உச்ச நீதி மன்றத்தில் உச்ச கட்ட அதீத அநீதிச் சொற்பிரயோகங்கள்
இந்த சமயத்தில் இரண்டு குறட்பாக்களை குறிப்பிடுவது
சாலச் சிறந்ததாகப் படுகிறது.
அந்த இரு குறட்பாக்கள் இதோ உங்கள் கவனத்திற்கு:
1.
அதிகாரம் 10: இனியவை கூறல்
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
பொருள்: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல்
கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
2.
அதிகாரம் 13: அடக்கமுடைமை
குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
பொருள்: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும்
நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால்
சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
கடுமையான சொற்களைத் தவிர்த்து இனிய சொற்களைப் பேசுவதும்,
எதைக் காக்காவிடினும் நாவிலிருந்து உதிர்க்கும் சொற்களையாவது நிச்சயம் காக்க வேண்டும்
என்பதும் பொதுவாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதிலும் உயர் பதவியில் அமர்ந்து
நீதி வழங்கும் பொறுப்பில் உள்ள நீதிபதிகள் இவைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
அதைக் கடைப்பிடிக்கத் தவறினால் அவர்கள் வகிக்கும் பதவிக்கு இழுக்கு. அப்படிப்பட்டவர்களும்
அப் பதவியில் தொடர அனுமதிக்கக் கூடாது என்பது தான் வள்ளுவர் வகுத்த நீதி.
தெருவிலே சண்டை போடும் இருவர் ஒருவரை ஒருவர் திட்டிக்
கொள்வர். அப்படித் திட்டும் பொழுது, ஒருவன் அடுத்தவனை ‘நீ சொல்லும் விளக்கம் ஏற்புடையது
அன்று. அப்படி விளக்கம் சொல்லும் உன் தோலை உரிக்க வேண்டும். ஆமாம், உன் தோலை உரிக்க
வேண்டும்’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். இது தெருச் சண்டை. இதில் நாம் நியாயம்
– தர்மம் எல்லாம் எதிர்பார்ப்பது தவறு. ஆனால் இதைப் போன்ற சொற்பிரயோகங்கள் உச்ச நீதி
மன்ற வளாகத்தில் கனம் பொருந்திய நீதிபதி அய்யா அவர்களின் வாயிலிருந்து வந்தால் என்ன
செய்ய முடியும்?
உச்ச மன்ற நீதிபதியான அசானுடின் அமானுல்லா (Justice Ahsanuddin Amanullah) நீதி மன்ற வளாகத்தில் இந்த வார்த்தைகளை ஒரு முறை அல்ல – இரண்டு முறை சொல்லி உள்ளார்.
அதன் பின்னணியைப் பார்ப்போம்:
யோகா ராம் தேவ் குருவின் கம்பனியின் ஒரு மருந்து
‘கோவிட்டை குணப்படுத்தும்’ என்று விளம்பரம் செய்தது உச்ச நீதிமன்றத்தில் வழக்காகி அது
விசாரணையில் இருக்கிறது.
‘தவறான விளம்பரத்திற்கு மன்னிப்புக் கேட்கிறோம்’
என்று யோகா குரு ராம்தேவ் – அவரது கூட்டாளி பாலகிருஷ்ணன் இருவரும் உச்சநீதிமன்றத்தில்
எழுத்து மூலம் வாக்கு மூலம் கொடுத்ததை நிராகரித்து அதற்கு மிகவும் மூர்க்கமாக கோர்ட்
வளாகத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி சொன்ன சொற்கள் தான் மேலே குறிப்பிட்ட வாசகங்கள்.
2024 ஏப்ரல் 10-ல் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த கோவிட் தடுப்பு மருந்து
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிறுவப்பட்ட யோகா ராம்தேவின் திவ்யா பார்மசிதான் உற்பத்தி
செய்துள்ளது. அது கொடுத்த தவறான விளம்பரத்திற்கு உத்தரகாண்ட் மாநில லைசன்ஸ்
கொடுக்கும் அதிகார மையம் ‘ஏன் அந்த திவ்யா பார்மசியின் நிறுவனர்களின் மேல்
நடவடிக்கை எடுக்க வில்லை?’ என்று உச்ச நீதி மன்ற நீதிபதி அமாலுல்லா கேள்விக்குப் பதிலாக அந்த மையம் ‘பம்பாய் உயர் நீதிமன்றத்தின்
பிப்ரவரி 2019 உத்திரவினால் தங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பம்பாய்
உயர்நீதிமன்றத்தின் நேர்மையான கருத்தால் (bona fide
impression) தான் நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை’
என்று விளக்கம் அளித்தது.
இதைக் கேட்ட
உச்சமன்ற நீதிபதி அமாலுல்லா ‘நீங்கள் பயன்படுத்திய வார்த்தையான ‘bona fide’ என்பதற்கு கடுமையான ஆட்சேபனையைப் பதிவு செய்கிறோம். அந்த
வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். இதை
நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை கவனமாக இருக்கவும். ‘BONA
FIDE’ என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
நாங்கள் உங்களை இந்த சொற் பிரயோகத்திற்கு உங்கள் தோலை உரித்து விடப்போகிறோம் (We will be rip you apart). ஆமாம் உங்கள் தோலை உரித்திவிடுவோம்.’ – அந்த
அமானுல்லா என்ற உச்சமன்ற நீதிபதி ஒரு முறை அல்ல இரண்டு முறை நீதி மன்ற
வளாகத்திலேயே ‘தோலை உரித்துவிடுவோம்’ என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்துடன்
நில்லாமல், ‘மத்திய அரசு ஏன் பதஞ்சலி மேல் எந்தவிதமான நடவடிக்கையையும்
எடுக்கவில்லை. மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டதா?’ என்று கோபம் தணியாத நீதிபதி
கேள்வி எழுப்பினார்.
அதற்கு
மத்திய அரசு வக்கீல் ‘இது மாநில அரசு சம்பந்தப்பட்டது. மத்திய அரசுக்கு இதில்
தலையிட உரிமை இல்லை’ என்ற விளக்கத்திற்கு நீதிபதி எந்தவிதமான கருத்தையும்
தெரிவிக்கவில்லை.
இங்கு
பாபா ராம் தேவ் மருந்து விளம்பரம், அவரின் எழுத்துப் பூர்வமான மன்னிப்பு,
உத்திரகாண்ட் அரசின் நிலைப்பாடு ஆகியவைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட விரும்பவில்லை.
‘உச்ச
மன்ற நீதிபதியின் மிகவும் மூர்க்கமான சொற்களான – உன் தோலை உரித்துவிடுவோம் –
என்பது ஏற்புடையதா?’ என்பதைத் தான் விவாதப் பொருளாக மக்கள் மன்றத்தில் வைக்க
விழைகிறோம்.
பல
முந்தைய நீதிபதிகளும் தவறான சொற்பிரயோகங்களை கோர்ட்டில் மொழிந்து அவைகள்
எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல என்ற கருத்துக்கள் உச்ச நீதிமன்ற கோப்புகளில்
இடம் பெற்றுள்ளன.
இதைப்
படித்த சிலர் ‘இது ஏதோ ராம் தேவ் கம்பனியைப் பொறுத்து மட்டும் இல்லை. ஆயுர்வேதம்
யோகா – அதாவது மோடி அரசின் ஆயுஷ் திட்டத்தை எதிர்க்கும் சதி’ என்று கருதுகின்றனர்.
நீதிபதி
அமானுல்லாவின் இந்த சொற்பிரயோகம் பற்றி தலைமை நீதிபதியின் கருத்தை அறிவது அவசியம்.
ஆனால் அது நிகழுமா? என்று தெரியவில்லை.
உச்ச
மன்ற நீதிபதி அமானுல்லாவின் கவனத்திற்கு கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு வருகிறோம்:
இதே
போல் 24 – 10 – 2005 அன்று நீதிபதி பி என் அக்ரவால் பீஹார் கவர்னராக இருந்த மூத்த
அரசியல் வாதியான பூட்டா சிங்கை அவர் டெல்லியில் உள்ள பங்களாவை பலமுறை காலி
செய்யும் நோட்டீஸ் அளித்தும் அவைகளை எல்லாம் பொருட்டாக்காமல் காலி செய்யாமல்
இருந்த பூட்டா சிங்கின் செய்கையை ‘அந்த பங்களாவிலிருந்து அவரைத் தூக்கி எறியவும்’
என்று சொன்னதும் மஹா தவறு என்று கணிக்கப்படுகிறது.
இந்த
சம்பவங்களைக் குறித்து ஓய்வு பெற்ற ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி அமநுல்லாவின்
கவனத்திற்கு இரண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்களைப் படிக்கச் சொல்கிறார்.
அவைகள்:
1. கிருஷ்ண ஸ்வாமி & யுனியன் அப் இந்தியா (1992) வழக்கு 2. சி. ரவீந்தரன் ஐயர்
& நீதிபதி ஏ.எம். படாஜெர்ஜீ (1995)
முதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன
தீர்ப்பு:
சமூகத்தில்
இருக்கும் சதாரண மனிதனை விட மிக மிக உயர்ந்தவராக அரசியல் சாசன சட்டத்தைக் காக்கும்
கோர்ட் ஜட்ஜ்களாக உள்ளவர்கள் இருக்க வேண்டும். கோர்ட் வளாகத்திலாகட்டும்,
வெளியிலாகட்டும் அந்த ஜட்ஜ்களின் நடவடிக்கைகள் மிகவும் உயர்ந்து இருக்க வேண்டும்.
இது தான் ஜட்ஜகள் கடைப்பிடிக்க வேண்டிய எழுதப்படாத விதிமுறைகளாகும். ஆகையால்
ஜட்ஜகளின் நடவடிக்கைகள் அவர்களின் குணம், நேர்மை, விருப்பு வெறுப்பு ஆகியவைகள்
மக்களின் நன் மதிப்பைப் பெறும் அளவில் இருக்க வேண்டும். இதற்கு எதிர்மாறானவைகளை
அவர்கள் தவிர்க்க வேண்டியது மிக அவசியம். மற்றவர்களுக்கு வழி காட்டும் நபராக
அவர்கள் திகழவேண்டும்.
நீதிபதி
பதவியில் இருப்பவர்கள் வெறும் மண் பொம்மைகள் போன்று – சாதாரண மனிதர்களிடம்
இருக்கும் ஆசா பாசங்கள், மிகவும் பலவீனமான மனம் கொண்டு தவறிழைக்கும் குணம்
கொண்டவர்கள் போன்று – இருக்கக் கூடாது. மற்ற துறைகளில் இப்படிப்பட்டவர்கள்
இருப்பினும், நீதித் துறையில் கூடவே கூடாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,
நீதிபதிகளின் நடவடிக்கைகள் பொதுமக்களின் சுதந்திரம், நீதி, மக்களாட்சி ஆகியவைகளைக்
காக்கும் நிலையில் சட்டத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் நிலையில் நடக்க
வேண்டும்.
இரண்டாவது வழக்கில் – மூன்று வருடங்களுக்குப்
பிறகு நடந்த வழக்கு – அதே உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள்:
பொதுமக்களின்
நம்பிக்கையை பெறுவது நீதி பரிபாலனத்தில் முக்கிய அம்சமாகும். ஆகையால் சமூகம் ஒரு
நீதிபதி மிகவும் நேர்மையானவராகவும், சிறந்த குணாலராகவும், எந்த வகையிலும் ஊழல்
செய்யாத உத்தமராகவும், எந்தவிதமான நேர்மையற்ற நிர்பந்தங்களுக்கு ஆளாகாமல் தீர்ப்பு
வழங்கும் தீரனாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தவிதமான
குற்றங்களுக்கும் ஆளாகாமல் ஒரு நேர்மையான நீதிபதியாகச் செயல்படவேண்டும். பொது
மக்களின் நற்பெயரைப் பெறும் அளவில் நேர்மையாக இருக்க வேண்டும். இதன் மூலம் தன்
நேர்மையையும், தான் பதவி வகுக்கும் மன்றத்தின் நேர்மையையும் நிலை
நாட்டியவராகிறார்.’
இந்த குண நலன்கள் நீதிபதி அமநுல்லாவிடம் உள்ளனவா என்பதை சரிபார்ப்பது உச்ச மன்ற தலைமை
நீதிபதியின் கடமையாகிறது.
காலம் தான் இதற்கு ஒரு நல்ல தீர்ப்பும்,
வழிகாட்டலும் ஏற்பட வழிவகுக்க வேண்டும்.
ஒரு கொசுறுத் தகவல்:
பதஞ்சலி அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு, சட்டங்களை மீறியதற்காக என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சந்தித்து
வருகிறது.
மருந்து விற்பனையை ஊக்கு விக்க வெளிநாட்டு நிறுவங்கள்
தங்கள் விளம்பரங்களில் கூறாததை ஒன்றும் பதஞ்சலி கூறிவிடவில்லை. இந்தப் பதஞ்சலியின்
கொவிட் வியாதியைக் குணப்படுத்தும் தன்மை குறித்த முடிவான பரிசோதனை இன்னும் வெளிவரவில்லை.
இப்போதைய நிலையில் அந்த பதஞ்சலி மருந்தின் கோவிட்டைக் குணப்படுத்தும் திறனின் நம்பகத்தன்மை
கேள்விக் குறியது தான்.
இந்த சமயத்தில் மேலை நாட்டு மருந்து நிறுவங்களின்
நம்பகத்தன்மை இல்லா விளம்பரங்களின் பட்டியல் இதோ:
1. விளம்பரங்களில்
தவறுகள் வருகிறாற்போல fair
& lovely விளம்பரத்தில்
உங்கள் தோல் வெளுக்க எங்கள் கிரீம் பயன்படுத்திப் பயன்பெறுங்கள். வெளுத்தவன் / வள் யாருமே இல்லை.
இது தவறு இல்லையா?
2. இதை குடித்தால் உயரமாவீர்கள்,
ஓடுவீர்கள்,
உடல் இளைக்கும், இந்த சோப்பை பயன்படுத்தினால் சரும நோய் வராது, துணி வெளுக்கும், இந்த சானிட்டரி நாப்கினை பயன்படுத்தினால் உடற்சோர்வே
இருக்காது என்று என்ன சொன்னாலும் அதை
பற்றி வழக்கு இல்லை. காரணம் யாரும் வழக்கு
தொடுக்கவில்லை.
3. தடுப்பூசி பற்றி
தவறான தகவல்கள் பரப்பிய அரசியல்வாதிகள் / மத போதகர்கள் மீது இன்றுவரை நடவடிக்கை
இல்லை.
ஆனால், பதஞ்சலி மீது
நடவடிக்கை.
ஆண்டுக்கு ஆண்டு ஏற வேண்டிய லாபம் குறைந்தால் விடுவானா மேலை நாட்டு மருந்து வியாபாரிகள்?
அவர்களது கொள்கை இரண்டே இரண்டுதான்.
ஒன்று நான் வெல்ல வேண்டும் இல்லையேல் நீ தோற்கவேண்டும்.
அதற்கு இங்குள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் துணைபோகி
உள்ளார்கள்.
அவர்கள் மேல் சுயோ மோட்டோ வழக்குகளை உச்ச நீதி மன்றம் போடுமா? – என்று பொதுமக்கள் கேட்பதிலும் ஒரு ஞாயம் இருக்கிறது.
Comments