பொது சிவில் சட்டம் இந்தியாவில் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதன் அரசியல் தன்மையை நிர்ணயிப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் - (Directive Principles to State Policy) என்ற  IV பகுதியில் Article 44-ல் சொல்லப்பட்டுள்ள கோட்பாடு இது தான்: இந்திய குடிமகனுக்கான பொதுவான சிவில் சட்டம் - மத்திய-மாநில அரசாங்கங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும் பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும்.

அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகளின் நோக்கம் இந்திய மக்கள் அனைவரும் ஒரு சிறந்த வாழ்வினைக் கடைப்பிடிக்கும் வகையில் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் அமைய வழிவகுப்பதாகும்.

அரசியல் சாசனம் ஆர்டிகில் 44-ல் பொது சிவில் சட்டம் அமல் படுத்தப் படவேண்டும் என்று கூறும் போது, ஏன் இதை மத்திய - மாநில அரசாங்கம் செய்யாமல் இருக்கிறது? - என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

1956 ஆண்டிலேயே ஹிந்துக்களுக்கான நான்கு சட்டங்களான - ஹிந்து திருமணச் சட்டம், வாரிசு உரிமைச் சட்டம், உரிய வயது வராதவர்  மற்றும் காப்புநிலைச் சட்டம், தத்து எடுத்தல் மற்றும் ஜீவனாம்சம் சட்டம் ஆகியவைகள் நிறைவேற்றும் போதே, ‘ஏன் இந்த பாரபட்சம்? பொதுச் சிவில் சட்டம் கொண்டு வரலாமே?’ என்று ராஜ்குமாரி அமிர்த கவுர் மற்றும் ஹான்சா மேஹ்தா பார்லிமெண்டில் குரல் எழுப்பினார்கள்.

இந்தியா முழுவதற்கும் செயல்படுத்தும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது அவசியம் தான். ஆனால், அந்தச் சட்டத்தை எந்த சமூகத்தினரின் மேலும் திணிக்க நான் விரும்பவில்லை. அந்த சமூகத்தினரே முன் வந்து இந்த சமூகச் சீர் திருத்தங்களை ஏற்கும் போது தான், இது சாத்தியம். ஆகையால், இந்த இந்து சமூதாய சீர்திருத்தங்கள் பொதுவாக இல்லாவிடினும், அதுவே இப்போதைக்கு ஏற்புடையதாகும். ஏனென்றால், பொது சிவில் சட்டத்தை மற்ற மதத்தினர் எதிர்க்கும் போது அவர்களின் மேல் திணித்தால், அதை நடைமுறைப்படுத்துவது சாத்யமாகாது போய்விடும். ஆகையால் தான், இந்த பொது சிவில் சட்டம் பற்றிய விதி ஆர்டிகில் 44-ல் சேர்க்கப்பட்டுள்ளதுஎன்று நேரு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அப்போதே, அபர்னா மஹந்தா அவர்கள் சொன்ன வாக்கு பலித்துவிட்ட்து: “சுதந்திரமான மதச்சார்பற்ற, சமூக நலக் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு பொதுவான சிவில் சட்டத்தை இப்போது கொண்டு வரப் பயப்படுவது, முற்போக்கான கொள்கைகளைக் காக்க வேண்டிய அரசாங்கமே ஆணாதிக்க பழமைச் சமூகப் பழக்கங்களைக் காப்பாற்றும் நிலையை ஊர்ஜிதம் செய்வதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.”

Directive Principles என்பது நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராது. அந்தக் கொள்கைகளை அரசாங்கம் சட்டமாக்கச் சொல்லும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனச் சட்டத்தின் 25-வது திருத்தத்தினால் ஆர்டிகில் 39 (b) & (c) - ( 39 - b. பொது நலம் கருதி, சமூகச் சொத்துக்களை நியாயமான முறையில் பங்கீடுகள் மற்றும் சொந்தமாக்கும் விதிகள் & 39 - c. பொது நலத்திற்கு ஹானி வரும் வகையில் சொத்து மற்றும் உற்பத்திச் சாதனங்கள் ஒரே இடத்தில் குவியும் படி உள்ள பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிடல்) ஆகியவைகளின் கீழ் இயற்றப்படும் சட்டங்கள் அரசியல் சாசனத்தின்  அடிப்படை உரிமை (Fundamental Rights) விதிகள் 14, 19 & 21 ஆகியவைகளுக்கு விரோதமானதாக இருப்பினும், Directive Principles-தான் செல்லுபடியாகும் என்று விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், Directive Principles அடிப்படை உரிமைகளை - Fundamental Rights - விட மிகவும் வலுவாக உருவாகி உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையின் கால கட்டத்தில் கொண்டு வரப்பட்ட மிகவும் சர்ச்சைக்குரிய 42-வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் மூலம் அனைத்து Directive Principles-களும் மேலே குறிப்பிட்டுள்ள 25-வது இந்திய அரசியல் சாசனத் திருத்தம் போல் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட்இது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைக்கே விரோதமானதுஎன்று தீர்ப்பளித்து, அந்த 42-வது அரசியல் சாசன திருத்த மசோதாவையே ரத்து செய்து விட்டது. இருப்பினும் ஆர்டிகில் 37-ன் படி, ‘இந்த Directive Principles-யை இந்தியாவின் எந்த நீதி மன்றமும் சட்டம் இயற்றிச் செயல்படச் செய்ய முடியாது என்றாலும், இந்த கோட்பாடுகள் இந்த நாட்டை ஆட்சி செய்ய அவசியமான அடிப்படையானவைகள் என்பதால், இங்கு குறிப்பிடப்பட்ட அனைத்து கோட்பாடுகளையும் சட்டமாக்குவது, அரசுகளின் கடமைகளாகும்என்று குறிக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் ஒன்று தெளிவாகிறது. ‘பொது சிவில் சட்டம் இயற்றுவது அரசியல் சாதனத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு அம்சம்என்பதை அனைவரும் உணரவேண்டும். ஆகையால்பொது சிவில் சட்டம் தேவையா? அவசியமா?’ என்ற கேள்விக்கே இடம் இல்லை என்பது தெளிவு. ஏனென்றால் இந்தியா ஒரு செக்குலர் தேசம். அதில் மதம் மதிக்கப்படலாம். ஆனால் எந்த ஒரு மதத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும் ஒரு வலுவான சுதந்திரமான நேர்மையான முற்போக்கான சமதர்ம சமூதாயம் அமைய தடைக்கற்கலாக இருப்பின் அவைகளை நீக்கி, யாவர்க்கும் பொதுவான நீதியை வழங்கும் நிலையில் ஒரு பொதுச் சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் நோக்கம்.

தற்போது இந்தியாவில் ஒரு பொதுவான சிவில் சட்டம் இயற்றப் படவில்லை. ஹிந்துக்களுக்குத் தனியாகச் சட்டம், முஸ்லீம்களுக்கு தனியாகச் சட்டம், கிருஸ்துவர்களுக்குச் சட்டம் என்று அவரவர்களின் மதம், வேத புத்தகம், தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஆகியவைகளின் அடிப்படையில் உள்ளன. இதனால் திருமணம், வரதட்சணை, விவாக ரத்து, ஜீவனாம்சம், சொத்துக்கள் வாரிசுகளுக்கு வழங்கும் வழிமுறைகள் ஆகியவைகள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. ‘செக்குலர் என்று பிரகடணம் செய்து விட்டு, ஏன் இந்த முரண்பாடுகள்? இது உடனே சரி செய்யப்படவேண்டும்என்று அவ்வப்போது குரல் எழுப்பினாலும், இந்த பொது சிவில் சட்டத்தை முஸ்லீம்கள் மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.

எங்களுக்கு முஸ்லீம் தனிச் சட்டம் - 1937-ல் இயற்றப்பட்ட ஷாரியத்
சட்டத்தின் அடிப்படையில் எழுந்த சட்டம் தான் - வேண்டும். அதை விடுத்து எந்த பொது சிவில் சட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம். திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துப் பிரித்தல், வாரிசு ஆகியவைகள் அனைத்தும் இஸ்லாமிய மதத்தின் சட்டத்தின் மூலம் தான் செயல்படுத்தப்பட வேண்டும். இதை விடுத்து, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது, இஸ்லாம் மதத்தையே - அதன் கலாச்சாரத்தையே அழிப்பதற்கு ஒப்பாகும். இது பெரும்பான்மையின மக்களான இந்துக்கள் முஸ்லீம்களின் மேல் திணித்து, எங்கள் மதத்தை அழிக்கும் செயலாகும். குரான் வாக்கு தான் எங்களுக்கு இறுதி மொழிஎன்று முக்கியமாக அகில இந்திய முஸ்லீம்களின் தனிப்பட்ட சட்ட வாரியம் மற்றும் ஜுமியட்-அல்-உலாமா ஆகியவைகள் கருதுகின்றன.

பலதார மணம், தலாக் என்று மூன்று முறை சொல்லி விவாகரத்து, பால்ய விவாகம், மனைவிக்கு ஜீவனாம்சம் மறுத்தல் ஆகியவைகள் அனைத்தும் மிகவும் பிற்போக்கானவைகள் என்பதையும், அவைகள் முஸ்லீம் பெண்களுக்கு அநீதி இழப்பவைகள் என்பதையும் தற்போது படித்த முஸ்லீம் பெண்கள் உணர்ந்து, போராடத் துவங்கி உள்ளனர்.

ஷா பானு என்ற 73 வயது முஸ்லீம் மாதுவின் ஜீவனாம்சம் பெற 1985-ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பில், ‘ஜீவனாம்சம் அகில இந்திய கிரிமினல் சட்டம் பிரிவு 125 அடிப்படையில் வழங்க வேண்டும். மேலும், பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசு தீவிர முயற்சி செய்ய வேண்டும்என்று சுப்ரீம் கோர்ட் உத்திரவிட்டது. இது முஸ்லீம்களிடம் பெரும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. ‘முஸ்லீம் திருமண விவகாரத்தில் கிரிமினல் சட்டத்தைத் திணிப்பது முஸ்லீம் தனிச் சட்டத்திற்கு அபாயகரமானதாகும். முஸ்லீம் கலாச்சாரத்தைக் காப்பாற்றும் முஸ்லீம் தனிச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். எங்ககளது தனிப்பட்ட சட்டங்கள் இவ்வாறு நீதி மன்றங்களால் தாக்கப்பட்டால், நாங்கள் முஸ்லீம் சமூக தனித்தன்மையே இழக்க வேண்டிவரும்என்பது முஸ்லீம் மத குருமார்களின் வாதமாகும். ஷா பானு தீர்ப்பிற்குப் பிறகு ராஜிவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டிசம்பர் 1985 நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததால், முஸ்லீம்களின் நன்மதிப்பைப் பெற, 1986-ம் ஆண்டிலேயேகிரிமினல் சட்டம் பிரிவு 125 முஸ்லீம் பெண்களுக்கு பொருந்தாதுஎன்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார். இதானால், முஸ்லீம் பெண்களுக்கு ராஜீவ் காந்தி தீங்கிழைத்து விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த ஷா பானு வழக்கில், ‘தலாக் தலாக் தலாக்என்று மூன்று முறை சொல்லி, விவாகரத்து செய்தது தவறு என்ற அம்சமே மறைந்து விட்டது

ஆர்டிகில் 25-ல், இந்திய மக்கள் தங்களது மதத்தைக் கடைப்பிடிக்கவும், அதைப் பரப்பவும் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும் போது, ஆர்டிகில் 44-ன் படி பொதுவான சிவில் சட்டம் - செக்குலர் சட்டம் - மதத்தின் அடிப்படையில் இல்லாமல், சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு அமைக்கச் சொல்வது, முரண்பாடாகப் படவில்லையா? - என்ற கேள்வியும் எழ வாய்ப்புள்ளது. இது இந்திய அரசியல் சாதனச் சட்டத்தின் குறைபாடா அல்லது குழப்பமா என்ற நிலையாலும் பொது சிவில் சட்டம் நடை முறைப்படுத்துவதில் சிக்கல் உண்டாகிறது. மேலும் அர்டிகில் 13-ல் ஆண் - பெண் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லீம் தனிச் சட்டம் முஸ்லீம் ஆண்களுக்கு அனுசரனையாகவும், முஸ்லீம் பெண்களுக்கு எதிராகவும் இருப்பதை வைத்தே, அந்தச் சட்டம் அரசியல் சாதனச் சட்டத்தை மதிக்காத ஒன்று என்று எளிதில் வாதித்து நிலை நிறுத்த முடியும்

இந்தியாவில் கோவா மாநிலத்தில் மட்டும் தான் பொது சிவில் சட்டம் செயலில் உள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் முஸ்லீம் நாடு. ஆனால் அங்கே பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இரண்டாவது திருமணம் செய்ய, அரசாங்கத்தின் எழுத்து பூர்வமான அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், இந்தியாவில் ஒரு முஸ்லீம் 4 மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு எந்தவித அனுமதியும் தேவை இல்லை. துனிஷியா - துருக்கி ஆகிய இந்த இரண்டு முஸ்லீம் நாடுகளிலும், பலதார திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இரான், கிழக்கு ஏமன், சிங்கப்பூர் ஆகிய முஸ்லீம் நாடுகளிலும், 1970-களில் முஸ்லீம் சட்டங்களில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கெல்லாம் வசிக்கும் முஸ்லீம்கள்குரானுக்கு எதிரான திருத்தங்கள் இவைகள். அவைகள் ஏற்புடையன அல்லஎன்று எதிர்க்குரல் கொடுக்க வில்லை. ஆனால் இந்தியாவிலோ, 1930 ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய முஸ்லீம் சட்டம் அப்படியே எந்தவிதமான திருத்தங்களும் செய்யப்படாமல் இருப்பது முஸ்லீம் பெண்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இதற்கு விடிவு காலம் வர வேண்டு மென்றால், முஸ்லீம் பெண்கள் படித்து, தங்கள் பர்த்தாவை அகற்றி, தைரியமாக முஸ்லீம் ஆண் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும். ஏனென்றால், கோர்ட்டே பாதிக்கப்பட்டவர்கள் ஏன் முன் வந்து, தங்கள் தரப்பு காரணங்களை வைத்து நீதிமன்றங்களை நாடவில்லை? - என்று கேட்கும் நிலையால் தான் முஸ்லீம் பெண்கள் வீதியிலும் - நீதி மன்றங்களிலும் - தேர்தல்களிலும் பல முனையில் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்ய வேண்டும்.


இந்திய முஸ்லீம் பெண் சமூகம் வெற்றி அடைய எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுவோமாக.  

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017