வாழ்க்கைச் சித்திரம்: நான் கடந்த கரடுமுரடான வாழ்க்கைப் பாதை - பி. கிருஷ்ணன்



முன்னுரை:

வாழ்கையில் எதிர்படும் தடைக் கற்களை தவிடு பொடியாக்கி முன்னோருவோர் அதிரடி வீரர்கள். அதே தடைக் கற்களை படிக்கட்டுகளாக்கி அதையே அடித்தளமாக்கி வெற்றி காண்போர் அஹிம்சா வீரர்கள். முந்தையதில் வீரமும் தீரமும் வெளிப்பட்டால், பிந்தையதில் பொறுமையும், திறமையும் ஒளிர்விடும். இரண்டும் வெற்றிக்கு வித்திடும் உத்திகள் தான். முந்தியதில் கோபமும் பழிவாங்கும் எண்ணமும் மேலோங்கி இருக்கும். ஆனால், பிந்தையதில் வெறுப்பும், வேதனையும் மேலோங்கி, மற்றவர்களின் அறியாமையை நினைத்து - அடிபணிய வைத்து வெற்றிக் கொடி நாட்டுவார்கள்.

எனது இன்னுயிர் நண்பன் பி. கிருஷ்ணன் தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக்கி முன்னேறிய வெற்றி அஹிம்சா வீர்ர். அவரது வாழ்க்கைச் சித்திரம் இதைப் பிரதிபலிக்கும் என்று நினைக்கிறேன்.  

இப்பொழுதெல்லாம் நமது பள்ளித் தோழர்களைப் பார்த்து உரையாடுவது மிகவும் அரிதாக விட்டது. அதிலும் மிகவும் அன்னோன்னியமாக குடும்ப நண்பரைப் போல் பழகிய சில பள்ளித் தோழர்களுடன் தொடர்பு கொள்வதும் அரிதாகி விட்டது. தொலை தொடர்பு சாதனங்கள் பல உள்ள இந்த நிலையிலும், ஏன் பள்ளித் தோழர்களைத் தொடர்பு கொண்டு உரையாடுவது, மனம் விட்டுப் பேசுவது குறைந்துள்ளது? என்பதின் காரணத்தையும் சரியாகக் கணிக்க முடியவில்லை.

என் பள்ளித் தோழர் பி.கிருஷ்ணன் மிகவும் சிரமப்பட்டு என் இ-மெயிலை அறிந்து, என்னைத் தொடர்பு கொண்டு, அவரும் அவரது மனைவியும் என்னை என் பெங்களூர் இல்லம் வந்து, நாங்கள் இருவரும் உரையாடினோம்.

அப்போது வாய்மை இதழுக்காக பி.கிருஷ்ணனின் வாழ்க்கைச் சம்பவங்கள் பற்றிக் கேட்டேன். பி.கிருஷ்ணன் அவரது சொந்த உழைப்பால், எஸ்.எஸ்.எல்.சி. படித்து, காலேஜ் சேராமல் இருந்த குறையை நிவர்த்தி செய்ய, ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்து 8 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து, பிறகு பி.. (ஆங்கிலம்) படித்து (அப்பொழுதெல்லாம் ஆசிரியர்களுக்கு மட்டும் தான் தனியாக கல்லூரியில் சேராமல் பரிட்சை எழுதி, தேர்வாக முடியும்) பட்டம் பெற்று, அத்துடன் நில்லாமல் 4 ஆண்டுகாலம் ஆடிட்டர் கீழே பயிற்சி பெற்று கடினமான சி.. பரிட்சை பாஸாகி, யுனியன் வங்கியில் நேரடியாக ஆபீசர் பதவி பெற்று, அங்கிருந்து ஜெர்மன் டாயுஷ் பாங்கில் மிக உயர்ந்த பதவியை அடைந்து, வாழ்க்கைப் போராட்டத்தில் ஹிமாலய வெற்றி கண்டவர்.

அவர் நடந்து வந்த பாதையைப் பற்றிய குறிப்பு மிகவும் பலனுள்ளதாகவும், சுவையாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். - ஆசிரியர்.

ஆசிரியர்: கிருஷ்ணன்! நீங்கள் பிறந்து வளர்ந்த பாப்பாரப்பட்டியைப் பற்றிச் சொல்லுங்கள்.

கிருஷ்ணன்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மபுரி அருகில் பாப்பாரப்பட்டி ஒரு கிராமம். அங்கு எலிமெண்டரி ஸ்கூல், ஹையர் எலிமெண்டரி ஸ்கூல் உண்டு. என் தந்தை பிந்துமாதவாச்சார் அந்த வட்டாரத்தின் மதிப்பைப் பெற்ற பாண்டித்யம் பெற்றவேதமூர்த்திஎன்ற விருது பெற்ற மிக நேர்மையான ஒரு புரோகிதர். பண ஆசை இல்லாமல் சேவை செய்பவர். என்னைச் சேர்த்து நாங்கள் 4 சகோதரர்கள், 2 சகோதரிகள். பெரிய குடும்பம். எங்களில் மூத்தவர் தான் பிற்காலத்தில் பிரபலமான சினி ஆர்ட் டைரக்டர் கலைமாமணி பி.நாகராஜன் ஆவார். என் அம்மாவின் பூர்விகம் நிலபுலன்கள் உள்ள லெளகீக குடும்பம்.  இருப்பினும் அப்பாவை - அவர் ஒரு அர்ச்சகராக இருந்தாலும், மணம் செய்து கொண்டார். என்றாலும், தன் பிறந்த வீட்டிலுள்ளவர்களைப் போல் தன் குழந்தைகளையும் நன்கு வளர்க்க வேண்டும் என்று வெகு ஆவலாகவும், அதற்காகப் பிரயாசையும் பட்டார்கள். நாங்கள் குடியிருந்த வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அந்த வீட்டில் திண்ணை உண்டு. அங்கு தான் அப்பா பஞ்சாங்கள் சகிதம் உட்கார்ந்து இருப்பார். பலர் ஜாதகம் பார்ப்பது, நல்ல நாட்கள் பார்ப்பது என்று அப்பாவிடம் வந்து திண்ணையில் கூடுவார்கள்.

அந்த நாளில் பாப்பாரப்பட்டியில் தீண்டாமை மிகவும் கடுமையாக அனுசரிக்கப்பட்டது. ஹரிஜனங்கள் அக்ரஹாரம் வர அனுமதி இல்லை. பாப்பாரப்பட்டியில் தான் சுப்பிரமணிய சிவா ஆச்சிரமம் நடத்தி, அந்த தீண்டாமையை ஓரளவுக்கு ஒழிக்க முயன்றார்,

எனக்கு ஒரு சம்பவம் நன்கு ஞாபகம் இருக்கிறது. மாணிக்கம் என்ற ஹரிஜன் என் கூடப்படிக்கும் மாணவன். சுதந்திரம் அடைந்த நாளான ஆகஸ்ட் 15, 1947 அன்று நானும் என் நண்பர்களும் சுப்பிரமணிய சிவா ஆச்சிரமம் சென்று சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோம். அந்த ஆச்சிரமத்தில் தீண்டாமையை ஒழிக்க அனைவரும் சமம் என்ற சகோதர உறவுதான் அங்கு அனுசரிக்கப்பட்டது. எனக்குத் தீண்டாமையின் விளைவு பற்றி எல்லாம் தெரியாது. மாணிக்கம் என் நண்பன். ஆகையால், நான் மாணிக்கம் தோளில் கையைப் போட்டுக் கொண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் முடிந்ததும், அங்கு கொடுத்த சுண்டலைச் சாப்பிட்ட வண்ணம் தெருவிலே நடந்து சென்றதை என் உறவினர் ஒருவர் பார்த்து விட்டு, ‘என்ன அபச்சாரம்? பெரிய புரோகிதர் மகனே தீண்டத் தகாதவனின் தோளில் கை போட்டு நடக்கிறானே?’ என்று சொல்லிக் கொண்டே என் வீட்டில் இந்த சம்பவத்தைச் சொல்லி விட்டார், சுண்டல் கதையையும் சேர்த்து.

நான் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்த என் அம்மா, ‘கிட்டா, நில். என்ன காரியம் செய்து விட்டாய்? பிராயச் சித்தம் செய்ய வேண்டும்என்று சொல்லிய படியே ஒரு குடம் தண்ணீரை என் தலையில் விட்டு குளிப்பாட்டி தீட்டு கழித்த பிறகு தான் என்னை வீட்டிற்குள் நுழைய விட்டார்கள். ஆசார குடும்பத்தில் பிறந்தாலும், அப்போதே எனக்கு ஏனோ உடன் பாடு இல்லை. ஆகையால் ஆசார - அனுஷ்டானங்களை அபரிமிதமாகக் கடைப்பிடிப்பவர்களைக் கண்டால் எனக்கு உடன்பாடு இல்லை. என் அண்ணா - தம்பிகள் மிகவும் பக்தி சிரத்தையாக கோபி போன்ற மத்வாச்சார்ய சின்னங்களை அணிந்த போதிலும், நான் அவைகளை மதித்தாலும், தினமும் அணிவதில்லை.

ஆசிரியர்: இந்த உங்கள் சின்னங்கள் அணியாத போக்கினால் உங்கள் அப்பா மனம் வருந்தி இருப்பார் இல்லையா?

கிருஷ்ணன்: அப்பா வருந்தி இருப்பாரோ இல்லையோ, அவர் என்னை ஒரு போதும் இதற்காகக் கோபித்ததில்லை. கடவுள் பக்தி எனக்கு உண்டு. சிறுவயதில் புரந்தர தாசர் கீர்த்தனைகள் பாடுவதில் அலாதியான பற்று. ‘பஜனை கிட்டாஎன்ற பெயரும் எனக்கு உண்டு. ஆனால், ஆசார அனுஷ்டானங்களை நான் கடைப்பிடிப்பதில்லை. எனது 13-வது வயதில் திடீரென்று, என் அம்மாவை இழந்தேன். ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்த நாங்கள் ஒவ்வொருவராக எங்கள் உறவினர்கள் வீட்டில் வசிக்கச் செல்ல வேண்டிய நிலை உண்டாயிற்று. ‘அப்பா கடவுளையே கதி என்று பூஜை செய்து, வழிபடும் போது, ஏன், அந்தக் கடவுள் இந்தக் கஷ்டங்களைக் கொடுக்கிறார்?’ என்று என் மனம் நிலை தடுமாறும். அப்பாவிடமே, நான் ஒரு நாள் கேட்டேன். ‘அப்பா, நீங்கள் கடவுளை மனதார வழிபடுகிறீர்கள்? ஏன், அவர் உங்களை இப்படி கஷ்டப்படுத்துகிறார்? அம்மாவை இழந்தோம். ஒன்றாக இருந்தவர்கள் பிரிந்தோம்? கடவுள் நம்பிக்கையையே போய்விடும் அளவு ஏன் இந்த நிலை?’

அதற்கு என் அப்பா மிகவும் மென்மையாக ஆனால் திடமாக விளக்குவார்: ‘கிட்டா, கடவுளை முழுசாக நம்பவேண்டும். நான் கடவுளுக்கு அர்ச்சிக்கும் ஒவ்வொரு பூவும் பொன்னாகும். அந்தப் பொன் பூக்களெல்லாம் உங்கள் அனைவருக்கும் தான்! ஆனால் அதற்கு பொறுமை வேண்டும். ஆகையால், பொறு, பொன் பூக்கும் உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு நாள்!’

இப்போது அதை நினைத்துப் பார்க்கிறேன். என் அப்பாவின் குழந்தைகள் அனைவரும் அவர் அர்ச்சித்த பூக்களின் பலன்களை பொன் பூக்களாகப் பெற்றார்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டோம். அப்பாவின் பூஜாபலத்தினால் தான் - அவரது ஆசார பக்தியினால் தான், நாங்கள் அனைவரும் நல்ல பதவி - சொத்து - குழந்தைப் பேறு பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆசிரியர்: உங்களைக் கவர்ந்த நபர்கள் யார்?

கிருஷ்ணன்: என் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாதவர்கள் இரண்டு பேர்கள். ஒன்று என் பாப்பாரப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பாராவ். மற்றொருவர்: காசி விஸ்வநாதன் என்ற சென்னைத் தொழில் அதிபர். அத்துடன் இந்த இருவரின் இறப்பும் என்னை மிகவும் கலக்கியது.  காசி விஸ்வநாதன் இறந்த பொழுது அவருக்கு நான் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடிந்தது. ஆனால், என்னைக் கவர்ந்த என் ஆசிரியர் சுப்பாராவைப் பற்றிக் கேட்கும் போது, ‘அவர் இப்போது இல்லை. இறந்து விட்டார்என்ற செய்தியைக் கேள்வி உற்றதும், என் மனம் தீராக் கவலையில் ஆழ்ந்ததுஇது ஒருபுரம் இருக்கட்டும். இப்போது சுப்பாராவைப் பற்றிக் கூறுகிறேன். காசி விஸ்வநாதன் அவர்களைப் பற்றி பிறகு கூறுகிறேன்சுப்பாராவ், ஆசிரியர் தொழிலை தமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே நினைத்து, ஓயாது மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். அவர் ஒரு பிரம்மசாரி. தாம் அணிந்திருந்த பூணூலையே அவிழ்த்துஎக்குலமும் சமம்என்ற சிந்தனையை உடைய உத்தமர். தமது சொற்ப சம்பாத்தியத்தையும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதில் செலவிடுவார். அவர் எம்.எல்..வாகக் கூட தேர்தலில் நின்றார்ஒருவரின் குணத்தையோ, குலத்தையோ, சேவை மனப்பான்மையோ பார்க்காமல் ஓட்டுப் போடுவதால், அவர் தோற்றதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இருப்பினும், தொடர்ந்து தொண்டு செய்து, பலவிதமான முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது முயற்சியால் உயர்நிலைப் பள்ளியும் வந்தது. அவர் ஒரு பெரிய தியாகி. வள்ளுவர் வாக்குப்படி அவர் தான் உண்மையாகவே ஒரு அந்தணர்.   

ஆசிரியர்: பாப்பாரப்பட்டியில் 8-ம் வகுப்பு படித்து முடித்தவுடன் மேற்கொண்டு படிக்க சென்னை சென்றீர்கள். அதனைப் பற்றிச் சொல்லவும்.

கிருஷ்ணன்: கிராமத்தில் சுதந்திரமாக இருந்த நான் சென்னை ஒண்டுக் குடித்தன வாழ்க்கை முதலில் பிடிக்காவிட்டாலும், மேற்கொண்டு படிக்க சென்னை தான் மிகவும் சரியான இடம் என்பதால் நான் கூடிய சீக்கிரமே என்னை அதற்கு தயாராக்கிக் கொண்டேன். என்னுடன் சென்னை வந்த என் அண்ணியும் ஆதரவாக இருந்தார். அங்குள்ள திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேரவேண்டும் என்ற விருப்பம். ஆனால், அந்த சென்னையில் பிறந்து வளர்ந்து அங்கு படிக்கும் உறவினர், ‘நீ ஒரு பக்கா கிராமத்தான். உனக்கு ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் இடம் கிடைக்காது. ஆகையால், வேறு பள்ளியில் முயற்சி செய்என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால், எனக்கு ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் இடம் கிடைத்தது மாத்திரம் அல்லாமல், அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்றுப் பரிசுகளும் பெற்றேன். பள்ளி நாடகங்களிலும் நடித்துப் பாராட்டப்பட்டேன். அதே ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் எட்டு வருடங்கள் பணி ஆற்றினேன். அவைகளைப் பற்றிப் பிறகு சொல்கிறேன்.

ஆசிரியர்: உயர் நிலைப் பள்ளிக்குப் பிறகு நீங்கள் மீண்டும் பாப்பாரப்பட்டிக்குச் சென்றீர்கள். அதன் பின்னணியின் சம்பவங்களை விளக்கவும்.

கிருஷ்ணன்: என் அண்ணாவின் சம்பாத்தியத்தில் என்னை கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்கும் நிலை இல்லை. ஆகையால், அவர் என்னை பாப்பாரப்பட்டிக்கே செல்லும் படிச் சொல்லி விட்டார். என் கூடப்படித்த பலரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் நானோ பாப்பாரப்பட்டியில் தள்ளப்பட்டேன். இது என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பெரிய இடியாக கருதி, மிகவும் துக்கப்பட்டேன். ஆனால் இதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். நான் ஹிந்துப் பத்திரிகை, ஆங்கில நூல்கள், ஆங்கில அகராதி ஆகியவைகளை எடுத்துக் கொண்டு, நிழலான மரங்கள் நிரம்பிய தொலைதூர இடத்திற்குச் சென்று, வெறிகொண்டவன் போல் உரக்கப் படிப்பேன். அதன் மூலம் கல்லூரிக்குச் சென்று படிக்கும் என் நண்பர்களைக் காட்டிலும், அதிகம் நான் கற்றேன் என்ற மன நிம்மதி எனக்கு ஒரு பலத்தை அளித்தது. இருப்பினும் இது ஒரு முடிவாக இருக்க முடியாது என்பதை உணர்ந்தேன். ஆனால் அதற்கு விடிவு கிடைக்கும் வழி தெரியாமல் மனம் சஞ்சலமடைந்தேன்.

ஒரு நாள் என் கவலைகளை அறிந்த என் உறவுக்கார ஆசிரியர் என்னைப் பற்றி என்னிடம் விசாரித்தார். ‘நான் கல்லூரிப் பட்டம் பெற முடியவில்லையே?’ என்று சொல்லி கண்ணீர் விட்டேன். அதற்கு அவர், ‘நீ ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்என்று அறிவுரை சொல்லவும், நான் முதலில் மறுத்தேன். அதற்கு அவர், ‘அதில் இப்போது ஸ்டைபண்ட் உண்டு. இரண்டு வருடங்கள் தான் பயிற்சி. பிறகு ஆசிரியரான உடன் கல்லூரியில் சேராமலே பரிட்சை எழுதி, கல்லூரிப் பட்டம் பெற்று விடலாம். இந்த வழி வேறு எந்த தொழிலுக்கும் கிடையாது. உடனே நீ அதற்கு விண்ணப்பம் செய்என்று விளக்கிய உடன், நான் அதற்கு முயன்றேன். நான் எஸ்.எஸ்.எல்.சி.யில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறி இருந்தேன். ஆனால், நான் மேல் வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால், நிராகரிக்கப்பட்டேன். அப்போது என்ன செய்வதென்று எனக்குத் தெரிய வில்லை. சென்னை எழும்பூர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்த, சுந்தர வரதன் என்ற தலைமை ஆசிரியரைப் பார்க்கச் சென்றேன். அவர்என்ன வேண்டும்?’ என்று கேட்கவும், ‘நான் உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதால், நல்ல மார்க்குகள் இருந்தாலும், எனக்கு ஆசிரியர் பயிற்சியில் இடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்என்றேன். ‘ஏன் ஆசிரியர் பயிற்சி. வேறு வேலைக்குச் செல்வது தானே?’ என்று கேட்கவும், நான் என் எதிர்காலக் குறிகோளை எடுத்து உரைத்தேன். அவருக்கு என்ன தோன்றியதோ? ‘அப்படியா? நாளைக்கு என்னை வந்து பாரு. எனக்கு ஒரு சீட்டு கொடுக்க அதிகாரம் உண்டு. அதை உனக்குக் கொடுக்க சீபாரிசு செய்கிறேன்என்று அபய கரம் கொடுத்தார். அவரது நம்பிக்கையை நிராசையாக்காமல், நான் அந்த ஆசிரியர் பயிற்சியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். ‘பார், உன் பெயர் இதோ முதல் வரிசையில் முதல் மாணவராக பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்!’ என்று அதே சுந்தர வரதன் என்னைத் தட்டிக் கொடுத்தார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்.

இதற்கு முன் ஒன்றை நான் சொல்ல வேண்டும். ஆசிரியர் பயிற்சி தேர்ந்த உடன் எனக்கு வேலை கிடைக்க வேண்டும். அதற்காக, நான் படித்த ஹிந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான டி.பி.சீனிவாசவரதன் அவர்களை சந்தித்துப் பேசினேன். ‘நான் ஆசிரியர் பயிற்சி முடிந்ததும், உங்கள் பள்ளியில் எனக்கு வேலை கொடுத்தே ஆக வேண்டும்என்று வற்புறுத்தினேன். இந்த என் துணிச்சலைப் பார்த்த தலைமை ஆசிரியர், ‘நல்ல கிரேடுடன் தேர்வானால், உனக்கு வேலை நிச்சயம்என்று வாக்குக் கொடுத்திருந்தார். ஆகையால், ஆசிரியர் பயிற்சியில் தேர்வானதும், எனக்கு ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் வேலை உடனே கிடைத்தது. ஆனால் என் லட்சியமான கல்லூரிப் பட்டம் மனத்தின் ஆழத்தில் பதிந்து, துளிர் விட்டுக் கொண்டே இருந்தது. அதற்கு என் நண்பர்கள் ராகவேந்திர ராவ், டாக்டர் ரங்கன் ஆகியவர்கள் உதவி இருக்கிறார்கள். எனது விடா முயற்சியால், நான் ஹிந்தியில் விசாரத் பி.யு.சி மற்றும் பி.. பட்டம் பெற முடிந்தது.

இந்த சமயத்தில் என் அத்தை மளின் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. ஆனால் அத்தையோ வாத்தியார் வேலை செய்யும் பையனுக்குப் பெண் கொடுக்க மாட்டேன்என்று முடிவெடுத்த செய்தி, என் காதுகளுக்கு எட்டியது. ஆனால், அந்தப் பெண் என்னையே விரும்பியதாகத் தெரிந்தது. இதுவும் நன்மைக்கே என்று நினைத்து, ‘என்ஜினியருக்கும் மேலான படிப்புப் படித்துக் காட்டுகிறேன்என்று நான் உறுதி பூண்டேன். அதற்காக நான் என் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்தேன். என் பள்ளி நெருங்கிய நண்பன் குருராஜ்உபாத்தியாயா சி.. படிப்பு முடித்து விட்டு, அவர் பேரில் சொந்த ஆடிட் கம்பனி ஆரம்பித்து பிரபலமாக ப்ரேக்டிஸ் செய்து கொண்டிருந்தார். அவருக்குக் கீழ் பயிற்சி பெற ஆரம்பித்தேன். உற்சாகமாகிவிட்டது.  

ஆனால், செலவுக்குச் சிறிது பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகையால், டியூஷன் எடுத்து அதைச் சமாளிக்கலாம் என்று நினத்த போது, ஒரு விளம்பரம் கண்ணில் பட, அந்த பங்களாவிற்குச் சென்றேன். அந்த பங்களாவின் எஜமானர் தான் முன்பு நான் குறிப்பிட்ட காசி விஸ்வநாதன் என்ற ஒரு தொழில் அதிபர். முயற்சியால் முன்னுக்கு வந்தவர். அதனால் பணத்துடன் பண்பும் பெற்றவர்.

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டவுன், நான், ‘நேற்றுவரை நான் ஒரு பள்ளி ஆசிரியர். ஆனால் இன்று வேலையை விட்டு, சி..படிக்க துணிந்துள்ளேன்என்று சொன்னவுடன், அவர் அதைப் பற்றிக் கேட்டு, ‘சி.. படிப்பு கடினம் தான். ஆனால், நீங்கள் எடுத்த முடிவையும், உங்கள் ஆர்வத்தையும் பாராட்டுகிறேன். உங்களுக்கு மாதம் ஆகும் செலவையே டியூஷன் சம்பளமாகத் தருகிறேன். இங்குள்ள ஒரு அறையும் நீங்கள் படிப்பதற்காக எப்போது வேண்டுமானாலும், உபயோகித்துக் கொள்ளுங்கள்என்று சொன்னதைக் கேட்டவுடன் நான் மனம் நெகிந்து விட்டேன்.

இந்த தருவாகியில் நான் சி.. பயிற்சி நன்கு பெற்று முதல் பரிட்சையும் வெற்றி கரமாக முடிக்க, அத்தைக்கு என் மேல் நம்பிக்கை வர ஆரம்பித்தது. அதன் விளைவாக எனது இஷ்டப்படி விவாகமும் நடந்தேறியது. காசி விஸ்வநாதன் முயற்சியில் என் மனைவிக்கு பெங்களூரில் ஒரு வேலையும் கிடைத்தது. அவரது தொடர்ந்த முயற்சியால் சென்ட்ரல் வங்கி சென்னை கிளையில் ஒரு வேலையும் கிடைத்தது. அதன் பின் ஒரு அதிர்ச்சி. ஒரு நாள் திடீரென்று மாரடைப்பில் காசி விஸ்வநாதன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.

இந்த அவரது அன்பு தொடர்ந்து எனக்குக் கிட்டியது. ஆகையால் தான் அவரது பெயரை என் மகனுக்கு வைத்தேன். என் வீட்டில் உள்ளவர்கள்மாத்துவர்களான நாம் காசி விஸ்வநாதன் என்ற சைவப் பெயரை வைப்பது நம் மதத்தையே அவமதிப்பதாகும்என்ற வாதத்தையும் மீறி - என் மனைவியின் ஆதரவும், துணையும் இருப்பதால், காசி விஸ்வநாதன் என்ற பெயரையே சூட்டினேன்.

எனது வெற்றியின் ரகஸ்யம் நான் நேரத்தை ஒரு போதும் வீணடித்ததில்லை என்பதில் தான் இருக்கிறது. எப்போதும் படிப்பு - அது பஸ்சுக்காக காந்திருக்கும் போதும் அந்த நேரத்திலும் அங்குள்ள விளக்கு வெளிச்சத்தில் படிப்பேன். பாரீஸ் ஹைகோர்ட் பெஞ்சியில் - அழுக்கும், பசையும் ஆங்காங்கே இருக்கும் பெஞ்சியில் - அவைகளை எல்லாம் லட்சியம் செய்யாமல் சுற்றுப் புறத்தை மறந்து, அங்குள்ள சப்தங்களை புறம்தள்ளி படித்திருக்கிறேன்.

ஆசிரியர்: சி.. படிப்பு முடிந்தவுடன் யுனியன் பாங்க் நேரடியான புரபேஷனரி ஆபீசர் வேலைக்குச் சேர்ந்ததைப் பற்றிச் சொல்லவும்.

கிருஷ்ணன்: யுனியன் பாங்கில் யூனியன் பிரச்சனையால் நேரடியான புரபேஷனரி ஆபீசராகத் தேர்வானாலும், வேலையில் சேர்வது என்பது மிகவும் சிரமம் என்பது பிறகு தான் எனக்குத் தெரிய வந்தது. சென்னையில் இண்டர்வூக்குப் பிறகு, நான் பங்களூருக்கு வேலையில் சேர அனுப்பப் பட்டேன். ஆனால், நான் கன்னடிகன் இல்லை என்று நினைத்து, அதை உறுதி செய்ய யூனியன் ஆட்கள் என் பங்களூர் இல்லம் வந்தார்கள். ஆனால், அங்கு நான் கன்னடம் பேசும் பாட்டிகள், பெண்டுகள் ஆகியவர்களுடன் இருப்பதைப் பார்த்து, ‘நீங்கள் கன்னடிகரா? தமிழில்லையா?’ என்று கேட்டு, அங்கிருந்து சென்று விட்டார்கள். இருப்பினும், ஏதோ காரணத்தால், எனக்குக் கொடுக்க வேண்டிய பதவியை வேறு ஒருவரிடம் அளித்ததால், என்னை உடனே சென்னைக்கு ஆகாய விமானம் மூலம் செல்ல உத்திரவானது. அது தான் நான் சென்ற முதல் ஆகாய விமானப் பயணம். இங்கும் யூனியன் என் வழியில் குறுக்கே வந்தது.   

நீங்கள் தமிழரா? கன்னடிகரா?’ என்று கேட்டவுடன், ‘நான் தமிழன் தான். உங்களுக்கு இலக்கியத் தமிழன் வேண்டுமா? மேடைத் தமிழன் வேண்டுமா? நாடகத் தமிழன் வேண்டுமா? சினிமாத் தமிழன் வேண்டுமா? எல்லாத் தமிழனும் நான் தான். ஏன், ஆசிரியத் தமிழனும் நான் தான். சென்னை ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகள் தமிழில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் நான்என்று பட படவென்று பொரிந்து தள்ளியதைப் பார்த்த அந்த யூனியர் நபர்கள்நீங்கள் தமிழர் தான் சார். எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லைஎன்று எனக்கு அபயமளித்தார்கள். யுனியன் வங்கி சென்னை குரளகம் முக்கிய கிளையில் பிரபேஷன் முடிப்பதற்குள் மாதவரம் கிளைக்கு சிளை அதிகாரியாக மாற்றலானேன். கிளை அதிகாரியாக 2 ஆண்டுகள் பணி புரிந்தேன்.

என்னுடைய சி.. படிப்பால், நான் பம்பாய் தலைமைப் பீடத்திற்கு மாற்றலானேன். அங்கும் வேலை வேலை என்று உழைக்க வேண்டிய கட்டாயம். பல பிரச்சனைகள் - பல வேண்டாத உத்திரவுகள் - பல அதிகாரிகளின் தவறான அணுகு முறைகள் - இவைகளை எல்லாம் எதிர்கொண்டு எதிர் நீச்சல் போட்டேன். ஆனால் நல்ல வாய்ப்பு. பல கமிட்டிகளில் பங்கு கொண்டேன். பயிற்சிக் கல்லூரியில் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு. சேர்மன் உள்பட பல மேலதிகாரிகளுடன் தொடர்பு இவையெல்லாம் எனது சி.வி. (C.V.) யை பலப்படுத்தின. அப்போதுஜெர்மன் யூரோப்பியன் ஏசியன் பாங்கில் ஒரு மேல் மட்ட அதிகாரிக்கு ஒரு விளம்பரம் வந்து அதற்கு விண்ணப்பித்தேன். ஒரு பதவி - பலர் விண்ணப்பங்கள். ஆனால், நானே அதில் தேர்வானேன். என்னை இண்டர்வி செய்த அன்னிய மேல் அதிகாரி எனது வங்கியின் சேர்மனைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டு என் பெயரைச் சொன்னதும், ‘, கிருஷ்ணனா? ஆமாம் அவர் எங்கள் வங்கியில் தான் பதவி வகிக்கிறார்என்று சொன்னதைக் கேட்டவுடன், சேர்மனே என் பெயரைச் சொன்னதுடன் என்னை அடையாளம் கண்டு பேசியதை உணர்ந்தவுடன் என் டாயுஷ் வங்கி தேர்வு உறுதியானது.

இந்த வங்கி முதன் முதலாக நம் நாட்டில் கிளை அமைப்பதால், அது சம்பந்தமான பல பொறுப்புகளை நான் ஏற்க வேண்டியிருந்தன. பல தரப்பட்ட அதிகாரிகளை கலந்தாலோசிக்க வேண்டியதாயிற்று. மேலும் இவ்வங்கியின் பல அன்னிய நாட்டுக் கிளைகள் (சிங்கப்பூர், கொலாலாம்பூர், கராச்சி என்று பல கிளைகள்) செல்ல வேண்டியதாயிற்று. 1-10-1980 அன்று கிளை திறக்கப்பட்டது.

இந்த வங்கியில் 1/7 பங்கு ஜெர்மனியின் டாயுஷ் வாங்கியது. நாளாவட்டத்தில் அதன் பங்கு 100% ஆகி 1988-ல் யுரோப்பியன் ஏசியன் வங்கி டாயுஷ் வங்கியின் முழு அங்கமாயிற்று. இம் மாறுதல் சம்பந்தமான கடமைகள் என் பொறுப்பாயிற்று.

முதல் சில வருடங்கள் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி பதவி வகித்தேன். ஆனால், அங்கும் நேர்மை நிலைத்து நிற்காமல் அதற்கு அடிபணியும் நிலை நீடித்ததால், நான் மிகவும் கவலை கொண்டேன். இந்த என் நிலைமையை அறிந்த என் மேல் அதிகாரி என்னைக் கூப்பிட்டு, ‘உன் தர்ம சங்கடம் எனக்குப் புரிகிறது. ஆகையால், உனக்கு இன்னும் 2 ½ வருடங்கள் செர்விஸ் இருக்கிறது. இப்போதே நீ விடைபெற விரும்பினால், அந்த முழுச் சம்பளத்தையும் நீ பெற நான் ஏற்பாடு செய்கிறேன். உனது வீட்டுக் கடனின் வட்டியும் மாறாது. அந்த 2 ½ வருடங்களிலும் உனது மாதச் சம்பளம் உனக்குக் கிடைக்கும். உனது கார் வசதியும் நீ அனுபவிக்கலாம். நீ இந்த வங்கிக்கு ஆதியிலிருந்து பல வருடங்கள் நேர்மையாக உழைத்திருக்கிறாய். ஆகையால் தான் இந்தச் சலுகைகள்என்று விளக்கினார். நானும் இந்த அவரது ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டேன். எனக்கு மன விடுதலை கிடைத்தது.

அதன் பிறகு சில வேலைகளில் சேர்ந்தாலும், அதில் பலர் நேர்மையாக நடக்காமல் ஏமாற்றுவதை அறிந்ததால், என்னால் அங்கும் என்னுடைய மனச்சாட்சியை அடகு வைக்க விரும்பவில்லை. இப்போது ஷேர் மார்க்கெட்டில் இறங்கி, அதிலே பொழுதைப் போக்குகிறேன். அதில் மன நிம்மதியும், சுதந்திரமும் உள்ளன. யோசித்து சரியான முறையைப் பின் பற்றினால் இழக்க வேண்டிய நிலை வராது.  

ஆசிரியர்: உங்கள் வாழ்க்கையில் நடந்த மிகவும் சந்தோஷமான நிகழ்வுகள் எவைகள்? சோகமானவைகள் எவைகள்? மறக்க முடியாத நபர்கள் யார்?

கிருஷ்ணன்: என் அம்மா சாவும், காசு விஸ்வநாதன் - என் அபிமான ஆசிரியர் சுப்பாராவ் மரணங்களும் என் வாழ்வில் நடந்த சோக நிகழ்வுகள். அதே நேரத்தில் காசி விஸ்வநாதன் - சுப்பாராவ் ஆகிய இருவர்களும் என் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள்சந்தோஷமான தருணங்கள் என்றால், நான் சி.. பாஸானதை பேப்பரில் என் நம்பரைப் பார்த்து என் மனைவி சொன்ன செய்தியும், நான் ஜெர்மன் டாயுஷ் வங்கியில் உயர்பதிவி பெற்றதையும் குறிப்பிடலாம்.

ஆசிரியர்: இப்போது சிறிது அரசியல் களத்தைப் பற்றிப் பேசுவோம். பி.ஜே.பி.யின் வெற்றியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கிருஷ்ணன்: மோடியின் அணுமுறையான - சப்கா சாத், சப்கா விகாஸ் - அதாவதுஎல்லோரும் ஒன்றிணைவோம், எல்லோருக்கும் வளர்ச்சிஎன்ற கொள்கை மிகவும் நல்லது. அதை எந்தவிதமான தொய்வும் இன்றி நடை முறைப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்: காங்கிரஸ் தோல்வி பற்றி ….

கிருஷ்ணன்: காங்கிரஸின் பரம்பரை ஆட்சி முறை எப்போது மறைகிறதோ அப்போது தான் காங்கிரசுக்கு விடிவு காலம் பிறக்கும். சோனியா - ராஹுல் ஆகியவர்கள் இருக்கும் போது காங்கிரஸ் உருப்படவே செய்யாது. ஆம் ஆத்மி கட்சியும் சரியான கட்சியாக உருவாகவில்லை. ஆகையால், பி.ஜே.பி.க்கு ஒரு நல்ல எதிர்க் கட்சிகூட இல்லாமல் போய் விட்டது.

ஆசிரியர்: சோனியா - ராஹுல் இவர்களை விட்டல் வேறு யார் அந்தக் கட்சியை வழி நடத்த அனுமதிக்கலாம்?

கிருஷ்ணன்: பி. சிதம்பரம். ஆனால் அவருக்கு அகில இந்திய அளவில் செல்வாக்கு இல்லை. தமிழ் நாடு உட்பட எல்லா இடங்களிலும் எதிர்ப்பு அதிகம்.

ஆசிரியர்: யு.பி.யில் யோகி அதித்யநாத் முதன் மந்திரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளாரே - அது சரியான தேர்வு தானா?

கிருஷ்ணன்: யோகி - மோடியின் வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தை மட்டுமே முன்னிருத்தி, ராமர் கோயில் - என்று குப்பையைக் கிளரக் கூடாது.

ஆசிரியர்: பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் மாட்டு இறைச்சிக் கூடங்களை மூடல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டல் ஆகியவைகளைச் சொல்லித் தானே ஓட்டுக்களை வாங்கி, ஆட்சியில் அமர்ந்துள்ளனர். அப்படி இருக்கும் போது, ராமர் கோயில் கட்ட முயற்சி எடுக்கவோ, அதைப் பற்றிப் பேசவோ கூடாது என்று சொல்வது தேர்தல் வாக்குறிதியை புறக்கணிப்பதாக ஆகாதா?

கிருஷ்ணன்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பேச்சு எழும் போது, யு.பி.யில் கலவரங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்த்தால், யு.பி.யில் வளர்ச்சி பாதிக்கப்படாமல் முன்னேறும் அல்லவா?

ஆசிரியர்: முஸ்லீம்கள் ஆட்சியில் பல கோயில்கள் - ஒன்று இரண்டு அல்ல - நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மசூதிகளும் கட்டப்பட்டுள்ளன. இதற்குச் சரித்திரச் சான்றுகள் உள்ளன. இந்துக்கள் - அதுவும் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட இந்துக்கள் - ‘முஸ்லீம்களே! நீங்கள் இடித்த பல புண்ணிய கோயில்களை மறந்து, அயோத்தியில் மட்டும் - நீங்கள் இடித்த பாவத்திற்குப் பிராயச் சித்தமாக - கோயில் கட்ட அனுமதியுங்கள்’ - என்று இந்துக்கள் கேட்பதில் நியாயம் இல்லை என்று சொல்ல முடியுமா?

கிருஷ்ணன்: அயோத்தியில் முன்பே ராமர் கோயில் இருந்து, அது இடிக்கப்பட்டு, பாபர் மசூதி கட்டி இருந்தால், இந்துக்கள் அந்த இடத்தில் கோயில் கட்டுவதை ஆட்சேபிக்க வேண்டியதில்லை.

ஆசிரியர்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அங்குள்ள இடிபாடுகளை ஆராய்ந்து, இந்திய புராதன நினைவுச் சின்ன பாதுகப்புக் கழகம்பாபர் மசூதி அங்கு முன்பே உள்ள கோயிலை இடித்துக் கட்டப்பட்டதுஎன்றே கோர்டிலேயே பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளார்கள்.

கிருஷ்ணன்: அப்படி இருக்கும் நிலையில், ராமர் கோயில் கட்டுவதை முஸ்லீம்கள் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017