வல்லபாய் பட்டேலின் சாணக்கிய தந்திரம்

 


வல்லபாய் பட்டேலின் சாணக்கிய தந்திரம் – ஆக்கம்: பவித்திரன்.

 


தியாகம், நேர்மை, எளிமை, தேசபக்தி, விடுதலைத் தாகம் – என்றெல்லாம் போற்றுதற்கு வல்லபாய் படேல் மட்டும் இல்லை. அவரது மகளுக்கும் அதில் இடம் உண்டு.

தம் பெயருக்கு இழுக்கு வரும் விதமாக பட்டேலே பத்திரிகை ஆசிரியர் கோயங்காவை ‘படேல் ஒரு பேடி – என்று தலப்புச் செய்தி போடு’ என்று ஹைதராபாத் ஒரு பாகிஸ்தானாக உருவாதைத் தடுக்க வேண்டி தன்னையே தாழ்த்திக் கொண்டு, பாரத தேசத்தைக் காத்த உத்தம புருஷர்.

அந்தச் செய்திக்கு முன் பட்டேலின் மகள் மணிபென் – நேரு சந்திப்பையும் அறிந்து கொள்வது நலம். இது முன்பே வாய்மையில் வெளியிடப்பட்டது தான் என்றாலும், அதை மீண்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவது அவசியமாகிறது.

 1. மணிபென் – நேரு சந்திப்பு:

மணிபென் படேல் சர்தார் வல்லாபாய் படேலின் மகள். கல்யாணம் செய்து கொள்ளாமல் தேச விடுதலைக்காக தன் அப்பாவுடன் இணைந்து போராடிய வீரப்பெண்மணி. 1990-ல் அவர் அமாதாபாஅத்தில் காலமானபோது அவருக்கு வயது 87. ஆனால் அவருக்கு மரியாதை செய்ய எந்தவொரு காங்கிரஸ் தலைவரோ, தொண்டரோ வரவில்லை.

மணிபென் படேல் காந்தியடிகளின் சேவையிலும், தந்தை சர்தார் வல்லபாய் படேலுக்கு உறுதுணையாகவும் அவர்களது இறுதிக் காலம் வரை வாழ்ந்த உத்தமப் பெண்ணரசி. தனது கையால் நெய்த கதர் ஆடைகளைத் தான் கடைசி வரை அணிந்தவர். சுதந்திரம் கிடைத்த பிறகு முதல் இரண்டு தேர்தல்களில் மக்களவைக்கும், 1964-ல் மாநிலவைக்கும் தேர்தெடுக்கப்பட மணிபென், இந்திரா காந்தி அரசின் அவசரகால நிலைச் சட்டத்தை எதிர்த்துக் காங்கிரஸிலிருந்து வெளியேறினார். 1977-ல் ஜனதா கட்சியின் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் வெண்ணைப் புரட்சிக்குக் காரணமானவர் என்று போற்றப்படும் வர்கீஸ் குரியன் – அமுல் என்கிற கூட்டுறவு பால் சங்கத்தின் தலைவர், பத்ம விபூஷண் விருது பெற்றவர் – ‘எனக்கும் ஒரு கனவு இருந்தது’ என்ற தமது வரலாற்றுப் புத்தகத்தில் 33, 38, 39 – பக்கங்களில் மணிபென் -  நேரு சந்திப்பை விவரிக்கிறார். வர்கீஸ் ‘இது மணிபென் அவர்களே என்னிடம் தெரிவித்தது’ என்று எழுதி உள்ளார்.

அந்த உண்மைச் சம்பவம்:

“எனது தந்தையார் சர்தார் வல்லபாய் படேலின் மறைவைத் தொடர்ந்து, அவருடைய நோட்டுப் புத்தகம் ஒன்றையும், ஒரு கைப்பையையும் எடுத்துக் கொண்டு பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவைச் சந்திக்கச் சென்றேன். மரணத் தருவாயில் என்னை அழைத்து – ‘இவை இரண்டையும் பிரதமர் நேருவிடம் நேரில் போய் ஒப்படைக்கும்படி எனது தந்தையார் தெரிவிந்திருந்தார். அதை வேறு யாரிடமும் கொடுத்துவிடக் கூடாது’ என்றும் கூறியிருந்தார்.

அந்தப் பையில், காங்கிரஸ் கட்சி நன்கொடையாகப் பெற்றிருந்த கட்சிப் பணம் ரூபாய் 35 லட்சம் இருந்தது. அந்த நோட்டுப் புத்தகத்தில் கட்சியின் கணக்கு வழக்குகள் இருந்தன. அவற்றை பெற்றுக் கொண்டு, நேரு ‘தன்யவாத் – நன்றி’ – என்று கூறினார். அவர் மேலும் ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்தேன். ஆனால் எதுவும் பேசவில்லை. அவருக்குக் எனது தந்தை சர்தார் படேலுக்கும் இடையேயான உறவு கசந்திருந்ததால், பண்டித நேரு அதற்கு மேல் என்னிடம் பேச விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டு, நானும் எதுவும் பேசாமல் திரும்பி விட்டேன்’ என்று என்னிடம் தெரிவித்தார்.

‘இனி என்ன செய்யப் போகிறாய்? உனக்கு அப்பா இல்லாத குறை இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று பிரதமர் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூடச் சொல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது.’ என்பது குரியனின் பதிவு.

குரியன் எழுதிய கீழே உள்ள பகுதி தான் அப்போதைய மேல்மட்ட காங்கிரஸ் தலைவர்களின் மோசமான விளம்பரப் புத்தியைக் காட்டும்:

“மணிபென் மரணத் தருவாயில் இருக்கிறார் என்று தெரிந்த போது அன்றைய குஜராத் முதல்வர் சிமன்பாய் படேல் புகைப்படக்காரருடனும், பத்திரிகையாளர்களுடனும் ஓடோடி வந்தார். அவரது தலைமாட்டில் நின்றபடி புகைபடம் எடுத்துக் கொண்டார். அடுத்த நாள் அந்தப் புகைப்படம் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது.”

2. ‘பட்டேல் ஒரு பேடி’ – தலைப்புச் செய்தியின் பின்னணி


பத்திரையாளரை 11-09-1948-ல் பாகிஸ்தான் தலைவர் எம்.ஏ. ஜின்னா காலமான அடுத்த நாள் காலை 4 மணிக்கு பட்டேல் தன் வீட்டில் சந்தித்து ‘நிஜாம் ஹைதராபாத்தில் 2 லட்சம் முஸ்லீம் ரஸாக்கர்கள் மற்றும் 22,000 நிஜாம் ராணுவத்தினர் சேர்ந்து ஆயிரக்கணக்கில் இந்துக்களைப் படுகொலை செய்ய தயார் நிலையில் இருக்கும் அவர்களை இந்திய ராணுவத்தைக் கொண்டு காப்பாற்ற வேண்டும். அதற்கு உதவவும்’ என்று சொன்ன சர்தார் எங்கே, இந்த முதன் மந்திரி சிமன்பாய் படேல் எங்கே? – என்பதை வாசகர்கள் அறிய மேலும் சில விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அதைப் படித்த பிறகு வாசகர்கள் அனைவரும் ‘சர்தார் பட்டேல் அவர்களே! உங்களை பெற இந்த பாரதம் என்ன தவம் செய்ததோ!’ என்று கண்ணீர் விடுவீர்கள் என்பது திண்ணம்.

துக்களக் இதழ் – 28-10-2020 –ல் ‘அவர் தந்த அனுபவங்கள் – 9 என்ற தலைப்பில் வந்த விவரங்களின் அடிப்படையில் என் பாணியில் உங்கள் முன் படைக்கிறேன்.

அந்தப் பத்திரிகையாளர் வேறு யாரும் இல்லை – பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் சேர்மன் & இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் உரிமையாளர் – எல்லாவற்றிற்கும் மேலாக தேசாபிமானி – ராம்நாத் கோயங்காவாகும்.


கோயங்கா பட்டேல் வீட்டிற்கு வந்தவுட்ன், ‘பாரதமாதாவின் உடலில் பாய்ந்த அம்பை எடுக்க, நான் கூறியபடிச் செய்ய வேண்டும். இந்த பைலில் நிஜாம் ஆட்சி செய்யும் ஹைதராபாத் மகாணத்தில் ஹிந்துக்கள் ஆயிரக்கணக்கில் ரஸாக்கர்கள் மற்றும் நிஜாம் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். நேருவுக்கு ஹைதராபாத் போலீஸ் பாதுகாப்பு போதும் என்று நினைக்கிறார். ராணுவம் தலையிட அவர் அனுமதிக்கப் போவதில்லை. என் பொறுப்பில் விடப்பட்ட 500-க்கும் மேலான சமஸ்தானங்களை நம் நாட்டுடன் இணைத்தாகி விட்டது. நேருவின் பொறுப்பில் உள்ள ஹைதராபாத், காஷ்மீர் இரண்டும் தான் பாக்கி. காஷ்மீர் நிலை ஹைதரபாத்திற்கு வரக்கூடாது. நம் நாட்டில் மத்தியில், ஒரு பாகிஸ்தான் உருவாகும். இதைத் தடுப்பதற்கு ஒரே வழி நேரு ஹைதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்ப அனுமதி அளிக்க வேண்டும். நாளை அமைச்சரவையில் ஹைதராபாத் பற்றி முடிவெடுக்க வேண்டும். நேருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் கோபாலசாமி ஐயங்கார், நேருவின் கண்ணும், காதும் போன்றவர். அவரும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். ஐயங்கார் ராணுவத்தை அனுப்பும் யோசனையை நாளை நடக்கும் மந்திரிசபைக் கூட்டத்தில் பேசினால், நேரு ஒப்புக் கொள்வர்’ என்று விளக்கிய பட்டேல் அதற்குக் கூறிய யுக்தியைக் கேட்டால் வாசகர்கள் அனைவரும் இடி தாக்கிய நிலையில் நிலைகுலைவார்கள்.

பட்டேல் கோயங்காவிடம் சொன்னார்: நாளைக் காலைப் பேப்பரில் ‘‘பட்டேல் ஒரு பேடி’ என்று தலைப்புச் செய்தியாக பைலில் உள்ள விவரங்களைப் பிரசுரித்து, எனது நற்பெயரைக் கெடு. எனது நற்பெயர் பலியானால் தான் நாடு பிழைக்கும். இல்லை யென்றால் ஒரு பாகிஸ்தான் நம் நாட்டின் மையப்பகுதியில் உருவாகிவிடும்.’ என்று விளக்கினார்.

‘செய்தி வந்த பிறகு என்னிடம் நீ பேசியதாகவும், ஹைதராபாத் நடவடிக்கையை என்னிடம் அளிக்கவில்லை என்றால், நான் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஐயங்காரிடம் கூறிவிடு’ என்றும் தனது சாணக்கிய திட்டத்தைத் தெரிவித்தார்.

அதே போல், மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளும் சர்தார் பட்டேல் மீது குற்றம் சுமத்தி செய்தி வெளியிட்டன. அந்தப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு, கோயங்கா, காலை 5.30 மணிக்கே கோபாலசாமி ஐயங்கார் வீட்டுக்குப் போய், அவர் காலில் விழுந்து கால்களைக் கட்டிப்பிடித்து ‘நீங்கள் நான் கேட்பதைச் செய்வேன் என்று உறுதி கூறினால் தான் எழுந்திருப்பேன். எனக்காக ஒன்றும் கேட்க வில்லை. நாட்டுக்காக நீங்கள் ஒன்று செய்ய வேண்டும்’ என்றார். அதைச் செவியுற்ற ஐயங்காரும் ‘ராமநாதா, எழுந்திரு. சொல், செய்கிறேன்’ என்றார்.

‘இன்று அமைச்சரவையில் நீங்கள் நேருவை ஹைதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்ப அனுமதி பெறவேண்டும். இல்லாவிடில் பட்டேலுக்கும், நேருவுக்கும் இன்று அமைச்சரவையில் மோதல் வெடிக்கும்’ என்று சொன்னபடியே கோயங்கா பத்திரைகைகளை ஐயங்காரிடம் கொடுத்துவிட்டு, விடைபெற்றார்.

நேருவும் ஐயங்காரின் ஆலோசனையை ஏற்று, செப்டம்பர் 13-ல் ராணுவம் களத்தில் இறங்கி, ஐந்தே நாட்களில் ரஸாக்கர்கள் – நிஜாம் ராணுவம் இந்திய ராணுவத்திடம் சரணடந்து, ஒரு பெரிய ஆபத்திலிருந்து பாரத தேசம் காப்பாற்றப்பட்டது. ஹைதராபாத் இந்தியாவின் ஒரு அங்கமாகி பட்டேலின் புகழ் பாடியபடியே இருக்கிறது.

பட்டேல் தன் பெயரையும், புகழையும் தியாகம் செய்யத் துணிந்த அந்த தேச பக்தியை நினைத்து நினைத்துப் பெருமிதம் கொள்வோம்.

பாரத மாதாவுக்கு ஜே.

 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017