ஹிமாசல் பிரதேசம், குஜராத் – தேர்தல்கள்
ஹிமாசல் பிரதேசம்
– குஜராத் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பி.ஜே.பி. வென்றுள்ளது. ஹிமாசல் பிரதேச வெற்றி
ஹிமாலய வெற்றியாகும். ஏனென்றால், அதில் முன்பு காங்கிரஸ் ஆட்சி இருந்தது. மொத்த இடங்களான
68-ல், காங்கிரஸ் – 36, பி.ஜே.பி. – 26 மற்றவை 6 என்று நிலையில் சென்ற 2012 தேர்தலில்
காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில், பி.ஜே.பி. 44, காங்கிரஸ் 21
மற்றவை 3 என்ற வகையில் பி.ஜே.பி. ஹிமாலய வெற்றி பெற்றுள்ளது. ஓட்டு விகிதம் பி.ஜே.பி.க்கு
48.8 சத விகிதம் – காங்கிரஸுக்கு 41.8 சத விகிதம் என்ற அளவில் உள்ளது.
குஜாராத்தில் முன்பு
2012 வருடம் நடந்த தேர்தலில் பி.ஜே.பி. 115 இடங்களிலும் காங்கிரஸ் 61 இடங்களிலும் வெற்றி
பெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள இடமான 182-ல் பி.ஜே.பி.யால் 99 இடங்களிலும்,
காங்கிரஸ் 77 + அதன் கூட்டணி 2, மற்றவை – 4 என்ற அளவில் வெறும் 8 இடங்கள் மட்டுமே ஆட்சி
அமைக்க கிடைக்க வேண்டிய பாதி அளவுத் தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பி.ஜே.பி.
தொடர்ந்து ஆறாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது ஒரு ஹிமாலய சாதனையாகும். மேலும்
பி.ஜே.பி.யின் ஓட்டு சதவிகிதம் முந்தைய தேர்தலை விட அதிகம்: 2012 – 47.85% - 2017
– 49.10% (இருப்பினும், கிடைத்த சீட்டுக்கள் குறைவு.)
மேலும் 150+ என்ற
இலக்கை முன்னிருத்தி போட்டி இட்ட பி.ஜே.பி.க்கு இந்த தேர்தலில் கிடைத்த 99 சீட்டுக்கள்
ஒரு பின்னடைவு என்பதும் உண்மையே. பி.ஜே.பி.யின் இந்த நிலைக்குக் காரணம் ராகுல் – மூன்று
இளம் ஜாதித்தலைவர்களான – பட்டேல் ஜாதி ஹார்த்திக் படேல், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி,
பிற பிற்படுத்தப்பட்ட ஜாதித் தலைவர் அல்பேஷ் தாக்கூர் ஆகியவர்களுடன் கூட்டுச் சேர்ந்து
– தேர்தலைச் சந்தித்ததாகும். ஹார்த்திக் படேல் 24 வயதே இருப்பதால் அவர் தேர்தலில் போட்டி
இடவில்லை. ஆனால் மற்ற இருவர்களும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டி இட்டு
வென்றுள்ளனர். இருப்பினும், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றாததால்,
ஜாதி கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தும், பட்டீல் சமூகத்திற்கு தனியாக இடக் ஒதிக்கீடு அளிக்க
ஒப்பந்தம் செய்ததாகவும் தெரிவித்த இந்த அனுகுமுறை ராகுலின் முதிர்ச்சி இன்மையைக் காட்டுவதாக
குற்றம் சாட்டப்படலாம். மேலும் இவர்களின் துணையால் தான் காங்கிரஸ் 61-லிருந்து 77 இடங்களில்
வென்றுள்ளது என்றால், அது ராகுலுக்கு எந்தவிதத்திலும் பெருமை சேர்க்காது.
‘ஜாதியை வைத்து
ஓட்டு வங்கியை ஊக்கிவிக்கிறது காங்கிரஸ்’ என்ற அவப்பெயரை ராகுல் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்?
என்பதும் ஒரு பெரிய கேள்விக் குறியாகும். காங்கிரஸ் இவ்வாறு குறுகிய நோக்கில் அரசியலில்
கூட்டுச் சேர்ந்தால், அது நீண்ட கால வெற்றிக்கு வழி வகுக்காது என்பது தான் உண்மை.
‘ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு’ என்பது இனி தேர்தலில் கைகொடுக்காது என்பதை இந்த
குஜராத் தேர்தல் நிரூபித்து விட்டது.
இந்த இரண்டு தேர்தல்களிலும்
பி.ஜே.பி. கடுமையாக உழைத்ததால் தான் அதற்கு இந்த வெற்றி கிடைத்தது. இதில் அமித்ஷா –
மோடி ஆகியவர்களின் கடினமான உழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. அவர்களும்,
பி.ஜே.பி. கார்யகர்த்தாக்களும் இவ்வாறு உழைத்திருக்காவிடில், காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்
என்ற நிலைதான் காண்கிறோம். ஆண்டவன் அருளால், பி.ஜே.பி. மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சிக்
கட்டிலில் அமர்ந்துள்ளது, மோடிக்கு மன நிம்மதியையும், வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை
மேலும் கொண்ட செல்ல உற்சாகத்தையும் அளிக்கும் என்பது திண்ணம்.
தேர்தலில் வெற்றி
பெற்ற பி.ஜே.பி.யை வாய்மை வாழ்த்துகிறது.
காங்கிரஸ் ஹிமாசலப்
பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இழந்து விட்டாலும், குஜராத்தில் ராகுல்
பி.ஜே.பி.க்கு ஒரு பெரிய சவாலாகக் கூட்டங்கள் கூட்டியும், கோயில் தரிசனம் செய்தும்,
சரியோ – தவறோ இளய ஜாதித் தலைவர்கள் மூவரையும் காங்கிரசுக்கு ஆதரவாகக் கூட்டுச் சேர்த்து
தேர்தலை சந்தித்த சாணக்கியத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.
வருகிற 2019 பாராளுமன்றத்
தேர்தலில் மோடியை எதிர்க்கும் தலைவராக ராகுல் தம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டிய கட்டாய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் ‘காங்கிரஸ்
முக்த் இந்தியா’ என்ற பி.ஜே.பி.யின் இலக்கை எப்படி முறியடிக்கப் போகிறார்? – என்பது
இனித் தான் தெரியவரும்.
மோடியின் 3 ½ ஆண்டு
கால மத்திய ஆட்சிக்குக் கிடைத்த வெற்றியாகவும் இந்த இரு தேர்தல்கள் கணிக்கப்படுகின்றன.
தாமரை இன்னும்
பல இடங்களில் மலர்ந்து இந்தியா அகில உலகில் புகழ் பெற வாய்மை வாழ்த்துக்கிறது.
Comments