சால்வையால் வாழ்த்துவோம் எழுத்து: எஸ். சங்கரன்


சால்வைகள் அணிவித்து வாழ்த்தைப் பெறுவதற்குறிய சாதனையைப் படைத்தவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யு. புஷ்ஷும், நமது பாரதப் பிரதமர் மன்மோஹன் சிங்கும் ஆவார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இரண்டு நாட்டுத் தலைவர்களும் பலதடைகளைக் கடந்து 123 என்ற அணுசக்தி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக அமுலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
இது ஏதோ இரு நாடுகள் சம்பந்தப் பட்ட விஷயமல்ல. அணுசக்தி சப்ளை செய்யும் (NSG) 45 நாடுகளின் ஒப்புதல் பெறவேண்டும். இதில் உலகத்தில் உள்ள அனைத்து முன்னேறிய நாடுகளும்- சைனா உள்பட-உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்களது ஒப்புதல் பெறுவதற்கு இரு தலைவர்களும் முயன்று வெற்றி பெற்றிருப்பது ஒரு ஹிமாலய வெற்றியாகும். ஏனென்றால், இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமல் (NPT), புளோட்டினம் போன்ற அணு பொருள் மற்றும் ரியாக்டர் போன்ற இயந்திரங்களையும் தங்குதடையின்றிப் பெறுவதற்கு இது வழிவகுத்து விட்டது என்பது ஒரு உலக சாதனையாகும்.
இந்த அந்தஸ்தைப் பெற்ற ஒரே நாடு இந்தியா ஆகும். அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமல், இனி இந்த ஒப்புதல் வேறு எந்த நாட்டிற்கும் கொடுக்க மாட்டோம் என்று அந்த 45 நாடுகளும் ஒப்புதல் அளிக்கும் பொழுது சொல்லி விட்டது. அந்த நேரத்தில் அந்த நாடுகள், 'இந்தியாவின் நம்பத்தகுந்த நிலையை நினைத்துத்தான் இந்த ஒப்புதல்' என்று சொன்ன சொற்களால் இந்தியர்கள் அனைவரும் பெருமைப் படலாம்.
” 'இந்தியா தானாகவே முன்வந்து இனி அணுசோதனை செய்ய மாட்டோம்' என்ற இந்தியாவின் உறுதிமொழி, கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை விட மேலானது” என்று சொன்ன புஷ்ஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அத்துடன், தன் பதவிக் காலம் முடியு முன்பேயே இந்த அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த புஷ் அவர்கள், தமது செனட் சபையின் ஒப்பதலுக்கு துரித மசோதாவாகக் கருதச் சொல்லி ஒப்புதல் அளிக்க வைத்தவரும் புஷ்தான். அத்துடன் 33 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்ட ஐ.நா.வின் கீழ் உள்ள IAEA என்ற உலக அணு சக்திக் கழகமும், NPT-யில் இந்தியா கையெழுத்திடாமல் அங்கீகாரம் வாங்கியதற்கு இந்த இரு தலைவர்களும் எடுத்துக் கொண்ட சிரமம் கொஞ்ச நஞ்சமில்லை.
1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி நடத்திய 'சமாதான அணுகுண்டு சோதனை'யான 'சிரிக்கும் புத்தர்' நாளிலிருந்து, 1998 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் நடத்திய 'சக்தி சிகிட்சை' என்ற போக்ரான் அணுகுண்டு சோதனை வரையிலும், தொடர்ந்து சுமார் 34 ஆண்டுகள் நம் இந்தியா பிற நாடுகளால் 'தீண்டப்படாத நாடாக' தனிமைப் படுத்திய நிலையை, நம் பாரதப் பிரதமர் மன்மோஹன் சிங் மாற்றி உள்ளது, நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பொதுவாகவும், அணு மின் உற்பத்தியின் தேக்க நிலையை நிவர்த்தி செய்ததற்குக் குறிப்பாகவும் செய்த ஒரு மகத்தான செயல் ஆகும். அதுவும், அணுஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமலும், அணு ஆயுதங்களைச் செய்யும் செயலுக்குத் தடைசெய்வதற்கு ஒப்பாமலும், காரியத்தைச் சாதித்தது இந்தியர்கள் அனைவரும் பெருமைப் படவேண்டிய ஒன்றாகும்.
'அணுகுண்டு சோதனை செய்யும் உரிமையை நாம் நம்மிடம் வைத்துக் கொண்டது போல், வாஷிங்டனும் நாம் அணு குண்டு சோதனை செய்தால், அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் உரிமையை அவர்கள் வைத்துள்ளார்கள். அவ்வளவே!' என்று அற்புதமாக ரத்திரனச் சுருக்கமாக மன்மோஹன் சிங் சொல்லியது சரித்திர வாசகங்கள்.
'அணு ஆயுதப் பரவல் தடையைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்காது' என்ற இந்தியாவின் அறிக்கையையே வேதவாக்காக உலக நாடுகள் பல நம்பி அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறியதை நாம் பெருமையோடு கொண்டாடலாம்.
இந்தியாவில் உள்ள 22 அணு உலைகள் கடந்த 34 ஆண்டுகளாக தேவையான கச்சா பொருள் இல்லாமல் தவித்ததை சீர் செய்து விட்டார் மன்மோஹன் சிங். 16,000 கோடிக்கும் மேல் செலவு செய்து ஆரம்பித்த இந்த உலைகள் முழு அளவில் செயல்படாமல் இதுவரை இருப்பதால் ஏற்படும் இழப்பைப் பற்றி யாரும் வாய் திறவாமல் மவுனம் சாதிப்பது ஏன்?
22 அணு உலைகளில், 14 அணு உலைகள் மின்சாரம் உருவாக்கவும், மற்ற 8 அணு மின் உலைகள் அணு ஆயுத சோதனைகளுக்கும் என்று பிரித்து, 14 அணு உலைகள் மட்டும் உலக அணுசக்திக் கழகத்தின் மேற்பார்வையில் இயங்கும். இந்தக் கழகம் 35 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.வின் கீழ் செயல்படும் ஸ்தாபனம். இந்தக் கட்டுப்பாட்டை ஆட்சேபிப்பதில் அர்த்தமே இல்லை. ஆகையால், அணு ஆயுத சோதனைக்கு எந்தத் தடையும் இல்லை. அணு குண்டு வெடிப்பதற்குத் தான் தடை என்பதை உணரவேண்டும்.
இந்த ஒப்பந்தத்தால் நமது அணுமின் உற்பத்தி உடனடியாக 3% இருந்து 9% உயர்ந்து, பிறகு நமது மின்சாரத்தேவையின் 25% பூர்த்தி செய்யும். பிரான்ஸ் நாட்டைப் போல் நமது நாடும் தன் மின்சாரத்தேவையை அணு சக்தியால் அதிக அளவில் பூர்த்திசெய்ய இந்த ஒப்பந்தம் வழிகாட்டும்.
இருப்பினும், நல் வழிகாட்டாத நம் பல அரசியல் தலைவர்களால் இந்த நல்ல காரியம் அதற்குரிய மரியாதையைப் பெறவில்லை என்பது ஒரு சோககாவியம்.
வருங்காலம் மன்மோஹன் சிங், ஜார்ஜ் டபிள்யு புஷ் - இருவர்களையும் போற்றிப் புகழும் என்பது திண்ணம்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017