மார்கழி மாத மகத்துவம்




16 – 12 – 2017 – சனிக்கிழமை – திருப்பாவை – திருவெம்பாவை ஆரம்பம்
18 – 12 -    2017 –  செவ்வாய்க்கிழமை - ஹனுமத் ஜெயந்தி
29 – 12 -   2017 –  வெள்ளிக்கிழமைவைகுண்ட ஏகாதசி
02 – 01 -  2018 –  செவ்வாய்க்கிழமை -திருவாதிரை நோன்புஆருத்ரா தரிசனம்                    

மார்கழி மாத மகத்துவத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டு மென்றால், ‘மாதங்களில் நான் மார்க்கழி’ என்ற கிருஷ்ணனின் கீதை வரிகளே போதும். மார்கழி மாதம் திருப்பாவை – திருவெம்பாவை பாசுரங்களுடன் பிறக்கிறது. பொழுது புலரும் போதே, பெண்கள் ஒன்றாக ஒவ்வொருவரையும் எழுப்பியபடி நதி – குளம் ஆகியவற்றிற்குச் சென்று நீராடி – பெருமாளையும், சிவனையும் துதித்து அந்த மார்கழி மாதம் முழுவதையும் தெய்வ வழிபாடாக ஆன்மீதத்தையும், பக்தியையும் வீடு தோறும், வீதிதோறும் பரப்பி ஹிந்து தர்மத்தை நிலைநிறுத்துவார்கள். கிராமத்துப் பெரியவர்களும், சிறுவர்களும் மிருதங்கம், தம்பூரா, ஜால்ரா சகிதம் நாம சங்கீர்த்தனம் செய்தபடி வீதிவலம் வருவார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக அவரவர் வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் இட்டு, உஞ்சவிருத்திப் பாத்திரத்துடன் நடுவில் இருக்கும் பெரியவரின் கால்களைக் கழுவி, பிட்சை இட்டு, பக்திப் பரவசத்தோடு அந்த மார்கழி மாதத்தை வரவேற்று ஆனந்திப்பார்கள். 

இவைகள் எல்லாம் பழம் கதையாகி விட்டாலும், இன்றும், சில இடங்களில் இவைகள் பழமை மாறாமல் காப்பாற்றப்படுகின்றன. அடுக்குமாடிக் கட்டிடங்களாகி விட்ட பிறகு வீதியிலே கோலம் போடுவது சாத்தியமில்லை என்பது உண்மை தான். இருப்பினும் இந்தப்பாரம்பரியத்தை குக்கிராமங்களில் உள்ள சில அக்கிரஹாரங்கக் குடியிருப்புகளில் காப்பாற்றி வருகின்றனர். ஏன், சில முதியோர் இல்லங்கள் அக்கிரஹாரக் குடியிருப்புகளாக உருவாகி வரும் நிலையில், அங்கே ஹிந்துமத வழிபாடுகள் காப்பாற்றப்படும் நிலையையும் காணுகிறோம்.

தியாகையர் கீர்த்தனைகளும் இந்த மார்கழி மாதத்தில் பாடப்படுவதும் உண்டு. தியாகையர் இந்த மார்கழி மாதமான – 06-01-1847 – அன்று தமது 79-வது வயதில் மஹா சமாதி ஆனார். அதே போல் நடமாடும் தெய்வம் என்று போற்றப்படும் 68-வது பீடாதிபதியான மஹா பெரியவாளும் தமது 99-வது வயதில் இதே மார்கழி மாதமான – 08-01-1994 – அன்று மஹா சமாதியானார். சொர்க்கவாசல் திறப்பு என்ற புனிதமான தினமும் இதே மாதமான மார்கழியில் தான் வருகிறது.

ஆண்டாளின் திருப்பாவை – மாணிக்க வாசரின் திருவெம்பாவை – திருப்பள்ளி எழுச்சி ஆகியவைகளுடன் தியாகையர் கீர்த்தனைகள், தேவாரம் – திருவாசகம் போன்ற பக்திப் பாசுரங்களும் இந்த புனிதமான மார்கழியை பக்தி மாதமாக்கி ஹிந்து தர்மத்தைப் பாதுகாக்கப் பெரிதும் உதவுகின்றன.


பக்திமான் பலவான் என்பார்கள். அதிலும் ஹனுமான் ராமனிடம் கொண்ட பக்திக்கு எல்லையே இல்லை என்பதுடன், ஹனுமானின் இருதய கமலத்தில் ராமன் – சீதை ஆகியவர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பது புராண வரலாறு. ஹனுமத் ஜெயந்தியை வட இந்தியர்கள் சித்திரை மாதம் வரும் பவுர்ணமி அன்று கொண்டாடுவார்கள். இந்த நாள் – மார்ச் – ஏப்ரலில் வரும். ஆனால், தமிழ் நாட்டிலோ, ஹனுமத் ஜெயந்தியை மார்கழி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்தின் போது கொண்டாடுவார்கள். இந்த வருடம் ஹனுமத் ஜெயந்தி நாள் – 18-12-2017 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த மார்கழி மாதத்தில் வரும் அடுத்த பெரிய பக்தித் திருவிழா – வைகுண்ட ஏகாதசி. அது 29-ம் தேதி டிசம்பர் வருகிறது. இந்த வருடம் அது  ஆங்கிலப் புத்தாண்டு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் வருகிறது. திருப்பதி – திருவரங்கம் போன்ற வைணவஸ்தலங்களில் வைகுண்ட ஏகாதசி – அதிலும் குறிப்பாக சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். திருச்சி ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கு முன் உள்ள 10 நாட்களை பகல்பத்து என்றும், அதற்குப் பிறகு வரும் 10 நாட்களை ராப் பத்து என்றும் இரு பகுதிகளாக 21 நாட்கள் கொண்டடப்படுகிறது. பரமபத வாசல், சொர்க்க வாசல் – பெருமாள் கோயிலில் வடக்கு திசையில் அமைந்துள்ள கதவு வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் திறக்கப்படும். அதன் வழியாக பெருமாள் புறப்பாடு நடைபெற்றவுடன், பக்தர்கள் அந்த வழியாக வந்தால், சொர்க்கம் கிட்டும் என்பது நம்பிக்கை.


 வைகுண்ட ஏகாதசியின் மகத்துவம் பத்ம புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. முரன் என்ற அரக்கனை விஷ்ணுவின் பெண் சக்தி சம்ஹாரம் செய்து தேவர்களின் இடுக்கன்களை நீக்கியது. அந்த பெண் சக்திக்கு பெருமாள் ‘ஏகாதசி’ என்று பெயரிட்டு, அந்த நாளில் விரம் இருப்பவர்கள் அனைவரும் வைகுண்டம் அடைவார்கள் என்ற வரத்தைப் பெருமாள் அளித்தார். ஆகையால் தான் பெருமாளின் பெண் அம்சமான ஏகாதசியை வழிபடும் முகத்தான் விரதம் இருந்து, சொர்க்க வாசல் வழிச் சென்று, சொர்க்கத்திற்கு வழிவகுக்கிறோம்.
திருவாதிரை நோன்பு – ஆருத்திரா தரிசனம் இந்த வருடம் 02-01-2018 அன்று ஆங்கிலப்புத்தாண்டின் இரண்டாம் நாள் வருகிறது. மார்கழி மாதத்தில் வரும் நட்சத்திரமான திருவாதிரை சிவனுக்கு உரியதாகும். திரு + ஆதிரை என்பதே திருவாதிரையாகியது. இதனால் தான் சிவனுக்கு ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் பெயர் உண்டாயிற்று. அந்த நாளில் ஆருத்திரா தரிசனம் சிதம்பரம் கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.


சிவபெருமான் பிச்சாடனராக வேடம் பூண்டு பிச்சை எடுக்கச் சென்ற பொழுது, முனிபத்தினிகள் தம்மை மறந்து சிவன் பின்னால் சென்றனர். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு ஆகியவற்றைத் தோற்றுவித்து சிவன் பால் ஏவினர். சிவபிரானோ மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளையும் தமது சின்னங்களாகத் தரித்து, முயலகன் மீது தமது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடினார். இந்தக் காட்சியைத் தான் ஆருத்திரா தரிசனம் என்று சொல்வார்கள்.


அதே போல் திருவாதிரைக் களிக்கும் ஒரு வரலாறு உண்டு. சேந்தனார் என்ற விறகுவெட்டிச் சிவபக்தர், சிவனடியாருக்கு உணவளித்த பிறகு தான் தாம் உண்பது வழக்கம். ஆனால் ஒரு நாள் அதிக மழையின் காரணமாக விறகு கிடைக்காமலும், அரிசி வாங்கப் பணம் இல்லாமையாலும், கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்த தருணம் நடராஜப் பெருமானே ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் சென்று, களி உண்டு, அடுத்த வேளை உணவிற்கும் களி பெற்றார். மறு நாள் தில்லை வாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையில் களிச் சிதறல்கள் இருப்பதைக் கண்டு அரசரிடம் தெரிவிக்க, அரசரோ தம் கனவில் சேந்தனார் வீட்டில் சிவன் களி உண்டதாகக் கனவு கண்டதாகச் சொல்லி, சேந்தனாரைத் தேட உத்திரவிட, சேந்தனார் சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழாவில் இருந்தார். எல்லோரும் சேர்ந்து தேரை இழுத்தும், தேர்ச் சக்கரங்கள் மழைச் சேற்றில் அழுந்தி நகராமல் நின்றது. அப்போது அசரீரியாக ‘சேந்தா நீ பல்லாண்டு பாடு’ என்ற குரல் கேட்கவும், சேந்தனாரும், ‘மன்னுகதில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல’ என்று தொடங்கி ‘பல்லாண்டு கூறுதுமே’ என்று 13 பாடல்கள் பாடி முடிந்ததும், தேர் நகர்ந்தது.


சிவன் சேந்தனாரின் வீட்டில் களி உண்ட தினம் திருவாதிரை நாள் என்பதால், திருவாதிரை அன்று சிவனுக்குக் களி படைத்து வணங்குவது வழக்கமாகி விட்டது. இதனைக் குறிப்பிடும் விதமாக ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்பது பிரசித்தமான சொற்றொடராகும்.

சிவனுக்கு ஐந்து நடனமாடும் சபைகள் உண்டு. சிதம்பரத்தில் கனகசபை (தங்கம்), மதுரையில் வெள்ளி சபை, திருவாலங்காட்டில் ரத்திரன சபை, திருநெல்வேலியில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்திர சபை ஆகியவைகளிலும் ஆருத்திரா தரிசனம் சிறப்பாகும். நடராஜரின் நடனமாடும் தத்துவம் – ஆனந்தத் தாண்டவம் அவரது ஐந்துவிதமான செயல்களான பிறப்பு, காப்பு, அழிப்பு, மாயை, விழிப்பு ஆகியவைளைக் குறிப்பதாகும்.


இத்தகைய சிறப்பு மிக்க மாதமான மார்கழியை வாய்மை வரவேற்று, வாய்மையின் வாசகர்கள் – அவர்களது குடும்பத்தினர் – உறவினர்கள் அனைவரும் பக்தியோடு இந்த விழாக்களைக் கொண்டாடி, சிவன் – பெருமாள் ஆகிய கடவுள்களின் அருள் பெற்றுச் சிறப்பாக வாழப் பிரார்த்திக்கிறோம். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017