொதித்து எழுந்துள்ளார்கள்.
இதை ஜகன் மோஹன் ரெட்டி ஒரே அடியாக மறுத்துள்ளார். ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் பல முறைகேடுகள் பற்றி பலரும் புகார் கூறியபடி இருந்தார்கள் என்பது உண்மையாகும். மேலும் திருப்பதி லட்டின் தரம் மிகவும் குறைந்துள்ளது என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளதை ஜகன் மோஹன் அவர் ஆட்சியில் இருக்கும் பொழுது அலட்டியமாக ஒரு பொருட்டாகவே அதை எடுத்துக் கொள்ள வில்லை என்பதும் உண்மையாகும்.
அனைவரும் ஒன்றாக - இது ஒரு தெய்வ காரியம் - தெய்வக் குற்றத்திற்கு ஆளாகாமலும் காலம் கடத்தாமலும் இந்த லட்டு விவகாரத்திற்கு ஒரு நீண்ட கால நிரந்தர தீர்வு காண வேண்டும்.
மேலும் திருப்பதி தேவஸ்தானம் அரசாங்க தலையீடு இன்றி இயங்க ஆவன செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.
டெண்டர் முறையையும் மறுபரீசீலனை செய்ய வேண்டியதும் அவசியமாகிறது. விலையை வைத்து மட்டுமே நெய் விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தேர்வு செய்வது லட்டுவின் தரத்திற்கு உத்திரவாதமாகாது. அந்த நிருவனத்தின் நேர்மை, அவர்களின் திறமை, அவர்களின் கடந்த கால அனுபவம் ஆகியவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். டெண்டர் விடும் முன்பே நேர்மையற்றவர்களையும், அனுபவமற்றவர்களையும், ஹிந்து தெய்வங்களின் மேல் பக்தியற்றவர்களையும் ஒதிக்க வேண்டியது அவசியம்.
மேலும் பால் - நெய் ஆகியவைகளின் விலைகள் மாட்டுத் தீவனங்களின் விலையைப் பொறுத்து ஏற்ற இறக்கம் உண்டாகும். டெண்டர் காலமான ஆறுமாதமும் தீவங்களின் விலை ஒரே மாதிரி இருக்காது. ஆகையால் தரமான நெய் கிடைக்க ஒரு நேர்மையான திட்டம் செயல்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு நேர்மையான, பக்தி உள்ளம் கொண்ட குழுக்களை இதில் ஈடுபட வைத்து தரத்தை எப்போதும் ஊர்ஜிதம் செய்யும் முறையை ஏற்படுத்த வேண்டும்.
ஏழுமலையானின் லட்டு தரமாக தெய்வீக மணமாக பக்தர்களின் மனம் மகிழும் அளவில் கிடைக்க திருப்பதி தேவஸ்தானம் உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.
Comments