2579-வது கவுதம புத்தரின் வருடப் பிறந்த நாள் – 10-05-2017


 

புத்தர் (563-483 கி.மு.) நேபாலில் உள்ள லும்பினியில் வைகாசி மாதம் பவுர்ணமி நாளில் பிறந்து, புத்தகயாவில் ஞானோதயம் பெற்று, மத்தியப் பிரதேச சாரநாத்தில் தமது 8 அம்ச தர்மத்தை முதன் முதலாக உபதேசம் செய்து, உத்திரப் பிரதேச குஷிநகரில் தமது 80-வது வயதில் முக்தி அடைந்தார். புத்த ஜெயந்தி, விசாக், வைசாகா – என்று பல பெயர்களில் புத்தரின் விழா கொண்டாடப்படுகிறது. புத்தர் பிறந்த தினம், புத்தர் ஞானம் பெற்ற தினம், புத்தர் முத்தி அடைந்த தினம் எல்லாம் இந்த வைகாசி மாத பூர்ண சந்திரன் ஒளி விடும் ஒரே நாள் என்பது ஒரு பெரிய ஆச்சரியமான செய்தி.

புத்தர் என்றால் ‘உத்தம புருஷர்’ என்றே பொருளாகும்.

புத்தரின் முக்கிய போதனை ‘நான்கு புனிதமான உண்மைகள்’ என்பதில் அடக்கம். துக்கம், துக்கத்தின் மூலம், துக்க நிவர்த்தி, துக்க நிவர்த்திப்  பாதை – ஆகியவைகள் தான் அந்த நான்கு புனித உண்மைகளாகும். முதல் உண்மை மனித வாழ்க்கையின் பிரச்சனைக்கு  காரணம் – துக்கம் என்றும், இரண்டாவது உண்மையில் துகத்திற்கான காரணங்களை அறிய வேண்டும் என்றும் போதித்த புத்தர், அடுத்த மூன்றாவது புனித உண்மையில் துக்கத்திற்கு மருந்தை உணர்ந்து, நான்காவது புனித உண்மையில் துக்க நிவர்த்திப் பாதை என்பது தமது எட்டு வகையான தர்ம சக்கரப் பாதை என்று விளக்கி உள்ளார்.  



சாரநாத்தின் தர்மச் சக்கரம் தான் புத்தரின் எட்டு வகையான தர்ம சக்கரப் பாதையின் சின்னம். அந்த தர்மச் சக்கரம் எட்டு குறுக்குச் சட்டங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இது புத்த மதத்தின் முக்கிய முத்தி அடையும் பாதைகளான எட்டு தர்மங்களைக் குறிக்கின்றன. நேர்மையான பார்வை, நேர்மையான நோக்கம், நேர்மையான சொல், நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான எண்ணம், நேர்மையான சமாதி – ஆகிய எட்டு அம்ச தர்மப் பாதையும் புத்தர் முதன் முதலாக சாரநாத்தில் உபதேசித்த முக்கிய புத்தமதக் கொள்கையாகும்.

இந்து தர்மப் படி 24 ரிஷிகள் காயத்ரி மந்திரத்தின் முழு சக்தியையும் பாதுகாத்து வருகின்றனர். காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் அந்த 24 ரிஷிகளைக் குறிக்கின்றன. விஸ்வாமித்திர ரிஷி தொடங்கி கடைசியாக யாஞ்யவல்கியர் ரிஷி வரை இதில் அடங்கும். இதைப் போல் புத்தரும் தமது கொள்கையாக 24 குணங்களை அசோகா சக்கரத்தின் 24 குறுக்குச் சட்டங்கள் போல் வடிவமைத்து போதித்துள்ளார்.

அன்பு, வீரம், பொறுமை, சாந்தி, பெருந்தன்மை, நற்குணம், சிரத்தை, மென்மை, தன்னலமற்ற தன்மை, தன்னடக்கம், தியாகம், சத்தியம், நேர்மை, நீதி, கருணை, அருள், பணிவு, நேர்மை பிறழாதல், பரிவு, ஆன்மீக அறிவு, மன்னித்தல், உண்மை, துறவு, நம்பிக்கை – ஆகிய 24 புத்த தர்மங்களை அசோக சக்கரம் குறிப்பிடுகிறது.

அது தான் நமது அரசாங்கச் சின்னமாகவும் இருக்கிறது. 

புத்தரின் கொள்கையின் முக்கிய அம்சம் – அஹிம்சை. ஜீவ ஹிம்சை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது புத்தமதத்தின் ஜீவ நாடியாகும். அவருக்குப் பிறகு தான் ஹிந்து மத யாகத்தில் மிருக பலி ஒழிந்தது. ‘புத்தரின் அஹிம்சையும், ஆதி சங்கரரின் ஞானமும் தான் இந்தியாவை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும்’ என்று முழங்கியவர் இந்தியத் தாயின் தவப் புதல்வர் சுவாமி விவேகானந்தர்.

புத்தரின் அருள் வேண்டி வாய்மை அவரது அடி பணிந்து வணங்குகிறது.



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017