சபரிமலை தரிசனத்தில் தலையிடும் உச்ச நீதிமன்றம்
உச்ச நீதி மன்றத்தின்
ஐந்து நீதிபதிகளில் ஒரு பெண் நீதிபதியைத் தவிர்த்து நான்கு ஆண் நீதிபதிகள்
28-09-2018 வெள்ளிக் கிழமை அன்று ‘அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம்.
பெண்களில் மாதவிடாய் வயதான 10-லிருந்து 50-வரையில் உள்ள பெண்கள் சபரிமலை கோயிலுக்குச்
செல்லும் தடை நீக்கப்பட்டுள்ளது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
அதற்கு அவர்கள்
கூறி உள்ள காரணங்கள்:
“பக்தியில் ஆண்-பெண்
பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. பெண்கள் ஆண்களை விட கீழானவர்களோ அல்லது மதிப்பில் குறைவானவர்களோ
இல்லை. மத ஆணாதிக்கம் நம்பிக்கையின் அடிப்படையில் வெற்றி கொள்ள அனுமதிக்க முடியாது.
நம்பிக்கைச் சுதந்திரத்தில் பெண்ணின் உடல் மற்றும் பாலியல் ரீதியான காரணங்களைக் காட்டுவதை
அனுமதிக்க முடியாது. மதம் என்பது அடிப்படையில் ஒரு வாழ்க்கை முறையாகும். இருப்பினும்,
கடைப்பிடிக்கப் படும் சில வழிமுறைகள் தவறானவைகளாக இருக்கும். அதைக் களைவது அவசியம்.
ஐயப்ப்ப பக்தர்கள்
இந்து மதத்தின் தனியான பிரிவில்லை. கேரள ஹிந்து மத வழிபாட்டுத் தல விதிகள் 1965-ல்
உள்ள விதி 3 (b) தான் குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு சபரிமலை செல்ல அனுமதி மறுப்பைத்
தெரிவிக்கிறது. அந்த விதி அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் ரத்து செய்யப்படுகிறது.
ஏனென்றால் அந்த விதி அரசியல் சாதனம் ஆர்டிகில் 25-ல் அளிக்கப்பட்ட ஹிந்துப் பெண்களின்
மத வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாக உள்ளது. இந்த ஷரத்தில் உள்ள உரிமைகள் பெண்களின் உடல்
ரீதியான உபாதைகள் அல்லது பெண் என்ற பாகுபாடுகள் குறிக்கிடாது. மேலும் 10-50 வயதுப்
பெண்களை சபரிமலைக் கோயிலுக்குச் செல்லத் தடுப்பது என்பது இந்து மதத்தின் முக்கிய அங்கம்
இல்லை.”
இந்த நான்கு ஆண்
நீதிபதிகளின் தீர்ப்புக்கு மாறாக மத உணர்வுகளை மதித்து மாதவிடாய்க் காலங்களில் சபரிமலைக்
கோயிலுக்குச் செல்லும் தடையினை ரத்து செய்யக்கூடாது என்று இந்து மல்ஹோத்ரா என்ற பெண்
நீதிபதி தன் தீர்ப்பினை வழங்கி உள்ளார். அதற்கு அவர் முன் வைக்கும் காரணங்கள்:
“அனைத்துப் பெண்களையும்
சபரிமலையில் அனுமதிக்கக் கூடாது என்று வாதிடுபவர்கள் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் ஆகம
விதி முறைகளின் படி, ஆர்டிகில் 25 (1) –ன் கீழ் அளிக்கப்பட்ட உரிமைகளின் படி தங்களுக்கு
சபரிமலையில் தெய்வ வழிபாடு செய்யும் உரிமை உண்டு என்கிறார்கள். இந்த விதிமுறைகள் சபரிமலைக்
கோயிலுக்கு மிகவும் அவசியமானதும், முக்கியமானதும் ஆகும். இதில் தலையிடுவது, நைஸ்டிக
பிரம்மசாரி என்று நம்பி ஐய்யப்பனை வணங்கும் பக்தர்களுக்கு ஆர்டிகில் 25 (1) கீழ் அளிக்கப்பட்ட
உரிமைகளில் தலையிடுவதாகும்.
மத வழிபாட்டு முறைகளில்
நீதிமன்ற பரிசீலனை நிச்சயமாகத் தவிர்க்கப்படவேண்டும். ஏனென்றால், கோர்ட் தனது நீதி
அல்லது பகுத்தறிவு ஆகியவைகளை உருவ வழிபாட்டு விஷயங்களில் திணிக்கக் கூடாது. மத விழிப்பாட்டு
முறைகளில் எவைகள் முக்கியமானவகள் என்பதை அந்த மதத்தினர்களே தீர்மானிக்க வேண்டும் –
கோர்ட்டார்கள் அல்ல. இந்தியா பல மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட தேசம். அரசியல் நேர்மையின்
அடிப்படையில் அனைவரும் அவரவர்கள் நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.
அதில் கோர்ட் தலையிடக் கூடாது. அந்தக் குறிப்பிட்ட மதத்தினர் பாதிக்கப்பட்டு முறையிட்டால்
ஒழிய தலையீடு கூடாது.”
ஆண் ஆதிக்கம் மத
வழிபாட்டில் திணிக்கக் கூடாது என்று காரணம் காட்டிய அந்த நான்கு உச்ச மன்ற நீதிபதிகளே
தங்கள் சக பெண் நீதிபதியின் மாறுபட்ட தீர்ப்பினை ஏற்காததும் ஒரு விதத்தில் அவர்கள்
குறிப்பிட்ட ஆண் ஆதிக்க மன நிலையையே காட்டுகிறது என்று சொன்னால் அதற்கு அவர்கள் ஒரு
தெளிவான பதிலை அளிக்க முடியாது என்று தான் கணிக்க முடியும்.
மத வழிபாட்டு முறைகள்
மதிக்கப்படுவதை விட பெண்களின் உரிமையை – அவர்கள் சபரிமலையில் ஐய்யப்பனை எந்த வயதிலும்
தரிசிக்கும் உரிமையை – நிலை நாட்டுவது தான் அரசியல் சாதனத்தை மதிப்பதாகும் என்று கூறும்
உச்ச நீதிமன்றம், இது தாங்கள் கேரள பெண்களுக்கு நீதி வழங்கி விட்டதாகக் கருதுகின்றனர்.
ஆனால் கள நிலவரமோ கேரள பெண்கள் என்றும் இல்லாத அளவில் தெருவில் வந்து ‘நாங்கள் காத்திருக்கத்
தயார். சபரிமலையைக் காப்போம்’ என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். இதற்காக
உயிர்த் தியாகமும் செய்யத் தயாராக பல கேரளப் பெண்கள் அமைதியாகப் போராட்டம் நடத்திய
படி இருக்கிறார்கள்.
சபரிமலையைச் சுற்றி
உள்ள காடுகளில் வாழும் மலைவாழ் சாதியினர் சபரிமலையில் மாதவிடாய் உள்ள பெண்கள் செல்லக்
கூடாது என்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த இனப் பெண்கள் நிலக்கல்லில்
ஒன்று கூடி கார், வேன், பஸ் ஆகியவைகளில் சோதனை இட்ட பிறகே மேற்கொண்டு சபரிமலைக்குச்
செல்ல அனுமதிக்கிறார்கள்.
‘இந்த மதக் கலாச்சாரம்
எங்களது திராவிட இனத்தைச் சார்ந்தது. ஐய்யப்பன் எங்களது கடவுள். சில பெண்கள் சபரிமலைக்குத்
தரிசனம் செய்யத் தடை விதித்தது எங்களது மதக் கொள்கையில் முக்கியமான ஒன்றாகும். இந்த
தடையை மீறுவது கூடாது. மதவிடாய் உள்ள பெண்கள் தூய்மை அற்றவர்கள் என்ற எங்கள் பழக்க
முறையை மாற்றக் கூடாது” என்று சபரிமலை வாழ் ஆதிவாசிகள் களத்தில் இறங்கி போராடத் துவங்கி
விட்டார்கள்.
“முன்பெல்லாம்
மண்டலம் – மகர விளக்கு காலங்களில் அரசர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் தான் பூஜை
செய்ய வருவார்கள். அப்போது சபரிமலைக் கோயிலில் விளக்கேற்றும் உரிமை மலை வாழ் ஆதிவாசிகளுக்குத்
தான் உண்டு. அப்போது அடர்ந்த காடான சபரிமலைக்கு ஒருவரும் வரத் துணிய மாட்டார்கள். இந்த
அடர்ந்த காட்டில் புலிகள், சிறுத்தைகள் ஆகிய கொடிய மிருகங்களிடமிருந்து எங்கள் ஜாதி
மக்களை ஐய்யப்பக் கடவுள் தான் காப்பாற்றினார்” என்று விளக்கி விட்டு, ‘சில மாதவிடாய்ப்
பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற அந்த விதியை மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’
என்று அந்த ஆதிவாசி மக்கள் ஒரே குரலாக போராடத்துவங்கி களத்தில் இறங்கி விட்டனர்.
1991 ஆண்டு கேரளா
உயர் நீதி மன்றத்தில் எஸ். மஹேந்திரன் என்பவர் மாதவிடாய்ப் பெண்கள் சபரிமலைக்குச் செல்லும்
தடையை நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த கோர்ட் ‘பெண்களைத்
தடை செய்தது அரசியல் சாதனத்தின் படி நேர்மையான ஒன்று. இந்த மத நம்பிக்கை பல யுகங்களாகக்
கடைப்பிடிக்கப்பட்ட ஒன்றாகும்’ என்று தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், 2006-ல்,
இந்திய இளைஞர் வழக்கறிஞர் கழகம், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ‘சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குச்
செல்ல பெண்களுக்கு தடை விதித்தது ஆர்டிகல் 14-ல் அளிக்கப்பட்ட சரிசம உரிமையை மீறுவதாகும்.
மற்றும் ஆர்டிகல் 25-ம் படி இந்தத் தடை உத்திரவு பெண்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும்’
என்ற ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தது. இதுடன் ‘Right to Bleed’ என்ற என்.ஜி.ஓ. நடத்தும்
மூத்த வழக்கறிஞர் ‘பெண்களைச் சபரிமலைக்குச் செல்லத் தடை செய்வது, ஆரிடிகல் 25-ன் கீழ்
தீண்டாமையாகவே கருத வேண்டும். ஏனென்றால் அந்த ஷரத்தின் கீழ் அனைவருக்கும் தங்கள் மதக்
கடவுளைத் தரிசிக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதை யாரும் தடை செய்ய முடியாது’ என்று
கோர்டில் வாதாடி உள்ளார்.
இந்த தடையை காங்கிரஸ்
அரசு ஆட்சி செய்யும் போது ஆதரித்தும், இப்போது ஆட்சி செய்யும் மார்க்சிஸ் கட்சி எதிர்த்தும்
உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆகையால், இந்த மாறுபட்ட மனுக்களையும்
உச்ச நீதிமன்றம் சமமாகப் பார்க்காமல், ஆதரித்த மனுவை ஏற்றுக் கொண்டுள்ளது, நேர்மையான
செயலா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. இது சீராய்வு மனுவின் தீர்ப்பின் போது தான்
தெரியவரும்.
இப்போதுள்ள அரசும்,
கேரளா தேவாஸ்தானமும் உச்ச நீதி மன்றத்தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யாது
என்பதால், உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மாறாது என்று தான் படுகிறது. ஆனால், மக்களின்
எதிர்ப்பு சக்தி பெற்று, ஒரு பெரிய போராட்டமாக உருவானால், கேரள அரசு பணிந்து, சீராய்வு
மனுவுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பும் உண்டு. மக்களின் சக்தியை அவ்வளவு எளிதில் புறக்கணிக்க
முடியாது. அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு மீண்டும் தடையை ஏற்படுத்துவது எவ்வளவு தூரம்
மதச் சடங்குகளுக்கு ஒத்து வரும் என்பதும் கேள்விக் குறியே.
இந்த பொது நல வழக்கை
அரசியல் சாசனக் குழு விசாரித்துத் தீர்ப்புச் சொல்ல முடிவானது. ‘பெண்களுக்கான தடை நீக்கம்’
என்பது தான் அதன் தீர்ப்பு.
இந்த வழக்கைப்
போட்ட டெல்லி வழக்கறிஞர் சங்கத்தினர் யாரும் ஐயப்ப பக்தர்கள் இல்லை. இதில் பாதிக்கப்பட்டவர்களும்
இல்லை. ஏன், கேரளப் பெண்களும் இல்லை. மேலும் இந்து மத நம்பிக்கை இல்லாத கடவுள் நம்பிக்கை
இல்லாதவர்கள் தான் இந்த பொது நல வழக்கைப் போட்டுள்ளார்கள். இதன் தலைவர் ஒரு முஸ்லீம்.
ஆகையால், பெண் உச்ச மன்ற நீதிபதி மல்ஹோத்ரா ‘இந்த பொது நல வழக்கை உச்ச நீதி மன்றம்
விசாரிக்க ஏற்றுக் கொண்டதே தவறு’ என்று குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்க வேண்டும்.
தார்மீக அடிப்படையிலும், சட்ட அடிப்படையிலும், இயற்கையான நீதியின் அடிப்படையிலும்
– இந்த வழக்கே பாரபட்சமான ஒன்றாகும். மேலும், இந்துக்களையும், இந்து மத வழிபாட்டு முறையில்
மற்ற மதத்தினர்கள் – அதிலும் எந்த வகையிலும் பாதிக்கப்படாதவர்கள் – தலையிட்டு வேண்டு
மென்றே குழப்பத்தையும், மதக் கலவரத்தையும் தூண்டும் அவர்களின் தீய எண்ணங்களை அறியாமல்
உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டதும், அதற்குத் தீர்ப்பு வழங்கியதும் ஏற்புடையது
அன்று.
குருசாமியிடம்
மாலை அணிந்து, 41 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி சுமந்து புனிதமான 18- படிகள் ஏறி
ஐயப்பனைச் தரிசிப்பது தான் சபரிமலையின் மகத்துவம். 41- நாட்கள் விரதம் 10 – 50 வயதுப்
பெண்களால் இருக்க முடியாது என்பதால் தான் அவர்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இந்த மத
நம்பிக்கையையும் கோர்ட் ‘உரிமைக்கு முன் இந்த விரத மத நம்பிக்கை செல்லாது’ என்று சொல்வதை
எந்த ஐயப்ப பக்தர்களும் ஏற்க மாட்டார்கள். ஏன், அந்தப் பெண்களும் இதற்கு உடன் பட மாட்டார்கள்.
உடன் படும் பெண்கள் – ஐயப்பன் கோயிலைத் தரிசிப்பதை ‘ஒரு சுற்றுலா யாத்திரை’ போன்றே
– பக்தி சிரத்தை ஒரு சிறிதும் இன்றி- செயல்படுவார்கள். அதையும் இந்துக்கள் ‘அனைவருக்கும்
சம உரிமை’ என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் உச்ச நீதி மன்றமும் நிர்பந்திக்கும்.
மாலை அணிவது,
41 நாட்கள் விரதம் – இருமுடி ஆகிய மத வழிகாட்டு முறைகள் புனிதமாகக் கருதப்படுவதையும்
உச்ச நீதி மன்றம் ‘சம உரிமை’ என்ற ஒன்றை மேற்கோள் காட்டி ஹிந்துக்களின் மதச் சடங்குகளை
மதிக்காமல் இந்துக்களை இழிவு படுத்தியும், பிளவு படுத்தியும் ஹிந்து மதத்திற்குத் தீராத
ஹானியினை உண்டாக்குகிறார்கள்.
இந்த அனைத்துப்
பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்திரவினை கேரளத்தின் பெரும்பாலான
மக்கள் ஏற்க வில்லை என்பது இப்போது அவர்களின் போராட்டத்தினால் தெரிய வந்துள்ளது. கடந்த
சில மாதங்களாக உச்ச நீதி மன்றத்தின் கிரிமினல் பீனல் கோர்ட் செக்க்ஷன் 377 – ஓரினச்
சேர்க்கை சட்டப்படி குற்றம் இல்லை, அதே செச்ஷன் 497 – விபசாரம் சட்டப் படி குற்றம்
இல்லை – என்று பல தீர்ப்புக்களால் மேலை நாட்டுக் கலாச்சாரத்தை இந்தியாவில் புகுத்தும்
நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது.
ஹிந்து மதத்தின்
ஆணி வேரான மதச் சடங்குகளை இந்த மேற்கத்திய கலாச்சாரத்தைப் புகுத்தி அழிக்கப்பார்க்கிறது
உச்ச நீதி மன்றம். இதன் மூலம் மக்களின் நேர்மை, தூய்மை, கட்டுப்பாடு ஆகியவைகள் ஹிந்து
மதத்தில் கூறப்பட்ட பல அறிவுரைகளும் குழி தோண்டிப் புதைக்கபடும் கால கட்டத்தில் நாம்
இருக்கிறோம். இதற்கு ஒரு பெரிய கடிவாளம் போடாவிட்டால், நாம் நமது தனித் தன்மையை இழந்து
தவிப்பதைத் தவிர்க்க முடியாது.
பொது நல வழக்குப்
போட கையெழுத்திட்ட வழக்கறிஞர்களில் ஒருவர் பிரேணா குமாரி என்பவர். அவர் இப்போது ‘நான்
கேரளத்துப் பெண் இல்லை. ஏதோ இது பெண்களை தள்ளி வைக்கும் விதி என்று தவறாக என்னிடம்
சொன்னதை நம்பி விட்டேன். உச்ச நீதி மன்ற நீதிபதி ஜே. இந்து மல்ஹோத்ராவின் தீர்ப்பின்
உரையைப் படித்த பிறகு தான், என் தவறை உணர்ந்தேன். கேரளாவின் பெண்கள் சபரிமலைக்குச்
செல்ல விரும்புகிறார்கள். ஆனால் அவர்களை அனுமதிப்பதில்லை என்று தவறாக என்னிடம் சித்தரிக்கப்பட்டது.
‘கேரளாவில் உள்ள
1000-க்கும் மேற்பட்ட ஐயப்பா கோயில்களில் பெண்கள் எந்தவித தடையும் இன்றி ஸ்வாமியை தரிசிக்கலாம்.
ஏன், பெண்கள் மட்டுமே பூஜை செய்யும் கோயில்களும் கேரளாவில் உண்டு. ஆண்கள் அனுமதிக்காத
கோயில்களும் கேரளாவில் உண்டு’ என்ற விவரங்கள் பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது.
இது மதச் சீர்திருத்தம் என்ற சாக்கில் அரசியல் ஆதாயத்திற்காக போடப்பட்ட வழக்கு என்பதைக்
காலம் கடந்துதான் அறிந்தேன். இதனால் யாருடைய மனது புண்படுத்தி இருப்பினும், அதற்காக
நான் மன்னிப்புக் கோறுகிறேன்’ என்றும் விளக்கி இருக்கிறார். ஆகையால், இது ஹிந்து மதத்தைக்
குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
‘மசூதிகளில் பெண்களை
அனுமதிப்பதில்லை. இது அரசியல் சாசனப்படி உரிமை மறுப்பு’ என்று கேரள உயர் நீதி மன்றத்தில்
ஒரு ஹிந்து மனு தாக்கல் செய்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி ‘இதில் நீ பாதிக்கப்பட வில்லையே?
ஏன் இந்த மனு’ என்று கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு முஸ்லீம் கேரளப் பெண்கள்
அதே உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இதுவே ஹிந்து சம்பத்தப்
பட்ட மனுவாக இருப்பினும், அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஹிந்து மதத்திற்கு எதிராக
கோர்ட் செயல்படுவதும், முஸ்லீம் மதத்திற்கு பயந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்ப்பவும்
நடைமுறையாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத் தக்கது.
உச்ச மன்ற இந்தத்
தீர்ப்பால் பல வேண்டாத மனுக்கள், தீர்ப்புகள், மத நல்லிணக்கப் பாதிப்பு ஆகியவைகள் நிகழ
வாய்ப்புண்டாகி விட்டது. ஹிந்துக்கள் அயோத்தியா தீர்ப்பிற்குக் காத்திருக்கும் நேரத்தில்
பல வேண்டாத உச்ச நீதி மன்றத் தீர்ப்புகள் இந்தியர்களை – குறிப்பாக ஹிந்துக்களை பாதிக்கும்
அளவில் வழங்கப்பட்டுள்ளன.
ஹிந்துக்கள் விழிப்புடன்
இருந்தால் தான் இந்தியாவில் வாழ முடியும். அதற்கு ஒற்றுமையாக – சின்னச் சின்ன விஷயங்களைப்
புறம்தள்ளி – பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது அணி திரண்டு தங்களது பலத்தை ஓட்டு
மூலம் தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ் அரசு
கேரளாவில் இப்போது இருந்திருந்தால், அந்த அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்திருக்கும்.
மத்திய அரசும் சென்னை ஜல்லிக் கட்டில் செய்தது போல் அவசரச் சட்டம் இயற்றி ஐய்யப்பன்
கோயிலின் சான்னித்தியமும் காக்கப்பட்டிருக்கும். ஆனால் இது ஐயப்பனின் திருவிளையாடல்.
இதன் மூலம் கேரளாவில் மார்க்சிஸ் கட்சி திரிபுரா - மேற்கு வங்காளம் போல் காணமல் போகும்
வாய்ப்பும் ஏற்படும்.
“நாங்கள் காத்திருக்க
ரெடி. ஐயப்பன் கோயிலை காப்போம்” என்று கேரளப் பெண்கள் அணி திரண்டு பல ஊர்களில் சென்றது
மிகவும் அதிசயம் என்று பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். ஆகையால் கம்யூனிஸ்ட்
அரசும் அந்தப் போராடும் பெண்களுக்கு ஆதரவாகச் செயல்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஹிந்து மதச் சடங்குகள்
என்று வரும் போது மட்டும் கோர்ட் ‘இந்தச் சடங்குகளுக்கு எழுதப்பட்ட மதபுத்தகங்கள் எங்கே?
காட்டுங்கள்’ என்று கேட்பது தவறான அணுகுமுறையாகும். ஹிந்து மதத்தின் ஆணி வேரான வேதங்களே
செவி வழியாக அனாதிகாலமாக காப்பாற்றப்பட்ட ஒன்றாகும். எழுதாக் கிளவி என்று அவைகள் போற்றப்படுகின்றன.
ஹிந்து மதச் சம்பிரதாயங்கள்
எழுத்து மூலம் ஏற்பட்டவைகள் அல்ல என்பதை கோர்ட் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மதச்
சடங்குகள், மதச் சம்பிரதாயங்கள் எல்லாம் வழி வழியாக எந்தவிதமான எழுத்து வழி இன்றி காலம்
கடந்து கடைப்பிடிக்கப்படுபவைகள்.
ஆண் ஆதிக்க நீதிபதிகள்
ஹிந்து கேரளப் பெண்களின் கூக்குரல்களை காது கொடுத்துக் கேட்காத காரணத்தால் தான் அவர்களின்
தீர்ப்பு – யாருக்காக நியாயம் வழங்குவதாக அளிக்கப்பட்டதோ – அவர்களுக்கு அந்தத் தீர்ப்பு
சந்தோஷத்தைக் கொடுப்பதற்குப் பதில், துக்கத்தையும் கோபத்தையும் உண்டாக்கி அதை எதிர்த்துப்
போராட வேண்டிய நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. இது அநியாயமான தீர்ப்பு என்று பாதிக்கப்படுவதாகச்
சொல்லும் கேரளப் பெண்களே களத்தில் குதித்துப் போராடுகிறார்கள்.
பெண்களின் உரிமை என்று
போலியான நியாயத்தை அந்தப் பெண்களே ஏற்பதற்குத் தயாரில்லை. ஒருவேளை 377 & 497 அயல்
நாட்டு மோஹம் கொண்ட பக்தி இல்லாப் பெண்களில் சிலர் – நாஸ்திக வாத கம்யூனிஸ்ட் காம்ரேட்
பெண்கள் – இந்தத் தீர்ப்பை வரவேற்று, சபரிமலைக்கு எந்தவிதமான விரதமும் இல்லாமல் ஜாலியாக
யாத்திரை சென்று, அதன் சாந்நியத்தைச் சூரையாடலாம். அவர்கள் சென்ற பிறகு, சபரிமலை சன்னிதானத்தை
சுத்திகரிப்பு செய்தால், அதையும் கிண்டலும், கேலியும் செய்து, ஐய்யப்ப பக்தர்களின்
மனம் புண்படும் படிச் செய்து ஹிந்து மதத்தையும் சந்திக்கு இழுப்பார்கள்.
நல்லதே நடக்க அந்த
ஐயப்பனைப் பிரார்த்திப்போமாக. ஹிந்து மதத்தை அழிக்க நினைக்கும் சக்திகளை வேரோடு அழிப்போம்
வாரீர்.
ஸ்வாமியே! சரணம் ஐயப்பா!
Comments