உபநிடதத் தொடர்: பிரஹதாரண்ய உபநிடதம்

உபநிடதத் தொடர்:

பிரஹதாரண்ய உபநிடதம்:

யாஞ்யவல்கியரின் விளக்கங்கள்

எழுத்து: ஜயந்திநாதன்

கார்க்கி என்பவர் ஜனகர் சபையில் இருக்கும் ஒரு பெண் தபசி ஆவார். அவர் வாகாக்னு என்பவரின் மகள். கார்க்கி என்ற அந்தப் பெண் தபசி யாஞ்யவல்கியரிடம் சில கேள்விகளை ஒரு தொடராக ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டாள். பதில் அளித்துக் கொண்டே வந்த யாஞ்யவல்கியர் பிரம்மத்தைப் பற்றியும் விளக்கக் கோரிய பொழுது, 'கார்க்கியே! தர்க்கத்தை மிகவும் நீடித்து எல்லாவற்றையும் கேள்விகளால் அறிய முயலவேண்டாம்!' என்று எச்சரிக்கும் நிலைமையை கார்க்கி உண்டாக்கி விட்டார்.

கார்க்கி - யாஞ்யவல்கியர் சம்பாஷணை விரிவாக கீழே உள்ளது.

கார்க்கி: யாஞ்யவல்கியரே! இந்த பூமியில் உள்ள அனைத்து வஸ்துக்களும் தண்ணீரினால் ஒரு துணி நெய்யப்படுவதைப் போல் இணைந்து நெய்யும் பாவு-குறுக்கு நூலாகக் காணப்படுகின்றன. அப்படி என்றால் தண்ணீர் எதனால் இணைந்து காணப்படுகின்றது?

யாஞ்யவல்கியர்: காற்றால்.

கார்க்கி: அப்படியென்றால், காற்று எதனால் இணைந்து காணப்படுகின்றது?

யாஞ்யவல்கியர்: ஆகாய உலகங்களினால்.

கார்க்கி: ஆகாய உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: கந்தர்வ உலகங்களினால்.

கார்க்கி: கந்தர்வ உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: சூரிய உலகங்களினால்.

கார்க்கி: சூரிய உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: சந்திர உலகங்களினால்.

கார்க்கி: சந்திர உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: நட்சத்திர உலகங்களினால்.

கார்க்கி: நட்சத்திர உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: தேவர் உலகங்களினால்.

கார்க்கி: தேவர் உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: இந்திர உலகங்களினால்.

கார்க்கி: இந்திர உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: பிரஜாபதியின் உலகங்களினால்.

கார்க்கி: பிரஜாபதியின் உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: பிரம்மலோகங்களினால்.

கார்க்கி: அப்படி யென்றால் பிரம்ம லோகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: கார்க்கி! வரம்பு மீறி கேள்விகளைக் கேட்க வேண்டாம். அதனால் உன் தலை சுக்கு நூறாக உடைந்து விடும். உணர்வால் அறியப்படவேண்டிய கடவுள் அம்சத்தைப் பற்றி, அதிகம் கேள்வி கேட்க வேண்டாம்.

அதற்குப் பிறகு, கார்க்கியும் மெளனமாகி, தெளிவு பெற்றார்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017