நீதிபதி கர்ணன் பூண்ட தலித் கவச அங்கி
நவம்பர்
2011 அன்று தாழ்த்தப்பட்ட ஜாதி தேசிய ஆணையத்தில், கர்ணன் ‘தாம் ஒரு தலித் என்பதால்,
சக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்னைத் துன்புறுத்தியும், தண்டித்தும் கொடுமைப்
படுத்துகிறார்கள். என் வேலையிலும் குறிக்கிடுகின்றனர்’ என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இதற்குச் சான்றாக, கர்ணன் தன் சகநீதிபதியுடன் ஒரு கல்யாணத்திற்குச் சென்ற போது, அந்த
சகநீதிபதி தமது காலை வேண்டுமென்றே என் மீது படும்படி அமர்ந்து, தன்னை அவமானப் படுத்தியதாகக்
கூறுகிறார்.
அதன்
பிறகு ஜனவரி 2014-ல், ‘நீதிபதிகள் நியமன வழக்கு பற்றி ஒரு பொதுஜன வழக்கு நடந்து கொண்டிருக்கும்
போது, கர்ணன் தடாலடியாக அந்த நீதிமன்றத்துற்குள் நுழைந்து ‘நீங்கள் தேர்வு செய்த பெயர்கள்
நியாமனாவைகள் அல்ல. நான் இதை எதிர்த்து ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வேன்’ என்று
முறையிட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட உச்ச நீதிமன்றம், ‘கர்ணனின் இந்தச்
செயல் மிகவும் கீழ்த்தரமான, எதிர்பார்க்காத, மதிப்புக் குறைவான, நாகரிகமற்ற ஒன்றாகும்’
என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-மே
2015-ல், ‘கீழ்க் கோர்ட் நீதிபதிகளின் தேர்வுகளில் ஒரு நீதிபதி ஊழல்வாதி. ஆகையால்,
தேர்வான நீதிபதிகளின் பதவி உத்திரவுகளை நான் நிறுத்தி வைக்கிறேன்’ என்று கர்ணன் உத்திரவிடவும்,
அதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் டிவிஷன் பெஞ்ச் மூலம் அந்த கர்ணன்
உத்திரவு ரத்தானது. இதைக் கண்ட கர்ணன், நீதிபதி கவுல் மேல் தானாகவே முன் வந்து அவமதிப்பு
வழக்குப் போட்டார். இதை அறிந்த சென்னை ரிஜிஸ்ட்ரார் உச்ச நீதி மன்றத்தை அணுகிய பிறகு,
கர்ணனை கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு பிப்ரவரி 2016 அன்று மாற்றப் பட்டார். அப்போதும்,
கர்ணன் தம் பதவியைப் பயன்படுத்தி, அந்த உச்ச நீதிமன்ற உத்திரவை நிறுத்தி வைத்து உத்திரவு
போட்டார். இதை அறிந்த உச்ச நீதிமன்றம், கர்ணனுக்கு சென்னை நீதி மன்றத்தில் எந்தப் பொறுப்பும்
வழங்க தடை விதிக்கப்பட்டது. பிறகு, 11-03-2016 அன்று கர்ணன் கல்கத்தா உயர் நீதி மன்றத்தில்
பதவியில் சேர்ந்தார்.
2017-
வருடத்தில் தான் கர்ணனின் செயல் பாடுகள் உச்ச நிலையை அடைந்தது. 23-01-2017 அன்று
20 – பதவியில் இருக்கும் மற்றும் ஒய்வு பெற்ற டெல்லி உச்ச – சென்னை உயர் நீதிபதிகளைப்
பற்றிய ஊழல் புகாரை ஒரு பகிரங்கக் கடிதமாக பிரதம மந்திரி, மத்திய நிதி மந்திரி ஆகியவர்களுக்கு
அனுப்பி வெளியிட்டார். இதற்குப் பிறகு தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதி, 7 நீதிபதிகள் கொண்ட
பெஞ்சை கர்ணனின் குற்றச்சாட்டை விசாரிக்க அமைத்தார். அந்த பெஞ்ச் பிப்ரவரி 8, 2017
அன்று கர்ணன் மேல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி, அவரது அலுவல்கள் ஒன்றையும் செய்ய விடாமல்
தடுத்தனர்.
உச்ச
நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் கர்ணனை விசாரிக்க பெயிலில் வரும் வாரண்ட் ஒன்றை, கர்ணன்
31-03-2017 அன்று நேரில் ஆஜராக உத்திரவு பிறப்பித்தது. ஆனால் கர்ணன் அஜராகாமல் இருந்த
காரணத்தாலும், அவரது பல நடவடிக்கைகள் ஒரு சாதாரண மனிதனைப் போல் இல்லாத நிலையில், உச்ச
நீதிமன்றம் கர்ணனை மனநல மருத்துவர் மூலம் பரிசோதிக்க மே 1, 2017 அன்று உத்திரவு பிறப்பித்தது.
மே
4, 2017 அன்று கல்கத்தாவிலுள்ள கர்ணன் வீட்டில் மருத்துவக் குழு சென்ற போது, ‘நான்
முழு மன நலத்துடன் தான் இருக்கிறேன். மருத்துவ பரிசோதனைக்கு உட்பட மாட்டேன்’ என்று
மறுத்து விட்டார். அதன் பிறகு மே 9, 2017 அன்று உச்ச நீதிமன்றம் கர்ணனுக்கு கோர்ட்டை
அவமதித்ததற்காக 6 மாதச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு
எதிராக, கர்ணனும் உச்ச மன்ற தலைமை நீதிபதியுடன் சேர்த்து 7 நீதிபதிகளுக்கு தலித்தை
அவமதித்ததற்காக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் கொடுமைப்படுத்தும் சட்டம்,
1989 கீழ் தலா 5 வருடச் சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து
உத்திரவு பிறப்பித்துள்ளார். கர்ணன் மேலும் தமது உத்திரவில், ‘எனது 13-ம் தேதி ஏப்ரல்,
2017 உத்திரவான ரூபாய் 14 கோடி அபராதத்தை வசூல் செய்வதும் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதை உடனே அவர்கள் சம்பளத்திலிருந்து பிடிக்க ஆரம்பிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கர்ணன்
11-06-2017 அன்று ஓய்வு பெற இருக்கிறார். கர்ணனின் செயல்பாடுகள் எந்தக் கோணத்திலிருந்து
நோக்கினாலும், அது மிகவும் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகத்தான் தோன்றுகிறது. தலித் என்ற
கவசத்தில் பதவிக்கு வந்தவர், அந்த கவசத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, தம்மையும்,
தம் இனத்தையும், ஏன், இந்திய சட்டத்தில் அளிக்கப்பட்ட இட ஒதிக்கீட்டையும் மிகவும் கேவலமாக்கி
விட்டார். தாம் வகித்த உயர் பதவிக்கு கர்ணன் எந்த விதத்திலும் தகுதி இல்லாதவர் என்று
தான் நாம் முடிவுக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
நீதித்
துறையில் ஊழல் இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால், அதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தால்,
கர்ணனைப் பாராட்டலாம். ஆனால், நீதித் துறையையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவில் அவதூறும்,
நடவடிக்கைகளும் எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. நீதித் துறையில் உள்ள ஊழலை பல வருடங்களுக்கு
முன்பே சாந்தி பூஷன் என்ற மூத்த உச்ச மன்ற வழக்கறிஞரும், முன்னால் மத்திய நீதித்துறை
மந்திரியும், ‘உச்ச மன்ற நீதிபதிகளில் பாதிப்பேர்கள் ஊழல் பேர்வழிகள். 16 தலைமை நீதிபதிகளின்
பெயர்கள் சீல் இடப்பட்ட கவரில் இத்துடன் இணைத்துள்ளேன்’ என்று உச்ச நீதிமன்றத்திலேயே
பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு, கர்ணனின்
குற்றச் சாட்டான ‘நீதி மன்ற ஊழல்’ பற்றி தானாகவே முன் வந்து, செயல்படுத்தி, மக்கள்
மத்தியில் ‘உச்ச நீதிமன்றத்தில் ஊழல் இல்லை’ என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய
காலத்தின் கட்டாயம் இப்போது வந்துள்ளதை உணர்ந்து, செயல்பட வேண்டும்.
மஹாபாரதக்
கர்ணன் கவச குண்டலத்தையும் தானம் செய்து உயிர் துறந்த தர்மவானாகத் திகழ்கிறான். நீதிபதி
கர்ணனோ தலித் என்ற கவசத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இட ஒதிக்கீட்டையும், தலித் இனப்
பாதுகாப்புச் சட்டத்தையும் பாழ்படுத்தி விட்டார். ஊழல் என்பது உயர்குடியில் இருப்பதைப்
போல், தலித் இனத்தவர்களிடமும் இருப்பதை நாடு அறியும். ஆகையால் ஊழலிலும் உயர்குடி ஊழல்
– தலித் ஊழல் என்று இனப்பாகுபாடு பார்க்காமல், ஊழலை அடியோடு ஒழிக்க அனைவரும் முன்வரவேண்டும்.
Comments