ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரசின் தர்மசங்கடம் ஆக்கம்: பவித்திரன்
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு இத்தாலிய கீழ்க்கோர்ட்டில்
அக்டோபர் 2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்று என்பதை வாசகர்கள் கவனத்திற்குக்
கொண்டு வர ஆசைப்படுகிறேன்.
Finmeccanica என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரியான
Giuseppe Orsi என்பவரையும், முந்தைய
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத் தலைவரான Bruno
Spagnolini ஆகிய இருவர்களுடன் இந்தியாவின் முந்தைய விமானப் படைத்தளபதி
எஸ்.பி.தியாகியையும் போதிய ஆதரமில்லை என்று சொல்லி அவர்கள் அனைவரையும்
ஊழல் குற்றச் சாட்டிலிருந்து கீழ்க்கோர்ட் விடுவித்தது. (இத்தாலியைத்
தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஃபின்மெகானிகா என்ற தாய் நிறுவனத்தின் கிளைதான் யு.கே.யில் உள்ள
அகஸ்டாவெஸ்ட்லேண்டாகும்.) இருப்பினும், அந்த கோர்ட் அந்த
இரு இத்தாலிய அதிபர்களையும் ‘தவறான விலைப்பட்டியல் ரசீது’ தயார் செய்த
குற்றத்திற்காக குறைந்த பட்ச தண்டனையாக இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு
வழங்கியது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு இத்தாலி மிலான்
மேல் கோர்ட்டில் தொடங்கப்பட்டது. ஏப்ரல் 2016 அன்று மேல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அந்தத்
தீர்ப்புத் தான் இந்தியாவில் காங்கிரசைக் கதிகலங்க வைத்துள்ளது.
அது 225 பக்கங்கள் கொண்ட பெரிய தீர்ப்பாகும். அந்தத்
தீர்ப்பின் படி, அந்த இரு இத்தாலிய கம்பனி முதலாளிகள் ஊழல் செய்த குற்றவாளிகளே
என்று தண்டனை வழங்கி கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பை மாற்றி அமைத்து விட்டது. அவர்களின்
சிறைத் தண்டனையையும் நான்கு ஆண்டுகளாக அதிகரித்து தீர்ப்பு வழங்கி விட்டது.
அந்தத் தீர்ப்பில் இந்தியாவின் அரசு ஊழியர்கள், விமானப்
படைத்தளபதி மற்றும் விமான அரசு ஊழியர்கள், அரசியல்
தலைவர்கள், மீடியாக்கள் ஆகியவர்களைப் பற்றி தெரிவித்த ஆவணங்கள் - கருத்துக்கள் - குற்றச்சாட்டுக்கள்
ஆகியவைகள் உலக அளவில் இந்தியாவை தலைகுனிய வைக்கிறது.
இந்த ஊழலுக்கு முக்கிய இடைத் தரகராக விளங்கியவர் யு.கே. நாட்டவரான
ஜான் கிருஷ்டியன் மிச்சேல். அவர் இப்போது துபாயில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவர் அங்கு
வசிக்கும் விலாசம் தெரியவில்லை. அவரை இந்தியாவிற்கு நாடுகடத்தி விசாரிக்க இந்தியா யு.கே. மற்றும்
ஐக்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளின் உதவியை நாடி உள்ளது. யு.கே.யில் மிச்சேல்
இருந்த விலாசம் தெரிந்தும், துபாய் விலாசம் இன்னும் தெரியவில்லை என்பதால் சிக்கல் இருக்கிறது. அவரின்
தந்தை இறக்கும் போது, இந்த தரகு வேலையை அவருக்கு வழங்கி உள்ளார். அவரது தந்தை
நேரு குடும்பத்துடன் தொடர்பு உள்ளவர் என்பது வெளிவந்தாலும், மிச்சேல்
‘தான் நேரு குடும்பத்தினரை ஒரு போதும் சந்தித்தது இல்லை’ என்று சத்தியம்
செய்கிறார். ஆனால், அவருக்கு டிரைவராக இருந்தவரின் வாக்கு மூலத்தில், ‘மிச்சேல்
1977-லிருந்து 2013 - வரை இந்தியாவிற்கு 300 தடவைகள் ‘புனித யாத்திரை’யாக வந்துள்ளதாகத்
தெரிகிறது. அந்தப் பயணத்தில் அவர் சந்தித்தவர்களின் பட்டியல் தயாரிப்பில்
உளவுத்துறை முடிக்கி விடப்பட்டுள்ளது.
மிச்சேல் இந்தியாவில் வாங்கிய டெல்லி வீடு, ஆடம்பரமான
கார், வங்கிப் பணம் ஆகியவைகள் - சுமார்
ரூபாய் 1.15 கோடிகள் வரை முடக்கப்பட்டுள்ளன. முன்னாள்
விமானத் தளபதி எஸ்.பி. தியாகியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூபாய் 7 கோடி சொத்துக்களும்
முடக்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் ஊழல் பணத்தில் வாங்கியவைகள் என்று குற்றம்
சாட்டப்பட்டுள்ளது. இவைகளுக்கு கோர்ட் தடை விதிக்க வில்லை என்பது ஒரு ஆறுதலான
விஷயம்.
இத்தாலி மிலான் கோர்ட் தனது நீண்ட தீர்ப்பில் “2010
ஆண்டு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரை இந்தியாவிற்கு விற்றதில் ஊழல் நடந்துள்ளது. இந்தியாவில்
இருக்கும் இந்திய விமானப்படைத் தளபதி, அரசு ஊழியர்கள், அரசியல்
தலைவர்கள், இந்திய மீடியாக்கள் ஆகியவர்களுக்கு லஞ்சம் கொடுக்க ஜான் கிருஷ்டியன்
மிச்சேல் என்ற யு.கே. நாட்டுப் பிரஜை இடைத்தரகராகச் செயல்பட்டார். ஊழல் செய்ய
பணம் கொடுத்த விவரப் பட்டியல் அவர் கைபடவே எழுதப்பட்டுள்ளது. அதன் படி
சங்கேத சுருக்கு எழுத்தில் - AF (Air Force) € 6
million, BUR (Bureacrates) €8.4 million, Pol (Political) €6 million, AP (Ahmed
Patel) €3 million - எழுதப்பட்டுள்ளது.”
மேலும், கிருஷ்டியன் மிச்சேல் அனுப்பி, கேர்ட்டில்
சமர்ப்பிக்கப்பட்ட இன்னொரு குறிப்பில் உள்ள வாசகம் காங்கிரஸை உண்மையிலேயே மிகவும் கவலை
கொள்ள வைக்கும்.
அதன் வாசகம்: இந்த வாசகம் இடைத்
தரகரான கிருஸ்டியன் மிச்சேல், அகஸ்டாவெஸ்ட்லேண்டின் வேலை பார்க்கும் பீட்டர் ஹுலெட் என்பவருக்கு
எழுதியதாகும்: “Signora Gandhi என்பவர்
தான் முடிவெடுக்கும் உந்து சக்தியாக உள்ளவர். அவரின்
முக்கிய ஆலோசர்கள் தான் உனது முக்கிய இலக்காக இருக்க வேண்டும். அவர்களின்
பட்டியல்: பிரதம மந்திரி சிங், அஹமத் பட்டேல், பிராணாப்
முகர்ஜீ, எம்.வீரப்ப மெளலி, ஆஸ்கார் ஃபெர்ணாண்டஸ், எம்.கே. நாராயணன், வினாய்
சிங்.”
Signora என்பது Mrs./Madam என்று பெயருக்கு முன்னால் குறிப்பிடும் சொல். ஆகையால்
காந்தி என்பது ஒரு பெண் என்பது தெளிவாகிறது. ஆகையால், இது சோனியா
காந்தியைத் தான் குறிப்பிடுகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அவருக்கு
பணம் நேரிடையாகச் சென்றதாகத் தகவல் இல்லை என்றாலும், அவரது அந்தரங்க
பல நாள் நம்பத்தகுந்த ஆலோசராக இருப்பவர் அஹமத் பட்டேல் என்பது ஊர் அறிந்த ரகஸ்யம். மேலும், அவரது ஆலோசனையும், கருத்தும்
அரசு அதீகார வட்டத்தில் எடுபடும் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அவருக்குப்
பணம் கொடுத்தது இந்த குறிப்பின் மூலம் தெரியவருகிறது.
ஆனால், அஹமத் பட்டேல் ‘அந்தக் குறிப்பிற்கும்
எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று மறுத்துள்ளார். சோனியாவும், ‘நான் எதற்கும்
பயப்பட மாட்டேன். என் பெயருக்குக் கலங்கம் கற்பிக்கவே இந்தக் குற்றச் சாட்டு’ என்று மறுத்துள்ளார்.
ஆனால், ‘இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது உண்மை
தான். ஊழல் பணம் இந்தியர்களால் வாங்கப்பட்டுள்ளது என்பதும் உண்மை
தான். ஆனால், வெறும் ஆதாரமில்லாத குற்றச் சாட்டை சுமத்துவதற்குப் பதில், ஒழுங்கான
முறையில் சி.பி.யை. மூலம் விசாரித்து, உண்மையை
வெளிக்கொண்டு வர பி.ஜே.பி. அரசு முயல வேண்டும்’ என்று முன்னாள்
ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி இந்த ஊழலில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை
என்று குற்றம் சாட்ட முடியாது. ஏனென்றால், அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன்
2010 வருடம் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கும் பொழுது ஒப்பந்தம் கையெழுத்தானது.
2013 ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததற்கான குற்றச் சாட்டு வெளிச்சத்திற்கு
வந்த உடனே, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, சி.பி.யை./உளவுத்
துறை மூலம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது அப்போதைய காங்கிரஸ் அரசு. ஒப்பந்த
உத்தரவாதம் ரத்து செய்யப்பட்டு, உத்தரவாதப் பணம் வங்கிமூலம் பெறப்பட்டுள்ளது. அந்த நிறுவனமும்
தடைசெய்யப்பட்ட கருப்பு நிறுவனமாக இந்தியாவில் ஆக்கப்பட்டது.
அப்போதைய காங்கிரஸ் - இப்போதைய
மோடி அரசும், மொத்தம் ரூபாய் 2068 கோடி வரை
அகஸ்டாவிடமிருந்து வசூல் செய்துள்ளனர் என்பது ஒரு ஆறுதலான செய்தி. ஒப்பந்த
தொகையான ரூபாய் 3600 கோடியில் இது 56% என்பதும், அது கணிசமான
தொகை என்பதையும் கவனித்தால், அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் மிகவும் குறைந்துள்ளதை அறிய முடியும்.
அகஸ்டாவெஸ்ட்லேண்டுடன் செய்து கொண்ட
2010 ஒப்பந்தம் மூலம் இது வரை 3 ஹெலிகாப்டர்கள் தான் இந்தியாவிற்கு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் அனுப்பி
உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, இந்த ஊழல்
வெளிச்சத்திற்கு 2013 ஆண்டு வந்த பொழுது, ஹெலிகாப்டர்
வாங்கும் ஒப்பந்தம் ரத்தாகி விட்டது. ஆனால், அந்த விலையுயர்ந்த 3 ஹெலிகாப்டர்களும்
உபயோகப்படுத்தப்படாமல் இன்று வரை இருப்பதால், மோடி அரசு
துணிச்சலாக ஒரு முடிவை அரசியல் எதிர்ப்புக்கிடையில் ஆகஸ்ட்
2014 அன்றே எடுத்தது. அதன் மூலம் தற்காலிகமாக அந்த ஹெலிகாப்டர் நிறுவனங்கள் தடையினைத்
தளர்த்தி, அதே நிறுவனத்தினரிடம் உதிரிப் பாகங்கள் வாங்க மோடி அரசு துணிந்தது. ஏனென்றால், அப்போது
தான் அந்த 3 ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த முடியும். என்றாலும், அவைகளை
முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் இப்போது மோடி அரசும் தயக்கம் காட்டலாம்.
அகஸ்டாவெஸ்ட்லேண்டிற்கு சாதகமாக முடிவெடுக்கும் குழுவில்
இடம் பெற்ற முக்கிய மூன்று உறுப்பினர்கள், மன்மோஹன்
சிங் அரசில் அவர்களின் பதவிக் காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு மீண்டும் கீழ்க்கண்ட
பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன: எம்.கே.நாராயணன் - மேற்கு வங்க கவர்னர், பி.வி.வான்சு, கோவா கவர்னர், சசிகாந்
ஷர்மா, இந்தியாவின் தணிக்கைத் தலைமை அதிகாரி. இது மேற்கண்ட
குற்றச் சாட்டு நிலுவையில் இருக்கும் போதே காங்கிரஸ் அரசு அவர்களுக்குக் கொடுத்தது
என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஜனவரி
2014 வாக்கில், சி.பி.யை, எம்.கே. நாராயணன் மற்றும் பி.பி.வாஞ்சு
ஆகியவர்களை விசாரிக்க மத்திய சட்ட அமைச்சகத்தை அணுகிய போது, அது மறுக்கப்பட்டுள்ளது. பிறகு, அவர்கள்
பதவியைப் பறித்த பிறகு தான் ஜூன் 2014 & ஜூலை 2014 ஆகிய தினங்களில்
சி.பி.யை. விசாரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கி உள்ளார். ஆகையால், அப்போதைய
காங்கிரஸ் அரசு இந்த ஊழல் வழக்கு விசாரணையில் ஆர்வம் காட்ட வில்லை என்பது தெரிகிறது.
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் தரத்தில் குறை காண முடியாது. ஆகையால், அதை வாங்குவதில்
நேர்மையும், ஊழல் இன்மையும் இருப்பின், அதை இந்திய
மக்கள் ஏற்றிருப்பார்கள். அதனால், நமது ராணுவ பலமும் அதிகரித்திருக்கும். ஆனால், அது நடக்க
வில்லை என்பது மிகவும் சோகமான செய்தியாகும்.
ஆனால் இதில் காங்கிரஸ் அரசு செய்த சில காரியங்கள், எந்த இந்தியனையும்
தலைகுனிய வைக்கும் என்பது திண்ணம். அவைகள் யாவை என்பதற்கு
கீழே உள்ளவைகளைப் படிக்கவும்.
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என்பதற்காக, அதிக உயரம்
பறக்கும் திறனைக் குறைத்தும், உள்ளே அதன் உயரத்தைக் கூட்டியும் ஒப்பந்த நிபந்தனைகளை மாற்றியதைக்
கூட மன்னித்து விடலாம். ஆனால் விமானப்படை நிர்ணயித்த ரூபாய்
793 கோடியாக இருந்த உச்சவரம்பை ரூபாய் 4876 கோடியாக
உச்சவரம்பை உயர்த்தியது எந்தவகையில் நேர்மையாகும்? இது போதாதென்று, 8
ஹெலிகாப்டர்கள் வாங்க இருந்த திட்டம் 12 ஹெலிகாப்டர்
என்று மாற்றியது ஊழலை உச்சகட்டத்தில் கொண்டு சென்று விட்டது. இதனால்
ரூபாய் 1200 கோடிகள் அதிகம் செலவாக உத்தரவு அளிக்கப்பட்டது ஊழலுக்கு உரம்
சேர்க்கும் செயலாகும். இதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவிதமான சரியான, நேர்மையான
பதில் இல்லை. எல்லாவற்றிற்கும், “இந்த இரண்டு
வருடமாக மோடி அரசு என்ன செய்தது? விசாரணையை முடுக்கி, உண்மையைக்
கண்டறியாமல் உறங்குவதேன்?” என்ற தோரணையில் ஒரே ராகத்தையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இறுதியாக மீடியாவும் இந்த ஊழலில் பங்கு பெற்ற நிலைதான் இந்திய
இறையாண்மைக்கும், பத்திரிகை தர்மத்திற்கும், பத்திரிகை
நடுநிலமைக்கும், பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் சவாலாக அமைந்து, இந்திய
அரசியலில் புயலாக உருவெடுத்துள்ளது என்றால் மிகையாகாது. அதற்கு
சூத்திரதாரியும், இடைத்தரகருமாக உழைத்தவர் கிருஷ்டியன் மிச்சேல். அதற்காக
அவர் இந்தியாவில் மீடியாவில் மட்டும் ஊழல் செய்ய செலவழித்த பணம்: ரூபாய் 45
கோடி.
‘இந்திய மீடியாவை அகஸ்டாவெஸ்ட்லேண்டிற்குச் சாதகமான செய்திகளையும், கட்டுரைகளையும்
வெளியிட அளிக்கப்பட்ட ரூபாய் 45 கோடியினைச் செலவிடவும்’ என்பது
தான் மிச்சேலுக்கு அளிக்கப்பட்ட உத்திரவாகும். இந்தப்
பணம் 2010-2013 ஆண்டுகளில் மிச்சேலால் செலவிடப்பட்டதாகத் தெரிகிறது. இதில்
20-க்கும் மேற்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
இதைப் பற்றிய செய்தி ஒன்று இதோ:
1. மார்ச்
2010 - டிசம்பர் 2011 ஆகிய 22 மாதங்களில் இந்த 45 கோடி ரூபாய்கள்
செலவிடப்பட்டுள்ளன.
2. 2006
ஆண்டிலிருந்தே அகஸ்டாவிற்கு ஆதரவான செய்திகள் வெளிவரத்தொடங்கி,
2010 பிப்ரவரி மாதம் தான் மீடியாவிற்குக் கொடுக்கும் ஊழல் பணம் பற்றிய தீர்மானம்
கையெழுத்தானது.
3. ஹெலிகாப்டர்
தொழிலில் ஈடுபட்ட மற்ற நிறுவனங்களான Sikorsky and
Eurocopter ஆகியவைகள் ராணுவ அமைச்சகத்தில் அகஸ்டாவைப் பற்றிக் குறை சொன்னதை
மீடியா மூடி மறைத்தது ஊழல் பணம் பெற என்பது ஒரு பெரிய குற்றச் சாட்டாக உலவுகிறது. அந்த அவர்களின்
கடிதங்கள் மீடியாவில் கசிய விட்டு, அகஸ்டாவிற்கு உதவியாக
மிச்சலின் ஊழல் பணம் தான் விளையடியது என்கின்றனர் மீடியாவைச் சார்ந்த உண்மை விரும்பிகள். மீடியாவுடன்
ராணுவ அமைச்சகத்தில் உள்ள அரசு ஊழியர்களும் உடந்தை.
“சிக்னாரா காந்தி” என்று சோனியா
காந்தியின் பெயர் அகஸ்டா ஊழலில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்துடன்
தொடர்புடைய டெல்லி Emaar MGF என்ற கம்பனியிலிருந்து
மால் ஒன்றை 2005 ஆண்டு ராகுல் காந்தி வாங்கியதும், அதற்கு
உறுதுணையாக அவரது வக்கீல் உதவியதும், அதற்கு ஊழல் பணம்
ராகுலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் ஒரு குற்றச் சாட்டு எழுப்பப்படுகிறது. இந்த எமார்
எம்ஜிஎஃப் கம்பனியில் கவுதம் கெய்தான் என்ற அகஸ்டா ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவரும், Haschke என்ற அகஸ்டாவின் மிச்சேல் போல் செயல்பட்ட மற்றொரு இடைத்தரகரும்
டைரக்டர்களாகச் செயல்பட்டுள்ளார்கள் என்பதால், ராகுல்
காந்தி இந்த மால் வாங்குவதைத் தவிர்த்திருக்கலாமே என்று நடுநிலையாளர்கள் நினைக்கிறார்கள்.
ராகுலும், ‘மால் வாங்குவது
குற்றமா?’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டார். வாங்குவது
குற்றம் இல்லை. ஆனால், அது அவர் ஒழுங்காக சம்பாதித்த பணத்தினால் வாங்கியதா? என்பதை
ராகுல் தான் ஊர்ஜிதம் செய்ய வேண்டும்.
காங்கிரஸின் தர்ம சங்கடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு
தான் வருகிறது. ‘முற்பகல் செய்யின், பிற்பகல்
விளையும்’ என்ற பழமொழியை மறந்ததால் வந்த வினையை காங்கிரஸ் அனுபவிக்கிறது. எப்போதும்
நாம் தான் அரசு கட்டிலில் அமர்ந்து, கோலோச்சுவோம் - என்ற மமதையின்
பின் விளைவுகள் தான் இந்த ஊழல்கள் எல்லாம். பி.ஜே.பி.யின் ‘காங்கிரஸ்
முக்த்’ என்பது பகல்கனவு என்று நினைத்ததை இந்திய மக்கள் பொய் ஆக்கி, மோடி அரசு
அமைய வாய்ப்பளித்தார்கள். இந்த ஊழல்களிலிருந்து தப்பிக்க, மோடி மீண்டும்
2019 ஆண்டுத் தேர்தலில் வெற்றி அடையக் கூடாது என்று காங்கிரசுடன் பல கட்சிகள் கங்கணம்
கட்டி அதற்காக உழைக்க இப்போதே ஆரம்பித்து விட்டனர். இந்தியா
விழித்துக் கொண்டு விட்டது. இந்தியா சிந்திக்கத் தொடங்கி விட்டது. ஊழல் அற்ற
வளமான இந்தியாவை உருவாக்கும் சிந்தனையும், சாதனையும்
உள்ள கட்சிகள் தான் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெரும் என்று நம்புவோமாக.
Comments