16 -2 – 2022 புதன் கிழமை – மாசி மக திருவிழா
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால்கொண்டாடப்படும் ஒரு சிறப்பான திருவிழா நாளாகும். அந்த நன் நாளில் கடல் – ஆறு – குளம் ஆகியவைகளில் புனித நீராடி, பித்ருக்களுக்கு தர்பணம் செய்து வழிபடுவது சிறப்பாகும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை "பிதுர் மகா ஸ்நானம்" என்கிறது சாஸ்திரம்.
மக நட்சத்திரத்தை "பித்ருதேவ
நட்சத்திரம்" என்று அழைப்பார்கள். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன்,
பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும்
மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதை மக
நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான்.
இந்தியாவில் கும்பகோணத்தில் மாசி மகம்
மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற
பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
பிரளயத்துக்குப் பிறகு, உலக உயிர்கள் அனைத்தும் ஒரு குடத்தில் இருந்து தோன்றிய தலம் என்பதால்
கும்பகோணமே உலக உயிர்களின் பிறப்பிடம் என்பர்.
ஒட்டுமொத்த உயிர்களின் பீஜங்களும்
பாதுகாக்கப்பட்டு பெரும் ஊழிக்குப் பிறகு இங்கேதான் உடைக்கப்பட்டு மீண்டும் சிருஷ்டி
தொடங்கியது என்பது ஐதிகம். பிரம்மன் பூஜித்து வந்த அமிர்தக் குடம் சிவனாரின்
கணையால் உடைபட்டு அதிலிருந்த அமிர்தம் வழிந்தோடி தேங்கிய இடங்கள் இரண்டு. ஒன்று
கும்பேஸ்வரர் கோயிலின் பொற்றாமரைக் குளம். மற்றொன்று மகாமக தீர்த்தக்குளம்.
இத்தகு புண்ணிய தினத்தில் நவகன்னிகா
நதிகளும் மகாமக தீர்த்தத்தில் சங்கமிப்பதாகவும், பிரம்மாதி
தேவர்கள் கும்பகோணத்தில் கூடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆகவே, இத்திருநாளில் குடந்தை தரிசனமும், மகாமக
தீர்த்த நீராடலும் மகத்துவம் வாய்ந்தது.
மகாமக குளத்தின் கரையில் பிரம்ம
தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர்,
விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோனேஸ்வரர்,
பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தியேஸ்வரர்,
வ்யாஸேஸ்வரர், உமை பாகேஸ்வரர், நைருதீஸ்வரர்,
பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்த
தீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர் என 16 ஈஸ்வர சந்நிதிகளை அமைத்தவர் மகான் கோவிந்த தீட்சிதர்.
கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் ஆலய குளத்தில் 20 புண்ணியத் தீர்த்தங்கள் 9 கிணறுகள் உள்ளன. இந்த மகாமகக் குளத்தின் தீர்த்தம், புண்ணிய
நதிகளுக்கே புண்ணியம்தரும் மகிமை கொண்டது!
கங்கா, யமுனா,
நர்மதா, சரஸ்வதி, காவிரி,
கோதாவரி, துங்கபத்திரா, கிருஷ்ணா,
சரயு ஆகிய நதிகளின் பாவத்தை நீக்கிய திருக்குளம் இது. மகாமக
தினத்தில், ஒன்பது நதிகளும் இங்கு வந்து நீராடி
மீண்டும் புண்ணிய நதிகளாகப் பொலிவு பெறுவதாகப் புராணம் கூறும்.
மாசி மகத்தில் மகாமகக் குளத்தில்
நீராடுவோரின் பாவங்கள், தோஷங்கள், நோய்கள்
யாவும் நீங்கி ஞானமும், ஆரோக்கியமும், சகல
சம்பத்துகளும் பெறுவார்கள்.
அதேபோல், ஒருமுறை
மகாமகக் குளத்தில் நீராடினால், காசியில் நூறாண்டு காலம் வாழ்ந்த
புண்ணியமும், உலகை வலம் வந்த பலனும் கிட்டும்
என்பர்.
மகாமக குளத்தில் உள்ள 20 தீர்த்தங்களும் சிறப்பானவை. அதில் நீராட கீழ்க்காணும் புண்ணிய
பலன்கள் கிட்டும் என்பர்.
மாசி மகத்தில் நீராடுவது மட்டுமல்ல தானங்கள் கொடுப்பதும் விசேஷமானது.
அந்த வகையில், 20
வகை தானங்களை விளக்குவார்கள் பெரியோர்கள்.
பூமி தானம், திருமணதுக்கான
தானம், ஸ்வர்ண தானம், பூணூல்
தானம், கோ தானம், அஸ்வ
தானம், காளை தானம், அன்ன
தானம், பாயஸ தானம், தான்ய
தானம், தென்னங் கன்று தானம், குப்த
தானம், சந்தன தானம், முத்து
தானம், நவரத்ன தானம், தேன்
தானம், எள்ளு தானம், மாதுளம்
பழ தானம், உப்பு தானம் மற்றும் பதினாறு வித
பழங்களை பதினாறு பேருக்கு தானம் அளிப்பது.
மாசிமகத்தில் புனித நீராடி, மூதாதையர்களுக்கு தர்பணம் செய்து பாபம் நீங்கி, புண்ணியம் பெருகி வாழ்வு ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும், சிறப்பாகவும் அமைய அந்த கும்பகோணம் சக்தி பீட ஆதிகும்பேஸ்வரர் – அம்பாள் மங்கள நாயகி ஆகிய கடவுளர்களைத் துதித்து அருள் பெருவோமாக.
Comments