மஹா சிவராத்திரி – 18 – 02 – 2023 - சனிக்கிழமை
சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது
சிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவை நித்திய
சிவராத்திரி, மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச
சிவராத்திரி, மாத சிவராத்திரி ஆகும். இவற்றில் மாக
சிவராத்திரி என்பது மாசி மாதம் தேய்பிறை சதுர்தசியில் வருவது. அந்த வகையில் 2023
ம் ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18 ம் தேதி வருகிறது. அன்று சனிப் பிரதோஷம் மற்றும் திருவோண
நட்சத்திரம் இணைந்து வருகிறது.
சிவ ராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாம பூஜை நடைபெறும்.
இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
இரண்டாம் ஜாம பூஜையும். நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3
மணி வரை மூன்றாம் ஜாம பூஜை நடைபெறும். 3 மணி
முதல் அதிகாலை 6 மணி வரையான பூஜை நான்காம் ஜாமம் என்று
பிரிக்கப்படுகிறது.
முதல் ஜாம பூஜை:
முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத
பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
இரண்டாம் ஜாம பூஜை:
இந்த ஜாமத்தில் மகாவிஷ்ணு, சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம்
நட்சத்திரம், இந்த சிவராத்திரி நாளில் கூடி வருவது
கோடி புண்ணியம் தரவல்லது. யஜூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும்.
மூன்றாம் ஜாம பூஜை:
மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான
அம்பாள் செய்வதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது.
இதனை 'லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். இரவு 11.30 மணி
முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில்தான்,
அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும்
லிங்க ரூபமாக காட்சியளித்தார். சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க
வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள 'இருநிலனாய்
தீயாகி..' எனும் பதிகத்தையும் பாராயணம்
செய்யலாம்.
நான்காம் ஜாம பூஜை:
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும்,
பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து
ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். பொழுது புலரும்
அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை
வழிபட வேண்டும்.
மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் பாடல் வரிகளான: நமச்சிவாய
வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்
தாள் வாழ்க – என்பதற்கு இணங்க வாய்மை அன்பர்கள் அனைவரின் இதயத்திலும், இல்லத்திலும் சிவபிரான் கொலுவீற்றிருக்கும் புண்ணியம் கிட்ட வரும் 18-ம் தேதி சிவராத்திரி தினத்தில் சிவன் அடிவணங்கி வாழ்வை மேம்படச் செய்து நலமுடன் வாழ்வோமாக. ஓம் நம சிவாய !
Comments