நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உச்சமான அவலக்குரல்

(இடமிருந்து வலம்: குரியன் ஜோசப், சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி. லோகுர் – இடம்: சலமேஸ்வர் வீடு நாள்: 12-01-2018) சுதந்திரம் அடைந்த இந்தியாவில் நீதிமன்றத்தின் மிகவும் இருண்ட நாள் என்றால் அது 12 – 01 – 2018 என்று சரித்திரம் பதிவு செய்து விட்டது. இது அதை நிகழ்த்திக் காட்டிய உச்ச மன்ற நீதிபதிகளான அந்த நான்கு பேர்களுக்கும் – சலமேஸ்வர், கோகோய், ஜோசப், லோகுர் – எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது என்பதுடன், ‘சட்ட விதிமுறைகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்’ என்ற அடிப்படைத் தத்துவத்தையே உச்ச மன்ற மூத்த நீதிபதிகள் மக்கள் மன்றத்தில் குரல் எழுப்பி தூள்தூளாக்கி விட்டனர். அவர்களின் அவலக் குரல் கேட்டு இந்தியாவே அதிர்ந்து விட்டது. அதிலிருந்து இந்தியா மீண்டாலும், அவர்கள் ஏற்படுத்திய ரணம் தீராத வியாதியாகி உச்ச நீதிமன்றத்தின் நம்பகத் தன்மையையே சந்தேகிக்கும் நிலைக்குத் தள்ளி விட்டது. அந்த மூத்த நான்கு நீதிபதிகள் கடந்த ஒரு வருடமாக நடந்த விதம், அவர்கள் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவுக்கு அக்டோபர் 2017 அன்று எழுதிய கடிதம் ( மீடியா பேட்டியில் அந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது ), குறி...