வாழ்க்கைச் சுழல் - முதல் பாகம்


ஆசிரியர் முன்னுரை “வாழ்க்கைச் சுழல்கள்” என்ற தலைப்பில் தொடராக என் வாழ்வில் நிகழ்ந்தவைகளை நான் ஆசிரியராக இருந்து ஒவ்வொரு தமிழ் மாதமும் வெளிவரும் “வாய்மை” என்ற மின் அஞ்சல் வழி பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் முதல் பாகம் முற்றுப் பெற்று இரண்டாம் பாகம் தொடராக இன்னும் வெளி வந்து கொண்டிருக்கிறது. 


 ஆகையால் முடிவு பெற்ற முதல் பாகத்தை என் பிளாக் மூலமாக பிரசுரிக்க விழைகிறேன். அந்த முதல் பாகத்தின் கட்டுரை தான் இது. படிக்க ஆர்வம் மூட்டும் விதமாக அவைகள் அமைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தக் கட்டுரை ‘ஜெயந்திநாதன்’ என்ற என் புனைப் பெயரில் வெளியிடப்படுகிறது. - ஆசிரியர் வாய்மை 

 சமர்ப்பணம் 
 துணைவியாக தூணாக தூதாக துணிவுடன் துக்கத்திலும் சுகத்திலும் பங்கேற்று பணிபல ஆற்ற எப்பொழுதும் என்னுடன் இணைபிரியாத என் தர்ம பத்தினி வத்சலா சங்கரனுக்கு இச் சிறு நூல் சமர்ப்பணம். 

 முன்னுரை: வாழ்க்கையைச் சாகரம் – சமுத்திரம் என்றே சொல்வார்கள். ‘சா – கரம்’ என்ற தொனி அந்த சம்ஸ்கிரத வார்த்தையில் இருப்பதைத் தமிழில் அர்த்தம் கொண்டால், சாவை ஒத்த சங்கடகங்களிலிருந்து கரம் – கை கொடுத்துக் காப்பவர்கள் நம்மைச் சுற்றிப் பல இருப்பதால் தான் வாழ்க்கைச் சூழலில் மாட்டிக் கொண்டாலும் கரையேற முடிகிறது. அதுவே வாழ்க்கையின் வெற்றியாக அமைந்து நம்மை வெற்றி நடை போட வைக்கிறது. ‘சாகரம்’ என்ற வடச் சொல்லில் ‘சாகிறோம்’ என்ற தொனியும் அதில் தொக்கி நிற்கிறதே என்று குதர்க்கமாகப் பேசும் மக்களும் சமூகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் தான் நம்மை மூழ்கடிக்கும் சூழல்களின் சூத்திரதாரியாக நம் வாழ்க்கையில் வலம் வந்து எதிர் நீச்சல் போட்டுக் கரையேற முயலும் நம்மையும் மீண்டும் அந்த சூழல்களில் தள்ளி குரூர இன்பம் அடையும் இரக்கமற்ற ராட்ச குணம் கொண்டவர்களையும் நாம் வீரத்துடன் எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டும். தோல்வியைக் கண்டு துவலாமல் நம் பலத்தைப் பல மடங்கு பெருக்கி, மனத்திடத்துடன் அந்த ராட்சக் கூட்டங்களை மண்ணைக் கெளவ வைக்க வேண்டும். அதற்கு மனித பலத்துடன், ஆன்ம பலம், ஆன்மீக பலம், ஆண்டவன் அருள் அனைத்தும் அபரிமிதப் பெற்று வாழ்க்கைச் சாகரத்தை வெற்றிகரமாக கடந்து, மேலும் பலரையும் கரை சேர்ப்பதற்கு உதவிக்கரமும் நீட்டி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற தாரக மந்திரத்திற்கு உதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்க்கைச் சாகரத்தில் அலைகளுக்கும், சூழல்களுக்கும் ஓய்வு கிடையாது. அவைகள் வீசிக்கொண்டுதான் இருக்கும். மனித சமுத்திரத்தில் அத்தகைய சுழல்களை உருவாக்கி சக மனிதர்களின் வாழ்க்கையை பாழாக்கும் கும்பல்கள் மத்தியில் சக மனிதர்களின் வாழ்க்கையை புனிதமாக்கும் நல்ல உள்ளங்களும் உண்டு. அத்தகைய ஆன்மாக்கள் நம் உறவுக்காரர்களாகவும் இருக்கலாம். நண்பர்களாகவும் இருக்கலாம். சக ஊழியர்களாகவும் இருக்கலாம். முகம் தெரியாத நல்ல உள்ளங்களாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழல்களிலிருந்து வெற்றியோடு கரை சேருவதுற்குள் பல தோல்விகளையும், இன்னல்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். மன வலிமை, தோள் வலிமை, உற்றார்-உறவினர் உதவி ஆகியவைகள் துணையாக அமைந்தால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும். “சென்றேன், கண்டேன், வென்றேன்” என்பது வாழ்க்கைச் சூழல்களில் மாட்டிக் கொண்ட சாதாரண மனிதர்களுக்குச் சாத்தியம் இல்லை. சுற்றி இருப்பவர்களின் தாக்குதலைத் தாங்கி, அந்த வலிகளைத் தாங்கும் வலிமையைப் பெற்று, சில சமயங்களில் பலம் பெற்றவர்களின் தொந்தரவுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் போது தப்பிக்கும் வழியைக் கடைப்பிடித்து நடப்பது தான் வாழ்க்கை. ஆகையால் தான் ‘தாக்குதலைத் தாங்குதல் அல்லது தவிர்த்தல் அல்லது தப்பித்தல்’ – என்ற யுக்திகள் நமக்கு இந்த வாழ்க்கைச் சூழலை எதிர்கொள்ள உதவும் ஆயுதங்களாகும். அதில் எதிர்கொண்ட பல இன்ப சம்பவங்கள் உள்ளத்தில் பதிந்து மனத்தைப் பரவசமூட்டும். அதே சமயத்தில் பட்ட இன்னல்கள் மனத்தில் ஆழப்பதிந்து அவைகளை எவ்வளவு சக்தி கொண்ட மட்டும் மறக்க நினைத்தாலும், ரப்பர் பந்து ஒன்றை நீரிலே அழுத்தி மூழ்கடிக்க எவ்வளவு முயன்றாலும், மேலே எழும்பி வந்து விடுவது போல் தான் மனத்தை அலைக்கழிக்கும் தருணங்கள் பல நிகழத்தான் செய்யும். நல்லதை நாரிலே தொடு! பொல்லாததைப் புழுதியைப் போட்டு மூடு! – என்பது தான் என் பாட்டியின் பொன் மொழி. மிகவும் அர்த்தபுஷ்டியுள்ள வார்த்தைகள். பொல்லாததைப் புழுதியைப் போட்டு மூடுவதற்கு முன் அதைப் பற்றிச் சொன்னால் தான் மனது சில சமயங்களில் சமாதானம் அடையும். ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்பார்கள். ஆனால், குற்றம் எல்லை மீரும் போது, அதனால் பாதிக்கப்பட்டு, ரண வேதனைப் பட்டு, வாழ்க்கையே நரகமாகி – அந்த நிலையைக் கண்டு அதிலே சுகம் காணும் எண்ணம் கொண்ட உறவினைப் பற்றிச் சொல்வது கசப்பான ஒன்று தான். ஆனாலும், சொல்வது தவறில்லை என்று தான் தோன்றுகிறது. அதுவும் என் வாழ்க்கைச் சூழல்களில் முக்கிய அம்சம் வகிக்கிறது. எந்த கஷ்டங்கள் வந்தாலும், அவைகளிலிருந்து மீண்டு வெற்றியோடு கரையேறிய தருணங்கள் என் வாழ்க்கையில் பல உண்டு தான். அதற்குக் காரணம் எங்களை வாழ்வித்த தெய்வங்களைத்தான் குறிப்பிடவேண்டும். ஆமாம். எங்களை வாழ்வித்த தெய்வங்கள் – மூவர் – பாட்டி, அப்பா, அம்மா. பாட்டி – அன்பால் உயர்த்திய தெய்வம். அப்பா – பக்தியால் உயர்த்திய தெய்வம். அம்மா – உழைப்பால் உயர்த்திய தெய்வம். அந்த மூன்று தெய்வங்களையும் வாழ்வித்த தெய்வங்களாக ஆரதிப்பதுதான் நான் செய்யும் பூஜை. அவர்களை நினைப்பதே என் வாழ்வின் ஒளி. எளிமை ஒரு இனிமை என்பதை எனக்கு சொல்லாமல் உணர்த்திய மவுன குருக்கள். எதற்கும் ஏங்காதே – உன் பங்கை முருகன் அளிப்பான் – அன்பு, பக்தி, உழைப்பு – ஆகியவைகள் தான் வாழ்வை முழுமையாக்கும். – இவைகள் தான் அவர்களின் முத்தான உபதேச மொழிகள். அந்த மூன்று தெய்வங்களில், என் அம்மாவின் உழைப்பு தான் தனித்துவம் வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு, உழைப்பு – என் அம்மாவை நினைக்கும் போதெல்லாம் அந்த நீண்டகால உழைப்பின் சுவடுகளான அந்த சொர சொரப்பான ரணமான கைகளை என் கன்னங்களில் அழுத்திய தருணங்களை நினத்து நினைத்து நினைத்து இப்போதும் ஏங்குகிறேன். ரத்தக் கண்ணீர் விடுகிறேன். பல சமயங்களில் சட்னி அரைக்கும் போது ரணமான கைகளை அம்மாவே வலி பொறுக்காமல் தானே வாயால் காற்றைக் கைகளின் ரணத்தை நோக்கி ஊதும் பல தருணங்களில், ‘அம்மா! அம்மா! அம்மா!’ என்று நானும் அம்மாவின் கைகளின் ரணங்களை நோக்கி என் வாயால் ஊதியதை இப்போதும் ‘தெய்வம்மா, நீ!’ என்று மனத்திலே பூஜித்ததை எவ்வளவு முறை நினத்துப் பார்த்தாலும் மனத்திற்குத் திருப்தி இல்லை. என் அம்மா தனி ஆளாக மெஸ் நடத்தி – தனக்கு உதவியாக எந்த ஒரு வேலைக்காரியையும் வைத்துக் கொள்ளாமல், மண் விறகு அடுப்பு, கரி அடுப்பு, இட்லி மாவு – சட்னி ஆகியவைகள் அரைக்க தரையிலே பதித்த கருங்கல் ஆட்டுக்கல் - ‘பகவானே! உழைப்பா அது? – என்று அம்மாவின் உழைப்பை நினைத்து நினைத்து நினைத்து இன்றும் மனம் கணத்து, கண்ணீர் விடுகிறேன். மழைகாலத்தில் ஈர விரகால் அடுப்பு சரியாக எரியாமல் புகை மண்டலமாக அந்தச் சிறிய அடுக்களை மூழ்க – ஒரு சிறிய ஊதுகுழலால் கண்கள் கரித்து – கண்ணீர் வழிவதையும் பொறுத்துக்கொண்டு சமையல் சீக்கிரம் ஆகவேண்டுமே என்று உழைத்து எங்களை வாழ்வித்த தெய்வம் நீ அம்மா! அம்மாவின் உழைப்பின் கதை முழுவதையும் – பாட்டி – அப்பா ஆகியவர்களின் பங்குகளையும் சேர்த்து எழுத முடிவு செய்து விட்டேன். இது பல வருடங்களாக மனத்திலேயே ஊறியவைகள் தான். அவைகளை எழுத்து வடிவில் கொண்டு உங்கள் முன் படைக்க அந்த முருகப்பெருமானை மனதார வேண்டி ஆரம்பித்து விட்டேன். இது மட்டுமா? என் வாழ்வில் உதவிய உறனர்களை நான் மறக்க முடியுமா? அதில் குறிப்பிட வேண்டு மென்றால் முதலில் என் மனத்திரையில் நிழலாடும் உருவம் என் பாட்டியின் தங்கையின் மகன் – புரசவாக்கம் சித்தப்பா என்ற நாராயணஸ்வாமி அய்யர். அதன் பிறகு என் மூத்த மைத்துனர் கோபால் - அவரது மனைவி கல்யாணி. என் இளைய மைத்துனர் ஷங்கர். என் மனைவியின் மூத்த சசோதரி கமலா – பிறகு கமலாவின் மகன் ஹரி. இவர்களைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் எழுதுவது மிகவும் அவசியம். இந்தப் பட்டியலில் சிறப்பு இடம் பிடிப்பவர் என் வீட்டு மாப்பிள்ளை கோபிசந்திரன். அவருக்கு என் வாழ்க்கையில் உதவியவர் என்ற நபர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் என்ற நிலையில் கட்டுரையில் இடம் பெறுகிறார். அதே நேரத்தில் என் வாழ்வில் என்னை உதைத்த என் உறவினர்களால் ஏற்பட்ட ரணங்களையும் குறிப்பிடுவதும் அவசியம் என்று நினைக்கிறேன். அதன் வடுக்கள் இன்னமும் என் உள்ளத்தில் நிரந்தரமாக இடம் பெற்ற நிலையில் அவைகளை மறக்க எவ்வளவு பலம் கொண்டு அழுத்தினாலும் மேலே எழும்பி என் நினைவலைகளாக என் உள்ளத்தைப் பாதித்த தருணங்கள் பல.- அதில் என் அண்ணா சேதுராம கிருஷ்ணன் முதல் இடம், என் அக்கா கோமதி இரண்டாவது இடம். என் அக்காவின் கணவர் கிருஷ்ணன் மூன்றாவது இடம். இவர்களைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் எழுதுவதும் ஒரு விதத்தில் அவசியம் என்றே கருதுகிறேன். அதனால் சில மனஸ்தாபங்கள் ஏற்படவும், தவிர்க்கப்பட வேண்டிய வலிகள் உருவாகவும் வழிவகுக்கலாம். ஏதோ என் மனத்தில் இவர்களால் ஏற்பட்ட ரணங்களுக்கு வடிகாலாக இருக்க வேண்டும் என்று நான் அவர்களால் பெற்ற உதைகளை விவரிக்க விழையவில்லை. ‘சுடும் உண்மைகளையும் உரைப்பது தான் உண்மைக்கு நாம் அளிக்கும் மரியாதை’ என்ற கருத்தில் எழுதத் துணிந்துள்ளேன். என் 30 வயதிற்கு மேல் கல்யாணமாகி என் சுக துக்கங்களில் முழுமனத்துடன் எனக்குத் துணையாய் – தூணாய் – துயரம் துடைக்கும் தோளாய் என் குடும்பப் பாரத்தை சுமந்து என் வலிகளுக்கு நிவாரணமாக தன்னையே அர்ப்பணித்த என் அன்பு மனைவி வத்ஸலா இக்கட்டுரைக்கு ஆதார ஸ்ருதியாக ஒலிக்கும் அற்புதக் கீதத்தையும் கட்டுரையில் கேட்கச் செய்ய வேண்டும். சக்தி இழந்து தவிக்கும் போது சக்தி கொடுக்கும் தேவதையாகவும், கவலையில் மூழ்கும் போது கண்ணீரைத் துடைக்கும் கருணைக் கடலாகவும், அம்மாவை அன்போடு சோம்பல் இன்றி கவனித்து புண்ணியம் சேர்த்த புனிதவதியாகவும் இருந்து வாழும் என் இனிய அன்பு மனைவி வத்ஸலா கட்டுரையில் பரவலாகப் பேசப்படும் நாயகியாக வலம் வருவார். பல கஷ்டங்கள் பஞ்சுபோல் நிரந்தரமாகப் பறந்து என் வாழ்வில் ஓய்விற்குப் பிறகு வசந்தம் வீச வழி வகுத்த என் அன்புச் செல்வங்களான – என் மகள் மீரா, என் மகன் கணேஷ், என் மருமகள் மீனாட்சி – ஆகியவர்களைப் பற்றியும் கட்டுரையில் எழுதப்போகிறேன். இளம் வயதில் சிரமப்பட்டாலும், வயதான காலத்தில் கஷ்டப்படாமல் இருக்கும் பாக்கியத்தை அந்த மூன்று பேர்களும் எங்களுக்கு வழங்கியதை நினைத்து நானும் – என் தர்ம பத்தினியும் பெருமையும், பெருமிதமும் கொண்டு வாழ்வதையும் கட்டுரையில் எழுதி அவர்களை ஆசிர்வதிக்க வேண்டியது பெற்றோராகிய எங்களது கடமை. கட்டுரை தொடர்ந்து வரும் போது வேறு சில பாத்திரங்களைப் பற்றியும் பேசப்படும். அனத்தையும் சுவை குன்றாமல் – உண்மை மாறாமல் – உயர்வு நவிர்ச்சி இல்லாமல் எழுதுவது என்பது சிரமமான ஒன்று தான். மேலும் குறிப்பு எதுவும் இல்லாத நிலையில், சம்பவங்கள் எல்லாம் என் நினைவு அலைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து உங்கள் முன் படைக்க வேண்டும். அதில் இனிப்பு இருக்கும். காரம் இருக்கும். கசப்பு இருக்கும். எந்த விகிதத்தில் என்பது அந்த சம்பவங்களைப் பொறுத்தது. என்னையே பலர் ‘நீ ஒரு மிளகாய். காரம் அதிகம் உள்ள மிளகாய்’ என்று கணித்துள்ளார்கள். ‘நான் ஒரு மறதி மன்னன்’ என்பதும் எனக்குத் தெரியும். வாழ்வில் என்னை இந்த மிளகாய்க் காரமும், மறதியும் தான் பக்கபலமாக இருந்து காப்பாக – அரணாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன். அதைப் பற்றியும் கட்டுரையில் தெளிவு படுத்த விரும்புகிறேன். எழுதுகோலை எடுத்து விட்டேன். முருகா! என் பணி சிறப்பாக அமைய பிரார்த்திகிறேன். ஒரு சிறு குறிப்பு: என் இலக்கிய படைப்புகளை உருவாக்க நோட்டுப் புத்தகங்கள் வாங்கி அதில் எனது கருத்துக்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், உருவகக் கதைகள் என்று பல கதம்ப மாலை போல் எழுதுவது என் பழக்கம். அதில் நான் படித்த புத்தகங்களின் மேற்கோள்களும் இருக்கும். அப்படி வாங்கிய நோட்டுப் புத்தகம் ஒன்றில் என் அம்மாவை முதன் முதலில் பிள்ளையார் சுழி போன்று நோட்டு புத்தகத்தின் ஆரம்ப பக்கத்தில் 1959-ம் வருடத்தில் எழுதி வாங்கிய அம்மா கைப்பட எழுதிய வாசகம் தான் இது. ‘என் உள்ளத்தில் ஒளி விளக்காகத் திகழும் என் அம்மா’ என்ற என் வாசகத்திற்குக் கீழே என் அம்மாவின் கையெழுத்தை வாங்கியும் பதிவு செய்தேன். அம்மாவின் பாதம் பணிந்து, நினைவு கூர்ந்து என் இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறேன். அத்தியாயம் 1: சிங்கிகுளம் – அப்பாவின் பூர்விக கிராமம் சிங்கிகுளம் அப்பாவின் பூர்விகமாக இருந்தும், அந்த குக்கிராமத்தில் கொலு வீற்றிருக்கும் எங்கள் குல தெய்வமான கைலாசநாதர் சமேத – ஆவுடை அம்மன் அருள்பாலிக்கும் கைலாசநாதர் கோவிலை பாட்டி – அப்பா உயிரோடு இருக்கும் போது தரிசிக்க வில்லை. அம்மாவுடன் என் கல்யாணத்திற்கு முன் ஒரு தடவை சிங்கிகுளம் சென்றதாக ஞாபகம். ஆனால் அப்போது கோயில் மிகவும் பாழடைந்து – பாம்புகள் – கூட்டம் கூட்டமாக வெளவால்கள் கோயில் முழுவதிலும் இருந்ததாலும் அங்கு பூஜைகள் நடைபெறாததாலும் கோயிலுக்குச் சென்றதாக நினைவில்லை. சிங்கிகுளம் அப்பா காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அந்தக் கற்பனையில் உண்மை குடிகொண்டிருக்கும் என்பது திண்ணம். சிங்கிகுளம் அக்ரஹாரம் பச்சையாறு என்ற தாமிரபரணியின் கிளையாறாக சிங்கிகுளத்தின் அக்ரஹாரத்தின் முன்னால் ஓடுகிறது. ஆகையால் அக்ரஹாரத்தை அந்த ஆற்றை பரிசல் மூலம் தான் தாண்டி அடையவேண்டும். அந்த பச்சையாறு மேற்கு திசையிலிருந்து வடக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. அது சிறப்பு என்று சொல்கிறார்கள். அந்த ஆற்றின் கறையில் தான் கைலாசநாதரின் மிகவும் அற்புதமான சிற்பங்கள் நிறைந்த இரண்டு சந்நிதிகள் – சிவன் – அம்மாள் சந்நிதிகள் – மேற்கே பார்த்து அமைந்துள்ளன. அந்தக் கோயில் கற்கோயில். 1000 வருடங்கள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. அது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கலாம். கபாலிஸ்வரர் ஆலயத்தில் சிவன் மேற்கே பார்க்க கற்பகாம்பாள் தெற்கே பார்த்து அருள் பாளிக்கிறாள். ஆனால் சிங்கிகுளத்தில் சிவன் – அம்பாள் இருவரும் மேற்கே பார்த்து அருள் பாளிக்கிறார்கள். இது சிறப்பானது என்று கருதப்படுகிறது. ராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள் என்பதில் களக்காடு – சத்யவாகீசர், பத்தை – குலசேகரநாதம், பதுமனேரி – நெல்லையப்பர், தேவநல்லூரி – சோமநாதம் ஆகிய நான்கில் ஐந்தாவதாக குறிப்பிடப்படும் தலம் சிங்கிகுளம் – கைலாசநாதர் கோயிலாகும். மேலும் சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்) என்று சிறப்பிக்கப்படும் கோயில்களில் சிங்கிகுளம் – கைலாசநாதர் திருக்கோயில் ‘ஞானலிங்கத் தலம்’ என்ற சிறப்பைப் பெற்றதாகும். ‘மூர்த்தி சிறியது ஆனால் கீர்த்தியோ பெரியது’ என்ற அளவில் சிங்கிகுளம் கைலாசநாதர் – ஆவுடை அம்மை புகழ்பெற்ற கோயிலாகும். மேலும் சிங்கிகுளக் கோயிலில் சனீஸ்வர சந்நிதி தனியாகக் கிடையாது. சூரியர், சந்திரன் சனிஸ்வரன் ஆகியவர்கள் கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளப் பட்டுள்ளார்களே ஒழிய நவக்கிரகங்கள் ஒன்றாக மற்ற கோயில்களில் இருப்பதைப் போல் இங்கு தனியாக சன்னிதி இல்லை. மேலும் ராகு – கேது சிலைகளும் கிடையாது. அதற்கு இங்குள்ள மூலவர் கைலாசநாதரே ராகு-கேதுவாக பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார் என்பது ஐதீகம். ஆகையால் லிங்க வடிவில் அமைந்துள்ள கைலாச நாதரை வழிபட்டாலே ராகு-கேது கிரஹ தோஷங்கள் நீங்கிவிடும். தனியாக பக்தர்கள் ராகு-கேதுக் கிரஹங்களுக்கு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாகிறது. மேலும் மூலவரே ராகு-கேது கிரஹங்களை கட்டுப்படுத்துவதால் மூலவரின் வழிபாடு சக்தி வாய்ந்த ஒன்றாகிறது. இந்தக் கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சிலை மிகவும் அற்புதக் கலை அம்சம் கொண்டு பிரார்த்திப்பவர்களின் உள்ளங்களில் அப்படியே பதிந்து ஆனந்த சாகரத்தில் மூழ்கடிக்கும் சக்தி கொண்டதாக அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மீன் உருவம் கோயில் இடது புரம் உட்பிரஹாரத்தின் மேல் தளத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அதைத் தொட்டு பிரார்த்தித்தால் நரம்பு வியாதிகள் குணமாகும் என்பார்கள். அதுவும் இந்தக் கோயிலின் சிறப்பாகும். அந்த மீன் சிற்பத்தைத் தொட்டு வணங்க வசதியாக தனியான இரும்பு ஏணி ஒன்று அங்கு இருக்கிறது. தமிழக நதிகளில், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் பயணித்து, தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி தாமிரபரணிதான். இதை, தென்பாண்டி நாட்டின் செல்வி’, ‘பொதிகையின் குழந்தை’, ‘பொன் நிறத்துப்புனல் பெருகும் பொருநை’, ‘பாணதீர்த்தம்’, ‘தட்சிண கங்கை’ என்று பலவாறாக அழைக்கின்றனர். தாமிரபரணி. ஊற்றெடுத்த மாவட்டத்திலேயே கடலில் கலக்கிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த தாமிரபரணியின் கிளையாறான பச்சையாறு, சிங்கிகுளத்திற்கு ஒரு அரணாகவும், தாகம் தீர்க்கும் தீர்த்தமாகவும், நெல் – வாழை விவசாயம் செழிக்க உதவும் பாசன நீராகவும் இருப்பது ஒரு சிறப்பே ஆகும். அந்த அற்புதமான கைலாச நாதர் கோயிலின் பின்புறம் தாம் அக்ரஹாரம். ஒரே தெருதான். கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஒரு தெப்பக்குளம். அந்த இரண்டு வரிசைகளில் மொத்தம் வரிசைக்கு 40/50 வீடுகள் என்ற கணக்கில் 80/100 வீடுகள் இருந்தாலே அதிகம். அந்த வீடுகள் அனைத்தும் மிகவும் சிறியதாகவும், ஒன்றை ஒன்று ஒட்டிக் கட்டப்பட்டதாகவும் தான் இருக்கும். அங்கு கோயில், தெப்பக்குளம், பச்சையாறு – என்று அக்ரஹார மக்கள் ஒரு சிறு வட்டத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆற்றைக் கடந்துதான் பெற வேண்டும். படிப்பு வேதபாடசாலையோடு சரி. அதையும் அங்குள்ள பண்டிதர்கள் ஆசிரியர்களாக பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். கோயிலில் நித்திய பூஜை நடக்க வேண்டிய மந்திரங்கள் – ஸ்லோகங்கள் – யாகங்கள் ஆகியவைகளோடு நின்று விடும். சிங்கிகுளம் சிருங்கேரி மடத்துடன் தொடர்புள்ளதால், அங்குள்ள பண்டிதர்களும் இங்குள்ள வேதபாடசாலைக்கு வந்து வழிகாட்டுவதும் இருக்க சாத்தியக் கூறுகள் உண்டு. சிங்கிகுளம் திருநெல்வேலியிலிருந்து சுமார் 27 கி.மீ.ட்டர் தூரம் தான் என்றாலும் அந்தக் காலத்தில் போக்குவரத்து வண்டிமாட்டைச் சார்ந்து இருப்பதால் அதுவும் திட்டமிட்டுச் செயல்பட்டால் தான் முடியும். அதுவும் அக்ரஹரத்தில் உள்ள பலர் ஏழைகளாக இருப்பதால் அதுவும் அத்தி பூத்தது போல் தான் நிகழ வாய்ப்புண்டு. அக்கிரஹாரத்திலில் உள்ளவர்களுக்கு நிலம் உண்டு. அதைக் குத்தகைக்கு விட்டு அதன் விளைச்சலில் தான் ஜீவனம் நடத்தி வந்துள்ளனர். ஒருவருக்கொருவர் உதவி செய்து தான் அவர்கள் வாழவேண்டிய நிர்பந்தத்தால் அக்ரஹார பிராமணர்கள் ஒன்றுமையாகவே இருந்திருக்க வேண்டும். எல்லாமே கோயிலை மையமாக வைத்துத் தான் தெருக்கள் கலை கட்டும். ராமாயணம், மஹாபாரதம், பாகவதம், கீர்த்தனைகள் என்று அவர்கள் பொழுதைக் கழித்திருக்கக் கூடும். காலையில் எழுந்திருந்து பச்சையாற்றில் நீராடி, கைலாசநாதர் – ஆவுடை அம்மன் தரிசனம் செய்து வணங்கி, மனமுருகி சில ஸ்லோகங்கள் சொல்லி, தங்கள் நாளை இனிதாக ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டு வாழ்க்கையை நடத்தியர்கள் அவ்வூர் அந்தண அக்ரஹார மக்கள். தெருக்கோடியில் இருக்கும் தெப்பக்குளத்திலும் நீராடி விட்டு, கோயிலுக்குச் சென்று கும்பிடுவோர்களும் இருக்கலாம். அந்த பொன்னான நேரங்களில் ஆண்களும், பெண்களும் உரையாடி தங்கள் சுக துக்கங்கள் – ஊர் நிலவரங்கள் ஆகியவைகளையும் பகிர்ந்து தங்கள் சிறிய உலகத்தில் உலா வந்தவர்கள் தான் அந்த சிங்கிகுள அக்கிரஹாரத்தினர். சிறுவர் – சிறுமிகள் பச்சையாற்றிலோ அல்லது தெப்பக்குளத்திலோ நீந்தி, நீரிலே விளையாடியபடி குளித்துக் குதுகலமாக ஒவ்வொரு காலை மாலைகளைக் கழித்த தருணங்கள் அவர்களுக்கு தேனாகத் தித்திருக்கும் என்று நம்பலாம். சின்னச் சின்ன ஆசைகளுடன் இருக்கும் ஆன்மீகத்தை ஆராதிக்கும் அந்த குக்கிராமத்து மக்களின் வாழ்க்கையில் என்றும் வசந்தம் தான் என்ற அளவில் வாழ்க்கையை நடத்தி இருப்பார்கள் என்றே தோன்றுகிறது. திருக்கார்த்திகை, சிவராத்திரி, மார்கழி, திருவாதிரை, கந்த சஷ்டி, சங்கராந்தி, தமிழ்ப் புத்தாண்டு என்பதை எல்லாம் தங்கள் வீடுகளில் கோலங்கள் போட்டு மங்களமாக கோலாட்டம், கும்மி என்று அக்ரஹாரப் பெண்கள் மகிழ்ந்து குதூகலிப்பார்கள் என்றும் தெரிகிறது. ஒரு வீட்டில் விசேஷம் என்றால் அந்த ஆனந்தம் அனைத்து வீடுகளிலும் எதிரொலிக்கும். கல்யாணம் என்றால் அப்போது ஐந்து நாட்கள் நடக்கும். சமபந்தி விருந்து, குதுகலமான கோலாட்டம், கும்மி, கோரசாக பக்திக் பாட்டுக்கள், பிள்ளை வீட்டார் – பெண்வீட்டார் என்று இரு குழுவினராக கேலியான ஏட்டிக்குப் போட்டிப் பாட்டுக்கள் – ஆனந்தம் ஆனந்தமே என்று மனம் குதூகலிக்கும் நிலையில் அக்ரஹாரமே ஆனந்த சாகரத்தில் திளைக்கும் என்று கருதலாம். அதே சமயம் ஒரு வீட்டில் துக்கம் என்றால் அனைவர் வீடும் சோகத்தில் மூழ்கி அவர்களின் துக்கத்தில் பங்குகொண்டு, பகிர்ந்து கொண்டு, துணையாக உதவிசெய்து இருக்கும் அற்புதமான மனநிலையை அதுமாதிரி சிறிய அக்ரஹாரத்தில் குடியிருந்து அனுபவித்தால் தான் தெரியும். வியாதி வந்தால் பாட்டி வைத்தியம் தான். மருந்து கைலாச நாதர் விபூதியும், அம்பாளின் குங்குமமும் தான் என்ற நிலையில் வாழ்ந்த – விதி யாரை விட்டது என்று மனத்தைத் தேற்றி – காலம் கழிக்கும் சாதாரண வைதீக பிராமணர்களைக் கொண்ட அக்கிரஹாரமாகத் தான் சிங்கிகுளம் இருந்திருக்க வேண்டும். இந்த தனித் தீவு வாழ்வு பிறகு சலித்து, அக்கிரஹாரம் முழுவதும் காலியானதும் இதன் காரணமாகத் தான் இருக்கும். கைலாச நாதரையும் – அம்பாளையும் அவர்கள் மறந்து, குடிபெயர்ந்தது தான் ஆச்சரியம். அரணாக அமைந்த பச்சையாறு ‘அரண் இல்லை; தனிமைச் சிறைச் சுவர்கள்’ என்ற எண்ணம் காலப்போக்கில் அங்குள்ள அக்ரஹாரத்தினருக்கு எழுந்திருக்கலாம். அதனாலும் அவர்கள் வேறு இடம் பெயர்ந்து சென்றிருக்கலாம். அதில் எங்கள் வம்சத்தினரும் சேர்ந்துள்ளார்கள். மேலும், கிராமத்தைச் சுற்றியும் இருக்கும் செழிப்பான நஞ்சை நிலமும், குத்தகை மகசூல்களை சமூக மாற்றம் காரணமாக வசூல் செய்யமுடியாமல் துயருரும் நிலையாலும், உத்தியோகப் படிப்பு படிக்க வசதி இல்லாத நிலையாலும் அக்குக்கிராமம் காலியாகி இருக்கலாம். அதனால் கோயில் பூஜை இன்றி பல வருடங்கள் இருந்து, கோயிலும் – கோயில் மதில் சுவர்களும் இடிந்து, புதர் மண்டி பாம்புகள் – வெளவால்கள் வாசம் செய்யும் இடமாக மாறிவிட்டது. இருப்பினும், கற்பனையில் காலையில் கோலங்களால் இருபுறமும் அழகாக இருப்பதைப் பாரத்து மனது இப்போது நினைத்துக் குதூகலிக்கத் தான் செய்யும். அதிலும் அற்புதமான அமுதநீராக சிங்கிகுளத்தையே அணைத்து அரணாக ஓடும் பச்சையாறும், சிங்குளத்து அனைத்து திசைகளைகளிலும் பச்சைப்பசேல் என்று நிலம் முழுவதையும் பச்சை வர்ணம் பூசி அழகூட்டி அன்னதானம் அளிக்கும் அன்னபூர்ணித்தாயின் ஆசியையும் நினைத்து நினைத்து அவ்வூர் மக்கள் இன்றும் பெருமைப்படலாம். அது தான் சிக்கிகுளத்தின் சிறப்பு. அத்தியாயம் 2 கைலாச நாதர் கோயில் திருப்பணியும், கும்பாபிஷேகமும் அம்மா இறந்த 1986-ம் வருடத்திற்குப் பிறகு எனது உறவுக்காரர் ‘நீங்கள் குடும்பத்துடன் உங்கள் குலதெய்வத்தைத் தரிசனம் செய்து விட்டு வாருங்கள்’ என்று சொன்னார். அதனால் என் சித்தப்பா கமுதி ஈஸ்வரய்யர் இளைய மகன் கிருஷ்ணமூர்த்தி பத்தமடை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்துள்ளார். அவரது மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலையில் இருந்தார். அவரது பையன் குமாரும் அவருடன் படித்துக்கொண்டிருந்தான். ஆகையால் நான், என் மனைவி, மகள் மீரா, மகன் கணேஷ் ஆகியவர்களுடன் பத்தமடை வந்து அங்கிருந்து அவரும் அவரது மகன் குமார் அனைவரும் சிங்கிகுளம் சென்றோம். அப்போது கைலாசநாதர் கோயில் மிகவும் பாழடைந்து வெளவால்கள் மலிந்து வெளிச்சம் இன்றி இருந்தது. அங்கு குடியிருக்கும் அர்ச்சகர் பூஜை செய்து வந்தார். மீரா – கணேஷ் வெளவால்களால் கோயிலுக்கு உள்ளே வரவே பயந்தார்கள். பிறகு ஒரு வழியாக உள்ளே சென்று அபிஷேகம் – சக்கரைப் பொங்கல் நிவேதனம் ஆகியவைகள் சிவன் – அம்பாள் சந்நிதியில் அர்ச்சகரின் துணையுடன் செய்தோம். அப்போது மதில்கள் இடிந்தும் – வெளிப்பிரகாரம் புதர் – முட்கள் – பாம்புகள் என்று கோயிலைச் சுற்றி வரமுடியாத அளவில் சிதலமடைந்து காணப்பட்டது. திரும்பவும் மீரா கல்யாணத்திற்குப் பிறகு சிங்கிகுளம் கோயிலுக்கு வரும் போது கோயில் திருப்பணிகள் மிகவும் மும்முரமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்க்கும் போது மிகவும் அச்சரியமாகி இருந்தது. அதற்கு மூல காரணம் சிங்கிகுளத்தைப் பூர்விகமாகக் கொண்டு சென்னை சிட்லபாக்கத்தில் ‘லாஜிஸ்டிக்’ என்ற பொருட்களை பேருந்துகள் மூலம் இந்தியாவின் பல நகரங்களில் கொண்டு செல்லும் நிறுவனத்தின் உரிமையாளரான திரு. எஸ்.வி.எஸ். மணி அய்யர் தான். அவர் தான் தனி ஆளாக முன்னின்று, சிங்கிகுளம் கிரம மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன், அற்புதமாக கோயிலைச் சீரமைத்தார். மதில் சுவர்கள், பிரகாரங்கள், கோயில் கோபுரங்கள் இவைகள் புதிப் பொலிவுடன் காட்சி அளித்தன. கோயிலின் துவஸ்தம்பத்தையும் புதிதாக நிறுவியதும் மிகவும் முக்கியமான பணியாகும். கோயிலில் உள்ள கிணரை தூர்வாரி, மோட்டார் – குழாய் வசதிகள் செய்து, ஒவ்வொரு சந்நிதியிலும் தண்ணீர் கிடைக்க வழி செய்துள்ளார். மேலும் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க ஜெனரேட்டரையும் நிறுவி உள்ளார். அர்ச்சகர்களுக்குத் தங்குவதற்கும் மூன்று நான்கு வீடுகள் – மின்சாரவசதி, வீட்டிலேயே தண்ணீர் வரும் பைப் வசதி கட்டி உள்ளார். தான் வந்தால் அங்கேயே தங்குவதற்கும், அன்னதானம் செய்யப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை பத்திரப்படுத்துவதற்கும், அன்னதான கூடத்துடன் ஒரு பங்களா போல் ஒரு வீட்டையும் கோயிலை ஒட்டியே கட்டி உள்ளார். அத்துடன் கோயிலுக்கு மழைகாலத்தில் வெள்ளம் வரும் போது பச்சையாற்றைக் கடக்க முடியாது. ஆகையால் எந்தக் காலத்திலும் தடையின்றி கோயிலுக்கு பக்தர்கள் வரப் பயன்படும் விதமாக ஒரு பாலத்தையும் கட்டி உள்ளார் மணி அய்யர். 2007-ம் ஆண்டு தொடங்கிய இந்த கோயில் திருப்பணி கும்பாபிஷேகம் நடக்கும் வியாழன் ஜூன் மாதம் 4-ம் தேதி, 2009-ம் ஆண்டுக்குள் முடிந்து விட்டது. அதற்குள் கோயில் பெரிய பிரஹாரத்தில் பல தென்னை மரங்கள், பூச்செடிகள் என்று கோயிலுக்கு பூஜைக்கே போதுமான பூக்களும், இளநீர், தேங்காயும் கிடைக்கச் செய்து விட்டார். அவைகளைப் பராமரிக்கவும் ஆட்களை நியமித்துள்ளார். 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும் பங்கை திரு. எஸ்.வி.எஸ். மணி அய்யர் அவர்களே ஏற்று நடத்தினார் என்றால் அதற்கு அவரது மூதாதையர்களின் ஆசியினால் குலதெய்வத்துக் கோயில் திருப்பணி செய்யும் பாக்கியம் கிட்டியது என்று தான் சொல்லவேண்டும். அவருக்கு சிவன்-அம்பாள் அருள் முற்றிலும் கிட்டியது என்றால் மிகையாகாது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சிருங்கேரி சாரதா பீடத்தின் சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணய்யர் தலைமை வகித்தார். சென்னையைச் சேர்ந்த லட்சுமி நாராயண கனபாடிகள் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்திவைத்தார். விழாவில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அந்த கும்பாபிஷேக விழாவில் நானும், என் மனைவி வத்ஸலாவும் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்றோம். அருள்தரும் ஸ்ரீ ஆவுடை அம்பாள் சமேத – அருள்மிகு கைலாசநாதர் கோயில் – சிங்கிகுளம் கும்பாபிஷேகம் நடந்து 12 வருடங்கள் ஆகப் போவதால் அடுத்த வருடம் 2021 மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய மராமத்து போன்ற வேலைகள் ஆரம்பித்து விட்டதாக திரு. மணி அய்யர் தெரிவிக்கிறார். உண்மையிலேயே சிங்கிகுளம் கைலாச நாதர் கோயில் சிறப்பாக செயல்படுவதைக் காணும் போது, சொந்த ஊர் கோயில் என்பதால் மனது மிகவும் சந்தோஷத்தில் ஆனந்தக் கூத்தாடுகிறது. . எஸ்.வி.எஸ். மணி மத்தமடையில் படிக்கும் போது அவருக்கு ஆசிரியையாக இருந்தவர் என் சித்தப்பா பையன் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். கீழே உள்ள வீடியோவில் மணி அய்யர் கோயிலைப் பற்றி விளக்குவதைக் கேட்கவும்: https://www.youtube.com/watch?v=6EMfYH7w7eQ சிங்கிகுளம் – சில முக்கியத் தகவல்கள் சிங்கிகுளம் கிராமப் பஞ்சாயத்து திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இதன் மொத்த மக்கள் தொகையே – 4500 தான் – ஆண்கள்: 2200 பெண்கள்:2300 – ஆதாரம்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு. சிங்கிகுளம் என்ற பெயர் பற்றிய தகவல்கள்:. சிங்கிகுளத்தின் பழைய பெயர் ராஜராஜபுரம் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில் மூலவர் ராஜராஜ விண்ணக பெருமான் என்ற பெயரைத் தாங்கியவராக விளங்கியதால் தான் அதனை முன்னிருத்தி இக்கிராமம் ராஜராஜபுரம் என அழைக்கப்பட்டதாகச் சொல்வர். ஆனால் அதற்குப் பிறகு வைணவர்களின் ஆதிகாரம் வலுவிழந்த காரணத்தினால், சைவர்கள் கை ஓங்க அதனால் ‘சிங்கிதேவன்’ என அழைக்கப்பட்ட வீரனின் பெயரில் சிங்கிமாநகர் என்றும், சிங்கிகுளம் என்றும் அழைக்கப்பட்டன. இந்த இரண்டைத் தவிர மூன்றாவதாக சிங்கிகுளம் பெயர் பற்றிய தகவல் ஒன்றும் உள்ளது. சிங்கிகுளம் அருகில் உள்ள களக்காட்டு மலையில் காணப்படும் ஒருவகை குரங்கின் வால் சிங்கத்தின் வால் போன்றுள்ளது. இக்குரங்கு சிம்மவால் குரங்கு எனக் குறிப்பிடப்படுகின்றது. சிங்கவால் குரங்கு ஒன்று சிங்கிகுளத்தின் அருகில் உள்ள குளத்தில் நீர் குடிக்கும்பொழுது அதன் வாலினைமட்டும் பார்த்துவிட்டு சிங்கம் எனக்கூறிவிட்டனர். அதனால் அந்தக் கிராமம் சிங்கம் காத்த குளமானது.அதுவே காலப்போக்கில் சிங்கிகுளமாகியது. ஆஹா! எங்கள் பூர்விக குக்கிராமத்திற்கு இவ்வளவு மகிமையா? – என்று பெருமை கொள்ளும் விதமாக தகவல்கள் கிடைப்பதைப் பார்த்து ஆச்சரியமும் அதிசயமும் படுகிறோம். அத்தியாயம் 3: சிங்கிகுளம் பகவதி அம்மன் மலைக் கோயில் சிங்கிகுளம் பச்சையாற்றின் மேற்குக் கரையிலிருந்து வடக்கு திசையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சிறு மலை உண்டு. அந்த மலையின் மீது இரு அறைகள் கொண்ட மண்டபம் கட்டப்பட்டு, அதில் வடக்கு திசை நோக்கி ஒரு சித்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வாசலுக்கு எதிரே உள்ள மண்டபத்தின் மூலையில் கிழக்கே பார்த்து பகவதி அம்மன் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த மலையில் ஏறுவதற்கு வசதியாக ஒத்தையடிப்பாதையும், பிறகு படிகளும் இருப்பதால் சுலபமாக மலை ஏறி விடலாம். ஆனால் அங்கு கருங்குரங்குகள் வாசம் செய்யும் மலையானதால் அதன் தொந்தரவையும் தாண்டித்தான் மலை ஏறவேண்டும். கையில் ஒரு கம்பை வைத்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் நான் மட்டும் பூ மாலைகள் - பழங்களுடன் மலை ஏறும் போது ஒரு பெரிய கருங்குரங்கு நான் வைத்துள்ள பையைப் பிடிங்கி அதில் உள்ள பழங்கள் அத்தனையையும் மனிதர்கள் தோலை உரித்துச் சாப்பிடுவது போல் வாயில் போட்டு விழுங்கியது. மற்ற குரங்குகளை கிட்டே நெருங்க விடாமல் அவைகளுக்கு ஒரு பழம் கூடக் கொடுக்காமல் அனைத்தையும் அந்தப் பெரிய குரங்கே சாப்பிட்டு விட்டுப் போய் விட்டது. பிறகு பூ மட்டும் இருந்த பையை எடுத்துக் கொண்டு மலை ஏறி அபிஷேகம் – அலங்காரம் – நைவேத்தியம் – ஆரத்தி ஆகியவைகளைச் செய்து மலையிலிருந்து கீழே இறங்கினோம். மலை மேலேயும் குரங்குகளின் தொந்தரவு இருந்தது. அந்தக் குரங்கு மிகவும் லாவகமாக பூக்களுக்கோ அதில் உள்ள வஸ்திரங்களுக்குகோ எந்தவிதமான ஹானியும் உண்டாக்காமல் எடுத்து பழங்களை உரித்துத் தின்றதை இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த மலையில் என்றும் வற்றாத இரண்டு சுனைகள் உண்டு. ஒன்று கோயிலுக்குப் பின் புறமும், மற்றது கோயிலுக்கு வரும் வழியில் எதிராகவும் உள்ளது. கோயில் மண்டபத்திற்குப் பின்புறம் இருக்கும் சுனையின் நீரை பகவதி அம்மன் அபிஷேகம் – அன்னம் படைப்பு ஆகியவைகளுக்குப் பயன்படுத்தியும், கோயில் மண்டபத்தின் எதிரே பாதையில் உள்ள மற்ற சுனை நீரை பக்தர்கள் கைகால்கள் அலம்பவும் பயன்படுத்துகின்றனர். மலைப் பகவதி அம்மன் கொலுவீற்றிருக்கும் கோயில் ஒரு மண்டபம் போல் தான் காணப்படுகிறது. அதற்கு கோபுரம் இல்லை. அங்குள்ள சித்தரும் சமணத் துறவி போல் தான் காணப்படுகிறார். இம் மலையில் பாண்டியர் காலத்தில் சமண முனிவர்கள் வாழ்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. சமண மதத்தைச் சார்ந்த களப்பிரர் ஆண்ட களக்காடு இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் மலையைச் சுற்றி சமணர்கள் வாழ்ந்த தடையங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. கிபி 2 மற்றும் 3 நூற்றாண்டுகளிலிருந்து சமண மதம் இருந்துள்ளதற்கு இந்த மலையே சான்றாகத் திகழ்கிறது. மலையைச் சுற்றி, பாழிகள், பாண்டிய மன்னர்களின் கல்வெட்டு ஆதாரங்கள் ஆகியவைகளைக் காணலாம். இந்த மலை சுமார் 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. போகும் பாதையில் பெரிய ஆலமரங்கள் உண்டு. மேலே மலையில் உள்ள சுனை நீர் மிகவும் சுவையானதாகவும், வற்றாததாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த மலையை முன்பு ஜினர் கிரி என்ற வடமொழிச் சொற்களால் அழைத்துள்ளதாகத் தெரிகிறது. ஜின கிரி என்பதில் ஜினர் என்றால் சமணர் – கிரி என்றால் மலை என்றும் பொருள்படும் என்பதாலும் அந்த மலை மண்டபகக் கோயில் சமணர்களின் இருப்பிடமாக இருந்து பிறகு பகவதி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பகவதி மலைக் கோயில் என்று சொல்லப்பட்டடதாக நம்பும் ஆதாராங்கள் உள்ளன. இந்தக் கோவிலைப் பராமரிக்கும் பணியையும் கைலாசநாதர் கோவில் பணியுடன் சேர்த்தே செய்கின்றனர். இதன் ஒருவேளை பூஜையையும் கைலாசநாதர் கோயில் நிர்வாகமே மேற்கொண்டுள்ளது. மலையிலிருந்து பார்க்கும் பொழுது சிங்கிகுளம் நெல்வயல்களாலும், வாழை மரங்கள் – தென்னை மரங்கள் என்று கண்ணிர்க்கு விருந்தாக அமைவதைக் காணலாம். அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே மலை இறங்கலாம். சக்தி வாய்ந்த பகவதி அம்மனின் அருளையும் சிக்கிகுள அக்ரஹார வாசிகளும், கிராமத்துச் ஜனங்களும் அனுபவித்திருக்க வேண்டும் என்று தான் தெரிகிறது. அம்மா இறந்த பிறகு சிங்கிகுளத்திற்கு முதலில் அந்தக் கோயில்கள் பாழடைந்து ஒருகால பூஜைக்கே திண்டாடவேண்டிய நிலையில் இருக்கும் தருணத்தில் நான் என் மனைவி என் மகள் – மகன் ஆகியவர்கள் கைலாச நாதர் கோயில் – மலைக் கோயில் ஆகியவைகளில் தரிசனம் செய்துள்ளேம். அந்த இரு கோயில்களையும் இரு தனியான அர்ச்சகர்களை ஊர்க்காரர்கள் ஏற்பாடு செய்து ஒரு கால பூஜை நடந்த சமயம். அப்போது சுவாமிக்கு வஸ்திரம், ஆவுடை மற்றும் பகவதி அம்மன் ஆகியவர்களுக்குப் புடவை, சித்தருக்கு வஸ்திரம், சுற்றுவட்ட தேவதைகளுக்கு வஸ்திரங்கள் என்று வாங்கியும், அந்த இரு அர்ச்சகர்களுக்கும் வேஷ்டிகள் – அங்கவஸ்திரங்கள், அவர்கள் மனைவிமார்களுக்கு புடவைகள் ஆகியவைகளுடன் பூ – பழங்கள் என்று தாரளமாகவே வாங்கி கோயில் வழிபாட்டினைச் செய்தோம். அந்த இரு அர்ச்சர்களுக்கும் தக்ஷிணையும் தாராளமாகவே கொடுத்தோம். இதைப் பார்த்த அவர்கள் தங்களுக்கு மாதா மாதம் பணம் அனுப்பினால் செளகரிகமாக இருக்கும் என்றும் – குறைந்த பட்சம் ரூபாய் 300/- அனுப்ப வேண்டினர். உடனேயே அதற்கு ஒப்புக் கொண்டு மூன்று – நான்கு ஆண்டுகளாக தலா ரூபாய் 300/- பணத்தை ஒரு மாதம் கூட தவராமல் அனுப்பியதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. மலைக் கோயில் அர்ச்சகர் பேரில் அனுப்பிய மணியாடர் அவர் மலைக்கோயில் அர்ச்சகர் தொழிலை விட்டதால் மூன்று வருடம் தொடர்ந்து பணம் அனுப்பிய பிறகு நான் அனுப்பிய மணியார்டர் ஒன்று எனக்குத் திரும்பி வந்தது. அவர் மலைக் கோயில் அர்ச்சகர் பணியை விட்டதால் என்பதை நான் பிறகு தெரிந்து கொண்டேன். ஆகையால், கைலாசநாதர் கோயில் அர்ச்சருக்கு ரூபாய் 300/- க்குப் பதில் ரூபாய் 500/- அனுப்பினேன். இதுவும் இன்னும் ஒரு வருடம் தொடர்ந்தது. என்று கருதுகிறேன். அதன் பிறகு சிங்கிகுளம் கோயிலுக்குச் தரிசனம் செய்யச் சென்றால் மூலவருக்கு வஸ்திரம் – அம்பாளுக்குப் புடவைகள் ஆகியவைகளுடன் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு வேஷ்டி – அங்கவஸ்திரம் – அவர்கள் வீட்டிலுள்ள பெண்களுக்கு புடவை – தாரளமாக தக்ஷிணை என்று தொடர்ந்து செய்து வந்துள்ளேன். இங்கு பிரசுரமான படங்களில் ஸ்வாமி – அம்பாள் ஆகியவர்களுக்குச் சாத்தப்பட்ட வஸ்திரம் – புடவை – பூ மாலைகள் அனைத்தும் நாங்கள் திருநெல்வேலியிலிருந்து வாங்கி வந்ததாகும். அர்ச்சகர்களும் மிகவும் உற்சாகமாகவும் பக்தி சிரத்தையுடனும் அபிஷேகம், அலங்காரம், நிவேதனம், தீபாராதனை ஆகியவைகளை செய்து எங்கள் குல தெய்வங்களின் அருளைப் பெற வைத்தார்கள். இதை எல்லாம் நினைக்கும் போது எங்கள் பாட்டி – அப்பா – அம்மா ஆகியவர்களின் ஆத்மா குளிர்ந்து அவர்களின் ஆசிகள் கிட்டுவது உறுதி என்றே தோன்றுகிறது. கீழே உள்ள தினசரிப் பத்திரிகைச் செய்தியும் சிங்கிகுளத்தின் பெருமையை மேலும் சிறப்பூட்டும் என்பதால் இங்கு பிரசுரித்துள்ளோம். அத்தியாயம் 4 அம்மாவின் பூர்விகம் – திருநெல்வேலி டவுன் பெருமாள் கோயில் தெற்கு ரதவீதி அம்மாவின் அப்பா – அம்மா பற்றி எனக்குத் தெரியாது. அது பற்றி அம்மாவோ, அப்பாவோ, பாட்டியோ சொல்லவில்லை. அம்மாவிற்கு கூடப்பிறந்தவர்களே இல்லயா? – என்றும் தெரியாது. அம்மா எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கோயிலுக்கோ – சுற்றுலாவான இடங்களுக்கோ சென்றதில்லை. ஏனென்றால் அப்பா ஹோட்டல் நடத்தி அதில் முக்கிய பங்கான சமையல் வேலைகள் எல்லாம் அப்போதே அம்மாதான் செய்ய வேண்டும். அப்போதிலிருந்தே – உழைப்பு, உழைப்பு, உழைப்பு – என்று ஓயாத வேலைதான். அம்மாவின் குரல் ஒருபோதும் ஓங்கி ஒலிக்காது. அம்மா சத்தம் போட்டு கோபமாகப் பேசி நான் கேட்டதே இல்லை. எங்களையும் கோபிப்பதோ குறைசொல்லுவதோ அறிவுறுத்துவதோ கிடையாது. அதற்கு அம்மாவிற்கு நேரமும் இல்லை. குழந்தைகள் நன்கு படித்து முன்னுக்கு வரவேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அம்மாவிற்கு எப்போதும் உண்டு. உழைப்பைப் போல் சிக்கனமும் அம்மாவின் சின்னமாகவே கருதலாம். படிப்பிற்குப் பணம் தேவை என்றால் அம்மாதான் துணை நிற்பார். திருநெல்வேலி பெருமாள் கோயில் தெற்கு ரதவீதியில் கடைசி வீடுதான் எங்கள் வீடு. அது அம்மாவிற்குச் சொந்தமா? – என்றும் தெரியாது. அந்தத் தெருவின் கோடியில் எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு பிள்ளையார் கோயில் தெருவைப் பார்த்து அமைந்திருக்கும். அதற்குப் பின் புறம் என்றும் வற்றாத ஓடை உண்டு. அந்த திருநெல்வேலி வீட்டின் விசேஷம் என்னவென்றால் எங்கள் வீட்டை அடுத்த நான்கு வீட்டிற்கும் தோட்டம் கிடையாது. அத்தனையும் சேர்த்து வீடு சின்னதாக – மாடிக் கட்டிடமும் சேர்த்து இருந்தாலும், தோட்டம் மிகவும் பெரியது. அதில் பெரிய பெரிய நிழல் கொடுக்கும் மரங்கள் உண்டு. அந்த மரங்களின் இலைகள் தரை எங்கும் பரவி ஒரு பட்டுக் கம்பளம் விரித்த மெத்தை போல் நடப்பதற்கே சுகமாக இருக்கும். அதை நான் அங்கு அப்பா – அம்மாவுடன் வீட்டைப் பழுதும் பார்க்கும் போது அனுபவித்தது இன்றும் மனத்தில் பசுமை நினவாக நிறைந்துள்ளது. அம்மாவின் அம்மா தான் அந்தப் பிள்ளையாருக்கு தினமும் அபிஷேகம் பூஜை செய்வார்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு நான் தங்கியதே இல்லை. வீட்டை ரிப்பேர் செய்வதற்கு நானும் அப்பா அம்மாவுடன் சென்றதாக ஞாபகம். அந்த வீட்டையும் விற்றுத்தான் அதன் பணத்தைக் கொண்டு தான் என் அக்கா கோமதியின் கல்யாணம் நடந்தது. அதை விற்பதில் என் அண்ணா எப்போதும் போல் சரியாகச் செயல்படாமல் நஷ்டத்திற்குத் தான் விற்றதாகவும், விற்ற பணத்தையும் வீணாகச் செலவு செய்ததாகவும் அப்போது சொல்வார்கள். அது ஒரு தனிக் கதை. அதைப் பற்றிப் பிறகு எழுதுவேன். அத்தியாயம் 5 திருச்செந்தூர் வாசம் ஆரம்பம் பாட்டி – அப்பா – அம்மா திருச்செந்தூர் வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். ஆனால் அவர்கள் சிங்கிகுளம் அருகில் இருக்கும் திருநெல்வேலியை விட்டு ஏன் திருச்செந்தூரைத் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் சொந்த வீடு இருந்தது. நாங்குனேரியில் சிறிது நிலம் உண்டு. அதுவும் திருநெல்வேலிக்கு அருகில் தான். ஆனால் திருச்செந்தூரில் சொந்த வீடு கிடையாது. வாடகை வீட்டில் தான் குடியிருக்க வேண்டும். ‘திருநெல்வேலி ஒரு பெரிய நகரம். அதில் புதிதாக ஹோட்டல் நடத்துவது மிகவும் சிரமமாக இருக்கும். திருச்செந்தூர் தாலுக்கா தான். சிறிய ஊர். முருகன் கோயில் பிரசித்தம். அங்கு விழாக்களுக்கு பக்தர்கள் அதிகமாக எப்போதும் வருவார்கள். ஆகையால் திருச்செந்தூர் நமக்குச் சாதகமாக அமையும்’ என்று கருதி திருச்செந்தூரைத் தேர்வு செய்திருக்கலாம். நான் திருச்செந்தூரில் தான் பிறந்தேன். எனக்கு அண்ணா, அக்கா கூடப்பிறந்தவர்கள். திருச்செந்தூர் வாழ்க்கை அண்ணா அக்கா ஆகியவர்களுடன் சிறப்பாகவே இருந்தது. திருச்செந்தூரில் மைலப்பபுரம் தெருவில் இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தில் தான் ஓட்டல் ஆரம்பித்தார்கள். அந்த தெரு எங்கள் வீட்டிலிருந்து ஆரம்பித்து பாதி தூரம் மிகவும் அகலமாகவும், மற்ற பாதி குறுகலாகவும் இருக்கும். பக்கத்தில் தான் மிகப்பெரிய சிவன் கோயில். அதன் முன் உள்ள மண்டபம் மிகவும் நீண்ட ஒன்று. அதில் இருபுரமும் பல கடைகள் உண்டு. சிவன் கோயில் சிவன் சிலை- லிங்க ரூபம் - வெகு தொலைவில் இருக்கும். சிவனுக்கு அடுத்து அம்பாள் சன்னிதியும் உண்டு. அந்த ஸ்வாமிகள் கிழக்கே பார்த்து அமைந்திருக்கும். அந்தக் கோயிலின் மதில் சுவர் மிகவும் உயரமாக கற்களால் ஆனது. அதற்கு வெள்ளை – காவி வர்ணங்கள் தீட்டி பளிச்சென்று காட்சி தரும். கோயிலின் மதில் சுவரைச் சுற்றிலும் நாலா பக்கத்திலும் நந்தவனம் பூச்செடிகளாலும், தென்னை மரங்களாலும் நிறைந்து காணப்படும். அதிலும் செவ்வரளி பூச்செடிகளில் பூக்கள் பூத்துக் குளுங்குவதைப் பார்க்க பரவசம் உண்டாக்கும். அந்த நந்தவனம் நன்கு பராபரிக்கப்பட்டிருக்கும். இயற்கையாக சூரிய ஒளி கோயிலுக்கு உள்ளே விழும் படி பல சாளரங்களை மேல் தளத்திற்குக் கீழே இருபுரமும் பக்கவாட்டில் அமைத்துக் கட்டி உள்ளதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆகையால் கோயிலுக்குள் ஆங்காங்கே வெளிச்சம் இருப்பதால், இருட்டு அவ்வளவாக பக்தர்களைப் பாதிக்காது. சிவன் கோயிலுக்கு மூன்று தேர்கள் உண்டு. அவைகளின் தேர்கயிறு வடங்கள் – மிகவும் பெரிய அளவு வடங்கள் பெரிய தேருக்கு, சற்று சிறிய அளவு வடங்கள் இன்னொரு தேருக்கு, சிறிய அளவு வடங்கள் சிறிய பிள்ளையார் தேருக்கு – அனைத்தும் அந்தப் பெரிய சிவன் கோயிலின் இருபுரமும் அமைந்த திண்ணைகளில் வைக்கப்பட்டிருக்கும். அவைகளின் மேல் ஏறி விளையாடுவதிலும் ஒரு சுகம் உண்டு. திருவிழாக்களில் கோயில் களைகட்டும். வெளியூர் மக்களும், கடற்கரை முருகனைத் தரிசனம் செய்ய வருபவர்களும் இந்தக் கோயில் சிவனையும் தரிசிக்கவும், மண்டபகக் கடைகளில் பொருட்கள் வாங்கவும் செய்வார்கள். அந்த சிவன் கோயில் மண்டபத்தின் கடைசியில் இரு பக்கங்களிலும் மணலால் நிறப்பட்டிருக்கும். அதில் ஒரு பக்கத்தில் கோயில் ஒட்டகமும், மறு பக்கத்தில் கோயில் யானையும் இருக்கும். அதைத் தாண்டினால் தேர் வீதி வந்துவிடும். அந்த வீதியில் தான் மூன்று தேர்கள் – பிள்ளையாருக்குச் சிறிய தேர், அம்பாளுக்கு நடுத்தர தேர், சிவனுக்கு பெரிய தேர் – ஒவ்வொரு மூலையில் தகரத்தால் ஆன தட்டிகளால் மூடப்பட்டிருக்கும். இங்கிருந்து தான் கடற்கரைக் கோயிலுக்கு போகும் பாதை நெடுக பந்தல் போட்டு இருக்கும். அதன் வலது புறத்தில் லாலா கடை உண்டு. அதில் விற்கப்படும் அல்வா, பர்ப்பி, மைசூர்பாக், காராச்சேவ் ஆகியவைகள் அனைத்தும் பிரசித்தம். அங்கு பலமுறை அந்த பக்ஷணங்களை வாங்கி சாப்பிட்டிருக்கிறோம். திருவிழாக்களில் பல வண்டிகள் மாம்பழங்களை விற்பதற்கு அந்த தேர் ரதவீதி எங்கும் வண்டியையே கடையாக மாற்றி அதற்குக் கீழே மாம்பழங்களைப் பரப்பி விற்பார்கள். கிளிமூக்கு மாம்பழத்தை நான் தான் வாங்கி வருவேன். அந்த மாம்பழத்தின் தோலை ஒரு கலைநயத்துடன் உறித்துக் கூறுபோட்டுக் கொடுப்பான் அந்தக் கடையாள். வீட்டிற்குப் போய் அண்ணா, அக்காவுடன் பகிர்ந்து உண்பதின் ஆனந்தமே தனி. அதன் ருசிக்கு அடிமையாகி, ‘டே, சங்கரா! இன்னும் ஒரு மாம்பழம் வாங்கிண்டு வாடா’ என்று சொன்ன உடனேயே ஓடோடி மீண்டும் அதே கடையில் மாம்பழம் வாங்கி வருவேன். ‘ஏன், முதலிலேயே வாங்கச் சொல்ல வில்லை’ என்று குற்றம் சொல்லவே வராது. ஒவ்வொரு முறை வாங்கி ருசிப்பதில் ஒரு தனி இன்பம் காணும் வயது அது. எங்கள் தெருவைப் பார்த்துத் தான் சிவன் கோயில் மண்டபத்திற்குள் செல்லும் நுழைவாயில் உள்ளது. சிவன் கோயிலின் மதில் சுவரை ஒட்டியபடி ஒரு விறகுக் கடை – அதற்கு அடுத்து ஒரு சிறிய சுக்கு வெந்நீர் கடை உண்டு. அந்த சுக்கு வெந்நீர் கடை மாலை 6 மணிக்குத் திறந்து இரவு 9 மணிக்கெல்லாம் மூடிவிடும். மூன்று மணி நேரம் தான் கடையில் வியாபாரம் நடக்கும். அதிலும் சுக்கு வெந்நீர், பால் விட்ட சுக்குக் காப்பி, ஆமைவடை – ஆகியவைகள் மட்டும் தான் தினமும் அங்கு விற்பனை. ஆனால் அந்தக் கடையின் இந்த மூன்று பொருட்களும் ஊர்முழுக்க பிரசித்தம். அந்தக் கடை திறந்த உடனேயே கூட்டம் கூடிவிடும். வியாபாரமும் மும்முறமாக நடைக்கும் அந்தக் கடை ரொம்பவும் சின்னது தான். அகலமான இரண்டு ரூம்கள் உள்ள கடை. முன்புறமுள்ள அறையின் ஒரு பாதியில் சிறிய திண்ணை உண்டு. அதற்குக் கீழே உள்ள இடத்தில் தான் ஆமைவடைக்கு விறகு அடுப்பு – பக்கத்திலே சுக்கு வெந்நீருக்குக் கரி அடுப்பு மூட்டப்பட்டிருக்கும். அந்தச் சின்ன கடையின் விசேஷமே அங்கு காணப்படும் சுத்தம். ‘சுத்தம் சுகம் தரும்’ என்பார்கள். அதை அந்தக் கடைக்கார ஐயர் கடைப்பிடுப்பார். அவருக்கு உதவியாக அவரது மனைவி கூடமாட இருந்து வியாபாரத்தைக் கவனிப்பார். தொந்தியுடன் கருத்த நிறத்தில் தான் அந்த கடைக்கார ஐயர் இருப்பார். அவரது வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் உள்ள பூணூல் அவரது கடையின் விளக்கு வெளிச்சத்தில் தனியாக பளிச்சென்று தெரியும். அதுவே அவரது கடையின் சின்னமாகவே காட்சி அளிக்கும். ‘அவர் ஐயரே இல்லை. நாயர். ஐயருக்குத் தான் கடையைக் கொடுப்பார்கள் என்று யாரோ எச்சரித்ததால், பூணூலைத் தரித்துக் கொண்டு விட்டார்’ என்றும் சொல்வார்கள். ஆனால் அவர் கடை தொடங்கிய பிறகு அவ்வூர் மக்கள் அவரது கை மணத்தில் மயங்கி, அவரை மனமுவந்து ஆதரித்தார்கள். ஒரு சிறிய ஸ்டூலில் விறகு அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் எண்ணைச் சட்டியின் அருகே உட்கார்ந்து ஆமைவடையை வாழை இலைத் துண்டைக் கையில் வைத்துக் கொண்டு தட்டித் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போடுவதிலேயே ஒரு கலைநயம் இருக்கும். அதற்கு பல ரசிகர்கள் அவருக்கு உண்டு, நன்கு பக்குவமானதும் பெரிய கண்கள் உள்ள இருப்புக் கரண்டியில் எண்ணையை வடித்து பக்கத்தில் ஒரு ஸ்டூலில் இருக்கும் தட்டில் அவர் போடுவார். போட்ட மறுகணமே அவைகளை பேப்பரில் வைத்து அவரது மனைவி அங்குள்ளவர்களுக்குக் கொடுத்துக் காசிக்கி விடுவார். அப்போது ஊரில் மின்சார வசதி கிடையாது. மண்ணெண்ணை விளக்குதான். பல இடங்களில் சிறிய – பெரிய சிம்மினி விளக்குகள் தான் எரிந்து வெளிச்சம் கொடுக்கும். சில கடைகளிலும், வீடுகளிலும் ஹரிகேன் விளக்குகள் பயன்பாட்டில் இருக்கும். பெரிய மளிகை – ஜவுளி – நகைக்கடைகளில் தான் அதிசயமாக பெட்ரோமாஸ் விளக்குகள் எரிந்து நன்கு வெளிச்சத்தை நாலாபக்கமும் பரப்பும். அதற்கு வெள்ளைவேளேர் என்று இருக்கும் பல்பு போல் உருவம் கொண்ட ‘மேண்டில்’ என்ற விளக்குத் திரியை அவ்வப்போது புதிதாக வாங்கிப் போடவேண்டும். மண்ணெண்ணையும் அதிகம் அந்த விளக்கு குடிக்கும். ஆனாலும் இந்தச் சின்னக் கடையில் அந்த பெட்ரோமாஸ் விளக்கு எரிந்து வீதியையே ஒளிமயமாகச் செய்யும். அதுவே அந்தக் கடைக்கு ஒருபெரிய மதிப்பைப் பெற்றுத் தரும். உள்ளே உட்கார்ந்து சாப்பிடக் கூட இடம் அதிகம் கிடையாது. ஒரு நீளமான பெஞ்சு ஒன்று தான். அதில் மூன்று நான்கு பேர்களுக்கு மேல் உட்கார முடியாது. ஆகையால் பலரும் வெளியில் நின்று கொண்டு தான் சாப்பிட வேண்டும். அது எங்கள் வீட்டிற்கு மிகவு சமீபத்தில் எதிர் வரிசையில் ஒரு 30/40 அடி தூரத்து நடையில் சாய்வான திசையில் இருந்தது. அக்கடையிலிருந்து ஆமைவடை – சுக்குவெந்நீர் வாங்கி நான் – என் அண்ணா – என் அக்கா – வாங்கிச் சாப்பிட்ட நாட்கள் பல. ஏன், பாட்டி, அப்பா, அம்மா – ஆகியவர்களுக்கும் சில சமயங்களில் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். ஆசையாக அவர்களும் அருந்தி – பேஷ் பேஷ் – என்று நாயரான – ஐயரைப் புகழ்ந்து பேசுவார்கள். திருச்செந்தூரை வலம் வருவோம், வாரீர். சிவன் கோயிலின் மதில் சுவரை ஒட்டி எங்கள் வீட்டுத் தெருவின் வடக்கு திசை ஆரம்பத்தில் ஒரு பிள்ளையார் கோயில் உண்டு. அது தான் எங்கள் வீட்டு பிள்ளையார் கோயில் என்ற அளவில் அவரை எப்போதும் பிரார்த்திப்போம். மார்கழி மாதத்தில் அந்தப் பிள்ளையார் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான தயிர் சாதம் – சுடச் சுட இருக்கும் – அதுவே தேவாமிர்த்தமாக இருக்கும். சில சமயங்களில் அதை வாங்க என் பாட்டி ‘சங்கரா! எழுந்திரடா – பிள்ளையார் கோயில் பிரசாதம் கொடுக்கிறார்களடா’ என்று என்னை எழுப்பவும் நானும் எழுந்திருந்து அந்தப் பிரசாதத்தை வாங்கி பத்திரமாக வைத்து பிறகு பல் தேய்த்து சப்பிட்ட தருணங்கள் பல. ‘டே, எனக்கும் கொடுடா’ என்று என் அக்காவும், அண்ணாவும் பங்கு கேட்டால், ‘ஏன், நீங்களும் போய் வாங்க வேண்டியது தானே’ என்று சொன்னாலும், அந்தப் பிரசாதத்தைப் பகிர்ந்து கொள்வோம். நாங்கள் குடியிருக்கும் மைலப்பபுரம் தெரு எங்கள் வீட்டிலிருந்து தொடங்கும் போது அகலமாக பாதி தெரு இருக்கும். மறுபாதி குறுகலாகிவிடும். எங்கள் வீடு மிகவும் பெரியது. ஆனால் தரை எல்லாம் மண் தரைதான். நான்கு பெரிய ஹால்களாக ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருக்கும். கூரை ஓடுதான். முக்கோணவடிவில் அமைக்கப்பட்டுள்ளதால் மழை நீர் இருபக்கமும் வழியும். அதை இருபுரமும் அமைக்கப்பட்டுள்ள ஓடை போன்ற சிமிண்டால் ஆன அமைப்பு மழை நீரை தெருவில் கொண்டு விட்டு விடும். சில சமயங்களில் அந்த நீரையும் சேமித்து உபயோகப்படுத்தவும் செய்வோம். ஓட்டில் ஆங்காங்கே ஓட்டைகள் இருப்பதால் மழைகாலத்தில் கீழே மழை நீர் சொட்டும். ஹால் பெரியதாக இருப்பதால் அந்த ஒழுகல் ஒரு பொருட்டாகவே படாது. ஒரு பாத்திரத்தில் மழை நீர் சொட்டு சொட்டாக விழுவது கூட ஒரு இனிய சங்கீதமாகவே ரசிக்கத் தோன்றும். வாடகை வீடு. பழுது பார்க்கச் சொன்னால், வாடகையும் உயரும். ஆகையால் அதைப் பற்றிச் சொல்லாமல் எங்களால் முடிந்த மட்டும் பழுது பார்த்து திருப்திப் பட்டுவிடுவோம். நடு ஹாலில் மட்டும் தட்டியால் மறைக்கப்பட்ட ஒரு ரூம் உண்டு. அது பெண்கள் மாதவிடாய் காலத்தில் தனியாகத் தங்குவதற்காகக் கட்டப் பட்டதாகும். கொல்லைப் புரத்தில் தோட்டம் உண்டு. அதில் சில கறிகாய்ச் செடிகள், தென்மரங்கள், மாமரங்கள் – சிறியதும் – பெரியதுமாக பல உண்டு. அத்துடன் வாழைமரங்களும் உண்டு. ஆனால் அங்கு இருக்கும் பன்னீர் மரம் தான் மிகவும் சிறப்பாகப் படும். அதன் இலைகள் மிகவும் மிருதுவாக தடவத் தடவ அதில் ஒரு இன்பம் காணலாம். அந்த பன்னீர் மரத்தின் கொட்டைகள் அந்த மரத்தைச் சுற்றி விழுந்த வண்ணம் இருக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் விபூதிப் பிரசாதத்தை இந்த பன்னீர் இலையில் வைத்துத் தான் பக்தர்களுக்குக் கொடுப்பார்கள். கொல்லைப் புரத்தில் ஒரு பெரிய கிணரும் உண்டு. ஆனால், அதில் உள்ள நீர் உப்புக் கரிக்கும். நல்ல நீருக்கு தண்ணீர் வண்டியில் கொண்டு விற்பவர்களைத் தான் நம்பி இருக்க வேண்டும். அங்குள்ள மாமரக்கிளைகளில் தூளிமாதிரி கயிற்றால் கட்டி ஊஞ்சல் ஆடுவது எங்களுக்கு ஆனந்தமான விளையாட்டாகும். திருச்செந்தூரில் ஒரு பெரிய ஏரியும் அதை அடுத்து பெரிய தெப்பக்குளமும் உண்டு. அந்த ஏரியில் கோடைகாலத்தில் நீர் இல்லாமல் போய்விடும். ஆகையால் வருடத்தில் மூன்று – நான்கு மாதங்கள் ஏரி வறண்டு தான் இருக்கும். ஏரி வறண்டு போனால் பக்கத்தில் உள்ள தெப்பக்குளத்து நீரும் வறண்டு விடும். தெப்பக்குளத்தைத் தாண்டி ஊருக்கு கிழக்கு திசையில் மேற்கு பார்த்த பல நல்ல தண்ணீர் கிணறுகள் உண்டு. அவைகளிலிருந்து தண்ணீர் வண்டிகளில் நீரை விலைக்கு வாங்கித்தான் ஊர்மக்கள் நல்ல நீரைப் பெற்று வந்தார்கள். ஏனென்றால் திருச்செந்தூர் முழுவதும் கிணற்று நீர் உப்புக் கரிக்கும் தன்மை கொண்டது. குளிப்பதற்கும், பாத்திரம் தேய்ப்பதற்கும், வீடு தெளித்து – மெழுகுவதற்கு மட்டும் தான் கிணற்று நீரைப் பயன்படுத்துவர். தெப்பக்குளக்கரையில் தெருவைப்பார்த்த ஒரு பிள்ளையார் கோயில் உண்டு. அதில் பெரிய திண்ணைகள் இருக்கும். அதில் பல சமயங்களில் ஊர் சிறுவர்களை ஒன்றாகக் கூட்டி – “முருகா, முருகா”’ – என்று நாள் முழுவதும் ஜபம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்போது காப்பி, டீ என்று கொடுப்பார்கள். நல்ல சாப்பாடும் உண்டு. அந்த நாம ஜபம் – உலக நன்மைக்காக என்று சொல்வார்கள். இதில் நான் பல முறை கலந்து கொண்டிருக்கிறேன். நாள் முழுவதும் சலைக்காமல் ‘முருகா’ என்று சொல்வது மனத்தைத் தூயமைப்படுத்தும் என்று தெரியாமலேயே ஜபித்த இனிய நாட்களாகும். தெப்பக்குளத்திற்குக் குளிக்கச் செல்லும் போதெல்லாம் அந்த விநாயகரைத் தரிசிக்கும் போதெல்லாம் அந்த நினைவுகள் மனத்தில் வந்து மனத்தில் புதுத் தெம்பு ஏற்படுவதை உணர்ந்துள்ளேன். ஏரியிலும் தெப்பக்குளத்திலும் நீந்திக் குளிப்பது ஒரு சுகமான அனுபவமாகும். மேலும் ஏரியின் நடுப்பகுதியில் நீர் வழிந்து சிறிய அருவியாக விழும். அதில் நாங்கள் குளிப்போம். அந்த அருவியில் தலையைக் காட்டிய படியே கூச்சலிட்டால் அது பல மடங்கு அதிக ஒலியுடன் எதிரொலிப்பதைக் கேட்பது ஒரு சங்கீதக் கச்சேரி போலவே எங்களுக்குப் படும். எண்ணெய் தேய்த்துக் கொண்டு அந்த அருவியிலே குளித்தால் சீக்காய் ஒன்றும் இல்லாமலே எண்ணெய் எல்லாம் உடம்பிலிருந்து போய் உடம்பு புத்துணர்வு பெற்றதைப் போல் உணர்வோம். அதை அனுபவித்தால் தான் அதன் சுகம் தெரியும். பல நாட்களில் இதை நான் அனுபவித்திருக்கிறேன். எனக்கு நன்றாக நீந்தத் தெரிந்ததற்கு அந்த ஏரி – தெப்பக்குளம் இரண்டுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். மேலும், பல சாயங்கால வேளைகளில் சாப்பாடு கட்டிக் கொண்டு அந்த அருவியில் குளித்து பிறகு அங்கேயே சாப்பிட்டு வருவது எங்களுக்கு நாங்களே செய்து கொண்ட பிக்னிக்காகும். அதுவும் மார்கழி மாதமானால் அந்த பிக்னிக் களை கட்டும். ஏரியில் நீர் வற்றி இருக்கும் போது அந்த வற்றிய இடம் புல் முளைத்து பச்சைப் பசேல் என்று இருக்கும். அப்போது நாங்கள் அங்கே கால் பந்து ஆடியிருக்கிறோம். ஏன், அங்கே கிட்டிப்பிள்ளும் ஆடியிருக்கிறோம். ஆகையால் ஏரியில் நீர் இருந்தால் ஒரு ஆனந்தம். நீர் இல்லாவிடிலும் பல விளையாட்டுக்கள் ஆட இடம் இருப்பதால் அதிலும் ஒரு நன்மையை உண்டாக்கி விட்டோம். திருச்செந்தூர் கோயில் அருகில் கடல் அலைகள் அதிகம். ஆனால் சற்றுத் தள்ளி வள்ளி குகைக்கும் அப்பால் சென்றால் அங்கு கடல் அலைகளே இருக்காது. ஆழமும் குறைவு. அந்த இடத்தில் ஊரைக் காக்கும் காவல் தெய்வமாக பத்திரகாளி அம்மன் கோயில் உண்டு. மார்கழி மாதமானால் அந்த மாதம் முழுவதும் பெண்கள் – குறிப்பாக பிராமணப்பெண்கள் குளிப்பதற்கு அந்த கடல் இருக்கும் இடத்தில் வந்து குளிப்பார்கள். நானும் என் அக்காவுடன் சென்று குளித்து திருச்செந்தூர் முருகன் தரிசனம் செய்து வருவேன். ஆஹா! அந்த நாட்கள் ஆனந்தமான அற்புத நாட்கள் என்று மனத்தில் இப்போதும் அசைபோட வைக்கும் சக்தி மிக்க தருணங்கள். அத்தியாயம் 6 ஹோட்டல் மூடு விழா – மெஸ் திறப்பு விழா ஹோட்டல் எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஐந்து வயதுச் சிறுவனாக இருக்கும் போது, வீட்டின் முன் அறையின் மூலையில் ‘பிராமணாள் கிளப்’ என்ற போர்ட்டு சுவரில் சாய்த்த படி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அந்த வீட்டைக் காலி செய்து வேறு தெருவிற்கு குடிபெயர்ந்த வரைக்கும் அங்கேயே இருந்ததாக ஞாபகம். ஆகையால் நான் பிறப்பதற்கு முன்பே ஹோட்டலின் மூடுவிழா நடந்திருக்க வேண்டும். அதில் நஷ்டம் அடைந்திருக்கக் கூடும். அப்பாவிற்கு வியாபார நுணுக்கம் தெரியாது. ‘இன்று ரொக்கம் – நாளை கடன்’ என்று போர்டு தொங்கினாலும், அதை நடைமுறைப்படுத்தத் தெரியாத ஜீவன் என் அப்பா. என் பாட்டியின் தங்கை – இளம் வயது விதவை – தன் மகன், மகள் ஆகியவர்களுடன் எங்கள் வீட்டில் தஞ்சம் அடைய வந்தாள். என் பாட்டி, அப்பா, அம்மா – அனைவரும் அவர்களுக்கு மனமுவந்து அடைக்கலம் கொடுத்தனர். அப்போது என் அம்மாவைப் பார்த்துக் கண் கலங்கினார். ‘பிச்சு, உனக்கு விடிவு காலம் கிடையாதா? கழுத்து நிறைய – கை நிறைய நகைகள் எல்லாம் எங்கே பிச்சு! இன்னும் அடுக்களை தான் உனக்கு அடைக்கலமா? சமையல்காரியாக இருக்க அடுக்களையையே கட்டிக் கொண்ட மாதிரி உழைக்கிறாயே!’ என்று சொல்வதைக் கேட்ட பொழுதுதான் அம்மா சொத்துடன் அப்பாவைக் கல்யாணம் செய்து கொண்டார் என்பது தெரிந்தது. ஆனால், என் அம்மா அந்தச் சொற்களை எல்லாம் மனத்தில் ஏற்றுக் கொண்டதே இல்லை. உழைப்பு குடும்பம் நடத்த மிக அவசியம் என்று சந்தோஷமாகவே நினைத்து செயல்பட்ட கர்ம தேவதை என்று தான் சொல்ல வேண்டும். அம்மா நல்ல சிவப்பு நிறம். ஆனால் அப்பா மாநிறம் தான். பாட்டியும் மாநிறம் தான். என் பாட்டி என் அம்மாவை தன் பெண் போலத்தான் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வார். அம்மாவை ‘பிச்சு, பிச்சு, பிச்சு’ என்று அழைப்பதே அன்பின் வெளிப்பாடாக நன்கு தெரியும். ‘முருகா, முருகா, முருகா’ என்று துதிப்பதை விட என் அம்மாவின் நாமஸ்வரணைதான் அதிகம் என்று என் சித்திப்பாட்டியே கேலி செய்வதைக் கேட்டிருக்கிறேன். என் அந்தச் சித்திப்பாட்டி சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ஆனால் அவரது வாழ்க்கை சோகமாகி விட்டது. அவரது கணவர் இரண்டு குழந்தைகள் என்று வாழ்க்கை செல்ல, திடீரென்று கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் பிறகு கணவரின் அப்பா காமுகராகி என் சித்திப்பாட்டியை அனுகியதை அறிந்து, அதிர்ந்து, ‘சீ, நாயே!’ என்று காரி உமிழ்ந்து எங்களிடம் தஞ்சம் அடைந்தார். என் சித்தப்பா திருச்செந்தூரில் படித்து, பிறகு கல்யாணம் ஆகி பெரிய பிசினஸ்மேனாக சென்னையில் பெரியமேட்டில் பணக்காரராக உயர்ந்தார். எங்கள் வாழ்வில் உதவிய உறவினர்கள் பட்டியலில் முதலில் குறிப்பிடத் தகுந்தவர் இந்த புரசவாக்கம் நாரயணஸ்வாமி அய்யர் சித்தப்பாவாகும் என்று முன்பே குறிப்பிட்டுள்ளேன். அவரைப் பற்றிய முழுவிபரமும் அந்தக் கால கட்டம் வரும் போது விவரிக்கப்படும். என் அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள் இரண்டு பேர்கள். அவர்களும் அதிகம் படிப்பில்லாதவர்கள் தான். வேத பாடசாலையில் சிங்கிகுளத்தில் படித்திருக்க வேண்டும். வேதமும் படிக்க வில்லை, மந்திரமும் கற்க வில்லை. தமிழ் எழுதப்படிக்கவும், கணிதம் ஒரளவும் கற்றதோடு கல்வி நின்று விட்டது என்று தான் கருதுகிறேன். பாட்டியும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. பாட்டியின் கணவர் கிருஷ்ணய்யர் எப்போதோ – சிங்கிகுளத்தில் இருக்கும் போதே காலமாகியிருக்க வேண்டும். அம்மா கல்யாணம் பாட்டியின் கணவர் இருக்கும் போது நடந்ததா அல்லது பிறகா? என்பது கூட எனக்குத் தெரியாது. பாட்டியை நான் விதவையாகத்தான் பார்த்திருக்கிறேன். பருத்தி நார்புடவை – பழுப்பு நிறத்தில் இருப்பதைத் தான் பிராமண விதவைகள் உடுத்துவார்கள். ரவிக்கை கிடையாது. புடவையைத் தான் தலையில் போட்டு மறைத்துக் கொண்டு வீட்டிலும், வீதியிலும் நடமாடுவார்கள். தலையையும் அவ்வப்போது ஷவரம் செய்து கொள்வர். இதைப் பற்றி எல்லாம் கவலையோ நினைப்போ பாட்டி படவில்லை. ஏனென்றால் அந்த நாளில் இது தான் சரியான முறை என்பதை சமூக நியதியாக நியாயப்படுத்தி விட்டார்கள். அப்பாவும் உழைப்பவர் தான். ஆனால் அது பணம் வராத வேண்டாத உழைப்பு. ஹோட்டல் நடத்துவதில் அப்பாவின் பங்கு அவ்வளவாக அதிகம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஹோட்டலுக்கு நல்ல நீர் வேண்டும். அதை ஊர்க்கோடியில் இருக்கும் கிணற்றிலிருந்து தான் எடுத்து வரவேண்டும். ஆகையால் அதற்காக மாடு பூட்டிய தண்ணீர் வண்டியை அப்பா ஏற்பாடு செய்து அதை அப்பாவே ஓட்ட ஆரம்பித்தார். அந்த தண்ணீர் வண்டியின் மூலம் ஹோட்டலுக்கு வேண்டிய தண்ணீரை வீட்டிலே நிறப்பிவிடுவார். காலையும், இரவும் கடற்கரை முருகன் கோயிலுக்குப் போவதில் அப்பா தவறியதே இல்லை. அப்பாவை தண்ணீர்வண்டி சுப்பிரமணிய அய்யர் என்று சொன்னவர்கள், பிறகு ‘பக்தர்’ என்று புகழும் அளவுக்கு அப்பா முருக பக்தராகி விட்டார். ஆனால் ஹோட்டல் நிர்வாகம் சரிவர மேற்பார்வை இல்லாத காரணத்தால் மூடும் நிலைக்கு வந்து விட்டது. பாட்டி காய்கறி நறுக்குவது, மாவு அறைப்பது, பாத்திரம் தேய்க்க அம்மாவிற்கு உதவுவது என்று உழைப்பார். அம்மா சமையல் செய்வார். மிகவும் சுவையாகச் சமைப்பதில் நளனச் சக்ரவர்த்தியையும் மிஞ்சிவிடுவார். கை மணம் என்று என் அம்மாவை என் சித்திப்பாட்டிகள் – புரசவாக்கம் சித்திப்பாட்டியும், கோமதிச் சிந்திப்பாட்டியும் – வாய்க்கு வாய் சொல்வார்கள். பாட்டி, அப்பா, அக்கா எல்லோரும் தங்கள் ஆடைகளைத் துவைத்துக் கொள்வார்கள். ஆனால் அண்ணா, என் ஆடைகளை அம்மா தான் சோப்புப் போட்டுத் துவைத்து, உலரவைத்து, மடித்தும் வைப்பார். ‘துரைமார்கள் – இவர்கள் துணிகளை துவைக்க மாட்டார்களோ!’ என்று அக்கா குற்றம் சாட்டுவாள். ‘ஆமாம், நாங்கள் துரைமார்கள் தான். துவைக்க மாட்டோம்’ என்று சொல்வோம். அம்மாவிற்கு இந்த வேலையைக் கொடுக்காமல் உதவியாக இருக்கலாமே! – என்ற எண்ணம் ஏனோ அப்போது எங்கள் மனத்தில் எழவே இல்லை. ‘அம்மா துவைத்தால் பளிச்சென்று இருக்கும்’ என்ற எண்ணத்தால் இந்த தோய்க்கும் வேலையைச் செய்வதில்லையோ என்னமோ! ஆனால் அம்மாவிற்கு மேலும் மேலும் வேலைப் பளு அதிகமாகிறதே என்ற எண்ணம் எழாதது ஆச்சரியம் தான். ஹோட்டலை மூட முடிவெடுத்தாலும், மேற்கொண்டு என்ன செய்ய? என்ற கேள்விக்கு விடை அம்மாதான் தந்தாள். ஹோட்டல் வேண்டாம். சிறிய அளவில் 10 பேர்களுக்கு மேற்படாமல் டிபன் – மத்தியானம் சாப்பாடு – இரவு சாப்பாடு என்று மெஸ் போல் நடத்தலாம். டிபன் இட்லி மட்டும் தான். அந்த இட்லியை காலையிலும், இரவிலும் வெளியாட்களுக்கும் விற்கலாம். அத்துடன் அப்பளாம் இட்டும் விற்கலாம் – என்று அம்மா சொல்ல அதுவே திருச்செந்தூரில் இருக்கும் வரை எந்தவித தடங்கலும் இன்றி எங்களுக்கும் வாழ்க்கையில் ஒரு வழியைக் காட்டியது. அப்பாவும் வீட்டு மெஸ்சுக்கு தண்ணீர் அளிப்பதுடன் சில பிராமண வீடுகளுக்கும், பெண்கள் – ஆண்கள் பள்ளிகளுக்கும், உள்ளூர் பஜனை மடத்திற்கும், வேறு சில நிறுவனங்களுக்கும் தண்ணீர் சப்பளை செய்து சிறிது பணம் சம்பாதித்தார். பணம் சம்பாதித்தை விட நேரத்தை செலவிட இது சிறந்த உபாயமாக இருந்தது. ஆனால் தண்ணீரைத் தோள்களில் பல வருடங்களாக சுமந்த காரணத்தால் தோள்பட்டை புடைத்து புஜங்களில் வலி எடுத்தாலும், அதை எல்லாம் பொருட்டாக்காமல் காலம் கழித்தார். பல தண்ணீர் வண்டி ஓட்டிகள் வீடுகளின் வாசல்களில் வைக்கப்பட்டிருக்கும் குடங்களில் நீரை நிறப்பிச் சென்று விடுவார்கள். ஆனால், என் அப்பாவோ குடங்களில் நீரை நிறப்பி அவைகளை வீட்டிற்குள்ளே சென்று வைப்பார். ஏன், இப்படி உடலை வறுத்துகிறீர்கள்? என்றால், ‘ஐயோ பாவம், வயசான அம்மா. சோம்பேறிக் குழந்தைகள்’ என்று சமாதானம் சொல்வார். வண்டி மாட்டை அப்பா தன் குழந்தை மாதிரி தான் பார்த்துப்பார். மாடு தங்க நல்ல ஓலை வேய்ந்த பந்தலை வீட்டின் கொல்லையில் கட்டிவிடுவார். மாட்டிற்கு வைக்கோல் மட்டும் இல்லை. பருத்திக் கொட்டை, கருப்பட்டி, புண்ணாக்கு என்று அதற்கு எப்போதும் நளபாகம் தான் உணவாக அளிக்கப்படும். அத்துடன் கழுநீர் – வாழை இலைகள் என்று மாட்டின் வயிற்றுப் பாட்டிற்குக் குறைவே இருக்காது. நோஞ்சான் மாட்டை வாங்கி அதற்கு நல்ல தீனி போட்டு கொழு கொழுவாக ஒரு சில மாதங்களிலேயே ஆக்கிவிடுவார் அப்பா. இதை ஏதோ ஒரு யாகம் மாதிரி செய்வதாகவே நான் நினைத்து ஆச்சரியப்படுவேன். ஆனால் அதே சமயத்தில் ஏன் இந்த வீண் செலவு என்றும் சஞ்சலப்படுவதும் உண்டு. அத்தியாயம் 7 அப்பாவின் பக்தி – எங்களை வாழ்விக்கும் ரகசியம் அப்பா விடிகாலை ஐந்து மணிக்கே எழுந்து கடற்கரைக் கோயிலுக்குச் சென்று விடுவார். அங்கு தான் காலைக் கடன் – சமுத்திர ஸ்தானம் செய்து ஈரவேஷ்டியுடன் முருகன் தரிசனம். அங்கு சந்நிதானத்தில் ஸ்வாமி தரிசனம் செய்பவர்களுக்கு கைங்கர்யம் செய்து விட்டு ஏழு – எட்டு மணிக்குத் தான் வீட்டிற்கு வருவார். மறுபடியும் இரவு 7 மணிக்கு வீட்டிலே குளித்து விட்டு, நெற்றியிலும் – உடம்பிலும் விபூதியை பட்டை பட்டையாகப் பூசிக்கொண்டு, பள்ளியரைக்குப் பாலை – என் புரசவாக்கம் சித்தப்பாவின் உபயம் – கடற்கரை முருகனின் தரிசனம். முருகன் கோயில் எங்கள் வீட்டிலிருந்து சுமார் 1 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது. அப்பா வேகமாக நடந்து அரைமணி/ முக்கால் மணி நேரத்திலேயே கோயிலை அடைந்துவிடுவார். பள்ளியரை நடந்து கோயில் நடை சாத்தும் வரை கோயிலில் தான் இருப்பார். ஆகையால் இரவு 10 மணிக்குத் தான் வீட்டிற்கு வருவார். இது பல வருடங்களாக – குறைந்தது 15 வருடங்களாவது இருக்கும் - ஒரு நாள்கூட விடுபடாமல் இரண்டு வேளையும் முருகனை தரிசனம் செய்தது நம்பமுடியாத ஆச்சரியமான ஒன்றாகவே பலருக்கும் படும். என் அப்பா – முருக பக்தர். ஆகையால் தான் இது அப்பாவிற்குச் சாத்தியமாயிற்று. அவரது பக்திதான் எங்களை உயர்த்தி வாழ்வித்தது என்றால் அது தான் உண்மை. சில சமயங்களில் பள்ளியரைப் பால் – சுசியன் போன்ற பணியாரம் கோயிலிருந்து கொண்டு வருவார். அந்தப் பிரசாதங்கள் தேவாமிர்த்தமாக இருக்கும். சில சமயங்களில் காலை வேலை தரிசனத்தில் கோயிலில் முருகனுக்கு பாசிப்பயர்பாயசம் – அப்பம் நிவேதனம் செய்வார்கள். அவைகளையும் எங்களுக்கு அப்பா கொண்டு வருவார். ஆஹா, என்ன அமிர்தமான ருசி என்று மனம் மகிழ்ந்து பக்தியோடு இருந்த தருணங்கள் பல. இது மாதிரியான சின்னச் சின்ன சம்பவங்கள் எங்கள் மனத்திலே ஆழப்பதிந்து திருச்செந்தூர் வாழ்க்கையை மணக்கச் செய்தவைகளாகும். மற்றவர்களுக்கு இதில் என்ன பெரிசாக இருக்கிறது என்று நினைகத் தோன்றும். ஆனால் எங்களது இடத்திலிருந்து பார்த்தால் தான் அவைகள் எங்கள் உள்ளங்களில் ஆழப்பதிந்து எங்கள் வாழ்க்கையில் நடந்தவைகளின் பட்டியலில் இவைகளும் இடம்பெற்று மனத்தில் அவ்வப்போது எழுந்து வாழ்க்கையை இனிப்பூட்டும். அத்தியாயம் 8 அப்பாவின் அன்பளிப்பு – சின்ன பிள்ளையார் மாக்கல் சிலை நான் 8-9 வயதாக இருக்கும் போது அப்பா தான் பூஜை செய்துகொண்டிருக்கும் பிள்ளையாரை என்னை பூஜை செய்ய வேண்டினார். நானும் அதற்கு உடன்பட்டு அந்தப் பிள்ளையாரை இன்றுவரை பூஜை செய்து வருகிறேன். இடையில் என் மனைவியும் அந்தப் பிள்ளையாருக்கு பூஜை செய்துள்ளார். ‘பிள்ளையார் பால் குடிக்கிறார்’ என்ற செய்தியின் போது, இந்தப் பிள்ளையார் என் மனைவி பால் கொடுக்க அதை உறிஞ்சிக் குடித்ததை நான் என் இந்த இரு கண்களால் பார்த்து வியந்தேன். இது சத்தியமாக நடந்த சம்பவம். அப்பா கொடுத்த இந்தப் பிள்ளையார்தான் என் நிரந்தரமான சொத்து – என்று நான் அடிக்கடி சொல்வது உண்டு. இந்தப் பிள்ளையாரின் அருளினால் தான் நான் எதிர்கொண்ட பல வாழ்க்கைச் சூழல்களிலிருந்து வெற்றிகரமாக நீந்தி கரை ஏறியுள்ளேன். தினமும் பிள்ளையாருக்கு பூப் பொட்டலத்தை ஒரு ஊமை எங்கள் வீட்டில் கொண்டு மாலையில் போட்டுவிடுவான். இதில் என்ன விஷேம் என்றால் அவர்கள் வீட்டில் அனைவரும் ஊமைகளாகப் பிறந்தவர்கள். அவன் அப்பா, அம்மா – என்று அனைவரும் ஊழைகளாகப் பிறந்ததற்கு ‘இறைவனின் சாபம்’ என்று ஊர் மக்கள் சொல்வார்கள். ஆனால் அதன் முழுவிவரமும் தெரியவில்லை. தென்னங்கீற்றால் ஆன வாய் குறுகிய நீளமான குவளை போன்ற குடலையை ஆனந்தமாகத் தொங்க விட்டுக் கொண்டு, அதிலிருந்து வாழைஇலைக் கீற்றில் சுற்றி வாழை நாரினால் கட்டிய பூப்பொட்டலத்தை அதிலிருந்து எடுத்து, ‘ப்பூ .. ப்பூ’ என்று கூறியபடி அந்தப் பூபொட்டலத்தை வலது புரத்து சின்ன திண்ணையில் வைத்து விட்டுச் சென்று விடுவான். அத்தியாயம் 9 என் ஆரம்பப் பள்ளி சிவன் கோயிலின் நீண்ட மண்டபத்தின் நடுபகுதியின் இரண்டு பக்கத்திலும் பெரிய மண்டகப்படிக்கான இடங்களில் ஆரம்பப் பள்ளி – ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள பள்ளிக் கூடம் – இயங்குகிறது. அதுவும் வலது புறத்து மண்டபத்திற்குப் பின்புறம் பெரிய மைதானம் உண்டு. ஆகையால் அங்கு பள்ளியை நடத்துவது அசெளகரியமாக இருக்காது. அந்தப் பள்ளியில் தான் நான் படித்தேன். அப்போது இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம். 1942-ம் வருடம் என்று ஞாபகம். எல்லாவற்றிற்கும் தட்டுப் பாடு. ரேஷனில் தான் சாமான்கள் வாங்க வேண்டும். பள்ளியின் சுவர்களிலெல்லாம் ஹிட்லர் தன் உடம்பில் மண்டையோடுகளால் ஆன மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு நாக்கை பாத்திரகாளி போல் ரத்தம் சொட்ட துறுத்திக் கொண்டு மனித உடல்களின் மேல் நர்த்தனம் ஆடுவது போல் போஸ்டர்கள் பள்ளிச் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும். காலையில் கடவுள் வணக்கப்பாடலுக்குப் பிறகு ‘கொடுமைக்காரன் டீ ஹிட்லர் கொடுமைக்காரன்’ என்று வசைபாடிய பிறகு தான் பாடங்கள் தொடங்கும். அது வெள்ளைக்காரன் இந்தியாவை ஆட்சி செய்த காலங்கள். மாலையில் பவுடர் பால் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு குழநதைகளும் தங்கள் வீட்டிலிருந்து ஒரு டம்ளர் கொண்டு வர வேண்டும். அதில் தான் பாலை ஊற்றிக் குடிக்கக் கொடுப்பார்கள். பால் பவுடர் பழுப்பு நிறத்தில் மிகவும் மிருதுவாக ஆனால் கெட்டி கெட்டியாக இருக்கும். அது டப்பாவில் அடைத்து பெட்டிகளில் பள்ளிகளுக்கு வழங்கப்படும். அந்தப் பால் பவுடரில் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்றாக கரைக்க வேண்டும். அந்த வேலையை செய்ய தேர்வு செய்யும் சிறுவர்களுள் நான் எப்போதும் இடம் பெறுவேன். நான் பிராமணப்பையன் என்பதால் என்று இப்போது கருதத் தோன்றுகிறது. பிறகு அந்தப் பாலை அடுப்பில் ஆசிரியரில் ஒரிருவர் வைத்து காய்ச்சி பிள்ளைகளுக்கு வினியோகிப்பர். இது தினமும் நடக்கும். அந்தப் பால் மிகவும் சுவையாக இருக்கும். இதற்காகவே பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வர பிள்ளகள் ஆர்வம் காட்டுவார்கள். தமிழில் தான் பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். பக்கத்துப் பக்கத்தில் எந்தவிதமான் தடுப்புகளும் இன்றி வகுப்புகள் இருக்கும். உட்கார தரை தான். ஆசிரியருக்கு மட்டும் நாற்காலி – மேஜை இருக்கும். ஒரு கருப்பு நிற போர்ட் ஸ்டாண்டில் ஆசிரியர சாக்பீசால் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் இருக்கும். ஒரு வகுப்பில் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடம் இன்னொரு வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும். சில சமயங்களில் சில ஆசிரியர்கள் இதைத் தவிர்ப்பதற்கு தங்கள் மாணவர்களை மைதானத்தில் உள்ள மர நிழலுக்கு அழைத்துச் சென்று பாடம் நடத்துவதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு ஆசிரியரின் கைகளிலும் பெரிய கம்பு மட்டும் நிச்சயம் இருக்கும். அந்தக் குச்சியைக் கண்டு பயப்படாத மாணவர்களே கிடையாது. யாராவது மாணவன் தன் தாய் தந்தையிடம் ‘ஆசிரியர் என்னை அடிக்கிறார்’ என்று சொன்னால் போதும், அவர்கள் உடனே பள்ளிக்கு வந்து ‘அடியாத மாடு பணியாது. என் பிள்ளையை நன்கு அடித்து படிக்க வையுங்கள் ஆசிரியர் ஐயா!’ என்று கையெடுத்துக் கும்பிடுவார்கள். அவர்கள் ஆசிரியர்களிடம் அவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அத்தியாயம் 10 என் ஆங்கில டியூஷன் அம்மா நடத்திய மெஸ்ஸில் சாப்பிட வருபவர்கள் எல்லாம் பிராமணர்கள் தான். பள்ளி ஹெட்மாஸ்டர், உதவி ஹெட்மாஸ்டர், தாலுக்கா ஆபீஸ் ஊழியர்கள், கோர்ட்டில் வேலை செய்பவர்கள், ஆஸ்பத்திரி டாக்டர் என்று 10 பேர்கள் இருக்கும். அவர்கள் அனைவரும் கீழே பாயில் உட்கார்ந்து தான் வாழை இலையில் சாப்பிட வேண்டும். பெஞ்செல்லாம் ஹோட்டலோடு மறைந்து விட்டது. வீட்டின் வாசல் அறையில் “ட” வடிவில் இரண்டு பக்கத்திலும் திண்ணை உண்டு. அதில் தான் சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்னும் உட்கார்ந்து உலக அரசியல் அலசப்படும். அப்போது இந்தியா விடுதலை அடைய வில்லை. வெள்ளைக்காரன் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. அதுவும் உலக இரண்டாவது யுத்த நேரம். இந்திய தேச பக்தர்கள் தேச விடுதலைக்காக வெள்ளையனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த தருணம். காந்திஜியின் சக்தியாக்கிரஹத்தை நம்பியவர்களும், நம்பாதவர்களும் அந்த சிறிய ஊரிலிலும் உண்டு. அதுவும் வாஞ்சி, சிதம்பரம்பிள்ளை, பாரதி, வ.வே.சு.ஐயர் என்று பல போராட்ட வீரர்களை உருவாக்கிய தென் மாநிலங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி ஜில்லாக்களில் திருச்செந்தூரும் சேரும். ஆனால் திருச்செந்தூரிலிருந்து புகழ்பெற்ற சுதந்திர வீரர்கள் உருவாகாவிடினும், பக்கத்து ஜில்லாவின் தாக்கம் இந்த சிறு ஊரிலும் ஏற்பட்டது. ஹரிஜன் என்ற காந்திஜியின் ஆங்கிலப்பதிப்பும், தமிழ்ப் பதிப்பும் கூட திருச்செந்தூரில் கிடைக்கும் என்றால் அந்த ஊர் மக்களிடமும் சுதந்திர விழிப்புணர்வு இருந்தது என்பதை அறியலாம். சாப்பிட வந்தவர்கள் காரசாரமாக அரசியல் பேசுவார்கள். யார் என்ன பேசினார்கள் என்பதை விட அவர்கள் பேச்சுத் தான் முக்கியம் என்பதால் பேசியவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ‘வெள்ளைக்காரன் அவ்வளவு எளிதில் சுவராஜ்யம் காந்திஜி கேட்ட உடன் கொடுத்து விடுவானா? அவன் துப்பாக்கியை அல்லவா காட்டி அடக்கி வைக்கிறான். காந்தியின் கைத்தடி துப்பாக்கியை வென்று விடுமா என்ன?’ ‘ஓய், கைத்தடியின் பின்னால் 36 கோடி இந்திய மக்கள் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்து சத்தியாக்கிரஹத்திற்கு ஆதரவாக அணி திரளும் போது, துப்பாக்கிக் குண்டுகள் என்ன செய்ய முடியும்? .. சந்தேகம் தான் சுவராஜ்யம் பெற குறுக்கே நிற்கும் சத்துரு’. ‘நான் உங்கள் கண்ணில் சத்துருவாகவே இருந்துட்டுப் போறேன். முதலில் நம் பிள்ளைகளுக்கு வேலைக்கு உதவ வேண்டும். அதற்கு தமிழ் மொழி மட்டும் சோறு போடாது. இங்கிலீஸ் பாஷை படிக்க வேண்டும்.’ ‘ஆமாம், வெள்ளையனை விரட்டவும், அவன் பாஷையிலேயே லண்டன் பார்லிமெண்டிலேயே வாதாடவும் இங்கிலீஷ் அவசியம் தான். அடிமை வேலைக்குச் செல்லாமல், வெள்ளையனையே அவன் பாஷையிலேயே வாதிட்டு சுதந்திரத்திற்கு வித்திடுவதற்கும் அவன் பாஷை அவசியமே’ ‘எப்படிப் பார்த்தாலும் இங்கிலீஷ் படிப்பதால் நம் பிள்ளைகளுக்கு நன்மை தான் உண்டாகும். சுதந்திரம் என்று இங்கிலீஷ் பாஷையை வெறுக்க வேண்டியதில்லை.’ ‘உங்கள் கடைக்குட்டிப் பையன் சங்கரனுக்கு தமிழை ஆரம்பப் பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு கற்பிப்பதில்லை. அவனுக்கு ஏன், பிரைவேட் டியூஷனுக்கு ஏற்பாடு செய்யலாமே! பிற்காலத்தில் அது அவனுக்கு அனுகூலமாக இருக்குமல்லவா?’ அரசியல் உரையாடலில் இந்தக் கருத்து அப்பாவின் மனதில் பட்டு விட்டது. இப்போதே ஆங்கில பாஷை எழுதப்படிக்க தெரிந்தால் – பேசத் தெரியாவிட்டாலும் பரவா இல்லை – நல்லது தானே என்ற எண்ணத்தால் என் ஆங்கில மொழி கற்க ஒரு டியூஷன் மாஸ்டர் ஏற்பாடாகி இருந்தது. ஆனால் இதில் பாட்டிக்கு உடன்பாடில்லை. ‘வெள்ளைக்காரன் குழந்தைகளுக்கு ‘ஹிட்லர் கொடுமைக்காரன்’ என்று தினமும் பாடச் சொல்லறான். வெள்ளைக்காரன் மட்டும் யோக்கியனா? ஹிட்லர் கொடுமைக்காரன்னா, வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன். அவன் பாஷை என்ன உசத்தி?’ என்பது தான் பாட்டியின் கருத்து. இருப்பினும் ‘இன்னொரு பாஷை தானே. படித்து விட்டுப் போகட்டும்’ என்று பாட்டி தானே சமாதானம் அடைந்து விட்டாள். ஆங்கில டியூஷன் வாத்தியார் வாட்ட சாட்டமாக இருப்பார். அவர் கையில் வாத்தியார்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய கம்பு இல்லாததைக் கண்டு எனக்கே சந்தோஷமாக இருந்தது. அடி கிடையாது – என்று நான் சந்தோஷப்பட்டேன். ஆனால் அது எவ்வளவு தவறான எண்ணம் என்பது முதல் நாள் பாடம் நடக்கும் போதே தெரிந்து விட்டது. பாடம் ஆரம்பிப்பதற்கு முன்பேயே ‘இங்கிலீஸ் கஷ்டமான பாஷை. தமிழ் போல் இல்லை. உச்சரிப்பு ஒழுங்காக இருக்க வேண்டும். டேய், நான் சொல்லறது காதிலே விழறதா?’ என்று என் தலையில் போட்டாரே ஒரு குட்டு – ‘விழறது. விழறது’ என்று குட்டிய தலையைத் தடவிக்கொண்டே, கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அழுது கொண்டே சொன்னேன். இந்தக் குட்டுக்கு கம்பு அடியே தேவலை – என்று நினைக்கத் தோன்றியது. காலையில் தான் என் இந்த ஆங்கில டியூஷன் நடக்கும். காலையில் எழுந்தவுடனேயே பல் தேய்க்கும் போதே எனக்கு உடம்பெல்லாம் நடுங்கும். ‘பாட்டி, டியூஷன் வேண்டாம்’ என்று சொன்னாலும், ‘அப்படி எல்லாம் சொல்லாதே, இங்கிலீஸ் பாஷை தெரிந்தால் தான் வேலையே இனி கிடைக்கும். இங்கிலீஸ் ட்யூஷன் வாத்தியார் கிடைப்பதே கஷ்டம். நமது அதிஷ்டம் உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சம்மதித்துள்ளார்’ என்று ஒரு பிரசங்கமே பாட்டி செய்து விட்டார். சில நாட்கள் ட்யூஷன் நடந்தது. குட்டுக்களுக்கும் குறைவில்லை. இந்த நரகத்திலிருந்து எப்போது விடுதலை – என்று முருகனை வேண்டினேன். முருகனும் கண் திறந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். ‘P I G – பன்றி; T U B – குப்பத் தொட்டி’ என்று என்னை மீண்டும் மீண்டும் சொல்லச் சொன்னார். நானும் சரியாகத் தான் சொன்னேன். ஆனால், ஆசிரியரோ என் தலையில் குட்டியபடியே ‘சரியாகச் சொல் - P I G – T U B பன்றி – குப்பத் தொட்டி’ என்று பலமுறை பன்றியும், குப்பத்தொட்டியும் அவர் வாயிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. நானும் தலையத் தடவியபடியே அழுதுகொண்டே – பன்றி; குப்பத் தொட்டி – என்று உரக்கச் சொல்லிக் கொண்டே இருந்தேன். இதைப் பார்த்த பாட்டிக்கு பொறுக்க வில்லை. ‘பாடம் சொல்லிக் கொடுக்கிறேளா – இல்லை தலையிலே குட்டி குட்டியே அழவைக்கிறேளா? காலம் காத்தாலே பன்னி – குப்பத்தொட்டி? இப்படியே வாசலில் உக்காந்து சொல்லிண்டே இருந்தா, ஸ்ரீதேவி ஓடியே போய்விடுவாள். மூதேவி தான் வருவாள். போதும் போதும் ட்யூஷன். இத்தோடு போதும். பணத்தை வாங்கிண்டு போங்கோ’ என்று சொல்லி, ‘சங்கரா, இங்கே வாடா – என்ன குட்டு – என்ன இங்கிலீஷ்?’ என்று என் தலையைத் தடவி, கண்ணீரையும் தன் புடவைத் தலைப்பால் துடைத்தார். எங்கள் வீட்டில் பாட்டி சொன்னால் அது வேத வாக்கு. அதை யாரும் மீற முடியாது. பாட்டி யாரிடமும் சம்மதம் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. இங்கிலீஷ் வாத்தியார் இந்த திடீர் தாக்குதலால் மிரண்டு, பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். எனக்கு வெள்ளையனின் பாஷையிலிருந்து அன்றே விடுதலை கிடைத்ததை நினைத்து, பாட்டியை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டேன். அத்தியாயம் 11 பாட்டி ஒரு பொக்கிஷம் என் பாட்டி ஒரு பொக்கிஷம். நான் பாட்டியை ஒரு விதவையாகத் தான் பார்த்திருக்கிறேன். விதவைகள் அந்தக் காலத்தில் உடுத்தும் வெறும் நூலானான பழுப்பு நிறக்கலரில் உள்ள புடவை. ரவிக்கை கிடையாது. தலையை அந்தப் புடவைத் தலைப்பால் மூடிக்கொண்டிருப்பார். நெற்றியிலே விபூதி. நான் கடைக்குட்டிப் பேரன் என்பதால் என்னிடம் தனிப் பிரியம். அப்பொழுது உலகம் இரண்டாவது யுத்தத்தில் தத்தலித்துக் கொண்டிருந்த காலம். எல்லா வற்றிற்கும் தட்டுப் பாடு. ரேஷன் கடைகளில் தான் அரிசி, கோதுமை, மக்காச் சோளம், சீனி இவைகள் வாங்க வேண்டும். என் பாட்டிதான் ரேஷன் கடைக்குச் சென்று சாமான் வாங்குவார். அந்த ரேஷன் கடை என் ஆராம்பப் பள்ளிக்கு அருகில் தான் இருந்தது. அங்கு ரேஷன் பொருள்களை வாங்க கையெழுத்துப் போட வேண்டும். கை நாட்டு ஒப்புக்கொள்ளப் படவில்லையோ என்னமோ? தெரியவில்லை. என் பாட்டி என் பள்ளிக் கூட வாசலில் இருந்து, 'ஏ, சங்கரா! வாடா! ரேஷன் கடையிலே கையெழுத்துப் போடணும்!' என்று கத்துவார். அந்தப் பள்ளியே அதிரும். என் ஆசிரியரும், 'ஏ, சங்கரா! உங்க பாட்டி கூப்பிடறா. போ, போ!' என்று விரட்டுவார். 'ஏன், பாட்டி கத்தரே?' என்று நான் சொன்னால், 'கத்தினால் தான் காரியம் நடக்கும். பேசாம வாடா எங்கூட!' என்று என்னை ரேஷன் கடைக்குக் கூட்டிக் கொண்டு போவார். அங்கே நான் கையெழுத்துப் போட்டவுடன், 'போடா, பள்ளிக் கூடத்துக்கு, பாடம் போயிடப்போறது' என்று என்னை அங்கிருந்து விரட்டுவார். நான் தயங்கி இருப்பதைப் பார்த்து, 'சரி, சரி, இந்தா ஓரணா. வைச்சுக்க கண்டத வாங்கித் திங்காதே. லாலாக் கடையிலே அல்வா சாப்பிடு, காராச் சேவ் சாப்பிடு. போ போ' என்று ஓரணாவை என்னிடம் தந்து என்னை பள்ளிக்கு விரட்டுவார். அந்தக் காலத்தில் பள்ளிச் சுவர்களில் பாடங்களைப் பற்றிய படங்கள் இருக்காது. ஹிட்லர் படம் சுவர்களில் மாட்டி இருக்கும். ஹிட்டலிர்ன் ராணுவ சட்டையில் ஸ்வஸ்திக் சின்னம் பளிச்சென்று தெரியும். ஹிட்லர் கழுத்தில் மண்டையோடுகள் மாலையாக மாட்டப் பட்டிருக்கும். அவர் காளியைப் போல் நாக்கை வேளியே நீட்டிக் கொண்டு, அந்த நாக்கிலிருந்து ரத்தம் சொட்டுவதாக சித்தரிக்கப் பட்டிருக்கும். காலையில் தெய்வ வணக்கப் பாட்டுக்குப் பிறகு, கோரசாக பள்ளிப் பிள்ளைகள் அனைவரும், 'கொடுமைக் காரன் டீ, ஹிட்லர், கொடுமைக் காரன் டீ' என்ற பாட்டைத் தவறாது பாடவேண்டும். இது அந்தக் கால ஆங்கில அரசின் உத்தரவு. 'பாட்டி! ஹிட்லர் கொடுமைக்காரன்!' என்று நான் சொல்வேன். 'ஹிட்லர் கொடுமைக்காரன், வெள்ளக்காரன் கொள்ளைக்காரன்' என்று என் பாட்டி ஒரே போடாகப் போடுவார். அந்த வாக்கியங்கள் எவ்வளவு அர்த்த புஷ்டி உள்ளது என்பதை இப்போதும் நான் உணருகிறேன். அப்பளாம் இடுவதற்கு உளுந்தை கருங்கல்லால் ஆன இயந்திரத்தில் கையால் ஆட்டி அரைக்க வேண்டும். அதை ஆட்டி அரைப்பது என் பாட்டி தான். அரைப்பதற்க்கு முன், முறுக்கை பொடி செய்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு, அதைச் சுவைத்த படியே பாட்டி அந்த கனமான கருங்கல் இயந்திரத்தில் அரைப்பார். நான் அப்போது பாட்டியின் முதுகில் சாய்ந்து கட்டிக் கொண்டு, ஊஞ்சல் போல் ஆடுவது ரொம்பவும் சுகம். 'டே, அரைக்கிறதே சிரமம். அதிலே நீ வேற முதுகிலே! .. ஏ, பிச்சம்மா! உன் புள்ளையப் பாரடி' என்று ஸ்ந்தேஷப்படுபவர் என் பாட்டி. அந்தக் கிண்ணத்தில் உள்ள பொடித்த முறுக்கை எடுத்தால், 'டே, பல் இல்லா தாத்தாவாயிட்டயா, என்ன?' என்று தன் பொக்கை வாயால் சிரிப்பது எனக்கு ஆனந்தமாக இருக்கும். பாட்டியின் முதுகிலே சாய்ந்து இருக்கும் பொழுது, அந்த இயந்திரம் நாம் நினக்கும் வார்த்தைகளையே சொல்வதாகப் படும். 'முருகா, முருகா' என்று நினத்தால், அந்த இயந்திரமும் 'முருகா, முருகா' என்று சொல்வதாகப்படும். 'ராம் ராம்' என்று நினைதாலும், அதுவும் அதையே எதிரொலிப்பதாகப் படும். இதில் உள்ள ஆச்சரியம் இன்றுவரை எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. என் பாட்டிக்கு கண் சிறிது மங்கல். தன்னைப் பார்க்க வரும் பெண்களை எடை போடுவதில் மிகவும் திறமைசாலி. 'கமலியா! வா வா. எப்போ வந்தே ஊரிலேருந்து?' என்று கமலியை தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொள்வார் என் பாட்டி. அப்பொழுது தன் இரு கரங்களால் கமலியின் கரங்களைப் பற்றிக் கொள்வார் என் பாட்டி. பார்ப்பவர்களுக்கு, 'பாட்டிக்கு, என்ன அன்பு?' என்று தான் தோன்றும். ஆனால், பாட்டி கமலியின் கைகளைப் பிடிப்பது, அவள் கைகளில் 'எவ்வளவு தங்க வளையல்கள் போட்டிருக்கிறாள்? அவைகளில் புதிதாக உள்ளவைகள் எத்தனை?' என்ற மதிப்பீட்டிற்குத் தான் என்பதை ஒருவருக்கும் தெரியாதபடி செயல்படுவது பாட்டியின் சிறப்பு அம்சம். 'ஏண்டி, இந்த வளையல் புதுசா இருக்கே? ஆத்துக்காரர் போட்டதா? ரொம்ப சமத்து நீ' என்று கமலிக்குப் பாராட்டிப் பட்டம் வேறு கொடுப்பார். 'காதிலே வைரமா?' என்று கேட்கும் பாட்டிக்கு, 'வைரம் இல்ல .. வெறும் கல் தோடு தான். வைரத் தோடு, வைர மூக்குத்தி எல்லாம் ஆத்திலே இருக்கு. தினசரி போட்டுண்டா எண்ணை இறங்கிடுது, பாட்டி' என்ற விளக்கம் கேட்டு, 'கமலி பணக்காரி தான் .. புக்காத்தில் சந்தேஷமாக இருக்கிறாள்' என்று பாட்டி ஊகித்துக் கொள்வார். என் பாட்டியிடம் மனம் விட்டுப் பேசும் பெண்களும் ஏராளம். அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுவதுடன், பல முறைகள் தானே தலையிட்டு பல குடும்பப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்திருக்கிறார். பிறரிடம் மரியாதை காட்டும் பாட்டிக்கு, பயம் என்பது கிடையாது. 'பாட்டி, என் மாமியார் என்னை ரொம்பவும் திட்டுகிறார்' என்று சொல்லிக் கொண்டு வரும் பெண்களிடம் 'ஏண்டி, உன் மாமியாரை எனக்கு உன்னை விட அதிக நாளாகத் தெரியும். நீ ஒரு தூங்கு மூஞ்சி. நான் தான் பார்க்கிறேனே. வீட்டு வாசல் தெளிப்பது உன் மாமியார். நீ விடிகாலையில் எழுந்து, வாசல் தெளித்துக் கோலம் போட்டா என்ன? அப்படி என்னடி தூக்கம்? உன் ஆம்படையான் உன் புடவைத் தலைப்பை விட மாட்டான். நீயும் 'ஏண்ணா, விடுங்கோண்ணா'ன்னு சொல்ல மாட்டே! உன் மாமனாரோ பரப்பிரம்மம். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று ஒதிங்கிடுவார். வீட்டு மஹாலெட்சுமியா நட. எல்லாம் சரியாப்போயிடும். வயசான காலத்திலே உன் மாமியாரை வீட்டு வேலை செய்ய வைக்கிறயே .. வேண்டாம் டீ, வேண்டாம்' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடுவார். வந்த பொண்ணும், 'சரி பாட்டி, நீங்க சொல்லற படியே செய்யறேன்' என்று சென்று விடுவாள். மீண்டும் அவளைப் பார்த்தாள், பாட்டி ஞாபகமாக, 'இப்போ எல்லாம் சரியாப் போச்சா?' என்று விசாரிப்பார். 'ஆமாம், ஆனால், என் மாமியார் இப்போ காலையிலே எழுந்திருக்க விடமாட்டேன் என்கிறா?' 'என்னடி இது, அதிசயமா இருக்கு?' என்று தன் விரலை மூக்கின் மேல் வைத்து கேட்பார். 'எனக்கு இது நாலு மாசம் ... 'முதல் பிரசவம் ஜாக்கிரதையா' இருக்கணும் என்கிறார் என் மாமியார்.' 'எப்படியோ மாமியார் அப்போ அழுதுண்டே வாசல் தெளித்துக் கோலம் போட்டா, இப்போ சிரித்துக் கொண்டே வாசல் தெளித்துக் கோலம் போடவைச் சுட்டே! .. அதிர்ஷ்டக்காரப் பொண்ணு' என்று பாராட்டோடு அந்தப் பெண்ணும் வெட்கிக் தலை குனிந்து தன் வீட்டிற்குச் சென்று விடுவாள். என் பாட்டி என் அம்மாவிடம் அவ்வளவு பிரியம். அவர்களை மாமியார்-மாட்டுப்பெண் என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். என் அம்மாவை பாட்டி 'பிச்சு பிச்சு' என்று தான் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு நாளைக்கு எத்தனை முறை பாட்டி சொல்லுவார் என்று ஒரு கணக்கே கிடையாது. பாட்டி 'முருகா, முருகா', 'ராமா, ராமா' என்று சொன்னதைவிட 'பிச்சு, பிச்சு' என்று சொன்னது தான் அதிகம் இருக்கலாம். அவ்வளவு அன்பு, அன்நோன்யம். அந்தக் காலத்தில் இப்படி இருப்பது என்பது ஒரு அதிசயம். தன் புடவை கிழிந்திருந்தால், அதை கூடிய மட்டும் தானே தைத்துக் கொள்வார். சுருட்டித் தான் கையால் தைப்பார். அந்தத் தையல் வெளியில் நன்கு தெரியும். 'புதுசா ஒரு புடவை வாங்கிக்கிங்கோ?' என்று என் அம்மா சொன்னால், 'முதல்லே உனக்கு இரண்டு, மூன்று புடவைகள் உடனே வாங்கணும். அதற்கு வழியைப் பாரு' என்று சொல்லி ஒரே போடாகாப் போட்டு விடுவார்கள். 'பாட்டி வேறு கிழியாத புடவையாய் உடுத்திக்கோ!' என்று சொன்னால், 'இந்தப் புடவைக்கு என்ன குறைச்சல்டா? வயசான பாட்டிக்கு பொக்கை வாய்தான் அழகு. நரைமுடிதான் பாந்தம்!' என்று சொல்லும் பாட்டியிடம், 'ஆள் பாதி ஆடைபாதி என்பார்களே, பாட்டி' என்று சொன்னால்: அது ஆளே பாதியாய் இருப்பவர்களுக்குத் தான். முழு ஆளுக்கு ஆடை அழகு அவசியமில்லைடா! 'பாட்டி! அடுத்த வீட்டு ராமு என்னை திட்டரான்' என்று நான் சொன்னால், 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. அதையேன் நினைச்சுண்டே இருக்கே. மறந்துடு. அவனும் மறந்துட்டு, உன்னோடு விளையாடுவான். அது தான் குழந்தைகளுக்கு நல்லது. ராமு நல்லவண்டா .. அவன் கூட விளையாடு' என்று என்னை உற்சாகப் படுத்துவார். 'நல்லதை நாரிலே தொடு, பொல்லாததைப் புழிதியைப் போட்டு மூடு' என்ற என் பாட்டியின் அமுத மொழிக்கு அட்சர லட்சம் பரிசு கொடுத்தாலும் போறாது. அந்த வாசகத்தை வாசகர்கள் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தால் அதன் ஆழ்ந்த பொருள் வெளிப்படும். 'என்ன அர்த்த புஷ்டியான வார்த்தைகள் .. அவ்வையின் அமுத மொழிமாதிரி' என்று நான் பல நாட்கள் இவைகள் நினைத்து மகிந்திருக்கிறேன். 'பாட்டி நீ ஒரு பொக்கிஷம்' என்று நான் பாட்டியை அப்படியே கட்டிப்பேன். 'பிச்சு! பாரடி உன் பிள்ளையை, பொக்கிஷமாம் சொல்லரான். கடையிலே போனா, இந்தப் பொக்கிஷத்திற்கு ஒரு பொட்டலம் கடுகுகூட கிடைக்காது. பொக்கிஷம் இல்லை நான். பொக்கை வாய்!' என்று சொல்லி பொக்கை வாயால் சிரிப்பார் என் பாட்டி. 'பாட்டி பொக்கை வாயால் சிறிப்பதே ஒரு பொக்கிஷம் தான்' என்று நான் ஆனந்தித்த நாட்கள் அனந்தம். 'பாட்டி ஒரு பொக்கிஷம், பாட்டி ஒரு பொக்கிஷம்' என்று என் அம்மாவை 'பிச்சு, பிச்சு' என்று என் பாட்டி சொல்வதைப் போல் நான் சொல்லவிழைகிறேன். அத்தியாயம் 12 துணை ஹெட்மாஸ்டர் மனைவி நிஜ பத்திரகாளி திருச்செந்தூரில் கல்லூரி கிடையாது. உயர்நிலைப் பள்ளியில் 11-வது வகுப்பு வரைதான் உண்டு. நான் அந்தப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன்.துணை ஹெட்மாஸ்டர் எங்கள் வீட்டு மெஸ்சில் தான் டிபன், சாப்பாடு எல்லாம். எங்கள் மெஸ் இருக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள ஒரு வீட்டில் தான் அந்த துணை ஹெட்மாஸ்டர் தமது வயதான அம்மாவுடன் வசித்து வந்தார். ரொம்பவும் சாது. நேர்மையின் சின்னம். அம்மாவிடம் அதீத அன்பும், கவனிப்பும் கொண்டு சிசுருஷ்டை செய்யும் கர்ம யோகி. இறுதி ஆண்டுப் பரிட்சைப் பேப்பர்கள் பக்கத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களால் தான் திருத்தி மார்க் தாள் பள்ளிக்கு வந்து அதன் படி அடுத்த மேல் வகுப்புகளுக்குத் தேர்வு- தோல்வி ஆகியவைகள் பள்ளியில் வெளியிடப்படும். அதில் எந்த குறிக்கீடும் இல்லாமல் நேர்மையாக துணை ஹெட்மாஸ்டர் செயல்படுவார். ஹெட்மாஸ்டரும் துணை ஹெட்மாஸ்டர் போல் மிகவும் நேர்மையானவர். அவரும் எங்கள் மெஸ்சில் தான் போஜனம். அந்த தேர்வு முடிவுகள் அறிவிப்பு பள்ளிப் பலகையில் ஒட்டுவதற்கு முதல் நாள் முன்பே ஹெட்மாஸ்டர் – துணை ஹெட்மாஸ்டர் இருவரும் வெளியூர் சென்று விடுவர். ஏனென்றால் தோல்வியுற்ற பையன்களின் பெற்றோர்கள் அவர்களை முற்றுகை இட்டும், தூற்றுவதையும் தவிர்ப்பதற்குத் தான். சிறிய ஊர். ‘பாஸ் போட்டா என்ன குடியா மூழ்கி விடும்? அடுத்த வருடம் நல்ல மார்க் வாங்கி விடுவான் என் பையன். என் பையன் பெயில் ஆனதற்கு என் பையன் மட்டும் எப்படி பொறுப்பாக்க முடியும்? பாடங்களை நல்லா போதிக்காததினால் தான் என் பையன் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளான்’ என்றெல்லாம் பேசுவதைக் கேட்பதிலிருந்து தவிர்க்கவே இந்த சில நாட்கள் வெளியூர் ஜாகை. பள்ளி திறந்தவுடன் எல்லாம் அமைதியாகிவிடும். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும். துணை ஹெட்மாஸ்டர் நல்ல நிறம். அத்தோடு நல்ல உயரம். திருச்செந்தூரில் உள்ள ஏரியிலேயோ, தெப்பக்குளத்திலேயோ, அங்குள்ள கிணற்றிலேயோ தான் காலை வேலையில் குளிப்பது எல்லாம். நெற்றி, உடம்பெல்லாம் திருநீரு பூசி சந்தியாவந்தனம் செய்து, கையில் கெண்டி, பஞ்சபாத்திரம், உத்தரணியுடன் தூய பஞ்சகட்சத்தில் வெள்ளை வேஷ்டி – தூய அங்கவஸ்திரத்தைப் போர்த்திக் கொண்டு தெருவில் வரும் போது எல்லோரும் ஒதிங்கி அவருக்கு வழிவிடச் செய்யும் சக்தி கொண்டிருப்பதை நானே பல நாட்கள் பார்த்திருக்கிறேன். கையெடுத்துக் கும்பிடுபவர்களும் சிலர் உண்டு. அப்படிப்பட்ட பிராமணருக்கு ஒரு ராட்சதி மனைவியாக அமைந்தது தான் ஆச்சரியம். அம்மாவை ஆதரிக்கக் கூடாது .. நடுத்தெருவில் விடணும் – என்பது தான் அந்த ராட்சதியின் கெட்ட புத்தி. அவருக்குப் பிறந்த பெரிய பையன் – சிறிய பெண் ஆகியவர்களும் அம்மாவுடன் சேர்ந்து அப்பாவைத் திட்டுபவர்களாகத் தான் இருந்தார்கள். அவரின் மனைவியின் தலை உச்சியில் சொட்டை. சிடு சிடு முகம். அவள் முகத்தைப் பார்ப்பதற்கே ஒரு வெறுப்பு ஏற்படும். சில சமயங்களில் துணை ஹெட்மாஸ்டரிடமிருந்து மாதாமாதம் மணியாடர் பணம் வர தாமதமானால் பள்ளிக்கு நேரிலே வந்து அவர் அறையிலுள்ள மேஜை நாற்காலி இன்ன பிற பொருட்களை நாசம் செய்து விடுவாள். அதற்கு அவர் தான் பணம் கட்டி நேர் செய்யும் நிலை ஏற்படும். ‘ஏனெய்யா இப்படிப் பயந்து நடுங்குகிறீர் ? பணம் அனுப்புவதை நிறுத்தும். உம் மனைவி பெட்டிப் பாம்பாக அடைபட்டு விடுவாள். பணம் இல்லாவிட்டால் எப்படி இங்கு வரமுடியும்? துருப்புச் சீட்டு உம்மிடம் இருக்கும் பொழுது, அதை ஏனெய்யா பயன்படுத்தாமல் இருக்கிறீர்? மாணவர்களும், சக ஆசிரியர்களும் உம்மை எவ்வளவு கீழாக மதிப்பிடுகிறார்கள்? எனக்கு வரும் கோபத்தில் உமது மனைவையை அடிக்க என் கைகள் துடிக்கின்றன. பொறுமைக்கும் ஒரு எல்லை வேண்டும். உமது பொறுமையே உமக்குச் சத்துரு’ என்று ஹெட்மாஸ்டர் துணை ஹெட்மாஸ்டரிடம் சொன்னதுண்டு. ‘பூர்வ ஜென்ம பாவம். அதை நான் அனுபவிக்கத் தான் வேண்டும். கணவனின் கடமையையும் நான் பூர்த்தி செய்யாமல் இருந்தால் அது இந்த ஜென்ம பாவக் கணக்கில் சேராதா?’ என்று ஏதோ சொல்லித் தப்பிப்பார். ஏதோ ஒரு நாள். அந்த ராட்சதி தன் மகன் – மகளுடன் திருச்செந்தூர் வந்தாள். மதிய நேரம். சாப்பிட ஹெட்மாஸ்டர், துணை ஹெட்மாஸ்டர், மற்றும் இருவர் உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் முன் இலைகள் போடப்பட்டன. அந்த சொட்டை ராட்சதி தன் கணவருக்குப் போடப்பட்ட இலையை எடுத்துக் கிழித்துப் போட்டாள். மீண்டும் இலைபோடவும் அதையும் கிழித்துப் போடவும், அவர் எழுந்து வெளியில் வந்தார். எங்கள் வீட்டுப் பக்கத்து மாமியின் பையன் படு மக்கு. அவனை பெயில் ஆக்கியவர் இந்த துணை ஹெட்மாஸ்டர் பிராமணர் – என்பது அந்த மாமியின் வெகு நாள் ஆதங்கம். எங்கள் வீட்டில் நடக்கும் கூத்தைப் பார்த்து அந்த மாமிக்கு ரொம்ப சந்தோஷம். தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு, ‘உம் புருஷனுக்கு புத்திவர சாணியை அவன் தலையிலே கொட்டு’ என்று சொன்னாள். ‘மாமி, கொண்டாங்கோ சாணிச் சட்டியை’ என்று அந்த ராட்சதி சொன்னாள். அந்த மாமியும் உள்ளே போய் உடனேயே அவசர அவசரமாக சாணியைக் கறைத்து ஒரு சட்டியிலே கொண்டு வந்து ‘என் பையனைப் பெயில் ஆக்கிய இந்த மனுஷன் தலையில் கொட்டு. புத்தி வரட்டும்’ என்று நீட்டவும், ராட்சதி அந்த அப்பாவி துணை ஹெட்மாஸ்டர் தலையிலே அந்தச் சாணியை கொட்டி விட்டு, சட்டியை மாமியிடம் கொடுத்தாள். தன் தலையிலே அபிஷேகமாக வழிந்த சாணியை தன் மேல் துண்டால் துடைத்துக் கொண்டு, ‘ஏன் தான் இப்படி தெருவிலே என்னைக் கேவலப்படுத்துகிறே ?’ என்று அப்பாவியாக கண்ணீர் விடாத குறையாகக் கெஞ்சினார். பிறகு, அவர், அவர் மனைவி, அவரது மகன், மகள் – நான்கு பேர்களும் எதிரில் உள்ள பிள்ளையார் கோயில் திண்ணையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். எப்படியோ அந்த துணை ஹெட்மாஸ்டர் தன் மனைவி – மகன் – மகளை சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால் இந்த சம்பவம் என் மனத்தில் ‘இப்படியும் பெண் ஜென்மங்களா?’ என்று எண்ணத் தோன்றியது. சாணி கொடுத்த மாமியின் பையன் உண்மையிலேயே மக்கு. அவன் தம் அம்மாவிடம் ‘ஏன் அம்மா வாத்தியார் மேலே கொட்ட சாணியைக் கொடுத்தாய்? பாவம் அம்மா! நான் பரிட்சையில் சரியாக எழுதவில்லை. படிக்கவும் இல்லை. படிப்பும் ஏறவில்லை. நான் பெயில் ஆனது சரிதான். நீ செய்ததுதான் சரி இல்லை’ என்று தன் அம்மாவிடம் புலம்ப ஆரம்பித்தான். படிப்பு ஏறவில்லை தான். ஆனால் பண்பால் உயர்ந்து விட்டான். எவ்வளவு யதார்த்தமான உயர்ந்த மனது அந்தச் சிறுவனுக்கு. அனுபவ அறிவும், பரந்த மனப்பண்பும் அந்தப் பையனை வாழ வைக்கும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அத்தியாயம் 13 என்.எஸ். கிருஷ்ணனின் மேல் முக்காணியர்களின் கோபம் திருச்செந்தூரில் பிரம்மணர்களில் அந்த ஊரைச் சொந்தமாகக் கொண்டவர்கள் முன் குடுமி வைத்திருக்கும் முக்காணியர்களாவார்கள். அவர்களின் ஜீவனம் முருகன் கோயிலை நம்பித்தான் இருக்கும். இப்போது போல் கோயிலில் தங்குவதற்கு விடுதிகளோ, ஹோட்டல்களோ கிடையாது. ஆகையால் முருக பக்தர்கள் குடும்பத்துடன் வந்தால் அவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு, கோயில் பூஜை, காவடி எடுக்க ஏற்பாடு, பால் குடம் எடுக்க ஏற்பாடு என்று முக்காணியர்கள் தான் முன் வந்து உதவுவார்கள். அவர்களைக் கட்டளைக்கார்கள் என்று பெரும் மதிப்புடன் நடத்துவார்கள். அவர்களும் முக்காணியர்களுக்கு சன்மானமாக பணம் கொடுப்பார்கள். அந்தப் பணத்தை வைத்துத்தான் அவர்கள் ஜீவனம் நடக்கும். முக்காணியர்களுக்கும் கோவம் வந்து போராட்டமாக ஊர்வலமாக ஊர் எல்லையில் உள்ள சினிமா டூரிஸ்ட் கொட்டகையின் முன் கோஷங்கள் எழிப்பியது இப்போதும் ஞாபகத்திற்கு வருகிறது. அந்தக் காலத்தில் என்.எஸ். கிருஷ்ணன் ‘நல்ல தம்பி’ என்ற ஒரு சினிமாவில் கிராம சுகாதார சங்கத்தில் ஒரு கோமாளி வேஷத்தில் ‘வந்தாரையா வந்தாரையா’ என்று தொடங்கும் பாட்டில் ஒரு வரி வரும். அதில் ‘வந்தாரையா வந்தாரையா முன் குடுமி வச்சிக்கிட்டு வந்தாரையா’ என்று கதா காலட்சேபம் மெட்டில் பாடி நடிப்பார். என். எஸ். கிருஷ்ணன் திருச்செந்தூருக்கு அருகில் இருக்கும் நாகர்கோயில் வாசி. ஆகையால் ‘தங்களைக் கேலி செய்யும் விதமாக சினிமாவில் பாடி இருக்கிறார்’ என்று திருச்செந்தூர் பிராமணர்களான முக்காணியர்கள் நினைத்தார்கள். ஆகையால் அந்தப் பாட்டை தடை செய்ய வேண்டும் என்று கோஷம் செய்தார்கள். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் போய் விடட்து. அந்தப் படம் அமோக வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாகியது. ஏன், முக்காணியர்களும் அந்தப் படத்தைப் பாரத்தார்கள். ‘நாமும் நம் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டோம்’ என்ற அளவில் சந்தோஷப்பட்டு தங்கள் அன்றாட வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். அத்தியாயம் 14 சின்ன சின்ன ஆசைகள் எங்கள் குடும்பம் பிரமணர்களில் வடமா என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். எங்களை உள்ளூர் முக்காணியர்கள் துவேஷம் பாராட்ட மாட்டார்கள். பரஸ்பர அன்போடு தான் முக்காணியர்கள் எங்கள் பிரிவினரை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், எங்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் திருச்செந்தூரில் மிகச் சொற்பமே என்பதையும் குறிப்பிட வேண்டும். திருச்செந்தூர் முக்காணியர்களும், மற்ற பிராமணர்களும், பூணூல் போட்ட வைஸ்யர்களும் ஒன்றாக திருச்செந்தூர் கோவிலில் ஆங்காங்கே தனித் தனியாக தங்கள் வைதியர்களைக் கொண்டு ஆவிணிவட்டம் என்னும் பூணுல் சடங்கைச் செய்வார்கள். உள்ளூர் முக்காணியர்கள் கோயில் முகப்பு மண்டபத்தின் நடுவில் நான்கு சிறிய வேலைப்பாடு கொண்ட தூண்களுடன் கூடிய சிறிய மேடைபோல் இருக்கும் மண்டபத்திலிருந்து உரக்க மந்திரங்களை உச்சரித்து, அவணிவட்ட பூணூல் சடங்கு மிகவும் பக்தி சிரத்தையுடன் நடக்கும். அந்த மந்திர உச்சரிப்புகளுக்கு பக்கத்தில் உள்ள கடல் அலைகளின் சப்தங்கள் பின்னணி இசையாக இனிமையாக ஒலிப்பதை உணரலாம். தீ வளர்த்து ஹோமமும் அமர்க்களமாக விஸ்தாரமாக நடக்கும். வடமா பிராமணார்கள் – வைஸ்யர்கள் கோவிலுக்கு உள்ளே உள்ள வெளிப் பிரகாரங்களில் இந்தப் பூணுல் சடங்குகளைச் செய்வார்கள். இவைகள் முடிந்தவுடன், அனைத்துப் பிரிவினரும் ஒன்றாக ஒரே கூட்டமாக கோயிலிருந்து ஊருக்குள் ஊர்வலமாகச் செல்வார்கள். அவர்களுக்கு முன்னால் கோயில் யானை, ஒட்டகம் செல்லும். கோயில் மேளமும் கூடவே வரும். யானையின் நெற்றியில் தங்க முகப்படாரம், யானையின் பெரு வயிற்றினை அலங்கார போர்வை, அலங்காரப் போர்வையில் ஒட்டகம் – என்று அந்த ஆவணிப் பூணூல் சடங்கு வெகு விமரிசையாக நடக்கும். அப்போது சிறுவர்களும் கள்ளப் பூணூல் போட்டுக் கொள்வார்கள். அவர்கள் பட்டு வேஷ்டியில் காட்சி அளிப்பார்கள். ஒரு ஆவணியா வட்ட சடங்கில் நான் கள்ளப்பூணுல் போடுவதற்கு, எனக்கு ஒரு பட்டு வேஷ்டி வேண்டும் என்று அடம் பிடித்தேனாம். பருத்தித் துண்டில் தான் எப்போதும் இந்தச் சடங்கை நான் செய்வது வழக்கம். அப்பா, அண்ணா – ஆகியவர்களுக்கும் பருத்தி வேஷ்டி தான். பட்டு வேஷ்டி எங்கள் வீட்டு பட்ஜெட்டிற்கு ஒத்துவராது என்பதால் அதைப் பற்றி யாரும் கவலபடுவதும் இல்லை – வேண்டியதும் இல்லை. ஆனால் ஆவணியா வட்ட சடங்கு வருவதற்கு முன்பாகவே ‘எனக்கு பட்டு வேஷ்டி வேணும்’ என்று அழ ஆரம்பித்து விட்டேனாம். என்ன சமாதானம் சொன்னாலும், நான் விடாமல் அடம்பிடித்தேனாம். அப்போது கையில் பணம் இல்லை. இருப்பினும், மண்டபத்து ஜவுளிக்கடையில் அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு போய், ஒரு சிறிய சிகப்பு பட்டு வேஷ்டி வாங்கிக் கொடுத்தார். இன்னமும் அந்தப் பட்டு வேஷ்டியின் சிகப்புக் கலர் என் மனத்திரையில் துல்லியமாகத் தெரிகிறது. அந்த வருட ஆவணியாவட்டச் சடங்கு முடிந்து நடக்கும் ஊர்வலத்தில் கள்ளப் பூணூலுடனும், சிகப்பு பட்டு வேஷ்டியுடனும் ஒரு வெற்றி வீரனாகக் கலந்து கொண்டேன் சின்ன ஆசைதான் – ஆனால் அது தான் அந்த சின்ன வயசில் ஆனந்தத்தைக் கொடுக்கும். அப்போது வீட்டு வசதி, செலவு ஆகியவைகளைப் பற்றிய கவலை கொள்ளாத வயது. ‘என் வயது பக்கத்து வீட்டுச் சிறுவன் பட்டு வேஷ்டி உடுத்துகிறான். எனக்கும் வேண்டும்’ என்ற ஆசை – நல்ல வேளை – அந்த என் ஆசை சின்னதாக அமைந்து விட்டது. இல்லாவிட்டால், நான் அழுது கொண்டு பிறகு தானாகவே மறக்கவும் வேண்டியது தான்! திருவிழாக் காலங்களில் சிவன் கோவிலைச் சுற்று தற்காலிகக் கடைகள் முளக்கும். அதில் விதவிதமான விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள், வளையல்கள், ரிப்பன், பாத்திரங்கள் என்று பலவும் விற்பனைக்கு இருக்கும். என் சித்தப்பாவின் மகன் கணேஷ் அந்தமாதிரியான திருவிழாவிற்கு வந்தார். அவர் என்னை சிவன் கோவிலுக்கு ஸ்வாமி கும்பிட அழைத்துக் கொண்டு சென்றார். ஸ்வாமி தரிசனம் ஆன பிறகு, என்னை ஒரு கடைக்கு கூட்டிச் சென்று, ஒரு ரப்பர் பந்து வாங்கிக் கொடுத்தார். அந்த ரம்பர் பந்தின் மணம் இன்னும் என் மனத்தில் ஆழப்பதிந்து விட்டதால், இன்றும் அந்த மணத்தை நான் நுகர முடிகிறது. அந்த நேரத்தில் அந்த ரப்பர் பந்து எனக்கு ஒரு பெரிய விளையாட்டு நண்பனாகவே உருவாகிவிட்டது. எதிர்பார்க்காத சில சின்ன ஆசைகள் கூட நிறைவேறும் தருணங்கள் வாழ்க்கையில் பத்திரப்படுத்தி அசைபோட வேண்டியவைகளாகும். அத்தியாயம் 15 திருச்செந்தூர் முக்காணியர் முன் குடுமி முக்காணியர் கோயிலுக்கு வரும் பக்தர்களை கட்டளைதாரர்களாகச் சேர்த்து அவர்களுக்குத் தரிசனம் செய்வித்து அதற்குக் கைமாறாக சன்மானம் காசாகப் பெற்று ஜீவனம். அவர்கள் ஜென்ம நட்சத்திரத்தில் இலைவிபூதி – குங்குமம் பிரசாதம் அனுப்புதல். திருச்செந்தூர் போஸ்ட் ஆபீசில் கவர் ஸ்டாம்புகள் அதிக விற்பனை. மணியார்டர்களும் அதிகம் வரும். போஸ்ட் பெட்டியில் எப்போதும் இத்தகைய பிரசாத கவர்களால் நிரம்பி வழியும். மத்தியானம் போஸ்ட் ஆபீசில் முன் குடுமி முக்காணியர்கள் மணியார்டர் பணம் வாங்க கூடுவார்கள். கோயில் மதியம் நடை சாத்தியதும் அவர்கள் தங்கள் வீட்டிற்குப் போவதற்கு முன் போஸ்டாபிசில் தங்களுக்கு மணியார்டர் வந்திருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வார்கள். முருகனுக்கு பூஜை செய்யும் அதிகாரம் போத்திகளுக்குத் தான் உரிமை. அவர்கள் தங்குவதற்கு பெரிய ரத வீதியில் பஜனை மடத்திற்கு எதிரில் ஒரு காலனிமாதிரியான பல வீடுகள் கட்டி அதில் குடிவைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் ஊர் மக்களிடம் அவ்வளவாக நெருங்கிப் பழக மாட்டார்கள். தனித்தே ஒரு தீவில் இருப்பது போல் தான் காணப்படுவார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களும், பொதுவான ஊர் விழாக்கள் – கொண்டாட்டங்கள் ஆகியவைகளில் கலந்து கொண்டதாக நினைவில் இல்லை. அவர்கள் அனைவரும் கேரளாவிலிருந்து குடிபெயர்ந்த நம்பூத்திரி போல் பூஜை செய்யும் இனத்தைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறது. அவர்கள் பிறகு ஹோட்டல் – ஜவுளி கடைகள் என்று தங்களை பொருளாதார ரீதியில் வளர்த்துக் கொண்டதாகப் படுகிறது. திருச்செந்தூரில் முருகன் கோயிலில் மாசி மாதத்திலும், பங்குனி மாதத்திலும் வருடத்தில் இரண்டு திருவிழாக்கள் மிக முக்கியம். அந்த நாட்களில் ஊரே ஜே ஜே என்று திருவிழாக்கோலமாகத் திகழும். அந்தத் திருவிழாவில் ஜெயந்தி நாதர் வீதி வலம் வருவார். அவர் வலம் வரும் பாதையும், திருச்செந்தூர் உற்சவ மூர்த்தி முருகன் சப்பரம் செல்லும் பாதையும் வேறு வேறாக இருக்கும். அதாவது சில தெருக்களில் ஜெயந்தி நாதர் சப்பரம் செல்லாது. இது ஏன் என்று எனக்குத் தெரியாது. 12 நாட்கள் உற்சவமும் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது பிர்பலமான நாதஸ்வர வித்வான்கள் வீதியிலே வலம் வந்த வண்ணம் வாசிப்பார்கள். அதைக் கேட்க ஊர் ஜெனங்கள் கூடுவார்கள். அதுவும் எங்கள் மைலப்பபுரம் வீட்டிற்கு எதிரில் ஸ்வாமி சப்பரம் எப்போதும் நிறுத்தப்படும். சப்பரம் தூக்குபவர்களுக்கு அன்னதானம் எங்கள் ஹோட்டலில் அளிக்கப்படும். அப்போது நாதஸ்வர வித்வான்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது பல கீர்த்தனைகளை வாசிப்பார்கள். அது ஒரு ஆனந்தமான நேரம். அந்த அற்புதமான நிகழ்ச்சிகள் இன்னும் என் மனத்தில் நிழலாடுகிறது. காலையிலும், இரவிலும் முருகன் சப்பரத்தில் வீதி வலம் வந்தாலும், இரவில் தான் இந்த நாதஸ்வர நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும். ஏழு – எட்டாம் நாள் திருவிழா வெகு பிரபலம். மாசி – பங்குனித் திருவிழாக்களில் மட்டும் தான் ஆறுமுகநாயினார் என்ற திருநாமம் கொண்ட முருகன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கிழக்கு நோக்கிய மூலவர் சந்திக்கு அருகில் ஜெயந்திநாத உற்சவ மூர்த்தி சந்நிதிக்கு அடுத்து தெற்கு நோக்கிய தமது பீடத்திலிருந்து திருவுலாவுக்காக சப்பரத்தில் எழுந்தருளுவார். அதுவும் முருகன் பச்சை சாத்தியாக – எல்லாம் பச்சை நிறத்தில் திருவுலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். அதன் சிறப்பு என்ன வென்றால், முருகன் – வள்ளி தெய்வயானை சமேதராக பச்சைப் பட்டு, பச்சைப் புடவைகள், பச்சை மாலைகள், பச்சைச் சப்பரம் – என்று சர்வமும் பச்சை மயம் தான். அத்துடன் உற்சவ மூர்த்திகளுக்கு பன்னீர் அமிஷேகம் செய்வது சிறப்பு என்பதால் பன்னீர் பாட்டில்கள் அடங்கிய வண்டி சப்பரத்திற்கு முன்பு செல்லும். அந்தப் பன்னீரை வாங்கி முருகனுக்கு அபிஷேகம் செய்வர் பக்தர்கள். இதை ஒவ்வொரு வீட்டாரும் தவறாது செய்வர். ஆகையால் சப்பரத்தின் கீழே பன்னீர் அருவி போல் விழும். அப்படி விழும் பன்னீரில் நனைவதற்காக பலர் முண்டியடித்து சப்பரத்திற்குக் கீழே நிற்பார்கள். சப்பரம் செல்லும் போதும் கூடவே செல்வார்கள். நானும் இப்படி அந்தப் பன்னீரில் குளித்திருக்கிறேன். ஏன், திருச்செந்தூர் வாசத்தில் இந்த அனுபவத்தை ஒரு போதும் தவறவிட்டதில்லை. பன்னீர் அபிஷேகத்தால் என் உடலெல்லாம் மணக்கும். வீதி உலா முடிந்ததும், வீட்டிற்கு வந்து மீண்டும் குளிப்பதில்லை. அந்த நறு மணத்தின் நினைப்பிலேயே நாள் முழுவதும் இன்பமாக இருக்கும். ‘ஏய், கோமதி ! இங்க வா .. என் சட்டையை முகந்து பார் .. ஆஹா ஆஹா .. என்ன மணம் என்ன மணம்’ என்று சொல்வேன். ‘டே, எனக்கும் நீ கொஞ்சம் பன்னீரைக் கையிலே கொண்டு வந்திருக்கலாம் இல்லையா? நானும் என் பாவாடை சட்டையில் தெளித்துக் கொண்டிருப்பேன் இல்லையா?’ என்பாள் என் அக்கா. அந்த நாட்கள் அற்புத நாட்கள். நினைக்க நினைக்க தித்திக்கும் இன்ப நாட்கள். அசைபோடப் போடப் ஆத்மாவையே ஆனந்த மடையச் செய்யும் நாட்கள். அத்தியாயம் 16 தேர்த் திருவிழா 10-ம் நாள் தேர்த்திருவிழா திருச்செந்தூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். மூன்று தேர்கள் நான்கு ரத வீதிவழியாக பக்தர்களால் இழுக்கப்பட்டு நிலைக்குக் கொண்டு வரப்படும். ஒரே நாளில் முடிந்துவிடும். விநாயகர் தேர் முதலில் பக்தர்களால் இழுக்கப்படும். அது மிகவும் சின்னத் தேர். ஆகையால் நான்கு ரத வீதிகளையும் கடந்து நிலைக்கு வெகு சீக்கிரம் வந்துவிடும். சிவ - பார்வதி தேவியின் தேர் சிறிது பெரியது. இழுப்பதும் கொஞ்சம் சிரமம். ஆனால் முருகன் தேர் போல் அவ்வளவு பெரியது இல்லை. சிவ - பார்வதி தேவியின் தேரும் இழுக்கப்பட்டு நிலைக்கு வந்த உடன் தான் பெரிய தேர் இழுக்கப்படும். ரத வீதிகளின் நடுவில் – வீதிகள் இரண்டும் சேரும் இடத்தில் கடப்பட்ட நான்கு பந்தல்களுடன் பஜார் கடைகளின் முன்னால் மழை – வெய்யிலிருந்து காக்கக் கட்டப்பட்டுள்ள பல குட்டிப் பந்தல்களும் பிரிக்கப்படும். சில சமயங்களில் பெரிய தேர் தடம் புரண்டு வீட்டுப் படிகளில் மோதும் அபாயமும் ஏற்படும். தேரை ஒரு ரதவீதியும் இன்னொரு ரதவீதியும் சேரும் இடத்தில் திருப்புவதில் மிகவும் கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். தேரை இழுக்கும் போது தேர்ச் சக்கரங்களில் பலமான சாய்வுடன் கைப்பிடியுடன் உள்ள பல கனமுள்ள பெரிய மரக் கட்டைகளை லாவகமாக வைத்து தேரைத் திருப்புவார்கள். இத்தகைய பல மரக்கட்டைகள் தேரின் கீழே ஒரு திடமான கயிற்றினால் தூளி போல் கட்டியதில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவைகளை தேரின் பின் சக்கரங்கள் இரண்டில் வைத்து இழுக்கும் தேரை திசை திருப்புவார்கள். இதை தேர்ச்சி பெற்றவர்கள் தான் செய்வார்கள். இது தவிர இழுப்பதற்கு ஏதுவாக பெரிய இரண்டு கட்டைகள் பின் சக்கரத்தின் இரண்டின் அருகில் தொங்கியபடி இருக்கும். பக்தர்கள் இழுப்பதற்கு உதவியாக பல சமயங்களில் இந்த கட்டைகளை தேரின் பின் சக்கரங்கள் இரண்டிலும் அண்டைக்கொடுத்து சாய்வுக் கட்டைகளை வைத்து பின் நெம்புகோல் போல் அந்த கோணமான நிலையில் இருக்கும் கட்டைகளை தரையை நோக்கி நெம்பி தேரை இழுப்பவர்களுக்கு உதவியாக நகர்த்துவார்கள். தேர் நகரச் செய்யும் ஒவ்வொரு சமயத்திலும் ‘வெற்றி வேல் .. வீர வேல்’ என்று கோஷங்கள் எழுப்புவது தேரை இழுப்பவர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். தேர் வடத்தை இழுப்பதில் ஊர் பெண்களும் ஆண்களுக்கு சரி சமமாக பங்கு கொள்வார்கள். தேரை நிலைக்கு வரச்செய்த பிறகு தான் சமையல் கூட சில வீடுகளில் பெண்கள் செய்வார்கள். தேர் நிலைக்கு வந்த பிறகு தேர்வடத்தை கைகளால் தொட்டு கண்களில் ஒற்றுக் கொண்டு மன நிம்மதி அடைவர். இந்த தேர்திருவிழாவின் முக்கிய பாத்திரம் சுடலை மாடன். அவன் தான் தேர் நகரப் பூஜை செய்து தேர் செல்லும் வழியில் ஆடியபடி பக்தர்களை தேர் இழுக்க உற்சாகப்படுத்துவான். அவன் உடுத்தி இருக்கும் ஆடை மிகவும் கலர் கலராக இருக்கும். சிகப்பு, பச்சை, நீலம் என்று பல வித வண்ணங்களில் பைஜாபோல் ட்ராயரும், பல வர்ண சட்டையையும் அணிந்திருப்பான். ஒரு வீரனைப் போல் நெஞ்சிலே தடித்த துணிக் கயிறை பூணூல் மாதிரி இரண்டு பக்கத்திலும் சட்டைக்கு மேல் அணிந்திருப்பான். இரு கால்களில் சலங்கை, சிறிய மணிகளால் இடுப்பைச்சுற்றி கட்டியுள்ள கச்சை, இரண்டு புஜங்களிலும் மணிகளால் ஆன துணிப்பட்டை என்று பலவித்த்திலும் தன்னை அலங்கரித்துக் கொள்வான் சுடலை மாடன். ஆகையால் அவன் நடக்கும் போதே ஜல் ஜல் என்ற மணியோசை கேட்கும். ஆடினால் ஒலியும் பலமடங்கு சத்தமாக ஒலிக்கும். அவன் ஆடுவதற்கு ஏதுவாக நையாண்டி மேளம் ஒத்தூதுதல் ஆகியவைகளால் களை கட்டும். நமக்கே சுடலை மாடனுடன் ஆடவேண்டும் போல் இருக்கும். அவன் கையில் வேல் போன்ற ஆயுதம் இருக்கும். அதை பலவகையில் சிலம்பம் போல் சுற்றி குதித்து ஆடுவது தேர் இழுக்கும் பக்தர்களுக்கு உற்சாகம் அளிக்கும். அவ்வப்போது சுடலை மாடன் பக்தர்களின் மேல் விபூதியை கைகளில் வைத்து வானத்தை நோக்கி வீசுவான். அந்த விபூதி பக்தர்களின் மேல் விழுந்து, அவர்களை தெம்புடன் தேர் இழுக்க வைக்கும். வீர வேல் – வெற்றி வேல் – என்ற சுடலை மாடனின் முழங்கத்திற்கு பக்தர்களும் உரக்க கோஷங்களை எழுப்புவார்கள். இவைகளால் உடலும், உள்ளமும் முருக பக்தியில் மூழ்கி தேர் வடம் பிடித்து இழுப்பதே ஒரு தெய்வீக சக்தியைப் பெறுவதாகவே இருக்கும். தேர் முக்கில் சுடலை மாடனுக்குத் தனியாக ஒரு பீடத்தில் பிரமிட் போல் ஒரு பத்தடி ஸ்தூபி இருக்கும். அதற்கு அலங்காரம், பூஜை எல்லாம் செய்யும் அதிகாரம் சுடலை மாடனுக்குத் தான் உண்டு. அந்த தெய்வீகபிரமிட்டின் முன் பக்கத்தில் யானையின் புகப்படாம் போல் அலங்கார துணியால் ஆன தோரணம் மிகவும் அம்சமாக தோற்றமளித்து பக்தியுடன் சேவிக்க பக்தர்களை ஈர்க்கும். அதற்கு படையலாக அந்த பிரமிட்டின் பீடத்தில் ஒரு பெரிய பூப்போட்ட துணியில் பலவிதமான பழங்கள், உடைத்த தேங்காய் மூடிகள், அவல் மற்றும் அரிசிப் பொறியுடன் பொட்டுக்கடலை, கற்பூர ஆராதனைக்கு தட்டு, பூமாலைகள் என்று அமர்க்களமாக சுடலை மாடன் பூஜை நடக்கும். பூஜையின் போது, சுடலை மாடன் தன் கழுத்தில் தானே ஒரு மாலையை அணிந்து, கற்பூரம் காட்டி, பிறகு அவல்-பொறி-வெல்லம் கலந்த நிவேத்தியப் பிரசாதம் விநியோகம் நடக்கும். அப்போதெல்லாம் பேய்க்கொட்டு மேளம் ஒலிக்க அந்த இடமே ஆர்ப்பாட்டமாக இருக்கும். பூஜையின் போது சுவாமி வந்து சுடலை மாடன் ஆடுவது அற்புதமாக இருக்கும். அப்போது அவன் தரும் விபீதிப் பிரசாதத்தை பக்தியுடன் இட்டுக் கொண்டு, பத்திரமாக வீட்டிற்கும் எடுத்துச் செல்வார்கள். தேர் திருவிழாவிற்கு சுடலை மாடன் தான் முதன்மை அதிகாரி. அவனது உத்திரவுக்குப் பிறகு தான் தேர் நகரும். சுடலை மாடன் நான்காம் வர்ணத்தவரான தலித் நபராகத் தான் இருப்பான். ஆனால் பக்தர்கள் அவனிடமிருந்து விபீதிப் பிரசாதம் பெறுவதை பாக்கியமாகவும், அவனை வணங்குவதில் ஆர்வமாக இருப்பது இப்போது நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது. மூன்று தேர்களின் அலங்காரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தேர் உச்சியில் கலசம் மொடிகள் கட்டப்பட்டிருக்கும். சிவப்பு மஞ்சள் துணிகளால் உருவாக்கப்பட்ட தோரணங்கள், குஞ்சங்கள், தொங்கும் குழாய்வடிவில் உள்ள அலங்காரங்கள் – ஆஹா, அற்புதம், அற்புதம் என்று குதூகலிக்கச் செய்யும். தேர் திருவிழா என்றாலே ஊரோ ஒன்று கூடி ஒற்றுமையாக ஒரே குறிக்கோளுடன் செயலபடும் உன்னதமான காட்சியாகும். ஒளவை ‘கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார். ஆனால் தேர்த்திருவிழா இல்லா கோயில் ஊர், ஊரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அற்புதமும், ஆனந்தமும் நிறைந்ததாகும். ‘பாட்டி ! இந்தா சுடனை மாடன் விபூதிப் பிரசாதம்’ என்று நான் பாட்டியிடம் கொடுக்கவும், ‘முருகா! ஷண்முகா! ஞான பண்டிதா! எல்லாரும் க்ஷேமமாய் இருக்கணும்’ என்று தன் நேற்றியிலே தன் மூன்று விரல்களிலும் விபூதியை எடுத்துக் கொண்டு பய பக்தியுடன் பூசிக்கொள்வார். ‘ஏ, பிச்சு! இங்க வா. தேர் விழா விபூதிப் பிரசாதம் இட்டுக்கோ’ என்று தனது மாட்டுப் பெண்ணை – என் அம்மாவை அன்போடு கூப்பிட்டுக் கொடுப்பார். அந்த அற்புதமான நாட்களை நினைத்துப் பார்க்கப் பார்க்க மனம் பரவச ஆனந்த சாகரத்தில் இன்றும் திளைப்பதைக் காண அந்த நினைவுகளின் சக்தியினை உணர்கிறேன். அத்தியாயம் 17: பஜனை மடம் – அன்னதானம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடக்கும் மாசி – ஆவணித் திருவிழாக்கள் மிகவும் பிரபலம். பத்து நாட்கள் நடக்கும் அந்த நாட்களில் இரவு திருச்செந்தூர் பஜனை மடத்தில் அன்னதானம் நடக்கும். அந்த அன்னதானத்தில் தினமும் ருசியான வாழைக்காய்க் கறி, தேவாமிர்த்தமான சாம்பார், ருசியான ரசம், நீர்க்க உப்பு – கருவேப்பிலை – பச்சைமிளகாய் ஆகியவைகளால் ஆன மோர் – மாங்காய் ஊறுகாய் ஆகியவைகளுடன் அப்பளம் வேறு. ஒரே மாதிரியான சமையல் தான். ஏழாம் நாள் திருவிழாவின் போது அற்புத ருசியான ரவா உப்புமா செய்து, பறிமாறுவார்கள். அவைகள் ஒரே மாதிரியாக இருப்பினும், அற்புதமான ருசியாக இருக்கும் விந்தையை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை. ‘பஜனை மடத்து சாம்பார் – பஜனை மடத்து ரசம் போல் செய்வது சிரம்ம்’ என்று நான் அடிக்கடி சொல்வேன். அவ்வளவு ருசியோ ருசி ! அதற்குக் காரணம் சமையல் செய்யும் பரிசாரகர்கள் ஏதோ கூலிக்காகச் சமைப்பதில்லை. அதை ஆத்மார்த்தமாக ஆனந்தமாக ஒரு தவம் போல் தினமும் செய்கிறார்கள். அதில் ஒரு ஆத்ம திருப்தி படுவதில் தான் குறியாக இருப்பார்களே அல்லாமல் கூலி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஏன்? அவர்களுக்கு கூலியே இல்லையோ என்னவோ? எனக்குத் தெரியாது. அதை ஒரு சேவை மனப்பான்மையுடன் தெய்வ ஆராதனை போல் செய்வதால் தான் அவர்கள் செய்யும் சமையல் ருசுயுடன் தினமும் அமைந்து விடுகிறது. அவர்களை நாம் தவசிப்பிள்ளை என்று தான் அழைக்கிறோம். தவசி என்பது தவம் என்ற பதத்தின் மருவாகும். பஜனை மடம் மாடவீதியில் தேர்முனைக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. முன் பக்கத்தில் இரண்டு பெரிய திண்ணைகள் இருக்கும். பிறகு ஒரு ஹால் – இரண்டு பக்கங்களிலும் இரண்டு இரண்டு அறைகளாக மொத்தம் நான்கு அறைகள் உண்டு. அங்கு தான் மளிகைச் சாமான்கள், காய்கறிகறிகள், பெரிய பெரிய சமையல் பாத்திரங்கள், தூக்கு வாளிகள், பெரிய பெரிய அகப்பைகள் என்று பலவகையான சாமான்களைப் பூட்டிப் பத்திரப்படுத்த உபயோகிப்பார்கள். பின் பக்கத்தில் வெட்ட வெளி மைதானம். அதற்கு இடது கோடியில் பெரிய சமையல் கட்டு இருக்கும். அங்கே சுற்றுச் சுவருக்கு வெளியே பெரிய கிணறு உண்டு. சமயலுக்கு நல்ல நீர் வெளியிலிருந்து கொண்டு வந்து நிரப்புவார்கள் என்று நினைக்கிறேன். சமையல் பாத்திரங்கள் எல்லாம் பெரிசு பெரிசாக இருக்கும். படகுத் துடுப்பு போன்ற மரத்தால் ஆனதை வைத்துத் தான் சாதம் கிண்டுவார்கள். பெரிய பெரிய அடுப்புகள் உண்டு. அடுப்பு எரிக்க விறகுகைப் பயன்படுத்துவார்கள். அன்னதானம் நடக்கும் திருவிழா நாட்களில் அந்த வெட்ட வெளியில் பந்தல் போட்டு சாப்பிட ஏற்பாடு செய்திருப்பார்கள். ஒற்றை ஓலை பந்தல் தான். வானத்து நட்சத்திரங்கள் பந்தலையும் தாண்டி கண்சிமிட்டும் அழகையும் பந்தியில் இடம் பிடித்து உட்காரும் போது ரசிக்கலாம். சில சமயங்களில் பவுர்ணமிச் சந்திரனின் ஒளியும் தரை எங்கும் வட்ட வட்டக் கோலம் போடும் அழகையும் பார்த்து ரசிக்கலாம். மண் தரையெல்லாம் அந்த வெண்முத்துக் கோலத்தால் அற்புதமாக உடையுடுத்தி அழகாக்க் காட்சி தருவதைக் காண கண்கோடி வேண்டும். இரவு சுமார் ஏழு மணி அளவில் முதல் பந்தி நடக்கும். முதல் பந்திக்குச் சிறுவர்களைத் தான் உள்ளே அனுமதிப்பார்கள். அந்த பஜனை மடத்திற்கு நான் என் நண்பர்கள் அனைவரும் ஐந்து மணிக்கே ஆஜராகி விடுவோம். அங்குள்ள திண்ணைகளில் ஓடிப் பிடித்து விளையாடுவோம். நேரம் போவதே தெரியாது. பஜனை மடக் கதவு திறந்தவுடன் பந்தியில் இடம் பிடிப்போம். மண் தரையில் கோரைப்பாய் போடப்பட்டிருக்கும். எல்லோரும் அமர்ந்தவுடன் முழு வாழை இலையைப் போடுவார்கள். எல்லாம் சிறிய முழுவாழை இலையாக ஒவ்வொருவருக்கும் போடுவார்கள். தண்ணீர் தெளித்துக் கொண்டே வருவார்கள். நாம் நமது இலையைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அமிர்தம் போன்ற போஜனம் பரிமாறப்படும். ஆஹா, என்ன ருசி, என்ன ருசி – என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் மனமும் குதூகலத்தால் குதித்துக் கும்மாளம் போடும். முதல் பந்தியில் சாப்பிட்டு முடிந்தவுடன் சில நாட்களில் நான் தண்ணீர் எடுப்பேன். அதில் ஒரு ஆனந்தம் ஏற்படும். இந்த அன்னதானத்தில் பெண்கள் பங்குபெறுவதில்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அன்னம் பிராணமயம் என்பது அன்னம் தான் உயிரை உடலுடன் தக்க வைத்துக்கொள்கிறது என்பதை உணர்த்த எழுந்த பொன்மொழியாகும். அந்த அன்னமே அற்புத ருசியாக அமைந்து விட்டால் அந்த ருசியே உயிரோடு கலந்து நினைவிலே நிரந்தர இட பிடித்து நம் வாழ்வை இனிமையாக்கும் தருணங்காளாக உயிர் வாழும். அத்தருணங்களை நினைவு கூர்வதே இனிமை, தெய்வார்மித இனிமை. அத்தியாயம் 18 திருச்செந்தூர் வாச காயத்திரி ஜெபம் – வரலட்சுமி நோன்பு – காந்திஜி கைராட்டை எனக்கு பூணூல் சிறுவயதில் சம்ரதாயப்படி போடவில்லை. நான் சென்னை வந்து என் அக்கா கல்யாணத்தின் போது தான் பூணூல் போடப்பட்டது. தனியாக அந்தச் சடங்கிற்கு பூணூல் போட வசதி இல்லை என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. என் அண்ணாவிற்கு எப்போது பூணூல் போட்டார்கள் என்பது என் நினைவில் இல்லை. என் பூணூல் போடும் சடங்கைப் பற்றிய சிந்தனையே அப்பா – அம்மா – பாட்டி என்று யாருக்கும் எழவில்லை. மெஸ் நடத்துவதால் நாங்கள் வைதீக நடைமுறையைக் கடைக்கபிடிக்க முடியாது. பக்தி தான் எங்களுக்குச் சக்தி. சொற்ப வருமானத்தில் இதை எல்லாம் பற்றிச் சிந்திக்கவோ அல்லது அதைப் பற்றிக் கவலை கொள்ளவோ இல்லை. எங்கள் உற்றார் உறவினர்களும் எங்களை இது குறித்துக் குறையும் சொன்னதில்லை. ஆனால் ஆவணியா வட்டத்தில் கட்டிக் கொள்வதற்கு பட்டு வஸ்திரத்திற்காக அழுது அடம்பிடித்ததைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன். இப்போது காயத்திரி ஜெபத்திற்கு நான் சமித்துச் சேகரித்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என் அண்ணா அக்னி வளர்த்து ஆவணியா வட்டத்திற்கு அடுத்த நாள் வரும் காயத்திரி ஜெபம் செய்ய சமித்து சேகரித்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் திருச்செந்தூரின் எல்லையில் ஒரு பெரிய குளம் உண்டு. அதன் கரைகளில் பல பெரிய வளர்ந்த அரச மரங்கள் உண்டு. அதிலிருந்து விழுதுகள் விழுந்து காய்ந்து கிடக்கும். அவைகளைச் சேகரித்து சிறு சிறு குச்சிகளாகச் செய்தால் சமித்து ரெடி. இந்த சேகரிப்பே ஒரு அற்புதமான செயலாகத் தோன்றும். சேகரித்த அரசமரத்துக் கிளையின் குச்சிகளை ஒரு பையில் போட்டுக் கொண்டு வீடு வருவேன். பிறகு வீட்டில் அந்தக் குச்சிகளை ஒடித்து சிறியதாக ஆக்கி 108 குச்சிகளை காயத்திரி ஜெபம் செய்வதற்குத் தயாராக ஆவணி வட்டம் வருவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே தயார் செய்து விடுவேன். அண்ணா காயத்தி ஜெபம் செய்யும் போது அக்னியில் அந்த சமித்தை நெய்யில் ஒவ்வொன்றாகத் தோய்த்து சமர்ப்பிப்பதைப் பார்க்கும் போது எனக்கு மனத்திலே பரவசம் மூட்டும். ஒவ்வொரு சடங்குகளும் பக்தியை மனத்தில் நிரந்தரமாக குடியிருக்கச் செய்பவைகள் என்பதை இப்போது உணர்கிறேன். அண்ணா தனது நண்பன் கோதண்டபாணியுடன் சில நாட்கள் சாயங்காலம் குளத்தில் குளித்து அங்கேயே சந்தியா வந்தனம் செய்வார்கள். நானும் சில சமயங்களில் கூடச் சென்றுள்ளேன். அப்போது அவர்கள் உரையாடல் சந்தியாவந்னம் பற்றியும், சுதந்திரப் போராட்ட விஷயங்கள் பற்றியும், காந்தியின் சத்தியாக்கிரத்தைப் பற்றியும் இருக்கும். ‘சந்தியாவந்தனம் பிராமணாளுக்கு மிக முக்கியம். பூணூல் போட்டதின் தாத்பர்யமே தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பது வேத விதி. அந்த மூன்று வேளை எது என்பதை சுலபத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ள ஒரு சூத்திரம் சொல்வார்கள். காணாமல், கோணாமல், கண்டுகொடு – என்பது தான் அந்த சூத்திரம். சந்தியா வந்தனமே சூரியபகவானைக் குறித்தது. சூரியன் உதமாவதற்கு முன் என்பதை காணாமல் – அதாவது சூரியன் உதிப்பதற்கு முன் என்றும், கோணாமல் என்றால் உச்சி வேளையில் – அதாவது சூரியன் வானத்தில் தலைக்கு நேர் உச்சியில் இருக்கும் வேளையில் என்பதாகவும், கோணாமல் என்றால் சூரியன் அஸ்தமனமாகாத வேளையில் என்றும் பொருள் படும் சூத்திரம் தான் அது.’ அபிவாதயே பற்றியும் அவர்கள் அலசுவார்கள். காயத்திரி மந்திரம் தான் உயர்ந்தது என்றும், பகவத் கீதையில் கிருஷ்ணன் மந்திரங்களில் நான் காயத்திரி என்று சொல்வதையும் அவர்கள் பேச்சில் சுட்டிக் காட்டுவதை நானும் கேட்டிருக்கிறேன். இப்படிச் சொல்வதால் என் அண்ணா தினமும் மூன்று வேளை சந்தியா வந்தனம் செய்வதாக நினைக்க வேண்டாம். ஏதோ சில நாட்கள் காலை அல்லது மாலை வேளைகளில் செய்வதுண்டு. ‘டே, சேது ! சந்தியா வந்தனம் செய்யடா – சக்தியும், பக்தியும், புத்தியும் வரும்டா ..சரி, சந்தியா வந்தனம் செய்யாவிட்டாலும் காயத்திரியாவது தினமும் செய்யடா’ என்று என் அம்மா சொல்லுவாள். ஆனாலும், திருச்செந்தூரில் செய்த சந்தியா வந்தனம் – காயத்திரி சென்னையில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து மறைந்தே விட்டது. அனால் பூணூல் அணிவது மட்டும் தொடர்ந்தது. இப்பொழுது வெளிநாடுகளுக்குச் செல்லும் பிராமணப்பிள்ளைகளில் பலர் பூணூலைப் புறக்கணித்து விட்டனர். அப்படி இருக்கும் போது சந்தியா வந்தனமா – காயத்திரி மந்தரமா – எல்லாம் டாலரில் மறைந்தும், மறந்தும் போய் விட்டன. இந்தியா வரும் பொழுது ஏதாவது வைதிகக் காரியங்கள் செய நேர்ந்தால் மட்டும், முதலில் வாத்தியாரிடம் பூணுல் கேட்டு அணிந்து கொள்வார்கள் சில பெற்றோர்களுக்கு இதைப் பார்த்து மனம் சிறிது வேதனைப் படும். வெளிநாட்டுப் பிரஜையான பிராமணப்பையன்கள் – பிராமணப் பெண்களுக்கு ஹிந்து மதத்சடங்குகளில் அவ்வளவு ஈடுபாடு இருப்பதில்லை. இதில் விதிவிலக்கானவர்கள் வெகு சிலரே என்பது ஒர் நிதர்சன உண்மை. அண்ணா கோதண்டபாணிப் பேச்சு பிற மதப் பிரசாரம் பற்றியும் இருக்கும். ‘திருச்செந்தூர் தெருக்களில் கிருஸ்துவமத பிரசாரகர்கள் வாத்தியங்களுடன் ‘ஏசு அழைக்கிறார் – உங்கள் பாவங்களுக்கு ரத்தம் சிந்தினார் – பாவ மன்னிப்பு எங்கள் மதத்தில் மட்டும் தான் உண்டு – ஞானஸ்தானம் பெற கிருஸ்துவராக மாறுங்கள் – என்று புன்னிய முருகன் பூமியில் பிரசாரம் பண்ணுவதைத் தடை செய்ய வேண்டும்’ என்பதெல்லாம் அவர்கள் பேச்சில் இடம் பெறும். ‘தர்பை தார்க்குச்சியாகாது. காந்திஜியின் சத்யாக்கிரகம் ஒர் தர்ப்பை. தர்ப்பையால் துப்பாக்கியை எதிர்கொள்ள முடியுமா?’ என்று கோதண்டபாணி சொல்வதை என் அண்ணா ‘மனத் தூய்மையும், தர்மத்தில் நம்பிக்கையும், சாத்வீகத்தில் அசைக்க முடியாத மன உறுதியும் இருந்தால் தர்பையும் தார்க்குச்சியாகும். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்வது தான் சத்யாக்கிரகம். சத்யாக்கிரகம் தியாகத்தின் உச்ச கட்டம். அதில் வெற்றி அடைந்தால் தான் எதிரியும் நம் நண்பனாகி நமக்கு உதவுவான். காந்திஜியின் தலைமையில் இந்தியா விடுதலை பெற்று முன்னேறும்’ என்று மறுப்பதையும் நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அந்த சாயங்கால வேளையில் பெரிய குளக்கரையில் சாயங்கால சந்தியாவந்தனம் செய்து விட்டு இப்படி பல விஷயங்களைப் பேசுவதை நான் பல நாட்கள் கேட்டிருக்கிறேன். ஏதோ இவர்கள் இரண்டு பேர்களும் தான் நாட்டின் நிலைமையை நிர்ணயிக்கப்போவதாகத் தோன்றும் அளவில் பேச்சு இருக்கும். காந்திஜியின் கருத்துக்கள் அடங்கிய ‘ஹரிஜன்’ பத்திரிகையை வைத்துக்கொண்டு எங்கள் வீட்டில் அவர்கள் இரண்டு பேர்களும் செய்யும் விவாதங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த ஹரிஜன் பத்திரிகை வெள்ளைப் பேப்பரில் அச்சிடப்பட்டு வெளிவந்திருக்கும். அப்போதெல்லாம் சாணிப்பேப்பர்தான் புழக்கத்தில் இருந்தது. நோட்டுப் புத்தகங்களும் பல சாணிப்பேப்பரான பழுப்பு நிறத்தில் தான் கிடைக்கும். ஆகையால் வெள்ளை வெள்ளேரென்று காந்திஜியின் ஹரிஜன் பத்திரிகை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அப்போது அவர்கள் இரண்டு பேர்களும் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஊரிலும் சுதந்திர உணர்வு கொண்டவர்கள் உண்டு. ஆனால் அந்த ஊரில் போராட்டங்கள் – ஊர்வலங்கள் அதிகம் நடைபெற்றதாக நினைவில் இல்லை. திருச்செந்தூரில் நான் எனது 13 வயது வரை அரசு தமிழ் வழிக்கல்வியில் ஹைஸ்கூலில் 8-ம் வகுப்பு வரைப் படித்து விட்டு, அண்ணா சென்னையில் வேலை கிடைத்த சில வருடங்கள் கழித்து சென்னையில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அதைப் பற்றி எல்லாம் பிறகு சொல்கிறேன். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னால் சுமாராக 1944-ல் காந்திஜியின் சுயதேவைப் பூர்த்தி என்ற திட்டத்தில் காதி பவன் மூலமாக ராட்டை கொடுத்து நூல் நூற்க ஊக்கிவித்தனர். அதில் நானும், என் அக்காவும் சேர்ந்தோம். அதன் மூலம் ஒரு கை ராட்டை கொடுத்தார்கள். அதன் விலை 5 அல்லது 10 ரூபாய் இருக்கலாம். இப்போது அதன் மதிப்பு 100 மடங்காக இருப்பதாகக் கணித்து உணரவேண்டும். அந்த ராட்டையையும் கடனாகப் பெற்று நூல் நூற்று அதன் மூலம் அந்த ராட்டையைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். நூற்ற நூலை சிட்டமாக உருவாக்கி தேரடித் தெருவில் இருக்கும் காதிபவனில் கொடுத்தால் அங்கு இருக்கும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் நூற்பதற்கு பஞ்சுக் கட்டை நமக்குத் தேவைக்கு ஏற்றபடி வாங்கிக் கொள்ளலாம். நானும், என் அக்கா கோமாவும் போட்டி போட்டுக் கொண்டு நூற்போம். நானும் திருச்செந்தூரில் இருக்கும் பல வருடங்கள் நூற்றிருக்கிறேன். அந்த காதி பவனில் காடாத் துணி வாங்கியது இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்தக் காடாத் துணியை என் பாட்டி புடவையாகக் கட்டிப்பார். சில பேர்கள் ராட்டையில் நூற்றால் சூடு, அதுவும் கன்னிப் பெண்கள் நூற்க்க் கூடாது என்று கூடப் பயமுறுத்துவார்கள். ‘ஆமாம், சூடு தான் – சுதந்திரம் கிடைக்க சூடு சுரணை இல்லாமல் ஜடமாக இருக்கும் ஜனக்களுக்கு இப்படித்தான் பேசத் தெரியும். வெள்ளையனை வெளியேற்ற காந்திஜி நமக்கு அளித்த ஒரு ஒளி விளக்கு. அந்த சூடு உடலில் பரவினால் சுதந்தந்திர உணர்ச்சிதான் உண்டாகும். ராட்டையைக் கைவிடாதீர்கள்’ என்று என் அண்ணா ஒரு பிரசங்கமே செய்து விடுவார். 77 வருடங்களுக்கு முன் வாங்கிய நாங்கள் நூற்ற ராட்டை இன்றும் என்னிடம் உள்ளது. அதை நான் ஒரு பொக்கிஷமாகவே பாதுகாத்து வருகிறேன். இந்தக் கட்டுரை எழுதும் போது மேலே பரணையில் இருக்கும் அந்த ராட்டையை எடுத்து தூசி துடைத்து ஒரு போட்டோவும் எடுத்து இப்பக்கங்களீல் பிரசுரித்துள்ளேன். இவ்வளவு வருடங்களானாலும் அந்த ராட்டை மிகவும் நன்றாகவே உள்ளது. அந்த ராட்டை செய்யப்பட்ட மரம் நல்ல ரகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் இரண்டு வட்டவடிவமான மரவட்டில் இன்றும் மெருகு குன்றாமல் இருப்பதைப் பார்க்கிறேன். அப்போது தொழிலில் நேர்மையும், நாணயமும் அதிகம் இருந்துள்ளது என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது. இந்த சமயத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டில் பிராமண வாலிபர் ஒருவர் ஏதோ வேலையில் இருந்தார். அவருடன் நான் அந்தச் சின்ன வயசிலேயே ஒரு கட்டுப் பேப்பரை வைத்துக்கொண்டு அந்த ஊரில் வீடு வீடாகச் சென்று பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வர கையெழுத்துக்கள் வாங்கியது ஞாபகம் இருக்கிறது. அவர் ஒரு ஆர். எஸ். எஸ். கார்யகர்த்தா என்பது அப்போது தெரியாது. அப்போது நடக்கும் சம்பாஷணை கூட என் மனத்தில் பதிந்துள்ளதை இங்கு பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்: பசுவை நாம் தெய்வமாகப் போற்றுகிறோம். வீட்டுக்கார்ர் : சரி, அதற்கென்ன? ஆர்.எஸ். எஸ். தொண்டர்: பசுவை கொல்கிறார்கள் சார். வீட்டுக்காரர்: நான் ஒன்னும் கொல்லலையே? ஏன் சார் காலங்கார்தாலே பசு – கொலை என்றல்லாம் சொல்லி மனசைக் கலவரப்படுத்த்துகிறீர் ? தொண்டர்: பசுக் கொலையைத் தடைசெய்யச் சட்டம் கொண்டு வர சர்க்காருக்கு விண்ணப்பம் செய்யத் தான் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம். இதில் அதற்கு ஆதரவாக உங்கள் கையெழுத்தைப் பெறத்தான் உங்கள் வீடு தேடி வந்துள்ளோம். பசுவைத் தெய்வமாகப் போற்றும் நாம் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாமா? வீட்டுக்காரர்: சரி சரி கையெழுத்துப்போடுகிறேன். ஏன் சார் படிக்கிற இந்தப் பையனை வீடுவீடாக அலைக்கழிக்கிறீங்க? தொண்டர்: இது ஒரு தெய்வத் திருப்பணி சார். ஞாயிற்குக் கிழமையான பள்ளி லீவின் போது தான் இந்த கையெழுத்துப் பிரசாரம் இருக்கும். அதுவும் ஒரு சில மணி நேரம் தான். இது புண்ணியம் தரும் பணியாகும். எனக்கு பசுவதை – அதைத் தடை செய்ய கையெழுத்து இயக்கம் – ஆர்.எஸ்.எஸ். என்று எதுவும் தெரியாது. ஆனால் அந்த ஆர் எஸ் எஸ். தொண்டருடன் செல்வதை ஒரு பெரிய பெருமையாகவே நான் கருதினேன். அவரின் எளிமை, அமைதியாகப் பணி செய்வது, உடல் பயிற்சி செய்து தமது உடம்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது, அவரது தெய்வ பக்தி ஆகியவைகள் அவரை ஒரு ஆசிரியர் ஸ்தானத்தில் வைக்கத் தோன்றியது. ஆனால் இந்த கையெழுத்து வேட்டையின் போது தான் காந்திஜி கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. திருச்செந்தூர் ஊரே திரண்டு ஒன்று கூடி அழுதது. கூட்டமாக ஊர் ஜனங்கள் பலர் கோயிலுக்கு மவுன ஊர்வலமாகச் சென்றனர். அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். சுப்பிரமணிய ஸ்வாமி கோயில் வாசலில் இருக்கும் வெளி மண்டபத்தில் பிரார்த்தனை செய்தோம். பிறகு கடற்கரையில் குளித்தோம்.நானும் குளித்தேன். பலர் மொட்டை போட்டுக் கொண்டு கடலில் குளித்தனர். ஒரு அரசியல் தலைவருக்கு வீட்டில் உறவுக்காரர் இறந்ததைப் போன்று துக்கம் அனுசரித்தது எனக்கு இது தான் முதலும், முடிவுமானதாகும். அந்த அளவுக்கு காந்திஜியின் மேல் எனக்கு அப்போதே ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு என்னை என் வீட்டில் அந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டருடன் தொடர்பு கொள்ள வேண்டாம், அவருடன் சென்று கையெழுத்து வேட்டையும் கூடாது என்று சொல்லி விட்டார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வில்லை. என்றாலும் நான் என் வீட்டார் சொல்வதைக் கேட்டு அத்துடன் அந்த தொண்டரின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன். எங்கள் வீட்டில் வரலட்சுமி நோன்பின் போது சுவற்றில் தான் அம்மன் படம் வரைந்து பூஜை செய்வார்கள். வெள்ளியால் செய்த அம்மன் முகம் – வெள்ளிச் சொம்பில் அரிசி – மஞ்சள் துண்டு ஆகியவைகளை நிரப்பி, தேங்காய் – மாவிலை வைத்துக் கட்டி அதைக் கோலம் போட்ட பலகையில் வைத்துப் பூஜை செய்வார்கள். சிறிய வாழைமரக் கன்று இரண்டு – மாவிலை மற்றும் தொன்னங்குருத்துத் தோரணங்கள் கட்டி ஒரு சிறிய மண்டபம் போல் காட்சி அளிக்கும். அதன் பின் புறம் சுவற்றில் வரையும் அம்மனை நான் தான் வரைவது வழக்கம். நோன்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நான் இதற்காக செம்மண் கலர் கலவை, வாட்டர் கலர், கலர் பென்சில்கள் என்று தயார் செய்வேன். நன்றாக வரைய வேண்டும் என்பதற்காக முதலில் ஒரு வெள்ளைக் காகிதத்தில் வரைந்து அதை அம்மாவிடம் காட்டி ஒப்புதல் வாங்கிய பிறகு தான் சுவற்றில் வரைய ஆரம்பிப்பேன். ஏனென்றால் சுவற்றில் வரைந்ததை நேர் செய்வது அவ்வளவு சுலபமில்லை. அம்மன் முகம் வரைந்த பிறகு அதைச் சுற்றி செவ்வக வடிவத்தில் செம்மண் கலவையால் நான்கு பக்கதிலும் மூன்று கோடுகளாக வரைந்து பிறகு இரண்டு பக்கத்திலும் வாழை மரக் கன்றுகளை வரைந்து விடுவேன். மேலே உள்ள செவ்வகக் கோட்டில் மாவிலை மற்றும் தென்னங்க்குருத்துத் தோரணங்களை வரைந்து பூர்த்தி செய்து விடுவேன். ஆனால் இப்போதெல்லாம் இப்படி அம்மன் படம் வரைந்து வரலட்சுமி பூஜை செய்வது இல்லை. சுவற்றில் படம் வரையும் பழக்கம் நின்று விட்டது. சுவர் பாழாகிறது என்ற எண்ணத்தால் இந்தப் பழக்கம் விடுபட்டுப் போயிருக்கலாம். நான் வரைந்ததை என் அக்கா ஒரு போதும் நன்றாக இருக்கிறது என்று சொன்னதே இல்லை. ஏனென்றால் இந்த அம்மன் வரையும் வேலையை எப்போதும் எனக்குத் தான் அம்மா அளித்திருப்பதால் நான் வரைந்த அம்பாள் முகத்தைப் பாராட்டுவது இல்லை. ‘அம்மா, சங்கரன் வரைந்த அம்மன் முகம் நன்றாகவா இருக்கு .. நான்..’ வரைந்தால் ரொம்பவும் அழகாக வரைவேன்..’ என்பாள் என் அக்கா. ‘ஏய், உனக்கு எத்தனை தரம் சொல்றது? வீட்டில் பூஜைக்கு அம்மன் முகம் வரைவதில் சிரத்தை தான் முக்கியம். பக்தியோடு பார்த்தால் அதில் அழகு தெரியும். குறைகாணும் கண்ணோடு பார்த்தால் அழகும் போய்விடும். பக்தியும் போய்விடும்’ என்று ஒரு பெரிய தத்துவ ஞானிபோல் அம்மா விளக்குவாள். சில சமயம் நான் வரைந்த அம்மன் முகம் அடுத்த வருட வரலட்சுமி நோன்புக்கூட அழியாமல் இருக்கும். அப்போது நானே சுண்ணாம்பு கொண்டு வெள்ளை அடித்து பிறகு புதிதாக அம்மன் முகம் வரைவேன். அந்த இனிய நாட்கள் பசுமையானவைகள். பரவச மூட்டிய தருணங்கள். அவைகளை நினைக்க நினைக்க தெவிட்டா மனத்தை மகிழ்விப்பவைகள். வாழ்க்கை சூழலில் கிட்டும் அற்புத முத்துக்கள். அத்தியாயம் 19: நவராத்திரி விழாக் கொண்டாட்டம் திருச்செந்தூரில் நவராத்திரி விழாவில் வீடுகளில் கொலு வைத்து சுண்டல் நிவேதனம் செய்து கொலுவைப் பார்க்கும் அனைத்து சிறுவர் – சிறுமிகளுக்கும் வினியோகம் செய்வார்கள். இதற்கு யாருடையும் அழைப்பும் வேண்டாம். கொலு வைத்த வீட்டிற்குச் சென்றால் சுண்டல் நிச்சயம் கிடைக்கும். எங்கள் திருச்செந்தூர் வீட்டிலும் மெஸ் நடத்தினாலும் கொலு வைப்போம். படிக்கு பல பெட்டிகளை அடுக்கி வைப்போம். அநேகமாக மூன்று அல்லது ஐந்து படிகளில் கொலுப் பொம்மைகளை வைப்போம். படிகள் ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் என்பது விதி. வெள்ளைத் துணியை விரித்து பொம்மைகளைப் பெட்டியில் இருந்து எடுத்து அவைகளைத் துடைத்து வரிசையாக கொலு அமைப்போம். அலங்காரத்திற்கு கலர் காகிதங்கள், தோரணங்கள் கட்டுவோம். என் அக்கா கோமதியின் பங்கு இதில் அதிகம் உண்டு. அழகாக வாசலிலும் கொலுவுக்கு முன்பும் பெரியதாக கோலம் போடுவாள் என் அக்கா. பக்கத்து வீட்டு வாசல் கோலத்தை விடப் பெரிசாக அமைந்து விட்டால் என் அக்கா அம்மா – பாட்டியைக் கூப்பிட்டுக் காண்பித்து பாராட்டுப் பெறுவாள். அந்த ஒன்பது நாட்களும் தெருவே விழாக்கோலத்தால் ஒளிவிடும். அதுவும் இரவில் வீதியும், வீடும் கல கல வென்று குதூகலமாக சிறுவர் – சிறுமியர் வந்த வண்ணம் இருப்பார்கள். அவர்களுக்கு அம்மா அல்லது பாட்டி சுண்டல் விநியோகிப்பர். நாங்களும் எங்கள் தெரு பக்கத்துத் தெரு ஆகிய வீடுகளில் கொலுவிற்குச் சென்று சுண்டல் வாங்கி அதை ஒரு பையில் சேகரிப்போம். வீட்டிற்கு வந்து அந்த அனைத்து பலவிதமான சுண்டல்களின் கலவைச் – திதிப்பு, காரம் ஆகிய சுவைகள் கொண்ட கலவைச் – சுண்டல் சாப்பிடுவதற்கு தேவாமிர்தமாக இருக்கும். சில வீடுகளில் சுண்டலுக்குப் பதில் பஜ்ஜி, வடை, அப்பம் என்று கொடுப்பார்கள். அதையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவோம். ஆஹா, ஆஹா என்ன ருசி – என்று மனது சந்தோஷத்தால் கூத்தாடும். அதன் நினைவு இன்றும் இனிப்பை ஞாபகப்படுத்துகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சில வீடுகளில் சிறுமிகள் கூட்டமாக வந்து கோலாட்டம் ஆடுவார்கள். சிலர் பாடவும் செய்வார்கள். இதனால் மற்றவர்கள் சுண்டலுக்குக் கொலு பார்ப்பது தடை செய்யாமல், அவர்களுக்குச் சுண்டல் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறும். இதை சிரத்தையாக செய்வார்கள் அனைத்து வீடுகளிலும். மைலப்பபுரம் தெருவில் இருக்கும் ஒருவர் – அவரை மைலப்பபுர்ம் தெரு ராபின் ஹூட் என்றே அழைக்கலாம் - வீட்டின் எதிரில் தெருவிலேயே பந்தல் போட்டு, பெரிய கொலு வைத்திருப்பார்கள். அங்கும் சுண்டல் விநியோகம் நடக்கும். பெண் குழந்தைகளின் கோலாட்டம், பாட்டு ஆகியவைகள் அமர்க்களப்படும். அங்கு பெட்ரமாஸ் விளக்குகள் பொறுத்தப்பட்டு நல்ல வெளிச்சமாக இருக்கும். அந்த ஒன்பது நாட்களிலும் இரவு நாடகம் நடக்கும். அதில் ஊரில் உள்ளவர்க்ளே நடிப்பார்கள். அதற்கு வேஷம் போட்டு நடிப்பார்கள். அதை அந்த ஊர் ஜன்ங்கள் மிகவும் ரசித்துப் பார்த்து கைகளைத் தட்டி உற்சாகப் படுத்துவார்கள். அந்த வீட்டுக்காரரான ராபின் ஹூட் நாடகத்திலும் பங்கு பெற்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். அவர் மிகுந்த அக்கரை எடுத்து நவாராத்திரி விழாவைச் சிறப்பாகச் செய்வார். அதற்காக ஒவ்வொரு வீட்டிலும் நிதி வசூல் செய்வர். ஊர் மக்களும் முகம் கோணாமல் நிதி அளிப்பர். செலவும் ஜாக்கிரதையாகச் செலவு செய்யப்படும். அந்த வீட்டுக்காரரின் நிதிப் பங்களிப்பு அதிகம் இருக்கும். அவர் விளையாட்டு, விழாக்களை நடத்துவது என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். பட்டங்கள் செய்து விடுவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டுவார். சிறிய பட்டம், பெரிய பட்டம் என்று ஒன்றன் பின் ஒன்றாக பின்புறம் இணைத்து காற்றிலே பறக்க விடுவார். முதல் பட்டம் வெகு தூரத்தில் மிகவும் சிறியதாகத் தான் தெரியும். முதலில் உள்ள பெரிய பட்டத்தில் இரவு நேரத்தில் ஒரு மிகச் சிறிய கனமில்லாத மண்ணெண்னை விளக்கைக் கட்டிப் பறக்க விடுவார். அதைப் பார்க்க நாங்கள் அனைவரும் வெகு ஆவலாக ஒவ்வொரு நாளும் கூடுவோம். அந்த தனவந்தர் வீட்டுக்காரரை ஏன் ராபின் ஹூட் என்று அழைத்தேன் என்பதை இங்கு விளக்க வேண்டும். ஊரில் என்ன நடந்தாலும் அவரின் பங்கு இருக்கும். கல்யாணமா அல்லது கருமாதியா – எதுவாக இருப்பினும் தானே முன் வந்து உதவி செய்வார். சிறு சிறு சச்சரவா – அதைத் தீர்த்து வைப்பதும் அவர் தான். பணக் கஷ்டமா அவரைத் தான் அந்தத் தெருக்கார்ர்கள் அவரை நாடுவார்கள். மிகவும் குறைந்த வட்டியில் பண உதவியும் செய்வார். பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையா ? – அதைப் பற்றி அவர் கவலைப் படுவதில்லை. ஆனால், அவர்களுக்கு மீண்டும் பண உதவி கிட்டாது. அவ்வளவு தான். இதை எல்லாம் அவரது நாணயமான கணக்குப் பிள்ளை பார்த்துக் கொள்வார். அவரது வீட்டுச் செலவுக்கும் குறையின்றி கொடுப்பார். உயர்ந்த மனது. ஊராருக்கு உதவும் உத்தம மனது. இத்தனைக்கும் அவர் ஒரு பிரம்மசாரி. அந்த வீட்டில் அவர் மட்டும் தான் ஜாகை. தனிக்காட்டு ராஜா. அவர் வீட்டில் இரவில் பாடம் படிப்பதற்கு பல சிறுவ-சிறுமிகள் வருவர். அவர் அதற்காகவே பெட்ராம்ஸ் விளக்கை ஏற்றி பலரும் படிப்பதற்கு வசதி செய்து கொடுப்பார். முருக்கு, தட்டை, கல்கண்டு, பிஸ்கட், பெப்பர்மிண்ட், கடலை மிட்டாய், மிக்சர் என்று அவர்களுக்கு சாப்பிடவும் கொடுத்து உபசரிப்பார். அவர் அந்த சமயத்தில் வெளித் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு வீதியைக் கவனித்துக் கொண்டு இருப்பார். இது மட்டும் இல்லை. சில பிள்ளைகள் ஒழுங்காகப் படிப்பதில்லை என்றும் அவரிடம் அந்தப் பிள்ளைகளை அழைத்து வருவார்கள். அவர்களுக்கு அவர்கள் மனதில் புரியும் படி புத்திமதி சொல்வார். சில பிள்ளைகள் அடாவடியாக எதற்கும் பணியாமல் இருப்பர். பெற்றோரையும் மதிக்காமல் ஊர் சுற்றிகளாகத் திரிவார்கள். அவர்களுக்கு அவர் தண்டனையும் கொடுப்பது உண்டு. ஒரு சமயம் என் நண்பன் மகா மூர்க்கன். எங்களுக்கே அவனைக் கண்டால் நடுங்குவோம். எங்களுடன் பாண்டி விளையாடுவான். கோலி விளையாடுவான். கிட்டிப் பிள்ளி விளையாடுவான். பட்டமும் விட எங்களை எல்லாம் ஊர் எல்லையில் உள்ள மாட்டுத் தாவணிக்கு வரவழைத்து விளையாடுவான். பல சமயங்களில் எங்களை சைக்கிளை வாடகைக்கு எடுத்து வரப் பணிப்பான். பிறகு அந்த சைக்கிளில் எங்களுக்கு ஓட்டவும் கற்றுக் கொடுப்பான். இத்தனை இருந்தும் படிப்பில் கவனம் செலுத்த மாட்டான். வீட்டுப் பாடங்களையும் ஒழுங்காகச் செய்ய மாட்டான். ‘படித்துச் சாதிப்பதை விட, விளையாடிச் சாதிப்பேன். சடுகுடுவில் என்னை ஒருத்தரும் ஜெயிக்க முடியாது’ என்று வீராப்புப் பேசுவான். ஆனால் அவனது பெற்றோருக்கோ இவனின் அடாவடி பிடிக்க வில்லை. யார் பேச்சையும் கேட்காமல் படிக்காமல் ஊர்சுற்றியாக இருக்கிறானே? – என்று கவலைப் படுவார்கள். திருச்செந்தூர் திருவிழாவின் போது அவன் சொக்கலால் ராம்சேட் பீடி பிரசாரத்திற்கு கோமாளி வேஷம் போட்டு டான்ஸ் ஆடியதை அவனது அப்பா பார்த்து விட்டார். வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் புலம்பித் தீர்த்து விட்டார். ‘ஏய், நீ ராகுகாலத்தில் பெத்திருக்கணும் உன் பிள்ளையாண்டனை. அவன் என்ன செய்தான் தெரியுமா? கோமாளி வேஷம் போட்டுக் கொண்டு, தெருவிலே பீடிக்குப் பிரசாரம் செய்கிறான். கோபாலா? – ஏன் சார் – எங்கே போறே? – கடைக்குப் போறேன் – என்ன வாங்க ? – பீடி வாங்க – என்ன பீடி – சொக்கலால் பீடி – என்று சொல்லியபடி டான்ஸ் ஆடிக்கொண்டே பீடி பிடிக்கிறாண்டி .. ; என்று சொல்வதைக் கேட்ட அவரது மனைவி ‘என்ன கண்ராவிண்ணா? பெத்த வயிறு பத்தி எரியுது .. பிரம்மோவதேசம் செய்து பூணுல் போட்டமே இதற்குத் தானா?’ ‘பிள்ளையாண்டான் இதிலே சம்த்தாயிட்டான். ஏனென்றால் பூணூலை ஆணியில் மாட்டி விட்டுத் தான் கோமாளி வேஷம் போட்டிருக்கான் .. பார் அந்த ஆணியை !’ என்று தன் மனைவியிடம் சொன்னதும், ‘ஏண்ணா அவனுக்கு இப்படி புத்தி பேதலிச்சுப் போறது ? .. இதுக்கு ஒரு வழி பண்ணுங்கோ’ ‘பண்ணறேன் பண்ணறேன் .. வா நேரே ராபின் ஹூட் மாமாவிட்டச் சொல்லுவோம். விடிவு காலம் பிறக்குமா என்று பார்ப்போம்’ என்று சொன்னார். அவர்களும் அவனது அட்டகாசத்தைப் பொறுக்க முடியாமல் அதற்கு ஒரு முடிவு காட்ட, ராபின் ஹூட் மாமாவிடம் தங்கள் மகனை அழைத்துச் சென்று முறையிட்டார்கள். ராபின் ஹூட் மாமா ஒன்றும் சொல்லாமல் அவர் வீட்டிற்கு எதிரே உள்ள கிணற்று பெரிய வாளியில் அவனை உட்கார வைத்து ராட்டினம் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் இறக்கி விட்டு விட்டார். இதை யாரும் எதிர் பார்க்க வில்லை. அவனுக்கு ஒரே ஷாக். ஆனால் பயப்படவில்லை. இரண்டு மணி நேரம் அவனை அந்தக் கிணற்றில் வாளியில் வாசம் செய்ய வைத்தார். இனி ஒழுங்காக இருப்பியா? அப்பா அம்மா சொல்லைக் கேட்பயா? வாத்தியார் சொன்ன பாடங்களை நன்கு படிப்பாயா? ஊர் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் இருப்பாயா? கோமாளி வேஷம் போட்டு வீதியிலே ஆடமாட்டாயா ? பீடி குடிக்க மாட்டாயா ? – என்று கேட்ட்தற்கெல்லாம், கண்களில் கண்ணீர் மல்க ‘ஆமாம் ஆமாம்’ என்று பெருமாள் மாடுபோல் தலையாட்டிச் சொன்னான். ராபின் ஹூட் மாமாவும் ‘காதுலே விழலை .. நல்ல சத்தமாய்ச் சொல்லு .. உங்க அப்பா அம்மாவுக்குக் கேட்கணும்’ என்று சொன்னதும் அவனும் அழுது கொண்டே உரக்க ‘ஆமாம் .. ஆமாம்’ என்று சொன்னான். அவன் சொன்னது கிணற்றிலிருந்து எதிரொலியாக சப்தமாக ஒலித்தது. உடனே அவனை வாளிக் கயிற்றினை இழுத்து வெளியேற்றினர். பிறகு அவன் பெட்டிப் பாம்பாக மாறிவிட்டான். எங்களுக்கே இது ஆச்சரியமாகப் போய் விட்டது. ‘டேய் ! ராபின் ஹூட் மாமாவை தப்பா எடைபோடக்கூடாதுடோய்?’ என்று நாங்களெல்லாம் எங்களுக்குள் சொல்லிக் கொண்டோம். அது மட்டுமா ராபின் ஹூட் மாமா செய்தார். அந்தத் தெருவிலே ஒரு பாட்டி தனியாக வசித்து வந்தார். பக்கத்து வீட்டுக்காரர் தான் உணவு கொடுத்து ஆதரித்து வந்தார். அந்தப் பாட்டிக்கு உறவு உண்டோ இல்லையோ என்பது கூட ஒருவருக்கும் தெரியாது. அந்த வீடு அவருக்குச் சொந்தம் என்பது மட்டும் தெரியும். அவளது கணவர் வெகு நாளைக்கு முன்பே இறந்து விட்டார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. யாரோ உறவுக்கரர்கள் கர்மா செய்து பிறகு பாட்டியிடம் எந்தத் தொடர்பும் கொள்ளவில்லை. பாட்டி நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, பக்கத்து வீட்டுக் கார்ர் ‘பாட்டி, உங்கள் உறவினர் யாருக்காவது சொல்லி அனுப்ப வேண்டுமா?’ என்று கேட்டதற்கு, ‘உறவுன்னா? நீ தான். திருச்செந்தூர் முருகன் தான் என் மகன்’ என்று கண்ணீர் விட்டுச் சொல்வாள். பாட்டியின் உயிரும் ஒரு நாள் பிரிந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்து வீட்டுக்காரர் ராபின் ஹூட் மாமாவிடம் விஷயத்தைச் சொன்னார். ‘யாரும் இல்லை பாட்டிக்கு. தகனம் செய்யணும்..’ என்று பக்கத்து வீட்டுக்கார்ர் சொன்னதும், அவரை மேலும் எதையும் சொல்ல வேண்டாம் என்று சைகை காட்டி விட்டு, ‘திருச்செந்தூர் புண்ணிய ஸ்தலத்தில் யாரும் அநாதை இல்லை. தகனம் தானே நான் செய்கிறேன். இது ஒரு பெரிய தர்ம காரியம். செலவும் என்னுடையதாக இருக்கட்டும். நீங்கள் பாட்டியை இதுவரை சம்ரக்ஷணை செய்ததே ஒரு பெரிய காரியம். முருகன் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக உண்டு’ என்று அபயமளித்தார். ஆமாம், அது தான் ராபின் ஹூட் மாமா. அவர் தான் அந்த தெருவுக்கே ஆசான், அபயமளிக்கும் அன்பர், உதவும் உத்தமர். அவரது வீடு இரண்டாக அடுத்தடுத்து இருக்கும். வாசலில் தாழ்வான பெரிய திண்ணை உண்டு. அங்கு தான் ஜனங்கள் அவரைப் பார்த்து குறைகளைச் சொல்லி நிவர்த்தி பெருவார்கள். ஒரு வீட்டில் அவர் குடியிருப்பார். பக்கத்து வீட்டில் நாடகம் போடும், ஓவியம் வரைந்த தட்டிகள், நாடக உடைகள், சில நாற்காளிகள் என்று குமிந்து இருக்கும். அந்த வீட்டை திருவிழா நாட்களில் தான் திறந்து பயன்படுத்துவார். மற்ற நாட்களில் பூட்டியே இருக்கும். அவர் வீட்டு முத்தத்தில் ஒரு பெரிய கூண்டு உண்டு. அதில் அவர் புனுகுப் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். அந்தப் பூனையின் மலம் தான் புனுகாகும். புனுகு நறுமணம் கமழும் வஸ்துவாகும். அதன் விலையும் அதிகம். அதற்காகத் தான் மாம வளர்க்கிறாரா என்பது எங்களுக்குத் தெரியாது. ஒரு மிருகத்தின் மலம் நறுமணமாக மூக்கைத் தொளைப்பதைக் கண்டு எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ‘மலம் என்றால் நாறணுமே ? ஆனால் இந்த பூனையின் மலம் மணக்கிறதே ? எப்படி? ‘ என்று எங்களுக்குள் ஒரு விவாதமே நடக்கும். ‘டே, யானையின் லத்தியை நாம் காலால் மிதித்து அது ஒளஷதம் காலுக்கு என்று சொல்வதில்லையா ? அது போல் தான் இதுவும். மாட்டுச் சாணம் கிருமி நாசினி என்று சொல்வதில்லையா ? அதை நிலத்திற்கும் உரமாகப் போடுகிறார்கள் இல்லையா ?’ ‘எல்லாம் சரி .. மனித நாரல் தான் நாறி ஒன்றுக்கும் உதவாது ..’ ‘டே டே அதுவும் பன்றிக்கு உணவுடா? .’ – என்ற அளவில் விவாதம் முற்றுப் பெறும். தெரு ஆரம்பத்தில் இருக்கும் பெரிய சிவன் கோவிலில் கொலு வைத்துக் கொண்டாடுவார்கள். அதுவும் கடைசி நாளான ஆயுத பூஜை வெகு சிறப்பாக நடக்கும். அன்று அன்ன தானமும் மத்தியானம் உண்டு. அன்று இரவு கதா காலட்ஷேபம் நடக்கும். அதன் பிறகு நிவேதனம், தீபாராதனை நடைபெறும். அனைவருக்கும் விபூதி குங்குமம் பிரசாதமாகக் கொடுப்பார்கள். மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த சுண்டலும் கிடைக்கும். அனைவருக்கும் கை நிறையவே கொடுப்பார்கள். அதில் சிறிதும் சிக்கனம் பார்க்க மாட்டார்கள். அதைச் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். அடுத்த வருடம் எப்போது நவராத்திரி வரும் – என்ற எதிர்பார்பினோடு வீட்டிற்கு ஆனந்தமாகச் செல்வோம். இந்த ஆனந்த யாத்திரை தொடர்கதையாகி நெஞ்சம் நிறைந்து வாழ்வும் இனிக்கும். அந்த இனிய நாட்கள் தான் ஊற்றுப் போல் நினைக்கும் போதெல்லாம் ஊற்றேடுத்து மனத்தைக் குளிரச் செய்யும். அத்தியாயம் 20 – திருச்செந்தூர் தீபாவளிக் கொண்டாட்டம் – முருகன் கோவில் கந்த சஷ்டி விழா தீபாவளிக்கு துணி எடுத்து ட்ராயர், சட்டை தைத்துத் தான் போட்டுப்போம். ரெடி மேட் எல்லாம் விலை அதிகம் என்பதால் அந்தப் பக்கம் போவதில்லை. அப்போதெல்லாம் துணிக் தட்டுப்பாடு உச்ச கட்டத்தில் இருந்த நேரம். ட்ராயர் பெரும்பாலும் காக்கி டிரில் துணியில் தான் இருக்கும். ட்ராயர் கிழிந்து விட்டால் அந்த கிழிந்த இடத்தில் துணியை ஒட்டுப் போட்டு தைத்து மீண்டும் உபயோகிப்போம். அது மாதிரி ட்ராயரைப் போட்டுக் கொள்வதில் எந்தவிதமான லட்ஜையோ கூச்சமோ பட்ட தில்லை. தபால் பெட்டி டோய் டோய் – என்று ஒட்டுப்போட்டு உடுத்திருந்ததைப் பார்த்து தெருப் பையன்களின் கேலி செய்வதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டேன். நானும் அவர்களுடன் சேர்ந்து ‘டோய் டோய் இது தபால் பெட்டி இல்லைடோய்’ என்று குதிப்பேன். பிறகு எல்லோரும் சிரித்துக் கொண்டு சடுகுடு – பாண்டி – கிட்டிப்புள் என்று ஏதாவது ஒரு விளையாட்டில் முனைந்து மும்முறமாகி விடுவோம். இந்தப் பக்குவம் எப்படி எனக்கு வந்தது என்று இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் பிற்காலத்தில் என்னை மிளகாய், துர்வாசர், முன்கோபி என்ற பட்டங்கள் தான் எனக்குக் கிடைத்தன. இதற்குரிய காரணத்தையும் இப்போது கணிக்க முடியவில்லை. தீபாவளிக்கு சில நாட்கள் முன்பே துணி எடுத்துக் கொடுத்தாலும், டைலர் கடைசி நேரம் வரையிலும் காலதாமதம் செய்து விடுவார். டைலர் சிவன் கோவில் மண்டபத்தில் தான் கடை போட்டு இருப்பார். தீபாவளிவளிக்கு முந்தைய நாள் சாயங்காலம் வரை தைத்துக் கொடுப்பதாகச் சொன்னாலும் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். ஆகையால் தையல் கடையிலேயே பழியாக் கிடந்து இரவில் தைத்த ட்ராயர், சட்டையை வாங்கி வருவேன். இது பல தீபாவளி நாளில் நடந்த தொடர் கதை தான். ஆனால் இதிலும் ஒரு த்ரில் இருப்பதாகத்தான் எண்ணத் தோன்றுமே அல்லாது குறைகாண மனது அனுமதிக்காது. அந்தக் காலத்தில் வெடி என்றால் ஊசிப் பட்டாசு, ஓலை வெடிகள் தான். கம்பி மத்தாப்பு, தரைச் சக்கரம், புஸ்வாணம் எல்லாம் இருக்கும். அதிகம் பட்டாசெல்லாம் வாங்கியதில்லை. கிணற்றை ஒட்டி கொல்லையில் விறகு அடுப்பு மூட்டி பெரிய அண்டாவில் வெந்நீர் போட்டிருக்கும். திபாவளியில் பாட்டி தான் காய்ச்சிய நல்லெண்ணையைத் தலையில் வைத்து கங்கா ஸ்நானத்திற்கு எங்களைத் தயார் பண்ணுவார். ஒரு மரப்பலகையில் கோலம் போட்டு ஒவ்வொருவராக வந்து பாட்டியிடம் எண்ணையை உச்சந்தலையில் வைத்துக் கொள்ள அந்த பலகையில் உட்கார வேண்டும். ‘தீர்க்காயுசு தீர்க்காயுசு’ என்று சொல்லியபடியே உச்சந்தலையில் எண்ணெய் வைத்து குளிக்க அனுப்புவாள் பாட்டி. புதுத் துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் இடுவதும் பாட்டி தான். ‘பாட்டி, மஞ்சள் குங்குமம் துணியின் ஓரத்தில் வைத்தால் போதுமே ! ஏன் பெரிசாக வைக்க வேண்டும் ?’ என்று சொன்னால், ‘போடா, புதுத் துணிக்கு மங்களமாக தெரியும் படித்தான் மஞ்சள் – குங்குமம் இடவேண்டும். எனக்கே பாடம் சொல்லறயா? ‘ என்பாள் பாட்டி. குளித்த உடன் தீபாவளி மருந்து சாப்பிட வேண்டும். அளவாகத் தான் பாட்டி கொடுப்பாள். ‘இன்னும் கொஞ்சம் பாட்டி’ என்றால் இது பட்சணமில்லை – மருந்துடா ? கொஞ்சமாத்தான் எடுத்துக்கணும்; என்று உபதேசம் செய்வார். புதுத் துணி உடுத்திக் கொண்டு, ஸ்வாமியை நமஸ்கரித்து, பிறகு பாட்டி – அப்பா அம்மா என்று நமஸ்காரம் செய்வோம். ஆனால் பாட்டிக்கு புதுத் துணிப் புடவை வாங்குவதில்லை. வாங்கக் கூடாது – என்பதான ஒரு பழக்கம் இருந்திருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் சிறுவர்களாகிய எங்களுக்கு யோசனையே போவதில்லை. மத்தாப்பு கொளுத்தி, வெடி வெடித்து பிறகு முருகன் கோயிலுக்குச் செல்வோம். ஒன்றாகச் சென்றதாக ஞாபக மில்லை. அண்ணா அவர் நண்பர்களுடன், அக்கா அவள் தோழிகளுடனும், நான் என் ஸ்நேகிதர்களுடன் கோயிலுக்குச் செல்வோம். எனக்குத் தோழர்கள் என்றால் ரொம்பவும் சொற்பம். அதுவும் என் கூடப்படிக்கும் மாணவர்கள் எனக்குத் தோழர்களாக இல்லை என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. பட்டம் செய்து விடும் ஊமை என் நண்பன். பட்டம் செய்வது, அதில் சூத்திரமாக பறக்க விட நூலை அளந்து கட்ட வேண்டும். அதில் ஒரு சூட்சமம் உண்டு. .அது சரியான அளவில் இல்லாவிடில் பட்டம் பறக்காது. இதில் ஊமை நிபுணன். ஆகையால் எனக்கும் அவன் தான் பட்டம் செய்து கொடுப்பான். நூலால் சூத்திரம் போட்டுக் கொடுப்பான். நன்றாக உயரப் பறக்கும். ஆனால் நான் சூத்திரம் போட்டால் இப்படி பட்டம் பறக்காது. ஆனால் ஊமையை அந்த ஊர் பையன்கள் வேறுப்பேற்றுவார்கள். ஊமைக்கு அவன் முன் யாராவது மூக்கைச் சொறிந்தால் கோபம் தலைக்கேறி விடும். கையாலும், சில சமயங்களில் தெருவில் கிடக்கும் கல்லைக் கொண்டும் தாக்கி விடுவான். ஏன் இப்படி என்று எனக்குத் தெரியாது. கோபம் வரும் போது ஊமை பல்லை அசைபோட்ட படி முனுமுனுத்தபடியே இருப்பான். அதனால் அவனிடமிருந்து ஒரு ஒலி வந்த வண்ணம் இருக்கும். என்னையும் அவன் முன்னால் மூக்கைச் சொறிபவர்களை அடிக்கச் சொல்லுவான். நானும் அவர்களிடம் ‘ஊமை பாவம்டா .. வேண்டாம்டா’ என்று வேண்டுவேன். இன்னொரு நண்பன் பெயர் ஞானமணி. அவனது ஒரு கண் பூவிழிந்து வெள்ளையாக இருக்கும். அவன் பள்ளிக்கு போய் படிக்க வில்லை. அவன் கோலி, கிட்டிப்பிள், சடுகுடு விளையாடுவதில் ஆர்வம் உண்டு. பஜனை மடத்திற்கு பக்கத்தில் விறகுக் கடை. அதை ஒட்டி ஒரு சிறிய பிள்ளையார் கோவில். அது விறகுக் கடைக்குச் சொந்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் ஒரு வேளை பூஜை நடக்கும். அந்த பிள்ளையார் கோயில் பூசாரியாக ஞானமணி இருந்தான். அந்த விறகுக் கடைச் சொந்தக்காரர் தான் ஞானமணியை அமர்த்தி இருக்க வேண்டும். அவன் கூட பல நாட்கள் அந்த பிள்ளையார் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். வீட்டிலே மடியாக பிள்ளையாருக்கு நிவேதனம் செய்ய பொங்கல் செய்து எடுத்துக் கொண்டு போவோம். விறகுக் கடை கிணற்று நீரைத் தான் அபிஷேகம் செய்யப் பயனடுத்துவான். அவனுக்கு மந்திரம் எல்லாம் அதிகம் தெரியாது. ஏதோ சில மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வான். இந்த வேலை முடிந்த பிறகு நாங்கள் இருவரும் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவோம். இன்னொரு சிநேகிதன் கிருஷ்ணன். அவன் குடும்பம் பரம ஏழை. எங்களுடன் சேர்ந்து விளையாடுவதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம். பள்ளிக்கூடம் செல்ல வில்லை. வேலை என்று ஒன்றும் பெரிசாக இல்லை. ஆனால் சாயங்காலம் ஒரு வீட்டில் செய்த பஜ்ஜி, போளி, சக்கர வள்ளிக் கிழங்கு சிப்ஸ் ஆகியவைகளை விற்பதற்கு வீதி வீதியாகச் செல்வான். அந்த பதார்த்தங்கள் எல்லாமே தேவாமிர்தமாக இருக்கும். அவனிடம் நாங்கள் பலமுறை பஜ்ஜி – சிப்ஸ் வாங்கி உண்டிருக்கிறோம். தேவாமிர்த்த ருசி. பஜ்ஜியின் ருசியும், சிப்ஸின் ருசியும் இன்று கூட நினைவில் நின்று நாக்கில் ஜலம் ஊறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஒரு தீபாவளியின் போது புஸ்வானம் எரியாமல் இருப்பதைப் பார்த்து அதன் அருகில் சென்று குனிந்து பார்க்கும் பொழுது, புஸ்வானம் திடீரென்று எரிந்து அவன் நெஞ்சிலே நெருப்புக் கனல் பட்டு புண்ணாக்கி விட்டது. இதைப் பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி. பல நாட்கள் அரசு மருத்துவ மனையில் சேர்ந்து சிகிட்சை பெற்று பிழைத்து வந்தான். அவன் முன்பக்க நெஞ்சமெல்லாம் தீப்புண்ணின் வடுக்களாக தோலில் நிறம்மாறி இருந்தது. இந்த நண்பர்கள் எல்லோரும் வாடகை சைக்கிள் எடுத்து ஊருக்கு வெளியே இருக்கும் மைதானத்தில் போட்டி போட்டுக் கொண்டு ஓட்டுவோம். அந்த சைக்கிள் ஓட்டுதல் எங்களுக்கு பரம சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்த மைதானத்தில் தான் பட்டமும் விடுவோம். சில நாட்களில் நாங்கள் சேர்ந்தே டூரிங் டாக்கீஸில் சினிமாவும் பார்ப்பதுண்டு. தரை டிக்கெட் தான். வண்டல் மண் போட்டிருப்பார்கள். அதில் அமர்ந்து பார்ப்பதுவே பேரானந்தமாக இருக்கும். எங்களுக்கு காகிதத்தில் பலவிதமான உருவங்களை மடித்து உருவாக்கிக் காட்டும் சிவராமன் எங்களை விட வயதில் மூத்தவர். அவர் தான் எங்களுக்கு குருவாக இருந்து பலவிதமான படங்கள் வரைவதையும், அட்டையில் பல உருவங்கள் செய்வதையும், காகிதத்திதைக் கத்தரித்து பல வியக்கத்தக்க உருவங்களை மடித்து உருவாக்கியது போல் செய்வதையும் கற்றுக் கொடுத்தார். அவர் வீட்டிற்குச் சென்றால் பொழுது போவதே தெரியாது. சிவராமனும் பிறருக்கு தனக்குத் தெரிந்த கலையை கற்பிப்பதில் ஆர்வம் உள்ளவர். அதிக ஆசையோ, ஆராவாரமோ இல்லாத சிறிய ஊர்களில் தான் இத்தகைய மனிதர்களைப் பார்க்க முடியும். அந்த விதத்தில் நான் பாக்கிய சாலிதான். திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருக்கும் முக்குருணிப் பிள்ளையார் சந்நிதிக்கு நேர் எதிரே பெரிய படிக்கட்டுகள் உண்டு. அதில் ஏறி கோயில் மேல் தளத்திற்குச் செல்ல முடியும். நாங்கள் பல நாட்கள் கோயிலின் மேல் தளத்திற்குச் சென்று அங்கிருந்து அலைபாயும் கடலையும், பக்தர்கள் கூட்டத்தையும் கண்டு களித்திருக்கிறோம். அது மட்டுமல்ல. திருச்செந்தூர் கோவில் பெரிய கோபுரத்தின் உச்சிக்கே சென்ற அனுபவமும் உண்டு. அங்கிருந்து நான் எங்கள் வீட்டைப் பார்த்த தருணங்களும் உண்டு. தீபாவளியை அடுத்த வரும் கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெகு சிறப்பாக நடைபெறும். பலர் சஷ்டி விரதம் கோயிலிலேயே தங்கி ஆறு நாட்கள் இருப்பார்கள். ஆறாவது நாள் சூரசம்காரத்துடன் விரதம் முடிவடையும். நானும் ஒரிரு முறை சஷ்டி விரதம் இருந்ததாக ஞாபகம். சஷ்டியின் ஆரம்பத்தில் உபவாசம் இருப்க்காதவர்கள் கூட சூரசம்காரம் நடக்கும் ஆறாவது அன்று திருச்செந்தூர் வாசிகள் உபவாசம் இருந்து முருகனின் சூரசம்காரம் ஆன பிறகு தான் விரதத்தை முடிப்பார்கள். இதில் எங்கள் வீட்டில் உள்ளவர்களும் கடைப்பிடிபார்கள். ‘சூரசம்காரம் ஆயாச்சா ? விரதத்தை முடிக்கலாமா ?’ என்று ஒவ்வொருவரும் பக்கத்துவீட்டில் விசாரிப்பதைப் பார்க்கலாம். இது விரதத்தை முடிக்கக் கேள்வியாக இருப்பினும், ‘நான் முருகன் வெற்றிக்கு விரதம் இருக்கிறேன்’ என்பதை பக்கத்து வீட்டுக் காரார்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகத் தான். முருக பக்தியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் எந்த தவறும் இல்லை. இதனால் ஒருவர் கூட விட்டுப் போகாமல் விரதம் இருந்து தங்கள் முருக பக்தியை வெளிப்படுத்த உதவிகரமாகவே இருக்கும். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பொது மொழியானால், திருச்செந்தூர் முருகன் கோயில் இருக்கும் ஊரில் குடியிருக்க பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது தான் அந்த ஊர்க்காரர்களின் தீர்மானம். சூரசம்காரம் நடக்கும் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தின் எதிரே உள்ள கடற்கரையில் ‘வெற்றி வேல், வீர வேல்’ என்ற அங்குள்ள லட்சக்கணக்கான முருக பக்தர்களின் கரகோஷங்கள் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்புடன் சேர்ந்து ஒரே பக்தி முழக்கமாகி அனைவரையும் ஆன்ந்த சாகரத்தில் முக்குளித்துக் குளிப்பாட்டும் அற்புதம் காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். அத்தியாயம் 21 திருச்செந்தூரில் கார்த்திகை தீபத் திருவிழா திருச்செந்தூர் முருகன் கடற்கரையில் சொக்கப்பனைத் திருவிழாக் கோலாகலம். கார்த்திகை என்றால் கார்த்திகைப் பொரி ஞாபகம் வந்து நாக்கிலே ஜலம் ஊறும். அவல் பொரி, அரிசிப் பொரி, அப்பம் ஆகியவைகளை அம்மாவின் கைவண்ணம் தெரியும். ருசியோ ருசியோ என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான பட்சணமாக இருக்கும். அவைகளை கார்த்திகை கழிந்து சில நாட்களில் அவ்வப்போது பொரியைச் சாப்பிடுவோம். வீட்டில் ஆங்காங்கே குத்துவிளக்கு, அகல் விளக்கு என்று வீடே ஒளி வெள்ளத்தில் மூழ்கிவிடும். வீதியிலும் கோலம் போட்டு அகல் விளக்குகளை ஏற்றி வைப்போம், வீதியில் பலரும் அவரவர்கள் வீடுகளுக்கு எதிரில் இப்படி கோலம் போட்டு விளக்கேற்றி வைப்பார்கள். வீட்டிற்குள்ளும் அகல் விளக்குகள் பல இடங்களில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல. கொள்ளிக் கட்டையில் கனல் வர அடுப்பில் எரிய வைத்து, அந்தக் கனலை ஒரு குச்சியினால் தட்டி தீப்பொரி பறக்கச் செய்வோம். இது மிகவும் ஆன்ந்தமாக இருக்கும். ராபின் ஹூட் மாமா கார்த்திகை தீப விழாவில் தெரு முனையில் சொக்கபனை வைத்து அதற்குத் தீயிட்டுக் கொண்டாடுவார். அப்போது அந்த சொக்கப்பனையைச் சுற்றி நாங்கள் எல்லோரும் ஆடிப்பாடி மகிழ்வோம். ஆன்ந்தம் ஆன்ந்தமே – என்று இப்போதும் அவைகளை நினைக்கும் போது இனிக்கும் நினைவுகளாக நிஜமாக என் கண் முன் நிலைத்து நிற்பதை நான் காண்கிறேன். சில நினைவுகள் நிரந்தமானவைகள். நிகரற்றவைகள். அவைகள் தான் மனத்தின் குதூகலத்திற்கு அஸ்திவாரமாகும். மூங்கில் கழிகளைக் கொண்டு கூம்பு போல் உருவாக்கி, அதனுள் தேங்காய் நாரை கரிப்பொடியுடன் ஒரு துணியுடன் சேர்த்துக் கட்டி அதை ஒரு கயிற்றினால் கட்டுவார். பிறகு அந்த மூங்கில் கூம்பில் கட்டிய துணி, தேங்காய், நார், கரிப்பொடி ஆகியைவகள் தீ வைத்துக் கொளுத்தி, பிறகு அதில் கட்டிய கயிற்றை தலைக்கு மேல் சுற்ற, காற்றில் தீப்பொறிகள் வட்டமாகச் சிதறி பார்க்க அற்புதமாக இருக்கும். அதை பல கோணங்களில் சுழற்ற தீப்பொறிகள் பல அழகான தீக் கோலங்களாக ஒளிவீசிக் கொண்டிருக்கும். சிவன் கோயிலின் சார்பில் மண்டபத்திற்கு எதிரில் சொக்கப்பனையை உருவாக்கி எரிப்பார்கள். கார்த்திகைக்கு சிவ – பார்வதி தெய்வங்களுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜை முடிந்து பிரசாதம் – பொரி, சுண்டல், பழம் வழங்குவார்கள். இதே போல் தெரு மூலையில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு எதிரிலும் சொக்கபனை உண்டு. சிறப்பு பூஜையும் பிள்ளையாருக்கு உண்டு. அங்கும் பிரசாதம் உண்டு. ஆகையால் இப்படி வாங்கிய பிரசாதங்களே வயிறு முட்டி விடும். அந்தப் பிரசாதங்களும் ருசியாக இருக்கும். ***************************** தெரு ஜனங்களின் நன்மை கருதி பொதுவான இடத்தில் ஸகஸ்ரநாம பஜனையும் நடக்கும். அதற்கு ஒவ்வொரு வீட்டாரும் ஒரு நாள் செலவை ஏற்க வேண்டும். நைவேத்தியத்திற்கு சுண்டல் செய்து தரவேண்டும். ஒரு பெட்ரமாஸ் விளக்கு, பஜனை நடக்கும் ஹாலைச் சுத்தம் செய்து கோலம் – பூ அலங்காரம், விஷ்ணு படத்திற்கு மாலை – விளக்கு ஏற்றல் ஆகியவைகளையும் அந்த வீட்டார் செய்ய வேண்டும். இதை ஒவ்வொருவரும் முன் வந்து சிரத்தையுடனும், பக்தியுடனும் சிறப்பாகச் செய்வார்கள். பஜனை முடிந்தவுடன் ஸ்லோகம் சொல்லிக் கொண்டே வீதி வலம் வருவோம். விஷ்ணு படத்தையும், பெட்ரமாஸ் லைட்டையும் தூக்கிக் கொண்டு வீதி வலம் செல்வோம். அதற்குப் பிறகு நைவேத்தியம், கற்பூர ஆரத்தி நடக்கும். இதில் அந்த நாள் கட்டளைக்காரர் கட்டாயம் பங்குகொள்ள வேண்டும். சுண்டல் விநியோகத்துடன் பஜனை முடிந்து விடும். என்ன அற்புதமான நாட்கள் – என்று இப்போது நினைத்தாலும் மனது இனிக்கிறது. (தொடரும்) அத்தியாயம் 22 - திருப்பனந்தாள் காசி மடம் திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் வழியில் நடுவில் ஒரு பிள்ளையார் கோயில் உண்டு. அதில் சிதர் தேங்காய் போட்ட பிறகு தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பது ஒரு ஐதீகம். ஆகையால் அந்த பிள்ளையார் கோயிலின் முன்பக்க அகண்ட வெளியில் தேங்காய் வடல்கள் போட்ட வண்ணம் இருக்கும். அதுவும் திருவிழா – சிறப்பு நாட்கள் என்றால் கற்பாறையினால் ஆன தளம் முழுவதும் உடைந்த சிதரு தேங்காயால் நிறைந்து காணப்படும். இதற்கு குத்தகை எடுக்க பலர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுப்பார்கள். அந்தப்பணம் கோயில் தேவஸ்தானத்திற்குச் சேர்ந்துவிடும். அந்தப் பிள்ளையார் கோயிலைத் தாண்டி ஒரு நந்தவனமும் அதை அடுத்து திருப்பனந்தாள் காசி மடமும் இருக்கும். அந்த காசி மடத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை மஹா சந்நிதானம் என்று தான் அழைப்பர். அவர்களுக்கு நீண்ட சடாமுடி இருக்கும். அதை ஒன்றாக தலையைச் சுற்றி பின்னி ஒரு கிரீடம் போல் தரித்திருப்பார்கள். அடர்த்தியான இவ்வளவு முடி எப்படி இவர்களுக்கு வளருகிறது என்பது ஒரு ஆச்சரியமான ஒன்றாகும். அந்த திருச்செந்தூர் காசி மடத்தின் சார்பில் மார்கழி மாதம் ஒன்றில் திருசெந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு குமரகுருபரர் இயற்றிய ‘திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா’ பாட்டை ஒப்புவிக்கும் போட்டியை நடத்தினார்கள். அதில் என் அக்கா கோமதியும் கலந்து கொண்டு அந்த ‘பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு - என்று தொடங்கும் முதல் பாட்டிலிருந்து, தொடங்கி, 122-வதாக வரும் கடைசிப் பாட்டான கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள் – என்பது வரை மனப்பாடம் செய்வாள். இதற்காக காலையிலேயே குளித்து விட்டு, அந்த 122 பாடல்களையும் வீட்டில் மனப்பாடம் செய்வாள். போட்டியில் பாடலின் முதல் அடியைச் சொன்னதும், மீதமுள்ள அடிகளை வரிசையாகச் சொல்ல வேண்டும். தொடர்ந்து நான்கு – ஐந்து பாடல்கள் சொல்ல வேண்டிவரும். ஆகையால் அந்த 122 பாடல்களையும் நன்கு படித்து மனப்பாடம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ‘டே, சங்கரா ! நீ ஏதாவது பாட்டைக் கேளடா?’ என்று கோமதி வேண்டுவாள். நானும் அவள் கொடுத்த சிறு புத்தகத்திலிருந்து சில பாடல் வரிகளைச் சொல்லி மற்றவரிகளைச் சொல்லச் சொல்லுவேன். மிகவும் குறைந்த நேரத்தில் அத்தனை பாடல்களையும் மனப்பாடம் செய்து விட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கோமதியும் போட்டியில் பாடல்களைச் சரியாக ஒப்பிவித்தாள். பரிசும் பெற்றாள் என்று தான் ஞாபகம். கோமதியால் நானும் அந்த திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவைப் படித்து மகிழ்ந்தேன். மனனம் செய்ய வில்லை. இன்று கூட திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவைப் படிப்பதும் அந்த நாள் படித்த பயிற்சியால் சுலபமாக இருப்பதை அறிந்தேன். இதனால் தான் ஓளவைப் பாட்டி அற்புதமாக “இளமையில் கல்” என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டாரே! எனது அக்காவின் படிப்பு 8-வதோடு நின்று விட்டது. ‘பெண் பிள்ளைக்கு படிப்பு அதிகம் கூடாது. இந்தப் படிப்பே அதிகம். இனி பள்ளிக் கூடம் வேண்டாம்’ என்று பாட்டி சொல்லி விட்டாள். பாட்டி சொல்லைத் தட்டவோ மேலும் காரணங்களை கேட்கவோ யாருக்கும் தைரியம் கிடையாது. மேலும் அந்த சின்ன ஊரில் இது தான் சட்டம். ஆகையால் கோமதி பத்திரிகைகள் படிப்பதில் தான் தன் நேரத்தைச் செலவிடுவாள். வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவியாக இருப்பாள். அப்போது கல்கி பத்திரிகையில் அலைஓசை தொடர் கதை வெளிவந்த காலம். அந்தக் கதையின் பாத்திரங்களை கோமதி பக்கத்து விட்டுத் தன் தோழிகளுடன் காரசாரமாக உரையாடுவாள். அதைக் கேட்கும் பாட்டி, ‘ஏ, கோமதி ! என்ன வம்பளப்பு ? அலை ஓசை – அம்மாவாசை என்று ! ராமா கிருஷ்ணா என்று சொன்னாலாவது புண்ணியம் உண்டு. இதை எல்லாம் படித்தால் மனது தான் அலைபாயும். அமைதி கெடும்’ என்று கோபிப்பார். ஆகையால் பாட்டி இல்லாத இடத்தில் அவர்கள் ரகஸ்யமாக அந்த அலைஓசையில் வரும் பாத்திரங்களைப் பற்றி அலசுவார்கள். அடுத்த வாரம் எப்படி கதை போகும் என்பதைப் பற்றியும் சிந்திப்பார்கள். மீதி நேரங்களில் ராட்டையில் நூல் நூற்றல், கோலம் போடுதல், பாண்டி விளையாடுதல், புத்தகம் படித்தல், பாட்டுப் பாடுதல் என்று பொழுதைப் போக்குவார்கள். அண்ணாவிற்கும் அக்காவிற்கும் என்னைக் கேலி செய்வதும் ஒரு பொழுது போக்குத் தான். எங்கள் வீட்டிற்கு தினமும் தயிர் கொண்டு கொடுக்கும் தயிர்காரி நாகம்மா எங்களுக்கு தயிர் கொடுத்த பிறகு தண்ணீர் கேட்பாள். அந்தத் தண்ணீரை தன் தயிர்பானையில் விட்டு தயிரை அதிகமாக்கிக் கொள்வார். இதேபோல் தான் பாலையும் தண்ணீர் விட்டு விற்பாள். ‘நாகம்மா ! ஏன், இப்படிச் செய்கிறீர்கள் ?’ என்றால் ‘எல்லாம் இதற்குத் தான்!’ என்று தன் வயிற்றில் கையால் தட்டிச் சொல்வாள். சில சமயங்களில் செக்கிங்க் இன்ஸ்பெக்டர் நாகம்மாவின் பாலைப் பரிசோதிக்க அவரது பாலை ஜப்தி செய்து, சீல் வைத்து அதனால் அபராதம் கட்ட வேண்டிய நிலைமையும் ஏற்படும். ‘ஏ, ராஜாக்களா ! நீங்கள் படித்து கலக்டராக வந்து என்னைக் காப்பாற்றனும்’ என்று நாகம்மாவின் கண்களில் நீர் வழியும். இதைப் பார்த்து அவரது இயலாமை எங்கள் மனத்தைச் சங்கடப்படுத்தும். ‘நாகம்மா, நீ கவலையே படாதே ! இதோ சங்கரன் படித்து கலக்டர் என்ன – பில் கலக்டராகி உனக்கு உதவுவான்’ என்று என் அண்ணா சொல்வான். ‘கலக்டர் தானே உசத்தி. பில் கலக்டரா உசத்தி ?’ என்று அப்பாவியாக நாகம்மா சந்தேகமாக்க் கேட்பாள். ‘கலக்டர் ஒரு எழுத்து. பில் கலக்டர் இரண்டு எழுத்து. இரண்டு எழுத்து தானே பெரிசு. ஆகையால் பில் கலக்டர் தான் உசத்தி’ என்று என் அண்ணா விளக்கம் சொல்வான். ‘என்னவோப்பா,கலட்டரோ, பில் கலட்டரோ – என்னை கைவிட்டுடாதே . நீ படித்து பெரிய ஆளாகணும்’ என்று வாழ்ந்துவாள் நாகம்மா. படிக்காவிடினும், நாகம்மாவிற்கு என் அண்ணா சொன்னதில் முழு நம்பிக்கை வரவில்லை. அது தான் பாமர நாகம்மாவின் சூட்ஷம புத்தி. அத்தியாயம் 23 – என் மனதை வாட்டிய இரண்டு சம்பவங்கள் முதல் சம்பவம்: விடி காலை நேரத்தில் எங்கள் வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரி ‘அம்மா, அரிசி போடுங்க தாயே !’ என்று ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டு வேண்டினாள். திண்ணையில் நான் அப்போது படித்துக் கொண்டிருந்தேன். உடனே நான் வீட்டிற்குள்ளே சென்று ஒரு டம்பளரில் அரிசியை நிரப்பி அந்தப் பிச்சைக்காரியின் பாத்திரத்தில் போட்டேன். அடுத்த நாள் அதே பிச்சைக்காரி காலை நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தாள். அப்போது என் அம்மா ஏதோ கறிகாய் வாங்கிக் கொண்டிருந்தாள். நான் திண்ணையில் படித்துக் கொண்டிருந்தேன். ‘அம்மா, நேற்று இதே வீட்டில் உள்ள உங்கள் பையன் அரிசி என்று உளுத்தப் பருப்பைப் போட்டு விட்டான். இது தெரியாமல் சமைத்த பிறகு தான் இது தெரிய வந்த்து. அன்று நாங்கள் எல்லோரும் பட்டினி. உங்கள் பையன் பெரிய தப்பு பண்ணிட்டான். அனுபவிப்பான்’ என்று சாபம் போல் சொல்லி விட்டுச் சென்று விட்டாள். இந்தச் சம்பவம் என் மனத்தி பதிந்து பல நாட்கள் வேதனையை அனுபவித்தேன். ஏன், இன்று அன்று நடந்த இந்த சம்பவத்தை நினைத்தாலும் மனம் மீண்டும் மீண்டும் வேதனை அடைகிறது. தெரியாமல் செய்திருந்தாலும், என் செய்கையால் ஒரு குடும்பமே ஒரு நாள் பட்டினியால் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு பிராயச் சித்தம் கிடையாது தான். அதற்கான தண்டனையை நான் அனுபவிக்கத் தான் வேண்டும். என் வாழ்வில் நடந்த சில கஷ்டங்கள் இதனால் என்று காரணம் சொல்லி சமாதானம் அடையலாம். இரண்டாவது சம்பவம்: இது ஒரு சிறிய திருட்டு சம்பந்தப் பட்டது. ஒரு ஏழை. எங்கள் பக்கத்து வீட்டில் விறகு திருடிவிட்டான். பிடிபட்டு விட்டான். அப்போது இரவு ஏழு – எட்டு மணி இருக்கும். பக்கத்து விட்டிக்குகாரருடன் சிலர் சேர்ந்து கொண்டு அந்த திருடனை நன்றாக அடித்து, பிறகு தெருக்கோடியில் உள்ள கம்பத்தில் அந்தத் திருடனைக் கட்டி வைத்தார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு சென்ற பொழுது, அந்தத் திருடனின் மனைவி தன் கைக்குழந்தையுடன் அவனது கால்களை பிடித்து அழுதாள். அவளது கிழிந்த அழுக்கடைந்த புடவை அந்த முனிசிபல் லாந்தர் விளக்கில் அவர்களது ஏழ்மையைப் பறைசாற்றியது. கைக்குழந்தையும் வீரிட்டு அழுது கொண்டிருந்தது. என்னால் இந்தக் காட்சியைக் காண சகிக்க வில்லை. என்னும் ஒரு வெறி வந்து, அந்த திருடனின் கட்டை அவிழ்த்து விடுதலை அளிக்கத் துடித்தது. அனால் மனது சொன்னதை உடல் கேட்க வில்லை. அன்று இரவு முழுவதும் தூக்கமின்றி அவதிப்பட்டேன். காலையில் போலீஸ் வந்து அவனை லத்தியால் அடித்து இழுத்துச் சென்றது. இதைக் கண்ட நான் ரத்தக் கண்ணீர் விட்டேன். ‘ஒரு சிறிய விறகுக் கட்டைத் திருடியதற்கா, இந்தத் தண்டனை?’ என்று என் மனம் இன்றும் அந்த சம்பவத்தை நினைத்து அழுகிறது. அத்தியாயம் 24 என் திருச்செந்தூர் பள்ளி வாழ்க்கை நான் ஒரு சராசரி மாணவனைக் காட்டிலும் சிறிது நன்கு படிப்பவன் தான். எந்த வகுப்பிலும் தோல்வியைத் தழுவியது கிடையாது. அதிக மதிப்பெண் வாங்கியதற்கு நான் எந்த பரிசும் திருச்செந்தூர் பள்ளியில் பெற்றதில்லை. ஆனால் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்றதற்காக ஒரு வருடம் எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்கள். விளையாட்டிலும் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. ஏதோ கட்டயமாக மாலை நேரங்களில் பள்ளியில் விளையாட்டு நேரங்களில் விளையாடியதுதான். பலர் பலவிதமான விளையாட்டுக்களை விளையாடுவதைப் பார்த்து நான் பரவச மடைவேன். அதிலும் முதல் முதலில் பெரிய கம்பை வைத்து ஹை ஜெம்ப் செய்வதை பல நாட்கள் மிகவும் ரசித்துப் பார்த்த துண்டு. பல மாணவர்கள் கையில் உயரமான மெல்லிய ஆனால் மிகவும் வலுவான கம்பை வைத்துக் கொண்டு தரையில் அந்தக் கம்பை குத்தி தம் உடலை லாவகமாக வளைத்து பல அடிகள் உயரம் தாண்டுவார்கள். இந்தப் பயிர்ச்சிக்குப் பிறகு பக்கத்து ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளுடன் எங்கள் திருச்செந்தூர் பள்ளி மாணவர்கள் எங்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெறும். அது ஒரு திருவிழாவாகவே நடைபெறும். எல்லாவற்றையும் விட நான் படிக்கும் போது எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த யேசுதாஸ் ஆசிரியரை என் வாழ்நாள் முழுவது மறக்க இயலாது. அவர் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காகவே பிரம்மசாரியாக வாழ்ந்தவர். அவர் வீடும் பள்ளியில் தான். அங்கு தான் தங்கி இருப்பார். 24 மணி நேரமும் மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதை ஒரு பெரிய கடமையாகச் செய்தவர். எனக்கு அவர் வகுப்பு ஆசிரியராக பல முறை இருந்துள்ளார். அவர் ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பார். அதிலும் ஆங்கில அறிவு பலப்பட ஆங்கில இலக்கணம் அவசியம் என்பதை எப்போதும் வலியுறுத்துவார். சனிக்கிழமை – ஞாயிறு ஆகிய தினங்களில் யேசுதாஸ் ஆசிரியர் சாக்பீசால் பல கரும்பலகைகளில் ஆங்கில இலக்கணத்தைப் பற்றிய விரிவான குறிப்புகளை தமிழில் எழுதிவிடுவார். அவைகளை நாங்கள் பள்ளிக்கு வந்து தனியான ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்வோம். அந்த குறிப்புகளை நாங்கள் படித்து பள்ளியில் ஆங்கிலப் பாடம் நடக்கும் போது யேசுதாஸ் அவர்கள் கேள்விகள் கேட்கும் போது பதில் சொல்ல வேண்டும். இந்த அவரது ஆங்கில இலக்கண அறிவு போதித்த்துதான் எனக்கு கல்லூரி வரைக்கும் உறுதுணையாக இருந்துள்ளது என்றால் அது முற்றிலும் உண்மையாகும். யேசுதாஸ் ஆசிரியர் மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளவர். ஏன், அவர் தமது பல்லைக் கூட அந்த மூக்குப் பொடியால் தான் தேய்ப்பார். அவரது பல்லெல்லாம் மூக்குப் பொடிக் கலரில் தான் இருக்கும். ஆங்கிலப் பாடம் மட்டும் அல்ல. வேறு பல பாடங்களையும் அவர் எந்தவிதமான சோம்பலும் இன்றி கரும்பலகைகளில் எழுதி அவைகளை பல தனியான நோட்டுப் புத்தகங்களில் எழுதச் சொல்லி, வீட்டில் அவைகளை முன்பே படித்துக் கொண்டு வரப் பணிப்பார். இதனால் அவர் பல பாடங்களை விளக்கும் பொழுது, அவைகள் மனத்தில் நன்கு பதிந்து விடும். மாணவர்களை பல இடங்களுக்கு அழைத்துச் செல்வதிலும் யேசுதாஸ் முன்னிலை வகிப்பார். திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியபுரம் கிருஸ்துவ தேவாலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அத்துடன் இன்னும் சிறிது தூரத்தில் உள்ள நாசரேத் ஊரும் கிருஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் இடமாகும். அங்குள்ள ஊரில் மரங்கள் நிரம்பிய அருவிகளுடன் ஒரு சுனை ஒரு சுற்றுலாத் தலமாகும். அங்கும் எங்களை யேசுதாஸ் அழைத்துச் சென்றது இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது. ஒரு பாத்திரத்தில் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டு நாசரேத்தின் சுனைக்குச் சென்றேன். நல்ல வெய்யில். வேகமாக ஓடியதில் கால் தடுக்கி நான் விழ நான் சாப்பிட கொண்டு வந்த சாப்பாடு கீழே கொட்டி விட்டது. சுனையில் எல்லோரும் நன்கு குளித்தோம். குளித்த பிறகு பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் என் சாப்பாடு அனைத்தும் கீழே கொட்டி விட்டதால், நான் கொண்டு வந்த பழங்களைச் சாப்பிட்டு ஒரு வழியாகச் சமாளித்தேன். அந்த என் முதல் பள்ளிச் சுற்றுலா இன்னும் இனியதாகத் தான் இதயத்தில் இனிக்கிறது. அந்தக் காலகட்டத்தில் ரேடியோ என்பது ஒரு சில வீடுகளில் தான் உண்டு. ஆகையால் பள்ளியில் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கும், உலக நடப்புகளை அறிவதற்கும் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி பள்ளி ரேடியோவைக் கேட்போம். அதில் தூர்தர்ஷன் ஒலிபரப்பில் முதலில் ஒலிக்கும் பின்னிசை கேட்பதற்கு மிகவும் ஆன்ந்தமாக இருக்கும். அந்த நிகழ்ச்சி வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு வகுப்பு இறுதித் தேர்வுகளின் எங்களின் பரிட்சைத் தாள்கள் பக்கத்து ஊர்களில் உள்ள ஆசிரியர்களால் தான் மதிப்பிடப்பட்டும். அதே மாதிரி பக்கத்து ஊர்களின் பள்ளிகளின் பரிட்சைத் தாள்கள் எங்கள் ஊர் ஆசிரியர்களால் மதிப்பிடப்படும். என்றாலும் இவைகள் குறித்து எந்தவிதமான குற்றம் குறைகள் எழுந்ததே இல்லை. அதே போல் தான் பக்கத்தில் உள்ள பல பள்ளிகளுக்கும் சேர்த்து ஒரே கேள்வித் தாள்கள் தான் உண்டு. அவைகளைப் பற்றியும் எந்த விதமான குற்றச் சாட்டும் எழுந்தது கிடையாது. அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் பாடம் நடத்துவதில் சிரத்தையுடன் செயல்பட்டார்கள். சம்பளம் சொற்பம் தான் என்றாலும், அவர்கள் அதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்ற அளவிற்கு செய்யும் தொழிலே தெய்வம் என்ற உன்னத குறிக்கோளுடன் தொண்டாற்றினார்கள். அத்தியாயம் 25 அண்ணாவின் விஸ்வாமித்திர ஸ்வரூபம் என் அண்ணாவை மூக்காண்டி என்று தான் கூப்பிடுவார்கள். மூக்கிலே ஓட்டை பெரிதாக இருக்கும். அதைப் பார்க்கும் போதெல்லாம் அண்ணாவிற்கு ஒரே எரிச்சலாக வரும். கோபம் கோபமாக வரும். அதற்கு அம்மா தான் பலிகாடாக வேண்டும். “எனக்கு யார் அம்மா மூக்காண்டி என்று பெயர் வைத்தது? அதுவும் மூக்கில் பொட்டைப்பிள்ளை மாதிரி ஓட்டையும் வலையமும் போட்டது?” என்று கோபமாகப் பலமுறை அம்மாவிடம் கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். “அது தான் கழட்டியாச்சே ! இன்னமும் ஏன் அதையே சதா காலமும் நினைச்சுண்டு இருக்கே ?” என்று அம்மா பதில் சொல்வாள். “கழட்டி என்ன பிரயோசனம் ? மூக்கிலே ஒரு பெரிய ஓட்டை இருக்கே ! என்னை மூக்காண்டி, மூக்காண்டி – என்று நினைவு படுத்த !” என்று என் அண்ணா சீறுவார். ஆனால் இந்த என் அண்ணாவின் பாட்சா எங்கள் சித்திப்பாட்டியிடம் – அதிலும் புரசவாக்கம் சித்திப்பாட்டியிடம் எடுபடாது. என் அண்ணாவை அந்தச் சித்திப்பாட்டி “மூக்காண்டி மூக்காண்டி” என்று தான் அழைப்பார். என் அண்ணாவும் அம்மாவிடம் “அம்மா, சித்திப்பாட்டியிடம் இப்படி மூக்காண்டி, மூக்காண்டி என்று கூப்பிட வேண்டாம் என்று சொல்லும்மா! சேது –ன்னு கூப்பிடச் சொல்லு” என்று சொல்லுவார். இதை அம்மாவும் தயங்கித் தயங்கி சித்திப்பாட்டியிடம் சொன்னாள். அதற்குச் சித்திப்பாட்டி, “பிச்சு! மூக்காண்டின்னு கூப்பிடக் கூடாதா? என்னடி இது? இது தெய்வ குற்றமில்லையோ? முருகனுக்கு வேண்டிண்டு மூக்கு குத்தி முருகன் சன்னிதியிலே மூக்காண்டின்னு பெயர் சொல்லி கூப்பிட்டதை இப்போ கூடாதுன்னு சொல்வது என்னடி நியாயம் ? முருகனையே நிந்திப்பதாகாதா ?” என்று ஒரு பெரிய தத்துவமே பேசிவிட்டார். “சேதுன்னு கூப்பிடச் சொல்லறான். அவன் விருப்பப்படறான். அவன் மனது சஞ்சலப்பட மூக்காண்டி எதற்கு ?” என்று அம்மா வேண்டுகோளாகவே சித்திப்பாட்டியிடம் வைத்தாள். “முருகன் அருள் மூக்காண்டி பெயர் தான் சிறப்பு. சேது என்ன பெயர் ? – ராகு-கேது மாதிரி!” என்று சித்திப்பாட்டி சொன்னாலும், அம்மாவிற்காக முக்காண்டி பெயரை அவரும் தவிர்த்து விட்டார். பிறகு சென்னை உத்தியோக நிமித்தமாக வந்து கதை எழுதி அதில் தன் பெயரை “சு.சேதுராமகிருஷ்ணன்’ என்று தான் குறிப்பிட்டு முதலில் வெளி வந்தது. ஆனால் “சு” என்ற அடை மொழி பிடிக்காமல் போய்விட்டது. இதற்கு அவரது நண்பர் ‘சு’ ‘சு’ ‘சு’ என்று கிண்டலாக அழித்தி உச்சரிக்க, அந்த சொற்கள் ‘சி’ சி’ சி’ என்று என் அண்ணா காதில் ஒலிப்பதாக நினக்க, அதனால் இந்த சு என்ற அடைமொழி எழுத்திலும் ஒரு வெறுப்பு உண்டாகி ‘எஸ். சேதுராமகிருஷ்ணன்’ என்று பிறகு வெளிவந்த கதைகளில் தன் பெயரை மாற்றி வெளியிட்டார். திருச்செந்தூரில் அண்ணாவின் 11-வது வகுப்பு தேர்வுக்குப் பிறகு மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணமே ஒருவருக்கும் இல்லை. “வேலைக்கு முயல வேண்டும். அதற்கு டைப்ரட்டிங்க் தெரிந்திருக்க வேண்டும்” என்றதால் அதில் சேர திருச்செந்தூரில் வசதி இல்லை. அதற்கு திருநெல்வேலி சென்று படிக்க வேண்டும். அதற்கு வசதியாக திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் பயணம் இருந்தது. இதற்கும் செலவு அப்போது இருக்கும் நிலையில் அதிகம் தான் என்றாலும், அம்மா அண்ணா திருநெல்வேலிக்கு தினமும் ரயிலில் சென்று டைப்ரட்டிங் படிக்க சம்மதித்து அதற்குப் பணமும் கொடுத்தார். அண்ணாவின் ராசி மற்றவர்களைக் கவறுவதில் ஒரு தனித் திறமை இருப்பதாகத் தான் எனக்குப் படுகிறது. வேறு சிலரிடம் அதீத வெறுப்பும் கொண்டு சண்டை போடுவதிலும் சலிப்படைவதில்லை. அதிலும் தன் மேல் அதிகாரிகளிடம் தணிந்து போகாமல் சண்டை போட்டு அதனால் பதவி உயர்வு கிடைக்காமலும், மிகவும் கடினமான தூர ஊர்களுக்கு வேலை மாற்றலும் பெற்று கஷ்டப்பட்டது தனிக்கதை. அவைகளை சமயம் வரும் போது சொல்வேன். அந்த திருநெல்வேலி டைப்ரட்டிங்கின் சொந்தக்காரர் அண்ணாவிடம் ஒரு சிறந்த நண்பனாகப் பழகியதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவர் பல முறை அண்ணாவுடன் திருச்செந்தூர் வந்து எங்கள் வீட்டிற்கும் விஜயம் செய்துள்ளார். அண்ணாவும் டைப்ரட்டிங் லோயர் பாஸ் செய்து விட்டார். அப்பாவின் வேண்டுகோளை ஏற்று திருச்செந்தூர் தாலுக்கா ஆபீசில் தற்காலிக கிளார்க் வேலை கிடைத்தது. தபால் அனுப்பும் வேலை என்று நினைக்கிறேன். அண்ணாவிற்கு வேலை கிடைத்தாலும், அதனால் அண்ணாவிற்கு உதவ நானும் வீட்டிலே அண்ணாவிற்காக வேலை செய்ய வேண்டியதாகி விட்டது. தபால் அனுப்புவதற்கு அப்போதெல்லாம் தனியாகக் கவர் கிடையாது. தினசரிப் பேப்பர் தாளை வெட்டி பெரிதும், சிறியதுமாக கவர்கள் செய்ய வேண்டும். அவைகளில் விலாசம் எழுதுவதற்கு மிகவும் பழுப்பு நிறமான சாணிப்பேப்பரை வெட்டி அந்தக் கவர்களில் ஒட்ட வேண்டும். இப்படியாக ஒவ்வொரு நாளைக்கும் குறைந்தது 20/30 கவர்கள் சின்னதும் – பெரியதுமாகச் செய்ய வேண்டும். இதை நான் செய்யாவிட்டால் அண்ணா ஒரே கூப்பாடு போடுவார். “படிக்க வேண்டாமா?” என்றால், “ஆமாம், பொல்லாத படிப்பு. கலக்டர் படிப்போ?” என்று கேலி செய்து, “முதல்லே கவர் செய் – அப்பறம் படி – காதுலே விழறதா?” என்று உரக்க அண்ணா சொல்ல, அம்மாவும் அடுக்களையிலிருந்து, “சர்க்கார் வேலை – சங்கரா, அண்ணாவுக்கு ஒத்தாசையா இருடா – சம்பாதிக்கிறான் இல்லையா?” என்பார். நானும் ஒவ்வொரு நாளும் கவர்கள் செய்து அண்ணாவிற்கு உதவியாக இருந்திருக்கிறேன். அதன் பிறகு செர்விஸ் கமிஷன் பரிட்சை எழுதி பாஸ் செய்து தமிழக அரசு சர்வே ஆபீசில் லோயர் டிவிஷன் கிளார்க் பதவிக்கு தேர்வாகி சென்னைப் பயணம் சென்றார். வேலையில் அதுவும் அரசாங்க உத்தியோகத்தில் சேர்வதால், அதற்கு கோட்டு போட்டுக் கொள்ள வேண்டும் என்று பலரும் சொன்னதால், கோட்டுக்கு டைலரிடம் கொடுத்து அதுவும் ரெடியாகியது. ஆனால் அப்போதெல்லாம் பேண்ட் இல்லாமல் வேஷ்டி உடுத்திக் கொண்டு கோட்டு மட்டும் போடுவது தான் நடைமுறையில் இருந்தது. சென்னை வந்த பிறகு பலர் கோட்டில்லாமல் இருப்பதைப் பார்த்த அண்ணா கோட்டு அணிவதைத் தவிர்த்து விட்டார். பாண்டும் அண்ணா அதிகம் பயன் படுத்தாமல், வேஷ்டி – சட்டை என்ற உடையிலேயே கடைசி வரை வேலை பார்த்தார். அத்தியாயம் 26 “இருக்கலையோ” ஸ்டேஷன் மாஸ்டர் சித்தப்பா கோமதிச் சித்திப்பாட்டியின் மகன் ரயில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலையில் இருந்தார். அவர் வேலை மாற்றல் பெற்று திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தார். இது எங்களுக்கெல்லாம் பெருமை. அவர் ஒரு பெரும் குடும்பஸ்தர். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண்குழந்தைகள். அவருக்கு ஸ்டேஷன் பக்கத்திலேயே அரசாங்க வீட்டில் ஜாகை. அந்த வீடு சிறியதாக இருப்பினும், பல வசதிகள் உண்டு. ஆனால் அது ஊருக்கு வெளியே சிறிது தள்ளி இருந்ததால் ஒரு தனிமையாக இருப்பதான எண்ணம் எழத்தான் செய்யும். ஆகையால் அவர்கள் அடிகடி எங்கள் வீட்டிற்கு வந்து விருந்துண்பதும், விளையாடுவதும் உண்டு. நாங்களும் அவர்கள் வீட்டிற்குச் சென்று ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றிப் பார்ப்பதும் உண்டு. ஸ்டேஷன் மாஸ்டர் என்பதால் பலர் தங்கள் சரக்குகளில் – அரிசி, கோதுமை, காய்கறி, பலசரக்கு சமான்கள் – ஆகியவைகளை அவரது வீட்டில் சேர்ப்பார்பார்கள். இது அப்போதெல்லாம் அன்பின் அடையாளமாகவே யாரும் கேட்காமலேயே கொடுக்கப்பட்டதாகும். ஸ்டேஷன் மாஸ்டர் சித்தப்பா பேசும் போது ‘இருக்கலையோ!’ என்ற வார்த்தை அடிக்கடி வரும். சில சமயத்தில் இந்த இருக்கலையோ வார்த்தை தொடர்ந்து வந்து மேற்கொண்டு சொல்லவரும் வார்த்தைகளையும் துவம்சம் செய்து விடும். என் பாட்டி தான் ‘என்னடா எப்பப் பார்த்தாலும் இருக்கலையோ இருக்கலையோ ! எல்லாரும் இருக்கோம் நன்னாத்தான் இருக்கோம்’ என்று கேலி செய்வார். அத்தியாயம் 27 குலசேகரன்பட்டிண தசரா விழா குலசேகரன் பட்டிணம் திருச்செந்தூரிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்கு நடக்கும் தசரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த விழாவின் சிறப்பே பலர் பத்திரகாளி, சிவன், பார்வதி, முருகன், விநாயகர், குறவன், குறத்தி, பாரதி, காந்திஜி, நேரு என்று பலவிதமான வேஷங்களில் குலேசகரண் பட்டிணத்திலிருந்தும், பக்கத்து ஊர்களிலிருந்தும், திருச்செந்தூரிலிருந்தும் பல வீதிகளில் வலம் வருவார்கள். தாரை தப்பட்டைகள் வீதிகளை அதிரவைக்கும். அதை வீட்டிலிருந்தே பார்க்கலாம். அந்த ஊர்வலம் பல மணி நேரங்கள் தொடர்ந்து நடக்கும் என்பதை வைத்து அதில் எவ்வளவு பேர்கள் வேஷங்கள் தரித்துக் கலந்து கொள்வார்கள் என்பதை அறியலாம். நானும் சில சமயங்களில் உடம்பில் கரியைப் பூசிக்கொண்டு வேஷம் போட்டு அந்த ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து கொண்டதுண்டு. இதில் கலந்து கொண்டாலே உடம்பும், உள்ளமும் ஊக்கம் பெறும் என்பதுதான் வீட்டிலுள்ளோர்களின் நம்பிக்கையானதால், இந்த ஊர்வலத்தில் வேஷம் போட்டுக் கலந்து கொண்டால் முத்தாரம்மன் அருள் கிட்டும் என்பதால் இந்த விழாவில் பலரும் கலந்துகொண்டு வெகு விமரிசையாக நடக்கும். அந்த சமயத்தில் வீதிகளில் வாகனங்கள் தடை செய்யப்படும். எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் அந்தத் திருவிழா ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இதுவும் திருச்செந்தூருக்கு ஒரு பெருமை சேர்க்கும் விழாவாகும். அத்தியாயம் 28 பாட்டியின் சிநேகம் எதிர்வீட்டு ஊமை விதவை எங்கள் வீட்டிற்கு நேர் எதிரே இல்லாவிட்டாலும் இரண்டு வீடுகள் தள்ளி எதிர் வீட்டில் தான் ஒரு ஊமை விதவையின் குடியிருப்பு. அந்த ஊமைக்கு கையும் காலும் சிறிது ஊனம். அந்த ஊமை விதவை தனியாகத் தான் அந்த வீட்டில் குடியிருந்தாள். அவளது தாய் தந்தையர் இறப்பதற்கு முன்பே சொத்துக்களை அந்த ஊமை மகளின் பெயரில் எழுதி வைத்து விட்டார்கள். ஆகையால் அவர் ஒரு பணக்கார ஊமை என்று தான் சொல்ல வேண்டும். அவரது வீடும் நன்கு பராபரிக்கப்பட்டு ரொம்பவும் சுத்தமாக இருக்கும். அதைச் செய்ய ஒரு வேலைக்காரியும் அமர்த்தி உள்ளார். அந்த ஊமை எப்போதும் வாசலில் தான் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு சிலரிடம் குசலம் விசாரித்துக் கொண்டு பொழுதைப் போக்குவார். அந்த ஊமை தான் என் பாட்டிக்குச் சினேகம். என் பாட்டியும் அடிக்கடி ஊமையுடன் அவள் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு வம்பளந்து கொண்டிருப்பார்கள். எங்கள் வீட்டிலிருந்து தான் காலை டிபன், மத்தியானம் சாப்பாடு, இரவு டிபன் ஆகியவைகள் அந்த ஊமை விதவைக்கு அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். காய்கறிகள் அப்போதெல்லாம் தெருவில் தான் கூடையில் கொண்டு வந்து விற்பார்கள். அரிசிக்கு காய்கறிகள் வாங்கி இருக்கும் காலம் அது. பிறகு தான் துட்டுக்கு வாங்கும் நிலை வந்தது. ஊமை – எங்கள் பாட்டி ஊமையின் வீட்டில் இருக்கும் போது காய்கறிகாரி கூடையுடன் வந்தால், அவர்களைக் கூப்பிட்டு ஊமை தனக்குப் பிடித்த காய்கறிகளை வாங்க பாட்டியிடம் சொல்ல, பாட்டியும் வாங்கி அன்று சமையலுக்கு என் அம்மாவிடம் கொண்டு வருவார். ஊமையும் அன்று மத்தியானம் சாப்பாடில் அந்தக் காய்கறிகள் இருப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக உணவு அறுந்துவார்கள். பாட்டியிடம் ‘ரொம்ம ஜோர்’ என்று தனக்கே உரித்தான பாணியில் தெரிவிப்பார்கள். சாப்பாடு ஊமைக்கு சூடாக இருக்க வேண்டும். ‘கன கன’ என்று இதை அந்த ஊமை ஆனந்தமாக அந்த சாப்பாட்டை வரவேற்பார். நாங்கள் இருக்கும் வரை அந்த ஊமை விதவைக்கு சாப்பாட்டிற்கு ஒரு கவலையும் இல்லை. அந்த நாட்கள் அவரது நினைவில் பசுமையான இனியவைகளாகத் திகழ்ந்தன. ஊமை விதவைக்கு வயற்காட்டிலிருந்து நெல் மூட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் வரும். அந்த நெல்லை அரிசியாக்கி வீட்டில் அடுக்கி வைத்திருப்பார்கள். கடைகளுக்கும் விற்பது உண்டு. அவர் வீட்டிலிருந்தான் அரிசியை நாங்கள் வாங்குவதுண்டு. அப்போது தாராளமாக அளந்து போடச் சொல்வார்கள் அந்த ஊமை விதவை. பாட்டியிடம் ‘நீங்கள் அன்னதாதா .. ஆகையால் அரிசியை அளந்து போட்டாலும், அதற்கும் மேல் அரிசியை அதிகம் கொசுறாக போடறேன்’ என்று சைகையால் சொல்லி உணர்ச்சி வசப்பட்டுவிடுவார் அந்த ஊமை. பல ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டியும், என் அக்காவும் அண்ணாவிற்கு சென்னையில் வேலை கிடைத்ததும், சமைத்துப் போட சென்னையில் திருவல்லிக்கேணியில் ஜாகைக்கு மாறினார்கள். அப்போது ஊமை தான் பாட்டியின் சிநேகம் விடுபடுவதை அறிந்து மிகவும் வருந்தினார்கள். பிறகு அடுத்த சில வருடங்களில் அம்மாவும் மெஸ்ஸை மூடி சென்னை செல்ல இருப்பதை அறிந்த ஊமை உண்மையிலேயே கண்ணீர் விட்டு விடை கொடுத்தார். அதன் பிறகு அந்த ஊமையின் உறவினர்கள் வந்து ஊமையைக் கொடுமைப்படுத்தி ஊமையும் மிகவும் கஷ்டப்பட்டார்கள் என்பதை அறிந்தோம். அத்தியாயம் 29 வாக்கு ருசியான பதார்த்தங்கள் – மறக்கமுடியாத நினைவுகள் திருச்செந்தூர் என்றால் பஜனை மடத்து சாம்பார் – ரசம் மனத்தில் மணக்கும். அவ்வளவு ருசி. திருச்செந்தூர் திருவிழா 10 நாட்கள் நடக்கும். அந்த பத்து நாட்களின் இரவு சாப்பாடு பஜனை மடத்தில் உண்டு. எப்போதும் வாழைக்காய் கறி – சாம்பார் – ரசம் – மோர் தான். ஒரு நாள் உப்புமா போடுவார்கள். அந்த சாப்பாடு ருசியோ ருசி என்று சொல்லும் அளவில் அற்புதமாக இருக்கும். இன்றும் பஜனை மடத்து சாம்பார் – ரசம் மாதிரி செய்வது மிகவும் சிரமம் என்று சொல்லுவேன். அது தெய்வீக ருசி. நளபாக ருசி. ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு வருடமும் அதே ருசியுடன் இருப்பது ஒரு ஆச்சரியமான விஷயம் என்று தான் எனக்குப் படுகிறது. திருச்செந்தூரில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் திருவிழாவின் போது வண்டிகளின் அடியில் கடைகள் போட்டு மாம்பழங்கள் விற்பனையாகும். அந்த மாம்பழங்களை வாங்கி அவைகளின் தோல்களை நீக்கி வாழை இலையில் வைத்துக் கொடுப்பார்கள். அவைகள் தேவாமிர்தமாக இனிக்கும். இன்றும் அந்த இனிப்பு நினைவில் நிரந்தரமாக இருக்கிறது. திருசெந்தூரில் ஒரு போத்தி குடும்பம் வீட்டில் வாழைக்காய் பஜ்ஜி, சக்கரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்து தெருவில் கூவி விற்பார்கள். ஒரு இஞ்ச் அகலம் 3 இஞ்ச் நீளம் பஜ்ஜி எண்ணெய் ஒரு சிறிதும் இல்லாமல் பளபள வென்று செந்நிரமாக இருக்கும். உள்ளே இருக்கும் வாழைக்காயும் நன்கு வெந்து ருசியோ ருசி. அத்துடன் சக்கரை வள்ளிக் கிழக்கு சிப்ஸ் – தங்க நிறத்தில் மிளகாய்ப்பொடி தூவி – இனிப்பும் – காரமுமாக ஆஹா, ருசியோ ருசி என்று சாப்பிடத் தோன்றும். சாயங்காலத்தில் அந்த பஜ்ஜிக்கும், சக்கரை வள்ளிக் கிழங்கு சிப்ஸுக்கும் காத்திருந்து சாப்பிடும் நேரம் அற்புதமான மனத்திற்கு இனிய நேரமாகும். திருச்செந்தூர் லாலா கடை அல்வா – காராச் சேவ் – இரண்டும் பிரசித்தம். பஜாரில் இருக்கும் அந்த லாலா கடையில் அல்வாவை அழகாக வெட்டிய ஒரு சிறிய வாழை இலையில் வைத்து கொடுப்பார்கள். அதை சாப்பிட்டு விட்டு பிறகு காராச் சேவ் ஒரு பாக்கெட் சாப்பிட்டால் போதும் வயிறு நிறைந்து விடும். பக்கத்து ஹோட்டலில் ஒரு பில்டர் காபி குடித்து விட்டால் அதுவே அன்றைய தினத்தை அமுதமாக்கிவிடும். ஆனந்தமாக அன்றைய பொழுதைத் தொடங்கி விடலாம். அத்தியாயம் 30 கோயில் கட்டிச் சாதம் எங்களைக் காத்த கதை திருச்செந்தூரில் கட்டளையாக முக்காணியர்களுக்கு கோயில் கட்டிச் சாதம் – புழுங்கல் அரிசிச் சாதக் கட்டி – இத்தனை என்று வரையறை உண்டு. எங்கள் வீட்டில் சாப்பிடும் நபரில் ஒருவர் இந்தக் கட்டளைச் சாதக் கட்டிகளில் தான் ஜீவனம். அந்தச் சாதக் கட்டிகளை கோயில் வளாகத்தில் விற்று விடுவார். அவர் எப்போதும் வெள்ளை வெளேர் வேஷ்டியில் தான் வலம் வருவார். அதில் ஒரு துளி அழுக்கே இருக்காது. அவ்வளவு தூய்மை. அவர் பிரம்மசாரி என்று தான் நினைக்கிறேன். அவர் எங்களிடம் அமிரிமிதமான அன்பு கொண்டவர். மிகவும் கண்ணியமானவர். அவர் ஜாகை பிள்ளையார் கோயிலில் தான். அவருக்கு கஞ்சாப் பழக்கம் உண்டு என்று சொல்வர். ஆனால் அது வெளிப்படையாக யாருக்கும் தெரியாத படி உபயோகிப்பதில் பலா கில்லாடி. இந்தியாவில் நாங்கள் திருச்செந்தூரில் இருக்கும் போது பஞ்சம் தலைவிரித்தாடியது. அரிசி கிடைப்பதில்லை. எல்லாம் ரேஷன். அங்கு புழுங்கல் அரிசிதான் கொடுப்பார்கள். மீதிக்கு சோளம், கம்பு, கேழ்வரவு என்று வாங்கவேண்டும். இந்த பயங்கர தட்டுப்பாட்டினால் எங்கள் வீட்டு மெஸ் மத்தியானம் – இரவு சாப்பாடு நிறுத்தப்பட்டது. காலையில் இட்டிலி – இரவு இட்டிலி விற்பனை மட்டும் தான் மெஸ்ஸில் செய்ய முடிந்தது. அப்பளாம் இட்டு விற்பது நீடித்தது. மாதாந்தர சாப்பாடு சாப்பிடுவர்கள் காலையிலும், இரவிலும் வந்து இட்டிலி சாப்பிட்டுப் போவார்கள். மத்தியானம் சாப்பாடு அவர்கள் வெளியே பார்த்துக் கொள்வார்கள். அந்த நாட்களில் சோளம் - கம்பு தோசை – கேழ்வரகு கஞ்சி ஆகியவைகளை அம்மா செய்து நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம். அவைகளின் ருசியும் எங்களுக்கு பிடித்தமாகவே இருந்தது. அது அம்மா கைமணமாகத்தான் இருக்க வேண்டும். கஷ்டங்களைக் கண்டு கலங்காமல், அதை எதிர்கொள்ளும் மாற்று வழியினை கண்டு பிடித்து, செயல்படுத்தி நாட்களைக் கடந்து செல்வதில் அம்மா ஒரு தனி ரகம். அது தான் அவரது தனித் திறமை – பலம். அதுவும் கம்பு தோசையில் வெல்லம் போட்டு வார்த்து எங்களுக்குக் கொடுப்பார். அதன் ருசியே தனி. அதை இப்போது நினைத்தாலும் இனிக்கிறது. மேலும் கம்பு முறுக்கு செய்து சாப்பிட்டிருக்கிறோம். அதுவும் அற்புதமாகவே இருக்கும். சாதாரணமாக கம்பு – கேழ்வரகு ஆகியவைகளை உபயோகிப்பது கிடையாது. அரசித் தட்டுப்பாடு காலத்தில் இவைகளைச் சாப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தான் அவைகளின் தனித் தன்மை எங்களுக்குப் புரிந்தது. அந்த தட்டுப்பாடு கால கட்டத்தில் எங்களுக்கு மத்தியானம் சாப்பாட்டிற்கு கோயில் கட்டிச் சாதம் தான். அதை வெள்ளை வேட்டி வாடிக்கையாளர் திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலிருந்து நேராக சுடச் சுட எங்கள் வீட்டிற்கு முதலில் கொண்டு வந்த பிறகு தான் மற்ற சாதக் கட்டிகளை விற்பார். கோயில் தொலைவில் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த சாதக் கட்டி நல்ல சிவப்பாக இருக்கும். வீட்டில் அம்மா குழம்பு – ரசம் – பொடுத்துவல் என்று செய்திருப்பார். அவைகளுடன் இந்த சாதக் கட்டியைச் சேர்த்துச் சாப்பிடுவோம். அதுவும் எங்களுக்கு இனிப்பாகவே இருக்கும். அந்த தட்டுப்பாடு காலத்திற்குப் பிறகு சகஜ நிலை திரும்பிய உடன் மீண்டும் மெஸ் மத்தியானச் சாப்பாட்டுடன் தொடங்கியது. அண்ணாவிற்கு சென்னையில் வேலை கிடைத்த பிறகு அண்ணாவிற்குச் சமைத்துப் போட எங்கள் பாட்டியும் – என் அக்கா கோமதியும் சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப்பெருமாள் சந்துத் தெருவில் ஒண்டிக் குடித்தனம் ஆரம்பம். நான் எனது 8-ம் வகுப்பு முடிந்தவுடன் சென்னையில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர தனியாக சென்னைக்கு ரயில் ஏறினேன். அம்மா பிறகு சென்னை வந்து சேர்ந்தார்கள். ஆனால் அப்பா நாங்கள் எல்லோரும் சென்னை வந்தாலும், அவர் சென்னை வர விரும்பவில்லை. தனியாக திருச்செந்தூரில் தங்கி விட்டார். அப்பாவின் உடல் நிலை சரி இல்லை என்று ஒருவர் போஸ்ட் கார்டில் எங்களுக்குக் கடிதம் போட, அண்ணா திருச்செந்தூர் சென்று ரொம்பவும் நோய்வாய்ப்பட்ட அப்பாவை ரயிலில் சென்னைக்கு அழைத்து வந்தார். அப்பாவைப் பார்த்த பாட்டி – அம்மா ரொம்பவும் கவலைப் பட்டார்கள். ‘ஏண்டா சுப்புணி இப்படி உடம்பைக் கெடுத்துண்டுட்டே ?’ என்று பாட்டி கண்ணீர் விட்டாள். ‘பிச்சு சமையலே எனக்குச் சிறந்த மருந்து .. அது போதும் ‘ என்று அப்பா சொன்னார். இருந்தாலும், அப்பாவை ரயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிட்சை அளித்தோம். ஆனால் அப்பா ‘எனக்கு சிகிட்சை எல்லாம் போதும். வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போங்கள் – வீட்டுச் சாப்பாடே மருந்து தான் எனக்கு’ என்று வற்புறுத்த அப்பாவை வீட்டிற்குக் கொண்டு சென்று விட்டோம். சென்னைக்கு நான் தனியாக ரயிலில் வந்தது இன்றும் பசுமையான நினவாக இருக்கிறது. அதுவும் தாம்பரத்திலிருந்து எழுப்பூர் ரயில் நிலையம் வரை வேகமாக அந்த ரயில் வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. சென்னை வந்து திருவல்லிக்கேணி ஒண்டிக் குடித்தன எங்கள் குடியிருப்பு குச்சிலைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது. ‘இது என்ன வீடு? வாசலே இல்லை. நான் திருச்செந்தூர் போகணும். சென்னைப் படிப்பு வேண்டாம். திருச்செந்தூர் பள்ளியே போதும்’ என்று அழுது அடம்பிடித்தேனாம். என்றாலும் நான் எப்படியோ சமாதானம் ஆகி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். இத்துடன் எனது திருச்செந்தூர் வாசம் நிறைவு பெறுகிறது. அடுத்து சென்னை வாழ்வு பற்றிய தகவல்களை எழுதிவேன். அது என் வாழ்க்கைச் சுழலின் இரண்டாவது பாகமாகும். முதல் பாகம் முற்றுப் பெற்றது. இரண்டாம் பாகம் ஆரம்பம். இரண்டாவது பாகம் – சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து ஆரம்பம். அதை அடுத்த இதழிலிருந்து தொடர்ந்து எழுத உத்தேசம். திருவல்லிக்கேணி உரை அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் பாதார விந்தங்களை மனத்தினால் பூஜித்து அவர் அருள் வேண்டி எழுத உத்தேசம். என் திருவல்லிக்கேணியின் நீண்ட கால வாசத்தில் என் மனத்திற்கு நிம்மதியையும், வாழ்க்கையின் முன்னேற்றத்தில் துணை நின்று வழிகாட்டியும் அருள் புரிந்த என் தெய்வம் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி. அத்துடன் என் உள்ளம் கவர் பாரதி வாழ்ந்த துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலுள்ள ஸ்ரீ பார்த்தசாரதி பின் புற கோபுர வாசலுக்கு எதிராக அமைந்துள்ள சிவப்புக் கட்டிடத்தைத் தாண்டும் போதெல்லாம் வணங்கும் பாக்கியம் பெற்றேன். – ஜெயந்திநாதன். வாழ்க்கைச் சுழல் இரண்டாம் பாகம் – சென்னை வாழ்க்கை அத்தியாயம் 1 – சென்னை திருவல்லிக்கேணி ஒண்டிக் குடுத்தன வாழ்க்கை அனுபவம் சென்னையில் பார்த்தசாரதி கோயில் பின்புறக் கோபுர வாசல் துளசிங்கப்பெருமாள் தெருவில் உள்ளது. அதற்கு எதிராகத் தான் என் உள்ளம் கவர்ந்த மஹா கவி சுப்பிரமணிய பாரதி வாழ்ந்த சிவப்புக் கட்டிடம் உள்ளது. நாங்கள் குடியிருந்த குச்சு வீடு துளசிங்கப் பெருமாள் சந்தில் 5-ம் நம்பர் இலக்கத்தில் உள்ளது. அந்தத் தெருவே ‘ட’ வடிவில் அமைந்தது. துளசிங்கப் பெருமாள் கோயிலின் தெற்கு முனையிலிருந்து ஒரு சந்து வழியாக எங்கள் குச்சு வீட்டிற்குச் செல்ல வேண்டும். அந்த குறுகிய சந்து எப்போதும் மனித மலத்தில் இருபுறமும் நம்மை வரவேற்கும். இது தவிர்க்க முடியாத சகித்துக் கொள்ள வேண்டிய அல்லது அலட்சியப்படுத்த வேண்டிய ஒன்றாகும். ‘ட’ வடிவில் இரண்டு கோடுகளும் இணையும் இடத்தில் தான் எங்கள் குடில். அது ஒற்றை மாடி உடைய கட்டிடம். எங்கள் குச்சு வீடு வாசலில் நுழைந்தவுடன் வலது புறத்தில் அமைந்தது. அந்த குச்சு வீடு இரண்டு ரூம்களை உடையது. ஒன்று நுழைந்தவுடன் உள்ள ரூம் – ஹால் என்று சொல்லலாம். அடுத்து அதை ஒட்டிய ஒரு சின்ன ரூம். குளிக்க பல் தேய்க்க சகலத்திற்கும் அந்த ரூம் தான். படிக்க, படுக்க, குளிக்க எல்லாம் அந்த ரூமில் தான். கக்கூஸ் கீழே குடித்தனம் இருக்கும் மூன்று குடும்பங்களுக்கும் – எங்களையும் சேர்த்து – ஒன்று தான். தண்ணீர் பிடிப்பதற்கு பொதுவான குழாய் கீழே எங்கள் குச்சு வீட்டிற்கு எதிரே தான் உள்ளது. அங்கு நல்ல தண்ணீர் கார்ப்பரேஷனிலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் வரும். அதற்குள் அங்கு குடியிருக்கும் – கீழே மூன்று குடும்பங்கள், மேலே மூன்று குடும்பங்களும் தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் பிடிக்கும் போது குழாய்ச் சண்டையும் வெகு சுவரஸ்யமாக நடக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் அந்தச் சண்டை நின்று அனைவரும் அதை மறந்து செயல்படுவார்கள். இது ஒரு ஆச்சரியமான விஷயமாகப் படுகிறது. அந்தச் சிறிய குச்சு வீட்டில் – சொப்புக் குடில் என்று புரசவாக்கம் பணக்கார சித்திப்பாட்டி - தனி பங்களாவில் வாசம் செய்பவர் – கேலி செய்வார்கள். அடிக்கடி அந்தச் சித்திப்பாட்டி எங்கள் பாட்டியையும், என் அப்பா -அம்மாவையும் பார்க்க வருவார்கள். அந்தக் காலத்தில் கார் என்பது மிகவும் அபூர்வம். ஆகையால் இந்த அவரது கார் வருகை எங்கள் மதிப்பைச் சிறிது உயர்த்தும். அந்தக் குச்சு வீட்டு முதல் ரூமில் இரண்டு ஜன்னல்களும், அடுத்த ரூமில் ஒரு ஜன்னலும் இருந்தது. ஆகையால் வெளிச்சம் நன்கு உண்டு. ஆனால் காற்றுத் தான் கிடையாது. அடுத்த ரூமில் தான் அடுப்பு வைத்துச் சமைக்க வேண்டும். மண்ணெண்னை அடுப்பு. அங்கேதான் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும். படுக்கையும் தரையில் தான். அந்த குச்சு வீட்டில் ஆறு பேர்கள் குடியிருந்தோம் – பாட்டி, அப்பா, அம்மா, அண்ணா, அக்கா மற்றும் நான். அந்த வீட்டு மாடியில் தான் புகழ்பெற்ற வீணை வித்வான் நாராயணஸ்வாமி ஐயங்கார் வாசம். அவர் மனைவி அவரை வெளிப்படையாகவே திட்டுவார். ஆனால் அவர் ஒரு பரப்பிரம்மம். எதற்கும் பதில் சொல்லாமல் தன் வேலையிலேயே கவனமாக இருப்பார். இதுவும் அந்தப் பெண்மணியின் கோபத்தை அதிகரிக்கும். எதிர் வீட்டுக் குடித்தனக்காரர் ஏழை. சமையல் செய்து பிழைப்பவர்கள். அவர்கள் ஐந்து பேர்கள். அந்த வீட்டுக்கார அம்மா வாய் ஓயாமல் எதையாவது திட்டிக் கொண்டே இருப்பார். அவர்கள் உடை, இருப்பிடம் எல்லாமே ஒரே அழுக்கு மயம். தரித்திர தேவதை குடிகொண்டு இருப்பது நிதரிசனமாகத் தெரியும். அவரது பையன் கார் ஒட்டி ஏதோ பிழைப்பு நடத்துவதாகத் தெரிகிறது. அவனின் நடவடிக்கையும், பேச்சும் சேரி வாசனையை ஞாபகப் படுத்தும். எங்கள் வீட்டிற்கு இடதுபுறம் ஐந்து வீடுகள் தள்ளி ஒரு பெரிய வீட்டில் ஹிந்து உயர்நிலைப் பள்ளியின் உதவி ஹெட்மாஸ்டர் ஜாகை. அவர் பெயர் ராஜகோபால ஐயங்கார். மிகவும் மெத்தப் படித்தவர். அவர் எழுதி வெளியிட்ட கணக்குப் புஸ்தகம் தான் எங்களுக்குப் பாடப் புத்தகம். அவரும் எங்களுக்கு கிளாஸ் எடுத்து, கற்றுக் கொடுத்துள்ளார். அவரது கற்பிக்கும் பாணி ரொம்பவும் அற்புதமாக விளங்கும் வண்ணம் இருக்கும். நான் ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் ஒன்பாதாவது வகுப்பிலிருந்து 11-வது வகுப்பு – எஸ்.எஸ்.எல்.சி தேர்வு வரை மூன்று வருடங்கள் படித்தேன். அவர் நான் 10-வது வகுப்பில் படிக்கும் போதே ஹெட்மாஸ்டராக பதவி பெற்று விட்டார். அவர் கால் சரியாக இல்லாத காரணத்தல் சாய்ந்து – சாய்ந்து தான் நடப்பார். அவர் வீட்டிற்கு வரும் சமையம் நாங்கள் எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவோரத்தில் கிரிக்கெட் ஆடுவோம். எங்கள் ஹெட்மாஸ்டர் அந்த வழியாக வரும்போது நாங்கள் விளையாடுவதை நிறுத்தி விட்டு, மிகவும் மரியாதையாக வணக்கம் சொல்வோம். அவரும் அதை தன் தலையை அசைத்து ஏற்றுக் கொள்வார். அந்தக் குச்சு வீட்டில் சுமார் ஆறு வருடங்கள் குடியிருந்தோம். அதற்கு வாடகை ரூபாய் 20 என்று ஞாபகம். அந்த வீட்டுச் சொந்தகாரச் செட்டியார் கராராக ஒவ்வொரு மாதமும் மூன்றாம் தேதி வாடகை வசூலுக்கு வந்து வாடகை பெற்றுக் கொண்டு ரசீதும் கொடுத்து விடுவார். அவர் அந்த வீட்டை விற்பதற்காக எங்களை எல்லாம் காலி செய்யச் சொன்னார். ஆனால் காலி செய்தால் எங்கே போவது என்பதால் அனைவரும் ஒன்றாக மறுக்கவும், செட்டியார் கோர்டில் கேஸ் போட்டார். அத்துடன் எங்கள் வீட்டில் இருந்த மறைவுத் தட்டியை – அந்த ஹாலுக்கு சுவர் கிடையாது – மறைவாக ஒரு தட்டிதான் போட்டப்பட்டிருந்தது – எடுத்து விட்டார். இதனால் நாங்கள் பல் தேய்ப்பது, குளிப்பது, படிப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாம் போவார் வருவோர்கள் எல்லாம் பார்க்கும் நிலையில் வாழ்ந்தோம். எங்கள் தெருவில் 4-ம் நம்பர் வீடு அப்பிராமணர்கள் வாழும் வீடு. அதன் கக்கூஸ் தெருவைப் பார்த்துக் கட்டப்பட்ட ஒன்று. அங்கு எப்போதும் சண்டையும், இரைச்சலுமாக இருக்கும். ‘வீடா இது?’ என்று நான் நினைப்பதுண்டு. ஆனால், அதே வீட்டு மாடியில் இரண்டு ரூம்கள், ஒரு சாக்குத் துணிக் கதவு கொண்ட பாத்ரூம் என்ற இன்னொரு குச்சு வீட்டிற்கு குடிபுகுந்தோம். அதைத் தான் விதி என்று சொல்வதா ? ஏனென்றால் ‘அந்த வீட்டில் ஒரு போதும் குடிபோக்க் கூடாது’ என்று நினைத்தவன் நான். ஆனால் அங்கு ஒரு வருடம் தங்கும் படி ஆகி விட்டது. பாட்டியும் மாடிப் படி இறங்கி வீதியைப் பார்த்திருக்கும் கக்கூஸுக்கு வந்து மலம் கழிக்க வேண்டும். இதை எல்லாம் படிக்கும் வாசகர்கள் நாங்கள் ரொம்பவும் சிரமப் பட்டோம் என்று நினைக்கக் கூடும். ஆனால் நாங்கள் அப்படி நினைக்காதது இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. ‘பகவான் இவ்வளவாவது நமக்குப் படி அளிக்கிறாரே !’ என்று தான் அப்பா - பாட்டி – அம்மா அடிக்கடி சொல்வார்கள். ‘நமக்கு எது குடுப்பனையோ அதுதான் கிடைக்கும். ஆசைப்பட்டு, அவலத்தை விலைக்கு வாங்கக் கூடாது!’ என்பது தான் எங்கள் பெற்றோர்களின் வாழ்க்கைத் தத்துவம். குழாய்ச் சண்டை என்ற சிறுகதை அண்ணா அப்போது எழுதி, அது சிறுகதை என்ற பத்திரிகையில் பிரசுரமாகியது. அதை இங்கு மறு பதிப்பாக வெளியிடுவது சாலப் பொருந்தும். இதோ அக்கதை -1951-ம் வருடத்தில் பிரசுரமான கதை: குழாய்ச் தண்ணீருக்காகச் சண்டை போடுவதென்பதே ஒரு கலை – தனிக் கலை. இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதற்கு சாதனம் ‘ஒண்டுக் குடித்தனம்’ தான். தனி வீட்டிலுள்ளவர்களுக்கு இந்த அருமையன கலையை அறிந்து கொள்ள முடியாத துரதிருஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. இதில் நான் பாக்கியசாலியே. எங்கள் வீட்டில் ஆறு குடித்தனங்களுக்கு மேலேயே இருக்கின்றன. வீடு முழுவதற்கும் ஒரே ஒரு குழாய்தான் இருக்கிறது. என்னுடைய அதிர்ஷ்டம், குழாய் நான் இருக்கும் போர்ஷனுக்குச் சமீபத்திலேயே இருக்கிறது. எனக்கு ஜலம் எடுக்க வேண்டிய ஜோலி இல்லை. அந்த புனித கைங்கரியத்தை என் மனைவி ராஜம் பார்த்துக் கொள்கிறாள். (என் அண்ணாவுக்கு அப்போது கல்யாணம் ஆகவில்லை. ராஜம் ஒரு கற்பனைப் பாத்திரம்). படுக்கையை விட்டு நான் எழுந்திருக்கும் பொழுது மணி கிட்டத்தட்ட ஏழரை ஆகிவிடும். காலை ஐந்து மணியிலிருந்து குழாய்ச் சண்டை வெகு அழகாக ஆரம்பித்து விடும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினுசில் சண்டை ஆரம்பிப்பதால் இதைக் கேட்பதில் நமக்குச் சலிப்பு ஏற்படாது. படுக்கையில் படுத்து கொண்டே நான் அனுபவித்த குழாய்ச் சண்டை பூராவையும் என்னால் இக் கட்டுரையில் சொல்லித் தீர்த்து விட முடியாது. ஆயினும் இதில் ரஸமான பேச்சுக்களை மட்டும் கீழே தருகிறேன். பேசும் பாத்திரங்கள் முக்கியமல்ல. அதலால் அவைகளைக் கூறாமல் அடிக்கடி அடிபடும் பேச்சுக்களை மட்டும் கீழே தருகிறேன். 2. ‘அந்த மனுஷர் காலம்பர அஞ்சு மணிக்கே வந்துடரார் ஜலத்துக்கு. ஆறு மணி வரை குழாயை விடறதில்லை! அப்பாடா ! இப்பவாவது போனாரேனுட்டுச் சித்தே அந்தப் பக்கம் போனா குழாய் டியூ-பை குடம் ரொம்பறதுக்குள்ளேயே இன்னொரு பாத்திரத்திலே வைச்சிருக்கு ! முப்பது ரூபாய் வாடகையும் கொடுத்துட்டு இந்த தரித்திரம் பிடிச்ச இடத்திலே இருக்க வேண்டியிருக்கு!’ ‘காலம்பர அஞ்சு மணிக்கே உங்களையும் யாரு வரவேண்டாம்னா? அஞ்சு மணிக்கு வந்து டியூபை உறிஞ்சி வைக்கிறது தான் மிச்சம் ஒரு சொட்டுத் தண்ணீர் வர்றதில்லே ! பெயர் மட்டும் கொடுத்தாச்சு ஐந்து மணிக்குக் குழாய்த் தண்ணீர் எடுக்கறார்ன்னுட்டு’. 3. ‘ரொம்ப அவசரம் குளிக்கறத்துக்கு அவா காத்துண்டிருக்கா ! ஒரு வாளி விட்டுடுங்கோ ! அப்புறம் இப்போதக்கு வரமாட்டேன்!’ ‘எல்லோருக்கும் அவசரம் தான். நான் இந்த ரெண்டு பக்கெட்டுக்கும் பிடிச்சுண்டு போயிடறேன். மாடியிலிருந்து இப்பத் தான் வரேன். நீங்களெல்லாம் பக்கத்திலே இருக்கிறவா தானே ! எப்போ வேணும்னாலும் எடுக்கலாமே !’ ‘பக்கத்திலே இருக்கிறவாள்னு பெயர்தான். எல்லாரும் இப்படிச் சொல்லிண்டு எடுத்துண்டு போயிருங்கோ ! இப்போ ஒன்பது மணி ஆயிடும். ஜலமும் நின்னு போயிடும்.! ‘நாங்க வர போது தான் உங்களுக்கும் வரத் தெரியும் ! நன்னாப் பார்த்துண்டேள் ! நாங்க ஒதுங்கிக் கிடக்கோம். நீங்க இப்படி ஓட ஓட விரட்டறேள் ! அங்கு அரிசிக்கு ஜலம் கொதிச்சிண்டிருக்கு !’ 4. ‘இந்த வேலைக்காரி அப்பவே முதல் நிக்கறாளே ! ஒரு வாளித் தண்ணி கொடுக்காம இப்படி நீங்களே எடுத்துண்டா என்ன செய்யறது ? தன்னைப் போல மத்தவளையும் நினைக்கணும் !’ ‘எங்காத்திலே பல் தேய்க்காம நின்னுண்டிருக்கான் அண்ணா ! ஒரு குடம் மட்டும் எடுத் –‘ ‘சரி சரி எடுத்துண்டு வைச்சுடு! எப்பப் பார்த்தாலும் இந்த எழவாத்தானிருக்கு இந்த வீட்டிலே !’ 5. ‘நன்னாருக்கு ! ஒரு சொம்பு ஜலத்துக்கு ஒரு நாழியா நிக்க வேண்டியீருக்கே ! எங்கவூர்லே ஆத்துக் கொல்லைப் பக்கம் கிணறு. பக்கத்திலே வாய்க்கால், ஆத்தங்கரை ஜலம் கல்கண்டுன்னா கல்கண்டு தான். இந்தச் சனியன் பிடிச்ச பட்டணத்திலே கொண்டு என் பேரனுக்கு வேலை போட்டிருக்கானே !’ ‘பாட்டி ! நாலு பேரிருக்கிற இடத்திதிலே அப்படி இப்படித்தானியிருக்கும். அதுக்காக கோவிச்சுண்டா முடியுமா ?’ ‘நன்னாயிருக்குடி, நன்னாருக்கு ! யாரு கோவிச்சுக்கறா ? எனக்குக் கோபம் வரும்னு என் நாட்டுப் பெண் கூடச் சொல்லமாட்டாளே ! நீ சொல்றயாக்கும் ! ரொம்ப நன்னாயிருக்கே !..’ ******************************** இவ்வளவு பேச்சுக்களுக்கிடையே எப்படியோ அவரவர்களுக்கு வேண்டிய தண்ணீரை எல்லோரும் எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் நிசப்தமாக தண்ணீரை எடுத்துக் கொண்டால் அதில் என்ன ரஸமிருக்கிறது ? வாழ்க்கை சப்பென்றல்லாவோ ஆகிவிடும் ! குழாய்ச்சண்டையால் யாதொரு நஷ்டமும் இல்லை. ஒவ்வொருவாருக்கும் தங்களது குடும்பப் பெருமை, வருமானம் இவைகளையும், தங்கள் பேச்சுத் திறனையும் மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் அளிக்கிறது ! வாழ்க குழாய்ச் சண்ட்டை ! அத்தியாயம் 2 – திருவல்லிக்கேணி சிவப்பு கட்டிட ஹிந்து உயர்நிலைப் பள்ளிப் படிப்பு ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் – 9-வது வகுப்பிலிருந்து 11-வது வகுப்பு (அதை எஸ்.எல்.எல்.சி. என்பார்கள் – அதற்குப் பிறகு கல்லூரிப்படிப்பு தொடரும்) வரை அந்தப் பள்ளியில் படித்தேன். அப்போது எனக்கு நண்பர்களாக பி. கிருஷ்ணன், ராமச்சந்திரன், ரங்கன், லக்ஷ்மணன், பி.பி. குருராஜ உபாத்தியாயா ஆகியவர்களைக் குறிப்பிட வேண்டும். அதில் குறிப்பாக பி. கிருஷ்ணன், ராமச்சந்திரன் ஆகியவார்களின் சினேகம் ரொம்பவும் நெருக்கமாகும். இப்போதும் கிருஷ்ணன் தான் என் நெருங்கிய தொடர்பில் உள்ள நண்பன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமச்சந்திரன் காசிப் பயணத்தின் போது ரயிலில் மாண்டதாகச் சொல்வார்கள். அவன் சாப்பாட்டுப் பிரியன். சினிமா பைத்தியம். பள்ளிப் படிப்பை முடித்து, அவனும் கல்லூரியில் சேர மார்க் குறைவாகப் பெற்றதால் ஒருவரும் சேர விரும்பாத – பிலாசபி குரூப் தான் கிடைத்து அதில் வேண்டா வேறுப்பாக அப்பாவின் ஆசைக்காக மைலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்து படித்தான். நானும் எஸ்.எல்.எல்.சி.யில் கொஞ்சம் அதிக மதிப்பெண் பெற்றதால் எந்த சிபாரிசும் இன்றி விண்ணப்பித்தவுடன் விவேகானந்தா கல்லூரியில் இண்டர் மீடியட் – முதல் குருப்பான எல்லோரும் அதிகம் விரும்பும் – கணிதம், இயற்பியல் (Physics) & வேதியியல் (Chemistry) - கிடைத்துச் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றேன். அதைப் பற்றிய விபரம் பிறகு எழுதப்படும். பள்ளிப் படிப்பின் போது படிப்பைத் தவிற வேறு நிகழ்ச்சிகளில் அவ்வளவாக நான் பங்கு கொண்டதில்லை. பேச்சுப் போட்டியில் பங்குகொண்டு எந்தப் பரிசும் பெறவில்லை. ஆனால் என் நண்பர்கள் – பி. கிருஷ்ணன் – குருராஜ உபாத்தியாயா ஆகியவர்கள் பேச்சுப் போட்டி – நாடகத்தில் நடிப்பு என்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதில் பல பரிசுகளும் தொடர்ந்து பெற்றார்கள். குருராஜ உபாத்தியாயாவின் குரல் ‘கணீர்’ என்று இருக்கும். அதற்கு ஏற்ற நாடகப் பாத்திரத்தில் அவர் நடிப்பதால் அவரது நடிப்பு பாராட்டைப் பெறும். அதே போல் கிருஷ்ணனின் குரல் இனிமையானது. ஆகையால் அவன் பெண் வேடத்தில் சோபிப்பார். நாங்கள் அடிக்கடி மெரினா பீச்சிற்குச் சென்று பேசுவது அடிக்கடி நிகழும். ராமச்சந்திரனின் வீட்டிற்கு முன்னால் நல்ல மணலான வெற்றிடம் – இடது புறம் பெரிய திண்ணை – முன்புரம் சிமிண்டாலான உட்காரச் செளகரியமான நீண்ட அகலமான தளம் – உயரமாக இருப்பதால் கால்களை நீட்டிக் கொண்டு உட்காருவதற்கு வசதியான தளம் – என்று இருப்பதால் அங்கும் நாங்கள் கூடிப் பேசுவது உண்டு. ராமச் சந்திரனை அப்பு என்று தான் அவர்கள் வீட்டில் அழைப்பார்கள். கிருஷ்ண்ணன் – உபாத்தியாயா – ரங்கன் ஆகிய மூவரும் படிப்பில் புலி. லக்ஷ்மணன் என்னைப் போல் சுமார் ரகம். அப்பு படிப்பிலாகட்டும், விளையாட்டிலாகட்டும் சோபிக்கவில்லை. அதுவே அவனது அப்பாவிற்கு கவலை. எங்களிடம் அடிக்கடி சொல்லி வருந்துவார். ஆனால் அப்புவோ – ‘அவருக்கு அவர் கவலை. எனக்கு என் மூளையில் பாடம் ஏறாத கவலை’ – என்று சொல்லி அதை ஒரு பொருட்டாகவே கொள்ளமாட்டான். ‘டே, ரத்னா கபேயிலே சூடா இட்டிலி – சாம்பார் – போண்டா சாப்பிடலாம்டா. வாங்கடா’ என்று எங்களைத் தூண்டி ஹோட்டலுக்குச் செல்லத் தூண்டுவான். எங்கள் நண்பர்களில் லக்ஷ்மணன் ஐயங்கார். நான் ஐயர். மற்ற நால்லவரும் ராவ். ‘ஹத்தி போலி, டப்பா நெய்’ என்று தன் ராவ் இனத்தையே கேலி செய்வான் அப்பு. அவனுக்கு எப்போதும் சாப்பாடு – சினிமா இரண்டும் தான் உயிர் மூச்சு. நான் அவனுடன் கல்லூரி முடிந்து வேலைக்குச் சேர்ந்த பிறகு பல தடவை – ஹோட்டல் – சினிமா – என்று சென்றிருக்கிறோம். ஒரு சமயம் மவுண்ட் ரோட் பெரிய எல்.ஐ.சி. கட்டிடத்தை ஒட்டிய தியேட்டரில் ஏதோ ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க அப்பு விரும்பி என்னை வற்புறுத்தினான். நான் என்னிடமிருந்த காசுகளை எண்ணிப் பார்த்தால் சில்லரை எல்லாம் சேர்த்து சரியாக இரண்டு டிக்கட்டிற்குத் தான் இருந்தது. அதுவும் சில்லரைக் காசுகளாக. கவுண்டரில் டிக்கட் கொடுப்பவர் எண்ணும் போது சரியாக இல்லை என்றால் டிக்கட் கிடைக்காது. சினிமாவும் பார்க்க முடியாது. ‘டே, அப்பு! வேண்டாம்டா .. கவுண்டரின் எண்ணும் போது சரியில்லை என்றால் கேவலம் டா’ என்று நான் தயங்கினேன். ‘இந்த சினிமா இன்று பார்க்காவிட்டால் அது தான் கேவலம் .. வாடா – நான் பார்த்துக்கறேன்’ என்று எனக்கு தைரியம் சொல்லி ஒரு வழியாக டிக்கட் பெற்றவுடன் அப்பு ‘பார்த்தாயா? அப்புவின் மகிமையை’ என்று தன் சட்டைக் காலரைத் தூக்கிப் பெருமைப்பட்டுக் கொண்டான். என்னையும் சேர்த்து ஆறு நண்பர்களில் இரண்டு பேர்களான அப்புவும், உபாத்தியாயாவும் மட்டும் தான் குடுமி வைத்துக் கொண்டிருந்தார்கள். குருராஜ உபாத்தியாய குடுமி வைத்திருப்பதை ஒரு பெருமையாகக் கருதுபவன். ஆனால் இந்தக் குடுமியை அப்பு வெறுத்தான். அவன் அப்பாவின் ஆசைக்காக வைத்துக் கொண்டிருந்தான். ஒரு சம்பவம் நடந்த பிறகு அப்புவின் அப்பாவே – அப்பு, உனக்குக் குடுமி வேண்டாம்டா, எடுத்துடு – என்று சொன்னதற்கு அப்புவோ – அப்பா, குடுமி இருக்கட்டும் – என்று சொன்னான். அந்த சம்பவம் தான் என்ன? நாங்கள் பள்ளியில் படிக்கும் போது கருப்புச் சட்டை திராவிடக் கழகத்தினரின் பாப்பான் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு, பிராமளாள் ஹோட்டல் என்ற போர்ட் தார் கொண்டு அழிப்பு – என்று மும்முறமாக இருந்த காலம் அது. பைக்கிராஸ் ரோடில் கோஷா ஆஸ்பத்திரிக்கு சமீபத்தில் பெல்ஸ் ரோடும் – பைக்ராஸ் ரோடும் சந்திக்கும் பகுதியில் பெல்ஸ் ரோடை நோக்கி ‘முரளி கபே’ அமைந்துள்ளது. அந்த ஹோட்டல் போர்டில் ‘முரளி பிராமணாள் கபே’ என்று இருந்ததாக ஞாபகம். அந்த போர்டில் உள்ள பிராமணாள் என்ற எழுத்தை தார் கொண்டு அழிக்க கருப்புச் சட்டை திரவிடக் கழகத்தினர் முயன்ற போது, அதை அந்தக் ஹோட்டல் முதலாளியான பிராமணர் துணிந்து எதிர்த்தார். இதைப் பொறுக்காத கருப்புச் சட்டைகள் அந்த ஹோட்டல் முன் தர்ணா செய்தார்கள். மக்களை அந்த ஹோட்டலைப் புறக்கணிக்கப் போராடினர். இது பல நாட்கள் நடந்தும், அந்த ஐயர் அசைந்து கொடுக்க வில்லை. ஹோட்டலின் வியாபாரமும் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை. ஏன்? நானே அந்த சிறுவயதில் இதற்காகவே அந்த ஹோட்டலுக்கு அப்போது சென்று ஒரு காப்பி சாப்பிட்டு அதன் மூலம் என் ஆதரவைத் தெரிவித்ததாக நானே என் முதுகைத் தண்டிக் கொண்டிருக்கிறேன். அந்த போராட்டம் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் நான், அப்பு, கிருஷ்ணன் மூவரும் முரளி கபேக்கு எதிரான ரோடில் மெரினா பீச்சை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். ஏதோ நாங்கள் சுவரஸ்யமாக ஏதோதோ பேசிக் கொண்டிருக்கும் போது, கருப்புச் சட்டையினர் மூன்று பேர்கள் எங்களை வழிமறித்து, ‘ஏ, பாப்பாரப் பசங்களா! குடுமையாடா குடுமி ..இந்தாடா குடுமி’ என்று இருவர் அப்புவின் தலையைப் பிடிக்க மூன்றாவன் அப்புவின் குடுமியை கத்தரித்து, ‘இந்தாடா உன் குடுமி’ என்று வெட்டிய அப்புவின் குடுமியை அவன் கைகளில் திணித்து, அந்த மூன்று நபர்களும் வெற்றி வீரர்கள் போல் ‘ஏய் ! பாப்பாரப்பசங்களா! … சாவுங்கடா !’ என்று சாபமிட்ட படி ‘பெரியார் வாள்க’ என்று கோஷம் எழிப்பி எங்களைக் கதிகலங்கச் செய்து விட்டனர். பாத சாரிகள் இதை வேடிக்கை தான் பார்த்தார்கள். உதவிகு ஒருவரும் வரவில்லை. அந்த அளவில் அப்போது கருப்புச் சட்டைகளின் அராஜகம் தெருவிலேயும், அக்கரஹாரத்திலேயும் கொடி கட்டிப் பறந்த நேரம். பயத்தால் நடுங்கியபடி நாங்கள் மூவரும் ஒரே ஓட்டமாக ஓடி, சிருங்கராச்சாரியார் தெருவிலிருக்கும் அப்புவின் வீட்டில் தான் நின்றோம். அப்புவின் அப்பா அப்போது வாசலில் இருந்தார். அப்புவின் இந்தக் கோலத்தையும், எங்களது பயத்தையும் பார்த்து ‘என்னடா, அப்பு ! என்ன நடந்ததடா?’ என்று கவலையோடு கேட்டவரிடம் நடந்ததை விவரித்தோம். ‘டே, அப்பு ! இனி உனக்கு குடுமி வேண்டாம்டா ! நாவிதக் கூலி மிச்சம் – லாபம் தான் நமக்கு’ என்று தமது கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். ஆனால், அப்புவோ ‘அப்பா ! குடுமி எனக்கு வேண்டும் .. நான் வைத்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன தன் மகனை அன்போடு அணைத்துக் கொண்டார். ‘அப்பு ! தர்ப்பையை நம்புகிறோம் .. கத்திரிக்கு ஈடாகாது தர்ப்பை .. வேண்டாம்டா உனக்கு குடுமி !’ என்று ஆணிதரமாகச் சொல்லவும் அப்புவும் குடுமிக்கு டாட்டா காண்பித்து விட்டான். அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் பத்திரிகையில் கருப்புச் சட்டையினருக்கு ‘பிராமணர்களின் பூணூல் – குடுமி ஆகியவைகளை அறுத்தவுடன் அதைப் பற்றிய விபரங்களைத் தெரிவிக்கவும்’ என்று சொல்லி, அதன் விவரங்களை விடுதலையில் பிரசுரிப்பதும் நடந்ததாகச் சொல்வர். பிராமண ஒழிப்பை ஒரு போராட்டமாக நடத்திய கருப்புச் சட்டைகளை அப்போது எந்தக் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை என்பது மிகவும் கவலை கொள்ளச் செய்யும் செய்தியாகும். ஒரு குட்டித் தகவல்: முரளி கபே பிராமண முதலாளி விடாப்பிடியாக ‘பிராமணாள்’ என்ற எழுத்தை போர்டிலிருந்து எடுக்க மறுக்கவும், கருப்புச் சட்டையினர் தொடர் போராட்டம் – தினமும் நான்கு ஐந்து பேர்கள் ஹோட்டல் வாசலில் பேனர்கள் முன் அமர்ந்து போராடி வந்தனர். இந்தத் தருணத்தில் முரளி கபே உரிமையாளர் காஞ்சிபுரம் சென்று மஹா பெரியவாளைத் தரிசிக்கச் சென்றுள்ளார். அப்போது மஹா பெரியவா ‘வேண்டாம் இந்த வீண் விவகாரம். பிராமணாள் எழுத்தை அழுத்துவிடு’ என்று உத்திரவிடவும், இந்தப் பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்தது. அத்தியாயம் 3 – என் முக்கிய ஹிந்து உயர்நிலப் பள்ளிக் கூட சிநேகிதர்கள் என் பள்ளி நண்பர்களில் முக்கியமான மூன்று பேர்கள் படிப்பில் படு சுட்டி. கிருஷ்ணன், ரங்கன், உபாத்யாயா என்ற மூவர் தான் அவர்கள். அதிலும் கிருஷ்ணனின் முன்னேற்றப் பாதை அவனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, திட்டமிட்டு செயல்படுதல் ஆகியவைகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைகிறது. ரங்கன் கணிதத்தில் புலி. அவனை ஒரு குட்டி ராமானுஜம் என்றே கணிக்கலாம். விவேகானந்தா கல்லூரியில் என்னுடன் இண்டர் படித்து, நான் பி.ஏ. கணிதம் சேர, ரங்கனோ அவனின் நல்ல மதிப்பெண்ணின் காரணத்தால் கணிதத்தில் பி.ஏ. (ஹானர்ஸ்) சேர்ந்து, பிறகு கணிதத்தில் பி.ஹெச்.டி. படித்துத் தேர்ந்து, பிறகு கணித ஆய்வாளராக சென்னை பல்கழகத்தின் கீழ் செயல்படும் ராமானுஜம் உயர் கணிதக் கழகத்தில் புரபசராகப் பணியாற்றி, அதன் மூலம் பல வெளிநாடுகளுக்கும் சென்று கணிதம் போதிப்பதும், கணிதம் சம்பந்தப்பட்ட கருந்தரங்குகள், ஆய்வுக் கூட்டங்கள் என்று தனது தனி திறமையால் முன்னேறியவன். பி பி உபாத்தியாயா விவேகானந்தா கல்லூரியில் பி.காம் சேர்ந்து, பிறகு சி.ஏ. படித்து பட்டம் பெற்று தனியாக ஒரு நிருவனத்தை ஆரம்பித்து, பல இடையூறுகளையும் தாண்டி, சிஏ வட்டாரத்தில் உபாத்தியாயா என்றால் மிகவும் சிஏ விதி முறைகளை நன்கு அறிந்து, நியாயமான முறையில் தமது வாடிக்கையாளர்களின் வருடாந்திரக் கணக்குகள் – வரி கட்டுதல், வரி விலக்கு பெற்று வாடிக்கையாளர்களுக்கு உதவும் திறன் என்று சிஏ வட்டாரத்தில் உபாத்தியாயா உயர்ந்து தமது பொருளாதார நிலையினையினையும் உயர்த்தி சென்னை மாம்பலத்தில் பங்களா – கார் – என்ற நிலையை அடந்தவன். ரங்கனாகட்டும், உபாத்தியா ஆகட்டும் உயர்ந்தாலும், பழைய நண்பர்களை மறக்காமல் தொடர்பில் இருந்தார்கள். உபாத்தியாயாவின் மைலாப்பூர் ஆபீஸ் புதிதாகத் தொடங்கப்பட்டதற்கு, நான் ஸ்டேட் பாங்கில் சென்னை தலைமை அலுவகத்தில் பழைய ஆனால் நன்றாக உள்ள பல நாற்காலிகள், சேர்கள், பெஞ்சுகள் என்று ஏலம் போட்டதை ஏலத்தில் எடுத்து உபாத்தியாயாவின் ஆபீஸிற்கு உதவினேன். அப்போது உபாத்தியாயா ரொம்பவும் மகிழ்ந்தார். அதே போல் ரங்கனின் ஒரு பையனின் வெளிநாட்டுக் கல்விக்காக சொத்து மதிப்புச் சான்றிதழ் பெற மிகவும் கஷ்டப்பட்டிருக்கும் போது, நான் சென்னை வட்டார அலுவலகத்தில் ஆபீசராக இருப்பதை அறிந்து என்னை என் ஆபீசில் வந்து சந்தித்து தன் கஷ்டத்தை வெளியிடவும், நானும் தைரியமாக ரங்கனுக்கு அந்தச் சான்றிதழ் அளித்தேன். அதைப் பற்றி ரங்கன் பல முறை பெருமையாக என்னிடமும், அவன் பையனிடமும் சொல்லி மகிழ்வான். இந்தத் தருணத்தில் கிருஷ்ணனின் வாழ்க்கையில் முன்னேறிய விதம் மிகவும் அற்புதமானது. அதை அடைய அவன் பட்ட உழைப்பு, தளாரா தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகியவைகளைப் பற்றி விளக்கமாகச் சொல்ல வேண்டும். நானும் திருச்செந்தூரிலிருந்து சென்னை வந்து ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்புச் சேரும் அதே மாதிரி, பி. கிருஷ்ணனும் பாப்பாரப்பட்டி என்ற கிராமத்திலிருந்து அவனது அண்ணா பி. நாகராஜன் – ஆர்ட் டைரக்டர் – கலைமாமணி விருதுபெற்றவர் – சென்னையில் வசிக்க, அதன் காரணமாக திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தான். என் அண்ணாவும் சேப்பாக்கம் சென்னை அரசு சர்வே ஆபீசில் வேலையில் இருந்ததால், நானும் சென்னை வந்து படிக்கலானேன். எஸ். எஸ். எல். சி. முடிந்து நான் விவேகானந்தா கல்லூரியில் சேர, கிருஷ்ணன் கல்லூரியில் சேருவதற்கு பண வசதி இல்லாததால் – அவனது அண்ணா நாகராஜனின் அப்போதையை நிதி நிலைமை இடம் கொடுக்காததால் – கிருஷ்ணன் கல்லூரியில் சேரவில்லை. அப்பு கூட கல்லூரியில் சேர்ந்து விட்டான். எங்கள் நண்பர்களில் கிருஷ்ணன் ஒருவன் தான் கால்லூரியில் சேரவில்லை. இது கிருஷ்ணனை வெகுவாகப் பாதித்தது. வாழ்வே இருண்டு விட்டது போல் ஒரு மன நிம்மதி அற்ற நிலை – இனி என்ன செய்யப்போகிறோம்? என்பதற்கு விடை காணமுடியாத குழப்பச் சூழ்நிலை ஆகிய குழப்பத்தால் அவதிப் பட்டு பாப்பாரப்பட்டிக்கு சென்னையிலிருந்து சென்று விட்டான் கிருஷ்ணன். அந்தச் சூழலில் அவனது உறவுக்காரர் ஒருவர் ‘கிருஷ்ணா ! நீ கல்லூரியில் சேர்ந்து படிக்காவிடினும், நீ கல்லூரிப் பட்டம் பெற வழி இருக்கிறது. அதற்கு நீ ஆசிரியர் பயிற்சி பெற்று, ஆசிரியராக ஆகவேண்டும். சென்னைக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்லூரியில் சேராமல், பரிட்சை எழுதி, பட்டம் பெறலாம். ஆகையால் இந்தப் பாதையைத் தான் நீ தேர்வு செய்து, உன் சோர்வையும் – மனக் குழப்பத்திற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்து, நீயும் உன் மற்ற நண்பர்களைப் போல் பட்டதாரி ஆகி தலை நிமிர்ந்து நிற்கலாம்’ என்ற அறிவுரை அந்த பரந்தாமன் கிருஷ்ணனே நேரில் வந்து உபதேசித்தமாதிரி கிருஷ்ணன் உணர்ந்தான். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்ச்சிக் கல்லூரியில் படித்து, பிறகு ஆசிரியராக தான் படித்த அதே ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தான். தான் ஆசிரியராகச் சேர்ந்த நோக்கத்தை ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டு, ஆங்கில இலக்கியத்தில் பிஏ பட்டம் பெற்று, அதே ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் மிகவும் பணக்காரக் குழந்தைகள் படிக்கும் ஆங்கில வழிக்கல்வி வகுப்பிற்கு ஆசிரியராகப் பணி புரிந்தான். அந்தப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கற்க 1-வது வகிப்பிலிருந்து 11-வது வகுப்பு வரை ஒரே வகுப்பு தான் இருக்கும். இதுவே ஆங்கில வகுப்பு ஆசிரயராகப் பணிபுரிய கிருஷ்ணனுக்குக் கிடைத்த வாய்ப்பை கிருஷ்ணனின் கல்வி கற்பிக்கும் திறனுக்கு பள்ளியில் அங்கீகரமாகவே கொள்ள வேண்டும். ஆனால் கிருஷ்ணன் இதோடு திருப்திப் படவில்லை. மேற்கொண்டு சிஏ படிக்க விரும்பினான். அதற்கு பிபி குருராஜ உபாத்தியாயா தான் குரு. உபாத்தியாயாவும் கிருஷ்ணனை தமது ஆபீசில் அப்ரண்டிசாகச் சேர்த்து, உதவினான். டியூஷன் சொல்லிக் கொடுத்து அதன் வருமானமும் உதவியாக இருந்துள்ளது கிருஷ்ணனுக்கு. ஒரு சைக்கிலில் வீடு வீடாக டியூஷன் சொல்லிக் கொடுத்து உழைத்தவன் கிருஷ்ணன். அந்த உழைப்பினால், சிஏ பாஸ் செய்தான். அப்போது சென்ரல் பாங்க அப் இந்தியாவில் பம்பாய் தலைமை அலுவலகத்தில் வருடாந்திர கணக்குகளைச் சரிபார்க்கும் மிக முக்கியமான பதவியில் ஆபீசராகத் தேர்வானான். கிருஷ்ணன் அந்த வங்கியில் தேர்வாக நடைபெற்ற நேர்முகத் தேர்வு பற்றி என்னிடம் மிகவும் விளக்கமாகச் சொன்னது இன்னமும் என் நினைவில் உள்ளது. கிருஷ்ணன் பல வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தவன். பாடம் எடுத்துப் போதிக்கும் அனுபவம் உண்டு. ஆகையால், அவனைக் கேள்வி கேட்ட அந்த வங்கி அதிகாரிகள், கிருஷ்ணன் வெகு வேகமாகவும், தெளிவாகவும், விளக்கமாகவும் சொன்னவுடன், “கிருஷ்ணன் ! எங்களால் நீங்கள் வேகமாகச் சொல்லும் விளக்கங்களைப் புரிந்து கொள்ளச் சற்றுச் சிரமமாக இருக்கிறது. ஆகையால் தயவு செய்து நீங்கள் கொஞ்சம் நிதானமாகவே சொல்ல வேண்டுகிறோம்’ என்று சொன்னதாக கிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தான். இதிலிருந்து கிருஷ்ணனின் திறமை வெளிப்படுகிறது. கிருஷ்ணன் அந்த தேர்வில் வெற்றி அடைந்தான் என்று சொல்லத் தேவை இல்லை. அத்துடன் கிருஷ்ணனின் வங்கி வாழ்க்கை நின்று விடவில்லை. பிறகு ஜெர்மன் வங்கியான டாயிஸ்ட் பாங்கில் ஒரு உயர் அதிகாரியாக தேர்வானான். அங்கு நேர்மையாகப் பணியாற்றப் பல சிக்கல்கள் இருப்பதை பல ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்து அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்றான். பம்பாய் சாண்டா க்ருஸ் பகுதியில் சொந்த வீடு. அதில் தான் கிருஷ்ணன் இப்போது ஜாகை. ஷேர் மார்க்கட்டிங்கில் முதலீடு செய்வதை ஒரு பொழுது போக்காகச் செய்து கொண்டிருக்கிறான். இப்போதும் கிருஷ்ணனுடன் தொடர்பில் இருக்கிறேன். கிருஷ்ணனின் திறமை – வலிமை – எளிமை ஆகிய முப்பரிமாணங்களை முழுவதும் அறிய அவனை நான் நேரில் பேட்டி கண்டு எடுத்த கட்டுரையைப் படித்தால் தெரியும். அந்தக் கட்டுரையை அடுத்த இதழில் பிரசுரிக்க விழைகிறேன். அத்தியாயம் 4 – என் அருமை நண்பன் பி. கிருஷ்ணனின் பேட்டி சிறு குறிப்பு: “கிருஷ்ணனின் திறமை – வலிமை – எளிமை ஆகிய முப்பரிமாணங்களை முழுவதும் அறிய அவனை நான் நேரில் பேட்டி கண்டு எடுத்த கட்டுரையைப் படித்தால் தெரியும். அந்தக் கட்டுரையை அடுத்த இதழில் பிரசுரிக்க விழைகிறேன்.” என்று சென்ற வாய்மை இதழில் எழுதி இருந்தேன். அந்தப் பேட்டிக் கட்டுரை – சமீபத்தில் எழுதியது – வாய்மையிலும் ஏற்கெனவே பிரசுரமானது – இங்கே மீண்டும் உங்கள் பார்வைக்கு பிரசுரமாகிறது. அந்தப் பேட்டி ஏப்ரல் மாதம் – 2017 அன்று எனது பெங்களூர் வீட்டில் நடைபெற்றது.  ஆசிரியர். முன்னுரை: வாழ்கையில் எதிர்படும் தடைக் கற்களை தவிடு பொடியாக்கி முன்னோருவோர் அதிரடி வீரர்கள். அதே தடைக் கற்களை படிக்கட்டுகளாக்கி அதையே அடித்தளமாக்கி வெற்றி காண்போர் அஹிம்சா வீரர்கள். முந்தையதில் வீரமும் தீரமும் வெளிப்பட்டால், பிந்தையதில் பொறுமையும், திறமையும் ஒளிர்விடும். இரண்டும் வெற்றிக்கு வித்திடும் உத்திகள் தான். முந்தியதில் கோபமும் பழிவாங்கும் எண்ணமும் மேலோங்கி இருக்கும். ஆனால், பிந்தையதில் வெறுப்பும், வேதனையும் மேலோங்கி, மற்றவர்களின் அறியாமையை நினைத்து - அடிபணிய வைத்து வெற்றிக் கொடி நாட்டுவார்கள். எனது இன்னுயிர் நண்பன் பி. கிருஷ்ணன் தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கி முன்னேறிய வெற்றி அஹிம்சா வீர்ர். அவரது வாழ்க்கைச் சித்திரம் இதைப் பிரதிபலிக்கும் என்று நினைக்கிறேன். இப்பொழுதெல்லாம் நமது பள்ளித் தோழர்களைப் பார்த்து உரையாடுவது மிகவும் அரிதாக விட்டது. அதிலும் மிகவும் அன்னோன்னியமாக குடும்ப நண்பரைப் போல் பழகிய சில பள்ளித் தோழர்களுடன் தொடர்பு கொள்வதும் அரிதாகி விட்டது. தொலை தொடர்பு சாதனங்கள் பல உள்ள இந்த நிலையிலும், ஏன் பள்ளித் தோழர்களைத் தொடர்பு கொண்டு உரையாடுவது, மனம் விட்டுப் பேசுவது குறைந்துள்ளது? என்பதின் காரணத்தையும் சரியாகக் கணிக்க முடியவில்லை. என் பள்ளித் தோழர் பி.கிருஷ்ணன் மிகவும் சிரமப்பட்டு என் இ-மெயிலை அறிந்து, என்னைத் தொடர்பு கொண்டு, அவரும் அவரது மனைவியும் என்னை என் பெங்களூர் இல்லம் வந்து, நாங்கள் இருவரும் உரையாடினோம். அப்போது வாய்மை இதழுக்காக பி.கிருஷ்ணனின் வாழ்க்கைச் சம்பவங்கள் பற்றிக் கேட்டேன். பி.கிருஷ்ணன் அவரது சொந்த உழைப்பால், எஸ்.எஸ்.எல்.சி. படித்து, காலேஜ் சேராமல் இருந்த குறையை நிவர்த்தி செய்ய, ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்து 8 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து, பிறகு பி.ஏ. (ஆங்கிலம்) படித்து (அப்பொழுதெல்லாம் ஆசிரியர்களுக்கு மட்டும் தான் தனியாக கல்லூரியில் சேராமல் பரிட்சை எழுதி, தேர்வாக முடியும்) பட்டம் பெற்று, அத்துடன் நில்லாமல் 4 ஆண்டுகாலம் ஆடிட்டர் கீழே பயிற்சி பெற்று கடினமான சி.ஏ. பரிட்சை பாஸாகி, யுனியன் வங்கியில் நேரடியாக ஆபீசர் பதவி பெற்று, அங்கிருந்து ஜெர்மன் டாயுஷ் பாங்கில் மிக உயர்ந்த பதவியை அடைந்து, வாழ்க்கைப் போராட்டத்தில் ஹிமாலய வெற்றி கண்டவர். அவர் நடந்து வந்த பாதையைப் பற்றிய குறிப்பு மிகவும் பலனுள்ளதாகவும், சுவையாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். - ஆசிரியர். ஆசிரியர்: கிருஷ்ணன்! நீங்கள் பிறந்து வளர்ந்த பாப்பாரப்பட்டியைப் பற்றிச் சொல்லுங்கள். கிருஷ்ணன்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மபுரி அருகில் பாப்பாரப்பட்டி ஒரு கிராமம். அங்கு எலிமெண்டரி ஸ்கூல், ஹையர் எலிமெண்டரி ஸ்கூல் உண்டு. என் தந்தை பிந்துமாதவாச்சார் அந்த வட்டாரத்தின் மதிப்பைப் பெற்ற பாண்டித்யம் பெற்ற ‘வேதமூர்த்தி’ என்ற விருது பெற்ற மிக நேர்மையான ஒரு புரோகிதர். பண ஆசை இல்லாமல் சேவை செய்பவர். என்னைச் சேர்த்து நாங்கள் 4 சகோதரர்கள், 2 சகோதரிகள். பெரிய குடும்பம். எங்களில் மூத்தவர் தான் பிற்காலத்தில் பிரபலமான சினி ஆர்ட் டைரக்டர் கலைமாமணி பி.நாகராஜன் ஆவார். என் அம்மாவின் பூர்விகம் நிலபுலன்கள் உள்ள லெளகீக குடும்பம். இருப்பினும் அப்பாவை - அவர் ஒரு அர்ச்சகராக இருந்தாலும், மணம் செய்து கொண்டார். என்றாலும், தன் பிறந்த வீட்டிலுள்ளவர்களைப் போல் தன் குழந்தைகளையும் நன்கு வளர்க்க வேண்டும் என்று வெகு ஆவலாகவும், அதற்காகப் பிரயாசையும் பட்டார்கள். நாங்கள் குடியிருந்த வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அந்த வீட்டில் திண்ணை உண்டு. அங்கு தான் அப்பா பஞ்சாங்கள் சகிதம் உட்கார்ந்து இருப்பார். பலர் ஜாதகம் பார்ப்பது, நல்ல நாட்கள் பார்ப்பது என்று அப்பாவிடம் வந்து திண்ணையில் கூடுவார்கள். அந்த நாளில் பாப்பாரப்பட்டியில் தீண்டாமை மிகவும் கடுமையாக அனுசரிக்கப்பட்டது. ஹரிஜனங்கள் அக்ரஹாரம் வர அனுமதி இல்லை. பாப்பாரப்பட்டியில் தான் சுப்பிரமணிய சிவா ஆச்சிரமம் நடத்தி, அந்த தீண்டாமையை ஓரளவுக்கு ஒழிக்க முயன்றார், எனக்கு ஒரு சம்பவம் நன்கு ஞாபகம் இருக்கிறது. மாணிக்கம் என்ற ஹரிஜன் என் கூடப்படிக்கும் மாணவன். சுதந்திரம் அடைந்த நாளான ஆகஸ்ட் 15, 1947 அன்று நானும் என் நண்பர்களும் சுப்பிரமணிய சிவா ஆச்சிரமம் சென்று சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோம். அந்த ஆச்சிரமத்தில் தீண்டாமையை ஒழிக்க அனைவரும் சமம் என்ற சகோதர உறவுதான் அங்கு அனுசரிக்கப்பட்டது. எனக்குத் தீண்டாமையின் விளைவு பற்றி எல்லாம் தெரியாது. மாணிக்கம் என் நண்பன். ஆகையால், நான் மாணிக்கம் தோளில் கையைப் போட்டுக் கொண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் முடிந்ததும், அங்கு கொடுத்த சுண்டலைச் சாப்பிட்ட வண்ணம் தெருவிலே நடந்து சென்றதை என் உறவினர் ஒருவர் பார்த்து விட்டு, ‘என்ன அபச்சாரம்? பெரிய புரோகிதர் மகனே தீண்டத் தகாதவனின் தோளில் கை போட்டு நடக்கிறானே?’ என்று சொல்லிக் கொண்டே என் வீட்டில் இந்த சம்பவத்தைச் சொல்லி விட்டார், சுண்டல் கதையையும் சேர்த்து. நான் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்த என் அம்மா, ‘கிட்டா, நில். என்ன காரியம் செய்து விட்டாய்? பிராயச் சித்தம் செய்ய வேண்டும்’ என்று சொல்லிய படியே ஒரு குடம் தண்ணீரை என் தலையில் விட்டு குளிப்பாட்டி தீட்டு கழித்த பிறகு தான் என்னை வீட்டிற்குள் நுழைய விட்டார்கள். ஆசார குடும்பத்தில் பிறந்தாலும், அப்போதே எனக்கு ஏனோ உடன் பாடு இல்லை. ஆகையால் ஆசார - அனுஷ்டானங்களை அபரிமிதமாகக் கடைப்பிடிப்பவர்களைக் கண்டால் எனக்கு உடன்பாடு இல்லை. என் அண்ணா - தம்பிகள் மிகவும் பக்தி சிரத்தையாக கோபி போன்ற மத்வாச்சார்ய சின்னங்களை அணிந்த போதிலும், நான் அவைகளை மதித்தாலும், தினமும் அணிவதில்லை. ஆசிரியர்: இந்த உங்கள் சின்னங்கள் அணியாத போக்கினால் உங்கள் அப்பா மனம் வருந்தி இருப்பார் இல்லையா? கிருஷ்ணன்: அப்பா வருந்தி இருப்பாரோ இல்லையோ, அவர் என்னை ஒரு போதும் இதற்காகக் கோபித்ததில்லை. கடவுள் பக்தி எனக்கு உண்டு. சிறுவயதில் புரந்தர தாசர் கீர்த்தனைகள் பாடுவதில் அலாதியான பற்று. ‘பஜனை கிட்டா’ என்ற பெயரும் எனக்கு உண்டு. ஆனால், ஆசார அனுஷ்டானங்களை நான் கடைப்பிடிப்பதில்லை. எனது 13-வது வயதில் திடீரென்று, என் அம்மாவை இழந்தேன். ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்த நாங்கள் ஒவ்வொருவராக எங்கள் உறவினர்கள் வீட்டில் வசிக்கச் செல்ல வேண்டிய நிலை உண்டாயிற்று. ‘அப்பா கடவுளையே கதி என்று பூஜை செய்து, வழிபடும் போது, ஏன், அந்தக் கடவுள் இந்தக் கஷ்டங்களைக் கொடுக்கிறார்?’ என்று என் மனம் நிலை தடுமாறும். அப்பாவிடமே, நான் ஒரு நாள் கேட்டேன். ‘அப்பா, நீங்கள் கடவுளை மனதார வழிபடுகிறீர்கள்? ஏன், அவர் உங்களை இப்படி கஷ்டப்படுத்துகிறார்? அம்மாவை இழந்தோம். ஒன்றாக இருந்தவர்கள் பிரிந்தோம்? கடவுள் நம்பிக்கையையே போய்விடும் அளவு ஏன் இந்த நிலை?’ அதற்கு என் அப்பா மிகவும் மென்மையாக ஆனால் திடமாக விளக்குவார்: ‘கிட்டா, கடவுளை முழுசாக நம்பவேண்டும். நான் கடவுளுக்கு அர்ச்சிக்கும் ஒவ்வொரு பூவும் பொன்னாகும். அந்தப் பொன் பூக்களெல்லாம் உங்கள் அனைவருக்கும் தான்! ஆனால் அதற்கு பொறுமை வேண்டும். ஆகையால், பொறு, பொன் பூக்கும் உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு நாள்!’ இப்போது அதை நினைத்துப் பார்க்கிறேன். என் அப்பாவின் குழந்தைகள் அனைவரும் அவர் அர்ச்சித்த பூக்களின் பலன்களை பொன் பூக்களாகப் பெற்றார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டோம். அப்பாவின் பூஜாபலத்தினால் தான் - அவரது ஆசார பக்தியினால் தான், நாங்கள் அனைவரும் நல்ல பதவி - சொத்து - குழந்தைப் பேறு பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆசிரியர்: உங்களைக் கவர்ந்த நபர்கள் யார்? கிருஷ்ணன்: என் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாதவர்கள் இரண்டு பேர்கள். ஒன்று என் பாப்பாரப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பாராவ். மற்றொருவர்: காசி விஸ்வநாதன் என்ற சென்னைத் தொழில் அதிபர். அத்துடன் இந்த இருவரின் இறப்பும் என்னை மிகவும் கலக்கியது. காசி விஸ்வநாதன் இறந்த பொழுது அவருக்கு நான் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடிந்தது. ஆனால், என்னைக் கவர்ந்த என் ஆசிரியர் சுப்பாராவைப் பற்றிக் கேட்கும் போது, ‘அவர் இப்போது இல்லை. இறந்து விட்டார்’ என்ற செய்தியைக் கேள்வி உற்றதும், என் மனம் தீராக் கவலையில் ஆழ்ந்தது. இது ஒருபுரம் இருக்கட்டும். இப்போது சுப்பாராவைப் பற்றிக் கூறுகிறேன். காசி விஸ்வநாதன் அவர்களைப் பற்றி பிறகு கூறுகிறேன். சுப்பாராவ், ஆசிரியர் தொழிலை தமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே நினைத்து, ஓயாது மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். அவர் ஒரு பிரம்மசாரி. தாம் அணிந்திருந்த பூணூலையே அவிழ்த்து ‘எக்குலமும் சமம்’ என்ற சிந்தனையை உடைய உத்தமர். தமது சொற்ப சம்பாத்தியத்தையும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதில் செலவிடுவார். அவர் எம்.எல்.ஏ.வாகக் கூட தேர்தலில் நின்றார். ஒருவரின் குணத்தையோ, குலத்தையோ, சேவை மனப்பான்மையோ பார்க்காமல் ஓட்டுப் போடுவதால், அவர் தோற்றதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இருப்பினும், தொடர்ந்து தொண்டு செய்து, பலவிதமான முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது முயற்சியால் உயர்நிலைப் பள்ளியும் வந்தது. அவர் ஒரு பெரிய தியாகி. வள்ளுவர் வாக்குப்படி அவர் தான் உண்மையாகவே ஒரு அந்தணர். ஆசிரியர்: பாப்பாரப்பட்டியில் 8-ம் வகுப்பு படித்து முடித்தவுடன் மேற்கொண்டு படிக்க சென்னை சென்றீர்கள். அதனைப் பற்றிச் சொல்லவும். கிருஷ்ணன்: கிராமத்தில் சுதந்திரமாக இருந்த நான் சென்னை ஒண்டுக் குடித்தன வாழ்க்கை முதலில் பிடிக்காவிட்டாலும், மேற்கொண்டு படிக்க சென்னை தான் மிகவும் சரியான இடம் என்பதால் நான் கூடிய சீக்கிரமே என்னை அதற்கு தயாராக்கிக் கொண்டேன். என்னுடன் சென்னை வந்த என் அண்ணியும் ஆதரவாக இருந்தார். அங்குள்ள திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேரவேண்டும் என்ற விருப்பம். ஆனால், அந்த சென்னையில் பிறந்து வளர்ந்து அங்கு படிக்கும் உறவினர், ‘நீ ஒரு பக்கா கிராமத்தான். உனக்கு ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் இடம் கிடைக்காது. ஆகையால், வேறு பள்ளியில் முயற்சி செய்’ என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால், எனக்கு ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் இடம் கிடைத்தது மாத்திரம் அல்லாமல், அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்றுப் பரிசுகளும் பெற்றேன். பள்ளி நாடகங்களிலும் நடித்துப் பாராட்டப்பட்டேன். அதே ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் எட்டு வருடங்கள் பணி ஆற்றினேன். அவைகளைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். ஆசிரியர்: உயர் நிலைப் பள்ளிக்குப் பிறகு நீங்கள் மீண்டும் பாப்பாரப்பட்டிக்குச் சென்றீர்கள். அதன் பின்னணியின் சம்பவங்களை விளக்கவும். கிருஷ்ணன்: என் அண்ணாவின் சம்பாத்தியத்தில் என்னை கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்கும் நிலை இல்லை. ஆகையால், அவர் என்னை பாப்பாரப்பட்டிக்கே செல்லும் படிச் சொல்லி விட்டார். என் கூடப்படித்த பலரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் நானோ பாப்பாரப்பட்டியில் தள்ளப்பட்டேன். இது என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பெரிய இடியாக கருதி, மிகவும் துக்கப்பட்டேன். ஆனால் இதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். நான் ஹிந்துப் பத்திரிகை, ஆங்கில நூல்கள், ஆங்கில அகராதி ஆகியவைகளை எடுத்துக் கொண்டு, நிழலான மரங்கள் நிரம்பிய தொலைதூர இடத்திற்குச் சென்று, வெறிகொண்டவன் போல் உரக்கப் படிப்பேன். அதன் மூலம் கல்லூரிக்குச் சென்று படிக்கும் என் நண்பர்களைக் காட்டிலும், அதிகம் நான் கற்றேன் என்ற மன நிம்மதி எனக்கு ஒரு பலத்தை அளித்தது. இருப்பினும் இது ஒரு முடிவாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். ஆனால் அதற்கு விடிவு கிடைக்கும் வழி தெரியாமல் மனம் சஞ்சலமடைந்தேன். ஒரு நாள் என் கவலைகளை அறிந்த என் உறவுக்கார ஆசிரியர் என்னைப் பற்றி என்னிடம் விசாரித்தார். ‘நான் கல்லூரிப் பட்டம் பெற முடியவில்லையே?’ என்று சொல்லி கண்ணீர் விட்டேன். அதற்கு அவர், ‘நீ ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்’ என்று அறிவுரை சொல்லவும், நான் முதலில் மறுத்தேன். அதற்கு அவர், ‘அதில் இப்போது ஸ்டைபண்ட் உண்டு. இரண்டு வருடங்கள் தான் பயிற்சி. பிறகு ஆசிரியரான உடன் கல்லூரியில் சேராமலே பரிட்சை எழுதி, கல்லூரிப் பட்டம் பெற்று விடலாம். இந்த வழி வேறு எந்த தொழிலுக்கும் கிடையாது. உடனே நீ அதற்கு விண்ணப்பம் செய்’ என்று விளக்கிய உடன், நான் அதற்கு முயன்றேன். நான் எஸ்.எஸ்.எல்.சி.யில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறி இருந்தேன். ஆனால், நான் மேல் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால், நிராகரிக்கப்பட்டேன். அப்போது என்ன செய்வதென்று எனக்குத் தெரிய வில்லை. சென்னை எழும்பூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்த, சுந்தர வரதன் என்ற தலைமை ஆசிரியரைப் பார்க்கச் சென்றேன். அவர் ‘என்ன வேண்டும்?’ என்று கேட்கவும், ‘நான் உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதால், நல்ல மார்க்குகள் இருந்தாலும், எனக்கு ஆசிரியர் பயிற்சியில் இடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்’ என்றேன். ‘ஏன் ஆசிரியர் பயிற்சி. வேறு வேலைக்குச் செல்வது தானே?’ என்று கேட்கவும், நான் என் எதிர்காலக் குறிகோளை எடுத்து உரைத்தேன். அவருக்கு என்ன தோன்றியதோ? ‘அப்படியா? நாளைக்கு என்னை வந்து பாரு. எனக்கு ஒரு சீட்டு கொடுக்க அதிகாரம் உண்டு. அதை உனக்குக் கொடுக்க சீபாரிசு செய்கிறேன்’ என்று அபய கரம் கொடுத்தார். அவரது நம்பிக்கையை நிராசையாக்காமல், நான் அந்த ஆசிரியர் பயிற்சியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். ‘பார், உன் பெயர் இதோ முதல் வரிசையில் முதல் மாணவராக பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்!’ என்று அதே சுந்தர வரதன் என்னைத் தட்டிக் கொடுத்தார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின். இதற்கு முன் ஒன்றை நான் சொல்ல வேண்டும். ஆசிரியர் பயிற்சி தேர்ந்த உடன் எனக்கு வேலை கிடைக்க வேண்டும். அதற்காக, நான் படித்த ஹிந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான டி.பி.சீனிவாசவரதன் அவர்களை சந்தித்துப் பேசினேன். ‘நான் ஆசிரியர் பயிற்சி முடிந்ததும், உங்கள் பள்ளியில் எனக்கு வேலை கொடுத்தே ஆக வேண்டும்’ என்று வற்புறுத்தினேன். இந்த என் துணிச்சலைப் பார்த்த தலைமை ஆசிரியர், ‘நல்ல கிரேடுடன் தேர்வானால், உனக்கு வேலை நிச்சயம்’ என்று வாக்குக் கொடுத்திருந்தார். ஆகையால், ஆசிரியர் பயிற்சியில் தேர்வானதும், எனக்கு ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் வேலை உடனே கிடைத்தது. ஆனால் என் லட்சியமான கல்லூரிப் பட்டம் மனத்தின் ஆழத்தில் பதிந்து, துளிர் விட்டுக் கொண்டே இருந்தது. அதற்கு என் நண்பர்கள் ராகவேந்திர ராவ், டாக்டர் ரங்கன் ஆகியவர்கள் உதவி இருக்கிறார்கள். எனது விடா முயற்சியால், நான் ஹிந்தியில் விசாரத் பி.யு.சி மற்றும் பி.ஏ. பட்டம் பெற முடிந்தது. இந்த சமயத்தில் என் அத்தை மளின் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. ஆனால் அத்தையோ ‘வாத்தியார் வேலை செய்யும் பையனுக்குப் பெண் கொடுக்க மாட்டேன்’ என்று முடிவெடுத்த செய்தி, என் காதுகளுக்கு எட்டியது. ஆனால், அந்தப் பெண் என்னையே விரும்பியதாகத் தெரிந்தது. இதுவும் நன்மைக்கே என்று நினைத்து, ‘என்ஜினியருக்கும் மேலான படிப்புப் படித்துக் காட்டுகிறேன்’ என்று நான் உறுதி பூண்டேன். அதற்காக நான் என் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தேன். என் பள்ளி நெருங்கிய நண்பன் குருராஜ்உபாத்தியாயா சி.ஏ. படிப்பு முடித்து விட்டு, அவர் பேரில் சொந்த ஆடிட் கம்பனி ஆரம்பித்து பிரபலமாக ப்ரேக்டிஸ் செய்து கொண்டிருந்தார். அவருக்குக் கீழ் பயிற்சி பெற ஆரம்பித்தேன். உற்சாகமாகிவிட்டது. ஆனால், செலவுக்குச் சிறிது பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகையால், டியூஷன் எடுத்து அதைச் சமாளிக்கலாம் என்று நினத்த போது, ஒரு விளம்பரம் கண்ணில் பட, அந்த பங்களாவிற்குச் சென்றேன். அந்த பங்களாவின் எஜமானர் தான் முன்பு நான் குறிப்பிட்ட காசி விஸ்வநாதன் என்ற ஒரு தொழில் அதிபர். முயற்சியால் முன்னுக்கு வந்தவர். அதனால் பணத்துடன் பண்பும் பெற்றவர். ‘நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டவுன், நான், ‘நேற்றுவரை நான் ஒரு பள்ளி ஆசிரியர். ஆனால் இன்று வேலையை விட்டு, சி.ஏ.படிக்க துணிந்துள்ளேன்’ என்று சொன்னவுடன், அவர் அதைப் பற்றிக் கேட்டு, ‘சி.ஏ. படிப்பு கடினம் தான். ஆனால், நீங்கள் எடுத்த முடிவையும், உங்கள் ஆர்வத்தையும் பாராட்டுகிறேன். உங்களுக்கு மாதம் ஆகும் செலவையே டியூஷன் சம்பளமாகத் தருகிறேன். இங்குள்ள ஒரு அறையும் நீங்கள் படிப்பதற்காக எப்போது வேண்டுமானாலும், உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதைக் கேட்டவுடன் நான் மனம் நெகிந்து விட்டேன். இந்த தருவாகியில் நான் சி.ஏ. பயிற்சி நன்கு பெற்று முதல் பரிட்சையும் வெற்றி கரமாக முடிக்க, அத்தைக்கு என் மேல் நம்பிக்கை வர ஆரம்பித்தது. அதன் விளைவாக எனது இஷ்டப்படி விவாகமும் நடந்தேறியது. காசி விஸ்வநாதன் முயற்சியில் என் மனைவிக்கு பெங்களூரில் ஒரு வேலையும் கிடைத்தது. அவரது தொடர்ந்த முயற்சியால் சென்ட்ரல் வங்கி சென்னை கிளையில் ஒரு வேலையும் கிடைத்தது. அதன் பின் ஒரு அதிர்ச்சி. ஒரு நாள் திடீரென்று மாரடைப்பில் காசி விஸ்வநாதன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இந்த அவரது அன்பு தொடர்ந்து எனக்குக் கிட்டியது. ஆகையால் தான் அவரது பெயரை என் மகனுக்கு வைத்தேன். என் வீட்டில் உள்ளவர்கள் ‘மாத்துவர்களான நாம் காசி விஸ்வநாதன் என்ற சைவப் பெயரை வைப்பது நம் மதத்தையே அவமதிப்பதாகும்’ என்ற வாதத்தையும் மீறி - என் மனைவியின் ஆதரவும், துணையும் இருப்பதால், காசி விஸ்வநாதன் என்ற பெயரையே சூட்டினேன். எனது வெற்றியின் ரகஸ்யம் நான் நேரத்தை ஒரு போதும் வீணடித்ததில்லை என்பதில் தான் இருக்கிறது. எப்போதும் படிப்பு - அது பஸ்சுக்காக காந்திருக்கும் போதும் அந்த நேரத்திலும் அங்குள்ள விளக்கு வெளிச்சத்தில் படிப்பேன். பாரீஸ் ஹைகோர்ட் பெஞ்சியில் - அழுக்கும், பசையும் ஆங்காங்கே இருக்கும் பெஞ்சியில் - அவைகளை எல்லாம் லட்சியம் செய்யாமல் சுற்றுப் புறத்தை மறந்து, அங்குள்ள சப்தங்களை புறம்தள்ளி படித்திருக்கிறேன். ஆசிரியர்: சி.ஏ. படிப்பு முடிந்தவுடன் யுனியன் பாங்க் நேரடியான புரபேஷனரி ஆபீசர் வேலைக்குச் சேர்ந்ததைப் பற்றிச் சொல்லவும். கிருஷ்ணன்: யுனியன் பாங்கில் யூனியன் பிரச்சனையால் நேரடியான புரபேஷனரி ஆபீசராகத் தேர்வானாலும், வேலையில் சேர்வது என்பது மிகவும் சிரமம் என்பது பிறகு தான் எனக்குத் தெரிய வந்தது. சென்னையில் இண்டர்வூக்குப் பிறகு, நான் பங்களூருக்கு வேலையில் சேர அனுப்பப் பட்டேன். ஆனால், நான் கன்னடிகன் இல்லை என்று நினைத்து, அதை உறுதி செய்ய யூனியன் ஆட்கள் என் பங்களூர் இல்லம் வந்தார்கள். ஆனால், அங்கு நான் கன்னடம் பேசும் பாட்டிகள், பெண்டுகள் ஆகியவர்களுடன் இருப்பதைப் பார்த்து, ‘நீங்கள் கன்னடிகரா? தமிழில்லையா?’ என்று கேட்டு, அங்கிருந்து சென்று விட்டார்கள். இருப்பினும், ஏதோ காரணத்தால், எனக்குக் கொடுக்க வேண்டிய பதவியை வேறு ஒருவரிடம் அளித்ததால், என்னை உடனே சென்னைக்கு ஆகாய விமானம் மூலம் செல்ல உத்திரவானது. அது தான் நான் சென்ற முதல் ஆகாய விமானப் பயணம். இங்கும் யூனியன் என் வழியில் குறுக்கே வந்தது. ‘நீங்கள் தமிழரா? கன்னடிகரா?’ என்று கேட்டவுடன், ‘நான் தமிழன் தான். உங்களுக்கு இலக்கியத் தமிழன் வேண்டுமா? மேடைத் தமிழன் வேண்டுமா? நாடகத் தமிழன் வேண்டுமா? சினிமாத் தமிழன் வேண்டுமா? எல்லாத் தமிழனும் நான் தான். ஏன், ஆசிரியத் தமிழனும் நான் தான். சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகள் தமிழில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் நான்’ என்று பட படவென்று பொரிந்து தள்ளியதைப் பார்த்த அந்த யூனியர் நபர்கள் ‘நீங்கள் தமிழர் தான் சார். எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை’ என்று எனக்கு அபயமளித்தார்கள். யுனியன் வங்கி சென்னை குரளகம் முக்கிய கிளையில் பிரபேஷன் முடிப்பதற்குள் மாதவரம் கிளைக்கு சிளை அதிகாரியாக மாற்றலானேன். கிளை அதிகாரியாக 2 ஆண்டுகள் பணி புரிந்தேன். என்னுடைய சி.ஏ. படிப்பால், நான் பம்பாய் தலைமைப் பீடத்திற்கு மாற்றலானேன். அங்கும் வேலை வேலை என்று உழைக்க வேண்டிய கட்டாயம். பல பிரச்சனைகள் - பல வேண்டாத உத்திரவுகள் - பல அதிகாரிகளின் தவறான அணுகு முறைகள் - இவைகளை எல்லாம் எதிர்கொண்டு எதிர் நீச்சல் போட்டேன். ஆனால் நல்ல வாய்ப்பு. பல கமிட்டிகளில் பங்கு கொண்டேன். பயிற்சிக் கல்லூரியில் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு. சேர்மன் உள்பட பல மேலதிகாரிகளுடன் தொடர்பு இவையெல்லாம் எனது சி.வி. (C.V.) யை பலப்படுத்தின. அப்போது, ஜெர்மன் யூரோப்பியன் ஏசியன் பாங்கில் ஒரு மேல் மட்ட அதிகாரிக்கு ஒரு விளம்பரம் வந்து அதற்கு விண்ணப்பித்தேன். ஒரு பதவி - பலர் விண்ணப்பங்கள். ஆனால், நானே அதில் தேர்வானேன். என்னை இண்டர்வி செய்த அன்னிய மேல் அதிகாரி எனது வங்கியின் சேர்மனைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டு என் பெயரைச் சொன்னதும், ‘ஓ, கிருஷ்ணனா? ஆமாம் அவர் எங்கள் வங்கியில் தான் பதவி வகிக்கிறார்’ என்று சொன்னதைக் கேட்டவுடன், சேர்மனே என் பெயரைச் சொன்னதுடன் என்னை அடையாளம் கண்டு பேசியதை உணர்ந்தவுடன் என் டாயுஷ் வங்கி தேர்வு உறுதியானது. இந்த வங்கி முதன் முதலாக நம் நாட்டில் கிளை அமைப்பதால், அது சம்பந்தமான பல பொறுப்புகளை நான் ஏற்க வேண்டியிருந்தன. பல தரப்பட்ட அதிகாரிகளை கலந்தாலோசிக்க வேண்டியதாயிற்று. மேலும் இவ்வங்கியின் பல அன்னிய நாட்டுக் கிளைகள் (சிங்கப்பூர், கொலாலாம்பூர், கராச்சி என்று பல கிளைகள்) செல்ல வேண்டியதாயிற்று. 1-10-1980 அன்று கிளை திறக்கப்பட்டது. இந்த வங்கியில் 1/7 பங்கு ஜெர்மனியின் டாயுஷ் வாங்கியது. நாளாவட்டத்தில் அதன் பங்கு 100% ஆகி 1988-ல் யுரோப்பியன் ஏசியன் வங்கி டாயுஷ் வங்கியின் முழு அங்கமாயிற்று. இம் மாறுதல் சம்பந்தமான கடமைகள் என் பொறுப்பாயிற்று. முதல் சில வருடங்கள் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி பதவி வகித்தேன். ஆனால், அங்கும் நேர்மை நிலைத்து நிற்காமல் அதற்கு அடிபணியும் நிலை நீடித்ததால், நான் மிகவும் கவலை கொண்டேன். இந்த என் நிலைமையை அறிந்த என் மேல் அதிகாரி என்னைக் கூப்பிட்டு, ‘உன் தர்ம சங்கடம் எனக்குப் புரிகிறது. ஆகையால், உனக்கு இன்னும் 2 ½ வருடங்கள் செர்விஸ் இருக்கிறது. இப்போதே நீ விடைபெற விரும்பினால், அந்த முழுச் சம்பளத்தையும் நீ பெற நான் ஏற்பாடு செய்கிறேன். உனது வீட்டுக் கடனின் வட்டியும் மாறாது. அந்த 2 ½ வருடங்களிலும் உனது மாதச் சம்பளம் உனக்குக் கிடைக்கும். உனது கார் வசதியும் நீ அனுபவிக்கலாம். நீ இந்த வங்கிக்கு ஆதியிலிருந்து பல வருடங்கள் நேர்மையாக உழைத்திருக்கிறாய். ஆகையால் தான் இந்தச் சலுகைகள்’ என்று விளக்கினார். நானும் இந்த அவரது ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டேன். எனக்கு மன விடுதலை கிடைத்தது. அதன் பிறகு சில வேலைகளில் சேர்ந்தாலும், அதில் பலர் நேர்மையாக நடக்காமல் ஏமாற்றுவதை அறிந்ததால், என்னால் அங்கும் என்னுடைய மனச்சாட்சியை அடகு வைக்க விரும்பவில்லை. இப்போது ஷேர் மார்க்கெட்டில் இறங்கி, அதிலே பொழுதைப் போக்குகிறேன். அதில் மன நிம்மதியும், சுதந்திரமும் உள்ளன. யோசித்து சரியான முறையைப் பின் பற்றினால் இழக்க வேண்டிய நிலை வராது. ஆசிரியர்: உங்கள் வாழ்க்கையில் நடந்த மிகவும் சந்தோஷமான நிகழ்வுகள் எவைகள்? சோகமானவைகள் எவைகள்? மறக்க முடியாத நபர்கள் யார்? கிருஷ்ணன்: என் அம்மா சாவும், காசு விஸ்வநாதன் - என் அபிமான ஆசிரியர் சுப்பாராவ் மரணங்களும் என் வாழ்வில் நடந்த சோக நிகழ்வுகள். அதே நேரத்தில் காசி விஸ்வநாதன் - சுப்பாராவ் ஆகிய இருவர்களும் என் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள். சந்தோஷமான தருணங்கள் என்றால், நான் சி.ஏ. பாஸானதை பேப்பரில் என் நம்பரைப் பார்த்து என் மனைவி சொன்ன செய்தியும், நான் ஜெர்மன் டாயுஷ் வங்கியில் உயர்பதிவி பெற்றதையும் குறிப்பிடலாம். ஆசிரியர்: இப்போது சிறிது அரசியல் களத்தைப் பற்றிப் பேசுவோம். பி.ஜே.பி.யின் வெற்றியைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கிருஷ்ணன்: மோடியின் அணுமுறையான - சப்கா சாத், சப்கா விகாஸ் - அதாவது ‘எல்லோரும் ஒன்றிணைவோம், எல்லோருக்கும் வளர்ச்சி’ என்ற கொள்கை மிகவும் நல்லது. அதை எந்தவிதமான தொய்வும் இன்றி நடை முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்: காங்கிரஸ் தோல்வி பற்றி …. கிருஷ்ணன்: காங்கிரஸின் பரம்பரை ஆட்சி முறை எப்போது மறைகிறதோ அப்போது தான் காங்கிரசுக்கு விடிவு காலம் பிறக்கும். சோனியா - ராஹுல் ஆகியவர்கள் இருக்கும் போது காங்கிரஸ் உருப்படவே செய்யாது. ஆம் ஆத்மி கட்சியும் சரியான கட்சியாக உருவாகவில்லை. ஆகையால், பி.ஜே.பி.க்கு ஒரு நல்ல எதிர்க் கட்சிகூட இல்லாமல் போய் விட்டது. ஆசிரியர்: சோனியா - ராஹுல் இவர்களை விட்டல் வேறு யார் அந்தக் கட்சியை வழி நடத்த அனுமதிக்கலாம்? கிருஷ்ணன்: பி. சிதம்பரம். ஆனால் அவருக்கு அகில இந்திய அளவில் செல்வாக்கு இல்லை. தமிழ் நாடு உட்பட எல்லா இடங்களிலும் எதிர்ப்பு அதிகம். ஆசிரியர்: யு.பி.யில் யோகி அதித்யநாத் முதன் மந்திரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளாரே - அது சரியான தேர்வு தானா? கிருஷ்ணன்: யோகி - மோடியின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை மட்டுமே முன்னிருத்தி, ராமர் கோயில் - என்று குப்பையைக் கிளரக் கூடாது. ஆசிரியர்: பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் மாட்டு இறைச்சிக் கூடங்களை மூடல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டல் ஆகியவைகளைச் சொல்லித் தானே ஓட்டுக்களை வாங்கி, ஆட்சியில் அமர்ந்துள்ளனர். அப்படி இருக்கும் போது, ராமர் கோயில் கட்ட முயற்சி எடுக்கவோ, அதைப் பற்றிப் பேசவோ கூடாது என்று சொல்வது தேர்தல் வாக்குறிதியை புறக்கணிப்பதாக ஆகாதா? கிருஷ்ணன்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பேச்சு எழும் போது, யு.பி.யில் கலவரங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்த்தால், யு.பி.யில் வளர்ச்சி பாதிக்கப்படாமல் முன்னேறும் அல்லவா? ஆசிரியர்: முஸ்லீம்கள் ஆட்சியில் பல கோயில்கள் - ஒன்று இரண்டு அல்ல - நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மசூதிகளும் கட்டப்பட்டுள்ளன. இதற்குச் சரித்திரச் சான்றுகள் உள்ளன. இந்துக்கள் - அதுவும் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட இந்துக்கள் - ‘முஸ்லீம்களே! நீங்கள் இடித்த பல புண்ணிய கோயில்களை மறந்து, அயோத்தியில் மட்டும் - நீங்கள் இடித்த பாவத்திற்குப் பிராயச் சித்தமாக - கோயில் கட்ட அனுமதியுங்கள்’ - என்று இந்துக்கள் கேட்பதில் நியாயம் இல்லை என்று சொல்ல முடியுமா? கிருஷ்ணன்: அயோத்தியில் முன்பே ராமர் கோயில் இருந்து, அது இடிக்கப்பட்டு, பாபர் மசூதி கட்டி இருந்தால், இந்துக்கள் அந்த இடத்தில் கோயில் கட்டுவதை ஆட்சேபிக்க வேண்டியதில்லை. ஆசிரியர்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அங்குள்ள இடிபாடுகளை ஆராய்ந்து, இந்திய புராதன நினைவுச் சின்ன பாதுகப்புக் கழகம் ‘பாபர் மசூதி அங்கு முன்பே உள்ள கோயிலை இடித்துக் கட்டப்பட்டது’ என்றே கோர்டிலேயே பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளார்கள். கிருஷ்ணன்: அப்படி இருக்கும் நிலையில், ராமர் கோயில் கட்டுவதை முஸ்லீம்கள் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. அத்தியாயம் 5 – அப்பா மரணம் நாங்கள் குடியிருந்த 5-ம் நம்பர் துளசிங்கப்பெருமாள் கோயில் சந்தில் உள்ள ‘சொப்பு குச்சுக் குடில்’ என்று எங்கள் பாட்டியின் தங்கையான பணக்கார புரசவாக்கத்தில் தனி பங்களா போன்ற வீட்டில் வசிக்கும் எங்கள் சித்திப்பாட்டி கேலி செய்யும் ஒண்டிக்குடித்தனத்தில் சமையல் செய்யும் அறையின் சுவர் ஓரத்தில் தான் அப்பா வியாதியாகப் படுத்திருப்பார். ‘ஹாஸ்பிடல் எல்லாம் வேண்டாம் – பிச்சுவின் சமையலே மருந்து. அதுவே போதும்’ என்று தன் மனைவியைப் பற்றி மகிழ்ந்து சொல்வார் அப்பா. அது வெறும் வார்த்தைகள் இல்லை. ஆத்மார்த்தமான உள்ளத்திலிருந்து ஒலிக்கும் அமுத வரிகள். எங்கள் பாட்டியும் ‘பிச்சு சமையலே போதும். வேறு மருந்து எதற்கு?’ என்று அடிக்கடி சொல்வார்கள். அப்பா என் அண்ணாவிடம் ‘டே, சேது ! ஒரு ஈசி சேர் முடிந்தால் வாங்கிப் போடு. நான் அதில் படுத்து சிரமபரிகாரம் செய்கிறேன்’ என்று சொன்னார். ‘அப்பா ! எப்படியும் அடுத்த மாதம் ஈசிசேர் வாங்கிடலாம்’ என்று என் அண்ணா சொன்னவுடன் ‘சிரமப்படாதே ! அடுத்தமாதம் இல்லாட்டாலும், இரண்டு மூன்று மாதமானாலும் பரவாயில்லை’ என்று சொன்னார். இது டிசம்பர் மாதம் 1953-ல் முதல் வாரத்தில் அப்பா ஈசிசேரை விரும்பிக் கேட்ட நாளாகும். அப்போது எனக்கு வயது 16. திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 1953-ம் வருடம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரவு சுமார் 7/8 மணி இருக்கும். அப்பா சாப்பிட்டு விட்டு ‘இன்னிக்குப் பொழுது கழிந்தாயிடுத்து’ என்று சொல்லிப் படுத்துக் கொண்டார். அம்மா அப்பா படுத்திருந்த அடுக்களையில் ஏதோ வேலையாக இருந்தார். பாட்டி மறைவுத் தட்டி அகற்றப்பட்ட ஹாலில் சாப்பிட்ட பிறகு ஒரு ஓரமாகப் படுத்திருந்தார். என் அக்கா ஏதோ படித்துக் கொண்டிருந்தாள். அண்ணா அவரது மேல் அதிகாரியுடன் எப்போதும் போல் மெரினா கடற்கரையில் பேசச் சென்று விட்டார். மேல் அதிகாரியாக இருப்பினும் அண்ணாவிடம் ஒரு நண்பரைப் போல் தான் பழகுவார். அண்ணா வீட்டில் இருக்கும் போது அவரே ஜன்னல் வழியாக அண்ணாவை அழைத்து மெரினா கடற்கரைக்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் சென்றார்கள். நான் சிம்னி விளக்கொளியில் கல்கியில் வெளிவந்த புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும்’ என்ற சிறுகதையைப் படித்துக் கொண்டிருந்தேன். சுமார் அரை மணி நேரம் சென்றிருக்கும். அப்பா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து ‘பிச்சு ..’ என்று சொல்லியபடியே ரத்தமாக வாந்தி எடுத்தார். அம்மா அப்பாவைக் கைத்தாங்களாகப் பிடித்துக் கொண்டு அப்பாவை படுக்க வைத்தார்கள். ‘சங்கரா ! டாக்டரைக் கூட்டிண்டு வாடா .. டாக்டர் வந்து பார்க்கட்டும்’ – என்று அம்மா சொல்லியபடியே துணியால் வாந்தி எடுத்ததை துடைத்து பாத்திரத்தில் பிழிந்து இடத்த்தைச் சுத்தம் செய்தார். பாட்டி எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘சுப்பிணிக்கு என்ன ஆச்சு பிச்சு?’ என்று கேட்டார். என் அக்காவோ அடுக்களைக்குச் சென்று ‘என்னம்மா ? என்னாட்சு?’ என்று கவலையாகக் கேட்டாள். நான் உடனே துளசிங்கப்பெருமாள் கோயில் தெருவில் பார்த்தசாரதி கோயில் பின்புறம் இருக்கும் டாக்டர் வீட்டுக்கு ஓடினேன். நல்ல வேளையாக டாக்டர் அவரது வீட்டுக் கிளிக்கில் இருந்தார். அவரும் உடனே என்னுடன் விரைவாக வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு ‘இறந்துவிட்டார்’ என்று சொல்லிச் சென்று விட்டார். பாட்டி ‘ஓ சுப்பிணி போயிட்டயா? .. ‘ என்று உரக்க அழவும் நானும் அக்காவும் ‘பாட்டி இது ஒண்டிக்குடித்தன வீடு .. சத்தம் போட்டு அழக்கூடாது’ என்று சொன்னதைக் கேட்ட பாட்டி ‘என்னடி பட்டணம் இது ? என் பையன் செத்துட்டான் அதுக்குக்கூட அழப்படாதா?’ என்று பாட்டி மிகவும் தன் துக்கத்தையும், அழுகையையும் கட்டுப்படுத்திக் கொண்டார். என் அம்மா பேயரைந்த மாதிரி அப்பாவின் படுக்கை பக்கத்தில் கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தார். ‘அம்மா, நான் அண்ணாவைக் கூட்டிக் கொண்டு வருகிறேன்’ என்று மெரினா கடற்கரைக்கு அவர்கள் எப்போதும் அமர்ந்து பேசும் அன்னிபெசன்ட் அம்மையாரின் சிலைக்கு அருகே இருக்கும் அப்போதைய ஐஸ் ஹைஸ் எதிரில் இருக்கும் சிமிண்ட் பெஞ்சி இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக ஓடினேன். நான் வேகமாக ஓடி வருவதை அண்ணா பார்த்து விட்டார். ‘அண்ணா .. அப்பா ..’ என்று அழுகையுடன் சொல்வதைக் கேட்டு ‘வா வீட்டுக்குப் போகலாம்’ என்று தனது மேல் அதிகாரியைப் பார்த்து ‘போய் வருகிறேன்’ என்று கையால் சைகை செய்தபடி என்னுடன் வேகமாக வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக துரிதமாக அடைந்து விட்டோம். சென்னைப் பட்டிணத்தில் இருக்கும் எங்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு உறவுக்காரான புரசவாக்கம் சித்தப்பாவிற்கு அன்று இரவே செய்தியை பஸ்ஸில் சென்று தெரிவிக்க சித்திப்பாட்டி காரில் எங்கள் வீட்டிற்கு அன்று இரவே வந்து விட்டார். புரசவாக்கம் சித்தப்பாதான் தகன ஏற்பாடுகளுக்குப் பணம் உதவியதுடன் கூட இருந்து பக்கபலமாக இருந்தார். என் அப்பா – அம்மா ஆகியவர்களிடம் சித்தப்பா – சித்திப்பாட்டி – அத்துடன் சித்தி ஆகியவர்கள் காட்டிய அன்பு அளவிடமுடியாதது. அதிலும் சித்தி எங்கள் அம்மாவிடம் தனிப் பிரியம் கொண்டவர். சித்தி சற்று பெருத்த சரீரம். அகண்ற நெற்றி. அதில் லட்மிகரமான சிகப்பு நிறத்தில் பெரிய பொட்டு. பார்ப்பவர்கள் சித்தியைக் கை கூப்பித் தொழ வைக்கும் அற்புத சக்தி வாய்ந்த தோற்றம். அப்பா இறந்த உடன் எனக்கு ஒரு கவலை ஏற்பட்டது. பாட்டி மாதிரி தலை முடியை வழித்தெடுத்து மொட்டியாக்கி விடுவார்களோ? – என்பது தான். இந்த விதவைக் கோல சடங்கில் எனக்கோ – அண்ணாவுக்கோ – என் அக்காவுக்கோ நம்பிக்கை இல்லை. கடவுள் அருளால் பாட்டி – சித்திப்பாட்டி – சித்தப்பா – ஏன் என் அம்மாவும் – இந்தச் சடங்கு வேண்டாம் என்று முடிவெடுத்தவுடன் என் மனம் நிம்மதிப் பொருமூச்சு விட்டது. 1954 வருடம் ஜனவரி 1-ம் தேதி – புது வருடப் பிறப்பு அப்பா மரணத்தால் மறக்கமுடியாத துக்க தினமாகப் போய் விட்டது. ஒண்டிக்குடித்தனக்கார மேல் மாடியில் இரண்டு பெண்களுடன் வசிக்கும் மனைவியை இழந்த வைதீகமான ஐயர் கீழே வந்து ‘பிணத்தை அதிகாலையிலேயே எடுத்துவிட வேண்டும். தாமஸம் கூடாது. பிறகு தான் நாங்கள் குழாயில் தண்ணீர் பிடித்து சமையல் செய்ய வேண்டும். வியாதியால் செத்த உடம்பு. காலம் தாழ்த்தினால் நாங்கள் வியாதியால் கஷ்டப்படவேண்டிவரும்’ என்று கல்நெஞ்சராக எங்களுக்கு உத்திரவாக அந்த இரவே எச்சரித்துச் சென்று விட்டார். இந்த நேரத்தில் என் அக்கா புருஷன் பல வருடங்களுக்கு முன்பு பாம்பே டோம்புலியில் எங்கள் சொப்புக் குடில் போல் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இறந்த தருணத்தில் அங்கு பக்கத்தில் குடியிருந்த வட இந்தியக் குடும்பத்தினர் நடந்து கொண்ட விதம் நினைவு கூறத்தக்கது. என் அத்திம்பேர் கிருஷ்ணனின் பெண்ணிற்கு முந்தைய நாள் தான் பக்கத்தில் உள்ள பம்பாய் கல்யாணில் மாப்பிள்ளைப் பையனின் அண்ணா வீட்டில் நிச்சயதார்த்தம் வெகுசிறப்பாக நடந்தேறியது. அப்போது என் மகள் மீரா கல்யாணமாகி மாப்பிள்ளையுடன் தானே அடுக்குமாடிக் குடியிருப்பில் நானும் என் மனைவி வத்ஸலாவும் தங்கி இருந்தோம். நிச்சயதார்த்த ஏற்பாடுகளை நாங்கள் இரண்டு பேர்களும் சேர்ந்து தான் ஏற்பாடு செய்தோம். நிச்சதார்த்தம் முடிந்தது. அத்திம்பேர் கிருஷ்ணனுக்கு வீட்டுக்குச் சீக்கரம் செல்ல வேண்டும் என்று பரபரப்புடன் இருந்தார். அவர் என்னிடம் ‘பாப்பு என்ன இப்போதே பையனுடன் பேசிக் கொண்டே இருக்காள் .. நாம் வீட்டுக்குப் போக வேண்டாமா? ‘ என்று சொன்ன படி இருந்தார். நான் அவரது பையன்களிடம் ‘அப்பாவை சீக்கரம் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போகவும். ரொம்பவம் சிரமப் படுவதாகத் தெரிகிறது. நானும் மாமியும் நாளை மத்தியானம் டோம்புலிக்கு வருகிறோம் .. ’ என்று சொல்லி நாங்கள் – நான், என் மனைவி, என் மகள் மீரா, என் மாப்பிள்ளை கோபி – காரில் தானே சென்று விட்டோம். சொன்னபடி அடுத்த நாள் மத்தியானம் டோம்புலி வந்தோம். அங்கு சுரேஷ், சுரேஷ் மனைவி ரமா, மகேஷ், கடைசிப் பையன் சந்துரு ஆகியவர்கள் இருந்தார்கள். நிச்சியதார்த்தர்த்திற்கு வந்த மூத்த பையன் அம்பி அன்று இரவே போபால் சென்று விட்டான். நிச்சயதார்த்தம் செய்வதால் அதற்கு உதவியாக இருக்க பக்கத்தில் காலியாக இருந்த இடத்தையும் கேட்டு வாங்கி இருந்தார்கள். அவர்களும் சந்தோஷமாக அந்த இடத்தை உபயோகிக்க அனுமதித்தார்கள். நாங்கள் கிருஷ்ணனின் பையன்களுடன் கல்யாணத்திற்கு மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி அந்த பக்கத்து காலி இடத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கிருஷ்ணன் அந்த ரூமுக்கு வந்து நின்று கொண்டே ‘சங்கரா ! சந்துரு சத்திரத்திற்குப் அதிகமாக பணம் கொடுக்கிறான். பணத்தை அஜாக்கிரதையாகச் செலவு செய்கிறான். நீ தான் அவனுக்குப் புத்தி சொல் .. நான் சொன்னா கேட்க மாட்டான்’ என்று சொன்னார். அதற்கு நான் ‘சந்துரு, மகேஷ், சுரேஷ் எல்லாரும் சேர்ந்து தான் ரொம்பவும் ஜாக்கிரதையாகச் செலவு செய்கிறார்கள். நீங்கள் ஒன்றும் கவலைப் படாதீர்கள் .. நிச்சயதார்த்தம் எப்படி நல்லபடியா நடந்த்தோ அதே போல் பாப்பு கல்யாணமும் நல்லா கல்யாணியிலேயே நடக்கும்’ என்று விளக்கினேன். முதலில் மகேஷ்-அம்பி- சுரேஷ் கல்யாணத்தை போபாலில் வைத்து நடத்த பையன் வீட்டுக் காரர்கள் ஏற்க மறுத்ததால் பாப்பு கல்யாணம் பாம்பேயிலேயே நடத்த முடிவாகியது. நாங்கள் மும்முரமாக கல்யாண ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று கிருஷ்ணன் ‘நெஞ்சு வலிக்குது. இது எப்போதும் போல் உள்ள வலி இல்லை. டாக்டரைப் பார்கணும் ..’ என்று கீழே உட்கார்ந்து விட்டார். உடனே சுரேஷ் ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து கிருஷ்ணனைக் கைத்தாங்களாக நானும் – மகேஷ் – சந்துரு – சுரேஷ் மாடிப்படி வழியாக மெதுவாக தூக்கியபடி ஆட்டோவில் அமரவைத்தோம். கிருஷ்ணன் என் தோள் மீது தலையை வைத்தபடி ‘சங்கரா ! ..’ என்று மேற்கொண்டு பேசமுடியாமல் இருந்தார். இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தை. அப்போதே அவர் உயிர் பிரிந்து போயிருக்க வேண்டும் என்பது பிறகு தான் தெரிந்தது. டாக்டர் கிளிக்கில் பெஞ்சியில் கிருஷ்ணனைப் படுக்க வைத்தோம். அப்போதே மூச்சு விடுவது நின்று போய்விட்டது போல் நான் உணர்ந்தேன். டாக்டர் வந்து கிருஷ்ணனை ரூமில் பரிசோதித்த பிறகு ‘இறந்து விட்டார்’ என்று சொல்லி விட்டார். அப்போது பகல் மணி சுமார் 2/3 இருக்கலாம். உடலை வீட்டிற்குக் கொண்டு சென்று படுக்க வைத்தோம். அடுத்த நாள் தான் தகனம் என்பதால், சுரேஷ் ஒருவர் படுக்கும் அளவிற்கு பெரிய படுக்கையைப் போல் உள்ள ஒரே பெரிய அளவு ஐஸ் கட்டியை வாங்கி உடலை அதில் படுக்க வைத்தோம். அந்த ஐஸ் கட்டி உருகி வரண்டாவழியாக அடுத்த வீட்டு வாசலையும் தாண்டி ஒரு சிறு ஓடை போல் சென்று கொண்டிருந்தது. அது ஒண்டிக்குடித்தன குடில். இது இரவு முழுவதும் செத்த உடல் வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் உருகி தண்ணீராக ஓடு வந்து கொண்டே இருந்தது. உடல் வைக்கப்பட்டிருந்த ரூம் முழுவதும் தண்ணீரால் நிரம்ப அதைத் துணி கொண்டு துடைத்துக் கொண்டே இருக்கும் நிலை. இருப்பினும் அந்த்த் தண்ணீர் வெளியே நிலைப்படி தாண்டி வழிந்து செல்வதைத் தடுக்க முடியவில்லை. எனக்கு ஒரே பயம். அடுத்த வீட்டுக்காரர்கள் சண்டைக்கு வரப்போகிறார்கள் என்று நான் பயந்த படி இருந்தேன். ஆனால் அடுத்த வீட்டுப் பிரமுகர் அந்த வரண்டாவில் தேங்கி இருந்த ஐஸ் கட்டித் தண்ணீரில் நின்றபடியே ‘கிருஷ்ணன் ஒரு உத்தமர். அவரால் எங்களுக்கு எந்தச் சிரமும் கிடையாது. நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு நாங்கள் டீ போட்டுக் கொடுக்கட்டுமா ? உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். பகவான் உங்களுக்கு இந்தத் துக்கத்தைத் தாங்கும் சக்தியைக் கொடுப்பார்’ என்று உள்ளார்த்தமாகச் சொன்னதைக் கேட்டதுடன் ‘இது தான் பாம்பாய்க்கும் சென்னைக்கும் உள்ள வித்தியாசம் … தேசப்படத்தைப் போல் வடக்கு விரிந்தும் தெற்கு சுருங்கியும் இருப்பதைப் போல் தான் வடக்கத்தியர் மனம் விரிந்தும், தெற்கத்தியர் மனம் சுருங்கியும் இருக்கிறது’ என்று சொல்லத் தோன்றுகிறது. இந்த அங்குள்ள குடித்தனக்காரர்களின் அபிரிமிதமான உதவும் உத்தம குணத்தைக் கண்டு என் கண்கள் பனித்தன. ஹோட்டல் முதலாளி – தண்ணீர் வண்டி சுப்பிரமணிய ஐயர் – முருக பக்தர் என்று தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீபார்த்தசாரதி கோயில் கொண்டிருக்கும் திருவல்லிக்கேணியில் அதுவும் ‘துளசிங்கப் பெருமாள்’ என்ற பெயர் கொண்ட தெருக் குடிலில் உயிர் துறந்தார். அவரது அஸ்தியை மெரினா கடற்கரை வங்காளா விரிகுடாக் கடலில் கரைத்தோம். ‘இதே கடல் நீர் தான் திருச்செந்தூர் முருகன் கோயில் இருக்கும் கோயில் பாறையில் அலைகளாக ஓய்வு ஒழிவின்றி மோதிபடி ‘முருகா – குகா – ஞான பண்டிதா’ என்று ஒலி எழுப்புவதாக நம்பும் பக்தர்களின் வரிசையில் இருக்கும் பக்தன் நான். அப்பாவுக்கு ஈசி சேர் வாங்கிக் கொடுக்க முடியவில்லை – என்பது ஒரு குறை தான். ஈசிசேர்களைப் பார்க்கும் போதெல்லாம் அப்பா என் நினைவில் வந்து செல்வார். அப்பா எனக்கு அளித்த பொக்கிஷமான மாக்கல் பிள்ளையாரைத் தினமும் பூஜை செய்து வழிபடுகிறேன். அதன் மூலம் வாழ்க்கை வளம் பெறுவதை உணர்கிறேன். கந்தரலங்காரம் பாடல் 70 ... விழிக்குத் துணை என்ற பாடல் அப்பாவிற்கு அஞ்சலி செய்யும் விதமாக பதிவு செய்யத் தோன்றுகிறது: விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. ........ பதவுரை ......... நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப்பெருமானது புனிதமானவையும் மென்மையானவையுமான செந்தாமரை மலர் போன்ற திருவடிகளேயாகும். உண்மையில் ஒருசிறிதும் குறையாத சொல்லுக்குத் துணையாவது 'முருகா' என்று கூறும் அப்பரமபதியின் திருநாமங்களேயாகும். முன்பு செய்த பழியைத் தருகின்ற பாவத்தை அகற்றுவதற்குத் துணையாவது திருமுருகப்பெருமானின் பன்னிரண்டு புயங்களுமேயாகும். அஞ்சுந்தன்மையுடைய தனிமையான வழிக்குத் துணையாவது திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானுடைய கூர்மையான வேலாயுதமும் மயிலுமேயாகும். அத்தியாயம் 6 – மைலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்த கதை சென்ற இதழில் எழுதிய ‘அப்பா மரணம்’ பற்றியது குறித்து 31-12-1956 – அதாவது அப்பா இறந்த தெய்தியான 31-12-1953 –க்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என் டைரியில் இருந்த குறிப்பை இப்போது படிக்க நேர்ந்தது. அந்தக் குறிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்வது நடந்தவைகளை உள்ளபடியே சொல்வது தான் சரி – என்ற கருத்தினால் இங்கு பதிவிட்டுள்ளேன். என் டைரிக் குறிப்பு: 1953-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு. நான் கல்கியில் பிரசுரமாகியிருந்த ‘கடவுளும் கந்தசாமியும்’ என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையைப் படித்துக் கொண்டிருந்தேன். என் பாட்டி அப்பாவுக்குப் பக்கத்திலே படுத்துக் கொண்டிருந்தாள். என் அம்மாவும் அக்காவும் ஏதோ விசேஷம் என்று மேலே குடியிருப்பவர்கள் கூப்பிட்டதால் போயிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து வந்து விட்டனர். பாட்டிக்கு, அப்பாவுக்கு, எனக்கு எல்லோருக்கும் ‘புட்டு மேலே கொடுத்தா ..’ என்று கொடுத்தார்கள். அப்பாவுக்கு ஒரு பழமும் எனக்கு ஒன்றும் அம்மா கொடுத்தாள். பழம் நன்றாகப் பழுத்து விட்டதால் எனக்கு வேண்டாம் என்று சொன்னேன். ‘உனக்குத் தான் தெரியுமே அதுங்கின பழம் அவனுக்குப் பிடிக்காதுன்னுட்டு .. கொண்டா இங்கே’ என்று சிரித்துக்கொண்டே அப்பழத்தையும் அப்பா சாப்பிட்டார். ‘கோமதி! இங்க நல்லாப் பெருக்கிடு. புட்டு சிந்திருக்கும். எறும்பு வரப்போறது’ என்று சொன்னார். கொஞ்ச நேரம் சென்றது. ‘எனக்கு இன்னிக்குச் சாதம் ஒன்னும் வேண்டாம். பாலை இப்பவே குடுத்துடு’ என்று அப்பா சொன்னார். ‘நாளைக்கு வெல்லம் போட்டு கோதுமை தோசை சாப்பிடணும்’ என்று சொல்லிக் கொண்டே அப்பா படுத்துக் கொண்டார். ‘அப்பா! நாளைக்கு ஒன்னாந்தேதி. நாளைக்கே நீ கேட்டயே ஈஸிசேர் வாங்கிடணும்’ என்று நான் சொன்னேன். பிறகு நான் ‘கடவுளும் கந்தசாமியும்’ என்ற கதையினை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். அப்பா படுக்கையிலிருந்து எழுந்திருந்து அம்மா கொடுத்த காய்ச்சின பாலை வாங்கிக் குடித்தார். பாலைக் குடித்து விட்டு ‘என் காரியம் எல்லாம் ஆச்சு..’ என்று சொல்லிப் படுத்தார். நிமிஷங்கள் சில நகர்ந்தன. ‘பிச்சு! இங்கு வந்து உக்காரேன்’ என்று சொல்லிக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அம்மாவும் உடனே அப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அப்போது திடீரென்று அப்பாவின் வாயிலிருந்து ரத்தம் வெள்ளம் போல் வெளிப்பட்டது. நாங்கள் எல்லோரும் பதறினோம். என்ன செய்வதென்றே புரியவில்லை. தலையெல்லாம் ‘கிர்’ என்று சுழன்றது. நெஞ்சத்தின் துக்கம் மலையாக இருந்து அழுத்தியது. நாங்கள் எல்லோரும் சேர்ந்து அழுது துடித்தோம். அப்பாவின் புண்ணியாத்மா எங்களுக்குப் புலப்படாமல் சென்று விட்டது. முருகனுக்கு சேவை செய்த அந்தக் கைகள் இன்று ஒய்ந்து விட்டன. ஒவ்வொரு நாளும் சாயங்காலம் குளித்து, துல்லியமாக விபூதி அணிந்து, பால் செம்பைக் கையில் ஏந்தி பக்தி உள்ளமெங்கும் வியாபிக்க திருச்செந்தூர் கோயிலை நோக்கி நடக்கும் அதே பாதங்கள் இன்று ஓய்ந்து கிடக்கின்றன. திருச்செந்தூரில் முருகனுக்கு ராக்கால தீபாராதனை நடக்கும் அதே நேரத்தில், சென்னையில் அப்பா பூதவுடம்பை விட்டுச் சென்று விட்டார். ‘ஏ, முருகா ! அப்பா உன் சந்நிதியில் இல்லாத போது உனக்குத் தீபாராதனை காட்டுவதை விரும்பாமல் உன் நீழலில் கூட்டிக் கொண்டனையோ?’ விவேகானந்தா கல்லூரியில் சேர அதற்கு விண்ணப்பித்திருந்தேன். எந்த ஒரு சிபாரிசும் இன்றி என் 11-ம் வகுப்பு மார்க்கைப் பார்த்து எனக்கு அவர்கள் கல்லூரியில் சேர நான் கேட்ட முதல் க்ரூப்பான கணிதம் (maths) – இயற்பியல் (physics) - வேதியல் (chemistry) – ல் சேர பணம் கட்டும் படி அட்மிஷன் கார்ட் வந்தது எனக்கே ஒரே ஆச்சரியம் – சந்தோஷம். அதே நேரத்தில் பணத்திற்கு எங்கே போவது என்ற கவலையும் வந்தது. ‘அம்மா, நான் காலேஜ் சேர்ந்து படிக்கணும் .. பணத்திற்கு என்னமா செய்யறது?’ என்று நான் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் போது, ‘பகவான் வழிவிடுவார் .. நீ கவலைப் படாதே’ என்று அம்மா சொன்னாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் பாட்டி ‘பிச்சு! இதற்கு ஒரே வழி புரசவாக்கம் ஸ்வாமிதான் கண் திறக்கணும்… சங்கரன் நேரே ஸ்வாமியை அவன் ஆபீசிலே போய்ப் பார்க்கட்டும் .. பணம் கொடுப்பான் – பணம் படிக்கத் தானே கேட்கிறோம்’ என்று சொன்னாள். ‘ஆமாம் .. சங்கரன் நேரே இப்போதே போய்க் கேட்கட்டும் .. கிடைக்கும் என்று தான் எனக்கும் படுகிறது’ என்று அம்மாவும் ஆமோதித்தார்கள். நானும் நேரே நாரயணஸ்வாமி சித்தப்பாவின் ஆபீஸ் இருக்கும் பெரியமேட்டிற்கு பஸ்சில் சென்றேன். என் சித்தப்பா தோல் மண்டி வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பி அதன் மூலம் நல்ல பணம் பண்ணி இருக்கிறார். வாணியம்பாடியில் பச்சைத் தோல் பதனிடும் தொழிற்சாலையும், பெரியமேட்டில் பதனிட்ட வெளிநாட்டிற்கு அனுப்பும் தோலும் இருக்கும். சித்தப்பா ஒரு நீண்ட சாய்வு மேஜையில் ஒவ்வொரு தோலாக ஒரு சிறிய கத்தியால் கீறி அதன் தரம் அறிந்து பிரித்துப் போடுவார். ஸ்வாமி சித்தப்பா எப்போதும் எதையோ முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். பேசும் போதும் அந்தச் சப்தம் வந்து கொண்டே இருக்கும். அது தான் அவரைப் பேசத் தூண்டும் சுருதியான சக்தியாகத் தெரியும். ஆகையால் அவர் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டால் தான் புரியும். சொல்வது புரியாமல் மீண்டும் சொல்ல வேண்டினால் சித்தப்பா மிகவும் கோபப்படுவார். நான் பெரியமேட்டில் இருக்கும் சித்தப்பாவின் ஆபீசிற்குச் சென்றேன். அப்போது அவர் எப்போதும் போல் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு ஒரு சிறிய கத்தியால் தோலை அறுத்து தரம் பிரித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவும் அவர் ‘என்னடா ? ..’ என்று கேட்கவும், நான் உடனே அவர் அருகில் சென்று ‘விவேகானந்தா காலேஜில் சேர அட்மிஷன் கார்ட் வந்திருக்கு .. சேர பணம் கட்டணும் .. அம்மா தான் சித்தப்பாட்ட கேளு என்று சொன்னாள். அதற்குத் தான் நான் வந்திருக்கிறேன்’ என்று ஒரே மூச்சில் சொல்லி அட்மிஷன் கார்டை நீட்ட அவரும் அந்த கார்டை ஒரு நோட்டம் விட்டு என்னிடம் கொடுத்து விட்டு தன் வேலையில் மும்முரமானார். நான் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து ‘போய் ஆபீஸ் ரூமில் உட்கார் ..’ என்று சொன்னதும் ஆபீஸ் ரூமிற்குச் சென்று அமர்ந்தேன். அங்கு ஆபீசில் ஒரு நடுத்தர வயசான குமாஸ்தா வேலை செய்து கொண்டிருந்தார். என்னை அவருக்கு முன்பே தெரியும். அந்த பெரியமேட் ஆபீசிற்கு இதற்கு முன்பும் சென்று சித்தப்பாவைப் பார்த்திருக்கிறேன். ‘தைரியமா இரு .. படிக்கத் தானே பணம் கேட்கிறாய் .. கொடுப்பார் ..’ என்று அவர் சொன்னது எனக்கு அசீரீரி வாக்குப் போல் ஒலித்தது. நான் அங்கு உட்கார்ந்தபடியே திருச்செந்தூர் முருகனைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தேன். ஒரு அரை மணி நேரத்திற்குப் பிறகு சித்தப்பாவும் ஆபீஸ் ரூமிற்கு வந்து அவரது சீட்டில் உட்கார்ந்து கொண்டார். நான் எழுந்து நின்றேன். ‘உங்க அம்மா அன்னபூர்ணித் தாய். மூன்று வருடம் நானும் என் அம்மாவும் திருச்செந்தூரில் 9-ம் வகுப்பிலிருந்து 11-ம் வகுப்பு வரை படிக்கும் போது உங்காத்திலே தான் டிபன் – சாப்பாடு எல்லாம் – உன் அம்மா கை மணம் சொல்லவே வேண்டாம் ..’ என்று சொல்லியபடியே பல சொற்களை எப்போதும் போல் உதிர்த்துக் கொண்டே இருந்தார். கடந்த கால நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கிறார் சித்தப்பா – என்று நான் நினைத்தேன். ‘சரி .. நான் பணம் கொடுக்கலைண்ணா ?’ என்று சொல்லி முடிப்பதற்குப் முன்னாலேயே ‘பணம் நீங்கள் கட்டாயம் கொடுப்பீர்கள் .. எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று தைரியமாகச் சொன்னது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ‘இப்போ சேர நான் பணம் தரேன் … கட்டியாச்சு .. அப்புறம் ?’ என்று சித்தப்பா கேட்கவும், ‘ஸ்காலர்ஷிப் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கு ..’ என்று மெதுவாகச் சொன்னேன். ‘சரி சரி … ஸ்காலர்ஷிப் கிடைக்காட்டாலும் .. படிக்கத்தானே பணம் கேட்கிறே .. கொடுக்கறேன்’ என்று சித்தப்பா அபயம் அளித்தார். ‘குமாஸ்தாட்ட பணம் வாங்கிண்டு காலேஜிலே கட்டி அதன் ரசீதை அவர்ட்டே கொண்டு கொடுத்துடு ..’ என்று சொல்லியபடியே சித்தப்பா வெளியே காரில் சென்று விட்டார். குமாஸ்த்தாவுக்கு என்னை விட அதிக சந்தோஷம். பணத்தை என்னிடம் கொடுத்து என் கைகளைக் குலுக்கி ‘நல்லா படி .. க்ஷேமமாய் இருப்பே !’ என்று ஆசீர்வதித்தார். வெற்றி வீரனைப் போல் நான் நேரே காலேஜிக்குச் சென்று பணத்தைக் கட்டி விட்டு அந்த ரசீதை குமாஸ்த்தாவிடம் ஒப்படைத்த பிறகு தான் நான் வீட்டிற்குச் சென்றேன். அம்மா, பாட்டி, அக்கா, அண்ணா எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் நான் தான் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முதல் ஆள். அடுத்த நாள் புரசவாக்கம் சித்திப்பாட்டி எங்கள் வீட்டிற்கு காலையிலேயே வந்து விட்டார்கள். நானும் வீட்டில் இருந்தேன். ‘சித்தப்பாட்ட பணம் வாங்கிண்டு காலேஜிலே சேர்ந்தாச்சு .. மூணு மாசத்திற்கு ஒரு தரம் பீஸ் கண்டணுமே ! அதுக்கு என்னடா பண்ணுவே ! அதுக்கும் சித்தப்பா தானா?..’ என்று என்னைப் பார்த்துக் கோபமாக புரசவாக்கம் சித்திப்பாட்டி கேட்டார்கள். ‘ஸ்காலர்ஷிப் கிடைக்கும்னு நம்பறேன் ..’ என்று நான் மென்று விழுங்கினேன். ‘காலேஜிலே சேர்ந்தார்ச்சு பகவான் அருளாலே .. முருகன் மேற்கொண்டும் உதவி செய்வார் .. டே, சங்கரா ! சித்திப்பாட்டி கால்லே விழுந்து நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்கிக்கோடா ..’ என்று என் அம்மா சொல்லவும் நான் உடனே நெடுஞ்சாணாக சித்திப்பாட்டி காலில் விழுந்து வணங்கவும் சித்திபாட்டியும் ‘நல்லாப் படி .. தீர்க்காயுசா நோய் நொடி இல்லாம இருக்கணும் .. முருகன் இருக்கார்’ என்று என்னை ஆசீர்வதித்தார். சித்திப்பாட்டிக்கு தன் மகனின் மூத்த பையன் – அவன் என் வயது தான் இருக்கும் – சுத்த மக்கு. படிப்பே ஏறவில்லை. சகவாசமும் சரியில்லை. பணம் இருக்கு – அதனால் அவன் குணமும் அதனால் கெட்டு விட்டது. ஆகையால் அந்த ஆதங்கத்தால் நான் காலேஜில் சேருவதைப் பார்த்து சிறிது பொறாமை ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் அது உடனே மாறி விட்டது. எனக்கும் அரை ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அத்துடன் புரசவாக்கம் சித்தப்பாவின் பண உதவியினாலும் நான் இண்டர் பாஸ் செய்து, அதே கல்லூரியில் பிஏ வும் சேர்ந்து பட்டம் பெற்றேன். பிஏ டிக்கிரி கருப்பு அங்கி அணிந்து சென்னை செனேட் ஹாலில் பிஏ பட்டம் பெற்றேன். அந்த கருப்பு அங்கி அணிந்த போட்டோ எங்கள் வீட்டுச் சுவரை வெகு காலம் அலங்கரித்தது. பிஏ பாஸ் செய்திருந்தாலும் நான் அதில் முதல் வகுப்பில் பாஸாக வில்லை என்ற குறை எனக்கு உண்டு. ஆனால் அதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எங்கள் வீட்டில் யாரும் நினைக்க வில்லை. அத்தியாயம் 7 – என் மைலாப்பூர் விவேகானந்தா கல்லூரி வாழ்க்கை விவேகாந்தா கல்லூரியில் இண்டர் மீடியட் இரண்டு வருடம், பிஏ இரண்டு வருடம் என்று தொடர்ந்து நான்கு வருடங்கள் படித்திருக்கிறேன். அதன் அனுபவத்தைச் சுருக்கமாக எழுதுகிறேன். • கல்லூரி வளாகத்தில் இடது புறத்தில் நீண்ட சிமிண்ட் பெஞ்ச்சுகள் உள்ள கொட்டகையில் தான் காண்டீன் உள்ளது. அந்த காண்டீனில் அனைத்துப் பதார்த்தங்களும் மிகவும் ருசியானவைகள். விலையும் குறைவு தான். அங்கு பல நாட்கள் டிபன் – சாப்பாடு ஆகியவைகளைச் சாப்பிட்டிருக்கிறேன். • கல்லூரி நான் இருக்கும் திருவல்லிக்கேணிக்கு அடுத்த மைலாப்பூரில் தான் இருப்பதால் பல நாட்கள் முக்கியமாக சாயங்காலம் நடந்தே திருவல்லிக்கேணி வீட்டிற்கு வந்து விடுவேன். அப்போது சில சமயங்களில் அப்பு என்ற என் சிநேகிதன் ராமச்சந்திரன் வருவான். அவன் ஒரு சினிமா பைத்தியம். கல்லூரிக்கு அருகில் தான் காமதேனு தியேட்டர் இருந்தது. அதில் அடிக்கடி கல்லூரிக்கு கட் அடித்து சினிமாப் படம் பார்க்கச் சென்று விடுவான். மேலும் அந்த தியேட்டருக்கு எதிரில் தான் சுகநிவாஸ் ஹோட்டல். படம் பார்த்து விட்டு அந்த ஹோட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு இப்போதைய ராதா கிருஷ்ணன் சாலையில் இருக்கும் லலிதா – பத்மினி – ராகினி வீட்டில் அவர்களில் யாராவது தெரிகிறார்களா? என்பதை சில நிமிடங்கள் காத்திருந்து அவர்களில் யாராவது ஒருவரைப் பார்த்து விட்டால், அப்பு அன்று முழுவதும் ஆனந்த சாகரத்தில் தான் இருப்பான். அன்று அவனைச் சந்தித்தால் ‘டே, சங்கரா ! பப்பியைப் பார்த்தேன் டா ! என்ன அதிர்ஷ்டம் !’ என்று பூரித்துப் போவான். ‘டே, படிக்கறதைப் பாரடா .. உன் அப்பாவுக்கு அது தான் கவலை ‘ என்று நான் சொன்னால், ‘டே படிக்க முடியலைடா .. சினிமா படம் பார்க்கத்தான் ஆர்வமா இருக்கு .. நான் என்னடா பண்ணுவேன் ?’ என்று புலம்ப ஆரம்பித்து விடுவான். அப்பு கல்லூரிக்கு அரை நாள் தான் பல நாட்களில் வருவான். அதுவும் காமதேனுவில் புதுப் படம் என்றால் அன்று நிச்சயமாக அரை நாள் மதியத்திற்குப் பிறகு அப்புவை சுகநிவாசில் – பிறகு காமதேனு தியேட்டரில் பார்க்கலாம். • என் தமிழ் ஆசிரியர் திருவல்லிக்கேணியில் ஜாகை இருக்கும் தேசிகாச்சார்யார். ஐயங்கார் – குடுமி, திருநாமம் அவர் அடையாளம். அவர் மெத்த படித்தவர். தமிழ் ஆசிரியராக இருப்பினும் ஆங்கிலத்திலும் அபாரப் புலமை கொண்டவர். ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களை விவரிக்கும் விதமே அலாதி. பல வரிகளை மனப்பாடமாக அபிநயத்துடன் ஒப்பிப்பார். ஆங்கிலம் நமக்குத் சிறிது தெரிந்திருந்தாலும் அவரது அற்புதமான உச்சரிப்பால் நன்றாகப் புரியும். அதே போல் தான் தமிழ்க் கவிதைகளையும் ராகத்தோடு சொல்லிக் கொடுப்பார். கல்லூரி நாடகங்களிலும் பலவிதமான வேடங்களில் ஜெலிப்பார். அவர் ஒரு சகலகலா வல்லபர். கம்பராமாயணத்தில் வரும் பாட்டுக்களை விளக்கும் போது அந்தக் காட்சிகள் நம் கண்முன்னே படமாகத் தெரியும் அளவுக்கு சக்திபெற்றவைகள். அவைகள் இன்றும் என் மனத்தில் பதிந்து அவர் தாள் பணிந்து வணங்கத் தோன்றுகிறது. • ஆங்கில நான்-டீ-டெயில் துணைப்பாடம் ஒரு புதிய இளைஞர் டியூட்டரால் போதிக்கப் பட்டது. அந்த வகுப்பில் பல மாணவர்கள் இருப்பார்கள். சுமார் 50 பேர்களுக்கு மேல் இருக்கும். அவர் வகுப்பு மாணவர்கள் அந்த பாடத்தில் அதிக்க் கவனம் செலுத்த மாட்டார்கள். அவர் விளக்கிய பிறகு மாணவர்கள் நீளமான நோட்டுப் புத்தகத்தில் கட்டுரை எழுத வேண்டும். ஆனால் பல மாணவர்கள் ஏதோ கிறிக்கி எழுதி விட்டு வகுப்பை விட்டுச் சென்று விடுவார்கள். நானும் – என்னுடன் படிக்கும் திருவல்லிக்கேணி வாசி சுப்பிரமணியனும் சிரத்தையாக கட்டுரை எழுதி நோட்டைக் கொடுப்போம். சுப்பிரமணியனின் ஆங்கிகலக் கையெழுத்து மிகவும் நன்றாக இருக்கும். என் கை எழுத்து புரியும் – ஆனால் சுமார் ரகம். அடுத்த வாரம் வரும் வகுப்பில் எங்கள் இருவர் நோட்டுப் புத்தகத்திலும் டியூட்டர் படித்து ரொம்ப நன்றாக உள்ளது என்று புகழ்ந்து எழுதி இருப்பார். அவர் அவ்வளவு பெரிய கூட்ட மாணவர்களை ரொம்பவும் இலகுவாகச் சமாளிப்பார். பல மாணவார்கள் வெளியே நின்று கொண்டு வகுப்பறைக்கு வராமல் இருப்பர். அதைப் பார்த்து அந்த டியூட்டர் ஆங்கிலத்தில் “Don’t Stand Don’t Stand – Understand !” என்று சொல்லுவார். “Those Outstanding Persons – Understand !” என்று ஒரே போடாகப் போடுவார். மாணவர்கள் பெஞ்சைத் தட்டி ஆர்ப்பரிப்பார்கள். • இந்த சமயத்தில் என் டைரியில் எழுதி இருந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. 09 – 02 – 1957 டைரி குறிப்பு: நான், என்னுடையை கல்லூரி நண்பர்கள் இருவர் – எல்லோரும் மைலாப்பூரிலிருக்கும் விவேகானந்தா கல்லூரியிலிருந்து திருவல்லிக்கேணியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தோம். என்னுடன் வந்த இருவரில் ஒருவன் மேல் ஒரு சிறு பையன் தெரியாமல் லேசாகப் பட்டுவிட்டான். அவன் கருப்பாக, கோமனதாரியாக இருந்தான். அந்த என் நண்பன் – திருமலை என்பது அவன் திருநாமம் – தன் சட்டையைத் தட்டி விட்டுப் பார்த்தான். அவன் சட்டையின் நுனியில் மிக மிக லேசாக அழுக்குப் படிந்துவிட்டது. அந்தச் சிறுவனின் கைகளில் உள்ள அழுக்காக இருக்கலாம். மிகவும் கூர்ந்து பார்த்தால் தான் அந்த அழுக்கு தெரியும். திருமலை சொன்னான்:‘Floolish Beggars ! கொஞ்சம் கூட டீசன்சியே கிடையாது’ எனக்கு திருமலை இப்படிச் சொல்லக் கேட்டதும் கஷ்டமாகப் போய்விட்டது. அந்தப் பையன் நாங்கள் எல்லோரும் நடுத்தெருவைத் தாண்டிக் கொண்டிருக்கும் போது திருமலைமேல் அந்தச் சிறுவன் பட்டு விட்டான். நான் கஷ்டப்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அன்று காலை கல்லூரி வகுப்பில் எங்கள் தமிழ் ஆசிரியர் ஆங்கில மொழி பெயர்ப்பான தாகூரில் கீதாஞ்சலியிலிருந்து ஒரு பகுதியை எங்களுக்குக் கொடுத்து, அதைத் தமிழில் மொழிபெயர்க்கச் சொன்னார்: அப்பகுதி வருமாறு: ஜபமாலை உருட்டுவதை விட்டு விடு! மந்தரமும், தந்திரமும் ஆடலும் பாடலும் அவனைக் காட்டமாட்டா! தாளிட்ட அடைபட்ட கோயிலின் இருளடைந்த மூலையில், யாரைப் பூஜிக்கிறாய்? கண்களைத் திறந்து, உன் கடவுள் உன் முன்னிலையில் இல்லையென அறிந்து கொள்! கடினமான தரையில் ஏர்கட்டி உழுபவரிடமும், சாலை அமைக்கச் சரளைக் கற்களை உடைப்பவனிடமும் அவன் இருக்கிறான். அவர்களுடன் அவன் மழையில் நனைகிறான். வெயிலில் உலர்கிறான். அவன் ஆடையில் தூசி படிந்திருக்கிறது. உன் காஷாயத்தைக் களைந்தெறி. அவனைப் போலவே நீயும் புழுதியில் இறங்கிவா ! விடுதலை? எங்கிருந்து விடுதலை கிடைக்கும்? நம் ஆண்டவனே நம் மீது அருள் சுரந்து சிருஷ்டித்தளைகளை தன் திருமேனியில் பூண்டிருக்கிறான். என்றும் நம்மை விட்டுப் பிரிய முடியாமல் அவன் இணைக்கப்பட்டிருக்கிறான். ( தாகூர் – தமிழ் மொழிபெயர்ப்பு – வி.ஆர்.எம். செட்டியார்) ‘உன் காஷாயத்தைக் களைந்தெறி. அவனைப் போலவே நீயும் புழுதியில் இறங்கி வா’ – என்ற கவி தாகூரின் குரல் உள்ளத்திலே அல்லவா ஒலிக்க வேண்டும்? இப்பகுதியினை மொழி பெயர்த்த என் நண்பன் திருமலை, தமிழாசிரியரிடம் தான் மொழி பெயர்தத்தைக் காண்பித்து, ‘நன்றாக இருக்கிறதா? நன்கு மொழிபெயர்த்திருக்கிறேனா?’ என்று கேட்டான். நான் இதை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால், கீதாஞ்சலியின் ஒரு பகுதியினை மொழிபெயர்த்து விட்டு, ‘புழிதி படிந்து இருப்பவனிடம் கடவுள் குடிகொண்டுள்ளார்’ என்று முழங்கும் வாக்கியங்களை மொழி பெயர்த்து விட்டு, தன் சட்டையின் ஓரத்தில் சிறிது புழுதி பட்டு விட்டதற்கு, அதுவும் அந்தச் சிறுவன் தெருவழியே ஓடிக்கொண்டிருக்கும் பொழுது தெருவைக் கடந்ததால் அழுக்குப் படிந்ததற்கு எவ்வளது தடித்த வார்த்தைகள்? இது தான் படிப்பின் அடையாளம் – பண்பின் படிப்பினை இதுதானா? இரண்டாவது காரணம் ஒன்றும் இருக்கிறது. என் இந்த நண்பன் திருமலை ஒரு பொதுக்கூட்டத்தில் மிகவும் கம்பீரமான குரலில் பேசிக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அவனை எனக்குத் தெரியாது. அப்போது அவன் என் கல்லூரியில் சேர்ந்திருக்கவில்லை. அவன் அந்த மேடையில் முழங்கிக் கொண்டிருந்தான்: ’திருமணத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். வாசலிலே எச்சில் இலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் ஏழை மக்கள் – பிச்சைக்காரர்களும், பிச்சைக்காரிகளும். தெரு நாய்களும் இலைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இலைகள் வந்து விழுகின்றன. மனிதர்களுக்கும் நாய்க்கும் போட்டி – அவர்கள் நாய்களை விரட்டுகிறார்கள். .. நாய்களுக்குள்ளும் போட்டி .. இந்த நிலை ஒழிய வேண்டும். ஏழ்மை ஒழிய வேண்டும். ஏழை மக்கள் நிலை உயர்த்தப்பட வேண்டும்’ மேலே கண்ட பிரசங்கத்தை உதிர்த்த வாயும், அந்த ஏழைச் சிறுவனை வைத வாயும் ஒன்றே தான். சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு தூரம்? – என்று என் மனம் பேதலித்தது. ஆனால் இவைகளை எல்லாம் என் நண்பனிடம் தெரிவிக்கும் தைரியம் அப்போது என்னிடம் இல்லை என்பதையும் இங்கு ஒப்புக் கொள்ள வேண்டும். அத்தியாயம் 8 – திருவல்லிக்கேணி ஐஸ் ஹைஸ் போலீஸ் ஸ்டேஷனில் அம்மா ஒரு நாள் காலையில் எங்கள் 5-ம் நம்பர் துளசிங்கப் பெருமாள் கோயில் ஒண்டிக் குடித்தனத்தின் கதவை ஒருவர் தட்டினார். ‘இங்கு காந்திமதி அம்மாள் இருக்கிறாரா?’ – என்று கேட்டார். நான் தான் கதவைத் திறந்து ‘ஆமாம், அது என் அம்மா’ என்று அவர் யாரென்றே தெரியாதவரிடம் பதில் சொன்னேன். ‘அவருக்கு திருநெல்வேலியில் வீடு இருக்கா? .. அதற்கு முனிசிபாலிட்டிக்கு வரி கட்டவில்லை. ஆகையால் முனிசிபாலிட்டி இடமிருந்து எங்களுக்கு பிடி வாரண்ட் வந்துள்ளது. ஆகையால் உங்கள் அம்மா ஐஸ் ஹைஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன் ..’ என்ற உடன் அதைக் கேட்ட நான், அம்மா, அக்கா, பாட்டி அனைவரும் அதிர்ந்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. ‘ஐயா, நாங்கள் உடனே முனிசிபாலிட்டி வரியைச் செலுத்தி விடுகிறோம். என் அம்மாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லாதீர்கள்’ என்று நாங்கள் கெஞ்சினோம். ‘பிச்சு போலீஸ் ஸ்டேஷனுக்கா ? .. ஐயா வேண்டாமையா ? உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு.. என் பேரன் கவர்மெண்ட் வேலை தான். அவன் வேலைக்குப் போய் விட்டான். அவன் மாலை வந்தவுடன் வரி கட்ட ஏற்பாடு செய்து விடுகிறோம்.. பெரிய மனது பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லாதீர்கள்’.. என்று என் பாட்டி கண்ணீர் விட்டு வேண்டினார். ‘பாட்டியம்மா, அந்தம்மா ஸ்டேஷனுக்கு வந்து ஏட்டையாவிடம் சொல்ல வேண்டும். எனக்கு காந்திமதி அம்மாவை ஸ்டேஷனுக்கு அழைத்து வரத் தான் உத்தரவு’ என்று தன்னிலை விளக்கம் அளித்தார் அந்த போலீஸ். வேறு வழி இல்லாததால் என் அம்மா அந்த போலீஸின் பின்னால் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்தே சென்றாள். நான் கூடவே பின்னால் அவர்களுடன் சென்றேன். எனக்கு போலீஸ் விவகாரம் புதிது. போலீஸ் என்றால் அவர்கள் அடித்துத் துன்புறுத்துவார்கள் – கொடூரனமானவர்கள் – என்பது தான் என் மனத்தில் ஆழப்பதிந்த எண்ணம். அம்மா போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பெஞ்சில் உட்கார்த்தி வைக்கப்பட்டார். அந்த போலீஸ் ஸ்டேஷனின் முன்னால் துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்தார். ஏதோ ஒரு தைரியத்தால் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து அம்மாவைப் பார்த்தேன். ‘டே, சங்கரா, ஒன்றும் பயப்படாதே .. ஏட்டையாவிடம் விளக்கிய உடன் நான் வீட்டிற்கு வந்துவிடுவேன் .. நீ வீட்டுக்குப் போ ‘ என்று அம்மா சொன்னாள். ‘இல்லை, நான் இங்கேயே வெளியில் இருப்பேன். உன்னைக் கூட்டிக் கொண்டு தான் போவேன்’ என்று நான் ஆணித்தரமாகப் பதில் சொன்னேன். ஸ்டேஷனிலும் ஒரு மணி நேரம் அமர வைத்து ‘வரியை உடனே திருநெல்வேலி முனிசிபாலிட்டிக்குக் கட்டி அதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். கால தாமதம் செய்தால் உங்களை கைது செய்ய வேண்டி வரும்.. இப்போது சென்றுவிடவும்’ என்று ஏட்டையா எச்சரிக்கையுடன் என் அம்மாவை விடுதலை செய்தார். அம்மாவுடன், நானும் வீட்டிற்கு நடந்தே சென்றேன். வீட்டிற்கு வந்தவுடன் பாட்டி கண்ணீர் விட்டு ‘பிச்சு ! என்னடி இது அநியாயம் ! வீட்டு வரிக்கா போலீஸ் விசாரணை .. இது தான் கலிகாலம் .. கோமாக்கு கல்யாணம் செய்ய அந்த வீட்டை விற்றுத் தொல்லைக்க வேண்டும்’ என்று திருநெல்வேலி வீட்டையே வெறுக்க ஆரம்பித்து விட்டார் பாட்டி. அதே போல் தான் என் அக்கா கோமதிக்கு கல்யாணம் நிச்சமாகியவுடன் அந்த திருநெல்வேலி விட்டை அம்மாவும் – அண்ணாவும் திருநெல்வேலி சென்று விற்று விட்டார்கள் அண்ணா அந்த வீடு விற்பதிலும் சரியாகச் செயல் படவில்லை. கோபமும், ஆத்திரமும், அவசரமும், மூர்க்கமும் இந்த மாதிரியான வீடு விற்பதில் பாதகமாகவே அமையும் என்பதைக் கண்கூடாகப் பார்த்து விட்டோம். அந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு விற்கக் கூடாது என்பது தான் எங்களது வெகு நாளைய ஆசை. ஏனென்றால் அவர்கள் பேராசைக்காரர்கள். சரியான விலை கொடுக்கவும் மாட்டார்கள். ஆனால் எங்களது துரதிருஷ்டம் அந்த பக்கத்து விட்டுக் காரருக்கே அந்த வீட்டை அவர்கள் நிர்ணயித்த மிகவும் குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாகி விட்டது. அந்த எங்கள் திருநெல்வேலி வீடு சிறியது தான். என்றாலும் நான்கு வீட்டுத் தோட்டங்களும் எங்கள் வீட்டோடு சேர்ந்தது. மிகவும் விஸ்தாரமான பெரிய மரங்கள் கொண்ட கொல்லையாகும். ஒரு சிறிய கிரிக்கெட் மைதானம் போல் விசாலமானது. இதற்காகவே அந்த வீட்டை விற்பதில் கொஞ்சம் கஷ்டம் மனத்திற்கு எழுவது அதிசயமன்று. புரசவாக்கம் சித்தப்பாவிடம் அந்த வீட்டை விற்க நினைத்தோம். ஆனால் அதற்கு அவரைச் சரியான முறையில் அணுக வில்லை என்று தான் எனக்குப் படுகிறது. புரசவாக்கம் சித்திப்பாட்டி அடிக்கடி ‘திருநெல்வேலி வீட்டுக்கு கல்யாணன் ஆனாத்தான் கோமா கல்யாணம் நடத்த முடியும்’ என்று (இங்கு கல்யாணம் என்று சித்திப்பாட்டி குறிப்பிட்ட்து அதை விற்றால் தான் கோமதியின் கல்யாணம் நடக்கும் என்பதைச் சுட்டிக் காட்டவே) அடிக்கடி சொல்லி வந்ததால் புரசவாக்கம் சித்தப்பாவை நேரிடையாக அனுகாமல் நாங்கள் திருநெல்வேலி வீட்டை விற்று விட்டோம். விற்பதற்காகவாவது புரசவாக்கம் சித்திப்பாவை அணுகி இருந்தால், அவர் இதை சரியானபடி கையாண்டு நல்ல விலைக்கு விற்றிருக்க முடியும். அம்மா, பாட்டி – இருவரும் நல்ல உள்ளம் கொண்ட சித்தியின் மூலமாக புரசவாக்கம் சித்தப்பாவை தகுந்த முறையில் அணுகினால் இந்த நிலை ஏற்படாது என்று நினைக்கிறேன். இந்தக் குறைந்த விலைக்கு விற்றது திருநெல்வேலியில் வசிக்கும் எங்கள் பாட்டியின் இளைய சகோதரி கோமதித் சித்திப்பாட்டிக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அதுவும் அடுத்த வீட்டுக்காரருக்கு விற்றதில் எந்தவிதத்திலும் ஏற்புடையதாக இல்லை. வீடு விற்ற பிறகு கோமதித் சித்திப்பாட்டி எங்கள் வீட்டை வாங்கிய அடுத்த விட்டுக்காரர் வீட்டின் முன்னால் எங்கள் வீட்டின் முன்னால் உள்ள தெருமணலை தன் இரண்டு கைகளிலும் எடுத்துக் கொண்டு, ‘நாசமாய்ப் போவாய்’ என்று சாபமிட்ட படி பக்கத்து விட்டிற்கு முன்னால் வீசி எறிந்தார். அவ்வளவு கோபம் – தாபம் கோமதி சித்திப்பாட்டிக்கு. அத்தியாயம் 9 – கோமா கல்யாணம் எங்களின் தூரத்து உறவினரின் உதவியால் கல்லிடைக்குறிச்சி பூர்விகமாகக் கொண்ட பம்பாய் ரயில்வே கோவாப்பிராட்டி பாங்கில் வேலை செய்யும் குமாஸ்தா எம்.எ.ஸ்.கிருஷ்ணன் என்பவர் கோமதிக்கு வரனாக அமைந்தார். இதில் ஆச்சரியம் என்ன வென்றால், அவர் என் அக்காவைப் பெண் பார்த்தது நான் மிகவும் வெறுத்த 4 –ம் நம்பர் துளசிங்கப் பெருமாள் தெரு வீட்டில் தான். வரன் தனியாக அந்த எங்கள் உறவினருடன் தான் பெண் பார்க்க வந்தார். என்றாலும் அவர் என் அக்காவைப் பெண் பார்த்து ‘பிடித்திருக்கு’ என்று தெரிவித்து விட்டு ‘முதலில் இந்த வீட்டை உடனே காலி செய்து வேறு வீடு பார்க்கவும்’ என்றும் யோசனை சொல்லி விட்டார். எங்களுக்கும் இந்த வீட்டைக் காலி செய்யத்தான் முயன்று கொண்டிருந்தோம். அப்போது என் காலேஜ் படிப்பு இறுதி ஆண்டு நடந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகு தான் திருநெல்வேலி வீட்டை விற்றோம். அந்தப் பணத்தில் கோமா கல்யாணம் செய்ய முடிவு செய்து, திருவல்லிக்கேணியில் ஒரு சத்திரத்தை புக் செய்து சமையல் காருக்கும் அட்வான்ஸ் கொடுத்தோம். புரசவாக்கம் சித்தப்பாவைக் கேட்காமல் திருவல்லிக்கேணியில் ஒரு சத்திரம் பார்த்து கல்யாணத்தை நாங்களே நடத்த முடிவெடித்ததற்கும் ஒரு காரணம் உண்டு. கோமதி கல்யாணம் நிச்சயமானதைக் கேள்விப்பட்ட புரசவாக்கம் சித்திப்பாட்டி ‘பணத்திற்கு எங்கே போவாய் .. திருநெல்வேலி வீட்டிற்கு கல்யாணம் ஆனால் தான் இந்த கோமதி கல்யாணம் நடக்கும் ..’ என்ற அளவில் வீட்டை விற்பதற்கு ஏற்பாடு செய்யவும் என்பதைச் சூசகமாக தெரிவித்து விட்டார்கள். அந்த வீட்டை புரசவாக்கம் சித்தப்பாவிற்கே விற்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் அது ஏனோ நடக்க வில்லை. ஆனால் சித்தப்பா நாங்களே கல்யாண ஏற்பாடுகளைச் செய்வதை அறிந்து கல்யாணத்தை தன் புரசவாக்கம் வீட்டிலேயே நடத்துவதற்கு ஒப்புக்கொண்டு ‘எவ்வளவு பணம் இருக்கோ அதைக் கொடுத்துவிடு .. நான் பார்த்துக்கறேன் ..’ என்று முன் வந்தது ஒரு பெரும் பாரம் நீங்கி நிம்மதியைக் கொடுத்தது. புரசவாக்கம் சித்தப்பா அவரின் அம்மாவிடமிருந்து விவரம் அறிந்து கல்யாணத்தைத் தானே முன்னின்று நடத்த ஒப்புக் கொண்ட்து முருகன் அருளால் தான். இது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்பது பிறகு பிள்ளை வீட்டு அம்மா கல்யாணம் நடக்க இருக்கும் நாளுக்கு முந்திய நாள் அன்று அவர்களை சம்பிரதாயமாக கல்யணத்திற்கு அழைக்கும் போது நடந்த விதத்தால் தெரிந்தது. கல்யாணத் தேதி வைக்கும் போது அந்த தேதி என் கல்லூரியின் டிக்ரி முதல் ஆண்டு பரிட்சைகளின் போது அமைந்தது. அதைப் பற்றி அண்ணாவோ, அக்காவோ, அம்மாவோ யாரும் கவலைப் படவில்லை. இதனால் என் படிப்பு பாதிக்கப்படும் என்பதைப் பற்றியும் யாரும் சிறிதும் சிந்தித்துப் பார்க்கவும் இல்லை. அந்தக் கல்யாணத்தில் தான் எனக்கு பூணுல் போட ஏற்பாடாகி இருந்தது. பிள்ளை வீட்டுக்காரர்கள் திருவல்லிக்கேணியில் அவர்கள் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்தனர். அங்கு மாப்பிள்ளை, அவரது அம்மா, தங்கைகள் இருவர், ஒரு தம்பி ஆகியவர்கள் இருந்தார்கள். அவரது தம்பி படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தார். கல்யாணத்திற்கு சம்பிரதாயமாக அழைப்பதற்கு அண்ணா – சித்தி இருவரும் காரில் திருவல்லிக்கேணி சென்று அவர்கள் தங்கி இருந்த வீட்டில் முறைப்படி பழங்கள் ஆகியவைகளுடன் சென்றார்கள். அப்போது மாப்பிள்ளையின் அம்மா ‘நீங்கள் ஏற்பாடு பண்ணிய பக்ஷணம் போறாது. நீங்கள் மாப்பிள்ளைக்கு மயில் கண் வேஷ்டி எடுக்க வேண்டும். நீங்கள் எடுத்த பட்டி ஜரிகை வேஷ்டி வேண்டாம்’ என்று பிடிவாதமாக இருந்தார். இந்தப் பேச்சு எந்த முடிவுக்கும் வராமல் நீண்டு கொண்டே போயிற்று. கார் வாடகையும் அதிகமாகிக் கொண்டு இருந்தது. நேரம் ஆக ஆக புரசவாக்கம் சித்தப்பா தமது காரை எடுத்துக் கொண்டு அந்த திருவல்லிக்கேணி வீட்டிற்குச் சென்றார். சென்றவுடன் அந்த வீட்டின் குடித்தனக்காரர் சித்தப்பாவைக் கண்டவுடன் ‘ஆஹா, நீங்களா பெண்வீட்டுச் சொந்தக்காரர்? தெரியாமல் போய் விட்டது. நீங்கள் சொல்கிற படிச் செய்கிறோம்’ என்று ஒரே அடியாகத் தணிந்து போய்விட்டார். அவர் ஒரு புரோகிதர். சித்தப்பா வீட்டிற்கும் பல முறை புரோகிதம் செய்ய வந்திருக்கிறார். சித்தப்பா ஒரு பணக்கார பிசினஸ் மேன் – என்று தெரியும். அதனால் தான் இந்த திடீர் மாற்றம். ‘மாப்பிள்ளை வேஷ்டி மாற்ற இப்போது சாத்தியமில்லை. பக்ஷணத்திற்குப் பதில் நீங்கள் கேட்ட அளவுக்குப் பணமாகக் கொடுத்துவிடுகிறோம். உடனே நீங்கள் எங்கள் புரசவாக்கம் வீட்டிற்கு வந்து கல்யாணம் சடங்குகளை ஆரம்பிக்கவும்’ என்று சித்தப்பா சொல்லவும், அதற்கு அந்தப் புரோகிதர் மாப்பிள்ளை அம்மாவிடம் ‘சரி என்று சொல்லவும். வீணாக காலம் கடத்தாமல் கல்யாண காரியங்களைப் பார்க்கலாம்’ என்று சொல்லவும் அந்தப் பிரச்ச்சனை அத்தோடு முடிந்தது. மாப்பிள்ளை இவ்வளவு நடந்தும் ஒரு வார்த்தை பேசவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. இது அம்மாவிடம் காட்டும் பாசமா அல்லது பயமா என்று தெரியவில்லை. மாப்பிள்ளையின் தங்கைகளும் அம்மா சொல் வேதம் என்பதாகவே செயல்பட்டார்கள். கல்யாணம் சித்தப்பாவின் தயவில் ஆடம்பரம் இல்லாமல் ஆனால் எந்தவிதமான குறையும் இல்லாமல் சிறப்பாகவே நடந்தேறியது. அக்கா கல்யாணம் புரசவாக்கத்தில் சித்தப்பா வீட்டில் 25-03-1957 அன்று சிறப்பாக நடந்தேறியது. எனக்கும் அன்று தான் பூணூல் போட்டார்கள். வாத்தியார் மந்திரம் சொல்லிக் கொண்டு என் பூணூல் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு பெரிய தங்கச் சங்கிலியின் ஈரம் என் மார்பில் பட்டவுடன் நான் தலை நிமிர்ந்து பார்த்தால் புரசவாக்கம் சித்தி ‘வெறும் கழுத்திலேயேயா பூணூல் போடுவா .. ‘ என்று சொல்லிக் கொண்டே தான் அணிந்திருந்த அந்த நீளமான பெரிய தங்கச் சங்கலியை என் கழுத்தில் போட்டார்கள். எனக்கு ஆச்சரியம். அதே சமயத்தில் இந்த விலையுயர்ந்த தங்கச் சங்கலியை ஜாக்கிரதையாக சித்தியிடம் சேர்க்க வேண்டும் என்ற கவலை எனக்கு அந்த சமயத்திலும் உண்டாயிற்று. மனத்திற்கு சந்தோஷமாக இருந்தது. ‘சித்தியின் மனசு ரொம்பவும் உசத்தி ..’ என்று நினைக்கும் போது என் கண்கள் கலங்கின. ஹோமத் தீயின் புகையால் ஏற்பட்டது என்று தான் மற்றவர்களுக்குப் படும். நான் மேல் துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டேன். கல்யாணம் நடந்த பிறகு அத்திம்பேர் கிருஷ்ணன் எங்கள் சூரப்பமுதலி வீட்டில் ஒரு இரண்டு ரூம்கள் கொண்ட குடிலில் தங்கினார். அவர் கோமாவைக் கூட்டிக்கொண்டு பம்பாய் செய்வதாகத் திட்டம். அப்போது அத்திம்பேர் தமக்கு ஒரு ஹோல்டால் வேண்டும் என்று வற்புறுத்தினார். உண்மையிலேயே பணம் அப்போது ரொம்பவும் முடை. ஆனால் அவர் அதை நீங்கள் அவசியம் வாங்கிக் கொடுக்கத்தான் வேண்டும் என்று ஒரோயடியாக அடம்பிடித்தார். கோமாவும் எங்கள் நிதி நிலை அறிந்து ‘நாமே வாங்கிக் கொள்ளலாமே’ என்று சொல்ல வில்லை. நாங்களும் அவர் கேட்ட அளவில் ஒரு ஹோல்டால் வாங்கிக் கொடுத்தோம். ஹோல்டாரைப் பார்ப்பதும் அதுதான் எனக்கு முதல் அனுபவம். மில்லிட்ரிக்காரர்கள் தலையில் சுமந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். பிறகு தான் அதில் பலவற்றைத் திணித்து ஒரே மூட்டையாக்கலாம் என்று அத்திம்பேர் அந்த ஹோல்டாலைப் பயன்படுத்தும் போது உணர்ந்தேன். அந்த ஹோல்டாலை நான் தான் சுமக்க வேண்டும் என்று பிறகு தான் தெரிந்தது. ஏன்? – அதிலிருந்து அவர்கள் எப்போது சென்னை வந்தாலும் அவர்களை ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்து அந்த ஹோல்டாலைச் சுமந்து வருவதும், சென்னையிலிருந்து பம்பாய் போகும் போதும் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் வண்டியில் அந்த ஹோல்டாலை அவர்கள் இருக்கையில் வைப்பதும் அடியேன் தான். அப்போது ரயில்வே போர்ட்டர்களை கோமாவோ – அத்திம்பேர் கிருஷ்ணனோ அமர்த்தியது இல்லை. ஆனால் நான் வேலைக்குச் சேர்ந்த பிறகும் என் கல்யாணம் ஆகும் வரை இதே போர்ட்டர் வேலை செய்து கொண்டிருந்தேன். கல்யாணத்திற்கு ப் பிறகு நான் ‘ஒரு கூலியை ஏற்பாடு செய்கிறேன்..’ என்று சொன்னதற்கு கோமாவும் – கிருஷ்ணனும் அதற்கு ஒரே அடியாக மறுத்து, ‘நீ துக்கினா குறைந்து போயிடுவையா? ..’ என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் நான் விடாப்பிடியாக அவர்கள் என்னை எவ்வளவோ தடுத்தும் கேட்காது, ஒரு போர்ட்டரை அமர்த்தி ஹோல்டாலையும் ஒரு சில சமான்களையும் போர்ட்டர் தூக்கிக் கொண்டு வர, நானும் ஒரு சிறிய சூட்கேசைக் கையில் வைத்துக் கொண்டு ஸ்டேனலிருந்து வெளியே வந்தேன். இந்தச் சம்பவத்தை என் அம்மா – என் அண்ணா ஆகியவர்களிடம் சொல்லி ‘பெரிய துரையாயிட்டான் சங்கரன் .. போர்ட்டரை அமர்த்தி காசு கொடுக்கிறான். சம்பாதிக்கிறான் .. அந்த ஜபர்ஜத் ‘ என்று கோமா நேரிடையாகவே குற்றம் சாட்டினாள். உண்மையிலேயே அந்தக் கனமான ஹோல்டாரை தலையிலும், தோளிலும் சுமப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் இதை அவர்கள் உணர்ந்தும் என்னை வலுக்கட்டாயமாக துன்புறுத்துவதில் அவர்கள் நகசியமான ஆன்ந்தம் அடைகிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். இந்த என் எண்ணம் சரி என்பதற்கு பல சம்பவங்கள் பிறகு நடந்துள்ளன. அவைகள் அந்த கால கட்டத்தில் எழுதப்படும். கோமா கல்யாணம் ஆகிச் சென்ற மறுநாள் வீட்டில் அரசியோ – ரவையோ ஒன்றுமில்லை. பேப்பரைக் கடையில் போட்டு அந்தப் பணத்தில் தான் அன்று ரவா உப்புமா செய்து சாப்பிட்டது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. நான் தான் எப்போதும் போல் பேப்பரைக் கடையில் போட்டு அந்தப் பணத்தில் ரவை வாங்கி வந்தேன் என்பதால் இந்தச் சம்பவமும், ஹோல்டார் வாங்கியது – அதன் பின்னணியில் பிறகு நடந்த சம்பவம் ஆகியவைகள் என் மனத்தில் ஆழப் பதிந்து ‘கோமா – கிருஷ்ணன் இருவர்களும் ஏன் இப்படிக் குரூரமாக நடக்கிறார்கள்?’ என்று நினப்பதுண்டு. இந்த மாதிரியான நினைப்புகள் என் மனத்தில் பல காயங்களை ஏற்படுத்த பல சமயங்கள் நடந்துள்ளன என்பது தான் ரொம்பவும் வருத்தமான ஒன்றாகும். அத்தியாயம் 10 – எனது வேலை தேடும் படலம் பிஏ பாஸ் செய்தவுடன் வேலை தேடும் படலம் ஆரம்பமாய் விட்டது. மெட்ராஸ் சர்விஸ் கமிஷன், யுனியன் சர்விஸ் கமிஷன் ஆகியவைகளில் பரிட்சை எழுத செனை யுனிவர்சிடி லைப்ரரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஏன், ஐஏஎஸ் பரிட்சைக்கும் விண்ணப்பித்தேன். சரியாகப் படிக்கவில்லை. வீட்டில் நியூஸ் பேப்பர் வாங்குவதற்கும் வசதி இல்லை. திருவல்லிக்கேணியில் சூரப்ப முதலித் தெருவின் நட்ட நடு வீதியில் ஒரு பிள்ளையார் கோயில் உண்டு. அந்தத் தெரு முஸ்லீம் நெசவாளிகள் பெரிவாரியாக வசிக்கும் தெருவாகும். தெருவிலேயே நெய்வதற்கு நூலை பாவு போட பலரும் உபயோகிப்பார்கள். அவர்கள் வீட்டினுள் நெய்யும் தரி இருக்கும். மண் தரை வீடுகள் தான். அதில் பள்ளம் தோண்டி அதில் அமர்ந்து துணி நெய்வார்கள். அவர்கள் குறிப்பாக லுங்கி நெய்வார்கள். அந்த முஸ்லீம்கள் லப்பை என்ற ஏழை ஜாதி வகுப்பைப் சார்ந்தவர்கள். அந்த வீதியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு இடப்பக்கம் உள்ள தெருவில் கடைசியில் தெருவைப் பார்த்து கிழக்கு முகமாக ஒரு முருகன் கோயில் உண்டு. அதன் பக்கத்தில் நடராஜா சங்கம் நடத்தும் இலவச தினசரி – மாதப் பத்திரிகைகள் படிக்க பெஞ்சுகள் போட்டு இருப்பார்கள். அங்கு தான் நான் ஹிந்து நாளிதழைப் படிப்பேன். முதலில் முருகன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு அந்தச் சங்கத்தில் படிப்பதுண்டு. வேலை கிடைக்காத ஒவ்வொரு நாளும் மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது. அப்போது அண்ணா, அம்மா, நான் – என்று மூன்று பேர்கள் தான். அண்ணாவின் சம்பளத்தில் மட்டும் ஜீவனம் நடத்துவது சிரம்மாகத்தான் இருந்தது. அந்த சமயத்தில் அண்ணாவிற்கு ஜாதகம் பார்க்கும் படலம் தொடங்கியது. அண்ணாவின் கோபம் கல்யாணம் ஆனால் சரியாய் விடுமா? – என்ற கவலை அம்மாவிற்கு இருந்தது. அந்த சமயத்தில் எங்கள் தூரத்து உறவினர் பெண்- நாக்பூர் பெண் ஜாதகம் பொருந்த கல்யாணம் சென்னையில் நடக்க முடிவாகியது. கல்யாணம் ஒரு வீட்டில் நடக்க ஏற்பாடாகி இருந்தது. சத்திரத்தில் இல்லை. இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் அண்ணா பலரையும் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார். ரிசப்பஷனுக்கு பல பேர்கள் பரிசுப் பொருள்களுடன் வர அவர்களை வரவேற்கவோ, உணவு அளிக்கவோ முடியாமல் திண்டாடினர். அண்ணா அப்போது ‘மன்னிக்கவும் … பிறகு தனியாக உங்களுக்கு விருந்து வைக்கிறேன்’ என்று வாக்களித்தார். ஆனால் அது நிறைவேற வில்லை. மன்னியுடன் அண்ணா சுமூக உறவில் இல்லை. ஒரே சண்டையும் சச்சரவும் தான். சமைத்த சாப்பாட்டை சாப்பிடுவோமா?- என்ற நிலைதான் பல நாட்கள் இருக்கும். அம்மாவிற்கும் அடி திட்டு. மன்னிக்கும் அடி திட்டு. இதைப் பார்த்த வீட்டுக்கார்ர் சீதாராம் நாயுடு ‘என் வீட்டில் பெண் குழந்தைகள் கல்யாண வயசில் இருக்கிறார்கள். இப்படி சண்டை போடுவதானால், வீட்டைக் காலி செய்துவிடுங்கள்’ என்ற அளவிற்கு நிலமை போயிற்று. நானோ வேலை இல்லாத பட்டதாரி. வீட்டின் நிலை அறிந்து காலையில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு தான் பல நாட்கள் திரும்பி வரும் நிலையில் இருந்தேன். மெரினா கடற்கரை – சென்னை யுனிவர்சிட்டி லைப்ரரி, சினிமா என்று நேரத்தைக் கழிப்பதுண்டு. மெரினா கடற்கரையில் கிடைக்கும் பட்டாணி சுண்டல் – வேற்கடலை – மாங்காய் துண்டு என்று என் பசியை ஆற்றிக் கொள்வேன். ‘டே, சங்கரா! நீ சும்மாத்தானே இருக்கே ! .. வேலை இன்னும் கிடைக்கலை .. ஒரு நியூஸ் பேப்பர் கடை வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன். … நியூஸ் பேப்பருடன் பல புத்தகங்களும் விற்பனைக்கு அந்தக் கடையில் வைக்கலாம். நியூஸ் பேப்பர்களை வீடுகளுக்குப் போட்டு விற்பனை செய்யலாம். கடையும் பக்கத்தில் திருவல்லிக்கேணி ஹை ரோடில் பார்த்து அட்வான்ஸ் கொடுத்தாச்சு – ஹிந்து பேப்பர் ஏஜெண்டுக்கும் பணம் கொடுத்தாச்சு .. காலையில் மவுண்ட் ரோடில் ஹிந்துப் பேப்பர் வாங்கி வீடுகளுக்குக் கொடுத்து கடையைத் திறந்து நீ தான் நடத்தணும் .. இன்னும் ஆறு நட்களில் கடை திறக்கணும்..’ என்று அண்ணா என் அபிப்பிராயத்தைக் கேட்காமலேயே காரியத்தில் இறங்கி என்னை நிர்ப்பந்தித்தார். பணத்திற்கு தனக்கு வந்த பல வெள்ளிப் பரிசுப் பொருட்களை மார்வாடிக் கடையில் விற்றும், மன்னியின் வெள்ளிப் பொருட்களை அடமானம் வைத்தும் அந்தப் பணத்தில் இந்த நீயூஸ் பேப்பர் கடையை ஆரம்பிக்க முடிவெடுத்தார். எனக்கு இதில் கிச்சித்தும் சம்மதம் இல்லை. ஏதோ ஒரிடத்தில் வேலை செய்து அந்தப் பணத்தில் வாழவது தான் என் விருப்பம். இந்த வியாபார சிந்தனை என் மனத்தில் எழுந்ததே இல்லை. என்னை நம்பி அண்ணா எடுத்த முடிவால் – அதுவும் பல காரியங்களை தானே தன்னிச்சையாக செய்துவிட்டதால், நானும் அண்ணாவின் முடிவிற்கு கட்டுப் பட்டேன். கடையும் திறந்தாயிற்று. ஹிந்து பத்திரிகையை மவுண்ட்ரோடுக்கு நடந்து போய் பெற்றுக் கொண்டு, பிறகு வீடுகளில் அவற்றைப் போடவேண்டும். குறைந்தது 10-12 வீடுகள் இருக்கும். என்னிடம் சைக்கில் இல்லை. ஆகையால் நான் நடந்தே இந்தக் காரியங்கள் நடக்கும். இதற்காக நான் விடிகாலையிலேயே 4/5 மணி அளவில் எழுந்திருந்து என் பணியைச் செய்ய வேண்டும். சுமார் 9/10 மணி வாக்கில் அம்மா கடைக்கு வந்து உட்கார்ந்து கொள்வார். நான் வீட்டிற்குச் சென்று குளித்து – சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்கு வந்து அம்மாவை வீட்டிற்கு அனுப்புவேன். இதில் எந்தவிதமான பிரயோசனும் இல்லை என்பதை வெகு சீக்கிரமே அறிந்து கொண்டேன். அம்மாவிடம் ‘இது நமக்குச் சரிப்பட்டு வராது ..என்னால் இந்தக் கடையை நடத்த முடியாது .. அண்ணாவிடம் எப்படிச் சொல்ல முடியுமோ எப்போ சொல்லமுடியுமோ அப்போது சொல்லிவிடு’ என்று நான் தெரிவித்து விட்டேன். ஒரு நாள் ஒருவன் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டி ஒரு மாதப் பத்திரிகை வாங்கினான். அவனுக்குச் சில்லரையைக் கொடுத்தேன். பத்திரிகையையும் கொடுத்தேன். அவன் சென்று விட்டான். அப்போது தான் எனக்கு பகீர் என்றது. அவன் கொடுத்த நூறு ரூபாய் நோட்டும் என்னிடம் இல்லை. அவனே எனக்குக் கொடுப்பது போல் அவனே எடுத்துக் கொண்டுள்ளான். எப்படி என்று இன்றுவரை எனக்கு விளங்காத புதிராகவே இருக்கிறது. இந்த அதிர்ச்சிச் சம்பவத்தால் நான் நிலை குலைந்தேன். அம்மாவிடம் நான் இனி நாளையிலிருந்து கடையைத் திறக்கமாட்டேன் – என்று உறுதியாகச் சொல்லி விட்டேன். அந்த நாளில் சாயங்காலம் வீட்டில் ஏதோ சாப்பிட்டு விட்டு ‘அம்மா, நான் அடுத்த நாள் மத்தியானம் தான் வருவேன்… கவலைப் படாதே.. கடையை மூட அண்ணாவிடம் சொல்லிவிடு’ என்று என் டைரி – படிக்க ஒரு புத்தகம் இரண்டையும் ஜோல்னா பையில் போட்டுக் கொண்டு மெரினா பீச்சிற்கு சென்று அந்த பரந்த மணற்பரப்பில் மல்லாக்காக ஜோல்னா பையை தலைக்கு வைத்துக் கொண்டு நீல வானம் – பஞ்சு போன்ற மேகக் கூட்டங்களின் பயணம் ஆகியவைகளை மனத்தில் நிரம்பிக்கொண்டு பல மணி நேரம் கழித்து விட்டேன். சென்னைக் கல்லூரியின் கோபுர கடிகாரத்தில் மணி ஒன்பதானதை மணி அடித்து அறிவித்தது. அங்கிருந்து எழுந்து, பக்கத்தில் உள்ள மீன் அருட்காட்சி சாலையின் வாயிலில் உள்ள திண்ணையில் வந்து படுத்துக் கொண்டேன். அன்று இரவு – காலை வரையும் அங்கு தான் வாசம். காலை சுமார் ஏழு மணிக்கு நான் வீட்டிற்கு வந்தேன். அண்ணா என்னைக் கோபமாகப் பார்த்தார். ‘டே, உன் மனசுலே என்ன நினைச்சுண்டிருக்கே ! பிடிக்கலைன்னா என் கிட்டச் சொல்றது தானே ! ‘ என்று என் மேல் சாடிய அண்ணாவிடம் ‘கடையைத் திறக்க என்னிடம் சொல்லவில்லையே ! எல்லாம் அம்மாட்டச் சொல்லியாச்சு .. என்னால் இதைச் செய்ய முடியாது’ என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டேன். இந்த கடைச் சம்பவம் ஒரு சோகமான ஒன்று. இதனால் நான் வேலை தேடும் படலத்தில் மும்முறமாகச் செயல்பட்டேன். நான் எழுதிய ஐஏஎஸ் பரிட்சையில் படுமோசமான மார்க்குகள் எடுத்தேன். இருப்பினும் அதற்குப் படித்தது வீண் போகவில்லை. ஏனென்றால் மெட்ராஸ் பப்ளிக் சர்விஸ் கமிஷனில் சென்னை கோவாபேரேட்டிவ் டிபார்ட்மெண்டில் குமாஸ்தா வேலைக்குத் தேர்வானேன். ஆனால் அந்தச் சமயத்தில் எம்ளாய்மெண்ட் மூலம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகமான நெய்வேலி நிக்னைட் கார்ப்பரேஷனில் குமாஸ்தாவிற்கு தேர்வானேன். என்னை அவர்கள் மெடிகல் ஃபிட்னஸ் சர்ட்டிபிகேட் வாங்க சென்னை ஜெனரல் ஹாஸ்பிடல் டாக்டரிடம் அனுப்பினார்கள். என்னை பரிசோதித்த டாக்டர் ‘உனக்கு ஹைட்ரசில் இருக்கு ..வேலையில் சேர ஃபிட் இல்லை’ என்று சொன்ன பிறகு எனக்கு உலகமே இருண்டுவிட்ட நிலை ஏற்பட்டது. அம்மாவிடம் இதைத் தெரிவித்து ‘நான் இப்போதே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்ய அட்மிட் ஆகப்போகிறேன்’ என்று சொல்லி அங்குஇலவசமாக ஆப்பரேஷன் ஆகி, பிறகு அதே ஜெனரல் ஹாஸ்பிடல் டாக்டரிடம் ஃபிட் சர்ட்டிபிகேட் வாங்கி, அங்கு சேர்ந்தேன். அந்த நாளை நான் என்றும் மறக்க முடியாது. மன்னியும் அண்ணாவும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு என்னைப் பார்க்க வந்தார்கள். ஹாஸ்பிடல் என்றும் பாராமல் அண்ணா மன்னியை அடித்துத் திட்டிக் கொண்டே இருந்தார். அதைப் பார்த்த நர்ஸ் ‘படிச்சவனா இவன்.. மிருகம் மாதிரி நடக்கறான்’ என்று சொல்லும் அளவிற்கு அண்ணாவின் நடவடிக்கை பொது இடத்தில் இருந்தது. இப்படிப் பட்ட மனநிலையில் உள்ளவர் வீட்டில் எவ்வளவு மோசமாக நடப்பார் என்பதை விவரிக்கத் தேவை இல்லை. நான் வேலையில் சேர்ந்து சம்பளம் வாங்கி வந்த பிறகு தான் வீட்டின் நிலை சிறிது சிறிதாக சீரடந்தது. அம்மாவும், மன்னியும் சேட்டுக் கடையில் அடமானம் வைத்த பொருட்களை புரசவாக்கம் சித்தி மூலம் பணம் வாங்கி மீட்டு, அந்த வெள்ளிப் பாத்திரங்களை அவர்களிடம் ஒப்படைத்தார்கள். பிறகு என் சம்பளத்தில் மாதா மாதம் ஒரு தொகையைக் கொடுத்து ஒரு சில மாதங்களில் அந்த வெள்ளிப் பாத்திரங்கள் மீண்டும் எங்கள் வீட்டிற்கு வந்தன. ‘இந்த வெள்ளிப் பாத்திரங்கள் என்னுடையவை – இதை நீங்கள் இனி தொடமுடியாது’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதால் அண்ணாவால் அதையும் பணம் பண்ண முடியவில்லை. அண்ணா – மன்னிச் சண்டையிலும் பகவான் அருள் என்று ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தது தான். கார்த்திக் என்று நாமகரணம் சூட்டி வளர்க்கப்பட்டான். ஆனால் அண்ணாவின் கோப – தாபங்களினால் மன்னி கார்த்திக்கை நாக்பூரில் இருக்கும் அவரது அம்மா – அப்பா வீட்டிற்கே சென்று விட்டார். அதனால் அண்ணா – மன்னி – கார்த்திக் சேர்ந்து வாழ முடியவில்லை. ஏன்? நாக்பூரில் நடந்த கார்த்திக்கின் கல்யாணத்திற்கே அண்ணா வரவில்லை. சித்தப்பா என்ற ஸ்தானத்தில் இருந்த நான் தான் என் மனைவி வத்ஸலா, என் மகள் மீரா, என் மகன் கணேஷ் ஆகியவர்களுடன் சென்று மனையில் அமர்ந்து நடத்தி வைத்தேன். இதை நான் செய்யக் கூடாது என்று என் அக்கா கோமதி – அத்திம்பேர் கிருஷ்ணன் ஆகியவர்கள் மூலம் தெரியப்படுத்தினார். ஆனால் நான் இதை ஏற்க வில்லை. அந்தக் கல்யாணத்திற்கு என் அக்காவின் மூத்த பையன் ஷங்கர், இளையவன் கே. ஹரிஹரன் ஆகியவர்கள் (அவர்கள் போபாலில் வங்கியில் வேலை பார்ப்பவர்கள்) வந்திருந்தார்கள். கார்த்திக்கின் படிப்பிற்கும் வளர்ப்பிற்கும் அவனது தாத்தா – பாட்டியைத் தான் குறிப்பிட வேண்டும். கார்த்திக் நல்ல வேலையில் ஆபீசராக இந்திய ஆயில் கப்பரேஷனில் இருந்தாலும், அதை ராஜினாமா செய்து பல இடங்களில் வேலையில் அமர்ந்தான். அவனுடைய ராசி ஒவ்வொரு முறையும் முந்தைய பதவியை விட அதிக அளவில் உயர்ந்த பதவியும் – சம்பளமும் பெறும் அளவில் இருந்தது. கார்த்திக்கு மணி மணியான இரண்டு ஆண் பிள்ளைகள். அவர்களை நானும், என் மனைவி வத்ஸலாவும் அவர்கள் பம்பாய் – பாவையில் இருக்கும் பொழுது சென்று பார்த்தோம். கார்த்திக்குடன் மன்னியும் அப்போது இருந்தார்கள். அந்தக் குழந்தைகளைப் பார்த்த போது மனத்திற்கு இதமாக இருந்தது. கார்த்திக்கு ராக்கி மேல் அதீத ஈடுபாடு. ராக்கியை நம்புபவர்களுக்கு இந்துக்களின் சடங்குகளில் நம்பிக்கை கிடையாது. அது மட்டும் இல்லை. தமது வீட்டிலும் அத்தகையை சடங்குகளை அனுமதித்தால் ராக்கியின் சக்தி பாதிக்கப்படும் என்ற மனநிலையும் உண்டு. மன்னிக்கு பூஜை புனஸ்காரத்தில் ஈடுபாடு அதிகம். அதைச் செய்யக் கூடாது என்று கார்த்திக் தன் அம்மாவிடம் சொல்ல அதைக் கேட்காத காரணத்தால் தன் தாயையே விட்டை விட்டுத் துரத்தியதாக நான் கேள்விப்பட்டேன். இதை கார்த்திக்கின் மனைவி அர்ச்சனா தடுத்த நிறுத்தவில்லை என்று தான் சொல்லப்படுகிறது. மன்னி அவரது தம்பிகளின் உதவியால் கோயம்புத்தூரில் முதியோர் இல்லத்தில் ஒரு ரூம் குடில் வாங்கி தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் அண்ணாவின் இறப்பிற்குப் பிறகு அவருக்கு தமிழக அரசின் பென்சன் தொகையும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கார்த்திக் தனது வாழ்க்கையில் மிகவும் முன்னேற உறுதுணையாக இருந்த தமது பாட்டியின் இறுதிச் சடங்கிற்கு இறப்புச் செய்தி தெரிந்தும் வரவில்லை என்பது மிகவும் மன வருத்தத்தைக் கொடுக்கும் செய்கையாகும். கார்த்திக் தனது அம்மா – மற்ற நெருங்கிய உறவினர்களின் தொடர்ப்பை ஒரே அடியாகத் தவிர்ப்பதகாகத்தான் தெரிகிறது. இப்போது கார்த்திக் IATA-ல் ஸ்பெயினில் வேலையில் இருப்பதாகவும், அவன் மனைவியும் ஸ்பெயினில் எம்பசியில் வேலையில் இருப்பதாகவும் தெரிகிறது. தங்கள் இரண்டு குழந்தைகளுடன் அங்கே இருப்பதாகப் படுகிறது. அவர்கள் இருவரின் வாட்ஸ் ஆப் நம்பர் கிடைத்து 26 நவம்பர் 2022 அன்று மெயில் அனுப்பினேன். ஆனால் அதற்கு இதுவரை பதில் இல்லை. (கார்த்திக் போன் நம்பர் – 91- 9819071400 & அர்ச்சனா கார்த்திக் – 91 – 9769734290). அண்ணாவின் பிடிவாத குணம் கார்த்திக்கிடம் இருக்கிறது என்று தான் படுகிறது. இருப்பினும் அவனும் – அர்ச்சனாவும் – அவர்களது இரண்டு மகன்களும் க்ஷேமமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன். அத்தியாயம் 11 – பாட்டி கமுதிச் சித்தப்பா வீட்டில் வசித்த கதை அப்பா இறந்த பிறகு பாட்டிக்கு தனது இரண்டாவது பையனான ஈஸ்வர ஐயருடன் ஜாகை இருக்க ஆசை. என் சித்தப்பா ஈஸ்வர ஐயரும் ஏதோ கடமை என்று நினைத்து தமது அம்மாவையும் தான் வசிக்கும் கமுதிக்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். அப்பாவுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு பேர்கள். ஈஸ்வர சித்தப்பா மூத்தவர். இளையவர் ராமையா சித்தப்பா. அப்பா தான் இருவருக்கும் மூத்தவர். ராமையா சித்தப்பா வேறு ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு ஹோட்டலில் சரக்கு மாஸ்டராக திருநெல்வேலியில் வேலை செய்து கஷ்ட ஜீவனம். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. அவரது தொடர்பு எங்களுக்கு அதிகம் இல்லை. பாட்டியும் அதைப் பற்றிக் கவலை கொண்டதாகவோ, அதைப் பற்றிய தகவலை அறியவேண்டு மென்ற அவா கொஞ்சம் கூட இல்லை. ஒருவேளை ராமையா சித்தப்பா வேறு ஜாதி பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்ட துக்கம் காரணமாக, அவரை அதற்காகவே தாயாக இருந்தும் ஏற்றுக் கொள்ள விழையவில்லை என்று தான் தோன்றுகிறது. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள திம்மராஜபுரம் என்ற கிராமத்திற்கு எங்கள் உறவினர் ஒருவரை – (அங்கிச்சி சித்தி என்று சொல்வார்கள் – பாட்டிக்கு பெண் குழந்தை இல்லாததால் இந்த அங்கிச்சித்தியையே தனது பெண்ணாகப் பாவித்து அன்பு காட்டுவார்)- சந்திக்க துணை வேண்டி, நானும் அம்மாவும் அதற்கு ராமையா சித்தப்பா சரக்கு மாஸ்டராக வேலை செய்யும் ஹோட்டலுக்கு சுமார் இரவு எழு மணிக்குச் சென்றோம். ராமையா சித்தப்பா என் அம்மாவிடம் அளவிடமுடியாத அன்பும், மரியாதையும் கொண்டவர். அம்மாவும் அவரைப் பற்றிய எந்த விபரத்தையும் கேட்கமாட்டார். அவரே சொன்னால் தான் உண்டு. ‘அங்கிச்சித்தியை திம்மராஜபுரம் போய்ப் பார்க்கணும்.. துணைக்கு நீங்க வரணும்’ என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் ‘ஆஹா, அதெற்கென்ன .. வந்தால் போச்சு’ என்று சொன்னதும் ‘டே, சங்கரா! வாடா உள்ளே ..ஸ்வீட் காரம் காப்பி சாப்பிடு’ என்று என்னை அன்போடு அழைத்து, பெஞ்சியில் உட்கார வைத்து தாமே அவைகளை ஒரு வாழை இலையில் தண்ணீர் விட்டுத் துடைத்து என் முன்னே வைத்தார். ‘சாப்பிடு .. காப்பி அப்பறம்’ என்று சொன்னவர் அம்மாவிற்கு ஹோட்டலில் சாப்பிட மாட்டார் என்பதால் ‘காப்பி மட்டுமாதவது குடிக்கலாமே ..’ என்பதற்கு அம்மா சரி என்று தலை ஆட்டி, அம்மாவிற்கு காப்பியை என் சித்தப்பாவே ஆற்றிக் கொடுத்தார். அம்மா ஹோட்டலுக்குள் வராமல் வெளியிலேயே நின்று கொண்டு குடித்தார். அதன் பிறகு ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு தமது வெற்றிலை டப்பாவை எடுத்துக் கொண்டு எங்களுடன் வர ஆயத்தமானார். அதற்குள் ஓரிரண்டு வெற்றிலையை தமது வேஷ்டியில் துடைத்து பாக்கு – சுண்ணாம்பு தடவி புகையிலையுடன் வாயில் போட்டுக் கொண்டு எங்களுடன் வரத் தயாரானார். திருநெல்வேலியில் உள்ள திம்மராஜபுரம் ஒரு சில கிலோ மீட்டர் இருக்கும். பஸ் வசதி கிடையாது. வண்டி வைத்துச் செல்ல அப்போதைய நிலைமையில் சாத்தியமில்லை. ஆகையால் ராமையா சித்தப்பா – அம்மா – நான் ஆகிய மூவரும் கால் நடைப் பயணத்தைத் தொடர்ந்தோம். அன்று பவுர்ணமி. நிலவில் பாதை நன்கு பளிச்சென்று ரம்மியமாக நடப்பதற்குக் கஷ்டமில்லாமால் இருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பாதை வண்டிப் பாதை. கிட்டத்தட்ட ஒத்தையடிப் பாதை என்று தான் சொல்ல வேண்டும். அந்த பவுர்ணமி நிலவில் பாதையின் இருபுறமும் உள்ள வயல்கள் பச்சைப் பசேல் என்று நெற்கதிர்களால் அந்த நிலா ஒளியில் ஜொலித்தன. காற்றில் முற்றிய நெற்கதிர்கள் அசைந்தாடிய அந்தக் காட்சியை இப்போதும் நினைக்கும் போது மனதிற்கு ஆனந்தமாக உள்ளது. ராமையா சித்தப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டே நடந்து வந்தார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ராமையா சித்தப்பாதான் அதிகமாகப் பேசினார் என்ற நினைப்பு. அவரும் மெய்மறந்து அம்மாவிடம் மனம் விட்டுப் பேசி ஆத்ம சாந்தி பெற்றிருக்கலாம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ராமையா சித்தப்பாவின் வாழ்க்கை கஷ்ட ஜீவனம் தான். என்றாலும் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் உழைத்து அதனால் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு திருப்தி அடையும் ஒரு ஆத்மா. சுமார் ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலேயோ நடந்து திம்மராஜபுரம் சேர்ந்தவுடன் ராமையா சித்தப்பா எங்களிடம் விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார். அதன் பிறகு அவரை நாங்கள் சந்திக்கவே இல்லை. தொடர்பும் இல்லை. அவர் இறந்தது கூட எங்களுக்குத் தெரியாது. ஈஸ்வர சித்தப்பாவின் குடும்பம் பெரியது. ஒரு பையன், இரண்டு மூன்று பெண்கள் என்பதாக அவர் குடும்பம் கமுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி அதன் வருமானத்தில் ஜீவனம். ஈஸ்வர சித்தப்பா ஸ்தூல சரீரம். தூய வெள்ளை வேஷ்டிதான் கட்டுவார். காவித் துண்டைப் போர்த்திப்பார். அது பட்டுப் போல் பள பள என்று ஜொலிக்கும். ‘சித்தப்பா! உங்கள் காவித் துண்டு ஏ ஒன்!’ என்று ஒரு தரம் சொன்னதும் அவர் உடனே அவர் ஒரு புதுக் காவித் துண்டை எனக்கு அன்பளிப்பாக அளித்தார். நானும் அதை ரொம்பவும் விரும்பி அணிந்து கொண்டேன். ஈஸ்வர சித்தப்பா பலவிதமான இடங்களில் கஷ்டப்பட்டு இறுதியில் கமுதியில் ஹோட்டல் திறந்த பிறகு அவரின் கஷ்டங்கள் ஓரளவுக்கு தீர்ந்தது என்று சொல்லலாம். அந்த ஹோட்டலை நடத்த அவரது மகன் கணேசன் உதவியாக இருந்திருந்திருக்கிறார். கணேசனுக்கும் பல குழந்தைகள் – ஆண்கள் – பெண்கள் என்று. ஈஸ்வர சித்தப்பா தாம் பட்ட கஷ்டங்களை எங்களிடம் சுவைபடச் சொல்லுவார். தான் கோயிலில் மடப்பள்ளியில் வேலை செய்ததைப் பற்றியும் விவரிப்பார். தம் பேச்சில் அடிக்கடி கெட்ட வார்த்தைகளைச் சொல்லுவார். வீட்டுப் பெண்கள் இருப்பதையும் மறந்து பேசுவார். அந்த வார்த்தைகள் தான் அவருக்கு உந்து சக்தியாக மேற்கொண்டு பேச உத்வேமகம் அளிக்கும் என்று நினைக்கிறேன். அதைப் பற்றி அவர் கவலையே படமாட்டார். ஒருவேளை அது தவறு என்ற நினைப்பே அவருக்கு உண்டாகாமல் இருப்பதால் தான் அவரது பேச்சு இப்படி அமைந்து விடுகிறது என்று நினைக்கலாம். ஈஸ்வர சித்தப்பா பாட்டிய அழைத்துக் கொண்டு கமுதி சென்றார். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே பாட்டிக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. சித்தப்பா பாட்டியை தனியாக ஒரு வீட்டில் குடியமர்த்தி இருந்தார். தன்னந்தனியாக இருந்திருக்க வேண்டும். ஹோட்டல் சாப்பாடு தான். அதுவும் பாட்டிக்குப் பிடிக்காமல் இருக்கலாம். பாட்டி தாம் சென்னைக்கு எங்களுடன் இருக்க சித்தப்பாவை வேண்டியும் காலம் கட்த்தினார். பாட்டி சித்தப்பாவின் ஒரு பெண்ணை அழைத்து எங்களுக்கு தன்னை அழைத்துக் கொண்டு போகும் படி ஒரு கடிதம் எழுத வேண்டினார். அதற்கு அந்தப் பெண் ‘ஆமாம், கடிதாசி போட்ட உடன் உன்னை உடனே கூட்டிக் கொண்டு போகப்போறா ? ..’ என்று கேலி பேசி இருக்கிறாள். பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு கடிதம் எழுதி எங்களுக்கு அனுப்பி, அந்தக் கடிதம் வந்து சேர்ந்தது. அந்தக் கடிதம் வந்தவுடனேயே அம்மா அண்ணாவை கமுதிக்கு அனுப்பி வைத்தார். அண்ணா கமுதிக்கு உடனே பாட்டியை கூட்டிக் கொண்டு போக வந்ததைப் பார்த்ததும் அங்குள்ள அனைவருக்கும் – ஈஸ்வர சித்தப்பா உட்பட – ரொம்பவும் ஆச்சரியம் – அதிர்ச்சி. ‘டீ பொண்ணே இங்க வா … நீ என்ன சொன்னே ? என்னக் கூட்டிண்டு போக யார் வரப்போறான்னு தானே ! இப்போ பார்த்தையா ? ஒரு கடுதாசி – ஓடி வந்துட்டான் பார் என் பேரன் சேது !’ என்று என் பாட்டி எல்லார் முன்னிலையும் சொல்ல அனைவருக்கும் தலை குனிவு. ஈஸ்வர சித்தப்பா உட்பட. சென்னைக்கு பாட்டியை அனுப்புவதற்கு முன்னதாக ஈஸ்வர சித்தப்பா பாட்டியுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார். அதை அவர் ஞாபகார்த்தமாக இருக்கட்டும் என்று எடுத்திருக்கலாம். அந்தப் போட்டோவே பல முறை பாட்டியுடன் பேச ஒரு பேச்சுப் பொருளாக மாறியது. ‘பாட்டி ! போட்டோவிலே நீ ரொம்ப நன்றாக இருக்கிறாய் ..’ என்று சொன்னால், ‘அந்தப் போட்டோவை எடு..’ என்று சொல்லி கண் பார்வை குறைவினால் கண்களுக்கு வெகு அருகிலே வைத்துக் கொண்டு வெகு நேரம் பார்த்துக் கண் கலங்குவார். ‘ஆமாம், போட்டோ அம்மாவுக்கு சாப்பாடு ஒன்னும் வேண்டாம் .. காசு மிச்சம் ..’ என்று தனகுத்தானே சொல்லிக் கொள்வார். ஆனால் ஈஸ்வரசித்தப்பா போட்டோ எடுத்ததையும் ஒரு பெருமையாகவே பாட்டி சொல்லுவார். நாங்கள் இருந்த 17 – C, சூரப்ப முதலித் தெரு திருவல்லிக்கேணி குடியிருப்பு முதல் மாடி. மாடியில் பாத்ரூம் குளிப்பதற்கு மட்டும் தான். கழிப்பறை கீழ் வீட்டுக் குடித்தனக்காரர்களுக்கும் எங்களுக்கும் பொதுவானது. கீழே பக்கத்தில் கைப்பம்பு மூலம் அடித்து தண்ணீர் பிடிக்க வேண்டும். அதுவும் இருவருக்கும் பொதுவானது. பாட்டி செங்குத்தான பல படிகள் இறங்கித் தான் மலம் கழிக்கச் செல்ல வேண்டும். காலை – மாலை இரு வேளைகளும் இந்தப் படிகள் இறங்க வேண்டிய நிலை. மலம் கழித்த பிறகு பக்கெட்டில் கைப் பம்பை அடித்து தண்ணீர் மொண்டு கக்கூசைக் கழுவவேண்டும். அத்துடன் பாட்டிபடி ஏறுவதையும் கவனிக்க வேண்டும். ஒரு நாள் நான் பாட்டியை கக்கூசுக்கு மலம் கழிக்க படிமூலமாக அழைத்துச் சென்று உதவினேன். பிறகு பாட்டி நான் கக்கூசை தண்ணீர் எடுத்து கழுவும் வரை காத்திருந்து பிறகு என் உதவியுடன் படி ஏறுவார். அந்த நாளில் பாட்டி நான் பைப்பில் தண்ணீர் அடித்து மலத்தை சுத்தம் செய்வதற்குள் எனக்காக காத்திருக்காமல் படி ஏறுவதைப் பார்த்து நானும் பாட்டிக்கு படி ஏற உதவியாகச் சென்றேன். அதற்குள் கீழ்க் வீட்டு அம்மாள் ‘கக்கூசை சுத்தம் செய்யாமல் என்ன இது …’ என்று மிகவும் கோபமாக கத்தி அந்த வீடே அதிர திட்டினாள். நான் உடனே கீழே வந்து தண்ணீர் கொண்டு கக்கூசை நன்கு கழுவினேன். அந்த கீழ் வீட்டு அம்மாளிடமும் மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அதற்கும் என்னை வாயில் வந்தபடி திட்டினாள். இது வீட்டுக்காரர் சீதாராம நாயுடு காதுக்கு எடடிய உடன் எங்கள் வீட்டிற்கு மேலேயே பாத் ரூமிலேயே கக்கூஸ் கட்டி உதவினார். அவரே ஒரு மேஸ்திரியானதால் இது உடனேயே சாத்தியமானது. நாயுடுவும் நாங்கள் வயதான பாட்டியை மிகவும் அன்பாகக் கவனிப்பதைப் பார்த்து அவரது மனைவியிடம் சொல்லி புகழ்வார். பாட்டி சில மாதங்களில் எழுந்து நடக்க முடியாத அளவில் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இரண்டு ரூம் தான் எங்கள் குடியிருப்பு. முன் அறை – அடுத்த அறை – முன் அறையில் பாட்டி – நாங்கள் படிப்பு, படுக்கை என்று இருக்கும். அடுத்த அறை அடுக்களை மற்றும் அம்மா, அக்கா – படு ப்பதற்கும் பயன்படுத்துவோம். நானும் – அண்ணாவும் முதல் அறையில் படுப்போம். ஆனால் வீட்டின் முன் பெரிய மொட்ட மாடி உண்டு. ஆகையால் அங்கும் மழை பெய்யாத நாட்களில் படுப்போம். இந்த மொட்ட மாடி இருப்பதால் வேறு நபர்கள் வந்தாலும் படுப்பதற்குச் சிரமம் இல்லை. ஈஸ்வர சித்தப்பா வந்தால் இந்த மொட்டை மாடியில் தான் படுப்பார். அதில் அவருக்கு ஒரு அலாதியான ஆனந்தம். மேலே உள்ள நீல ஆகாயத்தையும், நிலவையும் ரசிப்பார். பாட்டியின் உடம்பு மிகவும் கவலைக் கிடமாக இருப்பதால் ஈஸ்வர சித்தப்பாவுக்கு தகவல் கொடுத்தோம். அவரும் வந்தார். ஆனால் பாட்டியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தாலும், உயிர் ஊசலாடியபடி இருந்தது. உயிர் பிறியவில்லை. இதைப் பார்த்த ஈஸ்வரசித்தப்பா ‘இந்தக் கிழவியின் உயிர் ஊசலாடுகிறது. ஆனால் போகவில்லை. … ஏதோ செத்து விட்டது போல் தகவல் கொடுத்து நானும் ஓடிவந்தேன். .. எவ்வளவோ வேலை …’ என்று வெளிப்படையாகவே சொன்னதைக் கேட்க நான் மிகவும் வருந்தினேன். ‘இது தான் தன் தாய்க்குக் கொடுக்கும் மரியாதையா ? ஏன் இப்படி ஈஸ்வர சித்தப்பா நடந்து கொள்கிறார்!’ என்று அவரிடம் ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது. சித்தப்பாவின் சித்தப்படியே பாட்டியின் மூச்சு படிப்படியாக வெளியே சென்று விட்டது. இதை நாங்கள் பாட்டியின் பக்கத்தில் இருந்து பாட்டி இறப்பதைப் பார்த்தோம். ‘முருகா முருகா …கிருஷ்ணா கிருஷ்ணா .. ராமா ராம .. ‘ என்று நாங்கள் உரக்க பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போதே பாட்டியின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டது. அப்பாவின் மரணத்திற்குப் பிறகு பாட்டியின் மரணத்தையும் நேரிலே பார்த்து, அவரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்தோம். பாட்டியின் உடலை திருவல்லிக்கேணி சுடுகாட்டில் தகனம். அப்பாவின் அஸ்தியை கரைத்த அதே மெரினா கடற்கரை கடலில் – விவேகாநந்தர் நினைவிடத்திற்கு நேர் எதிரே - அன்னிபெசண்ட் சிலைக்கு நேர் எதிரே உள்ள கடலில் பாட்டியின் அஸ்தியையும் கறைத்தோம். மற்ற காரியங்களை சித்தப்பா கமுதியில் செய்வதாகச் சொல்லிப் புறப்பட்டுப் போனார். ஆனால் நாங்கள் அதற்கு கமுதிக்குச் செல்ல வில்லை. சித்தப்பா பாட்டிக்கு மற்ற சடங்குகளை முறைப்படி செய்தாரா ? என்பதும் ஒரு கேள்விக் குறியே ! அத்தியாயம் 12 – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் தலமை அலுவலகம் நெய்வேலிக்கே மாற்ற முடிவு செய்யப்பட்டது. என்னுடைய அப்போதைய நிலையில் சென்னை வேலை இருந்தால் தான் பலவிதமான கடன்களையும் அடைக்க முடியும் என்பது பிரத்தஷ்டமான உண்மை. தலைமை அலுவலகம் நெய்வேலிக்கு மாற்றப் பட்டாலும் ஒரு மிகச் சிறிய ஆபீஸ் சென்னையில் இருக்க உத்திரவு ஆனது. ஏனென்றால் பலவிதமான பெரிய பெரிய இயந்திரங்கள் சென்னை ஹார்பரிலிருந்து நெய்வேலிக்கு நெடுஞ்சாலை மூலமாக அனுப்ப வேண்டும். ஒரு இன்ஜினியர், ஒரு ஹெட் கிளார்க், இரண்டு கிளார்க்குகள் என்ற அளவில் ஒரு சிறிய அலுவலகம் இயங்க முடிவானது. அதற்கு நான் விண்ணப்பிக்க அந்த கிளார்க் வேலை எனக்குக் கிட்டியது. இதனால் ஒரு பெரும் நிம்மதி உண்டானது. அந்தச் சமயத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் டைப்பிஷ்ட் வேலை கிட்டியது திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதியின் அருள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அந்த ஸ்டேட் பாங்க் வேலை எனக்குக் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தவுடன், நான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை மனம் உருகி பல நாட்கள் வேண்டியதுண்டு. கண்ணீர் விட்ட நாட்களும் உண்டு. என்ன ஆச்சரியம்? ஒரு நாள் எனக்கு வங்கியிலிருந்து டைப்பிஷ்ட் வேலைக்கு உத்திரவாகி வேலைக்கு பாரீஸ் முனையில் உள்ள சிவப்பு ஸ்டேட் பாங்க் சென்னை தலைமையகத்தில் இரண்டாவது மாடியில் உள்ள ஜெனரல் செக்ஷனில் சேர்ந்தேன். என் வாழ்க்கையில் திருச்செந்தூர் முருகன், திருநெல்வேலி நெல்லையப்பர் – காந்திமதி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, மைலாப்பூர் கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் ஆகிய தெய்வங்கள் தான் துணை நின்று வழி நடத்தி உள்ளன. பிறகு அம்மா சொல்ல சிங்கிகுளம் கைலாசநாதர் – ஆவுடை அம்மன், சிங்கிகுளம் மலைப் பகவதி ஆகிய தெய்வங்களும் சேர்ந்து என் வாழ்வை வளப்பெறச் செய்துள்ளன. நெய்வேலை லிக்னட் கார்ப்பரேஷனில் வேலையில் சேர்ந்ததிலிருந்து வேஷ்டியில் தான் ஆபீஸ் போய் வருவேன். ஸ்டேட் பாங்கில் வேலைச் சேர்ந்ததும் அதே வேஷ்டியில் செல்வதைப் பார்த்த கீழ் வீட்டு குடுத்தனக்கார அம்மா ‘பாங்கிலே வேலை – பாண்ட் போட்டுக்கொண்டு ஆபீஸ் போங்கோ’ என்று உத்தரவாகவே என்னிடம் சொல்ல நான் அந்த நாளிலிருந்து பாண்ட் – சட்டைக்கு மாறிவிட்டேன். பல வருடங்கள் அதே சிவப்புக் கட்டிடத்தில் வேலை செய்துள்ளேன். அந்த இரண்டாவது மாடியில் அமைந்துள்ள டிஸ்டிரிக் 3 – என்ற செக்ஷனில் மாறி வேலை செய்துள்ளேன். அதே கட்டிடத்தின் முதல் மாடியில் ஸ்டேட் பாங்கின் சென்னை கிளை செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதில் தான் உபன்யாசகர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆபீசராக வேலையில் இருந்தார். அவர் எந்தவிதமான மாற்றலும் இன்றி பல வருடங்கள் ஒரே சீட்டில் வேலை பார்த்ததால் வங்கியில் டிரான்ஸ்பர் கொள்கையால் அவர் கோயம்புத்தூருக்கு மாற்றலாகினார். இதில் அவருக்கு இஷ்டமில்லை. ஆனால் இந்த மாற்றமே அவருக்கு கோயம்புத்தூரில் உபன்யாசகர் என்ற ஹோதாவில் புகழும், பணமும் குவிந்தன. அவரது தம்பியும் ஸ்டேட் பாங்கில் வேலையில் இருந்து பாலகிருஷ்ண சாஸ்திரிகளுடன் உபன்யாசத்திற்கு பக்க வாத்தியம் போல் செயல்பட்டவர். பக்கத்தில் உள்ள பாரீஸ் கார்னர் டேர் கவுஸில் அமைந்துள்ள பஞ்சாப் நேஷனல் பாங்கில் தான் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் லா.ச. ராமாமிர்தம் ஸ்டெனோவாக வேலையில் இருந்தார். அவரை அண்ணா மூலம் முன்பே பரிச்சயம் உண்டு. ஆகையால் ஸ்டேட் பாங்கில் சேர்ந்தவுடன் அவரும் எங்கள் வங்கிக் காண்டீனில் டிபன் சாப்பிட வருவார். ‘உங்க காண்டீன் டிபன் சீப் அண்ட் தி பெஸ்ட்’ என்று அவர் சர்பிகேட் கொடுப்பார். ‘உங்கள் காண்டீனில் வெளியாட்களை அனுமதிப்பவில்லை..’ என்று சொன்னதும், நான் உடனே ‘என்னுடன் வாருங்கள் .. உங்களுடன் டிபன் சாப்பிடுவது என் பாக்கியம்’ என்று அவரை வற்புறுத்தி பல நாட்கள் டிபன் சாப்பிட்டு பல இலக்கிய அலசல்களில் ஈடுபட்டுள்ளோம். என்னை சின்னப் பையன் என்று ஒதுக்காமல், என்னுடன் அந்த பெரிய புகழ் பெற்ற எழுத்தாளர் தம் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துள்ளார் என்பதை இப்போது நினைக்கும் போதும் இனிக்கிறது. இந்த நேரத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அண்ணா, என் இலக்கிய நண்பர் நாகராஜன், நான், லா.ச.ராமாமிர்தம் (அவரும் பல வருடங்கள் திருவல்லிக்கேணி ஜாகை தான் – அவர் வீட்டிற்கும் நான் சென்றுள்ளேன்) வல்லிக்கண்ணன் – அவரது அண்ணா அசோகன் ஆகிய இருவரும் குடியிருக்கும் இருசப்பகிராமணித் தெருவுக்குப் பக்கத்தில் உள்ள ஆசிரமம் போன்ற சிறிய வயல் சூழ்ந்த குடிலுக்குச் சென்றோம். அப்போது வல்லிக்கண்ணன் ஹனுமான் என்ற வார இதழில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த பத்திரிகை அலுவலம் ஹனுமந்த லாலா தெருவில் இருந்ததாக ஞாபகம். அப்போது பேச்சு வாக்கில் லா.ச.ராமாமிர்தம் ‘என் கதைகளைப் படித்து விட்டு கண்ணீர் விட்டதுண்டா?..’ என்று வல்லிக்கண்ணனை நேரடியாகக் திடீரென்று கேட்கவும். வல்லிக்கண்ணனும் உடனேயே எந்தவிதமான தயக்கமுன் இன்றி ‘இல்லை..’ என்று சொன்னார். அதை விளக்கும் விதமாக வல்லிக்கண்ணன் கூறியதாவது: ‘உங்களின் எழுத்து புரிவதற்குச் சற்று சிரமமாகும். ஆகையால் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு இது ஒரு தடைக்கல்லாகும். அப்படி இருக்கும் போது உங்கள் கதைகள் கண்ணீரை வரவழைக்கும் என்று எதிர்ப்பார்ப்பு நிறைவேறாது ..’ வல்லிக்கண்ணன் தைரியமாக தமது விமரிசனங்களையும், கருத்துக்களையும் எந்தவித ஒளிவு மறைவின்றி சொல்லும் குணம் கொண்டவர். அதுவே அவரது பலம் – பலவீனம் என்று கூடக் கணிக்கலாம். நான் அந்த சிவப்புக் கட்டிடத்தில் வேலையில் இருந்த சமயத்தில் இரண்டு துயர சம்பவங்கள் நடந்துள்ளன. தரைத் தளத்தில் சிறு தொழில் பகுதி இயங்கி வந்துள்ளது. அது சென்னை மெயின் கிளையின் கீழ் செயல்படும் செக்ஷனாகும். ஹார்பரில் மீன் பிடிக்க மின் படகு வாங்க கடன் வழங்கி அந்தப் படகு முதல் முறையாக வெள்ளோட்டம் விட இருந்தது. அப் படகில் அந்த சிறு தொழில் பகுதியில் வேலை செய்யும் வங்கி அலுவலர்கள் பலரை அழைத்துக் கொண்டு கடலில் செலுத்தப் பட்டது. ஆனால் துரதிஷ்ட வசமாக அப்படகு கடலில் மூழ்கி எங்களது வங்கியில் வேலை பார்த்த சுமார் ஐந்தாறு பேர்கள் நீரில் மூழ்கி இறந்து விட்டனர். அதில் எனது அத்தியந்த நண்பர்கள் மூன்று பேர்கள் இருந்தனர். நான் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுடன் சேர்ந்து உடலை உறவினர்களிடம் சேர்ப்பதில் ஈடுபட்டேன். அந்த மூவரும் கல்யாணம் ஆகாத பிரம்மசாரிகள். அதிலும் ஒருவன் என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகியவன். நாங்கள் ஒன்றாக சி.ஏ.ஐ.ஐ.பி. பரிட்சைக்கு கோச்சிங்கிளாஸ் சென்றுள்ளோம். அப்போது அவனும் என்னுடன் மனம் விட்டுப் பேசுவான். அவனும் டைப்பிஷ்ட் தான். ஆனால் அவன் டைப் அடிப்பதின் வேகம் நம்பமுடியாத அளவு அதிகம். மேலும் இந்த அசுர வேகத்தில் டைப் அடித்தாலும் ஒரு பிழையையும் நாம் காண முடியாது. அது மட்டுமல்ல. டைப் அடிப்பதில் எந்தவிதமான அலுப்போ சலிப்போ அவனிடம் காண முடியாது. இந்த அவனது திறமையை பல நேரங்களில் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறேன். நானே முதல் முறையாக இறந்த உடல்களை சுமந்து உறவினர்கள் வீட்டில் சேர்த்தேன். கடலில் மூழ்க்கியதாலும், போஸ்ட் மார்ட்டம் செய்த உடலாக இருப்பதாலும் துர்நாற்றம் அடிக்கத்தான் செய்தன. அதைச் சரிசெய்ய பல பாட்டில்கள் வாசனைத் திரவியங்களைத் தெளித்துக் கொண்டே இருந்தோம். அந்த என் நண்பர்களின் அம்மா – அப்பா – மற்றும் கூடப் பிறந்தவர்கள் ஆகியவர்களின் அழு குரல்கள் பல நாட்கள் என் மனத்தை அழுத்தி வேதனைப் படுத்தி உள்ளன. இன்னொரு துயர சம்பவம் – என் வங்கியில் பணி புரிந்து வந்த இருவர் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரின் காதலும் அனைவருக்கும் தெரியும். இருவரும் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தவர்கள். அந்தப் பையன் தன் காதலியை தனது பைக்கில் கூட்டிச் செல்வது அடிக்கடி நடக்கும். அவர்கள் இருவரும் கல்யாணம் செய்வதாகவும் முடிவெடுத்துள்ளனர். இந்த சமயத்தில் ஒரு நாள் பைக்கில் அந்த இருவரும் சென்றுள்ளனர். ஹார்பர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள திருப்பத்தில் திரும்பிச் செல்வது தான் அவர்களின் அன்றாட வழக்கம். அப்படித் திரும்பும் தருணத்தில் அரசுப் பேரூந்து ஒன்று அவர்களது பைக்கை இடிக்க அதில் அந்தப் பெண் ஸ்தலத்திலேயே அடிபட்டுச் செத்துவிட, பைக் ஒட்டிய இளைஞனுக்கு ஒரு அடியும் படாமல் தப்பினான். இந்தத் துக்கம் தாங்காமல் அந்தக் காதலன் துடி துடித்து அதே மன நிலையில் பத்திரிகையின் வாயிலாக சூளுரைத்தான்: “என் காதலி இறந்து விட்டாள். இனி நான் ஒருபோதும் வேறு ஒருத்தியைக் கல்யாணம் செய்ய மாட்டேன். இது தான் அவளுக்கு நான் தரும் காணிக்கை.” ஆனால் அவன் பிறகு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் என்பது வேறு விஷயம். இன்னொரு பிரபலமும் என் வங்கியில் வேலையில் சேர்ந்தார். அவர் தான் பிற்காலத்தில் மிகவும் புகழ் வாய்ந்த சினிமா பின்னணி பாடகி வாணி ஜெயராம் ஆவார். அவர் குரல் எவ்வளவு அருமையாக உள்ளதோ, அதே போல் அவரும் ஒரு பேரழிகிதான். அவரும், அவரது தோழியும் பஸ் 31-ம் நம்பரில் வருவார்கள். அவர்கள் மைலாப்பூரில் ஹாமில்டன் ப்ரிட்ஜ் பக்கத்தில் குடியிருப்பதால், பஸ் புறப்படும் இடத்திலிருந்தே வருவார்கள். நானும் ஐஸ் ஹைஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள மசூதி ஸ்டாப்பில் தான் 31-ம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து ஆபீஸ் செல்வது வழக்கம். ஸ்கூட்டர் வாங்கிவதற்கு முன்பிருந்தே இதே பஸ் சவாரி தான். பல நாட்கள் அவர்கள் ஏறிய பஸ்சில் பயணத்துள்ளேன். ஒரு நாள் வங்கி ஸ்டாப்பில் இறங்கவும் வாணி ஜெயராமும் அவரது தோழியுடன் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது பக்கத்திலுள்ள இந்தியன் வங்கியில் வேலை செய்யும் ஒரு ஊழியர் – பல முறை அவர் இதே பஸ்சில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன் – வாணி ஜெயராமுக்கு அருகில் சென்று ‘என்னுடன் சினிமாவிற்கு வருவீர்களா? ..’ என்று கேட்டது அந்த நபருக்குப் பின்னால் நடந்து வரும் என் காதுகளில் தெளிவாகக் கேட்டது. ‘I will chappal you ..’ – என்று வாணி ஜெயராம் தமது செருப்பைப் பாவனையாக எடுப்பது போல் குனியவும், அந்த ஆசாமி அவசரமாக அந்த இடத்தை விட்டு ஓட்டமும் நடையுமாகச் சென்று விட்டான். என் அண்ணா ஒரு நாள் என் மீது ஏதோ ஒரு காரணத்திற்காக அடங்காத கோபம் கொண்டார். அதன் விவரம் இப்போது ஞாபகம் இல்லை. என் அண்ணா அந்த நாளில் வங்கிக்கு வந்து என் சீட்டிற்கே மேலே வந்து விட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி. உடனே நான் சீட்டிலிருந்து எழுந்து அண்ணாவுடன் லிப்ட் மூலம் கீழே வந்தேன். கீழே வந்தடன் காண்டீனுக்குப் போகலாம் என்று நான் சொல்வதையும் கேட்காமல் என்னை கோபமாக முறைத்துப் பார்த்தார். ‘என்னாடா உன் மனசிலே நினச்சுண்டிருக்கே !’ என்று என் கண்ணத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார். நல்ல வேளையாக அந்த சமயத்தில் எனக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் அங்கில்லை. எல்லையை மீறுவது அண்ணாவின் இயற்கைக் குணம். அதை மறப்பது என் குணம். அண்ணாவின் செயல்களை – எனக்கும் என் குடும்பத்திற்கும் கொடுத்த கொடுமைகளை நினைவில் வைத்திருந்தால், தொடர்ந்து அண்ணாவிற்கு உதவியது நடந்திருக்காது. இது சரியா – தவறா என்பதை விட, என் தலையெழுத்து – அனுபவித்துத் தான் தீரணும் என்று மனத்தைத் தேற்றிக் கொண்டிருக்கிறேன். அத்தியாயம் 13 – அண்ணாவின் தாங்கமுடியாத அராஜகங்கள் முன்னுரை: ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு சைத்தான் இருப்பதை மறுப்பதற்கில்லை. அந்த சைத்தானை உறங்க வைத்து யாருக்கும் ஊறு இழைக்காமல் வாழ்வை தர்ம வழியில் கடவுளைச் சாட்சியாக முன்னிறுத்தி வாழ்வை நேர்பட நடத்த வேண்டும். ஆனால் என் அண்ணாவின் உள்ளத்தில் உள்ள சைத்தான் அடிக்கடி வெளியில் வந்து எனக்கு வசவுகளையும், அடிகளையும், தீராத பணச் செலவுகளையும் உண்டாக்கி என் மனத்தில் ரணமாக பல நினைவலைகளை பதித்து விட்டன. அவைகளை மறந்து தான் நான் மீண்டும் மீண்டும் அம்மாவின் அன்புக் கட்டளையால் அண்ணாவிற்கு பல சமயங்களில் உதவி செய்துள்ளேன். எனது கல்யாணம் நடப்பதற்கு முன்பே நான் பட்ட கஷ்டங்கள் அனந்தம். என் கல்யாணத்திற்குப் பிறகும் அண்ணா இறக்கும் வரை தொடர்ந்தது என்பது தான் முற்றிலும் உண்மை. அண்ணா இப்போது உயிரோடு இல்லை. ஆகையால் இவைகளை ஏன் மறக்காமல் பதிவு செய்து அந்த ஆத்மாவின் சாபங்களைப் பெறவேண்டும் என்ற தயக்கம் இருந்தாலும், ஒரு சில மிகவும் முக்கிமான சம்பவங்களைச் சொல்வது அவசியாகப் படுகிறது. காலஞ்சென்ற என் அண்ணாவின் ஆத்மாவை முன்னிலைப் படுத்தி எதையும் மிகைப்படுத்தாமல் எழுத விழைகிறேன். என் டைரி கிழிப்பு: அண்ணா மன்னி சண்டையில் நான் தலையிட முடியாது. ஆனால் அம்மாவை அண்ணாவுக்குப் புத்தி சொல் என்று பல முறை சொல்லி இருக்கிறேன். அதன் காரணமாக அம்மாவும் அண்ணாவிடம் துன்பப் பட்டது தான் மிச்சம். மன்னி சென்னையில் உள்ள அவர்கள் உறவுக்காரர் வீட்டிற்கு அண்ணாவின் அடாத செயலால் சென்று விட்டார்கள். மன்னியைக் கூட்டிக் கொண்டு வர என்னை அண்ணா வேண்ட, அதற்கு ‘மன்னியைத் துன்புறுத்தக் கூடாது. அதற்கு உத்திரவாதமானால், நான் முயல்கிறேன்’ என்று அம்மாவும் அதற்கு ஒப்புக்கொண்டவுடன் மன்னியை திரும்பவும் வீட்டிற்கு அழைத்து வந்தும் அண்ணாவின் சைத்தான் விழித்துக் கொண்டு அனைவருக்கும் தீராத துக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ‘என் அழைப்பில் வந்த மன்னியை நீ துன்புறுத்துவது தகாது’ என்று தடுத்த என்னை திட்டி அடித்து வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை உண்டாகி விட்டது. வீட்டை விட்டுச் சென்ற நான் அன்று இரண்டு சினிமாக்கள் பார்த்து விட்டுத் தான் இரவு படுக்கத் தான் வீட்டிற்கு வந்தேன். எனது இந்த துயரச் சம்பவங்களை என் டைரியில் எழுதினேன். நான் வராண்டாவில் தான் ஒரு பாயில் படுப்பது வழக்கம். இருப்பது இரண்டு ரூம்கள். மன்னி அண்ணாவின் தொல்லை தாங்காமல் அம்மாவுடன் அடுக்களையை அண்டி உள்ள மிகச் சிறிய ரூமில் படுக்க வேண்டிய நிலையால் நான் வராண்டாவில் படுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். நன்றாக நான் ஒரு மப்ளரை பனிக்குப் பாதுகாப்பாக தலையில் கட்டிக் கொண்டு படுத்துறங்கிக் கொண்டிருந்தேன். தீடீரென்று என் மப்ளைக் கொண்டு என் கழுத்தை யாரோ இறுக்குவதாக உணர்ந்து திடுக்கிட்டு விழித்தேன். அண்ணா தான் மூர்க்கமாக என் கழுத்தை இறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அண்ணாவின் கையைத் தள்ளைக் கொண்டே எழுந்திருந்தேன். ‘என்னடா நீ … டைரியில் என்னைப் பற்றி எழுதி இருக்கே.. உன் மனசுலோ என்ன நினைச்சுண்டு இருக்கே .. உன்னை நான் சும்மா விடப் போவதில்லை. ..உன் டைரியைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டது போல் உன்னையும் கிழித்துப் போட்டுடுவேன்..’ என்று கோபமாகக் கத்தினார். இந்த அண்ணாவின் செய்கை எல்லை மீறியதாகப் பட்டது. அம்மாவிடம் சொல்லி நான் உடனேயே திருவல்லிக்கேணியில் லாட்ஜில் ரூம் பார்த்துச் சென்று விட்டேன். அம்மா இருப்பதால் அடிக்கடி சூரப்பமுதலி வீட்டிற்கும் வருவேன். அப்படி வரும் பொழுது ஒரு நாள் மளிகைக் கடைக்காரன் மன்னியிடம் ‘பணம் எப்போ கொடுப்பீங்க …’ என்று கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து, நிலைமையைப் புரிந்து கொண்டு உடனேயே சொசைட்டி லோன் போட்டு கடனை அடைத்தேன். என் வாழ்வில் வங்கியில் வாங்காத லோனே இல்லை. வட்டி கட்டுவதில் என் சம்பளத்தின் பெரும் பகுதியில் இடம்பெற்று இருக்கும். சம்பளத்தில் பிடித்தம் மிகவும் அதிகம் உள்ள ஆள் நானாகத்தான் இருக்கும். சென்னையில் அண்ணா நகர் கிழக்கு ஸ்டேட் பாங்க் வங்கியில் நகை லோன் வாங்க மனைவியுடன் சென்ற பொழுது அந்த கிளை மேலாளர் ‘உங்க மனைவியின் நகை எல்லாம் வைத்து விட்டீர்களே ! அவர்கள் கழுத்தில் நகையே இல்லையே!’ என்ற தோரணையில் கேட்டவுடன் நான் உண்மையிலேயே அதிர்ந்து விட்டேன். அப்போதிருந்த நிலையில் அந்த வங்கி மேலாளரை மனத்திற்குள் திட்டினேனே தவிர நேரிடையாக ஒன்றும் சொல்லாது மவுனம் சாதித்தது ‘சங்கரன் ஒரு மிளகாய் .. ஒரு சொல் தாங்கமாட்டன்’ என்ற பட்டமும் அப்போது காற்றிலே பறந்து விட்டது. நாசரேத் ரயில்வே ஸ்டேஷனில் என் கண்ணத்தில் ‘பளார்’: என் கல்யாணம் கரைக்குடியில் நடந்தது. அதற்கு என் ஆத்மார்த்த நண்பன் பி. கிருஷ்ணன், என் இலக்கிய நண்பர் நாகராஜன் இருவரும் வந்திருந்தனர். அவர்கள் இருவருக்கும் நான் தான் ரயில் பயண டிக்கெட் எடுத்திருந்தேன். என் அத்திம்பேர் கிருஷ்ணன் ரயில்வேயில் வேலை என்பதால் அவரே பயணம் செய்ய பாஸ் உண்டு. கல்யாணம் நடந்த இரண்டு நாட்கள் முடிந்தவுடன் நான் என் மனைவி என் அண்ணா, மன்னி, என் அக்கா – அத்திம்பேர் அவர்களது நான்கு குழந்தைகள் அனைவரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குப் பயணமானோம். அத்திம்பேருக்கு பாஸ் இருந்தும் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு அவர் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதால் அவரே அதற்கு ஏற்பாடு செய்து விட்டார் போலும். இதை என்னிடம் தெரிவிக்கவும் இல்லை. ஆனால் என் அண்ணாவிடம் அக்கா – அத்திம்பேர் இரண்டு பேர்களும் புகாராகத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அண்ணாவிடம் நான் பேச்சு வார்த்தை இல்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஒரே வீட்டில் பல வருடங்கள் இருந்தும் நான் அண்ணாவிடம் பேசுவது இல்லை. பேசினால் அது சண்டையாகத் தான் இருக்கும். அல்லது அண்ணாவிற்கு உதவி செய்ய தகவல்கள் அறியப் பேசுவதாக மட்டுமே இருக்கும். இந்த நிலை என் அக்கா – அத்திம்பேர் ஆகியவர்களுக்குத் தெரியும். ஆனால் என்னை இம்சைப் படச் செய்வதில் ஏனோ அவர்களுக்கு ஒரு குரூர சந்தோஷம் ஏற்படும். திருநெல்வேலி – திருச்செந்தூர் பாசஸ்சர் நாசரேத் ஸ்டேஷனில் நின்றது. அண்ணா – அத்திம்பேர் இறங்கி அருகிலுள்ள காபி ஸ்டாலுக்குச் சென்றார்கள். என் மனைவி தலைவலி என்பதால் ஒரு காப்பி வாங்கிக் கொடுக்க நானும் கிழே இறங்கி அதே காபி ஸ்டாலுக்குச் சென்றேன். ‘கிருஷ்ணனுக்கு டிக்கெட் வாங்கத் தெரியுது. அத்திம்பேருக்கு டிக்கெட் வாங்கத் தெரியலையா?..’ என்று என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டே என் கண்ணத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார் என் அண்ணா. அருகில் இருந்த அத்திம்பேர் இதைத் தடுக்க வில்லை. ஏன், ஒரு வார்த்தையும் அத்திம்பேர் என் அண்ணாவிடம் ‘பொதுவிடத்தில் இப்படி அறையலாமா? அதுவும் இப்போது தான் கல்யாணமாகி இருக்கும் இத்தருணத்திலா?’ என்ற எந்த சலனமும் இல்லை. ‘சங்கரனுக்கு இந்த தண்டனையும் வேண்டும்… இன்னும் வேண்டும் ..’ என்ற மனோநிலையில் தான் அத்திம்பேர் இருந்த்தாக நான் நிச்சயமாகச் சொல்ல முடியும். காப்பி வாங்காமல் வெறும் கையுடன், கண்களில் கண்ணீருடன் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டேன். என் கண்ணீரைப் பார்த்து என் மனைவும் கண் கலங்கினாள் – அதற்குறிய காரணத்தை அறியாமலேயே. ‘ஏன், நானும் என் மனைவியும் இவர்களை இப்படியே விட்டுச் சென்று விடக்கூடாது?’ என்று என் மனது தவியாய்த் தவித்தது. அம்மாவின் முகம் தான் அதற்கு ஒரு பெரிய தடையாக இருந்தது. எனக்குக் கல்யாணம் ஆகியும் என் அண்ணாவின் ஆத்துமீறலா? – என் மனம் ரத்தக் கண்ணீர் வடித்தது. திருச்செந்தூர் செந்திலாண்டவர் விடுதியில் அண்ணாவின் அத்துமீறல்கள்: மூன்று தனித் தனி ரூம்கள் புக் செய்தேன். என் ரூமில் நான், என் மனைவி, அம்மா. அண்ணா மன்னி ஒரு ரூமிலும், அத்திம்பேர் அவர்கள் குடும்பத்தினர் ஒரு ரூமிலும். அந்த முருகன் சந்நிதானத்திலும் ஒரே அடி தடி. சண்டை. இது தகாது, கூடாது – என்று என் அக்காவோ, என் அத்திம்பேரோ என் அண்ணாவிடம் சொல்லவே இல்லை. ஏன் இவர்களுக்கு இப்படிப் பட்ட நெஞ்சங்கள் என்று தான் நான் ஆச்சரியப் படுவதுண்டு. திருச்செந்தூரில் எங்கள் ஈஸ்வரச் சித்தப்பா – சித்தி வசித்து வந்தார்கள். அவர்களும் எங்கள் கல்யாணத்திற்கு வந்திருந்தனர். காரைக்குடியில் நடந்த கல்யாணத்தில் ஈஸ்வரச் சித்தப்பா நடந்து கொண்ட ஒரு சம்பவம் என் இதயத்தை ஈட்டி கொண்டு தாக்கியது. மாங்கல்ய தாரணம் ஆகி மனைவியின் காலைப் பிடித்து வலம் வரும் சடங்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் குனிந்து இருந்தேன். ‘மாப்பிள்ளைக்குச் சொட்டைத் தலை ..’ என்று எந்தவித சபை நாகரிகமும் தெரியாமல் சத்தமாகத் தெரிவித்து, அதில் ஒரு அற்ப சந்தோஷம் கொண்டார். ஆனால் இதை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வில்லை. ஈஸ்வர சித்தப்பா சென்னைக்கு வந்த போதெல்லாம் அவரை என் லாம்ரட்டா ஸ்கூட்டரில் பில்லியனில் என் மனைவைப் பார்ப்பதற்கு புரசவாக்கம் அழைத்துச் சென்றிருக்கிறேன். ஈஸ்வர சித்தப்பா மிகவும் ஸ்தூல சரீரம். ஸ்கூட்டரில் ஏறும் போது காலை ஸ்கூட்டரிலேயே வைத்து அழித்தி ஏறுவார். அப்போது ஸ்கூட்டர் சாயாமல் இருக்க என் பலம் கொண்ட மட்டும் பாலன்ஸ் செய்வேன். இதை எல்லாம் பார்த்து என் மைத்துனர்கள் ‘அத்திம்பேர், ஜாக்கிரதை … கொஞ்சம் அபத்தானது தான்’ என்று மிகவும் கவலையுடன் எச்சரிப்பார்கள். அண்ணா மன்னியை தன் இலையில் சாப்பிடக் கூடாது என்று கட்டளை இட்டிருப்பது எனக்குத் தெரியும். திருச்செந்தூரில் எங்கள் உறவுக்கார வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டிருந்தனர். முதலில் ஆண்கள் சாப்பிட்ட பிறகு பெண்கள் சாப்பிட ஆயத்தமானார்கள். அப்போது என் அக்கா அத்திம்பேர் எச்சில் இலையில் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்தார். ஆகையால் வேறு வழியின்றி மன்னி – என் மனைவி இருவரும் எச்சில் இலைகளில் தான் சாப்பிட வேண்டியதாயிற்று. இதற்கு மன்னிக்கு அண்ணாவின் அர்ச்சனை என் அக்காவின் உபயம். என் அக்காவின் பிடிவாத குணம் பிரசித்தி பெற்றது. சொற்கள் பிறரை தார்க்குச்சி போல் தாக்கும். அத்திம்பேர் என் அக்காவின் செய்கைகளைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். அப்போதெல்லாம் ‘இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?.. இதில் நான் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?’ என்று பதில் சொல்லி இருக்கிறேன். அம்மாவிடம் ‘ஏன் தம் மனைவியைப் பற்றி என்னிடம் குறை சொல்கிறார்?’ என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அப்படி குறை சொல்லும் அத்திம்பேர் ‘சங்கரா! கோமாட்ட நான் இப்படிச் சொன்னதாகச் சொல்லாதே !’ என்றும் வேண்டுவார். என் அண்ணாவின் மகன் கார்த்திக்: என் அண்ணாவின் அராஜகச் சூழலிலும் ஒரு அமுதமான கட்டங்கள் உண்டென்றால் அது என் அண்ணாவின் மகன் கார்த்திக் கூட இருந்த அந்த சில நாட்களைத் தான் சொல்ல வேண்டும். கார்த்திக் எங்கள் தெருவிலேயே உள்ள ஒரு மழலைப் பள்ளியில் தான் முதலில் படிக்கச் சேர்ந்தான். அவன் ஸ்கூல் யுனிபார்மில் ஒரு குட்டிப் பையை முதுகில் சுமந்தபடி தெருவைக் கடந்து எங்களை அடிக்கடிப் பார்த்துக் கொண்டே செல்லும் அழகு இப்போதும் என் கண் முன் நிழலாடுகிறது. என் டைரியில் 18-09-1969 அன்று எழுதிய குறிப்பை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைகிறேன். 1. புரசவாக்கத்தில் என் மனைவியின் அக்காவுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. நானும் கார்த்தியும் குழந்தையைப் போய்ப் பார்த்தோம். கார்த்தியின் மாமா வைத்தா ‘பாப்பா எங்கேடா?’ என்று கேட்டார். கார்த்தி: அவாத்திலே வைத்தா: அம்பிப் பாப்பாவா – அங்கிச்சிப் பாப்பாவா ? கார்த்தி கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே பதில் சொன்னான்: ப்ரியாப்பாப்பா (குழந்தையின் பெயர் ப்ரியா) 2. என் ஸ்கூட்டரை வேறு ஒரு இடத்தில் வைத்திருக்கிறேன். ஒரு நாள் இரவில் கொண்டுவிடும் பொழுது கார்த்தியைக் கூட்டிக் கொண்டு போனேன். என் கூட வந்தான். ஸ்கூட்டரை வைத்து விட்டு, அதன் உறையைப் போட்டு மூடினேன். நான் செய்வதை கவனித்த பிறகு, கார்த்தி ‘ஸ்கூட்டர் தூங்கியாச்சு.. ஸ்கூட்டர் துங்கட்டும் ….ஸ்கூட்டர் ! டாட்டா ..சித்தப்பா ! டாடா சொல்லு’ என்று சொல்ல ஆரம்பித்தான். ‘சித்தப்பா, நாளைக்கு எழுப்பணும்’ என்று கார்த்தி சொன்னான். மன்னியின் சீமந்தம் போதும் பல போட்டோக்கள் எடுக்க ஏற்பாடு செய்தேன். கார்ந்திக் பிறந்த பிறகும் கார்த்திக்கின் பல போட்டோக்கள் பல பழைய நினைவுகளை அசை போட வைக்கின்றன. வாழ்க்கை எப்போதுமே முழுவதும் கசப்பாகி விடுவதில்லை. பகவான் அருளால் வாழ்க்கையில் இனிப்பும் அடிக்கடி கிட்டும் வகையில் தான் அமையும். என்னுடைய வாழ்க்கையிலும் கசப்பையை விட இனிப்பு தான் அதிக அளவில் இருந்துள்ளது. என் பாட்டி சொல்லும் அமுத மொழி தான் இதற்கு மூல காரணம்: நல்லதை நாரிலே தொடு. பொல்லாத்தைப் புழுதியைப் போட்டு மூடு. அத்தியாயம் 15 – மனத்திற்கு இனிய திருவல்லிக்கேணி வாசம் திருவல்லிக்கேணியில் நாங்கள் குடியிருந்த அத்தனை வீடும் ஒண்டிக்குடித்தன குச்சு வீடுதான். அதனால் என்ன? பார்த்தசாரதி கோயில், பக்கத்திலேயே திருவட்டீஸ்வரன் பேட்டை சிவன் கோயில், மெரினா கடற்கரை, அருகருகே அனைத்தும் கிடைக்கும் கடைகள், ஆண் – மற்றும் பெண்கள் படிக்க தனித்தனியே பள்ளிகள், சபாக்கள், மெரினாவில் யுனிவர்சிடி லைப்ரரி, பொடி நடையாய் சென்றால் மவுண்ட் ரோட் சினிமா தியேட்டர்கள், குறைந்த வாடகையில் ரூம்கள் உள்ள பல லாட்ஜ்கள், சாப்பாட்டிற்கு குறைந்த விலையில் கிடைக்கும் பல மெஸ்கள், உபந்நியாசம் கேட்க திறந்தவெளி மண்டபம், அரசியல் கட்சிகள் பிராசரம் செய்ய கங்கைகொண்டான் மண்டபம், பிரம்மாண்ட அரசியல் கூட்டங்களுக்கு திலகர் திடல், கிரிக்கெட் விளையாட மெரினாவை ஒட்டி உள்ள மைதானம் – ஆஹா, திருவல்லிக்கேணியில் வாசம் செய்தவர்கள் – செய்பவர்கள் – செய்யப்போகிறவர்கள் அனைவரும் பெரும் பாக்கிய சாலிகள். அடிக்கடி பார்த்தசாரதி கோயில் உற்சவர் வீதி வலம் வந்து சேவை சாதிப்பார். தேர்த்திருவிழா, தெப்பத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி என்று திருவல்லிக்கேணி எப்போதுமே கல-கலாத்தான். என் கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் அம்மாவை பல முறை பாரதியார் குடியிருந்த ஒண்டிக் குடித்தன சிவப்புக் கட்டிட குச்சு வீட்டிற்கு அருகில் உள்ள திறந்த வெளி உபன்னியாச அரங்கில் – தவன உற்சவ பங்களா என்று அழைக்கப்படும் அந்த மைதான மையத்தில் அழகான மண்டபம் அமைந்து அதைச் சுற்றிலும் திறந்த வெளி யாக உள்ள அந்த அரங்கில் நடக்கும் உபந்நியாசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். அம்மாவும் ஆனந்தமாக இந்த உபந்நியாசங்களை கேட்டு ஆனந்தித்திருக்கிறார். பிரபல உபன்யாசகர்கள் பிர்ம்ம ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம திக்ஷிதர், கிருபானந்த வாரியார் ஆகியவர்களின் உபன்யாசங்கள் அங்கு அடிக்கடி நடக்கும். அவைகளைத் தவறாது கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். ராஜாஜி அவர்களும் இந்த உபன்யாச நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு உரையும் ஆற்றி இருக்கிறார். இவைகளைக் குறித்து 25-9-1959 – வெள்ளிக்கிழமை – என் டைரியில் குறித்துள்ளேன். அந்தக் குறிப்பை கீழே பிரசுரித்து பகிர்ந்து கொள்ள விழைகிறேன்: ‘துக்கம் நமக்கு வருகிறது என்றால் நாம் செய்த பாபங்கள் குறைகிறது என்று தான் அர்த்தம். சந்தோஷம் வருகிறது என்றால் நாம் செய்த புண்ணியம் குறைகிறது என்று தான் அர்த்தம். ஆகையால் துக்கம் வரும் பொழுது சந்தோஷமாக இருப்பது தான் விவேகம். சந்தோஷம் வரும் பொழுது கர்வத்தால் அகங்காரம் கொள்வது அவிவேகம்’’ - சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்த்தராம தீக்ஷிதர் அவர்கள் இன்று சென்னை திருவல்லிக்கேணி தவன உஸ்தவ பங்களாவில் மஹா பாரத உபந்நியாசம் செய்த பொழுது அடியேன் சிரவணம் செய்த பொழுது கேட்டது. ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் மஹா ஞானி. அவரைப் போல இவ்வளவு அற்புதமாக உள்ளத்தை உருக்கும்படி மூலத்தின் சுவையும், அழுத்தமும் கெடாமல் சொல்லுபவர்கள் மிக மிக அரிது. அவரது ஹாஸ்யம் உபந்நியாசத்துடன் இழைந்து வெறும் சிரிப்போடு நின்று விடாமல் சிந்திக்க வைக்கும் மகத்தான சக்தி பெற்றிருப்பதை நான் உணர்கிறேன். பல உபந்நியாசகர்களுக்கும் இவருக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. தமக்குத் தெரிந்த்தை எல்லாம் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால், சந்தப்பர்த்தை உணராமலேயே பலர் நீட்டி வளர்ப்பார்கள். அவர்கள் சொல்லும் தத்துவமும், உபகதைகளும் அற்புதமாக இருந்தாலும் சந்தர்பத்துக்கு அவசியமில்லாததினால் சோபிக்காமல் போய்விடும். ஆனால் இந்தக் குறைபாட்டை ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரிடம் காணமுடியாது. மூலத்திலிருந்து இவ்வளவு அற்புதமாக, அழகாக, அதிசயிக்கத்தகுந்தபடி இவரைப் போல் சொல்பவர்கள் மிகச் சிலரே. இவரது குரலின் இனிமையும், சுலோகங்களை உச்சரிக்கும் அற்புதமும் – ஆஹா ! கேட்ட என் செவிகள் என்ன புண்ணியம் செய்தனவோ ! சுலோகங்களுக்கு அர்த்தம் சொல்லும் விதத்தை அனைவரும் இவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சுலோகத்தின் மூலத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு முதலில் கணீர் குரலில் ராகமாக சொல்கிறார். பிறகு அதை விளக்கிச் சொல்கிறார். இந்த விளக்க உரையை சொல்லும் அவர் பாணியே தனி. சுலோகத்தை விளக்கும் பொழுது மிக மிக நாசுக்காக வார்த்தைகளைக் கையாள வேண்டும். விளக்கத்தை நிறுத்தும் இடம் தான் முக்கியம். ஏனென்றால் அந்த இடத்தைப் பொருத்துத் தான் ஒருவரின் வாக்குச் சாதுர்யத்தைக் கணக்கிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட இட்த்தில் நிறுத்தி விட்டால், அதைக் கேட்பவர்கள் பலரை மேற்கொண்டு சிந்திக்கத் தூண்டும். அந்த சிந்தனைக்கு வித்து விளக்கத்தை நிறுத்தும் இடத்தைப் பொருத்து அமைகிறது. ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரிடம் இந்த மிக அரிதான பொக்கிஷம் பரிபூர்ணமாக அமைந்திருக்கிறது. இந்தக் குணம் வெறும் பயிர்ச்சியினால் அமைவது அல்ல; அது தெய்வப்பிரசாதமாகும். ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் செய்த உபன்யாசத்தின் ஒரு பகுதி: குருக்ஷேத்திரம். கர்ணனும், அருச்சுனனும் யுத்தம் செய்கிறார்கள். கர்ணன் தேர்ச்சக்கரம் சாபத்தினால் பூமியில் பதிந்து விடுகிறது. அருச்சுனன் கர்ணன் மேல் பாண மழை பொழுகிறான். ஆனால் கர்ணன் மேல் ஒரு பாணம் கூடப் படவில்லை. ‘கிருஷ்ணா! என்ன இது?’ என்று அருச்சுன்ன் திகைக்கிறான். உடனே கண்ணன் ‘அதோ பார் ! தர்ம தேவதை உன் பாணங்களை எல்லாம் தடுத்துக் கர்ணனைக் காக்கிறாள்’ என்று கூறிவிட்டுக் கண்ணன் பிராமண வேஷம் தரித்து வேதத்தை ஜெபித்துக் கொண்டு கர்ணனிடம் செல்கிறான். கர்ணன் பிராமணனைக் கண்டு மிகவும் குதூகலித்து, இரவு தன் குடிசைக்கு வரும்படிப் பிரார்த்திக்கிறான். ‘எனக்கு இப்பொழுதே தரும்ம் செய்ய வேண்டும்’ என்று பிராமணன் கேட்கிறான். ‘இங்கு இருப்பதில் எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன்’ என்கிறான் கர்ணன். ‘நீ செய்த தர்மத்தை எல்லாம் எனக்குக் கொடு’ என்று கேட்கிறான் பிராமணன். ஸ்ரீ தீக்ஷிதர் அற்புதமாக வியாச பகவானின் மூல சமஸ்கிருத ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டு வந்தார். தீக்ஷிதர் உபந்நியாசத்தை அடிக்கடி கேட்க ராஜாஜி வருவது வழக்கம். அப்போது ராஜாஜியை பேச மேடைக்கு அழைப்பார் தீக்ஷிதர். ராஜாஜியும் அற்புதமாகப் பேசுவார். ராஜாஜி அவ்வாறான ஒரு தருணத்தில் பேசியது: ‘நமது மதத்தில் ஏன் பல கடவுள்களைப் பூஜிக்கிறோம்? இந்த வழிபாட்டின் தத்துவம் என்ன?’ என்பதை ஒரு உவமை கூறி விளக்கினார். ராஜாஜி சொன்னது: ‘முஸ்லீம் மதத்தார்கள் தங்கள் கடவுளாக ஒருவரையே விழிபடுகின்றனர்; கிருஸ்துவர்களும் அப்படித்தான். ஆனால் நாமோ பல தெய்வங்களை வணங்குகிறோம். தெய்வத்தை பல ரூபங்களில் வணங்கினாலும் தெய்வம் ஒன்று தான். இந்தத் தத்துவத்தை ஒரு உதாரணத்தால் அறியலாம். கங்கை நதி இருக்கிறது. அதில் வெள்ளிக் குடத்தில் கங்கை நீரை நிரப்புகிறோம். அந்த வெள்ளிக் குடத்தில இருக்கும் நீரை விட வெள்ளிக் குடத்தின் பளபளப்புத் தான் நம்மை மயக்குகிறது. இந்த மயக்கம் போக வேண்டுமென்றால் மண் குடத்தில் கங்கை நீரை மொண்டு வெள்ளிக் குடத்தின் அருகில் வைக்க வேண்டும். வேறு பாத்திரத்திலும் கங்கை நீரை வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் பாத்திரம் வேறு பட்டாலும் அதில் இருப்பது ஒன்று தான் என்பது புலப்படும். அதே போல தெய்வம் ஒன்று தான் என்றாலும் அதை வெவ்வேறு உருவங்களில் – ஒன்று அழகாகவும், ஒன்று யானை முகமாகம் – பானை வயிறாகவும், ஒன்று நரசிம்ம்மாகவும், ஒன்று ஆண் பாதி பெண் பாதியாகவும் – வழிபடுவோமானால் – பாத்திரம் பலவாக இருப்பதானலேயே அதில் உள்ள நீரில் நாட்டம் செல்வது போல உண்மைக்கு வழிகோல வித்தாக அமையும். இதனால் மற்றவர்கள் தொழுவது கடவுள் தான் என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு உண்டாகிறது. ஆகையால் பல தெய்வங்களை வழிபடும் நமது இந்து தர்ம்ம் மிகச் சிறந்ததொன்றாகும். அது நமது உண்மை அறிவின் அடிப்படைத் தத்துவமாகும். இந்த சமயத்தில் புலவர் கீரன் உபன்யாசத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவரது அனைத்து சொற்பொழுவுகளும் “அற்புதம் அற்புதம்” என்று மனம் மகிழ்ந்து போற்றும் தரமான உரைகள். அவைகள் மனத்தில் ஆழமாகப் பதிந்து, நம்மைச் சிந்திக்க வைக்கும் திறன் படைத்தவைகள். நான் பட்டுக்கோட்டையில் ஸ்டேட்பாங்கு ஆப் இந்தியாவில் பிராஞ்ச் மேனேஜராக பதவில் இருந்த போது கீரனின் உபன்யாசம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் சென்னையில் நான் சொந்தமாகக் கட்டிய மாடி வீட்டில் குடியிருந்த அதே குரோம்பேட்டையில் தான் கீரனின் ஜாகையும் என்பது பிறகு தெரிந்தது. பல நாட்கள் எங்கள் வீட்டிலிருந்து காலை சிற்றுண்டி அவருக்கும், அவரது மனைவிக்கும் நானே என் ஸ்கூட்டரில் அவர் தங்கி இருக்கும் குடிலுக்குச் சென்று கொடுத்திருக்கிறேன். அவரும் அனைத்து பதார்த்தங்களும் மிகவும் ருசியாக உள்ளதாகச் சொல்வார்கள். இதற்கு என் மனைவிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். பல நாட்கள் மாலையில் கீரனின் சொற்பொழிவு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு திறந்த வெளி மைதானத்தில் நடக்கும். அதற்கு என் அம்மாவை அழைத்துச் செல்ல முடியாத அளவு அவர் ஷீணமாகி இருந்தார். ஆகையால் நான் - என் மனைவி இருவரும் கீரனின் உரையைக் கேட்கத் தவறாது சென்றிருக்கிறோம். என்ன அற்புதமான பேச்சு – என்று ஒவ்வொரு முறையும் வியக்கும் விதமாக இருக்கும் கீரனின் பேச்சு. மடை திறந்த வெள்ளம் போல் பாடல்களும், பேச்சுக்களும், விளக்கங்களும் – ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே என்று கூதூகலிக்கச் செய்யும் தரமானவைகள். அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் மேன்மை. துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் வடக்குக் கோடியில் அமைந்துள்ளது கங்கை கொண்டான் மண்டபம். இந்த மண்டபம் மிகவும் சிறியது தான். ஆனால் மிகவும் கீர்த்தி வாய்ந்தது. அதிலும் நான் இந்த மண்டபத்தில் நடந்த பல அரசியல் கூட்டங்களில் பங்குகொண்டு பல பிரபல அரசியல் வாதிகளின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். ராஜாஜி, சின்ன அண்ணாமலை, மா.போ.சி., கல்கி, சட்டை அனியாத கம்பன் மாநாடு புகழ் காரைக்குடி கணேசன், அண்ணாதுரை, நெடுஞ்செழியன் என்று பல பேர்களின் பேச்சுக்களை நான் அந்த மண்டபத்தில் நடக்கும் அரசியல் பொதுக் கூட்டங்களில் கேட்டிருக்கிறேன். பல கூட்டங்களில் பேச வேண்டி இருந்தாலும், ராஜாஜி குறிப்பிட்ட நேரத்தில் வந்து பேசுவதை நான் அப்போது மிகவும் ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. அதிலும் சின்ன அண்ணாமலையின் பேச்சு ஹாஸ்யமான – அதிலும் ஆழமான அரசியல் கருத்துக்கள் பொதிந்து திகழும். மெரினா திலகர் திடல் கூட்டங்கள்: விபூதி வீரமுத்து பெரியார் ஈ.வி.ராமசாமி நாயக்கரின் போட்டோ படத்தை அதே தில்கர் திடல் கூட்டத்தில் செருப்பால் அடித்து, உரை நிகழ்த்துவார். அதையும் நான் கேட்டிருக்கிறேன். நேரு சென்னை வரும் போதெல்லாம் அவரது பிரம்மாண்டமான காங்கிரஸ் கூட்டம் அதே திலகர் திடலில் நடக்கும். அப்போது ராஜாஜியை இகழ்ந்தும், அவரது சுதந்திரா கட்சியைக் கேலி செய்தும் பேசுவார். திராவிடக் கட்சிகளை – திரவிடியன் பார்ட்டீஸ் – என்று பொதுப்பெயரில் குறிப்பிட்டு அவர்களின் இந்தி எதிர்ப்பு, தனித் திராவிட நாடு கொள்கை ஆகியவைகளை ஆக்ரோஷமாக எதிர்த்துப் பேசுவார். நேரு கடைசியாக அதே மெரினா திலகர் திடலில் நடந்த கூட்டத்தில் அவரது ஆங்கில உரையினை காங்கிரஸ் தலைவர் செங்கல்வராயன் தமிழில் மொழி பெயர்த்தார். அவரது மொழி பெயர்ப்பு அத்தனையும் அபத்தம். நேருவின் கருத்தை தமிழில் மொழிபெயர்க்காமல் தான் தோன்றித் தனமாக தனி ஆவர்த்தனம் வாசித்தார். ஒரு பிரதம மந்திரியின் உரையை இப்படிப் பாழ் படுத்தி விட்டார்களே என்று நான் மிகவும் வருத்தப்பட்டேன். அடுத்த நாள் இந்து ஆங்கில தினசரியில் நான் நினைத்தபடியே இந்த மொழிபெயர்ப்பை மிகவும் கடுமையாகக் கண்டித்து எழுதியிருந்தார்கள். இதை எழுதும் போது இதே பாணியில் கே.எஸ். தங்கபாலு ராஹுல் காந்தி சென்னைக்கு வந்த பொழுது, அவரது ஆங்கில உரையை தனக்குத் தோன்றிய படி மொழி பெயர்தது, அதுவே பல நாட்கள் கேலிக்கு வழி வகுத்து, பல டிவீட்டுகள் வெளியாகி, தங்கபாலுவை திட்டித் தீர்த்து விட்டார்கள். திலகர் திடலில் நடந்த மேலும் ஒரு முக்கிய கூட்டத்தை நான் குறிப்பிட வேண்டும். அதில் அண்ணாதுரை – ராஜாஜி கலந்து உரையாற்றுவதாக இருந்தது. அது அண்ணாதுரை காஞ்சிபுரம் தமிழக சட்டசபைத் தொகுதியில் தோற்றதிற்குப் பிறது நடந்த கூட்டம் என்று நினைக்கிறேன். நிச்சமாக நினைவில்லை. அண்ணாதுரை நேரம் தவறி பல மணிகள் கழித்து தமது இஷ்டம் போல் வருவது தான் வழக்கம். ஆனால் அவரது தம்பிமார்கள் அண்ணாதுரைப் பேச்சைக் கேட்க எவ்வளவு நேரமானால் காத்திருக்கும் அன்பு நம்பமுடியாத ஆச்சரியமான ஒன்றாகும். ஒரு வேளை இதை அறிந்தோ என்னவோ அந்த கூட்டத்திற்கு காலம் தவறாமையை கண்ணும் கருத்துமாக கடைப்பிடிக்கும் ராஜாஜி தன்னுடன் அண்ணாதுரையையும் அழைத்து வந்துவிட்டார். அழும் அண்ணாத்துரையை – தோல்வியில் துவளாமல், இதை ஒரு வாய்ப்பாகக் கருதி, ராஜ்யசபா உறுப்பினராகச் சென்று இந்திய அரசியல் களத்தில் முத்திரை பதியுங்கள் – என்ற அற்புதமான யோசனையைச் சொல்லி அதன் மூலம் அழும் அண்ணா, எழும் அண்ணாவாகி, பிறகு முதல்வராகி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் என்பது சரித்திரம். அதற்குப் பிள்ளையார் சுழி இட்டவர் ராஜாஜி. அவரை அண்ணாவின் இளவல் கருணாநிதி மதிக்காமல் ‘குல்லுக பட்டராகவே’ ராஜாஜியை ஓரம் கட்டினார். இந்தியாவின் இருதயம், இந்தியாவின் சாணக்கியர் – என்றெல்லாம் புகழப்பட்ட ராஜாஜி தமிழக அரசியலை சீர்செய்ய முடியாமல் தோல்வி கண்டார் என்பது தான் சரித்திர உண்மை. மது ஒழிப்பை தமிழகத்தில் கொண்டு வர முயன்ற ராஜாஜி – இடியும் மழையும் கொட்டும் நேரத்திலும் முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து மது விலக்குக் கொள்கையை அமல் படித்த வேண்டி மன்றாடியும், கருணாநிதி மதுவை ஒழிக்காமல், கஜானாவை நிரப்ப மதுவை அரசாங்கமே விற்பனை செய்யும் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி ராஜாஜியை அவமதித்தார். கடைசி நேரத்தில் ராஜாஜியும் – காமராஜும் சேர்ந்து திராவிட தீய சக்திகளை ஒழிக்க ஒன்று சேர்ந்தும் அது அரசியல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பா. ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி ஆகியவர்களின் பேச்சுக்களும் அந்தக் கட்சியில் தேசியத் தலைவர்கள் பலரது கூட்டங்களும் இதே திலகர் திடலில் நடந்ததுண்டு. ப.ஜீவானந்த்திற்கு காது கொஞ்சம் மந்தம். பி. ராமமுர்த்திக்கு ஒரு கால் சரியாக இல்லாத காரணத்தால் சாய்ச்சுச் சாய்ச்சுத் தான் நடப்பார். ஆனால் அவர்களின் பேச்சுக்கள் அனல் தெரிக்கும். நேர்மையான அரசியல் வாதிகள். கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்கள். அவர்களின் கம்யூனிச சித்தாந்தம் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருப்பினும், அவர்களின் நேர்மையான நடத்தைகளால் அவர்களை எதிரணி அரசியல் வாதிகளும் மதிக்கும் பேறுபெற்றவர்கள். அவர்களின் பேச்சுக்களை பல முறை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் “கொள்கையை நிலை நாட்ட கத்தியைத் தீட்டத் தயங்கக் கூடாது” என்ற அவர்களது கோட்பாடு எனக்கு எந்தவிதத்திலும் ஏற்புடையது அல்ல. பல அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதே திலகர் திடலில் ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார்கள். அவர்களது பேச்சை சங்கர் என்ற கம்யூனிஸ்ட் தோழர் தமிழில் மொழி பெயர்ப்பார். ஆங்கிலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் 10 நிமிடங்கள் தொடர்ந்து பேசினாலும், அந்த உரைகளை அற்புதமாக தலைவர்கள் ஆங்கிலத்தில் பேசிய அதே தொனியில் குரலை மாற்றி அவர்களது அத்துனை கருத்துக்களையும் ஒன்றுவிடாது தமிழில் மொழி பெயர்த்து விடுவார் அந்த தோழர் சங்கர். இது அவருக்கு சரஸ்வதி தேவி அருளால் கிட்டிய திறமை என்று தான் சொல்ல வேண்டும். இதை செங்கல்வராயன் – தங்கபாலு ஆகிய காங்கிரஸ் மொழி பெயர்ப்பாளர்களுடன் ஒப்பிடும் போது தோழர் சங்கரின் மகிமை புரியும். இப்படிப் பட்ட திலகர் திடல் – திராவிடக் கழகத்தால் சீரணி அரங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது. சுப்பிரமணிய சிவா என்ற சுதந்திரப் போராட்ட வீர்ர் இந்த திடலில் தனி ஆளாக மேஜை போட்டு, தம் கைத்தடியால் தட்டி கூட்டம் கூட்டி, அவர்களிடம் உரையாற்றி சுதந்திரத் தாகத்தை மக்களிடையே பரப்பிய தீரர். இது பிரிட்டீஷ் ஆண்ட காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிவா தான் ஒரு பொதுக் கூட்டத்தில் 1908-ம் வருடம் இந்த மெரினா கடற்கரை இடத்தை ‘திலகர் திடல் என்று மகாராஷ்ர வீர கேசரி பால கங்காதர திலகரின் நினைவாக பெயர் சூட்ட வேண்டுகோள் விட, அதை மஹா கவி சுப்பிரமணிய பாரதியார் ஆமோதித்தார். இந்த உன்னதமான சரித்திரத்தை அறிந்தும், அதை அவமதித்து, அலட்ச்சியப் படுத்தி, ஆணவமாக கருணாநிதியின் இந்தப் பெயர் மாற்றம் எந்தவிதத்திலும் தேசிய சிந்தனையாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. மீண்டும் இந்த இடம் சீரணி அரங்கம் என்ற பெயர் அழிக்கப்பட்டு, திலகர் திடல் என்ற தேசிய சிந்தனைகளைத் தூண்டும் பெயர் மீண்டும் பெயர் மாற்றப்பட வேண்டும். இது நடக்கும் காலம் வரும். வந்தே தீர வேண்டும். மெரினா கடற்கரை உலகத்திலேயே இரண்டாவது அழகிய நீண்ட கடற்கரை என்ற புகழ் பெற்றதாகும். ஆனால் அந்த அழகையும் அண்ணாத்துரை இறந்த பொழுது அவரது பூத உடலை மெரினா கடற்கரையில் புதைத்து மெரினா கடற்கரையை ஒரு இடுகாடாக்கிய பெருமை கருணாநிதிக்கே சாரும். இதை ராஜாஜி எதிர்க்க வில்லை. இதே ராஜாஜி ராணுவத்திற்குச் சொந்தமான குதிரை மேல் சம்பீரமாகச் சவாரி செய்யும் மன்ரோ சிலைக்கு எதிரே உள்ள திறந்த வெளி மைதானத்தில் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது. அது சென்னை வாசிகளுக்கு இயற்கையாக பிராணவாயு கொடுக்கும் உயிர் நாடி என்று சொல்லி போராடியவர், மெரினாவை இடுகாடாக ஆகிய அவலத்தைத் தடுத்து நிறுத்தவோ, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோ செயல்படவில்லை. இதற்கு ஒரே ஒரு குரல் தான் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சி. சுப்பிரமணியம் தான் – இந்த க்ருணாநிதி அரசின் செயல் தவறு – என்று தைரியமாகக் குரல் கொடுத்தார். மெரினா இடுகாட்டிற்கு கருணநிதி போட்ட பிள்ளையார் சுழி தொடர்ந்து, எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா என்று தொடர்ந்து, கருணாநிதியின் பூத உடலும் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டு, அந்த அவரது சமாதி மற்ற மூவரின் சமாதியை விட அதிகச் செலவில் பெரிது படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் கருணாநிதியின் சமாதியில் அமைச்சர்கள் வந்து கடவுளைப் போல் கருணாநிதிக்கு அலங்காரம், படையல், முக்கிய ஆவணங்களை அவரது சமாதியில் வைத்து வணங்குதல் என்று பகுதறிவு பேசும் உடன் பிறப்புகள் செய்யும் செயல்கள் – கூட்டங்கள் அங்கு காற்று வாங்க – நடை பயில வரும் பொது மக்களை முகம் சுளிக்க வைக்கும் அவலமும் நடந்த வண்ணம் இருக்கிறது. திராவிட மாடல் மக்களைத் திண்டாட வைக்கிறது. அம்மா சொன்ன விடுகதைகள்: என் டைரி 29 -8- 1987 அன்றைய பதிவு: 1. கருத்த மாடும் வெள்ளை மாடும் ஆத்துக்குப் போச்சு கருத்த மாடு ஆத்தோடு போச்சு வெள்ள மாடு வீடு வந்த்து. அது என்ன ? உளுந்து. 2. அதோ கிழக்கே பொன்னப்பன் தோட்ட்த்திலே செவந்தி பூத்திருக்கு செங்காய் காய்த்திருக்கு மொட்டு மலர்ந்திருக்கு செப்பு திறந்திருக்கு – அது என்ன? சூரியன் 3. ஓஹோ மரத்திலே உச்சாணிக் கொப்புலே விஸ்தாரச் சொப்புலே முத்து வந்து அடைஞ்சிருக்கு – அது என்ன ? மாதுளம் பழம். 4. ஆத்து மணலை அள்ளித் தின்போம் நாங்கள் ஒரு ஜாதி - சீனி கூழாங்கல்லை புட்டுத் தின்போம் நாங்கள் ஒரு ஜாதி – கல்கண்டு பூனை வாலை உரிச்சித் தின்போம் நாங்கள் ஒரு ஜாதி – வாழைப்பழம். அது என்ன ? 5. குயவன் முடையாத பாண்டம் மழை பெய்யாத தண்ணீர் வண்ணான் வெளுக்காத வெள்ளை – அது என்ன? தேங்காய் 6. ஓடுவான் சாடுவான் ஒத்தக்காலால் நிற்பான் – அது என்ன ? கதவு. 7.இரண்டு வீட்டுக்கு ஒரு சுவர் – அது என்ன ? மூக்கு. 7. அண்ணனுக்கு எட்டாத்து – தம்பிக்கு எட்டும் – அது என்ன? உதடு. என் அம்மாவின் தத்துவ மொழி: கூட்டிக் கழித்துப் பார்த்தா – லோகத்திலே இரண்டு தான் முக்கியம் – சோறு – சொல். அம்மா அதிகம் பேசினது இல்லை. ஏனென்றால் வீட்டிலே செய்யும் வேலையே அம்மாவை முடங்க வைத்து விட்டது. மெஸ் வேலை போய் சென்னையில் எங்களுடன் இருக்கும் போதும் அடுக்களை வேலை செய்வதில் தான் விரும்பப்படுவார். எங்களுக்கு அறுசுவை விருந்து அளிப்பதில் அம்மாவிற்கு ஒரு திருப்தி ஏற்படும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017