ராகுல் காங்கிரசின் ஹிமாலய மாநிலத் தேர்தல் வெற்றிகள்






ஹிந்தி பேசும் இந்தியாவின் ஹிருதயமான ராஜஸ்தான் – மத்தியப் பிரதேசம் – சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அளவில் பெற்ற வெற்றி மிகச் சாதரணமானது அல்ல. அதிலும் சத்தீஸ்கரில் கடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று 15 ஆண்டுகள் ஆட்சிப் பீடத்தில் கோலோச்சிய பி.ஜே.பியை. படு தோல்வி அடைய வைத்துள்ளது ராகுல் காங்கிரஸ்.

சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளிலும் (முன்பு 18) பி.ஜே.பி. வெறும் 15 தொகுதிகளிலும் (முன்பு 72) வெற்றி பெற்றுள்ளன. மாயாவதி – அஜித் ஜோகி கூட்டணி காங்கிரசின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்க வில்லை. அது பி.ஜே.பி.யின் ஓட்டைத் தான் பிரித்தது என்று சொல்லப்படுகிறது.

அதல பாதாளத்தில் இருந்த காங்கிரஸ் ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் – (15 வருட ஆட்சியில் இருத்த பி.ஜே.பி.யை) ஆட்சி அமைக்கும் அளவில் பி.ஜே.பி.யைத் தோற்கடித்தது காங்கிரசின் அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.

ராஜஸ்தானில் வெறும் 11 தொகுதிகளை 2014 தேர்தலில் வென்ற காங்கிரஸ் இந்த தேர்தலில் 99 தொகுதிகளிலும், 180 தொகுதிகளை சென்ற தேர்தலில் வென்ற பி.ஜே.பி. 73 தொகுதிகளிலும் வென்றுள்ளது. மேலும் 30 ராஜஸ்தான் பி.ஜே.பி. மந்திரிகளில் 20 மந்திரிகள் தோற்றுள்ளார்கள். இந்த 20 மந்திரிகள் வென்றிருந்தால், 93 இடங்களை பி.ஜே.பி. பெற்றிருக்கும். ராஜஸ்தானில் வசுந்தர ராஜேவின் முழு அதிகாரத்தில் தான் வேட்பாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். அமித் ஷாவின் கோரிக்கையான சில வேட்பாளர்களை மாற்றச் சொன்னதும் ஏற்கப்படவில்லை என்று கருதப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் 36 தொகுதிகளை 2014 பெற்ற காங்கிரஸ் இந்தத் தேர்தலில் 114 இடங்களிலும், 192 தொகுதிகளில் 2014 தேர்தலில் பெற்ற பி.ஜே.பி. 109 இடங்களிலும் வென்றுள்ளன. இங்கும் பி.ஜே.பியின் 31 மந்திரிகளில் 13 பேர்கள் தோல்வியினைத் தழுவி உள்ளனர். இவர்கள் வென்றிருந்தால் பி.ஜே.பி. நான்காவது முறையாக ஆட்சி அமைத்துச் சரித்திரம் படைத்திருக்கும்.

காங்கிரசுக்கு இந்த வெற்றி அதிலும் இன்னும் ஐந்து மாதங்களில் நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வலுவான ஏற்றத்தையும், பி.ஜே.பி.க்கு பெருத்த பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஹுல் காங்கிரஸ் பதிவி ஏற்ற ஒரு வருடத்திற்குள் குஜாராத் தேர்தலில் பி.ஜே.பி. தோற்கும் அளவிற்கு பிரசாரம் – அடுத்து கர்நாடகாவில் குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற்றாலும் சாணிக்கிய ராஹுல் ஜனதா ஜனநாயக – செக்குலர் கட்சிக்கு முதல் மந்திரி பதவி அளித்து ஆட்சி – இப்போது 3 வெகு முக்கிய இந்தியாவின் இருதயம் என்று சொல்லப்படும் இந்தி பேசும் பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி என்று ஏறுமுகம் கண்டுள்ளது. இதன் மூலம் ராஹுல் தன் இமேஜை பல மடங்கு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டார். 

காங்கிரசின் பலம் அதிகரித்த நிலையில் மற்ற மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் போது, அதிக இடங்களை கேட்டுப் பெறவும், இல்லாவிடில் தனித்துப் போட்டி இட்டுப் பார்ப்பதிலும் ராஹுல் கவனம் செலுத்த முடியும். இதன் மூலம் பி.ஜே.பி.க்கு ஒரு புதிய பலம் கொண்ட கட்சியாக காங்கிரஸ் கட்சியை லோக் சபா தேர்தலை எதிர்கொள்ளும் நிலைக்கு உயர்த்தி உள்ளார் ராஹுல். அவரது பிரசார உத்தியில் குறை சொன்னாலும் – இந்து கோயில் தரிசனம், காங்கரசும் ஒரு ஹிந்துக் கட்சி தான், ரஃபேல் மோடி ஊழல், வேலை வாய்ப்பு இல்லாமை, விவசாயிகளை கைவிட்டது என்று பட்டியல் இட்டாலும் – மக்கள் காங்கிரசை ஆதரித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் யோகி அதித்யநாத் தான் மோடி (32 கூட்டங்கள்) அமித் ஷா (58 கூட்டங்கள்) ஆகியவர்களை விட 74 கூட்டங்களில் (ராஜஸ்தான் – 26, சத்தீஸ்கர் – 23, மத்திய பிரதேசம் – 17, தெலுங்கானா – 8) பிரசாரம் செய்துள்ளார். ராஜஸ்தானில் அவர் பிராசரம் செய்த 13 தொகுதிளில் மூன்றாவது இடத்திற்கும், 3 மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பி.ஜே.பி. வெற்றி பெறவில்லை. சத்தீஸ்கரில் யோகி பிரசாரம் செய்த 10 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் காவியின் கோட்டை என்று சொல்லும் 9-ல் பிரசாரம் செய்ததில் 4 இடங்களில் தோல்வியை பி.ஜே.பி. அடைந்துள்ளது. இந்த கணிப்பு எந்த அளவு நம்பத்தகுந்தது என்றாலும், யோகியின் பிரசார உத்தி பி.ஜே.பி.க்கு இந்த தேர்தலில் கை கொடுக்க வில்லை – கைக்குத் தான் பலம் கொடுத்துள்ளது என்பதை பி.ஜே.பி. புரிந்து கொண்டு வருகிற லோக் சபா தேர்தலில் யோகியை உத்திரப்பிரதேசத்தில் கவனம் செலுத்தி அதிக இடங்களைக் கைப்பற்றச் செய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் மிஸோராமில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவி உள்ளது காங்கிரசுக்கு ஒரு கேவலமான தோல்வி. இதன் மூலம் அமித் ஷா அனைத்து இந்திய எல்லை வட-கிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பி.ஜே.பி. தன் வெற்றிக் கொடியை நாட்டியதை – திரிபுராவையும் சேர்த்து, மிகப் பெரும் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். மிஸொராமில் சென்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற 34 இடங்கள் 5 இடங்களாகப் போய் விட்டது. அங்கு பி.ஜே.பி.யின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய கூட்டணி சென்ற தேர்தலில் பெற்ற 5 இடங்கள் இப்போது 26 இடங்கள் – பி.ஜே.பி.1 என்ற அளவில் வென்றுள்ளது. காங்கிரசின் முந்தைய அரசின் முதலமைச்சர் நின்ற இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவி உள்ளார்.

தெலுங்கானாவிலும் காங்கிரஸ் – தெலுங்கு தேசக் கட்சி கூட்டணி தெலுங்கானா ராஷ்ரிய சமிதிக் கட்சியால் படுதோல்வி கண்டுள்ளது. தெலுங்கானா ராஷ்ரிய சமிதி முந்திய தேர்தலில் பெற்ற 67 தொகுதிகளிலிருந்து இப்போது 88 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 18 தொகுதியிலிருந்து 19 தொகுதியிலும், தெலுங்கு தேசம் 8-லிருந்து 2 தொகுதிகளிலும் வென்றுள்ளதால், இந்தக் கூட்டணியால் காங்கிரஸ் பலன் அடையவில்லை – பலவீனம் தான் அடைந்துள்ளது. 

ஒருவேளை தனித்துப் போட்டி இட்டிருந்தால், தன் பலத்தை அதிகரித்திருக்கும் என்று கருதத் தோன்றுகிறது. இந்தக் காரணத்தால், சந்திரபாபுவின் கனவு கலையுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணியில் சென்ற முறை வென்ற 5 இடங்கள் இந்த முறை பி.ஜே.பி. தனித்துப் போட்டி இட்டு 1 இடத்தைத் தான் கைப்பற்ற முடிந்தது.

மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் ஆகிய இரண்டு பெரிய மாநிலங்களில் இந்த தேர்தல் முடிவுகள் பி.ஜே.பியை அதல பாதாளத்திற்குத் தள்ளி விட்டதாகவும், காங்கிரஸ் அதிக பெரும்பான்மை பெற்று அமோக வெற்றி பெற்றதாகவும் நினைத்தால் அது ஒரு மாயை என்று தான் சொல்ல வேண்டும்.

மத்திய பிரதேசத்தில், பி.ஜே.பி.யின் ஓட்டு சதவிகிதமும் (41.0) காங்கிரஸின் சதவிகிதமும் (40.9) கிட்டத்தட்ட ஒன்றாக இருந்து காங்கிரஸ் 114 – பி.ஜே.பி. 109 இடங்களைக் கைப்பற்றி உள்ளதால் பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைவாக உள்ளதால் காங்கிரஸ் கட்சி மாயாவதி (2)/சுயேச்சைகள் (5) ஆகியவர்களின் தயவை நாட வேண்டிய நிலையில் தான் உள்ளது.

ராஜஸ்தானிலும், இரு கட்சிகளின் ஓட்டு சதவிகிதம் அநேகமாக சம நிலையில் தான் இருக்கிறது – காங்கிரஸ் – 39.6 & பி.ஜே.பி. 38.8. வென்ற இடங்கள் – காங்கிரஸ் – 100 & பி.ஜே.பி. – 73 மாயாவதி – 6 மற்றவைகள் – 20 என்ற அளவில் உள்ளதால், காங்கிரஸ் பாதி அளவு இடங்களைத் தான் பெற்றுள்ளது.

இப்போதைய தேர்தலில் பி.ஜே.பி. நகரப் புரத்தில் பலத்த அடியை வாங்கி உள்ளது. எம்.பி.யில் 2013-ல் பெற்ற 38% ஓட்டு சதவிகிதம் இந்த தேர்தலில் 20% ஆகவும் – ராஜஸ்தானில் 2013-ல் பெற்ற 22% இந்த தேர்தலில் 11%, சத்தீஸ்கரில் 2013-ல் பெற்ற 10% இந்த தேர்தலில் 3% என்ற அளவில் குறைந்துள்ளது.

இதற்குக் கூறும் காரணம் இரண்டு:

1. எஸ்.சி./எஸ்.டி அட்டூழியங்கள் சட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி உச்ச நீதி மன்றம் விசாரணை இன்றி போலீஸ் நடவடிக்கையோ கைதோ செய்யக் கூடாது என்பதுடன், பெயில் இல்லா நிலையையும் குற்றம் கூறி தீர்ப்பு வழங்கியது. அதற்கு எஸ்.சி./எஸ்.டி அணியினர் போராட்டம் நடத்தி, அதன் காரணமாக மோடி அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இது தவறானது – மோடி அரசின் அதர்மச் செய்கை என்ற அளவில் நமது இ-டச் ஏப்ரல் இதழில் நீண்ட தலையங்கம் தீட்டினோம். (அதன் இணைப்பு: இணைப்பு).

மோடியின் இந்த அவசர சட்டம் தர்மத்திற்கும், தனிமனித சுதந்திரத்திற்கும் எதிரானது என்பதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது. தவறாக எஸ்.சி./எஸ்.டி. குற்றம் சாட்டினால் அந்த நபரைத் தண்டிக்க முடியாது. பெயில் கிடையாது என்பது எந்த வகையில் நியாயமாகும், எந்த நிலையிலும் எஸ்.சி./எஸ்.டி குற்றம் சாட்டினாலேயே அந்த நபரை பெயிலில் வரமுடியாத அளவில் கைது செய்யலாம் – என்ற நிலை பிற பிற்படுத்தப்பட்டோர்/ மேற்குடியினர் ஆகியவர்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி அதன் எதிரொலியாகவும் அவர்கள் காங்கிரசை வெறுத்தாலும், தங்களின் தார்மீக சுய கவுரம் – பொதுவான நீதி மறுக்கப்படும் நிலையால் பி.ஜே.பி.க்கு எதிராக ஓட்டளித்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அதை ஆர்.எஸ்.எஸ்.சும் நம்புகிறது. 

இந்த அவசர சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன என்ற போதிலும், அவசர சட்டம் கொண்டு வந்தது மோடி அரசு என்ற கறையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. மோடி உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வராமல், அதன் சாதக – பாதக அம்சங்களை ஆராய ஒரு குழு அமைத்து, காலம் தாழ்த்தி சாணக்கிய தந்திரத்தைக் கையாண்டிருக்கலாம். ஆனால், இதை உடனே சரி செய்ய எந்த அரசியல் கட்சிகளும் முன் வராது. எஸ்.சி./எஸ்.டி.யினர் பலர் இந்தச் சலுகையைத் தவறாகப் பயன் படுத்தினால், அதன் காரணமாக பிற்காலத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பே மீண்டும் கொண்டு வரப்படலாம். பெயில் இல்லா ஜெயில் என்பது அரசியல் சாதனத்திற்கு எதிரானது என்பது தான் இ-டச் தலையங்கமே.

இருப்பினும் மோடியின் பல வளர்ச்சிச் திட்டங்களை மனதில் கொண்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் அதர்ம அவரசச் சட்டம் இரு சபைகளிலும் நிறைவேற்ற ஓட்டளித்ததையும் மறக்காமல் நினைவு கூர்ந்து, மோடியை மக்கள் மன்னித்து, அவரை ஆதரிக்க வேண்டும். அது தான் தர்மம். நியாயம்.

2. ஜி.எஸ்.டி. வரி ஒரு சிறந்த கொள்கை. அதை துணிந்து எடுத்த மோடியை ஒவ்வொரும் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், அதைச் செயல்படுத்திய விதம் சரியில்லை என்றால் மிகையாகாது. நிதி மந்திரி ஜட்லியும், அவரது நிதி அமைச்சகமும் பலவிதமான மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து, தொழில் செய்யும் பல நிருவனங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியதை நாம் மறந்தாலும், வரி கட்ட வேண்டிய அந்த நிருவனங்களைக் கோபத்தில் தள்ளி இருக்கலாம். 

ஒரு கட்டத்தில் இந்த குழப்பங்களை அறிந்த மோடியே தலையிட்டு, அதற்கு ஒரு முடிவு கட்டவேண்டிய நிலையையும் பார்த்தோம்.  நல்ல கொள்கையாக இருப்பினும், செயல்படுத்துவதில் ஒரு நேர்மையான – சரியான – குழப்பமில்லாத விதிகளை ஒரே மூச்சில் அளித்தால் தான் அதனைக் கடைப்பிடித்து வரி செலுத்தும் நிருவனங்களுக்கும் நிம்மதி ஏற்படும். அதில் ஜெட்லி தவறு இழைத்து, அதன் தாக்கமும் இந்த இடைத்தேர்தலில் எதிரொலித்ததாகவும் கணிக்கப்படுகிறது.

இந்த எதிர் மறைக் கருத்துக்களை மோடி அரசு கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. இந்தத் தேர்தலில் பி.ஜே.பி. தோற்றதால், ஆளாளுக்கு மோடிக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள் என்று கூட வாய்மை வாசகர் ஒருவர் மிகவும் மனம் வருந்தினார். இருப்பினும் மோடி எப்படியும் வருகிற லோக் சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் என் மனத்திற்குப் பட்டதை மிகவும் தாழ்மையாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1. வருமானவரி விலக்குத் தொகையை அதிகரிப்பதுடன், வரி விகிதத்தையும் குறைக்க வேண்டும். இது அடுத்த ஆண்டு வருமான விரி செலுத்துவோர்களுக்கும், பல நிருவன ஊழியர்கள் – அதிகாரிகள் அனைவருக்கும் பலன் அளிக்கும். பி.ஜே.பி.க்கும் ஓட்டு விழும். அதற்கு அடுத்த வருடங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இந்த ஒரே ஒரு வருட சலுகை – பலர் மனதையும் மலரச் செய்யும். அவர்களும் மோடிக்கு சந்தோஷமாக ஓட்டளிப்பார்கள்.

2. ஜி.எஸ்.டி. வரி விகிதம் இப்போது குறைவு தான் என்றாலும், அதிலும் சில சலுகைகளை அளித்து, வியாபாரிகளைத் திருப்திப் படுத்தி அவர்களையும் பி.ஜே.பி.க்கு ஓட்டுப் போடச் செய்யலாம். பிறகு அவசியம் ஏற்பட்டால், மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

3. விவசாயிகளின் பிரச்சனையை ‘கடன் தள்ளுபடி’ என்ற மாயையிலிருந்து மாற்ற இடைக்கால சலுகைகள் சிலவற்றை குறுகிய காலத்திற்கு அளிக்கலாம்.

4. மாநிலக் கட்சிகள் சலுகைகளை மக்களுக்கு அளித்து ஓட்டு வங்கி அரசியல் செய்கின்றன. அதே பாதையை பி.ஜே.பி.யும் பின் பற்ற வேண்டும் என்று பரிந்துரைப்பது மிகவும் தவறானது தான். ஆனால், வருகிற லோக் சபா தேர்தலில் பி.ஜே.பி. அமோக வெற்றி பெற குறுகிய கால இலவச திட்டங்கள் சிலவற்றை யோசித்து, செயல்படுத்த வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், வளர்ச்சிக்கு 50% - இலவசத்திற்கு 50% என்ற அளவில் முதல் வருடத்திலும், அதன் பிறகு இலவசத் திட்டங்களை குறைத்து வளர்ச்சிக்கு அதிக அளவில் பண முதலீடு செய்யும் திட்டமாகச் செயல்படுத்த முயலலாம்.

மோடி தேர்தலில் ஜெயிக்க ஒரு வருடமாவது ராஜ தந்திரியாக இல்லாமல், வெறும் அரசியல் வாதியாக மாற வேண்டும் என்பதைத் தான் மறைமுகமாகத் தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த 5 மாநிலத்தின் மொத்த லோக் சபா தொகுதிகள் – 85. 2014-ல் பி.ஜே.பி. பெற்ற 63 இடங்கள் இப்போது நடந்த ஓட்டு எண்ணிக்கைகளின் படி 31 இடங்களாகக் குறைகிறது. காங்கிரஸ் 2014 பெற்ற 7 இந்த தேர்தலின் படி 35 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், மாநிலத் தேர்தல் நிலையே லோக் சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று சொல்ல முடியாது. இருப்பினும், பி.ஜே.பி. தனது 63 இடங்களையும் வருகிற தேர்தலில் தக்க வைக்க முடியுமா என்பது தேர்தல் முடிவின் போது தான் தெரிய வரும்.


மோடி-அமித் ஷா அவர்களின் தேர்தல் உத்திகளில் குற்றம் காண முடியாது. காரியகர்த்தாக்களும் இரவு பகலாக உழைத்துள்ளனர். காங்கிரசின் தற்போதைய வளர்ச்சியை மனதில் கொண்டு, மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா போன்ற மாநிலங்களில் கணிசமான லோக் சபா இடங்களைக் கைப்பற்றுவதுடன், இந்திய எல்லை வட-கிழக்கு மாநிலங்களை முழுவதையும் – திரிபுரா உட்பட புதிதாக மேகாலயா – என்று விரிவுபடுத்தி மற்ற இந்தி பேசும் மாநிலங்களில் இழக்கும் லோக் சபா இடங்களுக்கு ஈடு கட்டவும் பி.ஜே.பி. முயன்று வருகிறது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சில புதிய கட்சிகளையும் இணைக்கும் பணியையும் தொடங்கி உள்ளது. பி.ஜே.பி. மதவாத கட்சி என்று முத்திரை இட்டு முன்பு ஒதிக்கியவர்கள், மேகாலயாவில் – அதிலும் கிருஸ்துவர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் – பி.ஜே.பி.யின் கூட்டணிக் கட்சி ஆட்சி பீடத்தில் காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சி அமைத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மோடி இந்தியாவில் பல புதிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மோடியின் அயல் நாட்டுக் கொள்கையை மற்ற அனைத்து நாடுகளும் பாராட்டுகின்றன. 

முஸ்லீம் நாட்டில் தூக்குத் தண்டனை பெற்ற பல கைதிகளையும் மீட்டுள்ளார். சிறு குற்றங்கள் புரிந்து முஸ்லீம் நாட்டு ஜெயில்களில் வாடும் பல இந்தியர்களை யாரும் கேட்காமலேயே விடுதலை வாங்கித் தந்த மனிதாபமானி. 

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குறைகளை விரைவாகவும், முற்றிலுமாக நீக்கிய உத்தமர்.

இந்தியாவின் ராணுவத்தை மேம்படுத்திய பாரத மைந்தர். 

‘பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கும் தீவிரவாத அமைப்புகளை அழித்தால் அன்றி, ஒரு பைசாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்யப்போவதில்லை’ என்று யு.எஸ். ஜனாதிபதி டிரம்ப் வெளிப்படையாகவே சொல்லியது மோடிக்குக் கிடைத்த வெற்றி.

ஏழைகளுக்கு காஸ், மின்சாரம், சாலை வசதிகள், கழிப்பிடங்கள், வீடுகள், காப்பீட்டுத் திட்டங்கள், சிறு – பெரு கடன் வசதிகள், நேரிடையான அரசின் சலுகைகள் கிடைக்க வங்கிக் கணக்குகள் என்று பலவற்றை இந்த 4.5 வருடங்களில் நிகழ்த்திக் காட்டிய ஏழைப் பங்காளன். ஆனால், ராஹுல் வாய் கூசாமல் ‘மோடி பெரும் முதலாளிகளின் நண்பன். ஊழல் பேர்வழி’ என்று கூட்டங்களில் குற்றம் சாட்டி, அதையும் சிலர் நம்பி காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதைப் பார்க்கும் போது, இந்திய மக்களின் அறிவின்மையை எண்ணி வருந்தும் நிலை தான் ஏற்படுகிறது.

இப்போதெல்லாம் மீனவர்களை பிடிப்பது – படகுகளை அபகரிப்பது நடப்பதில்லை. வங்கிகளின் நிதி நிலை – வராக் கடன் வசூல் என்பதிலும் மோடி வெற்றி கண்டுள்ளார். 

ஈரான் பெட்ரோலுக்கு இந்திய ரூபாய் கொடுத்து வணிகம் செய்ய அந்த அரசை ஒப்புக் கொள்ள வைத்தது சரித்திர சாதனை என்றால் மிகையாகாது. 

கடனில் மூழ்கிய அரசை, கடன் கொடுக்கும் வலுமையான பொருளாதார இந்தியாவை மோடி உருவாக்கியதை உலகமே பார்த்து வியக்கிறது. 

விலைவாசிகள் கட்டுக்குள், பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு இன்மை, கைவினைப் பொருட்கள் விற்பனை, சுற்றுளாப் பொருளாதார உயர்வு என்று பல உள.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். மோடி செய்யும் காரியங்களைப் பார்த்து, ‘மோடியின் வளர்ச்சித் திட்டங்களே அவரை தேர்தல்களில் வெற்றி பெறச் செய்யும். பி.ஜே.பி. எந்த பிரசாரமும் செய்யத் தேவை இல்லை’ என்று நான் சொல்வதுண்டு. ஆனால், இந்திய மக்கள் அப்படி இல்லாமல் இருப்பது மனத்திற்கு மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் இருக்கிறது.

மோடி அடுத்த லோக் சபா தேர்தலில் அமோக வெற்றி அடையாவிட்டால், இந்தியா ஒரு நன்றி கெட்ட நாடு என்று அயல் நாட்டினர் நம்மை ஏளனமாகப் பார்த்துச் சிரிப்பார்கள். 

இங்கிலாந்து தேசத்தில் ஐரோப்பியன் யுனியனிலிருந்து விலகும் ஓட்டளிப்பில் விலகுகிறோம் என்று ஓட்டளித்ததைத் தவறு என்று இப்போது இங்கிலாந்து தேச மக்கள் கருதி, அந்த தவறான தேர்வால் பல இன்னல்களை இன்னமும் அனுபவித்து, அதற்கான தீர்வை நிரந்தரமாக அடையமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமை இந்தியாவிற்கு வராமல் இருக்க, மீண்டும் மோடியைத் தேர்ந்தெடுக்க உறுதி பூணுவோம்.

இந்திய ஓட்டர்களே! சிந்தியுங்கள் – மோடியை இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆள ஓட்டளியுங்கள். இதனால் நன்மை தான் உண்டாகுமே அல்லாது, ஹானி ஒரு போதும் வராது.

பாரத மாதாவுக்கு ஜே! வந்தே மாதரம்!

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017