திண்ணைக் கச்சேரி - ராஹுலின் குற்றச் சாட்டுக்கள்



திண்ணைக் கச்சேரி
பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

முன் குறிப்பு: ராகுல் திரும்பத்திரும்ப இரண்டு குற்றச் சாட்டுக்களை கூறிவருகிறார்.

இந்த இரண்டு குற்றச் சாட்டுக்களை அலசுகிறார்கள் திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர். மற்றவைகளும் கொசுராக அங்கங்கே அலசப்படும்.


பொதுஜனம்: இளவல் ராஜா ராஹுல் கட்டிப்பிடி அரசியலில் இறங்கி விட்டாரே! பார்த்தீர்களா?

வாசகர்: ராஹுல் பிரதம மந்திரியையே அதுவும் பார்லிமென்ட் கூடத்திலேயே ‘மோடி, பொய் பேசுகிறார். ஊழல் செய்கிறார். வேலை வாய்ப்பு தருவாதகச் சொல்லி ஓட்டு வாங்கி ஏமாற்றுகிறார். ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் 15 லட்சம் போடுவதாக வாக்குறிதி அளித்து அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார். பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நான் கேட்கும் கேள்விகளுக்கு மோடி பதில் சொல்வதில்லை. என் கண்களை நேரடியாகப் பார்க்க மோடிக்குத் தைரியம் கிடையாது. மோடி என்னை வெறுக்கக் கூடும். என் மேல் கோபம் கொள்ளக் கூடும். என்னை பப்பு என்று கேலியாக அழைக்கக் கூடும். என் மேல் தூஷணைகளை அள்ளி வீசக் கூடும். ஆனால், எனக்கு மோடியிடம் கோபமோ அல்லது வெறுப்போ கிடையாது. ஏனனெறால் நான் காங்கிரஸ்காரன். ஏன், இங்கு எதிர்க்கட்சியில் உள்ள ஆனைவரும் காங்கிரஸ் தான். இந்த எண்ணங்கள் – காங்கிரஸ் மன நிலைகள் தான் இந்த தேசத்தை கட்டிக் காத்துள்ளது. மோடி அவர்களே! இதை நீங்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது’ என்று ராகுல் பேசி பார்லிமெண்டையே கலக்கி விட்டார்.

நிருபர்: ஆமாம், ஆமாம். பேசியதை விட ராகுல் மோடியை கட்டிப் பிடித்து சரித்திர நாயகனாகப் போய் விட்டார். ‘நான் பேசினால், ஒரு பெரிய புயலே வெடிக்கும்’ என்று அவ்வப்போது பயமுறுத்தும் ராஹுல் ‘புயலை விட அன்பு தான் பெரிது. அது தான் காங்கிரஸின் கொள்கை’ என்று முத்தாய்ப்பாய்ச் சொல்லி கட்டிப் பிடி அரசியலில் இறங்கிவிட்டார். 



விமரிசகர்: இந்தக் கட்டிப் பிடியைப் பார்த்து அதிர்ந்த மக்கள் ராஹுல் 

இன்னொரு புயலை ஏற்படுத்துவார் என்று கனவிலும் நினைத்திருக்க 

மாட்டார்கள். மோடியைத் தழுவிய பிறகு, தனது இருக்கைக்கு வந்தவுடன் 

இரண்டு செய்கைகளைச் செய்தார். ஒன்று: கண்ணடித்தார். இரண்டு:ஏளனச் 

சிரிப்பு. இந்த அவரது இரண்டு செய்கைகளால், ராஹுல் தன்னை ஒரு சிறந்த 

அரசியல்வாதியாக நிலைநாட்டாமல், சர்க்கஸ் கோமாளியாகக் காட்டி 

விட்டார்.  






பொதுஜனம்: இது அப்பட்டமான ‘ஜும்லா நாடகப் பேச்சு’. மோடி - நிர்மலா சீதாராமனை பொய்யர் என்று ராஹுல் குற்றம் சாட்டுவதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பிரஞ்சு தேச ஜனாதிபதி பொய்யர் – ஊழல் செய்பவர் என்று ராஹுல் சொன்னதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இது எந்த கட்டிப்பிடி டிப்ளமசியில் சேரும்?

விமரிசகர்: ‘நான் பேச ஆரம்பித்தால் பூகம்பம் வெடிக்கும்’ என்று ராஹுல் சொல்லி, 45 நிமிடங்கள் பேசிய அவரது பேச்சு, பூகம்பத்திற்குப் பதில் சிரிப்பு அலைகளைத்தான் உண்டாக்கியது.

நிருபர்: ஆமாம், சிரிப்பே அரங்கத்தில் பூகம்மம் போல் ஒலிக்கச் செய்த பெயில் பப்பு ராஹுலை நாம் மதித்துப் போற்றத் தான் வேண்டும். மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று, அயல் நாட்டுத் தலைவர்களை கட்டிப் பிடிப்பதைக் கேலி செய்ய நினைத்த ராஹுல், பாஹர் (வெளியே) என்பதற்குப் பதில் பார் – (மதுபானக் கடை) என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்து ஆனந்தப் பரவசமாக்கினார்.

வாசகர்: அமித் ஷாவின் மகன் ஜாய் ஷாவின் கம்பனி மோடியின் ஆதரவில் செயல்பட்டு, ஊழல் செய்து, அபிரிமிதமான வியாபரம் செய்வதாக ராஹுல் குற்றம் சாட்டி உள்ளார். மொத்த விற்பனையையே லாபமாகக் கணித்துக் குற்றம் சாட்டுவது தவறு. மேலும், அந்தக் கம்பனி லாபம் ஈட்டாமல் இப்போது மூடப்பட்டு விட்டது. தி ஒயர் – என்ற மோடி வெறுக்கும் இடது சாரி வரதராஜன் மின்வலை பத்திரிகையின் மேல் ஜாய் ஷா மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆகையால், அந்த வழக்கின் முடிவுக்குக் காத்திராமல், ராஹுல் பார்லிமெண்டில் குற்றம் சாட்டுவது அரசியல் ஆதாயம் தேடும் கீழ்த்தர அரசியல். அன்பு, அரவணைப்பு, உண்மை – ஆகியவைகள் தான் காங்கிரசின் ஆதார சுருதி என்று பகரும் ராஹுல், இப்படிப் பேசலாமா?

நிருபர்: சர்ஜிகல் ஸ்ட்ரைக் மற்றும் இந்தியா- சீனா டோக்லாம் பிரச்சனை ஆகிய இரண்டும் ‘ஜும்லா நாடகங்கள்’ என்ற குற்றச் சாட்டு எந்தவிதமான ஆதாரமும் இல்லாதவைகள். ராஹுல் அரசாங்கத்தின் அனுமதி இன்றி சீனத் தலைவர்களைச் சந்தித்தது மிகவும் தவறான முன்னூதாரணம். இந்த இரண்டு நிகழ்வுகள் குறித்து பிரஸ் – மீடியா ஆகியவைகளுக்கு ஆதாரத்துடன் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், இந்தியாவின் ராணுவத்தையே அவமதிக்கும் செயலாகத் தான் ராஹுலின் இந்தக் குற்றச் சாட்டைக் கொள்ள வேண்டும். நேரு சமாதானத் தலைவர் என்ற பட்டத்தைத் தக்க வைப்பதற்காகவும், தமக்கு அமைதி நோபல் பரிசு கிடைக்கவும், புறாவைப் பறக்க விட்டும், சீனாவின் சூயன்-லாய் ஆகியவர்களைக் கட்டிப் பிடித்தும், கூட்டுச்சேரா கொள்கைக்குத் தலைமை ஏற்றும், இந்திய ராணுவத்தினைப் பலப்படுத்தாமல் இருந்து விட்டார். இந்த நேருவின் தவறான அணுகுமுறையால், சீனா இந்தியாவின் மீது படை எடுத்த போது, நமது ராணுவம் சரியான உடைகள், ஆயுதங்கள், பயிற்சிகள் ஆகியவைகள் இல்லாமல் படு தோல்வியைத் சந்திக்க நேரிட்டது. பல ராணுவ வீரர்களை நாம் நேருவின் தவறான அனுகுமுறை – அயல் நாட்டுக் கொள்கை ஆகியவைகளினால் இழந்தோம். இது தான் இந்திய பாதுகாப்புத் துறையில் காங்கிரஸின் ‘ஜும்லா கொள்கை’. அந்த மனநிலையில் தான் இப்போது ராஹுலும் அவரது ஜும்லா காங்கிரஸ் கட்சியும் செயல்படுகிறது. அவர்களுக்கு தேசம் இரண்டாம் பட்சம். வாரிசு காங்கிரஸ் கட்சி தான் முதலிடம் வகிக்கிறது.

பொதுஜனம்: ராஹுலின் குற்றச் சாட்டுகளை இப்படி பட்டியலிடலாம்:  
  
  1.   காங்கிரஸ் அரசு ஒரு ராஃவேல் ஜெட் ரூபாய் 540 கோடி என்று வாங்க நினைத்ததை, மோடி அரசு ஒரு ஜெட் ரூபாய் 1600 கோடி என்ற அளவில் அதிக விலை கொடுக்கிறது. இது மோடியின் ஒரு பெரிய ஊழல். மேலும், அனில் அம்பானிக்கு ரூபாய் 30,000 கோடி அளவில் பிசினஸ் செய்ய உதவி உள்ளார்.
  2.   2 கோடி பேர்களுக்கு மோடி வேலை வாய்ப்பு கொடுப்பதாக வாக்களித்தார். அதுவும் நிறைவேற்ற வில்லை.
  3.   15 தொழில் அதிபர்களுக்கு 2 கோடி அளவில் கடன் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், விவசாயக் கடன் தள்ளுபடியைப் பற்றி மோடி வாயே திறப்பதில்லை.
  4.   ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் ரூபாய் 15 லட்சம் போடுவதாக வாக்களித்ததும் நிறைவேறவில்லை.

விமரிசகர்: ராஹுலின் ராஃவேல் ஜெட்டில் ஊழல் என்ற குற்றச் சாட்டை ஆராய்வோம். காங்கிரஸ் அரசு 540 கோடியில் ஒரு ராஃவேல் வாங்க முடிவானதாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் காங்கிரஸ் அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தையில் தான் இருந்திருக்கிறது. ராஹுல் அரசு வாங்க இருந்தது 126 ஜெட்கள். 2011-லிருந்து 2014 வரை காங்கிரஸ் அரசு பேச்சு வார்த்தையில் 126 ஜெட்களின் விலைப் பட்டியல்: 
2011 - $10.4 பில்லியன்; 
2013 - $15 பில்லியன்; 
2014 - $30 பில்லியன் (ஒரு ஜெட்டின் விலை ₹ 1583 கோடி)

காங்கிரஸ் அரசு 2007 ஆண்டிலிருந்து ஜெட் வாங்க முடிவெடுத்தது. 2011 ஆண்டுகளில் தான் அது வேகம் கண்டது. விலை நிர்ணயத்தில் ஒரு முடிவு எட்டாமல் தான் இறுதி வரை இருந்துள்ளது. காங்கிரஸ் அரசின் கீழ் நடந்த பேச்சு வார்த்தையில், இரண்டு வருடங்களில் – 2011-லிருந்து 2013-க்குள், $5 பில்லியன் விலை அதிகரித்துள்ளது – அதே ஒரு வருடத்தில் – 2013-லிருந்து 2014-க்குள் $15 பில்லியன் – அதாவது இருமடங்கு – அதிகரித்துள்ளது. அப்படி என்றால், காங்கிரஸ் அரசே 2016 இருந்தால், அது எவ்வளவு விலை அதிகம் கொடுத்திருக்கும் என்று ராகுலோ அல்லது ஏ.கே.அந்தோணியோ தான் கணித்துச் சொல்ல வேண்டும். மேலும், மோடி அரசு வாங்குவதோ 126 ஜெட் இல்லை – 36 ஜெட்கள் தான். ஜெட்கள் வாங்குவது குறையும் போது, விலை கூடும் என்பது ஒரு யதார்த்த நிலை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். பிரஞ்ச் கம்பனி காங்கிரஸ் அரசிடம் ஒரு ஜெட்டிற்கு 100-லிருந்து 110 மில்லியன் ஈரோ கேட்டதாகச் சொல்கிறது. ஆனால், மோடி அரசு ஒரு ஜெட் ஈரோ 91.7 மில்லியன் விலையில் வாங்கப் போகிறது.


நிருபர்: இது இந்தியாவின் ராணுவம் சம்பந்தமான ஒப்பந்தம். மேலும், விமானப்படையினர் உடனே தங்களுக்கு ஜெட் விமானங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை முந்தைய ராஹுல் அரசு பூர்த்தி செய்ய வில்லை. அதைப் பற்றிய கவலையும் அதற்கு இல்லை. மோடி பதவிக்கு வந்தவுடன் இந்தப் பிரச்சனை அவர் கவனத்திற்கு வந்ததும், அவர் நேரடியாக இதில் தலையிட்டு, அரசு – தனிக் கம்பனி ஒப்பந்தம் என்பதை, இந்திய அரசு-பிரஞ்சு அரசு என்று மாற்றி ஊழல் நிகழாமல் இருக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டார். மேலும், ராணுவ தளவாடங்கள் வாங்கும் போது, அது தற்போதைய புதிய அனைத்து வசதிகளும் கொண்ட தரமானவைகளாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். இது போருக்குத் தயாராகும் மன நிலையையும், அதைக் கையாளும் நமது விமான ஓட்டிகளின் உயிருக்கு உத்திரவாதமாகவும் இருக்க வேண்டும். ஆகையால் தான் மோடி அரசு அதி நவீனமான வசதிகளுடன் கொண்ட ஜெட்டை வாங்க முனைந்தார். அதற்குரிய விலையையும் நாம் கொடுக்க வேண்டும். இதில் உள்ள பெரும் பிரச்சனை இது ரகசியம் காக்கப்பட வேண்டிய ஒப்பந்தம். ஆனால், ராஹுல் இல்லை என்று சாதிக்கிறார். பிரஞ்சு அரசு ‘ரகசிய ஒப்பந்தம்’ என்று சொன்னாலும், பொய் என்று அந்த அரசையும் சாடுகிறார் ராஹுல். விலை கூடுவதை ஒப்புக் கொண்டாலும், அதன் காரணமாகவே ஊழல் என்று சொல்வது அபத்தம். மேலும், ராகுல் அரசு விலையை நிர்ணயம் செய்து எந்த ஒப்பந்தமும் செய்யாத போது, எந்த ஆதரத்தில் ஒரு ஜெட் ரூபாய் 540 கோடி என்று நிர்ணயிக்கிறார் என்பதை விளக்க வேண்டும்.


பொதுஜனம்: அனில் அம்பானிக்கு மோடி சாதகமாக ரூபாய் 30,000 கோடி அளவில் அனிலின் புதிய கம்பனிக்கு உதவி உள்ளார். இதன் மூலம் அனில் அம்பானி மோடியின் பிரசாரத்திற்கு உதவக்கூடும் –என்று ராஹுல் குற்றம் சாட்டுகிறார்.
                                                        

விமரிசகர்: காங்கிரஸ் அரசு நிர்ணயத்துள்ள ரஃபேல் ஜெட்டின் விலையை ராஹுல் பல இடங்களில் பலவிதமாகக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடாகா தேர்தலின் போது அதன் விலை – 700 கோடி; பார்லிமெண்டில் அதன் விலை 520 கோடி; ராய்பூர் கூட்டத்தில் அதன் விலை 540 கோடி; ஜெய்பூர் கூட்டத்தில் தனது ஒரே பேச்சில் இரண்டு விலைகளை – 520 கோடி என்றும், 540 கோடி என்றும் – குறிப்பிடுகிறார். இந்த முக்கியமான விலையையே – அதுவும் காங்கிரசின் விலையையே – இப்படி மாற்றி மாற்றிக் குறிப்பிட்டால், எதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், இப்படிப்பட்ட பொறுப்பில்லாத ஒரு அரசியல் தலைவரின் பேச்சுக்குப் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

நிருபர்: ராணுவ தளவாடங்கள் வாங்கும் போது அதன் மொத்த விலையில் 50% - அதாவது சுமார் 30,000 கோடி அளவில் இந்தியாவில் செயல்படும் நிருவனங்களுடன் ஒப்பந்தம் அடிப்படையில் அவைகளுக்கு வணிகம் செய்ய வேண்டும் என்பது ஒரு ஷரத்தாகும். அதைத் தான் ‘OFFSETS CLAUSE’ என்று குறிப்பிடுவார்கள். இந்த வணிகத்தில் இந்திய அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இந்த முழு வணிக அளவான 30,000 கோடிகளையும் அனில் அம்பானிக்கு மட்டும் கொடுத்துள்ளது ரஃபேல் டசால்ட் கம்பனி என்று குற்றம் சாட்டுகிறார். இது முற்றிலும் பொய். இந்த 30,000 கோடிகள் 72 கம்பனிகளுக்கு வணிகம் பரவலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் BEL & DRDO, TATA போன்ற கம்பனிகளுடன் அனில் அம்பானி கம்பனியும் சேர்ந்துள்ளது. இந்த அபாண்டமான குற்றச் சாட்டை அனில் அம்பானி மறுத்ததுடன், அதைப் பிரசுரித்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற காங்கிரஸ் பத்திரிகையின் மேல் மான நஷ்ட வழக்கும் போட்டுள்ளார். ராஹுல் அனில் அம்பானி இதன் மூலம் 45,000 கோடி அளவில் லாபம் பெறுவார் என்பது அவரது இமாலய அறிவின்னைமைத் தான் காட்டுகிறது. 30,000 கோடி வியாபாரத்தில் எப்படி 45,000 கோடி லாபம் அடைய முடியும். ஒரு பெரும் பாரம்பரிய மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் இப்படி ஒரு பெரிய ராணுவ ஜெட் வாங்கும் பிரச்சனையை எழுப்பும் போது எந்தவிதமான கூச்சமும் இன்றி வாய்க்கு வந்தபடி, முன்னுக்குப் பின் முரணாகவும் - அதுவும் தம்மை ஒரு பிரதம மந்திரி பதவிக்கு நிற்கும் வேட்பாளராகக் கருதுபவர் – பேசுவது ஏற்புடையது அல்ல.


வாசகர்: மார்ச் 2012-ல் ராஹுல் காங்கிரஸ் அரசு 538 கோடி விலையில் எந்தவிதமான யுத்த உபகரணங்களும் இன்றி வாங்க ஒப்புக்கொள்ளப்பட்ட போது, அது வாங்கும் போது விலை உயர்வை 737 கோடி (மே 2015) என்று ஒப்புக்கொண்டுள்ளது. வெறும் ஜெட்டின் விலை மோடி அரசு 670 கோடியாக 2016 ஆண்டு வாங்கியதால், அது 9% குறைவு என்பதைக் கவனிக்க வேண்டும். ராஹுல் அரசு அதன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், ஒரு ஜெட்டின் விலை 2023 என்பதால், அது 20% மோடி அரசின் விலையை விட அதிகம். மோடி அரசில் இந்த ஒப்பந்தத்தில் “அங்கிள் கோட்ரோச்சி” கிடையாது என்பதால் தான் மோடி அரசு அதன் விலை, தரம், முழுமையான நவீன ஆயுதங்களுடன் கூடிய ஜெட்டை வாங்கி உள்ளார். 


பொதுஜனம்: நமது மதிக்குரிய டெபுடி சீப் ஏர்மார்ஷல் ஆர்.நம்பியார் வெளிப்படுத்திய தகவலைக் கவனிக்க வேண்டும். அவர் விளக்குகிறார்: ’எங்களுக்கு ரஃபேல் பற்றிய முழு விபரம் தெரியும். ஏனென்றால் நாங்கள் இந்த ஒப்பந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளோம். ஊழல் என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது. அது நடந்த உண்மை நிலையோடு ஒத்துப்போகவில்லை. ஜெட் விலை நிர்ணயத்தில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று: விலை. இரண்டு: விலையைக் கொடுப்பதில் ஒப்புக்கொண்ட விதிகள். இந்த இரண்டையும் சேர்த்துப் பார்த்தால், தற்போது வாங்கிய ஜெட்டின் விலை முன்பு நிர்ணயித்த விலையை விட மிகவும் குறைவு.’ ஆனால், ராஹுல் உண்மைக்கு ஒரு போதும் மதிப்புக் கொடுத்ததில்லை. அது அவரது குடும்ப பாரம்பரிய குணம். இந்தியாவை நேரு குடும்பம் தான் ஆளும் என்ற அவரது கனவு தவிடு பொடியாகியதில் அவரது மனநிலை தள்ளாடுகிறது.

நிருபர்: இப்போது ராஹுலின் மோடி அரசு வேலை வாய்பை அளிக்கவில்லை என்பதைப் பற்றி அலசுவோம். மோடி அரசிடமிருந்து பொதுமக்கள் அதிகம் எதிர் பார்க்கிறார்கள். வாஜ்பாய் அரசில், 1999-2004 ஆண்டுகளில், 110 லட்சம் வேலை வாய்ப்புகள் ஒவ்வொரு வருடமும் உருவாக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் யு.பி.ஏ. 10 ஆண்டு ஆட்சியில் (2004-2011) 7 ஆண்டு ஆட்சியில் 40 லட்சம் வேலை வாய்ப்புகள் தான் உருவாக்கப்பட்டது. மோடி அரசு 44 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை 8 மாதத்தில் உருவாக்கி உள்ளது. அதுவும், மே 2018 மாதத்தில் மட்டும் 7.43 லட்சம் புதியவர்கள் வேலையில் சேர்ந்துள்ளனர். இதில் மரபு சேரா வேலையில் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் சுமார் 80% அளவில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்தால், மோடி அரசு ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியது என்று கணிப்பதில் தவறு இருக்காது. 66 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிருவனங்கள் மட்டும் தான் 1947-லிருந்து ஜீலை 2017 வரை இந்தியாவில் உள்ளது. ஆனால், ஜூலை 2017-க்குப் பிறகு ஒரு வருடத்தில் 48 லட்சம் புதிய நிருவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது புதிய வேலைவாய்ப்பை அளிக்கும் அல்லவா? 12 கோடி கடன்கள் முத்ரா என்ற சிறு தொழில் கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகள் ஒருவருக்காவது வேலையை அளிக்காமலா போய்விடும். சென்ற ஒரு வருடத்தில் 1.50 கோடி புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், வேலை வாய்ப்புகள் உருவாகாதா? சாலைகள் போடுவது இருமடங்காக ஒவ்வொரு மாதமும் அதிகரித்துள்ளது. ரயில்வே, ஆகாய மார்க்கம் போன்ற துறைகளும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. சமீபத்திய அகில உலக அறிக்கையில் ‘இந்தியாவின் வறுமை மிக வேகமாகக் குறைந்துள்ளது’ என்றால், மக்களின் வேலை அதிகரித்ததால் தானே இது சாத்தியமாகும்?

விமரிசகர்: ஒரு நம்பகத்தகுந்த தகவல் அறிக்கை இந்த வேலை குறித்து இல்லை. ஆகையால் தான் எதிர்க்கட்சிகள் அவர்கள் மனம் போல் குற்றம் சாட்டுகிறார்கள். வருடா வருடம் ஒரு கோடி வேலை வாய்ப்பு உருவானாலும், அது போதுமா? என்றும் குரல் எழுப்பலாம். முந்தைய அரசுகளை விட மோடி அரசு வேலை வாய்ப்பை அதிகரித்துள்ளதா? என்றால் நிச்சயமாக என்று சொல்லலாம். கர்நாடகா அரசு 53 லட்சம் வேலை வாய்ப்புகளையும், மேற்கு வங்காளம் 68 லட்சம் வேலைகளையும், உருவாக்கி உள்ளார்கள் என்பதை நம்புபவர்கள், மாநில அரசுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் போது, மத்திய அரசு வேலை இழப்புகளையா உருவாக்கும்?

பொதுஜனம்: ராகுலின் 15 தொழில் அதிபர்களின் கடனான 2 கோடி அளவில் தள்ளுபடி – ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் 15 லட்சம் என்ற குற்றச் சாட்டுகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதுடன், பொதுவான குற்றச் சாட்டுகளையே கூறி, எந்தவிதமான ஆதாரங்களையும் ராஹுல்  அளிப்பதில்லை. தற்போது, முந்தைய ரிசர்வ் வங்கியின் தலைவர் – முந்திய காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருந்த பொருளாதார ஆலோசகர் – ரகுராம் ராஜன் இப்போது காங்கிரஸ் அரசு 10 ஆண்டுகளாக வராக்கடன்களைச் சரியாகக் கையாளவில்லை என்றும், வராக்கடன்கள் பெற்ற பெரிய புள்ளிகளிடமிருந்து கடனை வசூலிக்காமல், அவர்களுக்கு மீண்டும் கடன் கொடுத்துள்ளனர் என்று பகிரங்கமாகவே எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ‘என் பெயர் ரகுராம் ராஜன் – நான் என்ன செய்தாலும், நான் அதைத் தான் செய்தேன்’ என்று அன்று மார் தட்டியவர் இப்போது தலை குனிந்து குற்றவாளிக் கூண்டில் இருக்கிறார். பெரிய பெரிய வாராக் கடன்களை அனுமதித்து விட்டு, சிறு சிறு கடன்கள் கொடுப்பது தவறு என்று ராஜன் சொல்வதை ஏற்க முடியவில்லை.

நிருபர்: கறுப்புப் பணம் ஒழிப்பில் மோடி அரசு எடுத்த – எடுத்துக்கொண்டு வரும் முயற்சிகள் போற்றப்பட வேண்டும். யங்க் இந்தியா ஊழலில் பெய்யிலில் இருக்கும் ராஹுல் ஊழலைப் பற்றிப் பேசவே அருகதை அற்றவர். கருப்புப் பணத்தின் பரிணாமத்தை உணர்த்த விளக்கிய மோடியின் பேச்சைத் திருத்திச் சொல்வதால், மக்கள் ராஹுலை நம்பத்தயாராக இல்லை. பல பதிவு செய்யப்படாத என்.ஜி.ஓ.க்கள், பல ஷெல் கம்பனிகள், பண மதிப்பிழப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்புப் பணத்திற்கு வசூலான வரிப்பணம், வராக்கடன்களை வசூல் செய்ய சட்டத் திருத்தங்கள் – இவைகள் எல்லாம் காங்கிரஸ் அரசு செய்யுமா? என்பதை மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். விழித்த மக்களை மீண்டும் திசை திருப்பும் ராஹுல் முற்றிலும் தோல்வி அடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாசகர்: பொய் சொல்லியே ராஹுல் தனது காங்கிரசை வழிநடத்திச் செல்கிறார்கள். இதனால், ராஹுல் தனிப்பட்ட மதிப்பையும், கட்சியின் வெற்றியையும் இழப்பார் என்பது திண்ணம். ராஹுல் அமேதி தொகுதியில் நின்று ஜெயிக்கும் நிலையில் இல்லை என்பது எவ்வளவு கேவலம் என்பதை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொதுஜனம்: மஹாபந்தன் என்ற பல வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து மோடியை மீண்டும் பிரதமராக தேர்வாகக் கூடாது என்ற ஒரே கொள்கையை வைத்து தேர்தலில் போட்டி போட்டால், இந்திய மக்கள் அதை ஆதரிப்பார்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும். இப்படிப்பட்ட கூட்டணி ‘தண்ணீரும், எண்ணையும் சேர்ந்த கூட்டு’ என்று மோடி வர்ணிப்பது சரியாகத் தான் இருக்கிறது. இரண்டும் ஒருபோதும் ஒத்துப் போகாததுடன், இதனால் தண்ணீரும் – எண்ணையும் உபயோகப்படுத்த முடியாமல் பாழாய்விடும் என்பது நிதரிசனம்.

நிருபர்: ராஹுல் தன்னைப் பூணுல் போட்ட பிராமணன் என்றும், காங்கிரஸ் கட்சியின் ஜீன் பிரமணத்துவம் என்றும், தான் பக்கா சிவ பக்தன் என்றும் காட்டிக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார். மம்தாவோ காளி பூஜைக்கு கோடிக்கணக்காகப் பணம் கொடுக்க உத்திரவிடுகிறார். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் ‘ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோ சாலை’ என்று இந்துத்துவா கொள்கைக்கு அச்சாரமாக அறிக்கை விடுகிறார்கள். அகிலேஷ் யாதவ் – விஷ்ணு பக்தராக அவராதரமெடுத்து, பெரிய விஷ்ணு கோயிலைக் கட்டுவேன் என்கிறார். தெலுங்கான முன்னால் முதல்வர் சந்திரசேகர ராவ் – கோயிலில் பூஜை செய்யும் பிராமணர்களின் சம்பளத்தை உயர்த்தி தன் இந்து மத அபிபானத்தைக் காட்டுகிறார். தீவிர கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரியோ பத்தி சிரத்தையுடன் அம்பாள் பூக்கூடையைத் தன் தலையில் சுமந்து கொண்டு சக்தி பக்தனாகிறார். ஆனால், சந்திரபாபு நாயுடு ‘புதிதாக உருவாகும் ஆந்திர மாநில தலைநகரான அமராவதியில் மெக்காவையே மிஞ்சும் அளவில் 10 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மசூதியைக் கட்டுவேன்’ என்று உத்திரவே போட்டு விட்டார்.

பொதுஜனம்: மோடி இப்போதுதான் முதல் முதலாக பிரதமராக ஐந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்ய இருக்கிறார். அதற்குள் பல எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லாம் இந்து மதத்தில் திடீர் பற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். எல்லாம் வடிகட்டின வேஷம் என்பது இந்துக்கள் புரிந்து கொண்டு, மீண்டும் மோடியை அமோக வெற்றி அடையச் செய்ய வேண்டும். இது போல் இன்னொரு வாய்ப்பு இந்துக்களுக்குக் கிட்டாது. அமித்ஷா சொன்னதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:’மீண்டும் மோடி ஜெயித்தால், இன்னும் 50 வருடங்களுக்கு பி.ஜே.பி. அரசு தான்.’

வாசகர்: சிங்கம் ஒன்று சேராவிட்டால், நாய் கூட சிங்கத்தை வென்று விடும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். விடுக்கும் எச்சரிக்கை. இந்துக்கள் அனைவரும் சிங்கமாக வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து மோடியை மீண்டும் அரசு கட்டிலில் அமரச் செய்வோம். தர்மம் தழைக்கச் செய்வோம். இந்தியாவின் புகழை உலக அளவில் கொண்டு சென்ற உத்தமன் மோடியை மீண்டும் தேர்வு செய்வது இந்துக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.   

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017