…. பணச் சலவை - (Money Laundering) - மூளைச் சலவை (Brain Washing)
|
உயர்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற எந்த உயர் பதவி வகித்த வங்கி அதிகாரிகளையும் அவர்கள் உள்ளத்தைத் தொட்டு, மனட்சாட்சிப்படி, சத்தியப்பிரமாணமாக ‘இது உண்மையா?’ என்று கேட்டால், தயங்கியபடியே ‘ஆமாம்’ என்று தான் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன். சில விதிவிலக்கு இருப்பினும், அந்த விதி விலக்குகளிலும் 100% தூய்மை இருக்க வாய்ப்பில்லை. இதற்குக் காரணங்கள் - ‘பதவி உயர்வு ஆசை’, ‘மேலிடத்து பொல்லாப்பு ஏன்?’, ‘ஆதரவு பதவி உயர்வுக்கு அடித்தளம் அமைக்கும்’ - ஆகியவைகள் தான்.
விஷயத்திற்கு வருவோம். குணம் குப்பையிலே - பணம் பந்தியிலே - என்பது தமிழ் சினிமா பாட்டு. பணம் குப்பைப் பணமாக - அதாவது கருப்புப் பணமாக இருந்தால், பந்திச் சாப்பாடு உண்டா என்றால் ‘உண்டு’ என்று இந்தியாவில் இயங்கும் மூன்று பெரிய வங்கிகளான -ICICI, HDFC
& Axis - ஆகிய வங்கிகள் வெளிபடையாகச் செயல்படுவது வெட்ட வெளிச்சமாகி, சந்தி சிரிக்கும் அளவுக்கு செய்திகள் வெளிவந்து விட்டன.
பணச் சலவை என்றால் பணத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் கருப்பை ‘சலவை’ செய்து போக்குவது. அதாவது கருப்புப் பணத்தை வங்கிகளின் மூலம் வெள்ளைப் பணமாகச் செய்வதைத் தான் ‘சலவை’ என்கிறார்கள். இது சட்டப்படி குற்றம். இருப்பினும் ‘மூளைச் சலவை’ அதிகாரிகளின் ஆதரவால் இந்தச் சலவை வங்கிகளிலும் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால், இது வங்கிகளின் ஒழுக்க மீறலாகும் என்ற சட்டம் இருக்கிறது.
ரூபாய்ப் பணம் யாரிடம் இருக்கிறதோ அது அவருக்குத் தான் சொந்தம். ஆகையால், அந்தப் பணம் எப்படி வந்தது என்பதில் தான் அது கருப்பா அல்லது வெள்ளையா என்பது தெரிய வரும். வங்கிகளில் போடும் பணம் அது நேர்மையான வழிகளில் சம்பாதித்த பணமாக இருக்க வேண்டியது அவசியமாகும். திருட்டுப் பணமாக இருந்து - அதைத் தெரிந்தே, வங்கியினர் வாங்கி, முதலீடு செய்து, அந்தத் திருடர்களுக்கு உதவினால் அது பெரும் குற்றமாகும். இது கருப்புப் பணத்தை - பலவிதமான விதிமீறில்களினால் - வரி ஏய்ப்பு, இரவல் பெயரில் ஏமாற்றல், செல்வ வரி ஏய்ப்பு ஆகிய விதி மீறல்களினால் - கிடைத்த பணத்தை - வெள்ளைப் பணமாக மாற்ற உதவிய பொருளாதாரக் குற்றத்திற்கு ஆளாகிறார்கள்.
கோப்ரா போஸ்ட் - Cobrapost - (நாகப் பாம்பு முகவரி என்ற பெயர் பொருத்தம் காணவும் - காப்ரா போஸ்டாகி விட்டது) - என்ற ஒரு இணைய தளம் ரகசியமாக இந்த மூன்று வங்கிகளின் மேல் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, “எங்களிடம் அதிகமான கருப்புப் பணம் இருக்கிறது. அதை விலாசம் இல்லாத நபர்களின் பேரில் முதலீடு செய்து, பிறகு எங்களுக்குக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டதற்கு, “ஆஹா, தாரளமாகச் செய்து முடித்துக் காட்டுகிறோம். பான் கார்டு, விலாச அத்தாட்சிகள் எதுவும் வேண்டாம். பணம் - கத்தை கத்தையான நோட்டுகள் - இருந்தால் மட்டும் போதும். உங்கள் பணத்தை நீண்ட கால முதலீட்டில் வரவு வைத்துவிடுகிறோம்” என்ற உரையாடல்கள் எல்லாம் வீடியோவில் அவர்களுக்குத் தெரியாமல் பதிவாகி விட்டன.
மூளைச் சல்வையின் உச்ச கட்டமாக அந்த அதிகாரிகள் சொன்னதாக பதிவானவைகளை வாசகர்கள் முன் வைக்கிறேன்: ‘நீங்கள் பணத்தை உங்கள் வீட்டில் ஏன் பதுக்கி வைக்க வேண்டும்? நாங்கள் உங்களுக்கு ‘லாக்கர்’ கொடுத்து விடுகிறோம். அங்கே பணத்தை வைத்து, உங்களின் உசிதம் போம் எடுத்து எங்களிடம் முதலீடு செய்யுங்கள்!’
இந்த ‘நாகபோஸ்ட்’ நடத்திய ரகசிய நடவடிக்கைக்குப்
பெயர் - Operation Red Spider. இது ஏதோ அந்த வங்கிகளின் ஒரு கிளையில் மட்டும் கிடைத்த தகவல் இல்லை. அந்த வங்கிக் கிளைகளின் மேல்மட்ட பல வங்கி அதிகாரிகள் இத்தகைய பணச் சலவைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள்
என்பது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகும். இதற்குக் காரணமே, ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் - அபிரிமிதமான அளவில் பணம் புரட்டும் இலக்கு அளிக்கப்பட்டு, அதை வைத்து அவர்களின் பதிவி உயர்வு அளிக்கப்படுவது
வங்கிகளில் உள்ள நிலையாகும். ‘ரிஷி மூலம் - நதி மூலம் பார்க்கக் கூடாது’ என்பது தான் இந்த பணச் சலவையின் தாரக மந்திரம். இதை ஓதச் செய்யவது ‘டை கட்டிய குளிர்சாதன அறைகளில்’ அமர்ந்து கோலோட்சும் உயர்மட்ட அதிகாரிகள். சில்லரைத் தேவதைகள் அந்த மந்திரத்தில் மூளைச் சலவை பெற்று, பணச் சலவை செய்யும் பூசாரிகளாக மாறினால், சாதாரண பொது மக்கள் ‘வேலியே பயிரை மேய்ந்தால் ..’ என்று தங்கள் தலையில் அடித்துக் கொண்டு, பிறகு மறந்து, தங்கள் வேலையைப் பார்க்கப் போகவேண்டியவர்களாகி
விட்டனர்.
ஏன், கருப்புப் பணத்தை வெளிக்கொணர பல சலுகைகளை பல நேரங்களில் - அதுவும் நேர்மையாக வரிசெலுத்தும் நபர்கள் நியாயமாகச் செலுத்திய வரியைக் காட்டிலும் - குறைவான சதவீதத்தில் - அள்ளி வீசி, நியாயமாக வரி கட்டுவோர்களையும் - ‘இன்றைய கருப்புப் பணம் - நாளைய வெள்ளைப் பணம்’ திட்டத்தை நினவுருத்தி - அவர்களையும் ‘பணச் சலவை’ பாதையில் பயணிக்கத் தூண்டும் மத்திய அரசாங்கம் முதல் குற்றவாளியாகக்
கூண்டில் நிறுத்தபடவேண்டும். இந்தக் குற்றத்தின் ஆதிகர்த்தா சாட்சாத் தமிழ்மகன் மாண்மிகு நிதி மந்திரியான திரு.ப.சிதம்பரமாவார். சமீபத்தில் பார்லிமெண்டில் கருப்புப் பணம் பற்றி அவர் உதிர்த்தசொற்கள்: ‘கருப்புப் பணத்தை வெளிக்கொணருதல் கடினம். சட்டச் சிக்கல் ஒரு தடங்கல். இதில் நம் காலத்தைச் செலவிடுவதை விட்டு, வேறு உருப்படியான செயல்களில் ஈடுபட்டலாம்.’ இது ஏதோ ‘பணச் சலவை’க்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குவதாக யாரேனும் நினைத்தால், அது அவர்களின் ‘மூளைக் கோளாறு’ என்று ஹார்வேர்ட் பண்டிதர் சிதம்பரம் முடிவு கட்டி, சென்னை கீழப்பாக்கத்திற்கு
அனுப்பினாலும் ஆச்சரியப்படவேண்டாம். அவரது அன்பு மகன் கார்த்திக் சிதம்பரம் அதை முன்னின்று செயல்படுத்தி, அந்த நபரை உள்ளே தள்ளி விடுவார். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்கு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் எல்லாம் அவரிடம் எடுபடாது. புதுச்சேரி சம்பவம் ஒன்று போதும், கார்த்திக் சிதம்பரத்தின் வீச்சின் சக்தி.
ஏதோ இது இந்த வங்கிகளில் மட்டும் தான் நடைக்கின்றது என்று நாம் நினைத்தால், அது முற்றிலும் தவறாகும். இவர்கள் பிடிபட்டவர்கள். மற்றவர்கள் தப்பியவர்கள். ஆனால், இனியாவது இந்த நிலை மாறினால், நாட்டிற்கு நல்லது.
பணத்தோடு குணத்தையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் நேர்மையான பொருளாதார முன்னேற்றத்தை நம் நாடு அடையும். பண்போடு பெறும் பதவி உயர்வு தாமதமாகக் கிட்டினாலும், ஏன், கிட்டாவிடினும், ‘நாம் உத்தமர்’ என்ற பண்பு உங்களை உயர்த்தும் - பணத்தாலோ அல்லது பதவியாலோ இல்லை - குணத்தால்.
ஆமாம், பணம் குப்பையிலே - குணம் பந்தியிலே - என்ற நிலைதான் நிரந்தரம். அதற்கான மூளைச் சலவை இன்றே வீட்டிலும், பள்ளிகளிலும், மடங்களிலும், வீதியிலும், உறவுகளிலும், அலுவலங்களிலும், அரசாங்கத்திலும் தொடங்கட்டும்.
சத்தியமேவ ஜெயதே.
Comments