மோடி அரசின் பொதுப் பிரிவினருக்கு கல்வி – அரசு வேலையில் 10% இட ஒதிக்கீடு




இட ஒதிக்கீடு என்பது அம்பேத்கர் – மஹாத்மா காந்தி ஆகிய இருவரும் 24-09-1932 அன்று பூனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 148 தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்ட சட்டம் கையெழுத்தாகிய தினத்திலிருந்தே ஆரம்பமாகி விட்டது. அந்த ஒதிக்கீடு, அவர்களுக்கு கல்வி – வேலை வாய்ப்பு ஆகியவைகளில் அவர்களின் சமூக அநீதி – தீண்டாமை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டதால் அவைகளைச் சீர் செய்யும் செயலாக இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்று அவர்களுக்கு சமூக நீதி கிடைக்க வழி வகுத்துள்ளது. 

1954-ல் முதன் முதலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட 20% மொத்த ஒதிக்கீடு, 1982-ல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% - என்று பிரிக்கப்பட்டது. அந்த விகிதா சாரத்தின் படி அந்த இரு சமூகத்தினரும் பொதுப்பணித்துறை வேலைகள் மற்றும் அரசாங்கம் மற்றும் அரசாங்க மான்யம் பெறும் கல்வி நிலையங்கள் ஆகியவைகளில் இட ஒதிக்கீடு உறுதி செய்யப்பட்டது.
மொரார்ஜி தேசாய் ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி தாழ்த்தப்பட்ட – பழங்குடியினர்கள் போல் இந்திய ஜனத்தொகையில் 52% அளவில் இருக்கும் சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கிய பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கல்வி – வேலை வாய்ப்பு ஆகியவைகளில் இட ஒதிக்கீடு 27% என்பதை பல எதிர்ப்பு – கலவரங்கள் ஆகியவைகளைத் தாண்டி 1992-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மொத்த இட ஒதிக்கீடு 49.5% என்ற அளவில் உள்ளது.

இட ஒதிக்கீடு அரசியல் சாசனத்தின் ஆர்டிகிள் 46-ன் படி செய்யப்படுகின்றது. அதில் ‘அரசாங்கம் சமூகத்தில் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களை முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர்களை சமூக அநீதி மற்றும் அனைத்து விதமான ஒடுக்கு முறைகளிலிருந்தும் காக்கப்பட வேண்டிய சமுதாயத்தினராகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் இட ஒதிக்கீட்டை மத அடிப்படையிலும் கொடுக்கத் தொடங்கினர். இதனால் மொத்த ஒதிக்கீடு 50%-க்கும் அதிகமாகியது. இதனால், பொது வகுப்பினரின் கல்வி- வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டு, இது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட ‘அனைவருக்கும் சம நீதி’ என்பதும் மீறப்படுவதையும் பலர் குறிப்பிட்டனர். அதனால் பல திறமை வாய்ந்தவர்களுக்கு இட ஒதிக்கீட்டினால் வாய்ப்பும் மறுக்கப்பட்டு, இந்தியாவின் திறமைசாலிகள் கல்வி-வேலை வாய்ப்பு இன்மையால் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதையும் பலர் சுட்டிக் காட்டி உள்ளார்கள். அரசியல் சாசனத்தில் இந்த இட ஒதிக்கீடு 10 ஆண்டுகள் தான் என்பதும் மீறப்பட்டு, அது 70 ஆண்டுகள் தொடந்து வந்துள்ளது.

50% மேல் இட ஒதிக்கீடு கொண்டு வந்த மாநிலங்களின் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்கு:

ஹரியானா – 70%
தமிழ் நாடு – 69%
ஜார்கண்ட் – 60%
மஹாராஷ்ரா – 68%
ராஜஸ்தான் – 54%
வடகிழக்கு மாநிலங்கள் அருணாசல் பிரதேசம், மேஹாலயா, நாகாலாந்து, மிஸோராம் – 80%
ஆந்திரா – 83.33%
மேற்கு வங்காளம் – 70%

பொது வகிப்பினர் இந்த அதிக பட்ச ஒதிக்கீட்டினால் மிகவும் பாதிக்கப் படுகின்றனர் என்று மூத்த வக்கீல் இந்திரா சஹானி தொடுத்த வழக்கில் உச்ச நீதி மன்றம்எல்லா ஒதிக்கீடும் 50%-க்கு மிகாமல் இருக்க வேண்டும்என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

பொது வகிப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்குடியினருக்கும் இட ஒதிக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதை பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கடந்த 2004, 2009 & 2014 ஆண்டுகளின் தேர்தல் அரசியல் கொள்கை வெளியீட்டில் ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது வகிப்பினர்களுக்கும் இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டும்’ என்பதை தொடர்ந்து வலியுருத்தி உள்ளனர்.

மோடி அரசு தேர்தல் அறிக்கையில் பொது வகிப்பினருக்கு ஒதிக்கீடு என்பதை அறிவிக்காவிடினும், காங்கிரஸ் அரசு தொடர்ந்து 15 ஆண்டுகள் சொல்லியதை, மோடி அரசு ஒரே வாரத்தில் இரு சபைகளிலும் பெருவாரியான வாக்குகளைப் பெற்று 124-வது அரசியல் சாசனத் திருத்த மசோதா நிறைவேறி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று இப்போது சட்டமாகி சரித்திரம் படைத்து விட்டது.

இந்த அரசியல் சாசனத் திருத்தத்திற்கு மாநில அரசுகளின் ஒப்புதல் அவசியம் இல்லை. ஆகையால், 14-01-2019 அன்று இந்த ஒதிக்கீடு குஜராத் மாநிலத்தில் அமல் படுத்தப்பட்டு அதை நடைமுறைப்படுத்திய முதன் மாநிலம் என்ற புகழை அடைந்துள்ளது. இதை அமல் படுத்துவதும், படுத்தாமல் இருப்பதும் அந்தந்த மாநில அரசுகளைப் பொருத்தது. மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் உச்ச வரம்பான குடும்ப வருமானமான 8 லட்சம் என்பதையும் குறைக்கும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கு இந்தச் சட்டம் வழி வகுத்துள்ளது. 

இந்த ஒதிக்கீடு அரசியல் சாசனச் சட்டத்தை எந்த அரசியல் கட்சிகளும் எதிர் பார்க்க வில்லை. ‘மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்’ என்ற நிலையில் தவிக்க விட்டது மோடியின் சாணக்கிய தந்திரம் என்றால் மிகையாகாது.

10% ஒதுக்கீடு இந்த 2019-20 ஆண்டிலேயே அமல் படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள 40,000 கல்லூரிகள், 900 யுனிவர்சிடி ஆகியவைகளுக்குப் பொருந்தும். மேலும், இந்த கல்வி நிலையங்களில் 12.5% அளவில் சீட்டுக்கள் அதிகமாக்கப்பட்டு, பலரும் பயன்படும் அளவில் செயல்பட இருக்கிறது. மேலும் இந்த 10% ஒதிக்கீட்டு மற்ற ஒதிக்கீட்டினை எந்த விதத்திலும் பாதிக்காத நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பொதுப் பிரிவினரின் 10% ஒதிக்கீடு பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து மக்களுக்கும் எல்லா மத்தினருக்கும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி வழங்கப்படுவதால் இதில் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள், சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள், புத்தர்கள் என்ற பலரும் பயன் அடையும் வண்ணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ‘சிக்குலர் வாதிகள்’ இந்த மோடியின் செயலைக் குறைகூற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

பொது வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்குத் தான் இந்த 10% இட ஒதிக்கீடு. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்றால் அவர்களின் குடும்ப வருட வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாகவோ அல்லது 5 ஏக்கர் விவசாய நிலத்திற்குக் குறைவாகவோ அல்லது 1000 சதுர அடிக்கும் குறைவான வீடு அல்லது முனிசிபாலிடியில் 200 கஜம் வீடு என்ற வரையறையாகும். 

இந்த ஒதிக்கீடு தவறு என்று வாதிடுபவர்கள் சில காரணங்களை முன் வைக்கின்றனர்.

   1  .   உச்ச நீதிமன்றம் ‘மொத்த ஒதிக்கீடுகள் 50% மேல் இருக்கக் கூடாது. அது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையான ‘அனைவருக்கும் சம நீதி’ என்ற கொள்கைக்கு எதிரானதாகும். மேலும், இந்த ஒதிக்கீட்டினால் பல திறமை வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதுடன், ஒரு நாட்டில் திறமைக்கு மதிப்பளிக்காமல் இருப்பதும் நேர்மையான செயல் அல்ல’ என்ற தீர்ப்புக்கு இந்த 10% பொதுப்பிரிவு இட ஒதிக்கீடு எதிரானதாகும். 

   2.   பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினர் என்பது அவர்களின் குடும்ப வருட வருமானம் ரூபாய் 8 லட்சம் என்பது கேலிக்குரியதாகும். அப்படிப்பட்டவர்கள் வருமான வரி கட்டும் போது, அவர்களை பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று கணிப்பது ஏற்புடையதன்று.

  3.   இந்திய அரசியல் சாசனத்தின் படி இட ஒதிக்கீடுகள் சமூக ரீதியாக காலம் காலமாக தீண்டாமை மூலம் உரிமைகள் மறுக்கப்பட்ட சாதியினர்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட வேண்டும் என்று வரையறை உள்ளது. இதில் சாதிக்குப் பதில், மற்றவைகளை புகுத்துவது அரசியல் சாசனத்திற்கு புறம்பானதாகும். 

மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்குப் பதில்:

1.   உச்ச நீதி மன்றம் இந்திய அரசியல் சாசனத்தை திருத்தம் செய்ய பாராளு மன்றத்திற்கு முழு அதிகாரம் இல்லை என்றும், ‘அடிப்படை கட்டமைப்பை’ (Basic Structure) மாற்றும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் தடை விதித்துள்ளது. 50%-க்கு மேல் ஒதிக்கீடு கூடாது என்பதை உச்ச நீதி மன்றம் தடை செய்ய முடியாத அளவில் மோடி அரசு 124-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளதால் இதை உச்ச நீதி மன்றம் தடை செய்ய முடியாது என்ற நிலை தான் உள்ளது. மேலும் இந்தத் திருத்தம் ‘அடிப்படை கட்டமைப்பு’ என்ற கருத்துக்கு எதிரானது என்று வாதிக்க முடியாது என்று தான் படுகிறது. ‘இப்போதுள்ள ஒதிக்கீட்டில் பொதுப்பிரிவினருக்கு ஒதிகீடு வழங்குவது பெரிதும் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நீதி வழங்கிய செயலாகத்தான் கருத வேண்டும்’ என்ற வாதம் உச்ச நீதி மன்றம் ஏற்கும் என்று தான் படுகிறது.

மேலும், ஆர்டிகள் 15 (6) & ஆர்டிகள் 16 (6) என்ற புதிய விதிகள் மூலம் அரசியல் சாசனத் திட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆர்டிகள் 15 என்பதில் கல்வி நிலையங்களில் இட ஒதிக்கீடு பற்றிய விதிகளும், ஆர்டிகள் 16 என்பதில் வேலையில் இட ஒதிக்கீடு பற்றிய விதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த திருத்தங்களின் மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு கல்வி நிலையங்களில் – தனியார் கல்வி நிலையங்கள் உட்பட அவைகள் அரசு உதவித்தொகை பெற்றாலும் பெறாவிடினும் 10% இட ஒதிகீடு கொடுக்க வேண்டும் என்பதுடன், வேலை வாய்ப்பிலும் 10% இட ஒதிகீடு அளிக்க வேண்டும் என்பது இப்போது சட்டமாகி  உள்ளது.

     குறிப்பிட்ட ஆர்டிகள் திருத்தப்பட்டதால், உச்ச நீதி மன்றம் இந்த 10% இட ஒதிகீட்டினை 50% ஒதிக்கீட்டிற்கு மேல் உள்ளது என்ற தனது முந்தைய தீர்ப்பின் படி தடுக்க முடியாது என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

2.   ஆர்டிகள் 46-ல், ‘அரசாங்கம் நலிந்த பிரிவினரை கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்ற முயல வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளது. இது குறிப்பாக எஸ்.சி/எஸ்.டி ஆகிய சாதியினரைக் குறித்து வலியுறுத்தப்படினும், மற்ற வகுப்பினர்களையும் ஒதுக்க முடியாது. ஏனென்றால், பிற பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதிக்கீடு அளிக்கப்பட்டதை உச்ச நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகையால் பொதுப் பிரிவில் பொருளாதர ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் 10% இட ஒதிக்கீடு தவறு என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்க முடியாது என்று தான் நினக்கத் தோன்றுகிறது. 50% மேல் இட ஒதிக்கீடு தவறு என்று தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றம், ‘சமூக பின் தங்கிய நிலை’ என்பதற்கு 11 வழிகாட்டுதலையும் சுட்டிக் காட்டி உள்ளனர். அந்த சமயத்தில் தான் ஒ.பி.சி.யில் கீரிமி லேயர் – பொருளாதர ரீதியில் முன்னேறியவர்கள் – என்ற தத்துவம் முன் வைக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதிக்கீடு தடை செய்யப்பட்டது. 1993-ல் கிரீமி லேயர் என்பது வருட வருமானம் 1 லட்சம், 2004-ல் 2.5 லட்சம், 2008-ல் 4.5 லட்சம், 2013-ல் 6 லட்சம், 2017-ல் 8 லட்சம் என்று வரையறை செய்யப்பட்டது. ஆகையால் அதே 8 லட்சம் தான் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த வருட வருமான இலக்கை மாநில அரசுகள் மாற்றிக் கொள்ளலாம். குஜராத் மாநிலம் இட ஒதிக்கீட்டிற்கு வருட வருமானம் 6 லட்சமாக மாற்றி உள்ளது.

வருமான வரி கட்டும் ஒ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதிக்கீடு கொடுப்பதை அப்போது எதிர்க்காதவர்கள் இப்போது பொதுப்பிரினரில் வருமான வரி கட்டுபவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களா? என்ற கேள்வி எழுப்ப முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும். கிரீமி லேயர் என்பதை மாநில அரசுகள் தாங்களாகவே முன் வந்து மாற்றிக் கொள்ளலாம் என்பதால், மாநில சுயாட்சி என்று மார்தட்டுபவர்கள் இந்த 10% இட ஒதிக்கீட்டில் வருட வருமானம் 8 லட்சம் உச்ச வரம்பை – அது ஓ.பி.சி.க்கு கொடுக்கப்பட்டிருக்கும் அளவில் இருப்பதால் – குறை கூற எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணரவேண்டும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் கழகம் ஒ.பி.சி. இட ஒதிக்கீட்டான 27% என்பதை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மிக அதிகம் பிற்படுத்தப்பட்டோர் என்று பாகுபாடு செய்து அதற்கேற்ப 27% ஒதிக்கீட்டை பங்கு போட வேண்டும் என்றும் பரித்துரை செய்துள்ளது. இதன் மூலம் கீரிமி லேயர் ஒ.பி.சி. அதிகம் பயன் பெறுவது தடுக்கப்பட்டு, மற்ற பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பயன்பெற வாய்ப்பு உண்டாகும் என்ற கருத்து செயல் வடிவம் பெறவில்லை.

பொதுப் பிரிவு இட ஒதிக்கீட்டில் வருட வருமானத்துடன் மற்ற தகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், பெரும்பாலும் வருட வருமானம் 8 லட்சம் உள்ள குடும்ப நபர்கள் – பெரிய வீடு – விவசாய நிலங்கள் வைத்திருக்கும் நிலையில் – இந்த 10% ஒதிக்கீட்டில் இடம் பெற முடியாது என்பது தான் ஏதார்த்த நிலை. இந்த நிலையை ஒ.பி.சி.யினருக்கும் பொருந்தும் படிச் செய்து ஏழை ஒ.பி.சி.னருக்கு இட ஒதிக்கீட்டுப் பயன் கிடைக்க வழிவகுக்கத் தயங்குவது ஏன்? என்ற கேள்வி எழுந்து, 10% பொதுப்பிரிவு இட ஒதிக்கீட்டில் உள்ளது போல் வீடு, நிலம் ஆகியவைகளும் சேர்க்கப்பட்டு, மற்றவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் காலம் வரத்தான் போகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம். கிரீமி லேயர் பிரிவினர் இட ஒதிக்கீட்டிலிருந்து விலக்கி வைக்கும் நிலை பிற்காலத்தில் வர இதன் மூலம் வழி பிறந்தால் அது நாட்டிற்கு நன்மை பயக்கும். இந்த கிரீமி லேயர் எஸ்.டி. பிரிவினரைத் தவிர்த்து, எஸ்.சி. பிரிவினருக்கும் கொண்டு வருவதும் பிற்காலத்தில் நிகழ்ந்தால் நல்லது.

3.   இட ஒதிக்கீடு என்பது தற்காலிக ஏற்பாடு என்றும், அது நிரந்தரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அரசியல் சாசனத்தின் குறிக்கோள்.

ஏனென்றால், சம உரிமை, சம நீதி என்பது அடிப்படை உரிமைகளாகும். இதை மீறி அமையும் எந்த சட்ட அமைப்பும் நிரந்தமாக இருக்க அனுமதிக்க முடியாது.

ஆர்டிகள் 46-ன் படி சமூகத்தின் பொருளாதர ரீதியில் பின் தங்கியவர்களுக்கும் சலுகைகள் ஏற்படுத்த அரசு விரும்பினால் அது சட்டப்படி செல்லும் என்ற நிலை உள்ளது.

இது எஸ்.சி./எஸ்.டி. ஆகிய சாதியினருக்கு குறிப்பிட்டுச் சொல்லி இருப்பினும் மற்ற சாதியினருக்கு இந்தச் சலுகை கூடாது என்று வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வில்லை.

ஆகையால் ஒ.பி.சி.க்கு இட ஒதிக்கீடு அளிக்கும் போது, அதே காரணத்தின் அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கும் இட ஒதிக்கீட்டை சட்டப்படி தவறு என்று வாதிக்க முடியாது.




இட ஒதிக்கீடே இல்லாத சமூதாயம் அமைவது தான் ஒரு நாட்டிற்கு நல்லது. ஆனால் அரசியல் காரணங்கள், ஓட்டு வங்கி அரசியல், சாதிக் கட்சிகள், சமயக் கட்சிகள் ஆகியவைகளால் இட ஒதிக்கீடே இல்லாத இந்தியா என்பது கனவாகத்தான் இருக்கும் என்ற நிலைதான் இருக்கிறது. இட ஒதிக்கீடு கிடைக்காத பொதுப்பிரிவினர் இதனால் பாதிக்கப்படுவது என்பது என்னவோ உண்மைதான். மேலும், தகுதி உடைய பலர் இதனால் பாதிக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும். இதனால், இந்தியாவின் திறமை, தகுதி, முன்னேற்றம் ஆகியவைகளும் அகில உலக அளவில் எடுபடாமல் மதிப்பும் குறைய வாய்ப்புள்ளது.

இப்போதைய இந்தியாவின் அரசியல் நிலையை முழுவதும் ஆராய்ந்தால், மோடியின் இந்த 10% இட ஒதிக்கீடு என்பது உச்ச கட்ட சாணக்கிய தந்திரம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். மிகவும் கடினமான அரசியல் சாசன சட்ட திருத்தத்தை அசுர வேகத்தில் நிறைவேற்றிய மோடியின் திறமையைப் பாராட்டியே ஆக வேண்டும். இதனால் உயர்குடியினரில் பெரும்பாலோர் பயன் அடைவர் என்பது ஒரு ஆறுதலான விஷயம். இதனால் வருகிற லோக் சபா தேர்தலிலும் மோடிக்கு ஓட்டு மூலம் நன்மை உண்டு என்பதும் உண்மையே.

மோடியின் இந்த இட ஒதிக்கீடு வரும் நாட்களில் கிரீமி லேயர் பிரிவினரை நீக்க வழி வகுக்கும் நிலை ஏற்பட்டால், உண்மையிலேயே இந்தியாவின் திறமையும் பாதுகாக்கப்பட்டு, ஒரு நேர்மையான நியாயமான நாடாக அகில உலகில் இந்தியா போற்றப்படும்.



Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017