கண்ணகியின் மதுரை எரித்த பிரம்மாண்ட பிழை
முன்னுரை: இந்த நீண்ட பதிவு எழுத பல உதவினாலும்,
சிலம்புச் செல்வரின் சிலப்பதிகார ஆய்வுரையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அந்த
ஆய்வுரையைப் படிக்க விழைபவர்கள் மேலே உள்ள தலிப்பினைச் சொடுக்கிப் படிக்கவும்.
கண்ணகியின்
கதையை இளங்கோவடிகள் என்பவர் சிலப்பதிகாரம் என்று தலைப்பிட்டு இயற்றிய இயல் இசை நாடகம்
என்ற முத்தமிழும் கொண்ட ஐபெரும் காப்பியங்களில் இது ஒன்றாகும். (மற்றவை – மணிமேகலை,
சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி). இந்நூலில் இயல் இசை நாடகம் ஆகியவைகள் இருப்பதால்,
சிலப்பதிகாரம் நாடகக் காப்பிய மென்றும் புகழப்படுகிறது. அத்துடன் உரைப் பாட்டும் இசைப்பாட்டும்
இடையிடையே இயற்றப்பட்டுள்ளதால், சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்னும்
பெருமையையும் உடைத்து.
இளங்கோவடிகள்
ஒரு சமணமத்ததுறவி. அவர் துறவி ஆனதே தம் அண்ணாவான சேரன் செங்குட்டுவனுக்கு அரச பதவி
கிடைக்காது – அது இளைவனான இளங்கோவிற்கே கிடைக்கும் என்று நிமித்தக்காரர் சொல்லவும்
அதைப் பொய்யாக்க துறவு பூண்டு, தியாகச் செம்மலாகி, இளங்கோவடிகளானார்.
கண்ணகியின்
கதையுடன் தொடர்புடையது மாதவியின் மகளான மணிமேகலையின் கதையாகும். அதையும் இளங்கோவடிகளே
இயற்ற நினைத்த தருணத்தில் ‘அந்த மணிமேகலையின் கதையினை நான் இயற்றி முடித்து விட்டேன்’
என்று மதுரைத் தமிழ் ஆசிரியர் கூலவாணிகம் சாத்தனார் கூறக் கேட்டு, மணிமேகலைக் காப்பியத்தை
இயற்றாது விட்டார் இளங்கோவடிகள்.
இரண்டு
காப்பியங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள். அந்த தொடர்பினால், சிலப்பதிகாரம் – மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களையும் ஒரே தாயின் வயிற்றில்
பிறந்த இரட்டையர்கள் என்று மதிப்பீடு செய்பவர்களும் உண்டு.
சிலப்பதிகாரம்
மூன்று உண்மைகளை உணர்த்தும் காவியம் என்பார்கள். அரசியலில் அறம் தவறியர்கள் யமனுக்கு
இறையாவார்கள், ஊழ்வினை – கடந்தகால பிழைகள் – விடாது தொடர்ந்து தண்டிக்கும், கற்புடைய
பெண்டிரை உயர்ந்தவர்கள் போற்றுவர் என்பதை இப்படி இளங்கோ வர்ணிக்கிறார்:
1. |
அரைசியல்
பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். |
2. |
ஊழ்வினை உருத்து
வந்து ஊட்டும். |
3. |
உரைசால்
பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். |
இந்த
முன்னுரையுடன் கண்ணகி மதுரையை எரித்த கதைக்குள் நுழைவோம்.
கண்ணகி
என்பவள் கோவலனின் மனைவி. இருவர்களின் பெற்றோர்களுமே வாணிபம் செய்து பொருள் ஈட்டிய பெரும்
தனவந்தர்கள். கண்ணகியின் தந்தை மாநாயகன் – கோவலன் தந்தை மாசாத்துவான் இருவரும் சோழ
நாட்டின் காவிரிப்பூம்பட்டினத்தில் பெரும்
வணிகர்கள். கோவலன் – கண்ணகி ஆகிய இருவருக்கும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து திருமணம்
வைதீக முறைப்படி நடந்தேறியது. அப்போது கோவலனுக்கு வயது 16. கண்ணகிக்கு வயது 12.
திருமணத்தின் போது மணமக்கள் – அதுவும் குறிப்பாக மணமகள் கண்ணகி - தீயை
வலம் வருவதை இளங்கோவடிகள் ‘அதைக் கண்டவர்கள் முற்பிறப்பில் செய்த தவம் தான் என்னே!’
என்று வியப்பதில் கண்ணகி பிறகு ‘கற்புக் கனலி’ யாக மாறியதை நினைவு கூர்ந்து, தீயே தீயை
வலம் வருகிறது!’ என்ற நினைப்பினால் ஏற்பட்ட தாக்கத்தால் எழுந்த சொல்லாடலாகவே நாம் கருத
வேண்டும்.
கோவலன்
– கண்ணகியின் இல் வாழ்க்கை இன்பமாக சில ஆண்டுகள் கழிந்தன. காமனும் – ரதி போல் இன்பமாக
அந்த அவர்களது இல் வாழ்க்கை அமைந்துள்ளது. மேலும் கணவன் – மனைவி ஆகியவர்களின் அணிந்திருந்த
மாலைகள் இரண்டும், இரண்டு பாம்புகள் ஒன்றையொன்று தழுவி இன்பம் அனுபவிப்பதைப் போல் களித்தார்கள்
என்றும் கவி விவரிக்கிறார். ஏன் இதை இங்கு
குறிப்பிடுகிறோம் என்றால், சில பண்டிதர்கள் ‘கண்ணகி – கோவலன் உடல் உறவு குறை பட்டதால்
தான் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியிடம் அடைக்கலமானான் என்ற கணிப்பு தவறு என்பதைச்
சுட்டிக் காட்டவே !.
அது மட்டுமல்ல.
அந்த தம்பதிகளை அவர்களது பெற்றோர்கள் ஏழு மாடிக் கட்டிடத்தில் நான்காம் அடுக்கில் குடி
அமர்த்தினர். அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் உள்ள வேயா மாடமோ கணவன்-மனைவியற்களுக்கு
இன்பமளிக்கும் சிறப்பு இடமாகும்.
இளங்கோவடிகள்
‘காதல் வயப்பட தம்பதியர்களுக்கு காமதேவனும் அங்கே குற்றேவல் செய்யக் காத்திருந்தான்’
என்று தமது காவித் துணிக்கு மதிப்பளித்து பள்ளியறைக் காட்சிகளை அதிகம் விவரிப்பதைத்
தவிர்த்து விட்டார். ஆனால் கோவலன் – கண்ணகியின் இல்லற வாழ்க்கை அந்த சில காலத்தில்
ஒரு குறையுமின்றி நடந்துள்ளது என்பது தான் சிலம்புக் கவியின் தீர்ப்பாகும்.
இருப்பினும்
கோவலன் அவனது செல்வச் செழிப்பின் காரணமாக ஆடல் பாடல்களில் மோகம் கொண்டவன்.
மாதவி
முன் ஜென்மத்தில் ஊர்வசியாக இருந்தவள். அவள் இந்திர சபையில் அகத்தியர் முன்னிநிலையில்
சதிர் ஆடும் போது அந்த அரங்கில் இருந்த இந்திரனின் மகனான சயந்தன் ஊர்வசியின் அழகில்
மயங்க ஊர்வசியும் அதனால் பாதிக்கப்பட அவளது ஆடல் நிலை தவறியதை அறிந்த அகத்தியர் ஊர்வசியை
‘நீ பூமியில் கூத்தாடும் மங்கையாகப் பிறப்பாயாக’ என்றும், சயந்தனை ‘விந்திய மலையில்
மூங்கிலாகப் பிறப்பாய்’ என்றும் சாபமிட அப்படிப் பிறந்தவர் தான் மாதவி.
அந்த
மூங்கில் தான் நடனமாடப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய அம்சமான நட்டுவர்கள் கையில்
ஆடலை நிகழ்த்தப் பயன்படும் தலைக்கோலாகும். அந்த தலைக்கோல் தான் சயந்தனான மூங்கிலிருந்து
உருவானதாகும். மாதவியின் அவளது 12-வது வயதில் ஆடல், பாடல், அழகு ஆகியவைகளில் சிறந்த
பதுமை போன்றவளின் முதல் அரங்கேற்றம் சோழ அரசனின் முன்னிலையில் மிகவும் சிறப்பான முறையில்
ஏற்பாடு செய்யப்பட்டதை அற்புதமாக விவரிக்கிறார் கவி இளங்கோ. இந்த அரங்கேற்றம் பூம்புகாரில்
நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சயந்தனின் மூங்கில் தலைக்கோல் தான் பயன்படுத்தப்பட்டது.
மாதவியின்
நடன நிகழ்ச்சியின் முடிவில் சோழ அரசன் 1008 கழஞ்சு பொன் மதிப்புடைய மாலை ஒன்றையும், ‘தலைக்கோல் அரிவை’ – ஆடற்கலையில்
தேர்ந்தவள்- என்ற பட்டத்தையும் வழங்கி மாதாவியைக்
கெளரவிக்கிறான்.
இந்த
நடனத்தைப் பார்த்த கோவலன் - மாதவியின் நடனம், பாட்டு, அவள் அழகு ஆகியவைகளால் ஈர்க்கப்பட்டான்.
மாதவியை அடைய விரும்பினான்.
மாதவி
தனக்கு மன்னன் அளித்த பரிசான பச்சை மாலையை
தன் தோழியான கூனி என்பவளிடம் கொடுத்து 1008 கழஞ்சி பொன்னுக்கு விற்கச் சொன்னாள். அந்த
மாலையை அந்த விலை கொடுத்து வாங்குபவர்களுக்கு மாதவியுடன் ஒர் இரவு கழிக்கலாம்.
பெரும்
தனவந்தனான கோவலன் அந்த மாலையை விலை கொடுத்து
வாங்கி மாதவியின் இல்லம் செல்கிறான். மாதவியிடம் ஏனோ காதல் கொண்டு அவள் வீட்டிலேயே
தங்கி விட்டான். மாதவியும் தன் குலத்தொழுலுக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டு, கோவலனுடன்
கல்யாணம் ஆகாத கணவன்-மனைவியாகவே குடும்பம் நடத்தினார்கள். மாதவியும் கோவலனிடம் பணத்தையும்,
நகைகளையும் பெற்றாள் என்பது ஒரு உண்மையாகும். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கவும்,
அதற்கு தனது குல தெய்வமான மணிமேகல் என்ற பெயர் சூட்ட கோவலன் சொல்ல அதை மாதவியும் முழு
மனதுடன் ஏற்றாள். அந்தக் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்
என்பதால் அவைகளுக்கான செலவுகளை கோவலன் தான் ஏற்றான் என்பதை அறியலாம். இதற்கெல்லாம்
கண்ணகியின் நகைகள் தான் கோவலனுக்கு உதவியது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். கண்ணகி
கோவலனுக்கு புத்தி சொன்னதாகவோ, தன் நகைகளைக் கொடுப்பதில் தயக்கம் காட்டியதாகவோ தெரியவில்லை.
கணவனின் சந்தோஷமே தன் குறிக்கோள் என்ற மனநிலையில் கண்ணகி இருந்ததாகவே தெரிகிறது.
இந்த
மாதிரியான செய்திகளையும், கோவலனின் பல திறமைகளையும் மதுரைக்கு கண்ணகியுடன் கோவலன் கவுந்தியடிகள்
என்ற சமணத்துறவி துணைக்கு வரும் அந்த கால கட்த்தில் தான் கோவலனின் நெடுநாளைய நண்பனான
மாடலன் என்ற அந்தணன் வாயிலாக கவி இளங்கோ தெரிவிக்கிறார். கோவலனின் நல்ல உள்ளம், வீரம்,
தியாக சிந்தனை ஆகியவைகள் மாடலனின் உரையில் வெளிப்படுகின்றன.
அதே போல்
கண்ணகி மதுரையை எரித்தும் தன் கோபம் தணியாது எரிமலை போல் மன நிலையில் இருந்தாள். அவளது
கோபம் தணிக்க பலவிதமான செய்திகளை பாண்டிய நாட்டின் தலைநகரைக் காக்கும் பாண்டிய மன்னர்களின்
குலதெய்வமான மதுராபதித் தெய்வம் கோவலனின் மறு பிறப்பையும் தெரிவிக்கிறது.
‘கலிங்கம்
என்னும் நாட்டில் சிங்கபுர ஊரை வசுவும், கபிலபுர ஊரை குமரன் என்பவனும் ஆள, இருவரும்
ஒன்றுவிட்ட சகோதரர்களாக இருப்பினும் பகையாளிகளானார்கள். இந்த சமயத்தில் செல்வம் தேடும்
ஆசையில், சிங்கபுரத்து சங்கமன் தன் மனைவியான நீலியுடன் கபிலபுரத்தில் கடைவீதியில் நகைகளை
விற்றுக் கொண்டிருந்தான். அப்போது கபிலபுரத்து பரதன் ‘சங்கமன் ஒற்றன்’ என்று குற்றம்
சாட்டி, சங்கமனுக்கு மரண தண்டனை கிடைக்கச் செய்தான். தன் கணவன் கொலையானதை அறிந்த நீலி
தன் ஊரான சிங்கபுரத்திற்குச் சென்று அங்குள்ள வீதிகளில் தன் கணவன் அநியாயமாகக் கொலை
யுண்டதை மக்களுக்கு அறிவித்து, ’14 நாட்கள்
சென்ற பிறகு, தன் கணவனின் ஆவியோடு தான் ஐக்கியமாவேன்’ என்று மலை உச்சியிலிருந்து கூறிய
படி மலையுச்சியிலிருந்து உருண்டு உயிர் இழந்தாள். அந்த நீலியின் சாபத்தால் பிறந்தவன்
தான் இப்பிறப்பின் உன் கணவனான கோவலன்’ என்ற விவரம் அப்போது தான் கண்ணகிக்கும் தெரிகிறது.
மாதவியின்
தாய் பெயர் சித்திராபதி என்பது சிலப்பதிகாரத்தில் சொல்லப்படவில்லை. மணிமேகலைக் காவியத்திலிருந்து
தான் அறியவருகிறது. சித்திராபதி தான் மாதவியை இந்த இழு தொழிலில் தொடர வேண்டும் என்று
விருப்பம் கொண்டவள்.
ஒரு நாள்
கடற்கரையில் கோவலனும், மாதவியும் யாழ் இசைத்து மகிழ்ந்து இருக்க, கோவலன் வேறு பெண்ணை
நினைத்து இசைக்கிறான் என்று குற்றம் சொல்ல, பதிலுக்கு மாதவியும் தானும் மற்றொருவன் மேல் காதல் கொண்டதாக பொருள் படும் கானல்
வரிப்பட்டை யாழிலே இசைக்க இந்த விளையாட்டு வினையாகி ‘என்ன இருந்தாலும், மாதவி பரத்தை
தானே!’ என்ற நினைப்பு மேலோங்க மாதவியை விட்டுப் பிரிந்து தன் மனைவி கண்ணகியை நினைத்து
அவளைப் பார்க்கும் அவா தூண்ட சென்றான்.
மாதவி
கோவலனின் பிரிவு பொறுக்க முடியாமல், தன் விரக தாபத்தை ஒரு மடல் எழுதி அதை வயந்தமாலை
என்பவளிடம் கொடுக்க, அந்த மடலை வாங்க மறுத்து, ‘இதெல்லாம் பரத்தையான மாதவியின் நடிப்பு.
அவள் ஒரு நடனக்காரிதானே !’ என்று ஏளனமாக் கூறி வயந்தமாலையை அனுப்பி வைத்தான் கோவலன்.
இந்த
கோவலனின் வெறுப்பிற்குப் பிறகும், ‘இன்று மாலை வராதவர், நாளை காலையில் என்னை வந்தடைவார்’ என்ற எதிர்பார்ப்பு
பொய்த்துப் போய் விட்டது.
கோவலனைக்
கண்ட கண்ணகி தன் கணவன் மீண்டும் பொருளுக்கு வந்திருக்கிறான் என்று தவறாகக் கருதி ‘நீங்கள்
கவலைப் படவேண்டாம், இதோ என் காற்சிலப்புகள் இரண்டுள; கொண்டு செல்லுங்கள்’ என்ற தன்
மனைவி சொல் கேட்டு, ‘வஞ்ச நெஞ்சப் பாரத்தையுடன் கூடி, கைப்பொருளை யெல்லாம் இழந்த என்
நிலையை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்’ என்று விளக்கி, இனி பூம்புகாரை விட்டு மதுரை மா
நகர் சென்று வாணிபஞ்செய்து வாழலாம். வா’ என்றதற்கு கண்ணகி உடனே ஒத்துக்கொண்டாள்.
அவர்களும்
பொழுது புலர்வதற்குள் பூம்புகாரை விட்டு மதுரை நோக்கிப் பயணமாகினர். வரும் வழியில்
கவுந்தி அடிகள் என்ற சமண பெண் துறவியின் துணை கொண்டு பயணமாகி அவர்களுக்கு மாங்காட்டு
மறையவன் என்னும் வைணவ அந்தணன் மதுரைக்கு வழி சொல்ல, அவர்கள் மதுரைப் பயணம் தொடர்ந்தது.
இதை அறிந்த
மாதவி அதிர்ச்சி அடைந்தாள். இருப்பினும் நம்பிக்கை இழக்காமல் மீண்டும் ஒரு மடல் கோவலனுக்கு
எழுதி அதை கோசிகமாணி என்ற அந்தணனனிடம் கொடுத்து, ‘எப்படியேனும் கோவலனைக் கண்டு பிடித்து
அந்த மடலைக் கொடுத்து அவரை அழைத்துவாரும்’ என்று வேண்டினாள். கோசிகனும் பல நாட்கள்
பயணம் செய்து, கோவலனைக் கண்டு பிடித்து மாதவியின் மடலைக் கொடுக்க அதில் உள்ள் வாசகங்கள்
மாதவியின் மேல் உள்ள கெட்ட எண்ணங்கள் எல்லாம் தவிடு பொடியாகி விட்டன. கோவலன் கோசிகனிடம்
‘மாதவி ஒரு தீங்கும் செய்யாதவள். என் இன்னல்களுக்கெல்லாம் என் தீவினை தான் காரணம்’
என்று கூறி இதை மாதவியிடம் தெரிவிக்கும் படி கோசிகனிடம் சொன்னான்.
இந்த
மன மாற்றத்திற்கு மாதவியின் மடல் வாசகம் தான் காரணம். அப்படி என்ன தான் மாதவி அந்த
மடலில் எழுதியுள்ளாள் என்பதை அறிய ஆவல் இருப்பது சகஜம்.
மாதவியின்
மடல் வாசகங்கள்: ‘பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்று, அவர்களுக்குச் செய்ய வேண்டிய
கடமைகளைச் செய்யாது சென்றீரே ! மனைவியுடன் எப்படி உங்களுக்கு நாட்டை விட்டுச் செல்ல
மனம் வந்தது? அதுவும் ஒருவருக்கும் தெரியாமல் நள்ளிரவில் சென்றீரே ! இத்தகைய துன்பங்கள்
தாங்கள் அடைவதற்கு நான் செய்த தவறு தான் யாதோ? அதை அறிய முடியாமல் என் நெஞ்சம் தவிக்கின்றதே.
மெய்யைப் போற்றும் உத்தமரே ! உம்மைப் போற்றுகிறேன். எனது நெஞ்சத்துயரை நீக்குவீராக!’
இந்த
மாதவியின் மடலை அப்படியே தன் தந்தைக்குக் காட்டச் சொல்கிறான் கோவலன். இதன் மூலம் மாதவியின்
மடலின் சிறப்பு வெளிப்படுகிறது.
மூவரும்
மதுரைக் கோட்டைக்கு வந்துவிட்டனர். பாண்டிய நாட்டின் வானளாவிய கோட்டையின் மீது பறக்கும்
மீன் கொடியானது ‘கண்ணகி – கோவலன் தம்பதிகளே ! மதுரைக்கு வராதீர்!’ என்று எச்சரிக்கை
விடுத்து அக்கொடி பறப்பதாக கவி வர்ணிக்கிறார். இது ‘நான் தீக்கிரையாகப் போகிறேன். அது
நடக்காமல் இருக்க, இருவரும் போய் விடுங்கள்’ என்று கொடி வேண்டுவது போல் அமைந்துள்ளது.
மதுரையில்
தாங்கள் தங்குவதற்கு வீடு தேடும் தருணத்தில் கோவலனின் நெடுநாளைய நண்பன் மாடலன் என்னும்
அந்தணனைச் சந்திக்கிறான். மாடலன் பழைய பல சம்பவங்களை விரிவாக சொல்கிறான். அதில் கோவலன்
செய்த அறம் பல படிப்போர்களுக்குத் தெரியும் வண்ணம் கவி பாடலாகப் பாடி விளக்குகிறார்.
கோவலன் மதுரை பொற்கொல்லன் மூலம் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு பாண்டிய மன்னனால் கொலை
செய்யப்பட விருக்கும் நிகழ்வுக்கு முன் கவி கோவலனின் நல்ல குணநலன்களைக் கூறுகிறார்.
ஏனென்றால் அப்போது தான் வாசகர்கள் கோவலனின் அற முகத்தை அறிந்து, அவன் கொலை உண்ட போது
வாசகர்கள் கண்ணீர் விடச் செய்ய முடியும் என்பதால் கவிக்கு எழுந்த யுத்தியாகும் இது.
மாடலனின்
சந்திப்பிற்குப் பிறகு ஆயர் குல மாது மாதரி கவுந்தியடிகளைச் சந்திக்க, மாதரியின் வீட்டில்
அவர்களைப் பாதுகாப்பாக இருக்கச் செய்து கவுந்தியடிகள் விடைபெறுகிறார். மாதரியும் அவள்
மகள் ஐயையும் கோவலன் – கண்ணகிக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, கண்ணகி பல நாட்களுக்குப்
பிறகு முதன் முறையாக சமைத்து உணவு பரிமாறி அவர்கள் களைப்பு நீங்கி சந்தோஷமாயினர்.
அந்த
நேரத்தில் கோவலன் தன் தவறுகளை மீண்டும் மீண்டும் சொல்லி வருந்தினான். அதற்குக் கற்புகரசியான
கண்ணகியின் பதில் அற்புதமான ஒன்றாகும்: ‘என் மண வாழ்க்கையில் அறவோர்க்கு விருந்தளித்தல்,
அந்தணர்களைப் பேணுதல், துறவோரை உபசரித்தல் ஆகியவைகளை ஆற்றாது இல்வாழ்க்கையை இழந்தேன்
நான்’
‘இதை
எல்லாம் விட நமது பெற்றோர்கள் தான் என் துயரை அறிந்து வருந்தினர். குலத்திற்கு ஒவ்வாத
ஒழுக்கக் கேடுகளை தாங்கள் புரிந்தீர்கள். நான் பெண்களுக்கேயுரிய கற்பு நெறியைக் கடைப்பிடித்து,
‘கூட வருக’ என்று சொன்னவுடன் மதுரைக்கு உங்களுடன் புறப்பட்டு விட்டேன்’ என்று கண்ணகி
விளக்கினாள்.
கோவலன்
இவைகளைக் கேட்டு வருந்தி, ‘இனி புதுவாழ்வைத் தொடங்குவோம். உன் ஒரு சிலம்பை விற்று,
அந்த தனத்தை மூலதனமாக வைத்து தொலைத்த செல்வத்தையும், இன்பத்தையும் பெறுவோம்’ என்று
கண்ணகிக்கு ஆறுதல் சொன்னான். அவனுக்கு தாம்பூலம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினாள்
கண்ணகி.
‘கற்பின்
கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடிச்
சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய்
மாறிவருவன்;
மயங்கா தொழிக’ – என்று ஒற்றைச் சிலம்பை எடுத்துக் கொண்டு அதை விற்கச் சென்ற கோவலன்
அரசவை பொற்கொல்லனின் சூழ்ச்சியால் மதுரை அரசன் ஆணையால் கொலை உண்டான்.
மதுரை
அரசி கோப்பெருந்தேவியின் சிலம்பைக்களவாடியவன் அந்த பொற்கொல்லன். கோவலனின் சிலம்பைக்
கண்டவுடன் ‘இவனைக் கள்வனாக்கி நான் தப்பிப்பேன்’ என்று சூழ்ச்சி செய்து, அரண்மனைக்குச்
சென்றான்.
அப்போது
கோப்பெருந்தேவி தமது கணவர் நெடுஞ்செழியன் நடனமாடும் கணிகையர்களிடம் காமம் கொண்டு விட்டார்
என்று நினைத்து அரசவையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டாள். உடனே அரசனும் அரசவையிலிருந்து
அரசியைச் சமாதானம் செய்ய விரைந்து செல்லும் போது அரச பொற்கொல்லர் ‘மன்னா! கன்னம் வைக்காமல்,
கவைக்கோல் இல்லாமலும், அனைவரையும் உறங்க வைக்கும் மந்திரம் ஒன்றையே துணக்கொண்டு, அரசியின்
சிலம்பினைத் திருடிய கள்வன் என் எளிய குடிசையில் உள்ளான்’ என்று சொன்னான்.
அரசியின்
கோபத்தைத் தீர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் அரசன் ‘சிலம்பே இதற்கு உதவும்’ என்று
நினைத்து, இரு கொலையாளிகளைக் கூப்பிட்டு ‘என் தேவியின் காற்சிலம்பு
பொற்கொல்லனிடம் பிடி பட்ட கள்வனின் கையகத்தே இருந்தால், அவனைக் கொன்று விட்டு, அச்
சிலம்பினை இங்கே கொண்டு வருக!’ என்று உத்திரவு பிறப்பித்தான்.
அந்த
இரு கொலைஞர்களும் கொடு வாள்களைக் கைகளில் ஏந்திக் கொண்டு அரச பொற்கொல்லரின் குடிசையில்
ஒற்றைச் சிலம்போடு காத்திருக்கும் கோவலனைப் பார்த்தனர். கோவலன் கையிலிருந்த சிலம்பு
அரசியுடையது என்று துணிந்து பொய் சொன்னான் பொற்கொல்லன். ஒரு அரச காவலன் ‘கோவலன் உத்தமனுக்குரிய
இலக்கணங்களைக் கொண்டுள்ளான். இவன் கொலப்படு மகனல்லன்’ என்று சந்தேகப்பட்டான். ஆனால்
சில கள்வர்கள் நல்லவர்கள் போல் உள்ள கயவர்கள் என்று பொற்கொல்லன் விவரித்தான். இதை எல்லாம்
பொறுமை இழந்த இன்னொரு காவலன் தன் கையிலிருந்த கொடு வாளால் கோவலனின் தலையைக் கொய்து,
கொன்று விட்டான்.
இதை இளங்கோ
‘குருதி
கொப்பளிக்க
மண்ணக
மடந்தை வாந்துயர் கூரக்
காவலன்
செங்கோல் வளைய விழ்ந்தனன்
கோவலன்
பண்டை ஊழ்வினை உருத்தென்’ என்று இந்த நிகழ்வை வர்ணிக்கிறார்.
இதன்
பொருள்: கோவலன் உடம்பின் குருதி கொப்பளித்து ஓட, நில மங்கை துயரமடைய, அரசனின் செங்கோல்
வளைய, கோவலன் முன்பு செய்த ஊழ்வினையின் காரணத்தால் வெட்டுண்டு வீழ்ந்தான்
கோவலன்
கொலையுண்ட சமயத்தில் கண்ணகி ஆயர்சேரியில் உள்ள மாதரியின் வீட்டில் இருந்தாள். அப்போது
அந்த ஆயர்சேரியைச் சேர்ந்த இடைக்குலப் பெண் இந்த அவலச் செய்தியை சொல்லாமல் சொன்னாள்
என்றே கவி தெரியப்படுத்துகிறார்.
நாடு
விட்டு நாடு வந்து ஆறுதல் கூற ஆளில்லாமல் இப்போது தன் கணவன் கள்வன் என்று கூறிக் கொலையுண்டதை
அறிந்த கண்ணகி துக்கம் மேலிட கதறினாள்.
தன் கணவன்
கள்வன் அல்லன் என்பது கண்ணகிக்குத் தெரியும். ஆனால் ஊர் மக்களை நம்பவைப்பது எப்படி
என்பதை சூரியபகவானிடமே கேள்வி கேட்டு ‘தன் கணவன் கள்வன் இலன்’ என்று சொல்ல சாட்சிக்கு
அழைக்கிறாள்.
‘ஆயர்
குலப் பெண்களே! இதோ நானே சூரியனைக் கேட்கிறேன். சூரியனே! நீயே சொல். என் கணவன் கள்வனா?
நீ யாதும் அறிந்தவன். நீயே சொல்’ என்று கண்ணகி
கேட்கிறாள்.
அதற்கு
வானத்திலிருந்து அசரீரி வாக்கு ‘கண்ணகியே ! உன் கணவன் கள்வனல்லன். அவனைக் கள்வன் என்ற
இவ்வூரைத் தீ உண்ணும்’ என்று ஒலித்தது.
ஆயர்குல
மக்களுக்கு தன் கணவன் கள்வன் இல்லை என்பதை நிரூபித்த பிறகு, தலைவிரி கோலமாக ஒரு கையில்
தன் கால் சிலம்பை ஏந்தியபடி, ‘என் துன்பம் தீர இங்கு மதுரை வந்தேன். கணவன் கொலையுண்டான்
கள்வன் என்ற பட்டத்துடன். ஆனால் என் கணவன் கள்வன் அல்லன். எனது காற்சிலம்பை விலை கொடுத்து
வாங்க திறனற்றவர்கள் என் கணவனைக் கொன்று விட்டனர். நான் என் கணவனைக் காண்பேன். அவன்
வாய்திறந்து என்னுடன் பேசுவான். தீதற்ற நல் வார்த்தைகளை அவனிடமிருந்து கேட்பேன். இது
முக்காலும் உறுதி. இது நடக்காவிடில் என்னை கள்வனின் மனைவி என்று இகழுங்கள்’ என்று சபதமிடுகிறாள்
ஊரறிய.
கண்ணகி
மதுரைத் தெருக்களில் புலம்பிய படிச் சென்றதைப் பார்த்த மக்கள் ‘வளையாத பாண்டிய மன்னன்
செங்கோல் வளைந்தது. தென்னவன் கொற்றம் சிதைந்தது’ என்று கண்ணகியின் மேல் கருணைகொண்டனர்.
கண்ணகி
வெட்டுண்டு கிடக்கும் தன் கணவன் உடலைப் பார்த்தாள்.
உடல் வேறு தலை வேறாக வெட்டுண்டு கிடக்கும் தன் கணவன் உடலைப் பார்த்து ஒப்பாரி வைத்துப்
பாடினாள் கண்ணகி.
‘ஏன்
அழுகின்றாய்?’ என்று கேட்டு, தன் கண்ணீரைத் துடைத்து, தனக்கு ஆறுதல் கூறவில்லையே என்று
கண்ணகி கதறுகிறாள். அப்போது ஒரு அதிசயம் நிகழ்கிறது. கோவலன் உயிர் பெற்று எழுந்தான்.
எழுந்தவன், கண்ணகியைப் பார்த்து, ‘முழு நிலவு போன்ற உன் முகம் ஒளியிழந்து விட்டதே!
என்று வேதனையுடன் கூறி, தன் கையால் அவளுடைய கண்ணீரைத் துடைத்தான். பின்னர் ‘இரு’ என்று
சொல்லி மறைந்து விட்டான்.
இது துக்கத்தின்
உச்ச கட்டமாக கண்ணகி உயிரற்ற கோவலின் உடலைத் தழுவிய நிலையில் அவள் கண்ட கனவுக் காட்சிகள்
என்று நாம் ஊகிக்கலாம்.
துக்கம்,
கோபம், ஆத்திரம், நீதி தவறிய அரசன் – ஆகியவைகள் கண்ணகியின் உள்ளத்தை ஆட்கொள்ள, அதே
நிலையில் அரசவை நோக்கி தலைவிரி கோலமாக ஒற்றைச் சிலம்புடன் மதுரை வீதிகள் வழியாக தீயெனப்
புறப்பட்டாள்.
போகும்
வழி எல்லாம் மதுரை மக்களையும், பாண்டிய மன்னனையும் தூற்றிய படி, மதுரை மா நகரில் தெய்வமும்
இல்லை என்றே சொல்லி விடுகிறாள் கண்ணகி.
இந்த சமயத்தில் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி தான் கண்ட கெட்ட கனவை தன் கணவனான பாண்டிய அரசன் நெடுஞ்செழியனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அரண்மனை
வாயிலை அடைந்த கண்ணகி ‘கொடுங்கோலாட்சி செய்யும் அரசனுக்குச் சேவை செய்யும் வாயுலோனே’
என்று தான் விளிக்கிறாள்.
‘ஒற்றைச்
சிலம்புடன் கணவனை இழந்தவள் வந்திருக்கிறாள்’ என்று அரசனிடம் அறிவி’ – என்று கோபமாகச்
சொல்கிறாள்.
வாயிற்காப்போனும்,
‘மனத்திலே பழிவாங்கும் வெறி – ஆறாப் பெருஞ்சினம் – ஒற்றைச் சிலம்பு ஒரு கையிலே – கணவனை
இழந்தவளாம் – அவள் நமது அரண்மனை வாயிலில் நிற்கிறாள்’ என்று சொல்வதற்கு முன் – அவள்
கொற்றவை அல்லள், பிடாரியும் அல்லள். பத்திரகாளியும் அல்லள் காளியும் அல்லள். துர்கையும்
அல்லள் என்று சொல்வதிலிருந்து கண்ணகியின் பயங்கர மூர்க்கமான தோற்றம் வாயிலோன் வாயிலிருந்து
வரும் வார்த்தைகளால் கவி நடக்க இருக்கும் துர் சம்பவங்களுக்கு நம்மை தயார் படுத்துகிறார்.
அரசனும்
அவளை அரசபைக்கு வரச்சொல்லுகிறார்.
கண்ணகியும்
அரசவைக்கு வந்து அரசனை வணங்காமல், எந்த மரியாதையும் காட்டாமல், அரசன் அருகில் வந்து
நிற்கிறாள்.
‘கண்ணீரோடு
என் முன் வந்த காரணம்?’ என்று மன்னவன் வினவ, கண்ணகி தன் சோழ நாட்டில் நீதி தவறா அரசர்களை
பட்டியளிட்டுச் சொல்லி ‘என் ஒரு காற்சிலம்பை விற்க வந்த உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலனின்
மனைவி கன்ணகி என்பது என் பெயர்’ என்று முறையிடுகிறாள்.
‘என்
கால் பொற்சிலம்பு மாணிக்கப் பரல்கள் கொண்டது’ என்று கண்ணகி சொல்ல, ‘எம் சிலப்போ முத்துக்களைப்
பரல்களாகக் கொண்டது’ என்று சொல்லி, கோவலனிடமிருந்து கவர்ந்த சிலம்பை கண்ணகியின் முன்
வைத்தார்கள்.
கண்ணகி
தன் கையில் இருந்த சிலம்பை தரையில் வீசி எறிந்தாள். தரையில் மோதிச் சிதறி அதனிடமிருந்து
தெறித்த மாணிக்கப் பரல் ஒன்று அரசனின் வாயருகே தெறித்து கீழே
நெடுஞ்செழியன்
தான் நீதி தவறியதை உணர்ந்தான். ‘பொற்கொல்லன் சொல் கேட்டு தீர விசாரிக்காமல் தீர்ப்பு
வழங்கிய நான் ஒரு அரசனா? நானே கள்வன். நான் இனியும் உயிர் வாழலாமா? இக்கணமே என் ஆயுள்
முடியட்டும்’ என்று சொல்லியபடியே நெடுஞ்செழியன் உயிர் விட்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த
பாண்டிய அரசியும் உயிர் நீத்தாள்.
பாண்டிய
மன்னன் நீதி தவறியதற்கு தன் உயிரையே விட்டு சாய்ந்த செங்கோலை நேர் செய்தான். அவனது
பத்தினியும் உயிரை விட்டாள்.
கண்ணகி
பாண்டியமா தேவி உயிர் துறந்த நிலையைக் கூட அறியாது, ‘கோவேந்தன் தேவியே! கணவனைப் பறி
கொடுத்த நான் துக்கத்தால் எதையும் உணரமுடியாத நிலையில் உள்ளேன். ஒன்று மட்டும் நிச்சயம்,
ஒருவருக்கு முற்பகலில் கேடு செய்தால், பிற்பகலில் அந்தக் கேட்டினை அனுபவிப்பான்’ என்று
விளக்குகிறாள்.
‘என்
காதலனைக் கொலை செய்த மதுரை நகரத்தை நான் தீகிரையாக்கினால்
நான் குற்றம் எதுவும் செய்தது ஆகாது. குற்றம் இழைத்த நெடுஞ்செழியனின் நகரத்தினை எரித்தாலும்,
அதுவும் குற்றம் இல்லை’ என்று கண்ணகி கூறி,
தனது இடப் பக்கத்து மூலையினை வலக்கையால் திருகி, மதுரையை மும்முறை வலமாக வந்து அம்
முலையை வீசி எறிந்தாள்.
அப்போது
அக்னித் தேவன் கண்ணகியின் முன் தோன்றி, ‘யாரை எரியூட்ட வேண்டும்?’ என்று கேட்க, அதற்கு
கண்ணகி ‘அறவோர், பசுக்கள், பத்தினிப் பெண்டிர், முதியோர், குழந்தைகள் இவர்களை விட்டு
விட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க’ என்று சொல்கிறாள்.
அக்னித்
தேவனின் தீப்பிழம்புகள் பாண்டிய மன்னனின் கூடல் நகரை அழிக்கத் தொடங்கியது.
கண்ணகி
இட்ட தீ மதுரையை எறிக்காமல் காப்பாற்ற முடியாமல் திணறிய மதுரை காவல் தெய்வமான மதுராபதி
பெண் தேவதை மதுரையை எறித்த பிறகும் சினம் தணியாமல் தலைவிரி கோலமாக மதுரை வீதிகளில்
நடக்கும் கண்ணகியை நிழல் போல் தொடர்ந்து சென்றது.
மதுரையை
விட்டு சேர நாட்டிற்குச் செல்வதற்குள் கண்ணகியின் மனத்தில் உள்ள ‘பாண்டிய மன்னர்கள்
நீதி வழுவியர்கள்’ என்ற எண்ணத்தை நீக்கும் பொருட்டு கண்ணகியை தொடர்ந்த்து சென்றது.
கண்ணகி
‘என்னைப் பின்தொடர்ந்து வரும் நீ யார்?’ என்று கேட்கவும், ‘நான் உனக்குச் சொல்ல வேண்டிய
நீண்ட செய்தி ஒன்று உண்டு. நான் மதுரையைக் காக்கும் காவல் தெய்வம். என் பெயர் மதுராபதியாள்’ என்று சொல்லிவிட்டு ‘உன் கணவன் கொலையானதற்கும் எம்
அரசன் பாண்டியன் நெடுஞ்செழியனின் பழைய வினை தான் காரணம்’ என்று முன்னுரையாகச் சொல்லி
ஒரு நீண்ட பட்டியல் கொடுத்து, ‘பாண்டிய நாட்டு மன்னர்கள் உன் சோழ மன்னர்களைப் போல்
நீதியில் தவறியதே இல்லை’ என்று மதுரை காவல் தெய்வம் விளக்குகிறது.
இதன்
மூலம் கண்ணகியின் மனத்தில் உள்ள பாண்டிய மன்னர்களிடம் ஏற்பட்ட வெறுப்பினைக் களைவதற்கு
அந்த மதுரை காவல் தெய்வம் எடுத்த பெரு முயற்சி வெற்றி பெற்றதாகவே கொள்ளலாம்.
இறுதியாக
‘இன்னும் 14 நாள் கழித்து, தேவ வடிவில் நீ உன் கணவனைக் காண்பாய் என்று கூறி விட்டு
மறைந்தது.
‘என்
கணவனை இழந்து விட்டேன். இனி ஒரிடத்தில் நிலையாகத் தங்க மாட்டேன்’ என்று கூறியபடி, மதுரை
நகரின் மேற்குத் திசையிலிருந்த கொற்றவைத் தெய்வத்தின் கோயில் பலி பீடத்தில் தன் கைவளையல்களை
உடைத்தாள்.
‘மதுரை
மா நகரே! என் கணவனுடன் கீழ் திசை வழியாக வந்தேன். அவனைப் பறிகொடுத்து, மேற் திசை வாயிலாக
தன்னந் தனியாக வெளியேறுகிறேன்’ என்பது கண்ணகியின் வாக்கு. இதில் கோபம் தணிந்து, சோகம்
கண்ணகியை ஆட்கொண்டதாகப் படுகிறது.
பல நாட்கள்
பகல் இரவு என்று பாராமல் நடந்து சேர நாட்டு எல்லையில் முருகன் உறையும் நெடுவேள் குன்றத்தை
அடைந்து, அங்குள்ள ஒரு வேங்கை மரத்தின் அடியில் நின்றாள்.
அங்குள்ள
குறவர்கள் கண்ணகியின் சோகக் கதையைக் கேட்டு மனம் துக்கித்தனர்.
சில நாட்களிலேயே, சேர நாட்டின்
மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) வானுலகில் இருந்து
ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்று விட்டாள் என்று சிலப்பதிகாரம்
கூறுகிறது.
வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ
விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள்.
சிறு குடியீரே சிறு குடியீரே ….என்ற
சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற்
சடங்கு கண்ணகி சடங்காகும்.
சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளோடு மலைவளம்
காணச் சென்றான். உடன் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரும் சென்றார். அப்போது
குன்றக்குறவர்கள் செங்குட்டுவனைக் கண்டு மலையில் தாங்கள் கண்ட காட்சியைக் கூறினர்.
"காட்டில் வேங்கை மரத்தின் கீழே ஒரு பெண் தன் மார்பகத்தை இழந்த நிலையில்
துயரம் மிக வந்து நின்றாள். வானவர்கள் போற்றத் தன் கணவனோடு அவள் வானகம் அடைந்தாள்"
என்று குன்றக்குறவர் கூற அங்கிருந்த சீத்தலைச் சாத்தனார் கண்ணகி பற்றிய கதையைச்
செங்குட்டுவனிடம் கூறினார்.
செங்குட்டுவன் மனைவி 'நம் நாடடைந்த இப்பத்தினிக் கடவுளை வழிபடல்
வேண்டும்' என்றாள். இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து
கண்ணகிக்கு உருச்சமைத்து வழிபாடு செய்வதெனச் செங்குட்டுவன் முடிவு செய்தான்.
செங்குட்டுவன் வடநாட்டின்மீது படையெடுத்துச் சென்று, கண்ணகிக்குக்
கல் கொண்டு வந்தான். தமிழ் மன்னரின் வீரத்தை இகழ்ந்துரைத்த கனக விசயர் அக்கல்லைச்
சுமந்து வந்தனர். வஞ்சி மாநகரில் பத்தினிக் கோட்டம் சமைத்துச் செங்குட்டுவன்
விழாச் செய்தான். விழாவிற்கு இளங்கோவடிகளும் சென்றார். அப்போது கண்ணகி தேவந்தி
என்னும் பார்ப்பனத் தோழிமீது தோன்றினாள்.
கண்ணகியின்
ஆவி தேவந்தியை ஆட்கொண்டது. அந்த நிலையில் கண்ணகி இளங்கோவின் வரலாற்றைக் கூறினாள்.
உள்ளம் நெகிழ்ந்த இளங்கோ கண்ணகியின் வரலாற்றைச் சிலப்பதிகாரமாக வடித்தார்.
இதுவரை கண்ணகியின் கதை விளக்கம் கேட்டோம். நமது குறிக்கோள்
‘கண்ணகி அதீதமான கோபத்தில் – தன் கணவன் தவறாக அரசால் கொலையுண்டதற்காக ஒரு
நகரத்தையே தீக்கிரையாக்கியது பிரம்மாண்ட பிழை’ என்பதை நீரூபிப்பது தான்.
கண்ணகி ஊழ்வினையை நம்புபவள் என்று தான் தெரிகிறது. அப்படி
இருக்கும் போது தன் கணவன் இறந்ததும் ஊழ்வினையால் என்று அதற்கு ஒரு சில மதிப்பெண்கள்
கொடுத்து, சமாதானம் ஆகி மதுரையை தீக்கு இறையாக்காமல் இருந்திருக்க வேண்டும். ஆனால்
கண்ணகி லக்ஷ்மன் ரேகா என்று சொல்லும் கோட்டை மதிக்கவில்லை என்று தான் சொல்லத்
தோன்றுகிறது.
தன் கணவன் கள்வன் இல்லை என்று அரசவையில் நீரூபிக்கும் வரை
கண்ணகியிடம் ஒரு தப்பையும் காணமுடியாது.
அரசவையிலும், மதுரை மாவீதியிலும் ‘தன் கணவன் கள்வன் இல்லை’
என்பதை கண்ணகியே உரக்கச் சொல்லிவிட்டாள். அதை அனைவரும் நம்பினதாகவே கொள்ள
வேண்டும்.
பாண்டிய மன்னன் நெடுசெழியன் தான் நீதி வழிவியதை அறிந்து தன்
உயிர் நீத்து, பாண்டிய அரசின் சாய்ந்த செங்கோலை நிமிர்த்தி விட்டான். அத்துடன்
அரசியும் உயிர் நீத்தாள். இதை எல்லாம் கண்ணகி கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே
தெரியவில்லை.
தன் குடும்பம் – தன் கணவன் – தன் வாழ்வு என்ற ஒரு குறுகிய
வட்டத்திலேயே – சுய நலம் பெரியதாகவும், பொது நலம் எந்த விதத்திலும் பாதிக்காத மன
நிலையிலும் – கண்ணகியின் மனது செயல்பட்டதால் இதில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத
அப்பாவி மக்கள் – அவர்களைத் தீயோர் என்று கண்ணகி கணிப்பதில் எந்த ஆதாரமும் இல்லாத
போது – கண்ணகியின் மதுரையை தீக்கிறைக்காக்கியது நூறு சதவிகிதம் பிரம்மாண்ட பிழையே
யாகும்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பட்டத்து இளவரசன்
வெற்றிவேற் செழியன் அப்போது கொற்கையில் இருந்திருக்கிறான்.
நடந்தவற்றை அறிகிறான். தான் அரசு கட்டிலில் பதவியில் அமருவதற்கு முன்பு அவன் செய்த முதல் காரியம் ஆயிரம் பொற்கொல்லர்களை உயிர்பலி படைத்து, பாண்டிய நாட்டின் இகழ்ந்த புகழை நிலை நாட்டினான் என்பது தான் சிலம்பதிகாரத்தின் பாடல்.
இதோ மொத்த பாடலின் பதவுரை:
கொற்கையிலே இருந்த வெற்றிவேற்செழியன் மதுரைக்கு வந்தான்.
பொன் வேலை செய்யும் ஆயிரம் பேரை, தன் ஒரு முலையை
வெட்டி எறிந்த திருமாபத்தினிக்கு (கண்ணகிக்கு) மாலை வேளையில் உயிர்ப்பலியாகப்
படைத்துத் தன் பழைய புகழினை இழந்த மதுரை மூதூரில் அரசு கட்டில் ஏறினான். அவன்
தீதற்ற சீர்மையுடன் மக்களைக் காத்துவரும் முறைமை உடையவன். ஏழு குதிரைகள் பூட்டிய
ஒரு சக்கரமே உடைய தேரில் பவனி வரும் சூர்ய தேவன் இருளை நீக்குவது போல, அந்த சந்திர குலப் பாண்டியன் செழியன், பாண்டிய நாட்டின் அவலத்தைப் போக்கி, சிம்மாசனம் ஏறி, அங்குச்
சூழ்ந்திருந்த இருளினை அகற்றினன்.
இது கண்ணகி மதுரையை எரித்ததை
விட வெற்றிவேற்செழியனின் வெறிச்செயலாகும். இந்த அவனது செய்கையால் – 1. பாண்டிய
நாட்டின் இழந்த புகழ் மீண்டும் நிலைநாட்டப்பட்டது 2. இந்த உயிர்பலி கண்ணகி
பத்தினித் தெய்வத்தைத் சாந்தப்படுத்தும் 3. இந்தச் செய்கை வெற்றி வேற் செழியனின்
மக்களைக் காக்கும் முறைக்கு எடுத்துக்காட்டு 4. இந்த உயிர்பலி சூர்யதேவன் இருளை
அகற்றுவதற்கு ஒப்பாகும். – என்று சொல்வது மா பெரும் குற்றம். இது அரசின் இருண்ட
அத்தியாயமாகத்தான் நாம் கருதுகிறோம். கவிக்கும் இதில் உடன்பாடு என்றால், துறவியான
இளங்கோவடிகளும் - அதுவும் ஒரு உயிர்க்கும் இன்னல் செய்யாத அறத்தைப் போதிக்கும்
சமணமதத் துறவியும் – மா பெரும் பிழைக்கு உடந்தையானவர்களே !
மதுரை பொற்கொல்லர் ஆயிரம் பேர்கள் கொலை போன்ற இந்தச்
செய்திகள் எல்லாம் மாடலன் என்னும் பிராமணன் வாயிலாக இளங்கோ நமக்குச் சொல்கிறார்.
சிலப்பதிகாரத்தில் மாடல்
மறையோன் என்ற பிராமணனின் வாயிலாக இன்னும் பல அவலச் செய்திகளையும் கேட்க வேண்டிய
நிலையில் உள்ளோம்
எல்லாம் கண்ணகியின் சீற்றத்தால்
ஏற்பட்ட அவலங்கள்:
1.
கண்ணகி-கோவலன் பெற்றோர்களின்
பரிதாபமான முடிவு
2.
மாதரி என்னும் இடைக்குலப் பெண் தீப்பாய்ந்து இறந்தாள்
3.
மாதவி புத்தமத துறவி ஆனாள்
4.
சமண மதப் பெண் துறவி கவுந்தி அடிகள் உண்ணாவிரதமிருந்து
உயிர் நீத்தாள்
5. மாதவி - அவள் மகள் மணிமேகலை புத்தமத துறவிகளாயினர். ,
மதுரை மா நகரைக் காக்க வேண்டிய தெய்வமும் கண்ணகியின் சீற்றத்தால் நிலை குலைந்து விட்டது கண்ணகி பற்ற வைத்த தீயை நீராக இருந்து அணைக்க வில்லை. இது கற்புக்கரசி கண்ணகிக்கு மதுராபதியாள் செலுத்தும் மரியாதையா அல்லது காணிக்கையா என்று தெரியவில்லை. ஆனால், மதுராபதியாள் தன் கடமையிலிருந்து தவறிவிட்டாள் என்று தான் கணிக்க வேண்டி இருக்கிறது.
அத்துடன் மதுராபதியாள் ஏன் கண்ணகிக்குப் பயந்து அவளை நிழல் போல் பின் தொடர வேண்டும் ? – இது பயமா? பக்தியா? கண்ணகி ஏற்கணவே மதுரையைத் தீக்கிரையாக்கி விட்டாள். இதன் பிறகும் கண்ணகிக்கு பாண்டிய அரசர்களின் நீதி வழுவா ஆட்சிகளைப் பற்றிச் சொல்வதின் காரணம் தான் என்ன?
இதிலிருந்து ஒன்று தெரிகிறது: ‘காப்பிய நாயகியான கண்ணகிக்கு ஒரு களங்கமும் கற்பிக்கக் கூடாது. அவள் சிலப்பதிகாரத்தில் வரும் அனைத்து சக்திகளுக்கும் மேலான சக்தி கண்ணகி’ என்பதைக் காட்டவே இளங்கோ கண்ணகியை ஒரு உயர்ந்த பீடத்தில் அமர்த்தி விட்டார்.
ஆகையால் நாமும் இளங்கோவடிகளைப் பின்பற்றி அவளது பிரம்மாண்ட பிழை என்ற நமது கருத்தையும் கண்ணகியின் மதுரைத் தீயில் இட்டு, மனம் குளிர்வோம்.
Comments