காரடையான் நோன்பு - 15 – 03 – 2023 - புதன் கிழமை
இந்த வருட காரடையான் நோன்பு தமிழ் மாதமான பங்குனி ஒன்றாம் தேதி வருகிறது. இந்த காரடையான் பண்டிகை எமதர்மனையே வென்ற சாவித்திரியின் பதிவிரதா தர்மத்தைச் சிறப்பித்துக் கொண்டாடப்படுவதாகும். சாவித்திரியைப் போல் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் இருக்கும் விரதம் காரடையான் நோன்பு.
காரடையான் நோன்பு, சாவித்திரி விரதம், கெளரி விரதம், காமாட்சி
விரதம், மாங்கல்ய நோன்பு என பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.
கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக திருமணமான பெண்கள் மேற்கொள்ளும்
விரதங்களில் ஒன்று காரடையான் நோன்பு.
விரதம் இருக்கும் நாளில் பெண்கள்
அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க
வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம்
வைத்து, அவளை
காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும்.
அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும்
கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக்
கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம் :
உருகாத
வெண்ணையும் ஓரடையம் நான் நூற்றேன்
ஒருக்காலும் என்
கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்.
தோரம்
க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்துஹூ ஆயுஷ்ய
ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா
காரடையான் நோன்பு உருவான
கதை :
காரடையான் நோன்பு என்றதும்
அனைவருக்கும் சத்யவான், சாவித்ரி கதை தான் நினைவிற்கு வரும்.
இளவரசியான சாவித்ரி, அண்டை தேச இளவரசனான சத்யவானை காதலித்து
திருமணம் செய்து கொள்கிறாள். இவர்கள் திருமணம் நடைபெற்ற சில காலத்திலேயே
சத்யவானின் தாய், தந்தைக்கு கண் பார்வை போய் விடுகிறது.
அவர்களின் தேசமும் கையை விட்டு போய் விடுகிறது. காட்டில் தனது கணவருடன் வசிக்கும்
சாவித்ரிக்கு, தனது கணவர் சத்யவான் வெகு விரைவில்
உயிரிழக்க போகிறான் என்ற விபரம் தெரிகிறது.
இதனால் லோக மாதாவான காமாட்சி அம்மனை
நினைத்து சாவித்ரி விரதம் இருக்க துவங்குகிறாள். காட்டில் கிடைத்த பொருட்களைக்
கொண்டு அம்மனுக்கு நைவேத்தியம் தயாரித்து படைத்து, பூஜை
செய்து வருகிறாள். சத்யவான் உயிரிழக்கும் நாளும் வருகிறது.
அன்றும் சாவித்திரி பூஜை செய்கிறாள்.
யம தர்மராஜா வந்து சத்யவானின் உயிரை எடுத்துச் செல்கிறார். அவரை தடுத்து நிறுத்தி,
தனது கணவரின் உயிரை திருப்பித் தர யமனிடம் மன்றாடுகிறாள்.
ஒரு சாதாரண மானிட பெண்ணின் கண்ணுக்கு
தான் வருவது எப்படி தெரியும்? இவள் தெய்வசக்தி படைத்த பெண்ணாக தான்
இருக்க வேண்டும் என நினைத்து, அவளுக்கு பதிலளிக்க துவங்குகிறார்
யமன்.
இந்த பேச்சுவார்த்தை, வாக்குவாதமாக மாறுகிறது. யம தர்மன் யமலோகம் நோக்கி செல்கிறான். சாவித்ரியும் பின்னாலேயே செல்கிறாள். ஒரு பெண்ணால் தனது பூத உடலுடன் எப்படி யமலோகம் வரை வர முடியும் என யமனுக்கு தாங்க முடியாத ஆச்சரியம். இருந்தாலும் தான் எடுத்த உயிரை ஒரு போதும் திருப்பி தர மாட்டேன் என உறுதியாக சொல்கிறார். சாவித்ரியும் விடுவதாக இல்லை. இறுதியாக யம லோக வாசலுக்கே சென்ற யமன், "பெண்ணே! இதற்கு மேல் நீ வர முடியாது. திரும்பிச் செல்" என்கிறார். "கணவரின் உயிரை திருப்பி தர வேண்டும் என்பதை தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்கிறார் யமன்.
அதற்கு சாவித்ரி, " சுவாமி!
நான் பதிவிரதை. அதனால் எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டும். எனது மாமனார், மாமியாருக்கு
இழந்த கண் பார்வை வேண்டும். இழந்த ராஜ்ஜியம்" என பல வரங்களை கேட்கிறாள்.
யமனும் அனைத்து வரங்களையும் தருகிறேன் என கூறி விட்டு, யமலோகத்திற்குள்
செல்ல போகும் சமயத்தில் மீண்டும் சாவித்ரி தடுக்கிறாள். "நீ கேட்ட வரங்களை
எல்லாம் கொடுத்து விட்டேன். இன்னும் ஏன் என்னை தடுக்கிறாய்?" என
கேட்கிறார் யமன். அதற்கு சாவித்ரி,
"நான் கேட்ட வரத்தில் பாதியை தானே தந்தீர்கள்
மீதியை தரவில்லையே. யம தர்மராஜாவான தாங்களே தர்மம் தவறலாமா? கொடுத்த வாக்கை
மீறலாமா?" என கேட்கிறாள்.
அப்போது தான் யமனுக்கு யோசனை
வருகிறது.
தான் பதிவிரதை அதனால் தனக்கு குழந்தை
வேண்டும் என சாவித்ரி கேட்டது. கணவரின் உயிரை மீட்பதற்காக தந்திரமாக தன்னிடம்
வரத்தை பெற்ற சாவித்ரியின் மதி நுட்பத்தையும், கணவர் மீது அவள் கொண்ட தீராத பக்தியையும்
வியந்து சத்யவானின் உயிரை திரும்ப கொடுக்கிறார் யமன்.
இப்படி யமனுடன் போராடி தனது கணவரின்
உயிரை சாவித்ரி மீட்ட நாளையே காரடையான் நோன்பாக நாம் கொண்டாடுகிறோம்.
தீர்க்க சுமங்கலி பவ !
குறிப்பு:
"தீர்க்க
சுமங்கலி பவ" என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5
மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
அந்த 5 மாங்கல்யங்கள்:
திருமணத்தில் முதல் மாங்கல்யம்.
60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் இரண்டாவது மாங்கல்யம்.
70 வயது பீமரத
சாந்தியில் மூன்றாவது மாங்கல்யம்.
80 வயது
சதாபிஷேகத்தில் நாங்காவது மாங்கல்யம்.
96 வயது
கனகாபிஷேகத்தில் ஐந்தாவது மாங்கல்யம்.
Comments