வாழ்க்கைச் சுழல்கள்

 

 





“வாழ்க்கைச் சுழல்கள்” என்ற தலைப்பில் தொடராக என் வாழ்வில் நிகழ்ந்தவைகளை நான் ஆசிரியராக இருந்து ஒவ்வொரு தமிழ் மாதமும் வெளிவரும் “வாய்மை” என்ற மின் அஞ்சல் வழி பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் முதல் பாகம் முற்றுப் பெற்று இரண்டாம் பாகம் தொடராக இன்னும் வெளி வந்து கொண்டிருக்கிறது.

ஆகையால் முடிவு பெற்ற முதல் பாகத்தை என் பிளாக் மூலமாக பிரசுரிக்க விழைகிறேன்.

அந்த முதல் பாகத்தின் கட்டுரை தான் இது.

படிக்க ஆர்வம் மூட்டும் விதமாக அவைகள் அமைந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரை ‘ஜெயந்திநாதன்’ என்ற என் புனைப் பெயரில்

 வெளியிடப்படுகிறது.
 
-    ஆசிரியர் வாய்மை
 


சமர்ப்பணம்

 



 

 

 

 முன்னுரை:

வாழ்க்கையைச் சாகரம் – சமுத்திரம் என்றே சொல்வார்கள். ‘சா – கரம்’ என்ற தொனி அந்த சம்ஸ்கிரத வார்த்தையில் இருப்பதைத் தமிழில் அர்த்தம் கொண்டால், சாவை ஒத்த சங்கடகங்களிலிருந்து கரம் – கை கொடுத்துக் காப்பவர்கள் நம்மைச் சுற்றிப் பல இருப்பதால் தான் வாழ்க்கைச் சூழலில் மாட்டிக் கொண்டாலும் கரையேற முடிகிறது. அதுவே வாழ்க்கையின் வெற்றியாக அமைந்து நம்மை வெற்றி நடை போட வைக்கிறது.

‘சாகரம்’ என்ற வடச் சொல்லில் ‘சாகிறோம்’ என்ற தொனியும் அதில் தொக்கி நிற்கிறதே என்று குதர்க்கமாகப் பேசும் மக்களும் சமூகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் தான் நம்மை மூழ்கடிக்கும் சூழல்களின் சூத்திரதாரியாக நம் வாழ்க்கையில் வலம் வந்து எதிர் நீச்சல் போட்டுக் கரையேற முயலும் நம்மையும் மீண்டும் அந்த சூழல்களில் தள்ளி குரூர இன்பம் அடையும் இரக்கமற்ற ராட்ச குணம் கொண்டவர்களையும் நாம் வீரத்துடன் எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டும். தோல்வியைக் கண்டு துவலாமல் நம் பலத்தைப் பல மடங்கு பெருக்கி, மனத்திடத்துடன் அந்த ராட்சக் கூட்டங்களை மண்ணைக் கெளவ வைக்க வேண்டும். அதற்கு மனித பலத்துடன், ஆன்ம பலம், ஆன்மீக பலம், ஆண்டவன் அருள் அனைத்தும் அபரிமிதப் பெற்று வாழ்க்கைச் சாகரத்தை வெற்றிகரமாக கடந்து, மேலும் பலரையும் கரை சேர்ப்பதற்கு உதவிக்கரமும் நீட்டி ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற தாரக மந்திரத்திற்கு உதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும்.

வாழ்க்கைச் சாகரத்தில் அலைகளுக்கும், சூழல்களுக்கும் ஓய்வு கிடையாது. அவைகள் வீசிக்கொண்டுதான் இருக்கும். மனித சமுத்திரத்தில் அத்தகைய சுழல்களை உருவாக்கி சக மனிதர்களின் வாழ்க்கையை பாழாக்கும் கும்பல்கள் மத்தியில் சக மனிதர்களின் வாழ்க்கையை புனிதமாக்கும் நல்ல உள்ளங்களும் உண்டு. 

அத்தகைய ஆன்மாக்கள் நம் உறவுக்காரர்களாகவும் இருக்கலாம். நண்பர்களாகவும் இருக்கலாம். சக ஊழியர்களாகவும் இருக்கலாம். முகம் தெரியாத நல்ல உள்ளங்களாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழல்களிலிருந்து வெற்றியோடு கரை சேருவதுற்குள் பல தோல்விகளையும், இன்னல்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். மன வலிமை, தோள் வலிமை, உற்றார்-உறவினர் உதவி ஆகியவைகள் துணையாக அமைந்தால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும்.

“சென்றேன், கண்டேன், வென்றேன்” என்பது வாழ்க்கைச் சூழல்களில் மாட்டிக் கொண்ட சாதாரண மனிதர்களுக்குச் சாத்தியம் இல்லை.

சுற்றி இருப்பவர்களின் தாக்குதலைத் தாங்கி, அந்த வலிகளைத் தாங்கும் வலிமையைப் பெற்று, சில சமயங்களில் பலம் பெற்றவர்களின் தொந்தரவுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் போது தப்பிக்கும் வழியைக் கடைப்பிடித்து நடப்பது தான் வாழ்க்கை. ஆகையால் தான் ‘தாக்குதலைத் தாங்குதல் அல்லது தவிர்த்தல் அல்லது தப்பித்தல்’ – என்ற யுக்திகள் நமக்கு இந்த வாழ்க்கைச் சூழலை எதிர்கொள்ள உதவும் ஆயுதங்களாகும்.

அதில் எதிர்கொண்ட பல இன்ப சம்பவங்கள் உள்ளத்தில் பதிந்து மனத்தைப் பரவசமூட்டும். அதே சமயத்தில் பட்ட இன்னல்கள் மனத்தில் ஆழப்பதிந்து அவைகளை எவ்வளவு சக்தி கொண்ட மட்டும் மறக்க நினைத்தாலும், ரப்பர் பந்து ஒன்றை நீரிலே அழுத்தி மூழ்கடிக்க எவ்வளவு முயன்றாலும், மேலே எழும்பி வந்து விடுவது போல் தான் மனத்தை அலைக்கழிக்கும் தருணங்கள் பல நிகழத்தான் செய்யும்.

நல்லதை நாரிலே தொடு! பொல்லாததைப் புழுதியைப் போட்டு மூடு! – என்பது தான் என் பாட்டியின் பொன் மொழி. மிகவும் அர்த்தபுஷ்டியுள்ள வார்த்தைகள்.

பொல்லாததைப் புழுதியைப் போட்டு மூடுவதற்கு முன் அதைப் பற்றிச் சொன்னால் தான் மனது சில சமயங்களில் சமாதானம் அடையும். ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்பார்கள். ஆனால், குற்றம் எல்லை மீரும் போது, அதனால் பாதிக்கப்பட்டு, ரண வேதனைப் பட்டு, வாழ்க்கையே நரகமாகி – அந்த நிலையைக் கண்டு அதிலே சுகம் காணும் எண்ணம் கொண்ட உறவினைப் பற்றிச் சொல்வது கசப்பான ஒன்று தான். ஆனாலும், சொல்வது தவறில்லை என்று தான் தோன்றுகிறது. அதுவும் என் வாழ்க்கைச் சூழல்களில் முக்கிய அம்சம் வகிக்கிறது.

எந்த கஷ்டங்கள் வந்தாலும், அவைகளிலிருந்து மீண்டு வெற்றியோடு கரையேறிய தருணங்கள் என் வாழ்க்கையில் பல உண்டு தான். அதற்குக் காரணம் எங்களை வாழ்வித்த தெய்வங்களைத்தான் குறிப்பிடவேண்டும்.

ஆமாம். எங்களை வாழ்வித்த தெய்வங்கள் – மூவர் – பாட்டி, அப்பா, அம்மா.

பாட்டி – அன்பால் உயர்த்திய தெய்வம்.

அப்பா – பக்தியால் உயர்த்திய தெய்வம்.

அம்மா – உழைப்பால் உயர்த்திய தெய்வம்.

அந்த மூன்று தெய்வங்களையும் வாழ்வித்த தெய்வங்களாக ஆரதிப்பதுதான் நான் செய்யும் பூஜை. அவர்களை நினைப்பதே என் வாழ்வின் ஒளி.

எளிமை ஒரு இனிமை என்பதை எனக்கு சொல்லாமல் உணர்த்திய மவுன குருக்கள்.

எதற்கும் ஏங்காதே – உன் பங்கை முருகன் அளிப்பான் – அன்பு, பக்தி, உழைப்பு – ஆகியவைகள் தான் வாழ்வை முழுமையாக்கும். – இவைகள் தான் அவர்களின் முத்தான உபதேச மொழிகள். 

அந்த மூன்று தெய்வங்களில், என் அம்மாவின் உழைப்பு தான் தனித்துவம் வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு, உழைப்பு – என் அம்மாவை நினைக்கும் போதெல்லாம் அந்த நீண்டகால உழைப்பின் சுவடுகளான அந்த சொர சொரப்பான ரணமான கைகளை என் கன்னங்களில் அழுத்திய தருணங்களை நினத்து நினைத்து நினைத்து இப்போதும் ஏங்குகிறேன். ரத்தக் கண்ணீர் விடுகிறேன். 

பல சமயங்களில் சட்னி அரைக்கும் போது ரணமான கைகளை அம்மாவே வலி பொறுக்காமல் தானே வாயால் காற்றைக் கைகளின் ரணத்தை நோக்கி ஊதும் பல தருணங்களில், ‘அம்மா! அம்மா! அம்மா!’ என்று நானும் அம்மாவின் கைகளின் ரணங்களை நோக்கி என் வாயால் ஊதியதை இப்போதும் ‘தெய்வம்மா, நீ!’ என்று மனத்திலே பூஜித்ததை எவ்வளவு முறை நினத்துப் பார்த்தாலும் மனத்திற்குத் திருப்தி இல்லை.

என் அம்மா தனி ஆளாக மெஸ் நடத்தி – தனக்கு உதவியாக எந்த ஒரு வேலைக்காரியையும் வைத்துக் கொள்ளாமல், மண் விறகு அடுப்பு, கரி அடுப்பு, இட்லி மாவு – சட்னி ஆகியவைகள் அரைக்க தரையிலே பதித்த கருங்கல் ஆட்டுக்கல் - ‘பகவானே! உழைப்பா அது? – என்று அம்மாவின் உழைப்பை நினைத்து நினைத்து நினைத்து இன்றும் மனம் கணத்து, கண்ணீர் விடுகிறேன். மழைகாலத்தில் ஈர விரகால் அடுப்பு சரியாக எரியாமல் புகை மண்டலமாக அந்தச் சிறிய அடுக்களை மூழ்க – ஒரு சிறிய ஊதுகுழலால் கண்கள் கரித்து – கண்ணீர் வழிவதையும் பொறுத்துக்கொண்டு சமையல் சீக்கிரம் ஆகவேண்டுமே என்று உழைத்து எங்களை வாழ்வித்த தெய்வம் நீ அம்மா!

அம்மாவின் உழைப்பின் கதை முழுவதையும் – பாட்டி – அப்பா ஆகியவர்களின் பங்குகளையும் சேர்த்து எழுத முடிவு செய்து விட்டேன். இது பல வருடங்களாக மனத்திலேயே ஊறியவைகள் தான். அவைகளை எழுத்து வடிவில் கொண்டு உங்கள் முன் படைக்க அந்த முருகப்பெருமானை மனதார வேண்டி ஆரம்பித்து விட்டேன்.

இது மட்டுமா?

என் வாழ்வில் உதவிய உறனர்களை நான் மறக்க முடியுமா? அதில் குறிப்பிட வேண்டு மென்றால் முதலில் என் மனத்திரையில் நிழலாடும் உருவம் என் பாட்டியின் தங்கையின் மகன் – புரசவாக்கம் சித்தப்பா என்ற நாராயணஸ்வாமி அய்யர். அதன் பிறகு என் மூத்த மைத்துனர் கோபால் - அவரது மனைவி கல்யாணி. என் இளைய மைத்துனர் ஷங்கர். என் மனைவியின் மூத்த சசோதரி கமலா – பிறகு கமலாவின் மகன் ஹரி. இவர்களைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் எழுதுவது மிகவும் அவசியம்.

இந்தப் பட்டியலில் சிறப்பு இடம் பிடிப்பவர் என் வீட்டு மாப்பிள்ளை கோபிசந்திரன். அவருக்கு என் வாழ்க்கையில் உதவியவர் என்ற நபர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் என்ற நிலையில் கட்டுரையில் இடம் பெறுகிறார்.

அதே நேரத்தில் என் வாழ்வில் என்னை உதைத்த என் உறவினர்களால் ஏற்பட்ட ரணங்களையும் குறிப்பிடுவதும் அவசியம் என்று நினைக்கிறேன். அதன் வடுக்கள் இன்னமும் என் உள்ளத்தில் நிரந்தரமாக இடம் பெற்ற நிலையில் அவைகளை மறக்க எவ்வளவு பலம் கொண்டு அழுத்தினாலும் மேலே எழும்பி என் நினைவலைகளாக என் உள்ளத்தைப் பாதித்த தருணங்கள் பல.- அதில் என் அண்ணா சேதுராம கிருஷ்ணன் முதல் இடம், என் அக்கா கோமதி இரண்டாவது இடம். என் அக்காவின் கணவர் கிருஷ்ணன் மூன்றாவது இடம். இவர்களைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் எழுதுவதும் ஒரு விதத்தில் அவசியம் என்றே கருதுகிறேன். அதனால் சில மனஸ்தாபங்கள் ஏற்படவும், தவிர்க்கப்பட வேண்டிய வலிகள் உருவாகவும் வழிவகுக்கலாம். ஏதோ என் மனத்தில் இவர்களால் ஏற்பட்ட ரணங்களுக்கு வடிகாலாக இருக்க வேண்டும் என்று நான் அவர்களால் பெற்ற உதைகளை விவரிக்க விழையவில்லை.

‘சுடும் உண்மைகளையும் உரைப்பது தான் உண்மைக்கு நாம் அளிக்கும் மரியாதை’ என்ற கருத்தில் எழுதத் துணிந்துள்ளேன்.

என் 30 வயதிற்கு மேல் கல்யாணமாகி என் சுக துக்கங்களில் முழுமனத்துடன் எனக்குத் துணையாய் – தூணாய் – துயரம் துடைக்கும் தோளாய் என் குடும்பப் பாரத்தை சுமந்து என் வலிகளுக்கு நிவாரணமாக தன்னையே அர்ப்பணித்த என் அன்பு மனைவி வத்ஸலா இக்கட்டுரைக்கு ஆதார ஸ்ருதியாக ஒலிக்கும் அற்புதக் கீதத்தையும் கட்டுரையில் கேட்கச் செய்ய வேண்டும். சக்தி இழந்து தவிக்கும் போது சக்தி கொடுக்கும் தேவதையாகவும், கவலையில் மூழ்கும் போது கண்ணீரைத் துடைக்கும் கருணைக் கடலாகவும், அம்மாவை அன்போடு சோம்பல் இன்றி கவனித்து புண்ணியம் சேர்த்த புனிதவதியாகவும் இருந்து வாழும் என் இனிய அன்பு மனைவி வத்ஸலா கட்டுரையில் பரவலாகப் பேசப்படும் நாயகியாக வலம் வருவார்.

பல கஷ்டங்கள் பஞ்சுபோல் நிரந்தரமாகப் பறந்து என் வாழ்வில் ஓய்விற்குப் பிறகு வசந்தம் வீச வழி வகுத்த என் அன்புச் செல்வங்களான – என் மகள் மீரா, என் மகன் கணேஷ், என் மருமகள் மீனாட்சி – ஆகியவர்களைப் பற்றியும் கட்டுரையில் எழுதப்போகிறேன். இளம் வயதில் சிரமப்பட்டாலும், வயதான காலத்தில் கஷ்டப்படாமல் இருக்கும் பாக்கியத்தை அந்த மூன்று பேர்களும் எங்களுக்கு வழங்கியதை நினைத்து நானும் – என் தர்ம பத்தினியும் பெருமையும், பெருமிதமும் கொண்டு வாழ்வதையும் கட்டுரையில் எழுதி அவர்களை ஆசிர்வதிக்க வேண்டியது பெற்றோராகிய எங்களது கடமை.

கட்டுரை தொடர்ந்து வரும் போது வேறு சில பாத்திரங்களைப் பற்றியும் பேசப்படும். அனத்தையும் சுவை குன்றாமல் – உண்மை மாறாமல் – உயர்வு நவிர்ச்சி இல்லாமல் எழுதுவது என்பது சிரமமான ஒன்று தான். மேலும் குறிப்பு எதுவும் இல்லாத நிலையில், சம்பவங்கள் எல்லாம் என் நினைவு அலைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து உங்கள் முன் படைக்க வேண்டும். அதில் இனிப்பு இருக்கும். காரம் இருக்கும். கசப்பு இருக்கும். எந்த விகிதத்தில் என்பது அந்த சம்பவங்களைப் பொறுத்தது.

என்னையே பலர் ‘நீ ஒரு மிளகாய். காரம் அதிகம் உள்ள மிளகாய்’ என்று கணித்துள்ளார்கள். ‘நான் ஒரு மறதி மன்னன்’ என்பதும் எனக்குத் தெரியும். வாழ்வில் என்னை இந்த மிளகாய்க் காரமும், மறதியும் தான் பக்கபலமாக இருந்து காப்பாக – அரணாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன். அதைப் பற்றியும் கட்டுரையில் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

எழுதுகோலை எடுத்து விட்டேன். 

முருகா! என் பணி சிறப்பாக அமைய பிரார்த்திகிறேன். 

ஒரு சிறு குறிப்பு:

என் இலக்கிய படைப்புகளை உருவாக்க நோட்டுப் புத்தகங்கள் வாங்கி அதில் எனது கருத்துக்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், உருவகக் கதைகள் என்று பல கதம்ப மாலை போல் எழுதுவது என் பழக்கம். அதில் நான் படித்த புத்தகங்களின் மேற்கோள்களும் இருக்கும். அப்படி வாங்கிய நோட்டுப் புத்தகம் ஒன்றில் என் அம்மாவை முதன் முதலில் பிள்ளையார் சுழி போன்று நோட்டு புத்தகத்தின் ஆரம்ப பக்கத்தில் 1959-ம் வருடத்தில் எழுதி வாங்கிய அம்மா கைப்பட எழுதிய வாசகம் தான் இது.

 ‘என் உள்ளத்தில் ஒளி விளக்காகத் திகழும் என் அம்மா’ என்ற என் வாசகத்திற்குக் கீழே என் அம்மாவின் கையெழுத்தை வாங்கியும் பதிவு செய்தேன். அம்மாவின் பாதம் பணிந்து, நினைவு கூர்ந்து என் இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறேன்.

 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017