யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன்


யாஞ்யவல்கியரின் விளக்கங்கள்

எழுத்து: ஜயந்திநாதன்

உட்டாலகா என்பவர் அருணாவின் மகன். அவர் மற்ற மாணவர்களுடன் மாத்ரா என்ற ஊரில் படன்கலா காப்யா என்பவரின் வீட்டில் குருகுல வாசம் செய்து, யாகங்களைப் பற்றி கற்றுக் கொண்டிருந்தனர். குருவான படன்கலா காப்யாவின் மனைவியை ஒரு கந்தர்வன் ஆக்கிரமித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான்.

இதை அறிந்த சிஷ்யர்கள் குருவின் உடம்பில் புகுந்துள்ள கந்தர்வனைக் கேட்டார்கள்: நீ யார்?

குருவின் மனைவின் உடம்பில் புகுந்துள்ள அந்த கந்தர்வன் பதில் சொன்னான்: எனது பெயர் கபந்த அதர்வணன்.

இதைத் தெரிவித்து விட்டு, குருவிடமும் சிஷ்யர்களிடம் அந்த கந்தர்வன் மேலும் சொன்னான்:குரு காப்யா அவர்களே! சிஷ்யர்களே! இந்த உலகம், மற்ற உலகங்கள், எல்லா உயிர்கள் ஆகிய அனைத்தும் ஒரு மாலையைப் போல் ஒன்றோடொன்று இணைந்து இருக்கிறது. அந்த இணைப்பிற்கு உதவும் நூல் போல் இருக்கும் அது எது?

குரு: கந்தர்வனே! உண்மையிலேயே அது எது என்று எனக்குத் தெரியாது.

கந்தர்வன்: இன்னொரு கேள்வி கேட்கிறேன். அதற்காகவாவது, குருவோ அல்லது சிஷ்யர்களோ பதில் தெரிந்தால் சொல்லுங்கள். உலகம் அனைத்தையும் இணைக்கும் அந்த நூலை அறிந்தவனும், அதை உள்ளிருந்து ஆட்டிப் படைப்பவனுமான அந்த சக்தியைத் தெரியுமா?

குரு: எங்களுக்குத் தெரியாது.

கந்தர்வன்: அந்த சக்திதான் எல்லாவற்றையும் உள்ளிருந்து ஆட்டிப் படைக்கிறது. அது தான் அந்தராத்மா என்பது. அதை அறிந்தவன் எவனோ, அவனுக்கு அந்த எல்லாவற்றையும் பிணைத்துள்ள நூலைத் தெரியும். உலத்திலுள்ள அனைத்தும் ஆட்டிப்படைக்கும் சக்தியான பிரம்மத்தையும் தெரியும். அவனுக்கு வேதம் தெரியும். எல்லா ஜீவராசிகளையும் தெரியும். தன் ஆத்மாவையும் தெரியும். முடிவாகச் சொல்ல வேண்டுமென்றால், அவனுக்குத் தெரியாதது இந்த உலகத்தில் ஒன்றுமில்லை.

இந்த விபரங்களை எல்லாம், உடாலகா என்ற கவுதமன் யாஞ்யவல்கியருக்கு விளக்கிக் கூறினான். அப்படிக் கூறி விட்டு, 'எனக்கு அந்த கந்தர்வன் மூலமாக எல்லாம் தெரியும்' என்று விளக்கிவிட்டு, யாஞ்யவல்கியரிடம் 'உலகத்தை ஒன்றிணைக்கும் நூலான வஸ்துவைப்பற்றியும், அதைப் பின்னின்று ஆட்டிப் படைக்கும் சக்தியைப் பற்றியும் தெரியாமல், பசுமாட்டினை நீங்கள் ஓட்டிச் சென்றது எந்த விதத்தில் சரியானது ஆகும்?'

யாஞ்யவல்கியர்: ஓ, கவுதமா! அந்த இணைக்கும் நூலான வஸ்து, உள்ளிருந்து அதை ஆட்டிப் படைக்கும் சக்தி - இவைகளைப் பற்றி எனக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன்.

உடாலகா: யார் வேண்டுமானாலும், 'நான் அறிவேன், நான் அறிவேன்' என்று சொல்ல முடியும். நிங்கள் அறிந்ததை எங்களுக்குத் தெரிவிக்கவும். அப்பொழுதான் உண்மை நிலை தெரியும்.

யாஞ்யவல்கியர்: ஓ, கவுதமா! அந்த நூல் காற்றாகிற வாயுவாகும். வாயுவினால் தான் உலகத்தில் உள்ள அனைத்தும் ஒன்றாக இணைந்துள்ளன. ஒரு மனிதன் இறந்தவுடன், அவனது உடலின் பல பாகங்கள் நூல் இழந்த மாலை போல் கழன்று விடுகின்றன.

உடாலகா: ஓ, யாஞ்யவல்கியரே! முதல் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டீர். அடுத்த கேள்வியான 'அந்த நூலை ஆட்டிவிக்கும் சக்தி எது?' என்பதற்குப் பதில் சொல்லவும்.

யாஞ்யவல்கியர்: மாலையில் இருக்கும் மணிகள் போல் உலகத்தில் பூமி, நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, சொர்க்கம், சூரியன், திசைகள், சந்திரன், நக்ஷத்திரங்கள், ஈதர், இருட்டு, வெளிச்சம் ஆகியவைகள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றன. அவைகள் அனைத்திலும் குடியிருக்கும் ஆட்கொள்ளும் சக்தி அழிவற்ற பிரம்மமாகும். இந்த மணிகள் அனைத்தும் கடவுளின்பால் பட்ட தாகும்.

இனி மற்ற ஜீவன்களைப் பற்றி அறிவோம். ஒருவனின் மூக்கு, நாக்கு, கண், காது, மனது, தோல், அறிவு, ஜனிக்கச் செய்யும் இந்திரியம் ஆகியவைகள் அனைத்தையும் ஆட்கொள்ளும் சக்தி உள்ளேயே இருப்பினும், அந்த அந்த அவயவங்களுக்குத் தெரியாது. அது தான் கண்களுக்குத் தெரியாத ஆட்டிப் படைக்கும் அழிவற்ற பிரம்ம சக்தியாகும். உள்ளே இருந்து ஆட்சி செய்யும் அந்த சக்தியைப் பார்க்க முடியாது. ஆனால், அது தான் எல்லா செயல்களுக்கும் சாட்சியாக இருக்கிறது. அது நினைக்காது. ஆனால் ஒருவனின் நினைப்பிற்கு மூலகாரணகர்த்தாவாகும் அது. அதை அறிய முடியாது; ஆனால், அறிவதற்கு அது இல்லாமல் முடியாது. அது கேட்காது. ஆனால் அது இல்லாமல் கேட்க முடியாது. ஆமாம், அது தான் உள்ளே இருந்து ஆட்சி செய்யும் ராஜா. உன்னுடைய ஆத்மா. அதைத் தவிர மற்ற எல்லாம் அழியும் தன்மை உடையது.

இந்த உன்னதமான விளக்கத்தைக் கேட்ட உடாலகா என்ற கவுதமன் ஜனகர் சபையில் மெளனமானான்.

(உபநிடதம் தொடரும்.)

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017