உச்ச நீதி மன்றத்தின் உச்சக் கட்ட தலையீடுகள்
நாட்டின்
சுதந்திரத்தையும், நேர்மையான ஆட்சியையும் நிலைநாட்டும் கடமை அரசு – உச்ச நீதிமன்றம்
– பார்லிமென்ட் ஆகியவைகளுக்கு உண்டு. அதற்கான விதிகள் அடங்கிய பைபில் தான் அரசியல்
சாசனமாகும். அதை இந்த மூன்று அமைப்புகளும் நேர்மையாக எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி
நாட்டின் நலனை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி நினைவில் கொண்டு கடைப்பிடித்து, நாட்டு
மக்களுக்கு ‘நண்பன், தத்துவஞானி, வழிகாட்டி’ என்ற மூன்று நிலைகளில் ஒரு சிறந்த நேர்மையான
ஆட்சியை மக்களுக்கு அளிக்கும் நிலையில் இந்த ஒவ்வொரு மூன்று அமைப்பும் செயல்பட வேண்டும்.
இருப்பினும் இந்த மூன்று அமைப்பிலும் அமர்ந்திருப்பவர்கள் பொதுமக்களைப் போன்ற ஆனால்,
அவரவர்களின் துறைகளில் படித்த அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் ஜனநாயக அரசியலில் இறுதிக்
குரல் பொதுவாக மக்கள் கருத்துக்களை மதிப்பதாக இருப்பது ஒரு பொது விதி என்பதையும் இங்கு
நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
சமீபகாலமாக
உச்சநீதி மன்றம் சட்டத்தின் அடிப்படையை மட்டும் கருத்தில் கொண்டு, தங்கள் முன் வைக்கப்படும்
வாதங்கள் – சாட்சிகள் ஆகியவைகளின் ஆதாரத்தில் தீர்ப்பு வழங்கும் போது, தங்களின் தனிப்பட்ட
கொள்கைகளுக்கும் இடம் கொடுக்கிறார்களோ என்ற ஐயம் ஏற்படும் படி உச்சநீதிமன்றம் செயல்படுகிறது
என்று கருதத் தோன்றுகிறது.
சமீபத்தில்
உச்சநீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இரண்டு வழக்குகளை இங்கு குறிப்பிடலாம்.
ரபேல் ராணுவ விமானங்கள் வாங்குவதில் ஊழல் வழக்கு, நேஷனல் ஹெரால்ட் வழக்கு – ஆகிய இரண்டையும்
உச்ச நீதிமன்றம் எவ்வாறு நடத்துகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
அத்துடன்
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பை மறு
ஆய்வு செய்யத் தாக்கல் செய்த மனுக்களின் தீர்ப்பு வரை நிறுத்தி வைக்க வேண்டிய பக்தர்களின்
கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. மேலும், மறு சீராய்வு மனுக்களை விரைவு
மனுவாக ஏற்க வேண்டிய வேண்டுகோளும் உச்சநீதி மன்றத்தால் ஏற்கப்படவில்லை. ‘ஐயப்ப்பன்
கோயில் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை இந்த மறு வாய்வு
மனுக்களின் தீர்ப்பு வரும்வரை நிறுத்தி வைக்க வேண்டுகிறோம்’ என்ற பக்தர்களின் தாக்கீதும்
உச்ச நீதிமன்றத்தின் செவிகளிலும், மனத்திலும் ஏறவில்லை.
தற்போது,
ஐயப்ப பக்தர்களின் தூய அமைதியான ஐயப்ப கோஷங்களை எழுப்பி கேரளா முழுவதும் நடத்தப்பட்ட
போராட்டங்களால், நாஸ்திக வாத கம்யூனிஸ்ட் அரசின் கீழ் செயல்படும் ஐயப்ப தேவஸ்தாம் போர்ட்
‘அனைத்து வயதுப் பெண்களுக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசன அனுமதித் தீர்ப்பைச்
செயல்படுத்த கால அவகாசம் வேண்டும்’ என்ற மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஐயப்ப பக்தர்கள் சாத்வீகப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி இது. இந்த வெகு ஜன மன
நிலையை உச்ச நீதிமன்றம் கணிக்கத் தவறியதை மிகவும் மன வருத்தத்துடன் தெரியப்படுத்த வேண்டிய
நிலையில் இருக்கிறோம்.
மேலும்,
அயோத்தியா ராமர் கோயில் வழக்கை விரைவு வழக்காக எடுத்துக் கொள்ள உச்சநீதி மன்றத்தில்
மிகவும் பணிவாக மன்றாடியதையும் நீதிபதிகள் ஏற்கத் தயாராயில்லை.
‘எவ்வளவோ வழக்குகள்
உள்ளன. எவைகள் முக்கியம் என்பது எங்களுக்குத் தெரியும். இதில் யாரும் தலையிட முடியாது’
என்ற அளவில் பல வருடங்களாக தொடர்ந்து காலம் கடந்து தீர்ப்புக் கிடைக்காமல் இழுத்துக்கொண்டு
இருப்பதையும் ஒரு பொருட்டாக உச்ச நீதி மன்றம் கருதுதாமல் இருப்பது பெருவாரி இந்துக்களைப்
புண்படுத்தும் என்பதையும் நீதிபதிகளில் கவனத்தில் கொள்ள விரும்பவில்லையோ என்று தான்
கருதத் தோன்றுகிறது.
‘ரபேல்
விமானங்கள் வாங்குவது என்பது ராணுவம் சம்பந்தப்பட்டது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’
என்ற அரசு வாதத்தையும் மீறி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகை விமான ராணுவ
அதிகாரிகளை கோர்ட்டில் விசாரித்தார். ஏர் மார்ஷல் உட்பட 8 மூத்த விமான ராணுவ அதிகாரிகள்
கோர்ட்டில் ஆஜராகி வாக்கு மூலம் கொடுத்தனர். ‘இறுதியாக இந்திய விமான ராணுத்தில் சேர்க்கப்பட்ட
போர் விமானங்கள் யாவை?’ என்ற கோர்ட்டின் கேள்விக்கு ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களான
சுகாய் 30 போன்றவற்றைத் தவிர்த்து, 1980-ல் அயல் நாட்டு ஜாகுவார் போர் விமானங்கள் மட்டும்
தான். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அந்த விமானங்கள் எல்லாம் 3.5 தரம் கொண்டவைகள். ஆனால்
ரபேல் விமானங்கள் 5 தரம் கொண்ட உயர் ரக போர் விமானங்கள்’ என்று விளக்கம் அளித்ததைக்
கேட்ட உச்சமன்றம் ‘நீங்கள் அனைவரும் உங்கள் வேலையைப் பார்க்கச் செல்லவும். இந்த கோர்ட்டில்
நடப்பது வேறுபட்ட சண்டை’ என்று கூறி உள்ளது. இதன் மூலம் விமான ராணுவ வீரர்களின் வாயிலாகவே
‘முந்தைய அரசு விமான ராணுவத்தை மேம்படுத்த எந்தவிதமான துரித நடவடிக்கைகள் எடுக்க வில்லை’
என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் அந்த ராணுவ அதிகாரிகள் தங்கள் கருத்துக்களுக்குச்
சாதகமாக கோர்ட்டில் கூறாததுடன், கடந்த 38 வருடங்களாக
அரசு ராணுவ விமானத்தின் தரத்தையோ, எண்ணிக்கையையோ அதிகரிக்க வில்லை என்ற அவர்களின் கூற்றால்
அவர்களை மேலும் விசாரிக்காமல், ‘உங்கள் ராணுவ கூடாரத்திற்குச் செல்லுங்கள்’ என்று அவர்களைத்
துரத்தி அடிக்கும் விதமாக கோர்டிலே உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லி உள்ளார்கள்.
உச்ச
நீதிமன்றம் ராணுவ வீரர்களை இந்த ரபேல் வழக்கில் விசாரணை செய்தது சரியா? நேர்மையா? என்பதைக் காலம் தான் நிரூபிக்க வேண்டும். உச்சநீதி
மன்றம் லட்சுமண ரேகையைத் தாண்டி விட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழத்தான் செய்யும்.
இதே
உச்ச நீதிமன்றம் நேஷனல் ஹரால்ட் வழக்கில், உச்சநீதி மன்றம் சுப்பிரமணிய ஸ்வாமியை ‘ஊழல்
நடந்ததற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவும்’ என்று உத்திரவு போட்டது. ஆனால், அதே உச்ச
நீதிமன்றம் ரபேல் வழக்கு போட்ட பிரசாந்த் பூஷனை ‘தகுந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கவும்’
என்று சொல்லாமல், கோர்டே முன் வந்து இந்திய விமான ராணுவ வீரர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தச்
சொல்லி, அவர்களை விசாரித்து சரித்திரம் படைத்து விட்டார்கள் உச்சமன்ற நீதிபதிகள்.
‘ராணுவ ரகஸ்யங்களை கோர்ட் வெளியிடச் செய்வது மிகவும் தவறான அணுகுமுறை’ என்பதை உச்சநீதி
மன்றத்தை உணரச் செய்யும் கடமை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிக்கு உண்டு. இதன் மூலம்
உச்சநீதி மன்றம் தங்கள் முன்னால் தொடரப்பட்ட வழக்குகள் முன் வைத்த வாத-பிரதிவாத வாதங்களை
சட்ட விதிகளின் மூலம் சீர்தூக்கிச் செயல்படுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், உச்சநீதிமன்ற
நீதிபதிகள் அரசு இயந்திரங்களை இயக்கும் விதமாகவும் செயல்படுவதாக நினைக்கத் தோன்றுகிறது.
சமீபத்தில்
ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி ‘பிஜேபி எம்.பி.யின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து
உச்சமன்றம் முன்பு உத்திரவிட்டது தவறு’ என்று ஒத்துக்கொண்டுள்ளார். தவறு செய்தால் தண்டனை
என்பது பொது விதி. ஆனால் அது உச்சமன்ற நீதிபதிகளுக்குப் பொருந்தாதா? என்று பொது மக்கள்
கேட்பதில் ஜனநாயக நாட்டில் அர்த்த புஷ்டி உள்ள கேள்வியாகும். மேலும் சமீகாலமாக உச்ச
நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்புக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுவும்
உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு இழுக்கே ஆகும்.
இந்த
நிலை தொடருமானால், ஆட்சியின் ஒரு அங்கமான உச்சமன்றத்தைக் கட்டுப்படுத்த அரசு தகுந்த
நடவடிக்கையை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு எடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று கணிக்க
முடியாது.
நிதி அரசர்களுக்கும் நீதியைப் புகட்டும் அவலம் வராது என்று நம்புவோமாக.
சத்தியமேவ
ஜெயதே!
Comments