உபநிடதத் தொடர்: பிரஹதாரண்ய உபநிடதம்:

உபநிடதத் தொடர்:

பிரஹதாரண்ய உபநிடதம்:
யாஞ்யவல்கியரின் விளக்கங்கள்

எழுத்து: ஜயந்திநாதன்

குசிதகா என்பவரின் மகன் தான் கோகலா. ஜனகர் சபையில் இருக்கும் அவர் எழுந்திருந்து யாஞ்யவல்கியரிடம் சில கேள்விகள் கேட்கிறார்.

பிரம்மம், பிராமணன் ஆகியவைகளைப் பற்றி அறிய கோகலா கேள்விகள் கேட்கிறார். அதற்கு மிகவும் சுருக்கமாக ஆனால் அனைவருக்கும் புரியும்படி யாஞ்யவல்கியர் பதில் அளிக்கும்படி கோகலா வேண்டுகிறார்.

கோகலா: யாஞ்யவல்கியரே! பிரம்மத்தைப் பற்றி தாங்கள் எனக்கு புரியும்படி விளக்க வேண்டும். அந்த உங்களது விளக்கம் சுற்றி வளைக்காமல் நேரடியாக, உடனே புரியும்படி அமைய வேண்டும். எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் ஆத்மாதான் பிரம்மம் என்கிறார்களே, அது எப்படி?

யாஞ்யவல்கியர்: உன் உடம்பிலுள்ள ஆத்மாமும், எல்லா ஜீவராசிகளிடமும் குடிகொண்டிருக்கும் ஆத்மாவும் ஒன்று.

கோகலா: யாஞ்யவல்கியரே! எல்லா ஜீவராசிகளிடமும் வசிக்கும் அந்த ஆத்மாவைப் பற்றி விளக்கமாகத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

யாஞ்யவல்கியர்: ஆத்மா என்பது பசி - தாகம் இவைகளைத் தாண்டி அவைகளால் எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்கும் உயிருள்ள பெரும் சக்திவாய்ந்த ஜீவன். துக்கம், தெளிவின்மை, அழுகுதல், அழிதல் ஆகியவைகளால் பாதிக்கப்படாதது எதுவோ அது தான் ஆத்மா. ஆத்மாவிற்கு இறப்பு என்பதே கிடையாது. அத்தகைய தன்மைகொண்ட எதுவோ அதை ஆத்மாவாக அறிபவனே பிராமணன். அப்படி அறிந்த உண்மையான பிராமணன், மகனை அடைய ஆசைகொள்வதைத் துறக்க வேண்டும். அது மட்டுமல்ல, செல்வத்தைத் துறக்க வேண்டும். உலக பந்தங்களிலிருந்து ஒதுங்கி ஒரு சந்நியாசயாக வாழவேண்டும்.

கோகலா: ஏன் பிராமணன் பல உலக இன்பங்களிலிருந்து விலகி, துறந்து வாழவேண்டும்?

யாஞ்யவல்கியர்: ஆசைதான் ஆத்மாவை அறியாமல் தடுக்கும் ஒரு பெரிய திறையாகும். அந்தத் திறையைக் கிழித்தெரியவேண்டுமானால் ஆசையின் அடிவேரையை வேரோடு பிடுங்கி எறியவேண்டும். மகன் பெறும் ஆசையால் தான், செல்வம் சேர்க்க விழைகிறோம். செல்வம் சேர்க்கும் ஆசையால், உலகத்திலுள்ள பல இன்பங்களில் மனம் ஈடுபடுகிறது. இவைகள் அனைத்தும் ஆத்மாவை அறிய விழையும் ஒரு மனிதனுக்கு பெரிய தடைக்கற்களாகும்.

கோகலா: அந்த திறைகளையும், தடைக்கற்களையும் கிழித்தும், தகர்த்தும் எறிய ஒருவன் என்ன செய்ய வேண்டும்?

யாஞ்யவல்கியர்: தன்னுடைய அறிவுபூர்வமாக பிரம்மத்தை அறிய வேண்டும். அப்படி அறிந்தவன் அந்த அறிவுச் சக்தியை நம்பவேண்டும். அந்த உத்தமமான, நிரந்தரமான அறிவாகிய ஞானம் தான் அவனின் சக்தியாகும். அந்த ஞானம் அவனை வழி நடத்தும். அந்த ஞானத்தின் ஒளியில், தியானம் பழகுவான். தியானத்தின் நன்மையையும், தியானம் செய்யாமல் இருப்பதால் ஏற்படும் தீமைகளையும் அவன் நன்கு அறிந்து செயல்படுவான். ஞானத்தின் வழிகாட்டுதலில் தீவிரமாக தியானம் செய்து பிரம்மத்தை அறிகிறான். பிரம்மத்தை உண்மையாக அறிந்து, ஒழுகுபவன் எவனோ அவனே பிராம்மணன்.

கோகலா: பிரம்மத்தை அறிந்தவன் எப்படி உலகத்தில் இருப்பான்?

யாஞ்யவல்கியர்: அவன் எப்படி வேண்டுமானாலும் இந்த உலகத்தில் இருக்கலாம். அவன் செயல்பாடுகள் ஒரு சாதாரண மனிதனைப் போல் இருக்கலாம். ஏன், ஒரு பைத்தியக்காரன் போல் கூட அவன் பிறருக்குக் காட்சி அளிக்கலாம். அதைப் பற்றி எல்லாம் அவன் கவலைப் படுவதில்லை. இந்த உலகத்தில் உலவும் அனைத்தும் அழியும். ஆனால் அழியாத ஒன்றுதான் ஆத்மா. அதை அறிவதுதான் உண்மையான அறிவு. உண்மையான அறிவுதான் எங்கிருக்கும் ஆத்மாவின் விஸ்வரூபம், அது தான் பரமாத்மா.இந்த விளக்கத்திற்குப் பிறகு, கோகலா மவுனமானார்.

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017