மார்கழி மஹாத்மியம் – வீதிகளிலும் வீடுகளிலும் நாம சங்கீர்த்தனம்
மார்கழி மாதம் பக்திப் பரவசம் கொள்ள வைக்கும் மாதம். ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில்
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று அந்த மாதத்தினைப்
போற்றுகிறான்.
மார்கழியில் பனிப் பொழிவு அதிகம். குளிரினால் அதிகாலையில்
துயில் எழுவது சிரமம். இருப்பினும் அதிகாலையில் துயில் எழுந்து
இறைவன் துதிபாடுவது உடலுக்கு வலு சேர்க்கும் என்கிறது அறிவியல்.
மார்கழியில் பனி பெய்வதால், நம்மைச் சுற்றி ஆக்ஸிஜன் சற்றுக் குறைவாக இருக்கும்.
அதோடு பனிக் குளிரால் தொண்டை வறண்டு இருமல், சளி,
ஜலதோஷம், தொண்டைக் கட்டு ஆகிய உபாதைகள் உண்டாகும்.
கைகளைத் தட்டியவாறு,
உரத்த குரலில் பகவான் திருநாமங்களைச் சொல்லி பஜனைப் பாடல்களைப் பாடும்
போது நுரையீரல் நன்கு விரியும்; சுவாசம் சுலபமாகும். தேவையான அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கவும் முடியும். இது ஆண்களுக்கு
என்றால், அதிகாலையில் குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது,
நெய் விளக்கு ஏற்றுவது ஆகிய செயல்களால் பெண்களுக்கும் அதே பலன்கள் கிட்டும்.
மேலும் மிளகு சேர்ந்த பொங்கல் பிரசாதம், துளசி தீர்த்தம் ஆகியவைகள்
எல்லாம் சளி போன்றவற்றிற்கு ஒளஷதமாகும்.
இந்தக் காரணங்களால் தான் இந்து மதத்தை ‘வாழ்க்கை வழிமுறை’
என்று சிலாக்கித்து மதிக்கிறார்கள்.
வீதியின் தூய்மைக்கும், வீட்டின் தூய்மைக்கும் மார்கழி மாதம் வழி வகுக்கிறது.
நாம சங்கீர்த்தனம் மனத் தூய்மைக்கு உரமிட்டு வரும் நாட்களை இன்பமயமாகவும்,
நேர்மையாகவும், பரோபகாரமாகவும் வாழ அடித்தளம் அமைத்துக்
கொடுக்கிறது.
சங்கீத மாதமாகவும்,
பக்தி மாதமாகவும் திகழும் இந்த மார்கழியை வரவேற்போம்.
Comments